Wednesday, September 26, 2007

திலீபன், காந்தி, அகிம்சை

இது கடந்த ஆண்டு எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

இன்று திலீபன் மறைந்த நாள். 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்காக அற்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சை போராட்டத்தை அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கி தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார். அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.

திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன்.

திலீபனுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திலீபன் காந்தீய வழியில் தன் போராட்டத்தை முயன்றார். ஆனால் காந்தி போல முயலவில்லை. திலீபன் தன் உயிரை ஒரு பொருட்டாக கருதவில்லை.

அகிம்சை ஒரு நெடிய போராட்டம். போராடிக் கொண்டே இருக்கலாம். முடிவு போராட்டத்தின் கையில் இல்லை. எதிராளியின் வலிமையை பொறுத்தே உள்ளது.

அகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்து விட வில்லை. இந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் இந்தியா விடுதலையான அதே நேரத்தில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்ற இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்றவற்றின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது எது ? அகிம்சையா ?

"காந்தி தாத்தா வாங்கிக் கொடுத்த சுதந்திரம்" என பாடபுத்தகங்களும், திரைப்படங்களும், ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய அகிம்சை பிம்பம் நம் மூளையை சளவை செய்ததில் இருந்து நாம் வெளியேறவேயில்லை. இந்தியா பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் ஒரு காலனியாக உருமாறியத்தற்கும் சரி, பிறகு விடுதலையானதற்கு சரி - முக்கிய காரணம் - பொருளாதாரம் தான்.

in the larger world it came eventually to be realized that colonial territory was only marginally relevant to economic progress, if it was relevant at all. The dissidence and revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers are often credited with bringing the colonial era to end. More attention might well be accorded to the rather simple but persuasive fact that colonies had become no longer economically worthwhile. Territory was not the thing.

என்று தன்னுடைய "A Journey Through Economic Time" என்ற புத்தகத்தில் கூறுகிறார் புகழ்ப் பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் கால்பிரைத். காலனியாதிக்கத்தின் விடுதலைக்கு revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers தான் காரணம் என்பதை கால்பிரைத் மறுக்கிறார். காலனியாதிக்கத்தின் முடிவுக்கு colonies had become no longer economically worthwhile என்பது தான் காரணம் என்கிறார் கால்பிரைத்.

இவரின் இந்த வாதம் தவிர வரலாற்றை பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இது நமக்கு தெளிவாக புரியும். சோழர் கால வரலாறு முதல் இன்றைய இராக் யுத்தம் வரை அனைத்திற்கும் பொருளாதாரம் தான் அடிப்படைக் காரணம் என்னும் பொழுது அந்த பொருளாதார காரணிகளை விலக்கியே வரலாற்றை மக்களுக்கு நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றளவும் உலகில் உருவான பன்னாட்டு தனியார் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்த நிறுவனம் - பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தான். வணிக நோக்கங்களுக்காக உள்ளே நுழைந்து பின் படிப்படியாக நாடு பிரிட்டிஷ் எகிதிபத்திய அரசிடம் சென்று சேர்ந்தது வரலாறு. பொருளாதார காரணங்களுக்காக முதலில் தொடங்கிய காலனியாதிக்கம், பின்பு படிப்படியாக மாறி நாடு பிடிக்கும் ஆசையாக உருவெடுத்தது. பின் தங்கள் நாட்டின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிற நாடுகளை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதாக மாற்றம் பெற்று விட்டது.

இவ்வாறு உருவான பிரிட்டிஷ் எகாதிபத்தியம் ஒரு கட்டத்தில் உலகின் கால்வாசி இடத்தை தன் வசம் வைத்திருந்தது. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இவ்வாறு உருவான நிலையில் தான் இந்த மிகப் பெரிய பரப்பளவை நிர்வகிப்பதில் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. இந்தச் சூழ்நிலையில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் தான் இந்தியா உள்ளிட்ட பல காலனியாதிக்க நாடுகள் விடுதலைப் பெற முக்கிய காரணமே தவிர, அகிம்சைக்கு பெரிய பங்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை.

