இந்தக் கட்டுரை 2006 தேர்தலின் பொழுது எழுதப்பட்டது. தற்பொழுது ஞாநி எழுதியிருக்கும் கட்டுரை கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டுள்ள சூழலில் இதனை மீள்பதிவு செய்வது பொருத்தமாக தோன்றியது.
ஞாநியின் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. அதே நேரத்தில் ஞாநி இதனை கலைஞர் மீதான நல்லெண்ணம் காரணமாக எழுதினார் என நினைக்க முடியவில்லை. ஞாநியின் கட்டுரைகளில் கலைஞர் மீதான எதிர்ப்பு அதிகம் தென்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.
ஞாநியின் அபத்தமான பல கருத்துகள் குறித்து ஒரு சிறு உதாரணம் கொடுக்க வேண்டுமென்றால் சென்னை சங்கமத்தின் பொழுது அவர் எழுதிய கட்டுரை தான் நினைவுக்கு வருகிறது. அதிலே வெளிநாட்டு தமிழர்கள் டிசம்பர் சங்கீத சீசனுக்கு சென்னை வந்து விட்டு சென்று விடுவார்கள். எனவே சென்னை சங்கமத்தை ஜனவரியில் நடத்துவதால் வெளிநாட்டு தமிழர்கள் அதிகளவில் சென்னை வருவார்கள் என்று சொல்ல முடியாது என்ற தொனியில் ஞாநி எழுதியிருந்தார் (அந்த சுட்டி இப்பொழுது இல்லாததால் இங்கே கொடுக்க முடியவில்லை) .
டிசம்பர் சங்கீத சீசனுக்காக சென்னை வருபவர்கள் யார் ? சங்கீத சீசனில் சென்னை வருபவர்கள் அதிகமா, அல்லது பொங்கலுகாக சென்னை/தமிழகம் வருபவர்கள் அதிகமா ?
இவ்வாறு ஞாநியின் சார்புகள் தெளிவாக தெரிந்தாலும், அவரது தற்போதைய கட்டுரையின் கருத்தில் எனக்கு பெரிய விமர்சனம் எதுவும் இல்லை. கலைஞர் அரசியலை விட்டு விலக வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். ஆனால் ஞாநியின் கட்டுரையின் தொனியில் சில அதிருப்திகள் எனக்கும் உள்ளன. அது ஞாநியின் கலைஞர் எதிர்ப்பினையே ஞாபகப்படுத்துகிறது
2006ல் எழுதிய கட்டுரையை இங்கே தருகிறேன்
ஸ்டாலின் முதல்வராக வேண்டும், கலைஞர் விலகவேண்டும்
82வயதில் திமுகவை கலைஞர் ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருக்கிறார். அவருக்கும் திமுகவிற்கு பலர் தெரிவித்துள்ள வாழ்த்துக்களில் என்னுடைய வாழ்த்தினையும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறேன். வாழ்த்த வயதில்லை என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. ஓட்டு போடும் வயதிருப்பதால் தேர்தலில் வெற்றி பெறும் எவரையும்ஹ் வாழ்த்துவதற்கும் வயது ஒரு பொருட்டல்ல.
இந்த தேர்தலில் எனக்கு ஏற்பட்ட பல ஆச்சரியங்களில் ஒன்று கலைஞரின் பிரச்சாரம். 82வயதில் தமிழகத்தின் பல தொகுதிகளுக்கு சென்ற அவரது உடல் உறுதி என்னை வியப்பில் ஆழ்த்தியது. சென்னையில் இருந்து நான்கு மணி நேரப் பயணத்தில் இருக்கும் நெய்வேலிக்கு செல்வதற்குள் ஏற்படும் பயண எரிச்சல் ஒரு புறம் என்றால் இந்த கோடை காலத்தில் பயணம் செய்வதே எரிச்சல் மிகு தருணம் தான். என்ன தான் ஏசி காரில் சென்றாலும் கூட கோடை காலங்களில் ஏசியை மீறிய எரிச்சல் சில நேரங்களில் ஏற்படுவது இயல்பு. ஆனால் 82 வயதிலும் கடும் கோடை வெப்பத்திற்கிடையே சில ஆயிரம் கீ.மீ பயணம், பிரச்சார கூட்டம், தொண்டர்களின் அலைமோதல் இவற்றிடையே அவரது பேச்சின் ஈர்ப்பு மட்டும் இன்னும் குறையவே இல்லை. அதே கரகரப்பான குரல். அதில் தெரியும் கம்பீரம் போன்றவை கலைஞருக்கே உரித்தான இயல்புகள்.
