தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுக்கு இந்தியாவின் உச்சநீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடத்த முடியாத அளவுக்கு முழுமையான தடை என்பது அதிர்ச்சி அளிப்பது மட்டுமில்லாமல், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் நீதிமன்றங்கள் எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைப்பதும், இந்தியாவில் நீதிபதிகளாக இருந்து விட்டால் பல நூறு வருடங்களாக இருந்து வரும் பண்பாட்டு அடையாளங்களையும், விளையாட்டுகளையும் எந்த ஆய்விற்கும் உட்படுத்தாமல் தடை செய்ய துணிவது தனி மனித சுதந்திரத்திற்கு பெரும் கேடு விளைவிக்க கூடியது. அதுவும் தமிழர் கலாச்சாரத்தை சாராத ஒரு அமைப்பு, எந்த ஆய்வும் செய்யாமல் இவ்வாறான தீர்ப்பை முன்வைப்பது பெருவாரியான மக்களின் ஜனநாயக உரிமையை சிதைக்கும் போக்கு என்றே நான் நினைக்கிறேன்.
முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜல்லிகட்டு ஒரு ”வீர” விளையாட்டு என்றோ, தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் அடையாளம் என்றோ நான் நினைக்கவில்லை. ஒரு அப்பாவி காளையை 20 பேர் துரத்தி வளைத்து பிடிப்பது என்பது எந்த வகையிலும் வீர விளையாட்டாக முடியாது. இங்கே இந்த காளை ஒரு பரிதாபமான ஜீவனாகவே எனக்கு தெரிகிறது.
ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜல்லிகட்டின் இன்றைய நிலை என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு விளையாட்டு சீர்குலைந்து போனதன் தோற்றமாகத் தான் எனக்கு தெரிகிறது. ஜல்லிகட்டு சுமார் 4000 ஆண்டுகளாக தமிழர்களால் (திராவிடர்களால்) கொண்டாடப்படும் ஒரு விளையாட்டு என்பது ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் ஜல்லிகட்டு இருந்துள்ளதை வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றைய ஹிந்து நாளிதழில் அந்த செய்தி வெளியாகி உள்ளது.
Evidence of jallikattu in the Indus Valley emerges
இவ்வாறு 4000 ஆண்டுகளாக இருந்து வரும் மரபு மாற்றம் பெறுவது இயல்பானதே. ஒரு காலத்தில் தென்னிந்தியா, இலங்கை, கடாரம், சுமத்ரா என பல பகுதிகளை தமிழன் ஆட்சி செய்த பொழுது அந்த விளையாட்டு உண்மையிலேயே வீர விளையாட்டாக இருந்திருக்கும். சீறி வரும் காளையை அடக்குவது என்பது சாதாரண விடயம் அல்ல.
ஆனால் இன்றைக்கு இலங்கை, கர்நாடகா, மும்பை, மலேசியா என அனைத்து இடங்களிலும் உதை வாங்கும் பிறவியாக தமிழன் மாறி விட்ட நிலையில் அது வீர விளையாட்டாக இல்லாமல் காலப்போக்கில் மாற்றம் பெற்று வெறும் உற்சாகத்தின் அடையாளமாகவே உள்ளது.
அன்றைக்கு சீறி வரும் ஒரு காளையை அடக்க ஒருவர் அல்லது இருவர் முயன்ற காலங்கள் மாறி இன்றைய தமிழனின் “வீர” (பரிதாப) நிலைக்கு ஏற்ப ஒரு காளையை 20 பேர் அடக்கும் நிலைக்கு ஜல்லிகட்டு மாற்றம் பெற்று விட்டது. இது நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான போட்டி அல்ல. இதில் மாற்றங்கள் வேண்டும் என இந்த விளையாட்டினை ஒரு முறை நேரடியாக காண நேர்ந்த பொழுதே நான் உணர்ந்தேன். அத்தகைய மாற்றங்களை கொண்டு வராமல் ஒட்டுமொத்தமாக தடைவிதிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
தவிரவும் ஜல்லிகட்டு என்பது ஒரு வரையறைக்குள் விளையாடும் விளையாட்டகவும் இல்லை. விதிமுறைகளும் இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் அந்த கிராம மக்களே தங்களுக்கான வரையறைகளை நிர்ணயித்துக் கொள்ளும் பொழுது அவர்களுக்கு தகுந்தாற் போல தான் அந்த விளையாட்டை அமைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு எந்தளவுக்கு உற்சாகம் கிடைக்கிறதோ அவ்வாறே அந்த விளையாட்டும் இருக்கும். முழுமையான பாதுகாப்பு, தற்காப்பு ஏற்பாடுகள் செய்யும் வரை சில விதிமுறைகளை விதித்து அவ்வாறு இந்த விளையாட்டை நடத்துமாறு கூறலாம்.
சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு அதைத் தான் செய்தது. சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டை அனுமதித்து இருந்தது.
Last year, the Madras High Court allowed the event to take place. But it imposed certain conditions like double barricading to prevent the bulls from running through the crowd of spectators, putting bulls through drug and alcohol tests and stationing ambulances and mobile medical teams at the venues.