இரண்டாம் உலகப் போர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. போரினால் நிர்மூலமான பொருளாதாரத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்தது. அவ்வாறான தேவைக்கு இடையே ஒரு தூர தேசத்தில் இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளை பராமரிப்பது பெருத்த சவால் மிகுந்த காரியமாகவே இருந்தது. இந் நிலையில் தான் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் விடுதலைப் பெற்றன. இரண்டாம் உலகப் போருக்குப் முன்பு வரை மிக வலுவான பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் விளங்கிய பிரிட்டன் போருக்குப் பின் உலக அரசியலில் தன் முக்கியத்துவத்தை இழந்து அமெரிக்காவும், சோவியத் யூனியனும் வலுப்பெற தொடங்கியதன் பிண்ணனியும் இந்திய விடுதலையின் பிண்ணனியும் ஒன்று தான் - அது பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சரிவு.

காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்ற வகையில் அகிம்சை இந்திய விடுதலைக்கு முக்கிய காரணமாக உருவாக்கப்பட்டதே தவிர, இந்திய விடுதலை அகிம்சையால் மட்டுமே நிகழ வில்லை.

காந்தியின் அகிம்சை போராட்ட முறையாகட்டும், பாலஸ்தீனம், இலங்கை, காஷ்மீர் போன்ற இடங்களில் நடக்கும் ஆயுத போராட்டம் ஆகட்டும் - இவற்றுக்கு ஒரு பொதுவான அடிப்படை உள்ளது

தங்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்க, தாங்கள் எதிர்த்து போராடும் நாடுகளின் பொருளாதார அடித்தளத்தை தகர்ப்பது தான் இந்த பொதுவான நோக்கம். காந்தியின் நோக்கமும் அது தான், பிரபாகரனின் நோக்கமும் அது தான், ஹமாஸ் அமைப்பின் நோக்கமும் அது தான்.

ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலையை ஆதரிக்காத காந்தி, பிறகு நடத்திய பல போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க தான் முற்பட்டது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி அகிம்சை. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றாலும், அந்த அரசாங்கத்தை பிரிட்டிஷாரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடத்திக் கொண்டிருந்தவர்கள் "இந்தியர்கள்" தான். இந்தியா போன்ற பெரிய நாட்டினை நிர்வாகிக்க கூடிய ஆட்பலமோ, இராணுவ, காவல்துறை எண்ணிக்கை பலமோ (ஆயுத பலம் அல்ல) பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இல்லை. அவர்கள் இந்தியர்களைச் சார்ந்தே தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அவ்வாறான நிலையில் பிரிட்டிஷ் ஆட்சியை முடக்க வேண்டுமானால் அவர்கள் செயல்படுவதை முடக்க வேண்டும். இந்தியார்கள் பிரிட்டிஷ் வேலையைப் புறக்கணித்தால், பிரிட்டிஷாரின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அதைத் தான் காந்தி செய்ய முயன்றார். ஆனால் அதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றார் என்பதை வரலாற்றை புரட்டுபவர்களுக்கு புரியும்.

இங்கு கவனிக்க வேண்டியது, ஆயுதப் போராட்டம் இல்லாமலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதை காந்தி முன்னெடுத்தார். அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க வில்லை என்றாலும் ஒரு புது போராட்ட முறையை அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஆனால் இந்த நிலையா இன்று ஆயுதப் போராட்டம் நடைபெறும் நாடுகளில் உள்ளதா ?

மக்கள் எண்ணிக்கை, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சிறுபாண்மையாக உள்ளவர்களின் போராட்டம் எந்த வகையிலும் அகிம்சையை கொண்டு நடக்க முடியாது. காரணம் இலங்கை பொருளாதாரம் தமிழர்களை நம்பி இல்லை. இந்திய பொருளாதாரம் காஷ்மீரை நம்பி இல்லை. இந்த சிறுபான்மை இனத்தவரின் அகிம்சை போராட்டத்தை நசுக்க கூட வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் கூட இந்த போராட்டம் பல ஆண்டு காலம் நடந்து கொண்டே இருக்கும். இது தான் இலங்கையிலும், காஷ்மீரிலும் ஆரம்ப காலங்களில் நடந்தது.