என்றாலும் அதை மீறி தள்ளாட்டத்துடன் நடக்கும் அவரது நடை, நிற்பதற்கு கூட தேவைப்படும் ஒரு உதவியாளர், நிற்க முடியாமல் உட்கார்ந்து கொண்டே பேசும் அவரது முதிய நிலை போன்றவையெல்லாம் பார்க்கும் பொழுது கலைஞர் இந்த அரசியல் சாக்கடையை விட்டு கொஞ்சம் விலகி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் 82வயதிலும், 2006 தேர்தலில் திமுக வெற்றி பெற கலைஞர் தான் தேவைப்படுகிறார் என்பதை கவனிக்கும் பொழுது திமுகவின் அடுத்த தலைமுறையினர் பற்றிய கேள்விக்குறியும் எழுகிறது. அடுத்த தேர்தலில் திமுகவிற்கு மக்களிடையே ஆதரவு திரட்ட கலைஞர் ஆரோக்கியமுடன் இருப்பார் என்ற எண்ணம் எழுந்தாலும் அடுத்த தலைமுறை திமுகவை கலைஞர் அவரது காலத்திலேயே ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று தோன்றுகிறது. தமிழக அமைச்சரவையில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி என வயதான தலைமுறையினரை தொடர்ந்து பார்க்க வேண்டுமா என்ற அலுப்பும் ஏற்படுகிறது.
இன்று இந்தியாவின் இளையதலைமுறை பல நாடுகளில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தென் மாநிலங்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. தமிழகம் பல இளைய தலைமுறை பொறியாளர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு இயல்பாக இருக்கின்ற கல்வி வளம், உள்கட்டமைப்பு காரணமாக ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வந்து சேருகின்றன. தமிழகம் ஆசியாவின் எதிர்கால முக்கிய பிராந்தியத்திற்கான விருதினைப் பெற்று இருக்கிறது (ASIAN REGION OF THE FUTURE). ஆஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் இந்த விருதினைப் பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழகம் இந்த முதலீடுகளைப் பெற தகுந்த அளவிலான ஒரு அரசாங்கத்தை கடந்த 5ஆண்டுகளாகப் பெற்றிருந்தது.
என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்தது போல ஜெயலலிதாவின் கடந்த 5ஆண்டு கால ஆட்சியில் பொருளாதார ரீதியில் தமிழகம் ஒரு நல்ல நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தியா போன்ற ஏழ்மை அதிகம் இருக்கும் நாடுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியடைய முக்கிய காரணங்களாக இருப்பதில்லை. பொருளாதாரமும் உயரவேண்டும், மக்களுக்குச் சலுகைகளும் வழங்க வேண்டும். இதனை சரியான முறையில் பேலன்ஸ் செய்வதில் தான் இந்தியாவில் அமையும் அரசாங்கங்களின் திறமை இருக்கிறது. அந்த வகையில் பொருளாதார ரீதியில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், ஜெயலலிதா மக்களுக்கு சலுகைகள் வழங்கும் விதத்தில் சரியாக செயல்படவில்லை. இதை தவிர ஜனநாயக முறையில் இந்தியா கடுமையான சட்டதிட்டங்களை வைத்திருக்காவிட்டால் ஜெயலலிதா ஒரு முழுமையான சர்வாதிகாரியாகவே மாறியிருப்பார். எனவே பொருளாதார செயல்பாட்டில் ஜெயலலிதா சரியாக செயல்பட்டிருந்தால் கூட பிற வகையில் அவரின் செயல்பாடு கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியது. அதுவே அவர் 2004தேர்தலின் தோல்விக்கும், அதனை அவர் தாமதமாகப் புரிந்து கொண்டு தவறுகளை திருத்திக் கொண்டமை தான் 2006 தேர்தலில் மோசமான தோல்வியை தழுவாமைக்கும் முக்கிய காரணம்.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் செயல்பாடு. அரசாங்கம் வேகமாக செயல்பட வேண்டும். பொருளாதார ரீதியில் பன்னாட்டு நிறுவனங்களை மாநிலத்திற்கு கொண்டு வந்து முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்கும் சலுகைகள், அடிப்படை வாழ்க்கை தேவைகள் போன்றவற்றை வழங்க வேண்டும். அரசாங்கத்தின் செலவுகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் அரசாங்கத்தின் வருவாய் பெருக்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியில் போட்டி இன்று அதிகரித்து இருக்கிறது. அண்டை மாநிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர கடுமையாக முயற்சி மேற்க்கொள்கின்றன. இந்த முதலீடுகளை பெருமளவில் கவர்ந்தால் தான் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டுமானால் தமிழகத்திற்கு கவர்ச்சியான முதல்வர் வேண்டும். இந் நிலையில் தமிழகத்திற்கு 82வயது கலைஞர் முதல்வராக இருப்பது ஏற்புடையது தானா என்ற கேள்வி எழுகிறது.
