Thursday, July 10, 2008

சென்னை, வீட்டு வாடகை, அணுசக்தி நாடகம்

சென்னையை விட்டு அமெரிக்கா சென்று மூன்று ஆண்டுகளாகி விட்டது. மறுபடியும் இந்த விடுமுறையில் தான் முழுமையான சென்னைவாசியாகி இருக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையை பார்க்கும் பொழுது அச்சமாக இருக்கிறது. வீட்டு வாடகை உயர்வு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் தட்டுபாடு, பெட்ரோல் நிலைய வாசல்களில் காணப்படும் கூட்டம் என சென்னை அச்சமூட்டும் வகையில் காணப்படுகிறது. இந்தியா ஒளிர்கிறது என்பதான பிரச்சாரம் கடந்த பாரளுமன்ற தேர்தலில் நடந்தது. இந்தியாவை பொருளாதார வல்லரசாக்கும் சிறந்த பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்குப் முன்பு ஒளிர்ந்த இந்தியா இன்றைக்கு வல்லரசாகி இருக்க வேண்டும். ஆனால் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.

****

கடந்த வாரம் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் பொழுது பைக்குக்கு பெட்ரோல் போட வேண்டிய சூழ்நிலை. ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் திருவிழா போன்ற கூட்டம். பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போட ஆட்டோக்களும், லாரிகளும், பிற வாகனங்களும் நீண்ட வரிசைகளில் நின்றிருந்தன. இந்த கூட்டத்தில் எப்படி பெட்ரோல் போடுவது என புரியவில்லை. சரி..போகிற வரை போகட்டும் பார்க்கலாம் என வந்து கொண்டே இருந்தேன். நல்ல வேளையாக வண்டி வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டது.

பல பெட்ரோல் நிலையங்களில் கலவரச் சூழ்நிலை. குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருந்தனர். எதிர்பாராமல், எந்த அறிகுறியும் இல்லாமல் பெட்ரோல் வழங்கல் நிறுத்தப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியாகவும், எரிச்சலாகவும் இருந்தது. பலருடைய வாகனங்களில் பெட்ரோல் போட்டால் தான் வீட்டிற்கு போக முடியும் என்ற சூழ்நிலையில் பெட்ரோல் நிலையங்களை விட்டு செல்ல மறுத்தனர்.

மறுநாள் பெட்ரோல் விநியோகம் சீரடைந்தாலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தற்பொழுது நிலைமை பரவாயில்லை. ஆனால் எந்த நேரத்திலும் விநியோகம் நிறுத்தப்படலாம் என்ற அச்சத்தில் பலர் பெட்ரோலை கூட வாங்கி சேமித்து வைக்க தொடங்கியுள்ளனர்.

******

சென்னையில் தற்போதைய முக்கியமான பிரச்சனைகளின் ஒன்றாக வீட்டு வாடகை உள்ளது. சாதாரண மக்களால் சென்னையிலேயே இருக்க முடியாத சூழ்நிலை தற்பொழுது நிலவுகிறது. மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்ப்பவர்களின் நகரமாக சென்னை எதிர்காலத்தில் மாறி விடக்கூடிய அபாயம் தெரிகிறது.
மென்பொருள் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிக வாடகை கொடுக்க தயாராக இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இந்த வாதம் பொருத்தமில்லாதது. யாருமே ஒரு பொருளுக்கு மிஞ்சிய விலையை கொடுப்பதில்லை. கொடுக்கவும் மாட்டார்கள். ஆனால் விலை ஏறிக் கொண்டே இருக்கும் பொழுது அதனை பெறக்கூடிய சக்தி அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கே இருக்கும். அந்த வகையில் சென்னையில் ஏறிக் கொண்டே இருக்கும் வீட்டு வாடகையை பெறக்கூடியவர்களாக மென்பொருள் துறையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

இந்த விலையேற்றம் எப்படி நிகழ்ந்தது ?