இத்தகைய நிலையில் தான் அகிம்சை என்பது அர்த்தமில்லாமல் போய் விட்டது. இலங்கை, பாலஸ்தீனம், காஷ்மீர் போன்ற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அவர்கள் எதிர்த்து போரிடும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதில் தான் உள்ளது. அதனால் தான் ஆயுதப் போராட்டங்கள் தொடங்குகின்றன. ஒரு விடயத்தை கவனிக்கலாம். இன்று இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியிருக்காவிட்டால் இலங்கை பொருளாதார ரீதியில் நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும். சிங்கள ஆதிக்கம் முழுமை பெற்றிருக்கும். மாறாக ஆயுதப் போராட்டம் சிங்கள ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாமல், இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தும் இருக்கிறது.

அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறை அல்ல. அது ஒரு கவன ஈர்ப்பு. இந்த கவனஈர்ப்பை காந்தி சரியாக நடத்தினார். ஆனால் திலீபன் அகிம்சையை தன் போராட்ட வடிவமாக எடுத்தார். அதன் பலன் அவர் உயிர் இழப்பு.

திலீபனின் நினைவு தினம் அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறையல்ல என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி விட்டுச் செல்கிறது

16 மறுமொழிகள்:

PPattian said...

என் போன்ற அஹிம்சை விரும்பிகளையும் சிந்திக்க வைக்கும் கட்டுரை.

9:35 AM, September 26, 2007
Unknown said...

nice to read ur "திலீபன், காந்தி, அகிம்சை" katturai, Comparison between திலீபன் and காந்தி is nice
and simply the best

9:55 AM, September 26, 2007
குழலி / Kuzhali said...

//அகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்து விட வில்லை//

//ஆயுதப் போராட்டம் இல்லாமலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. //
//ஆனால் இந்த நிலையா இன்று ஆயுதப் போராட்டம் நடைபெறும் நாடுகளில் உள்ளதா ?

மக்கள் எண்ணிக்கை, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சிறுபாண்மையாக உள்ளவர்களின் போராட்டம் எந்த வகையிலும் அகிம்சையை கொண்டு நடக்க முடியாது. காரணம் இலங்கை பொருளாதாரம் தமிழர்களை நம்பி இல்லை. இந்திய பொருளாதாரம் காஷ்மீரை நம்பி இல்லை. இந்த சிறுபான்மை இனத்தவரின் அகிம்சை போராட்டத்தை நசுக்க கூட வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் கூட இந்த போராட்டம் பல ஆண்டு காலம் நடந்து கொண்டே இருக்கும். இது தான் இலங்கையிலும், காஷ்மீரிலும் ஆரம்ப காலங்களில் நடந்தது.
//
சசி அகிம்சை போராட்டம், ஆயுத போராட்டங்கள் பற்றி விவாதம் வரும் போதும் ஒவ்வொருமுறையும் நானும் இதைத்தான் இங்கே பேசும்ம்போது சொல்லிக்கொண்டுள்ளேன்...

சரியான கருத்துகள்

நன்றி

9:33 PM, September 26, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

நண்பர்களின் கருத்துகளுக்கு நன்றி...

கடந்த ஆண்டு இந்தக் கட்டுரையை எழுதிய பொழுது பல கருத்துக்கள் மறுமொழிகளில் முன்வைக்கப்பட்டது. அதனை வாசிக்க இங்கே செல்லலாம்

http://blog.tamilsasi.com/2006/09/blog-post.html

9:42 PM, September 26, 2007
சிறில் அலெக்ஸ் said...

Just for argument sake..

How about the success of South Africans and the African Americans. For Ahimsa to win it should be a mass movement not just one person's effort. There's where probabily Diliban failed.

Let us for a moment assume that all Tamil people, including the Rebels, killed during the history of violance in Srilanka had died like Diliban died or just a 500 of them... could you imagine the impact it would make. it would startle the world and would have a deeper impact than even if the LTTE wins over the battle, I think.