ஜல்லிக்கட்டு என்பது தொடர்ச்சியாக மக்களின் விளையாட்டாகவே இருந்து வந்துள்ளது. அதிகார மையங்களின் ஒழுங்கமைப்பு என்பது இன்று வரை அந்த விளையாட்டில் நுழையவில்லை. ஜல்லிக்கட்டு தொடர்ந்து மக்களின் கையில் இருப்பதே சரியானதாக இருக்கும். அதே நேரத்தில் தற்போதைய நிலையில் இருந்து ஜல்லிக்கட்டு மாற்றம் அடைய வேண்டிய தேவையும் உள்ளது. காரணம் இன்றைய நவீன உலகிற்கு ஏற்ப விளையாட்டும் மாற்றம் அடையும் பொழுது தான் அது தொடர்ச்சியாக நிலைத்து நிற்க முடியும். பலர் சேர்ந்து காளைகளை விரட்டுவது என்பது ஏற்புடையது அல்ல. அதுவும் எந்த ஒரு ஒழுங்கும் இல்லாமல் காளைகள் மீது தாவுவது பலருக்கு கடுமையான காயங்களையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது. தகுந்த தற்காப்பு முறைகளை புகுத்துவது போன்றவை முக்கியமான விடயங்களாக நான் பார்க்கிறேன். அது போலவே விலங்குகளை வதை செய்வது குறித்த கட்டுபாடுகளையும் கொண்டு வர வேண்டும்.
ஆனால் முழுமையாக தடை செய்வது என்பது எப்படி சரியாகும் ?
இடஒதுக்கீடு குறித்த ஒரு தீர்ப்பில் ஒரு நீதிபதி இடைக்கால தடையை விலக்க மறுத்து இவ்வாறு கூறினார்.
The Bench told Solicitor-General G.E. Vahanvati: "You [the Centre] have waited for 57 years. Why don't you wait for six more months till the case is finally decided?"
இடஒதுக்கீட்டிற்காக 57 ஆண்டுகள் பொறுத்துள்ளீர்கள். இன்னும் ஆறு மாதம் பொறுத்திருங்கள் என்பதே அந்த தீர்ப்பின் சாராம்சம். அதாவது தற்போதைய நிலையை (Status-quo) அப்படியே நீடிக்கும் தீர்ப்பு அது.
முழுமையாக விசாரிக்கும் வரை Status-quoஐ அப்படியே பராமரிப்பது என்பது மரபு. ஆனால் இந்த விடயத்தில் இது மாற்றம் கண்டுள்ளது தான் ஆச்சரியமாக உள்ளது.
******
விளையாட்டு என்பதே பொழுதுபோக்கு மற்றும் உற்சாகத்திற்கு தான். விளையாட்டு, வழிபாடு, நடனம், இசை என அனைத்துமே உற்சாகத்திற்கு தான். ஒவ்வொரு தட்டு மக்களின் வாழ்க்கை முறைக்கும் சூழலுக்கும் ஏற்ப இந்த விளையாட்டுக்கள் மாறுகின்றன. மேட்டுக்குடி மக்களுக்கு கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும் உற்சாகம் என்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், ஜல்லிகட்டு போன்றவை உற்சாகம். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப அவர்களின் கலாச்சாரமும், விளையாட்டுகளும், அடையாளங்களும் மாறுபடுகின்றன.
தயிரும், நெய்யும் சாப்பிட்டு வேதங்களை ஓதுபவர்கள், மிதமான வேலைகளை செய்பவர்கள் ராகங்களை ஆலாபனை செய்கின்றனர். வயலில் கடுமையாக உழைத்து களைத்து வருபவனுக்கு ஆர்ப்பாட்டமானவைகளாக இருக்கும் கரகாட்டங்கள், தப்பாட்டங்கள், ஜல்லிக்கட்டு போன்றவை உற்சாகமாகின்றன. இதில் ஒருவர் மற்றொருவரை பார்த்து உன் உற்சாகம் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது என்பது எப்படி பொருந்தும் ?
விலங்குகளை வதைப்பது காட்டுமிராண்டித்தனம் தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் விலங்குகளை இறச்சிக்காக பலியிடுவது அதை விட காட்டுமிராண்டித்தனம் இல்லையா ? எனவே இனி யாரும் இறச்சி சாப்பிட கூடாது என தடை விதிக்க முடியுமா ?
அவரவர் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப உற்சாகங்களும், பொழுதுபோக்குகளும் மாறுகின்றன. அடிக்கடி கிரிக்கெட்டில் தோற்று கொண்டே இருக்கும் இந்திய அணி ஒரு போட்டியில் சுமாராக விளையாடி தோற்ற பொழுது, அந்தப் போட்டியில் விளையாடும் ஒருவர் லூசுத்தனமாக மற்றவரை பார்த்து ”குரங்கு” எனக் கூறி நீக்கப்பட்ட பொழுது சிலர் இந்தியாவிற்கே அவமானம் ஏற்பட்டு விட்டதாக கொதித்தனர். எனக்கோ அது எந்த வகையிலும் அவமானமாக தெரியவில்லை. மாறாக முஸ்லீம்களை திட்டமிட்டு கொன்று 21ம் நூற்றாண்டின் ஹிட்லராக இருக்கும் நரேந்திர மோடி மறுபடியும் தேர்தலில் வெற்றி பெற்றதும், அவரின் குற்றங்களுக்கு இந்தியாவின் சர்வ அதிகாரம் பெற்ற நீதிமன்றங்கள் இன்று வரையிலும் தண்டனை வழங்காமல் இருப்பதும் தான் அவமானமாக தெரிகிறது.