சரியாக சொன்னால் 2007 தொடக்கத்தில் இருந்து தான் என்று சொல்ல முடியும். காரணம் சென்னையில் நிறுவனங்கள் பெருக தொடங்கிய பொழுது வீடுகளுக்கான தேவைகளும் அதிகரிக்க தொடங்கின. இதனால் வீட்டு வாடகை எகிறியது. பல நிறுவனங்கள் சென்னையின் புறநகரில் இடங்களை வாங்க தொடங்கிய பொழுது இடங்களுக்கான தேவையும் அதிகரிக்க இடங்களின் விலையும் அதிகரிக்க தொடங்கியது. புறநகரில் தொடங்கிய இந்த விலையேற்றம் சென்னை முழுவதும் பரவி விட்டது.

வீட்டு வாடகை அதிகரிக்கும் பொழுது பலர் சொந்த வீடுகளை வாங்க முனைவார்கள். இதனால் வீட்டு வாடகை உயர்வு கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் சென்னையில் ரியல் எஸ்டேட் விலை எங்கோ சென்று விட்ட நிலையில் பெரும்பாலான மக்களால் சொந்த வீடுகளை பெற முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் சொந்த வீட்டையும் வாங்க முடியாமல், வாடகையையும் கொடுக்க முடியாமல் சென்னையை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு சாமானிய நடுத்தரவர்க்கத்து மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தாம்பரத்தில் 2006ன் இறுதியில் எனக்கு தெரிந்து ஒரு க்ரவுண்ட் விலை 6 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருந்தது. இன்றைக்கு தாம்பரத்தில் 50-60 லட்சம் வரை சொல்கிறார்கள். இந்த விலையேற்றத்தின் காரணம் என்ன ? ஏதாவது நவீன வசதி தாம்பரத்தில் ஏற்பட்டதா ? இன்னமும் சாலைகள் குண்டும், குழியுமாக தான் உள்ளன. மக்களின் பொருளாதாரமோ, நாட்டின் பொருளாதாரமோ உயர்ந்து விட வில்லை.

ஒரு பொருளுக்கான தேவை இருந்தால் தான் பொருளின் விலை உயர வேண்டும். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் புதிய வீடுகளை/இடங்களை வாங்குவதில் சுமார் 30% வீழ்ச்சி இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது விலையும் குறைய வேண்டுமே ? ஆனால் விலை குறைவதாக தெரியவில்லை.

மறைமலை நகரில் ஒரு இடம் இருப்பதாக சொன்னார்கள். சரி பார்க்கலாம் என்று சென்றேன். மறைமலை நகர் என்று கூறி செங்கற்பட்டுக்கு அருகே கொண்டு சென்று விட்டார்கள். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இந்த இடம் சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ளது. அந்தப் பகுதியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில வீடுகள் தென்பட்டன. இந்த இடத்தில் வீடுகள் முளைத்து நகரமாக பெருக குறைந்தது 10 முதல் 15 வருடங்கள் ஆகலாம். ஆனால் ஒரு க்ரவுண்ட் விலை 16 லட்சம் என்கிறார்கள்.
பில்டர்கள் இங்கே அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட இடங்களை வளைத்து போட்டிருப்பதால் அவ்வளவு விலை. அவர்கள் இன்னும் அடுக்குமாடி கட்ட கூட தொடங்கவில்லை.

சென்னையின் முக்கிய பகுதிகளில் (நங்கநல்லூர், குரோம்பேட்டை, தாம்பரம்) இரு வருடங்களுக்கு முன்பு ஒரு க்ரவுண்டின் விலை இதே அளவு தான் இருந்தது. இன்றைக்கு அதிகளவில் வீடுகள் இல்லாத ஒரு புறநகர்ப் பகுதியில் இந்த விலை சொல்கிறார்கள். அப்படி என்ன மக்களின் பொருளாதாரம் பெருகி விட்டதா ? அல்லது இந்தியாவின் பொருளாதாரம் தான் பெருகி விட்டதா ? ஒன்றுமே இல்லை...

வீட்டு மனைகளை வைத்திருப்பவர்கள் தங்கள் விலைகளை குறைக்க தயாராக இல்லை. கேட்டால் NRIக்கள் பணத்தை கொட்டி கொடுக்க தயாராக இருப்பதாக சொல்கிறார்கள். ஐயா, நான் கூட NRI தான். ஆனால் என்னால் பணத்தை கொட்டி கொடுக்க முடியாது. காசாக எண்ணி தான் கொடுக்க முடியும் என்று கூறி விட்டு வந்து விட்டேன்.