Your arguement on Ahimsa being a long battle is being countered by the long struggle that the LLTE is having against the Lankan Government itself. Whether a freedom struggle is long or short is not dependant just how you fight I guess.

By saying Diliban was a failure you seem to have negated his role in the struggle.

10:02 PM, September 26, 2007
வெற்றி said...

சசி,
மீள்பதிவுக்கு மிக்க நன்றி.

/* திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன்.*/

சசி, எமது எதிரிகள் மனித உரிமைகளை மதிப்பவர்களாக, அற வழி நடப்பவர்கள் எனின் அகிம்சைப் போராட்டத்தை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம். ஆனால், மனித நேயமோ, நாகரீகமோ, மனிதப் பண்போ இல்லாத எதிரிகளின் முன் அகிம்சைப் போராட்டம் வெல்லும் என எதிர்பார்க்க முடியாது.

தென் ஆபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக உழைத்தவரும், சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவருமான வணபிதா டெஸ்மொண்ட் ரூரூ [Desmond Tutu]அவர்கள் அகிம்சைப் போராட்டம் பற்றி இப்படிச் சொல்கிறார் :
"...non-violence as a means towards ending an unjust system presupposes that the oppressors show minimum level of morality. I doubt however that such a Gandhian campaign would have saved the Jews from the Nazi's holocaust".

இலங்கையில் சிங்கள/இந்திய அரசுகளுக்கு எதிராக அகிம்சைப் போராட்டம் பலன் தருமா என்பதற்கு இலங்கை/கனடாவின் தலைசிறந்த அரசியல் விஞ்ஞானி பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் இப்படிச் சொல்கிறார்:
"Definitely not in Sri Lanka. The Tamils needed a Prabaharan to protect them from all the horrible and inhuman atrocities of the cruel Sinhala army."

10:22 PM, September 26, 2007
வெற்றி said...

/* How about the success of South Africans and the African Americans. For Ahimsa to win it should be a mass movement not just one person's effort. */

சிறில், மன்னிக்கவும். நீங்கள் தென் ஆபிரிக்க கறுப்பின மக்களின் வரலாற்றையோ அல்லது அமெரிக்க கறுப்பின மக்களின் வரலாற்றையோ தெளிவாகத் தெரியாமையினால்தான் இப்படிச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

அமெரிக்காவில் அரசியல்வாதிகள் செயற்பட முன் அமெரிக்க நீதிமன்றங்களே கறுப்பின மக்களின் சார்பான நீதியான தீர்ப்புக்களை வழங்கி அரசியல்வாதிகளை அத் தீர்ப்புக்களை அமுல்படுத்த கட்டாயப்படுத்தியது. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் நீதிமன்றமே அரசின் கைப்பொம்மையாகச் செயற்படும் போது அங்கு அகிம்சை வெல்லக் கூடிய சாத்தியக் கூறுகள் இல்லை.

தென் ஆபிரிக்காவில் மக்கள் அகிம்சை வழியிலா போராடினார்கள்? தென் ஆபிரிக்காவின் வரலாற்றைச் சற்றுப் படித்துப் பாருங்கள் புரியும். அமெரிக்கா, மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் அங்குள்ள தங்கச் சுரங்கங்களைக் காப்பாற்ற, கறுப்பினமக்களின் வன்முறைப் போராட்டம் வலுப் பெற்ற போது வெள்ளையர்கள் மேல் அழுத்தம் கொடுத்ததுடன், தமது நலன்களுக்கு எதிராகவோ அல்லது வெள்ளையர் நலன்களுக்கு எதிராகவோ கறுப்பின அரசு செயற்படமாட்டாது என நெல்சன் மண்டேலா உறுதியளித்த பின்னரே ஆட்சி மாற்றம் நடந்தது.

10:33 PM, September 26, 2007
சிறில் அலெக்ஸ் said...