பள்ளியில் படிக்கும் பொழுது Social Studies என்று ஒரு பாடம் இருக்கும். அதில் பல மாநிலங்கள், அவர்களின் பண்பாடுகள் குறித்த பாடங்கள் வரும். தமிழ்நாட்டின் முக்கிய கலைகளாக பரதநாட்டியமும், கர்நாடக சங்கீதமும் தான் அதில் முன்நிறுத்தப்படும். பரதநாட்டியமும், கர்நாடாக சங்கீதமுமா தமிழனின் கலை ? அது பாப்பனியத்தின் கலை. தமிழனின் கலை என்பது கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், கூத்து போன்றவையே. ஆனால் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்றவை மேலான கலைகளாக கற்பிதம் செய்யப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் கலையை சிறுமைப்படுத்தும் போக்கு தொடர்ச்சியாக நிலவி வருகிறது. இதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் கலைகள் அழிவை நோக்கி நகர்ந்து வருகின்றன. சில அழிந்தும் விட்டன. அந்த அபாயத்தால் தான் சென்னை சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் இன்றைக்கு தேவையாக உள்ளன. சென்னை சங்கமத்திற்கு வரும் கூட்டம் எவ்வளவு, சென்னை சபாக்களுக்கு வரும் கூட்டம் எவ்வளவு என கணக்கிட்டால் எது மக்களின் கலை என்பது புரியும்.
ஆனால் அதிகார மையங்கள் மேட்டுக்குடிவசம் உள்ளதால் அவர்களின் கலையை உயர்வாக கற்பிதம் செய்ய முடிகிறது. மேட்டுக்குடி அல்லாத மக்கள் மத்தியில் அக் கலைகள் குறித்த ஒரு உயர்வு மனப்பான்மையை ஏற்படுத்தவும் முடிகிறது. இன்றைக்கு இந்திய ஊடகங்களின் வளர்ச்சியும், இந்திய ஊடகங்களின் மேட்டுக்குடி தன்மையும் இத்தகையை நிலையை மேலும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான தொலைக்காட்சிகளில் மேட்டுக்குடியினரின் பண்பாடுகள் தான் பரப்ப்பபடுகின்றன. அதனுடைய தாக்கம் எப்படிபட்டது என்றால் கிராமத்தில் இருந்து நகரங்களுக்கு நகரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பரதநாட்டியமும், கர்நாடக சங்கீதமும் தான் சிறந்தவையாக தெரிகின்றன. தங்களுடைய வாரிசுகள் இத்தகைய கலைகளையே கற்க வேண்டும் என நினைக்கின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு பரதநாட்டியம் தெரியும், ராகங்கள் தெரியும் என வெளியே தம்பட்டம் அடித்துக் கொள்வது அவர்களுக்கு நாகரிகமாக தெரிகிறது. தங்கள் தகுதியும் உயர்வை அடைந்து விட்டதாக நம்புகின்றனர்.
இப்படியான மாற்றங்களால் இன்றைக்கு கரகாட்டம் அடைந்துள்ள நிலை என்ன என்பது நமக்கு தெரியும். கரகாட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்றால் அது எந்தளவுக்கு கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெரியும்.
இந்தக் கலைகள் போலவே தமிழனின் விளையாட்டுகளாக இருந்த சிலம்பாட்டம், ஜல்லிக்கட்டு, கபடி போன்றவை பின்னுக்கு தள்ளப்பட்டு மேல்தட்டு விளையாட்டுகளான கிரிக்கெட், டென்னிஸ் போன்றவை முன்னிறுத்தப்படுகின்றன.இன்றைக்கு தமிழனின் விளையாட்டுக்கள் வெறும் கலாச்சார அடையாளமாக மட்டுமே மாறி விட்ட நிலையில் அதனையும் தடை செய்ய முயல்வதை எதிர்க்க வேண்டிய தேவை உள்ளது.
******
பிபிசி தமிழோசையில் ”ஜல்லிகட்டு தடை” குறித்த செய்தியரங்கத்தில் ஜல்லிக்கட்டிற்கென உள்ள காளைகளை உழவு வேலைக்கு பயன்படுத்த முடியாது என்றும், ஜல்லிகட்டிற்கு தடை விதித்தால் இவை இறச்சிக்கு மட்டுமே பயன்படுத்தபடும் நிலை ஏற்படும் என்றும் மதுரையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் கூறினார்.
******
சமீப காலங்களில் நீதிமன்றங்கள் பல விடயங்களில் அத்துமீறி நுழைகின்றன. சட்டம் படித்து, வழக்கறிஞராகி அனுபவம் பெற்று நீதிபதியாகி விட்டால் இந்தியாவில் இருக்கும் எந்த விடயத்தையும் மாற்றும் அதிகாரம் கிடைத்து விடுகிறது என்பது ஒரு ஆபத்தான சூழ்நிலை ஆகும். தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தீப்புகளாக மக்களின் மீது திணிப்பது ஜனநாயக விரோதமான செயல் ஆகும்.