இன்றைக்கு கிட்டதட்ட ஒரு deadlock போன்ற சூழ்நிலை தான் நிலவுகிறது. இடம் வைத்திருப்பவர்கள் அவற்றின் விலையை குறைக்க தயாராக இல்லை. அது Inflated விலை என்று தெரிந்தும் இன்னும் ஏறும் என்ற நப்பாசை. வீட்டு மனைகளை வாங்க நினைக்கும் பலரால் அந்தளவுக்கு விலையை கொடுக்கும் சக்தி இல்லை. இதனால் வீட்டு மனைகளின் விற்பனை பெரும் சரிவடைந்துள்ளது.

வீட்டு மனைகளின் நிலை இது என்றால் வீட்டு மனை வாங்கினாலும் வீடு கட்டும் செலவும் இன்று உச்சத்தில் உள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலையும் அதிர வைக்கிறது. 2004ல் நான் சென்னையில் வீடு கட்டிய பொழுது ஒரு சதுர அடி வீட்டினை ரூ600க்கு கட்ட முடிந்தது. இன்று அதே வீட்டினை கட்ட முயன்றால் ஒரு சதுர அடிக்கு ரூ1200 தேவைப்படும் நிலை. இரு மடங்கு விலையேற்றம். அன்றைக்கு ஒரு மூட்டை சிமெண்ட் 125ரூ. இன்றைக்கு 250ரூ. ஸ்டீல் விலையை பற்றி பேசவே முடியவில்லை. பல மடங்கு அதிகரித்து உள்ளது. வீடு கட்டும் தொழில் சரிவடைந்துள்ளதாக சொல்கிறார்கள்.

தனி வீடு வாங்க முடியாதாவர்கள், அடுக்குமாடி வீடுகளை வாங்க முயல்வார்கள். ஆனால் இன்றைக்கு அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையும் மிக அதிகம். மறைமலை நகரில் இருக்கும் ஒரு 1000 சதுர அடி வீட்டின் விலை 33லட்சம் என்று பில்டர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

*****

மேலே நான் கூறியது நடுத்தர வர்க்கத்தின் பிரச்சனை என்றால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு சாமானிய மக்களின் வாழ்க்கை தரத்தை மிகவும் பாதித்து இருக்கிறது. இந்த வாரம் அவுட்லுக்கில் ஒரு பட்டியல் போட்டிருந்தார்கள். அரிசி விலை 27% உயர்ந்து இருக்கிறது, எண்ணெய் 20% என உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களின் கழுத்தை நெரிக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் என்றில்லாமல் எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் விலையேற்றம் நிகழ்ந்துள்ளது. பணவீக்கம் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது.

*****

சென்னை வீதிகளில் இவ்வாறான சூழ்நிலை என்றால் டெல்லியில் மைய அரசுக்கான ஆதரவை இடதுசாரிகள் விலக்கி கொண்டிருக்கிறார்கள். எதற்காக ?
பெட்ரோல் விலையேறி விட்டதே அதற்காகவா ? இல்லை அத்தியாவசிய பொட்களின் விலையேறி விட்டதே அதற்காகவே ? இல்லை மக்களின் வாழ்க்தைத்தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதே அதற்காகவே ?

இவ்வாறு மக்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு எல்லாம் இடதுசாரிகள் செய்வது சம்பிரதாய முழு அடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை மட்டுமே. ஆனால் சாமானிய மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை விட இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்திற்கு தான் முழுமையான எதிர்ப்பு. வாழ்க இந்திய இடதுசாரிகளின் கம்யூனிச தத்துவம்