//அமெரிக்காவில் அரசியல்வாதிகள் செயற்பட முன் அமெரிக்க நீதிமன்றங்களே கறுப்பின மக்களின் சார்பான நீதியான தீர்ப்புக்களை வழங்கி அரசியல்வாதிகளை அத் தீர்ப்புக்களை அமுல்படுத்த கட்டாயப்படுத்தியது. //

ம்... ஆனால் இதுவே முழுமையான முடிவாய் அமையவில்லை என்பதுவும் தொடர்ந்த அகிம்சை போராட்டங்களுக்கு வித்திட்டது என்பதுவும் உண்மையில்லையா. இந்தப் போராட்டம் இன்னும் தொடர்கிறது என்பதுவும் இன்னொரு விதயம்.

அகிம்சையால் பெறப்படும் விடுதலையின் பின்னர்கூட இத்தனை வெறுப்பிருக்குமானால் ஆயுதப் போராட்ட வெற்றிக்கு எப்படி இருக்கும் அது தீராத பகையாகத்தானிருக்கும்.

ஒவ்வொரு விடுதலைப் போரும் ஒவ்வொரு விதம்தான் என்பதில் சந்தேகமில்லை. நம் ஆயுதங்களை தீர்மானிப்பது நம் எதிரிகளே என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அகிம்சை ஒரு வெற்றி தரும் ஆயுதமே (போராட்ட முறையே) அல்ல என்பதை மறுக்கிறேன்.

10:54 PM, September 26, 2007
வெற்றி said...

/* Let us for a moment assume that all Tamil people, including the Rebels, killed during the history of violance in Srilanka had died like Diliban died or just a 500 of them... could you imagine the impact it would make. it would startle the world and would have a deeper impact than even if the LTTE wins over the battle, I think.*/

சிறில், ஒரு நாடு தனது சொந்த நலன்களை முன்னிறுத்தியே தனது வெளிநாட்டுக் கொள்கைகளை வகுக்கிறது. அங்கே நீதி, நியாயம் எல்லாம் கிடையாது.

அகிம்சைப் போராட்டம் நடாத்தினால் உலக நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்றோ அல்லது பாரிய தாக்கத்தை உலகளவில் உண்டுபண்ணும் என்றோ சொல்வது தவறு.

இவ்வளவு காலமும் பரம இரகசியம் என பதுக்கி வைத்திருந்த பல தகவல்களை கடந்த சில வருடங்களுக்கு முன் CIA declassified பண்ணியது. அத் தகவல்களைப் படித்தீர்கள் என்றால் பல உண்மைகள் தெரியும்.

1960 களில் திபெத் மக்கள் சீனாவிற்கு எதிராக அகிம்சைப் போராட்டம் நாடாத்தினர். அவர்களுக்கு உதவி செய்வதாக CIA உறுதியளித்திருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான திபெத் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உலக நாடுகள் என்ன செய்தது அப்போது? திபெத் மக்களின் அகிம்சைப் போராட்டம் வென்றதா?

1950 களில் இந்தோனோசிய அரசுக்கு எதிராக அந் நாட்டின் மக்கள் அகிம்சை வழியில் போராடினர். அமெரிக்க உதவியுடன் இந்தோனேசியா அரசு பல இலட்சக்கணக்கான தனது சொந்தக் குடிமக்களையே கொன்று குவித்தது. அப்போது உலக நாடுகள் என்ன செய்தன? இந்தோனேசிய மக்களின் அகிம்சைப் போராட்டம் வென்றதா?

1989ல் சீனாவில் அகிம்சை வழியில் போராடிய ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்களை சீன அரசு சுட்டுப் பொசுக்கியது. என்ன நடந்தது? அப்போது உலக நாடுகள் என்ன செய்தன? அம் மாணவர்களின் போராட்டம் வென்றதா?

சில வருடங்களுக்கு முன் பர்மாவில் புத்த பிக்குகளும் அந் நாட்டு மக்களும் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அகிம்சை வழியில் போராடினார்கள். அப்போது ஆயிரக்கணக்கானவர்கள் பர்மா இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அகிம்சைப் போராட்டம் அங்கு வென்றதா?