பல நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை observation என்ற போர்வையில் போகிற போக்கில் கூறும் போக்கும் நிலவி வருகிறது. இவை தீர்ப்புகள் அல்ல. ஆனால் மக்கள் மத்தியில் இவை பரபரப்பாக பேசப்படும் சூழலை ஏற்படுத்தி விடுகின்றன.
சமீபகாலங்களில் வெளியான சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள்.
சேது சமுத்திர பிரச்சனையில் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த பொழுது அரசாங்கத்தை கலைக்க பரிந்துரைப்போம் என ஒரு நீதிபதி கூறினார். இது தீர்ப்பு அல்ல. வெறும் கருத்து - observation. ஒரு மாநில அரசாங்கத்தை கலைக்க ஒரு நீதிமன்றம் பரிந்துரைக்க முடியுமா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, தன்னுடைய கருத்தால் அத்தகைய ஒரு பிம்பத்தை அந்த நீதிபதி ஏற்படுத்தினார்.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பகவத் கீதையை தேசிய தர்ம சஸ்திரமாக ஏற்க வேண்டும் என கூறினார்.
Allahabad HC judge wants Gita to be national holy book
நீதிமன்றங்கள் என்பன சட்டங்களை இயற்ற கூடாது. இருக்கின்ற சட்டங்களுக்கு ஏற்ப தீர்ப்புகளை வழங்க வேண்டும். அந்த சட்டங்களை பாதுகாக்க வேண்டும் என ஒரு தீர்ப்பில் இரு நீதிபதிகள் கூறினார்கள் (Justices A K Mathur and Markandey Katju).
"Courts should be limited to overseeing that the existing laws are upheld and it shouldn't take to creating laws.
இவ்வாறு இரு நீதிபதிகள் கூற, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியோ இந்த தீர்ப்பு எங்களை கட்டுபடுத்தாது என கூறினார்
SC not bound by overreach verdict: CJI
இப்படி ஒவ்வொரு நீதிபதியும் தங்களின் தனிப்பட்ட கருத்தை ”தீர்ப்புகளாக” முன்வைப்பது ஜனநாயக சூழலுக்கு ஆரோக்கியனமானது அல்ல. மக்கள் மத்தியில் குழப்பத்தையே இந்த தீர்ப்புகள் ஏற்படுத்தும்.
Sunday, January 13, 2008
ஜல்லிகட்டு தடையை ஏன் எதிர்க்க வேண்டும் ?
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 1/13/2008 12:09:00 PM
குறிச்சொற்கள் Jallikattu, Supreme Court, தமிழர் விளையாட்டு, பண்பாடு, ஜல்லிகட்டு
Subscribe to:
Post Comments (Atom)
17 மறுமொழிகள்:
//இந்தியாவில் நீதிபதிகளாக இருந்து விட்டால் பல நூறு வருடங்களாக இருந்து வரும் பண்பாட்டு அடையாளங்களையும், விளையாட்டுகளையும் எந்த ஆய்விற்கும் உட்படுத்தாமல் தடை செய்ய துணிவது தனி மனித சுதந்திரத்திற்கு பெரும் கேடு விளைவிக்க கூடியது. அதுவும் தமிழர் கலாச்சாரத்தை சாராத ஒரு அமைப்பு, எந்த ஆய்வும் செய்யாமல் இவ்வாறான தீர்ப்பை முன்வைப்பது பெருவாரியான மக்களின் ஜனநாயக உரிமையை சிதைக்கும் போக்கு என்றே நான் நினைக்கிறேன்.//
1:26 PM, January 13, 2008சசி,
நல்லா சொல்லியிருக்கீங்க..... சம்பந்தப்பட்ட ஊருக்காரன் முறையிலே எனக்கும் சில கருத்துக்கள் இருக்கு...... பதிவோடு வாறேன்... :)
//பரதநாட்டியமும், கர்நாடாக சங்கீதமுமா தமிழனின் கலை ? அது பாப்பனியத்தின் கலை. தமிழனின் கலை என்பது கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், கூத்து போன்றவையே.//
2:01 PM, January 13, 2008எல்லா காலங்களிலும் மேல் தட்டு மக்களின் ரசனையும் அடித்தட்டு மக்களின் இரசனையும் மாறும். மேல்தட்டு மக்களின் இரசனை எப்போதும் உயர்வாகவே கருதப்படும். பரதநாட்டியம், கர்நாடக இசை, குரவைக்கூத்து போன்றவை பழங்காலங்களில் மேல்தட்டு மக்கள் இரசிக்கும் கலைகளாக இருந்தன. நாட்டுப்புற இசையின் சற்று மேம்பட்ட வடிவமே தமிழிசை. அதுவே பின்னர் கர்நாடக இசையாக உருவெடுத்தது. கர்நாடக இசையும் பரதநாட்டியமும் போன நூற்றாண்டு வரை பார்ப்பனர்களின் செல்வாக்கு பெற்ற கலைகளாக இல்லை. பிறகு பார்ப்பனர்கள் செல்வாக்கு பெற்ற மேல்தட்டு மக்களாக ஆன பிறகு அதை தங்கள் வசமாக்கி கொண்டார்கள். இப்படிதான் நான் அறிந்திருக்கிறேன். எங்கே படித்து அறிந்து கொண்டேன் என்றெல்லாம் தெளிவாக சொல்ல இயலாது. பல இடங்களில் படித்து கேட்டு அறிந்தவற்றை வைத்து சொல்கிறேன்.