மக்களின் பொருளாதாரமும் வாழ்க்கையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் பொருளாதார மேதைகளான மன்மோகன்சிங்கும், ப.சிதம்பரமும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? மன்மோகன் சிங் இப்பொழுது தான் போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்று இருக்கிறார். கடந்த நான்கு வருடங்களாக சோனியா காந்தியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு தன்னுடைய பொருளாதார மூளையை அடகு வைத்திருந்த மன்மோகன் சிங் திடீரென்று அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் பிடிவாதமாக இருந்து தான் ஒரு ரிமோட் கண்ரோல் அல்ல என்பதை தன்னுடைய பதவி காலத்தின் இறுதியில் நிருபிக்க முயல்கிறார். கடந்த நான்கு வருடங்களாக கூட்டணி கட்சிகளின் ஆட்டத்திற்கு தலையாட்டி கொண்டிருந்த மன்மோகன் சிங் பதவிக் காலம் முடிய இன்னும் சில மாதங்களே இருப்பதால் இந்தியாவின் தேசிய நலனுக்காக தன் ஆட்சியை துச்சமென நினைக்க தயாராகி விட்டார். அணுசக்தி ஒப்பந்தத்திற்காக காங்கிரஸ் அரசாங்கம் கவிழ்ந்தால் இவரின் தியாகம் வரலாற்றில் பொறிக்கப்படும். இந்தியாவை பொருளாதார வல்லரசாக்க இந்த ஒப்பந்தம் தான் ஒரே வழி என பொருளாதார மேதை முடிவு செய்து விட்டார்.

என்னைப் பொருத்தவரை இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துடுவதோ, கையெழுத்து போடாமல் விடுவதோ ஒரு பொருட்டு அல்ல. காய்கறி விலை, அரிசி விலை, எண்ணெய் விலை போன்றவையை தான் முக்கிய பிரச்சனையாக கருதுகிறேன். மக்களை இந்தப் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பி நடுத்தரவர்க்க படித்த அறிவிலிகளை போலியான தேசியவாத விவாதங்களில் ஈடுபடுத்துவதே இந்திய அரசியல்வாதிகளின், ஊடகங்களின் நோக்கமாக உள்ளது.

இந்தியாவில் இது வரை கவிழ்ந்த எந்த அரசாங்கமும் மக்களின் பிரச்சனைகளுக்காக கவிழ்ந்ததில்லை. இந்தியாவின் முக்கிய பிரச்சனைகள் என்ன ? இந்திய-பாக்கிஸ்தான் எல்லைப் பிரச்சனை, இந்தியா-சீனா பிரச்சனை, இந்திய-அமெரிக்கா உறவுகள் என இவற்றை தான் ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை முன்வைக்கிறார்கள். இவையெல்லாம் தேச நலன், தேசியம் இவற்றை சார்ந்த பிரச்சனைகளாக முன்னிறுத்தப்படுகின்றன.

இதன் மூலம் மக்களின் பிரச்சனைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு மக்களை இந்தப் பிரச்சனைகள் நோக்கி அரசியல்வாதிகளும், ஊடகங்களும் திருப்ப முயல்கின்றன. ஆனால் இத்தகையப் போலியான பிரச்சனைகளுக்கு மயங்குவது என்னவோ படித்த நகர்ப்புற நடுத்தரவர்க்க மக்கள் மட்டுமே.

ஒரு சாமானிய கிராமத்து மனிதனுக்கு இவை குறித்து எந்த அக்கறையும் இல்லை. காலையில் கடைக்கு காய்கறி வாங்கச் சென்றால் அவற்றின் விலை அவனை மலைக்க செய்கிறது. நிச்சயமாக அவனுடைய அதிருப்தியை தேர்தல்களில் பார்க்க முடியும்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் கடுமையான தோல்வி அடையக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன.

17 மறுமொழிகள்:

லக்கிலுக் said...

அப்படியே தமிழோசை படிப்பது போலவே இருக்கிறது :-)

கவலைப்படாதீர்கள். திமுக-காங் கூட்டணி நகர்ப்புறங்களில் கோட்டை விட்டாலும் கிராமப்புறங்களில் கோட்டை கட்டும்!

12:46 AM, July 10, 2008
ச.சங்கர் said...