கலைஞர் முதல்வராகும் பட்சத்தில் அவரது அரசாங்கம் ஒரு முதிய மந்திரி சபையாகத் தான் இருக்கும். அரசாங்கம் அரசியல்வாதிகளை விட அவர்கள் தங்களிடையே வைத்துக் கொள்ளும் அரசாங்க அதிகாரிகளால் தான் நடத்தப்படுகிறது என்றாலும், அந்த முதல்வர் தான் அரசாங்கத்தின் முகம். தன்னுடைய மொத்த அமைச்சர்களையும் டம்மியாக்கி ஜெயலலிதா தன்னை முதலீடுகளுக்குச் சாதகமான முதல்வராக வெளிப்படுத்திக் கொண்டார். ஆனால் கலைஞரால் அது போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. ஏற்கனவே அவர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் தமிழக பொருளாதாரத்திற்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படும். அவரது முதிய வயதில் செயல்பாடு மந்தப்படும் பொழுது, தமிழகத்திற்கு வரும் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும். இது கலைஞர் மீதும், தமிழக அரசு மீதும் கடும் சுமையை ஏற்படுத்தும். இந்த காரணங்களால் தான் கலைஞர் முதல்வராவது சரியானது அல்ல என நான் நினைக்கிறேன்.
கலைஞருக்கு இந்த வாய்ப்பு இல்லையெனில் வேறு யாருக்கு இருக்கிறது ? நிச்சயமாக திமுகவில் தொண்டர் பலம் கொண்ட ஸ்டாலினை தவிர வேறு யாருக்கும் இந்த வாய்ப்பு இருக்கப்போவதில்லை. எனவே அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு கலைஞர் விலக வேண்டும். ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.
ஸ்டாலினுக்கு அந்த தகுதி எந்தளவிற்கு இருக்கிறது ? ஸ்டாலினுக்கு அந்த தகுதி இல்லையெனில் தயாநிதி மாறன் முதல்வராகலாமா ?
ஸ்டாலினின் வாய்ப்புகளும், தகுதிகளும் ஒரு புறம் இருக்க, ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும்.
கலைஞர் அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுக்கும் தருணங்களில் அவரது ஆசை பேரன் தயாநிதியையும் அரசியலில் இருந்து விலக்கி தன்னுடன் அழைத்துக் கொள்வது நல்லது. திமுக மீதான அபிமானம் இனிமேலும் அதிகம் சேதம் அடையாமல் காப்பாற்ற இது உதவும்.
அரசாங்கத்தை தவிர திமுகவின் எதிர்காலத்தை முன்னிட்டும் கலைஞர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.
****
மேலே எழுதிய விடயத்தில் ஒன்றாவது நடந்ததில் எனக்கு மகிழ்ச்சி
அது தயாநிதி மாறன் அரசியலில் இருந்து விலக வேண்டும் என நினைத்தது :)
கலைஞர் அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுக்கும் தருணங்களில் அவரது ஆசை பேரன் தயாநிதியையும் அரசியலில் இருந்து விலக்கி தன்னுடன் அழைத்துக் கொள்வது நல்லது. திமுக மீதான அபிமானம் இனிமேலும் அதிகம் சேதம் அடையாமல் காப்பாற்ற இது உதவும்.
26 மறுமொழிகள்:
என்னுடைய நன்பர்கள் பலரின் உணர்ச்சிகளை தூண்டி எதிர்வினையாற்றச்செய்தது ஞானி அவர்களின் கட்டுரை...
1:59 PM, October 12, 2007அதில் எனக்கு அபத்தமாக தோன்றியது, பெரியார் மூத்திர சட்டியை சுமந்துகொண்டு ஊர் ஊராகப்போனார் என்பது...
பெரியார் இருந்த காலகட்டத்தில் ஊடகங்களின் ஆதிக்கம் இவ்வாறாயில்லலயே...கலைஞர் நினைத்தால் தினமும் காலையில் கலைஞர் தொலைக்காட்சியில் தோன்றி உடன்பிறப்பே...என்று ஆரம்பித்து நெஞ்சாரப்பேசலாமே...
ஹும்...
இங்கே இன்னோரு விஷயம் என்னவென்றால் கலைஞரின் பகுத்தறிவை குற்றம் சுமத்துபவர்கள் அவரின் மஞ்சள் துண்டை சொல்லிக்காட்டுவது அபத்ததின் உச்சம்...