சிறில், விடுதலைப் போராட்டத்தில் அனுபவம் உள்ள வணபிதா. டெஸ்மொண்ட் ரூரூ அவர்கள் அகிம்சைப் போராட்டம் பற்றிச் சொன்னதை என் முன்னைய பின்னூட்டத்தில் படித்துப் பாருங்கள்.

வல்லவந்தான் வாழ்வான் என்பதுதான் உலக நியதி.

10:59 PM, September 26, 2007
வெற்றி said...

/* ஆனால் அகிம்சை ஒரு வெற்றி தரும் ஆயுதமே (போராட்ட முறையே) அல்ல என்பதை மறுக்கிறேன். */

சிறில்,நீங்கள் சொல்வது போல ஒரு போராட்டம் பல வடிவங்கள் கொண்டது. அதில் அகிம்சையும்[பேச்சுவார்த்தை] அடக்கம். ஆனால் ஒரு இனத்தினதோ அல்லது நாட்டினதோ பலம்தான் அகிம்சைப் போராட்டத்தின் வெற்றியையும் நிர்ணயிக்கிறது என்பதைத்தான் உலக வரலாறுகள் சொல்லுகின்றன.

/* ஆனால் இதுவே முழுமையான முடிவாய் அமையவில்லை என்பதுவும் தொடர்ந்த அகிம்சை போராட்டங்களுக்கு வித்திட்டது என்பதுவும் உண்மையில்லையா */

உண்மை சிறில். அதேநேரம் அமெரிக்க அரசியல் தலைவர்களும் கறுப்பின மக்கள் தொடர்பாகத் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளத் தலைப்பட்டதும் ஒரு காரணம். நீங்கள் சொல்வது போல தொடர்ச்சியான அகிம்சைப் போராட்டம் அழுத்தங்களைக் கொடுத்தது உண்மை. அதேநேரம் அமெரிக்க பொலிசோ இராணுவமோ இலங்கைப் படைகள் செயற்பட்டது போல செயற்படாததையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆக வணபிதா. டெஸ்மொண்ட் ரூரூ சொன்னது போல எதிரி கொஞ்ச தார்மீக உணர்வுகளையாவது கொண்டிருக்க வேண்டும்.அதை அமெரிக்க காவல் படை கொண்டிருந்தது. ஆனால் இலங்கைப் படைகள்...?

11:13 PM, September 26, 2007
வெற்றி said...

/* நம் ஆயுதங்களை தீர்மானிப்பது நம் எதிரிகளே என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு. */

மிகவும் உண்மை சிறில். சரியாகச் சொன்னீர்கள். இதை நெல்சன் மண்டேலா தனது சுயசரிதையான சுதந்திரத்திற்கான நீண்ட பயணம் [Long Walk To Freedom] எனும் நூலில் இப்படிச் சொல்கிறார்:

The first issue to arise was in many ways the most crucial, and that was the armed struggle. We spent a number of months discussing it. They insisted that the ANC must renounce violence and give up the armed struggle before the government would agree to negotiations-- and before I could meet President Botha. Their contention was that violence was nothing more than criminal behavior that could not be tolerated by the state.

I responded that the state was responsible for the violence and that it is always the oppressor, not the oppressed, who dictates the form of the struggle. If the opressor uses violence, the oppressed have no alternative but to respond violently. In our case it was simply a legitimate form of self-defense. I ventured that if the state decided to use peaceful methods, the ANC would also use peaceful means. "It's up to you," I said,"not us, to renounce violence."
[Long Walk to Freedom, p.537]

----------------------------------
/* இந்தப் போராட்டம் இன்னும் தொடர்கிறது என்பதுவும் இன்னொரு விதயம்.*/

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் சிறில்.
சில மாதங்களுக்கு முன் எனது அமெரிக்க கறுப்பின நண்பனுடன் Detroit ல் மிகவும் பின் தங்கிய கறுப்பின மக்களின் பகுதிக்குச் சென்றிருந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை சிறில். அவர்களுக்கு தண்ணீர் வசதியே இல்லையென்றால் நம்புவீர்களா?

New Orleans ஐ Katrina தாக்கிய போது அமெரிக்க அரசு நடந்து கொண்டவிதத்தை அறிந்திருப்பீர்கள்தானே?!