பொதுப்படையாகப் பார்த்தால் நல்லதொரு கணிப்பு. ஆனால்

///மென்பொருள் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிக வாடகை கொடுக்க தயாராக இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இந்த வாதம் பொருத்தமில்லாதது. யாருமே ஒரு பொருளுக்கு மிஞ்சிய விலையை கொடுப்பதில்லை. கொடுக்கவும் மாட்டார்கள். ஆனால் விலை ஏறிக் கொண்டே இருக்கும் பொழுது அதனை பெறக்கூடிய சக்தி அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கே இருக்கும். அந்த வகையில் சென்னையில் ஏறிக் கொண்டே இருக்கும் வீட்டு வாடகையை பெறக்கூடியவர்களாக மென்பொருள் துறையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்///

என்ற இந்தக் கருத்துடன் முற்றிலும் மாறுபடுகிறேன்.2006 ஆம் ஆண்டு நான் சென்னை வந்த போது 6500/-- கொடுத்த ஃப்ளாட்டுக்கு(T.Nagar..700 sq.ft) எதிர் ஃப்ளாட்டிற்கு 9500/- வாடகை கொடுத்து அதே மாதத்தில் குடிவந்தார்கள்..வேலை பார்த்தது மென் பொருள் துறையில் என்று சொல்லவும் வேண்டாம்.அவர்களிடம் நான் கேட்ட போது சொன்ன பதில்

" வேலை பார்க்கும் இடத்துக்கு பக்கத்தில் இருக்கிறது,
கம்பனியில் HRA கிடைக்கிறது,
என்ன மிஞ்சி மிஞ்சிப் போன 2 வருடம்-அதற்குள் வேலை மாற்றிக் கொண்டோ, நாட்டை விட்டோ,சொந்தமாக ஃப்ளாட் வாங்கிக் கொண்டோ போய் விடுவோம்,so, the rent what we are going to pay does not matter" என்று சொன்னார்கள். இந்த மாதிரியான ஒரு அலட்சியப் போக்கும் "paying more than what it is worth" போன்ற செயல்பாடுகளும் சென்னையில் கிடு கிடு வாடகை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் . குறிப்பாக நிறைய பள்ளிகள்,IT கம்பனிகள் இருக்கும் ஏரியாக்களில். இன்னும் வட சென்னையில் வீட்டு வாடகை/ விலை தென் சென்னையில் உயர்ந்த அளவுக்கு proportionate ஆக உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.( எப்போதும் வட சென்னை-விலை வாசி கொஞ்சம் கம்மி என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டே இதச் சொல்லுகிறேன்)

எனவே கொடுக்க முடிவதால் விலையை ஏற்றி விடுபவர்களாகவும் , அதிக சம்பளம் வாங்குவதனால் ஏறிய விலையைக் கொடுக்க முடிபவர்களாகவும் மென்பொருள் துறையாளர்கள் உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது-(வீட்டு வாடகை விஷயத்தில்).

எங்களது ஃப்ளாட்டிலேயே இந்த வருடம் குடி வந்திருப்பவர்கள் கொடுக்கும் வாடகை என்ன தெரியுமா ?12000/- ( மென் பொருள் துறையைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா:)) 4 பெண்கள் ஆளுக்கு 3000/- என்ற கணக்கில் பகிர்ந்து கொள்வதாக ஏற்பாடு செய்து கொண்டு வந்திருக்கிறார்கள் :)Net result...என்னுடைய வீட்டு உரிமையாளர் என்னை காலி செய்யச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்.ஏனெனில் அக்ரிமென்ட் படி 2 வருடங்களில் பத்து பத்து சதவிதமாக உயர்த்தி நான் தரும் வாடகை இப்போது 7900/-. எதிர் வீடு 10,800/-. மேல் வீடு 12000/-

2:21 AM, July 10, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

லக்கி,

முரசொலியையும், கலைஞர் டிவியையும் பார்த்துக் கொண்டிருந்தால் இப்படி தான் தோன்றும் :-)

கட்டுங்க, கட்டுங்க, மணல் கோட்டையா கட்டிடாதீங்க...

2:37 AM, July 10, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

சங்கர்,

எல்லோரும் இப்படி செய்வதில்லை. என்றாலும், நீங்கள் சொல்வதிலும் உண்மை உள்ளது.

உங்கள் கருத்துக்கு நன்றி...

2:40 AM, July 10, 2008
We The People said...