சைக்கிள் போட்டி - டூர் டே ப்ரான்ஸில் வெற்றியை யெல்லோ ஜெர்ஸி (Yellow) ஏன் கொடுக்கப்படுகிறது, ஹெல் பெட்ரோல் பங்கில் ஷெல் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்பது போன்றதொரு அபத்தம்....இதை திரும்பத்திரும்ப பின்னூட்ட பாலா ஊரெங்கும் உளறிவருவது கண்டனத்துக்குரியது...
மற்றபடி ஸ்டாலின் உடனடியாக முதல்வராக வரவேண்டும் என்பது எனக்கு உடன்பாடான விஷயம்..!!!
இக்கட்டுரையை வரவேற்கிறேன். ஆனாலும் தளபதிக்கு பதிலாக வேறொருவர் சில காலத்துக்கு முதல்வராக இருக்கலாம்.
2:08 PM, October 12, 2007என்னோட சாய்ஸ் : வீரபாண்டியார் அல்லது துரைமுருகன்
ஸ்டாலின் உடனடியாக முதல்வராக வரவேண்டும், அதுவும் கலைஞரே பதிவியை குடுத்துவிட்டு செல்ல வேண்டும். இதிலே கலைஞர் தேவகவுடாவை பின்பற்றுதல் நலமே. கலைஞர் இல்லையெனில் அழகிரியின் ஆதிக்கம் நிறைய வரும், அது தலைமைக்காக கூட இருக்கலாம்.
2:08 PM, October 12, 2007லக்கிலுக்,
2:30 PM, October 12, 2007துரைமுருகன், வீரபாண்டியார் போன்றோர் எல்லாம் முதல்வராவது குழப்பத்தினையே உருவாக்கும்.
ஸ்டாலின் முதல்வராவது தான் சரியாக இருக்கும்
லக்கி.
2:39 PM, October 12, 2007துரை முருகன், வீரபாண்டி, ஆற்காடு என்று ஆரம்பித்தால் அதிமுக நிலைமைதான் வரும். ஸ்டாலினே சரியான தேர்வு. இவர்கள கலைஞரை நடத்தியது போலவே நடத்தினால் நல்லாட்சி கிடைக்கும்.
லக்கிலுக்கார் கோபித்துக் கொள்ளாமல் இருந்தால் :-),
2:51 PM, October 12, 2007ஸ்டாலின் வேண்டாம் என்கிற பட்சத்தில் என்னோட சாய்ஸ்.. தங்கம் தென்னரசு
//லக்கிலுக்கார் கோபித்துக் கொள்ளாமல் இருந்தால் :-),
3:08 PM, October 12, 2007ஸ்டாலின் வேண்டாம் என்கிற பட்சத்தில் என்னோட சாய்ஸ்.. தங்கம் தென்னரசு///
அண்ணே, அவர் உங்க ஏரியாக்காரரா ??? :)))
"கருப்புத்துண்டு" வைகோ அவர்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது ஒருகாலத்தில்.
3:26 PM, October 12, 2007கூடா நட்பை வளர்த்துக்கொண்டு,சேரக்கூடாத கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு இப்ப நொந்துபோய் இருக்கார்.
அன்புடன்
அரவிந்தன்
//துரைமுருகன், வீரபாண்டியார் போன்றோர் எல்லாம் முதல்வராவது குழப்பத்தினையே உருவாக்கும்.
3:34 PM, October 12, 2007ஸ்டாலின் முதல்வராவது தான் சரியாக இருக்கும்//
அரசு மைனாரிட்டியாக இருக்கும்போது தளபதி முதல்வர் ஆனால் தான் குழப்பம் வரும் என்று எண்ணுகிறேன்.
தளபதி முதல்வர் ஆவதாக இருந்தால் மெஜாரிட்டியோடு வரவேண்டும்!
வீரபாண்டியாருக்கு என்ன குறைச்சல்? நல்லவர் + வல்லவர்
//ஸ்டாலின் வேண்டாம் என்கிற பட்சத்தில் என்னோட சாய்ஸ்.. தங்கம் தென்னரசு//
3:35 PM, October 12, 2007ரெண்டு வாரத்துக்கு முந்தைய விகடன் ஆர்ட்டிக்கிள் பண்ண மாயமோ? :)
// ஏற்கனவே அவர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் தமிழக பொருளாதாரத்திற்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படும். அவரது முதிய வயதில் செயல்பாடு மந்தப்படும் பொழுது, தமிழகத்திற்கு வரும் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும். இது கலைஞர் மீதும், தமிழக அரசு மீதும் கடும் சுமையை ஏற்படுத்தும்.//
3:42 PM, October 12, 2007தாங்கள் எழுதியதில் இந்த விஷயம் தப்பானதில் எனக்கு மகிழ்ச்சி.