எனது அறிதல் சரியானதென்றால்,
கர்நாடக இசை, பரதநாட்டியம் போன்றவற்றை பார்ப்பனர்களின் கலை என்று ஒதுக்குவது, தமிழர்களின் சிவ, குமர, சக்தி வழிபாடுகளை ஒட்டுமொத்தமாக இந்து மதத்தில் அடைத்து சம்ஸ்கிருத மந்திரங்கள் சொல்லி வழிபடுவது போன்று நம்முடைய மேன்மையை இழக்கக்கூடிய ஒரு செயலாகும்.
இராம், உமையணன்,
2:35 PM, January 13, 2008நன்றி...
உமையணன்,
கர்நாடக இசை என்பது வேறு, தமிழிசை என்பது வேறு. தமிழிசையில் இருந்து முளைத்த கர்நாடக இசை, தமிழிசையை விழுங்கி, தமிழையும் புறக்கணித்து தெலுங்கு கீர்த்தனைகளையே முன்னிறுத்துகிறது. நீங்கள் அதனை எப்படி தமிழனின் இசை என கூறுகிறீர்கள்?
தமிழிசை ஒரு காலத்தில் தமிழ் மேட்டுக்குடி மக்களின் வடிவமாக இருந்தாலும் அதனையும் மீட்டு எடுக்க வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம். அதைத் தான் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நிறுவி இருக்கிற ”பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்” என்ற அமைப்பு செய்து வருகிறது. டிசம்பர் மாத சங்கீத கோஷ்டிகளின் பிடியில் இருந்து இசையை மீட்டெடுக்கும் அமைப்பாக இந்த பொங்கு தமிழ் பண்ணிசை மன்றம் செயல்பட்டு வருகிறது.
நண்பர் குழலி முன்பு ஒரு முறை எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகள்
இன்றைக்கு கர்நாடக சங்கீதத்தில் உள்ள கீர்த்தனைகளுக்கு முன்னோடியாக தேவாரப்பாடல்கள் அமைந்தன என்றும், ராகங்கள் என்று அழைக்கப்படுபனவையெல்லாம் தமிழிசையிலே முன்பே இருந்தவை என்றும் அவைகள் யாழ்,பண்,பாலை என்றழைக்கப்பட்டன, இரண்டாம் நூற்றாண்டில் அரும்பாலை என்று கோவலன் வாசித்ததுன் இன்று சங்கராபரணம் என்று வழங்கப்படுகிறது என்றும் மேலும் பல தமிழிசை பற்றிய தகவல்களோடு நிகழ்ச்சியை சுவையோடும் பொருளோடும் தொகுத்து வழங்கினார்கள்
****
அது போலவே தான் பரதநாட்டியமும்.
ஒரு நடனம் எப்படி இருந்தால் தமிழனின் நடனமாக இருக்கும் என்பது குறித்த ஒரு அரங்கேற்ற குறிப்பு
தாராவின் - எனக்குப் பிடித்த மாதிரி ஒரு அரங்கேற்றம்
//கர்நாடக இசை என்பது வேறு, தமிழிசை என்பது வேறு. தமிழிசையில் இருந்து முளைத்த கர்நாடக இசை, தமிழிசையை விழுங்கி, தமிழையும் புறக்கணித்து தெலுங்கு கீர்த்தனைகளையே முன்னிறுத்துகிறது.//
3:23 PM, January 13, 2008நானும் இதையேதான் சொல்கிறேன்.
கர்நாடக இசைக்கு மாற்று தமிழிசையாகத்தான் இருக்க முடியுமே தவிர கரகாட்டமும் தப்பாட்டமுமாக இருக்க முடியாது. தமிழிசையும் கரகாட்டமும் தப்பாட்டமும் காவடியாட்டமும் மற்ற எல்லா கலைகளும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களாக இருக்க வேண்டும். பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருக்கிறது என்பதற்காக அதை பார்ப்பனர்களின் கலை என்று புறக்கணிப்பது தகாதது. ஆனால் இதே போன்ற மனநிலைதான் அதிகம் பேரிடம் இருக்கிறது.