---------------------------------
சிறில்,
அம்பேத்கரும் தீண்டாமையை எதிர்த்து அகிம்சை வழியில்தானே போராடினார்? அவரின் போராட்டம் வென்றதா?

11:35 PM, September 26, 2007
சிறில் அலெக்ஸ் said...

இன்றைய நிலையில் விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற உலக நாடுகளின் ஈடுபாடு மிகவும் தேவை. இப்போதைக்கு ஆயுதப்போராளிகளை ஆதரிக்க உலகம் முன்வரத் தயங்குகிறது அது மிகவும் நியாயமானப் போராட்டமாயிருக்கிறபோதும். எத்தனை மோசமானதாயிருந்தாலும் மக்களால் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' அரசாங்கத்திற்கு ஒரு மதிப்பிருக்கிறது.

இலங்கை அரசின் மதிப்பு உலக அளவில் குறைந்து வருவது அது அப்பாவி மக்கள் மீது காட்டும் மனித உரிமை மீறல்களுக்கே தவிர போராளிகள் மீதல்ல.

என்னைப் பொறுத்தவரையில் திலீபனின் மறைவு என்னில் பெரிய தாக்கத்தையும் உணர்வையும் ஏற்படுத்தியது. அப்போது நான் முட்டத்தில் உலகம் தெரியாத சிறுவனாயிருந்த நேரம். இன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த அகிம்சை முறைப் போராட்டம் உதவும் என்றே நம்புகிறேன்.

இருப்பினும், ஒரு வெளி ஆளாக, இலங்கைப் பிரச்சனை குறித்து எது வேண்டுமானாலும் என்னால் எளிதாகக் கூறிவிட இயலும் என்பதையும் உணர்கிறேன்.

11:36 PM, September 26, 2007
சிறில் அலெக்ஸ் said...

//சிறில்,
அம்பேத்கரும் தீண்டாமையை எதிர்த்து அகிம்சை வழியில்தானே போராடினார்? அவரின் போராட்டம் வென்றதா?//

இதில் யாருக்கும் இன்னும் முழு வெற்றி கிடைக்கவில்லையே.

11:59 PM, September 26, 2007
வெற்றி said...

/* இன்றைய நிலையில் விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற உலக நாடுகளின் ஈடுபாடு மிகவும் தேவை. */

சிறில், நீங்கள் சொல்வது மிகவும் சரி. உங்களின் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன்.சர்வதேச, குறிப்பாக அமெரிக்காவின் ஆதரவு இன்றைய நிலையில் மிகவும் முக்கியம்.

குறிப்பாக, இந்தியா, அமெரிக்காவின் ஆதரவு மிகவும் அவசியம். அதனால்தான் அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் சர்வதேச, குறிப்பாக அமெரிக்கா , இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவை இலக்கு வைத்தே தமது நகர்வுகளைச் செய்கின்றனர். இதனால்தான் இலங்கை அரசு பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தவில்லை.

இப்போது புலிகளின் அரசியல் நகர்வுகள் இலங்கை அரசுடன் இல்லை. அமெரிக்கா போன்ற நாடுகளுடனேயே.இதில் புலிகள் சில இராஜதந்திர வெற்றிகளை ஈட்டியுள்ளனர் என்றே நான் நினைக்கிறேன்.

நாம் விரும்புகின்றோமோ இல்லையோ உலக அரசியலுக்கு ஏற்றமாதிரி நாம் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இன்று உலக அரசியல் அரங்கு Globalization Era வில் இருக்கிறது. இப்போது அமெரிக்காதான் பெரியண்ணன். அமெரிக்கா சொன்னதுதான் சட்டம். அமெரிக்கா சர்வதேச பொலிஸ்காரன். ஆகவே இன்று அமெரிக்காவை அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயம் உள்ளது.