//கவலைப்படாதீர்கள். திமுக-காங் கூட்டணி நகர்ப்புறங்களில் கோட்டை விட்டாலும் கிராமப்புறங்களில் கோட்டை கட்டும்!//

ஏன் லக்கி அங்க் தான் அரசியல்வாதிகள் என்ன நம்பும் ஆளுங்க நிறைய இருக்காங்களா??

5:36 AM, July 10, 2008
We The People said...

//மக்களை இந்தப் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பி நடுத்தரவர்க்க படித்த அறிவிலிகளை போலியான தேசியவாத விவாதங்களில் ஈடுபடுத்துவதே இந்திய அரசியல்வாதிகளின், ஊடகங்களின் நோக்கமாக உள்ளது.//

1000% உண்மை!

5:44 AM, July 10, 2008
SP.VR. SUBBIAH said...

////திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் கடுமையான தோல்வி அடையக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன./////

மக்கள் தங்கள் கோபத்தை எப்படிக் காட்ட முடியும்?
நீங்கள் சொல்லியபடிதான் நடக்கப்போகிறது!

8:46 AM, July 10, 2008
ராஜ நடராஜன் said...

ஊர்ப்பக்கம் தலைகாட்ட வேண்டாமுன்னு பயப்படுத்துவீங்க போல இருக்குதே?

8:55 AM, July 10, 2008
Pot"tea" kadai said...

வணக்கம் சசி,

முதல் பத்தி முற்றிலும சரி...இரண்டாம் பத்தி கூட சரி தான்.
மூன்றாம் பத்தி ரொம்பவே இடிக்கிறதே?

//சென்னையில் தற்போதைய முக்கியமான பிரச்சனைகளின் ஒன்றாக வீட்டு வாடகை உள்ளது. சாதாரண மக்களால் சென்னையிலேயே இருக்க முடியாத சூழ்நிலை தற்பொழுது நிலவுகிறது. மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்ப்பவர்களின் நகரமாக சென்னை எதிர்காலத்தில் மாறி விடக்கூடிய அபாயம் தெரிகிறது.
மென்பொருள் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிக வாடகை கொடுக்க தயாராக இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இந்த வாதம் பொருத்தமில்லாதது. யாருமே ஒரு பொருளுக்கு மிஞ்சிய விலையை கொடுப்பதில்லை. கொடுக்கவும் மாட்டார்கள். ஆனால் விலை ஏறிக் கொண்டே இருக்கும் பொழுது அதனை பெறக்கூடிய சக்தி அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கே இருக்கும். அந்த வகையில் சென்னையில் ஏறிக் கொண்டே இருக்கும் வீட்டு வாடகையை பெறக்கூடியவர்களாக மென்பொருள் துறையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.//

முற்றிலும் தவறு.

2001ல் மாத வாடகை 3500/- ரூ, திருவான்மியூர் வீட்டுவசதி வாரியத்துறை வீடுகள் குடியிருப்பில் திடீரென ஒரு நன்னாளில் வீட்டின் உரிமையாளர் வந்து அடுத்த மாதத்திலிருந்து மாதம் 5000/- ரூ வேண்டும் என்றார். காரணம் டிடெல் பார்க்கும் அதைச் சார்ந்த தொழிலாளர்களும்..அவர்கள் 7 கூட கொடுப்பதற்கு தயார். டைரெட் பேங்க் டெபாசிட்...அதுவும் 2-3 பேர் தான். காலையில் வேலைக்கு சென்றால் இரவு தான் திரும்புவார்கள். இரவில் அனாவாசிய தொந்திரவு இராது.

நாங்கள் எல்லாம் அப்போ ப்ரெஷ்...எனக்கு மாதச் சம்பளம் 3000 ரூ. சாப்டுவேர் ஆக்களுக்கு குறைந்தது 12000 ரூ. பெங்களூரிலும் அந்த காலகட்டத்தில் அதே நிலைமை தான். கோரமங்களாவில் 8x8 அறைக்கு 2000 ரூ கொடுத்து இருந்தேன்.

இப்பொழுது எவ்வளவு என்று தெரியவில்லை.