தானே சுமையாக உணராதவரை அவருடைய ஊக்கமும் உள்ளமும் ஒத்துழைக்கும் வரை அவர் தலைமையில் (ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி) நீடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. எந்த ஓர் இளைஞனையும் விட சுறுசுறுப்பான சிந்தனையோடும் செயல்திறனோடும் வளைய வந்துகொண்டிருப்பவரை மாற்றுவது பற்றி ஏன் யோசிக்க வேண்டும்? ALTERNATE / SUCCESSION தயாராக இருப்பதனால், மாற்றம் குறித்த சிந்தனை இப்போது தேவையற்றது.
லக்கிலுக்,
3:52 PM, October 12, 2007திமுகவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு மாவட்ட தலைவர்கள் முக்கிய காரணம்.
கடலூருக்கு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பின் அவரது மகன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விழுப்புரத்திற்கு பொன்முடி, சேலத்திற்கு வீரபாண்டியார் என பலமான மாவட்ட தலைவர்கள் திமுகவின் கடந்த கால/எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய காரணமானவர்கள்/காரணமாக இருக்க போகிறவர்கள். இந்த மாவட்ட தலைவர்களிடையே கோஷ்டி அரசியல் உண்டு.
உதாரணமாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கும், பொன்முடிக்கும் அவ்வளவாக ஒத்துவராது. இது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரச்சனைகள் உண்டு. அவ்வாறு இருக்கும் பொழுது கலைஞர் என்கிற சக்தி இந்த மாவட்ட தலைவர்களை அவரின் கீழ் ஒன்றாக்கி, அவர்கள் அனைவரது பலத்தையும் கலைஞருக்கு பலமாக மாற்றியது.
எனவே தான் கலைஞருக்கு பிறகு ஒரு மாநில அளவிளான தலைவர் தேவை. அந்த இடத்தை ஸ்டாலினை தவிர வேறு யாரும் நிரப்ப முடியாது. வீரபாண்டியார் தலைவர் என்றால் பிற மாவட்டத்தில் பிரச்சனைகள் வரும். நிறைய குழப்பம் வரும் ஏனெனில் திமுக அமைப்பு ரீதியான கட்சியும் கூட. அதிமுக போல அல்ல.
தவிர ஏன் ஸ்டாலின் வரக்கூடாது. அவர் என்ன இன்னும் 25/30 வயதிலா இருக்கிறார் ? அவரும் மூத்த தலைவர் என்ற நிலையை எப்பொழுதோ அடைந்து விட்டார். இப்பொழுது அவர் முதல்வராகா விட்டால் எப்பொழுது ஆவது ?
விகடன் படிச்சுட்டு முடி எடுக்கிற.. ச்ச்சே... முடிவெடுக்கிற வயசா நமக்கு? நாங்க வளர்கிறோமே டாடி :-)
3:53 PM, October 12, 2007//அரசு மைனாரிட்டியாக இருக்கும்போது தளபதி முதல்வர் ஆனால் தான் குழப்பம் வரும் என்று எண்ணுகிறேன்.//
4:06 PM, October 12, 2007அண்ணா....தமிழ்நாட்டிலே அதற்கு வாய்ப்பு குறைவு.. ஆந்திராவிலே பாஸ்கர்ராவ், சந்திரபாபு நாயுடு செய்தது போலவோ, சமீபத்திய கர்நாடகா விவகாரம் போலவோ நடப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு..
தளபதி விஷயத்திலே, எனக்கு அதிருப்தியான விஷயம், he is not as enterprising as he is made out to be. ஸ்டாலின் இல்லாவிட்டால் வேற யார் என்று புகைச்சல் கிளம்பினாலாவது ஏதாவது நடக்கும் என்று பார்க்கிறேன்.. ஒண்ணும் தேற மாட்டேங்குது :-)
//icarus prakash said...
5:12 PM, October 12, 2007லக்கிலுக்கார் கோபித்துக் கொள்ளாமல் இருந்தால் :-)//
எது எழுதினாலும் சொன்னாலும் டவுஸர் போடாமல் சொலலுங்கள் எழுதுங்கள் அல்லது டவுஸரை கிழித்துவிடுவார்கள்.
சரி எனது கருத்து
கலைஞர் - ஸ்டாலினுக்கு தனது காலத்திலேயே முடிசூடவேண்டும்.