1985 க்கு முன் பனிப் போர்காலம்[cold war] என்று சொல்லப்பட்ட காலம். அக் காலத்தில் பல விடுதலைப் போராட்டங்கள் வெற்றி கண்டன. காரணம், அமெரிக்கா ஒரு பக்கத்திற்கு ஆதரவு அளித்தால் சோவியத் யூனியன் மற்றைய பக்கத்திற்கு ஆதரவளிக்கும்.

வியற்னாமில் அமெரிக்கா தோற்றதற்கு சோவியத் யூனியனும் சீனாவும் முக்கிய காரணம்.

ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் தோற்றதற்கு அமெரிக்காவே காரணம். உண்மையில் அமெரிக்காவே தலிபான்களை உருவாக்கி அவர்களுக்குப் பயிற்சி, ஆயுதங்கள் வழங்கியது. ஆக அமெரிக்காவிற்காக தலிபான்கள் சோவியத்துடன் போரிட்டனர்.

/* இலங்கை அரசின் மதிப்பு உலக அளவில் குறைந்து வருவது அது அப்பாவி மக்கள் மீது காட்டும் மனித உரிமை மீறல்களுக்கே தவிர போராளிகள் மீதல்ல. */

அமெரிக்கா போன்ற நாடுக்ள் மனித உரிமைக்கு மதிப்பளிப்பதை விட தமது நலன்களுக்கே முக்கியத்துவம் அளிப்பவை. இலங்கை அதிபர் அமெரிக்கா சார்பு ஜனாதிபதி இல்லை என்பதுதான் முக்கிய காரணம். ரணில் அமெரிக்க விசுவாசி. அதனால்தான் விடுதலைப் புலிகள் ராஜபக்ச வெல்வதை விரும்பினர்.

இப்படி இராஜபக்சாவை வெல்ல வைப்பதன் மூலம் பிற நாடுகளிடமிருந்து இலங்கையைத் தனிமைம்படுத்த , இப்படி அழுத்தங்கள் வரும் என நம்பினர். இது விடுதலைப் புலிகளின் இராஜ தந்திரத்திற்குக் கிடைத்த வெற்றி. ஆனால் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

/* இப்போதைக்கு ஆயுதப்போராளிகளை ஆதரிக்க உலகம் முன்வரத் தயங்குகிறது அது மிகவும் நியாயமானப் போராட்டமாயிருக்கிறபோதும்.*/

சிறில், நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் இப்போது நிலமைகள் [உலக அரசியல்] மாறி வருகிறது. அதாவது பனிக்கால அரசியல் போல் வீரியம் இல்லாவிடிலும் அக் காலம் [பனிப்போர் கால] போல அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.


குறிப்பாக, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருப்பது சீனாவிற்கு விருப்பம் இல்லை. அதனால் இப்போது தலிபான்களுக்கு சீன ஆயுதம் வழங்கி வருவதாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த மாதம் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள் கூட தலிபான்கள் வசம் உள்ளதாக அமெரிக்கா, பிரிட்டன் தெரிவித்துள்ளதுடன் இந் நாடுகளின் உயரதிகாரிகள் சீனா சென்று தமது அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அண்மையில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இணைந்து நடாத்திய கடற்படைகளின் பயிற்சி குறித்து சீனா, ரஸ்சியா அதிருப்தி கொண்டுள்ளன. இந்த நிலை நீடித்தால் இலங்கை இனப்பிரச்ச்னையும் இவர்களின் கவனத்தைப் பெறும்.

1984ல் சோவியத்தின் அதிபராக இருந்த மிக்கெயில் கொர்பச்சோவ் இலங்கையில் அமெரிக்கத் தலையீடு தமது நலன்களுக்கு உகந்ததல்ல எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. துரதிஸ்டவசமாக சோவியத் உடைந்தது. அப்போதுதான் எமது போராட்டமூம் தீவிரமடையத் தொடங்கியது. இல்லாவிடில் சோவியத் உதவி புலிகளுக்குக் கிடைத்திருக்கும்.

இப்போதும் சீனா இலங்கையில் தனது பார்வையை வைத்திருக்கிறது. எனவே எதிர்கால அரசியல் எமக்குச் சாதகமாக அமையலாம்.

1:15 AM, September 27, 2007