//விலங்குகளை வதைப்பது காட்டுமிராண்டித்தனம் தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் விலங்குகளை இறச்சிக்காக பலியிடுவது அதை விட காட்டுமிராண்டித்தனம் இல்லையா ? எனவே இனி யாரும் இறச்சி சாப்பிட கூடாது என தடை விதிக்க முடியுமா ?//
5:29 PM, January 13, 2008அத விடுங்க, பட்டுப் புடவைகளையும், மேல்துண்டுகளையும் இந்த நீதிபதிகளின் இல்லங்களில் பயன்படுத்துறதில்லையோ. ஒரு கிலோ பட்டுநூல் தயாரிக்க சுமார் 6000 பட்டுப் பூச்சிகள் கொல்லப் படுகின்றன என்று படித்த ஞாபகம். அதெப்படி போத்தீஸ்களும், ஆரெம்கேவிக்களும் சக்கை போடு போடுவது இந்த அகிம்சை மகான்களுக்குத் தெரியறதே இல்ல.
//
முஸ்லீம்களை திட்டமிட்டு கொன்று 21ம் நூற்றாண்டின் ஹிட்லராக இருக்கும் நரேந்திர மோடி மறுபடியும் தேர்தலில் வெற்றி பெற்றதும், அவரின் குற்றங்களுக்கு இந்தியாவின் சர்வ அதிகாரம் பெற்ற நீதிமன்றங்கள் இன்று வரையிலும் தண்டனை வழங்காமல் இருப்பதும் தான் அவமானமாக தெரிகிறது.
:
:
:
சமீப காலங்களில் நீதிமன்றங்கள் பல விடயங்களில் அத்துமீறி நுழைகின்றன. சட்டம் படித்து, வழக்கறிஞராகி அனுபவம் பெற்று நீதிபதியாகி விட்டால் இந்தியாவில் இருக்கும் எந்த விடயத்தையும் மாற்றும் அதிகாரம் கிடைத்து விடுகிறது என்பது ஒரு ஆபத்தான சூழ்நிலை ஆகும். தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தீப்புகளாக மக்களின் மீது திணிப்பது ஜனநாயக விரோதமான செயல் ஆகும்.//
சசி, இப்படியெல்லாம் உச்சநீதிமன்றத்தை விமர்சிக்காதீர்கள். இங்கு சில அறிஞர்கள் தங்களைத் தாமே சட்ட வல்லுனர்களாகக் கற்பித்துக் கொண்டு ஒரு கையில் கைவிலங்கையும், இன்னொரு கையில் ஜெயில் களிச்சட்டியையும் எடுத்துக் கொண்டு திரிகிறார்கள். உச்சநீதி மன்றங்களை விமர்சிப்பவர்களைப் பிடித்துக் கொண்டு போவதற்கு :-)
நரேந்திர மோடிக்கு உள்ள கருத்துரிமையும், கொலையுரிமையும் உச்ச நீதி மன்றத்தை விமர்சிப்பவர்களுக்கு கிடையாதென்கிறார்களாம் இந்த அறிஞர் பெருமக்கள்!
நன்றி - சொ.சங்கரபாண்டி
ஆரம்பிச்சிட்டீங்களா?
6:08 PM, January 13, 2008//கர்நாடக இசை என்பது வேறு, தமிழிசை என்பது வேறு//
என்னே தங்களின் இசையறிவு! சங்கீதம் பொழச்சுப் போகட்டுமப்பா...விட்டுடுங்க!!!
//பரதநாட்டியமும், கர்நாடாக சங்கீதமுமா தமிழனின் கலை ? அது பாப்பனியத்தின் கலை. தமிழனின் கலை என்பது கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், கூத்து போன்றவையே//
ஆஹா...இப்படி சொல்லாமல் போனீர்களே: கிரிக்கெட்டும், டென்னிஸுமா தமிழனின் விளையாட்டு? பம்பரமும், கிட்டிப்புள்ளும்தான் அவனுடைய வீரவிளையாட்டு! கம்ப்யூட்டரும், வலையுலகமுமா தமிழன் தொழில். நாத்து நடுவதும், களையெடுப்பதும் தான் அவனுடைய தலை எழுத்து!
நீங்க முன்னேறி அமெரிக்கால போய் பதிவெல்லாம் எழுதுங்க. தமிழன முன்னேற விடாதீங்க! மாட்டைத் துரத்திக் கொண்டு ஓடச் சொல்லுங்க!
இதுல, அவன் சதி, இவன் சதி என்கிற புலம்பல் வேறு!
நீங்கள் வேலையை பாருங்கள், தமிழன் தானாக முன்னேறிவிடுவான்!
இது என்ன மன்னராட்சியா ?
7:37 PM, January 13, 2008இந்தாப் பிடி உத்தரவை, நாளை முதல் இது நடக்க கூடாது என உத்தரவு வழங்க ?
உமையணன், சங்கரபாண்டி,
9:13 PM, January 13, 2008உங்கள் கருத்துகளுக்கு நன்றி
****
பதிவிற்கு சம்பந்தம் இல்லாத அனானி பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
//இதுல, அவன் சதி, இவன் சதி என்கிற புலம்பல் வேறு!
9:35 PM, January 13, 2008நீங்கள் வேலையை பாருங்கள், தமிழன் தானாக முன்னேறிவிடுவான்//
அட, அதான.