கலைஞரை பற்றி ஈழத்தமிழன் என்ற விதத்தில் சில ஊடல்கள் உண்டு .ஆனால் அகதியாய் வந்த ஈழத்தமிழனுக்கு கல்வி தந்த சீமான்
கலைஞர் அவர்கள்.
அதனை பிடுங்கிய சீமாட்டி அம்மையார்.
மறப்போமா?
வடக்கத்தையான் கலைஞர் தலையை கேட்டவுடன் துடித்தோம்ல..அதுதான் தொப்புள்கொடி உறவு.
/* இந்த தேர்தலில் எனக்கு ஏற்பட்ட பல ஆச்சரியங்களில் ஒன்று கலைஞரின் பிரச்சாரம். 82வயதில் தமிழகத்தின் பல தொகுதிகளுக்கு சென்ற அவரது உடல் உறுதி என்னை வியப்பில் ஆழ்த்தியது. */
7:06 PM, October 12, 2007சசி, தமிழக அரசியல் நிலமைகளை ஆர்வத்துடன் கவனித்து வருபவன் என்ற வகையில், தமிழகத்தின் கடந்த தேர்தல் பரப்புரை (சில) நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்க்க நேர்ந்தது.
அதில் நான் கவனித்த ஒரு விடயம், ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்த போது, தனது van இல் இருந்து இறங்காமல், van னின் உள்ளே இருந்த படியே மைக் பிடித்துப் பிரச்சாரம் செய்தார்.
ஆனால், கலைஞரோ, இந்தத் தள்ளாத வயதிலும் மேடை ஏறி மேடையில் அமர்ந்தே பரப்புரை செய்தார்.
உண்மையில் இச் சம்பவம் என்னை ஆச்சரியப்பட வைத்ததுமட்டுமல்ல, அவர் மேல் ஒரு பரிவும், மரியாதையும் என் மனதில் ஒரு நெகிழ்வையும் ஏற்படுத்தியது.
//ஆனால், கலைஞரோ, இந்தத் தள்ளாத வயதிலும் மேடை ஏறி மேடையில் அமர்ந்தே பரப்புரை செய்தார்.//
6:12 AM, October 13, 2007மேடையில் உட்கார்ந்து பேசுவது திராவிட மேடை நாகரிகம் அல்ல. ஆயினும் தந்தை பெரியார் தள்ளாத வயதில் அவ்வாறு பேசவேண்டியதாயிற்று.
டாக்டர் அய்யா அதன் பின்னால் அமர்ந்து பேச ஆரம்பித்த திராவிடத் தலைவர்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக கலைஞர் அப்போலோவில் சிகிச்சை பெற்று திரும்பிய பின்னர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் நின்றுகொண்டு பேசமுயற்சிக்க.. டாக்டர் அய்யா கடுமையாக கலைஞரை கடிந்துகொண்டார்.
இனி பேசும் மேடைகளில் அமர்ந்து தான் பேசவேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டார். அதிலிருந்தே கலைஞர் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக நின்றுக்கொண்டு கலைஞர் பேசுவதாக இருந்தால் 15 நிமிடமே பேசுவார். இப்போது அமர்ந்து பேசுவதால் அனாயசமாக ஒரு மணி நேரம் பேசுகிறார்.
டாக்டர் அய்யாவுக்கு நன்றி!
இன்னொரு சுவையான பின்குறிப்பு : கலைஞரிடம் அதிக உரிமையெடுத்து அவர் நலனுக்காக அவரிடமே உத்தரவுகள் பிறப்பிக்கக் கூடிய ஒரே தலைவர் டாக்டர் அய்யா மட்டுமே. கலைஞரை மஞ்சள்துண்டு அணியுங்கள். உங்களுக்கு பாங்காக இருக்கிறது என்று சொன்னவரும் அவரே.
/// லக்கிலுக் said...
2:14 PM, October 13, 2007//துரைமுருகன், வீரபாண்டியார் போன்றோர் எல்லாம் முதல்வராவது குழப்பத்தினையே உருவாக்கும்.
ஸ்டாலின் முதல்வராவது தான் சரியாக இருக்கும்//
அரசு மைனாரிட்டியாக இருக்கும்போது தளபதி முதல்வர் ஆனால் தான் குழப்பம் வரும் என்று எண்ணுகிறேன்.
தளபதி முதல்வர் ஆவதாக இருந்தால் மெஜாரிட்டியோடு வரவேண்டும்!////
லக்கி லுக், மைனாரிட்டி அரசு என்று பேசுவது வியப்பளிக்கிறது, அது போக, என்ன சொல்லுகிறார் இவர், தலைவர் மைனாரிட்டி அரசுக்கு முதல்வராக இருக்கலாம், ஸ்டாலின் இருக்க கூடாதா? இழுக்கு வந்துவிடுமோ? லக்கி லுக்-கின் தி.மு.க அடிதளம் சரியாக் இல்லை.