1. பண்டைய காலத்திலிருந்து இருந்து வந்த பழக்கம் என்ற அடிப்படையில் இதை நியாயப்படுத்த முனைந்தால், வர்ணாசிரமத்திருந்து, உடன்கட்டை ஏறுவது வரை பல பழக்கங்களைக் கட்டிக் காத்து ஆதரவளிக்க வேண்டும். எந்தப் பழக்கங்கள் இன்றைய சூழலுக்கு ஒத்து வருகின்றனவோ அவற்றை மட்டுமே பாதுகாக்கலாம், மற்றவை 'பழையன கழிதல்' என்ற அடிப்படையில் தூக்கி ஏறியப்பட வேண்டியவையே - வர்ணாசிரமத்திலிருந்து ஜல்லிக்கட்டு வரை.
10:22 PM, January 13, 20082. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமான ஒரு விளையாட்டு என்பதில் உங்களுக்கே சந்தேகமிருப்பது போல் தெரியவில்லை. அதே வகையில் இறைச்சி உண்பதுவும் காட்டுமிராண்டித்தனமானதுதானே என்று கேட்டிருக்கிறீர்கள். அதற்கு எனது விடை, இறைச்சி உண்பது மனிதனின் இயற்கையான குணம் என்பதே. அதிலும் இறைச்சி உண்பதை அனுமதிக்கும் பல மதங்களில் அவை எப்படி தயாரிக்கப்பட வேண்டும் (அதாவது, இறைச்சிக்காக பலியிடப்படும் உயிரினங்கள் மனிதாபிமான முறையில் கொல்லப்பட வேண்டும்) என்பதற்கான இறுக்கமான விதிமுறைகள் இருப்பதைக் காணலாம்.
Voice on Wings,
12:29 AM, January 14, 2008மிருக வதை என்பது பல்வேறு நிலைகளில் இருந்து கொண்டு தான் வருகிறது. அவரவரின் சுயநலத்திற்கு ஏற்ப சிலவற்றை நமக்கு தேவையானதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம். நமக்கு தேவையற்றதாக இருக்கும் சிலவற்றை மட்டும் காட்டுமிராண்டித்தனம் என்கிறோம்.
விஞ்ஞான ஆய்வுக்கூடங்களில் எத்தனை மிருங்கள் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன ? அது நமக்கு தேவையானதாக உள்ளது. எனவே நமக்கு அவை காட்டுமிராண்டித்தனமாக தெரிவதில்லை. ப்ளூ கிராஸ் அமைப்பினர் விஞ்ஞான கூடங்களில் இருக்கும் மிருக வதையை வெறும் Symolicஆ மட்டும் தான் எதிர்க்கின்றனர். ”நிறைய மிருகங்களை பலியிடாதீர்கள்” என்பதாக தான் அவர்களின் கொள்கை உள்ளது. அதாவது நமக்கு தேவைப்பட்டால் மிருகங்களை வதைத்து கொள்ளலாம் என்பது போல.
மேலே சங்கரபாண்டி பட்டு பூச்சுகள் குறித்து கூறியுள்ளார். இனி இந்தியாவில் பட்டு புடவைகள் யாரும் கட்டுகூடாது என தடை விதிக்க முடியுமா ?
நீங்கள் மிருகங்களை மனிதாபிமானமாக கொல்வது என கூறியிருக்கிறார்கள். கொல்வதில் கூட மனிதாபிமானமா ? இது என்ன கருணைக் கொலையா ? :) விருந்துக்காக கொன்று விட்டு பிறகு என்ன அதில் மனிதாபிமான மரபு ?
அப்படி பார்த்தால் ஜல்லிகட்டு காளைக்கென தனி மரியாதை கிராமங்களில் உண்டு. தகுந்த மரியாதையுடன் படையலிட்டு தான் போட்டிக்கே அனுப்புவார்கள். ஜல்லிகட்டுக்கென பயன்படுத்தப்படும் ஒரு நாள் தவிர மற்ற நாட்கள் அவை செல்லப்பிராணியும் கூட. எங்கள் செல்லப்பிராணிகளை நாங்கள் வதைப்போமா என்று தான் கிராம மக்கள் இது குறித்து கூறுகிறார்கள். காளைகளுக்கு சாராயம் கொடுத்து போதை உண்டாக்குவது தான் நான் பார்த்த/கேள்விப்பட்ட ஒன்று. மிளகாய்ப் பொடி தூவுவதெல்லாம் நான் பார்த்ததும் இல்லை. கேள்வி பட்டதும் இல்லை. யாராவது சிலர் செய்ததை அனைவரும் செய்வதாக கூற முடியாது.
ஜல்லிக்கட்டுடன் சேர்த்து ரேக்ளா பந்தயமும் தடை செய்யப்பட்டிருந்தால் மிருக வதையை நீதிமன்றம் கட்டிக்காக்க உறுதி பூண்டிருக்கிறது என்பதாக நம்பலாம். ஆனால் ரேக்ளா பந்தயம் மிருக வதை இல்லை போலும் :)
****
எல்லா மரபுகளும் மாற்றத்திற்கு உட்பட்டதே. எனவே ஜல்லிக்கட்டில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து யோசிக்கலாம் என்று நான் கூறி இருக்கிறேன். அது போல பழையன கழிந்து புதியன புகுவதிலும் எனக்கு மாற்று கருத்து இல்லை. காலத்திற்கு ஒவ்வாத ஒன்று அழிந்து போய் விடும். அப்படி எத்தனையோ விடயங்கள் காலபோக்கில் அழிந்தும் இருக்கிறது. ஆனால் எந்த ஆய்வும் செய்யாமல், மாற்றங்களை கொண்டு வராமல் அப்படியே தடை செய்வது என்பது எந்த வகையில் ஜனநாயக மரபாகும் ? இது ஜனநாயக சர்வாதிகாரமாகவே எனக்கு தெரிகிறது.