//அரசு மைனாரிட்டியாக இருக்கும்போது//
7:38 PM, October 13, 2007லக்கி, எப்பய்யா ஜெயா டிவியில் சேர்ந்தீங்க?
தளபதி பதவிக்கு வரலாம். தகுதி உண்டு. தமிழக முதல்வராக வரவிரும்பும் ஒரு மனிதன் தமிழகம் தவிர்ந்த பிற விடயங்களில் என்ன கருத்துக்களைக் கொண்டிருக்கின்றார் என்பதை வாக்காளர் அறிய வேண்டாமா? . அவர் வெளினாடுகள் குறித்த கருத்துக்கள், ஈழ நெருக்கடி என ஏதாவது கருத்துக்கள்?????!!!!!!. சரி இதையும் விட்டு விடுவோம்.
7:45 PM, October 13, 2007ஆனால் அண்டைய மானில அரசியல் குறித்தாவது பேசுவாரா எங்கள் நம்பிக்கை நட்சத்திரம்?
தமிழன்
தமிழ் சசி,
8:19 PM, October 13, 2007//துரைமுருகன், வீரபாண்டியார் போன்றோர் எல்லாம் முதல்வராவது குழப்பத்தினையே உருவாக்கும்.
ஸ்டாலின் முதல்வராவது தான் சரியாக இருக்கும்//
இந்த நிலை வர யார்க்காரணம் கலைஞர் தான், அன்றே , என்றோ அவருக்கு பின் அவர் மகன் தான் கட்சி தலைவராக, முதல்வராக வர வேண்டும் என்பதால், உண்மையான திறன் கொண்ட தலைவர்களை கலைஞருக்கு அடுத்தப்படியாக வளரவிட வில்லை.(வை.கோ,டி.ஆர் எல்லாம் கட்டம்கட்டப்பட்டார்கள்)
கலைஞரை அடியொற்றி ஒவ்வொரு இரண்டாம் கட்டத்தலைவரும் மாவட்டத்தில் அவர்கள் வாரிசுகளை வளர்த்து விட்டார்கள். தி.மு.க வில் தந்தைக்கு பொறுப்பு இல்லை எனில் தனயனுக்கும் இல்லை. அப்படியே எதாவது வேண்டும் எனில் பெறும் பணக்காரர் ஆக இருக்க வேண்டும். தினகரனின் முன்னாள் அதிபர் கே.பி.பி.குமரன் போன்று!
முடியாட்சி என்பது ஒழிந்தாலும் இன்னும் அரசியல்கட்சிகளின் வடிவில் அது தொடர்வது தான் இந்திய அரசியலின் சாபக்கேடு.
தி.மு.க வில் முதல் தலைமுறை அரசியல்வாதியாக எந்த இளைஞனும் சேர்வதே இல்லை. ஒரு இளைஞன் தி.மு.க வில் சேர்கிறான் எனில் அவன் தந்தை அங்கு ஏதோ ஒரு பொருப்பில் இருக்கிறார், அதை அடையத்தான் சேர்கிறான் என்பது பொதுவான நியதியாகிவிட்டது.
அப்படி அண்ணா நினைத்திருந்தால் அவரது வளர்ப்பு மகன் பரிமளமோ, அல்லது அவரது மனைவி இராணி அண்ணத்துரையோ தான் அடுத்த முதல்வர் ஆகி இருப்பார்கள். அப்போது கலைஞருக்கு மட்டும் தகுதி, திறமையின் அடிப்படையில் வாய்ப்பு , இப்போது கலைஞருக்கு பின்னர் வாரிசு உரிமையின் அடிப்படையிலா?
முன்மையில் தி.முக வின் வளர்ச்சி தேய்பிறையாக தான் உள்ளது. புதிதாக உறுப்பினர்கள்சேர்வது எல்லாம் காகித கணக்குகளே.
புதிதாக கட்சி ஆரம்பித்த வி.காந்த், சரத்குமாரை நம்பி கூட இளைஞர் தானே முன்வந்து போய் சேர்கிறார்கள், ஆனால் தி.மு.கவில் அப்படி யாரும் சேர்வதில்லை. இளைஞர்களுக்கு தி.மு.க மீது நம்பிக்கையே இல்லை.