என்னுடைய கட்டுரையின் முதல் பத்தியை வாசியுங்கள் என்னுடைய கருத்து புரியும்.
****
/* ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமான ஒரு விளையாட்டு என்பதில் உங்களுக்கே சந்தேகமிருப்பது போல் தெரியவில்லை */
என்னுடைய கருத்து எதுவாக இருந்தாலும் அது என் வரையில் இருக்கும் வரை பிரச்சனையில்லை. ஆனால் என் கருத்தை எனக்கு அதிகாரம் இருந்தால் உங்கள் மீது எந்தக் கேள்வியும் இல்லமல் திணிக்க முடியுமா என்பதே என்னுடைய கேள்வி ?
ஜல்லிகட்டையும், உடன்கட்டை ஏறுவதையும் உங்களால் எப்படி ஒப்பிட முடிகிறது என எனக்கு புரியவில்லை :)
உங்கள் கருத்துக்கு நன்றி...
one சுமால் doubt. அடுத்ததாக வரும் தீர்ப்பு?
1:14 AM, January 14, 2008a) யாரும் மாடுகளை ஏர் ஓட்ட பயன்படுத்த கூடாது
b) கோயில் ஊர்வலத்தில் யானைகளை பயன்படுத்த கூடாது
c) பிள்ளையார் எலியை வாகனமாக பயன்படுத்த கூடாது
d) முருகன் மயிலை வாகனமாக பயன்படுத்த கூடாது
உடன்கட்டை ஏறுதல் என்னும் காட்டுமிராண்டித்தனத்தையும் தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டையும் தந்திரமாக ஒப்பீடு செய்திருக்கும் Voice on Wings - ஐ வன்மையாகக் கண்டிக்கிறேன்
1:19 AM, January 14, 2008காலையில் உங்கள் பதிவிற்கு பின்னூட்டமாக எழுத விரும்பி, ஒரு தனிப்பதிவாகவே எழுதியாயிற்று...சில தகவல்கள் பயனளிக்கலாம். நன்றி!
6:52 AM, January 14, 2008http://marchoflaw.blogspot.com/2008/01/blog-post.html
பிரபு ராஜதுரை,
8:27 AM, January 14, 2008நன்றி...
உங்கள் பதிவை வாசித்து விட்டு பதிலளிக்கிறேன்...
பிரபு ராஜதுரை அவர்களின் பதிவில் நான் எழுதிய பின்னூட்டம்
12:36 AM, January 15, 2008****
ஜல்லிக்கட்டு என்றில்லாமல் மாட்டுப்பொங்கல் அன்று எல்லா ஊர்களிலும் மாடுகளுக்கு பொங்கலிட்டு பிறகு மாடுகளை துரத்துவார்கள். சிறிய வயதிலேயே இந்த முரண்பாடு என்னை உறுத்தும். மாடுகளுக்கு நன்றி செய்யும் பொருட்டு மாட்டுப் பொங்கல் கொண்டாடி விட்டு பிறகு மாடுகளை துரத்துவதில் இருக்கும் முரண்பாடு குறித்து யாரும் கவலைப்பட்டதில்லை. மாடுகளை ஊர்வலமாக அழைத்து செல்வது போன்ற ஏதேனும் இருந்தால் மாட்டுப்பொங்கலுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
மாடுகளை துரத்துவது கூட நம் பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் சிதைந்து போனதன் அடையாளம் என்று தான் எனக்கு தோன்றுகிறது.
ஜல்லிகட்டு மீதான தடையை எதிர்த்தாலும், நம் பழக்க வழக்கங்களை மறுபடியும் சீர்தூக்கி கொள்ளும் வாய்ப்பாகவும் வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. சில மாற்றங்களுடன் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும். ஜல்லிக்கட்டு என்றில்லாமல் மாடுகளை துரத்தும் பழக்கங்களும் மாற்றம் பெற வேண்டும்.
சசி,
3:57 AM, February 18, 2008/*ஜல்லிகட்டு சுமார் 4000 ஆண்டுகளாக தமிழர்களால் (திராவிடர்களால்) கொண்டாடப்படும் ஒரு விளையாட்டு என்பது ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. */
இதுவரை அறிந்திராத சங்கதி. மிக்க நன்றி.
/* ஆனால் இன்றைக்கு இலங்கை, கர்நாடகா, மும்பை, மலேசியா என அனைத்து இடங்களிலும் உதை வாங்கும் பிறவியாக தமிழன் மாறி விட்ட நிலையில் அது வீர விளையாட்டாக இல்லாமல் காலப்போக்கில் மாற்றம் பெற்று வெறும் உற்சாகத்தின் அடையாளமாகவே உள்ளது. */
வேதனையான உண்மை.
Post a Comment