அக்காலத்தில் அண்ணா எப்படி கட்சி வளர்த்தார் கல்லூரிகளில் போய் கூட்டம் போட்டு தான் இளைஞர்களை இழுத்தார்,அப்போதைய கல்லூரி மாணவ மன்றங்களே விரும்பி அண்ணாவை ,பேச அழைக்கும். அப்படி வந்தவர்கள் தான் காளிமுத்து, நெடுஞ்செழியன் , போன்ற பலர். இன்று எந்த கல்லூரி மாணவ மன்றங்களாவது ஸ்டாலினை பேச அழைக்குமா?
அரசியல்வாதியின் வாரிசுகள் எதாவது கல்லூரியில் பொறுப்பில் இருந்தால் அழைக்கலாம்.
அண்ணாக்காலத்திய தி.மு.க இளைஞர்களின் உழைப்பில் எழுந்து நின்றது, இன்றோ கலைஞர் போன்ற முதியவர்களின் உழைப்பில் காலம் தள்ளுகிறது.
சொந்த திறமை எதையும் வளர்த்துக்கொள்ளாமல் தந்தையாரின் புகழ் வெளிச்சத்தில் வாழும் ஸ்டாலின் எத்தனைக்காலம் அரசியலில் குப்பைக்கொட்டினாலும் , திறமை வளர்ந்து விடப்போவதில்லை.
எனவே கலைஞருக்கு பின்னர் ஸ்டாலின் தான் என்பது எல்லாம் "ஏற்பாடு செய்த" கட்சிப்பொதுக்குழுவின் தேர்வாக இருக்கலாம், ஆனால் மக்களின் தேர்வாக இருக்காது என்பது கலைஞர் இல்லாமல் தேர்தலை தி.மு.க சந்தித்தால் தெரிந்து விடும்!
நான் சொன்னது உண்மை என அனைவருக்கும் தெரியும் ஆனால் வேறு அங்கு வழி இல்லை என்ற ஒரு நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள். ஸ்டாலின் தவிர வேறு யாரும் வந்தால் உட்கட்சி குழப்பம் வரும், கட்சி பலவீனம் ஆகும்,ஸ்டாலினே வந்தால் குழப்பம் எதுவும் இல்லாமலே கட்சி பலவீனமாகிவும்!. இப்படி எல்லாம் செய்து தி.மு.கவின் அஸ்தமனத்திற்கு நாள் பார்த்து வைத்துள்ளார்கள்.
பின்னூட்டம் பெரிதாக போய்விட்டது மன்னிக்கவும், தனிப்பதிவாக போடலாம் என நினைத்தேன், ஆனால் உங்கள் பதிவே நல்ல இடம் என்பதால் இங்கே போட்டு விட்டேன்! வெளியிடுவீர்கள் தானே!
சசி அல்லது வவ்வால், தனிப்பதிவாக போடுங்கள்...ஸ்டாலின் பலம் பலவீனம் குறித்து விவாதிக்கலாம்..
11:25 PM, October 13, 2007திமுகவின் பலம், பலவீனம் இரண்டும் கலஞர்தான். ஆனால் இன்று பலவீனமே அதிகமாக காணப்படுகிறது.
12:42 AM, October 14, 2007hi.. sasi...
2:45 PM, October 23, 2007stalin is the best choice after kalaingar.. he has very good experience as a mayor.. he has good support from other party members..
//தளபதி பதவிக்கு வரலாம். தகுதி உண்டு. தமிழக முதல்வராக வரவிரும்பும் ஒரு மனிதன் தமிழகம் தவிர்ந்த பிற விடயங்களில் என்ன கருத்துக்களைக் கொண்டிருக்கின்றார் என்பதை வாக்காளர் அறிய வேண்டாமா? .//
9:39 PM, October 23, 2007வெளி விவகாரங்களில் என்ன தமிழக விவகாரங்களிலேயே அவரது எண்ண ஓட்டம் என்ன என்பதை தெரிந்துகொள்ள முடிவதில்லை. அவரது துறைக்கு வெளியே இதுவரை எந்தப் பெரிய சிந்தனைகளையும் அவர் வெளியிட்டதில்லை. (எனக்குத் தெரிந்தவரையில்:-)
ஓரிரவில் பொதுவாழ்க்கைக்கு வந்த எஸ் எஸ் வாசனையெல்லாம் பார்க்கும்போது இவர் இப்படி இருப்பதுகூட ஏதாவது வியூகத்தின்படியோ என்றும் எண்ண வைக்கிறது.
//பொதுவாழ்க்கைக்கு வந்த எஸ் எஸ் வாசனையெல்லாம்//
9:59 PM, October 23, 2007அச்சச்சோ, அது ஜி கே வாசன்!
Post a Comment