சசி உங்களுக்குத் தெரியாததா? மேற்கில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம் வாடகை வீட்டிற்கு விண்ணப்ப்பம் போடும் பொழுது நாம் விருப்பப்பட்டால் ஏற்றிக் கூட கொடுக்கலாமென்பது...அதே கதை தான் சென்னை, பெங்களூரிலும்....

இங்கு ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் இல்லை. மாறாக மளிகைக்கடை நாட்டாரும், டீக்கடை நாயரும், ஆட்டோ மணியும் தான் புரோக்கர்ஸ். சாயங்காலம் ஆட்டொவில் ரவுண்டு அடிக்கும் சாப்டுவேர் மக்கள்...டிரைவரன்னே, 10,000 ரூ கூட கொடுக்கலாம்னே...பக்கத்தில இருக்கு வேலைக்குத் தோதா இருக்கும்னே என்று ச்சொல்லியே ஏத்திவிடுவார்கள். எனக்குத் தெரிஞ்சு கடைசியா சரவணபவனில் 16 ரூவாய்க்கு ரோஸ்ட் சாப்பிட்டு இருக்கேன். இப்போ 60 ரூ பக்கம் வந்த்து நிக்கறதா கேள்வி. இந்த தரம் அங்கெல்லாம் கால் வைக்கவில்லை அதனால் விலை தெரியவில்லை.

அப்புறம் ரியல் எஸ்டேட் மேட்டர்...கூட்டி கழிச்சு பாத்தா கணக்கு சரியா வரும். கருணாநிதி தாத்தா தான் காரணம்...பழைய நீயுஸ் பேப்பர் பிட்டு படிச்சாலே புரிஞ்சிடும்னேன்...

லக்கியண்ணே மொறைக்காதீங்க...நா எஸ்ஸூ

11:15 AM, July 10, 2008
Athisha said...

விலைவாசி மட்டும் தான் ஏறுது
வாங்கற சம்பளம் அப்படியேதான் இருக்கு

ஆட்சியாளர்களுக்கு அதைபத்தி கவலைப்பட நேரமில்ல , எந்த அரசியல்வாதியும் ரேசன்கடைல க்யூவில நின்னு அரிசி வாங்கி தின்றதில்ல , பங்குக்கு போயி பெட்ரோல் போடறதில்ல , வாடகைக்கு குடித்தனமிருக்குறதில்ல..

அப்புறம் அவங்களுக்கு எப்படி தெரியும் சாமான்யனின் கஷ்டம்

நாம பேசாம உக்காந்து நல்லா பிளாக் வேணா எழுதலாம் ... அதுனாலயும் எந்த சமூக மாற்றமும் வந்துடாது

அப்புறம் இத எப்படிதான் சமாளிக்க
ஒரு வழிதான் இருக்கு

குளிரை தடுக்க போர்வையில்லை எனில்
குளிரை நண்பனாக்கி கொள்னு

நமக்கு தெரிஞ்ச சாமி ஒன்னு சொல்லிருக்கு

அதான் கதி

11:19 AM, July 10, 2008
Pot"tea" kadai said...

//கவலைப்படாதீர்கள். திமுக-காங் கூட்டணி நகர்ப்புறங்களில் கோட்டை விட்டாலும் கிராமப்புறங்களில் கோட்டை கட்டும்!//

திமுக-காங் கூட்டணியே டுமாங்கோலி ஆயிடும்னு மண்டபத்துல பேசிக்கிறாங்க???
ஓவர் டூ கடலூர் காட்டான் குழலி.

என்னாண்ட எதும் கேக்காதீங்கோஓஓஓ

11:22 AM, July 10, 2008
Anonymous said...

//ஆனால் எந்த நேரத்திலும் விநியோகம் நிறுத்தப்படலாம் என்ற அச்சத்தில் பலர் பெட்ரோலை கூட வாங்கி சேமித்து வைக்க தொடங்கியுள்ளனர்.//

கடந்த வார நிகழ்வை இந்தவாரமும் தொடர்வது போன்று எழுதியுள்ளீர்கள். பெட்ரோல் விநியோகம் சீராக உள்ளதாக தெரிகிறது. (போய்தான் பார்க்கவேண்டும் போன வாரம் நிரப்பியது)

//
திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் கடுமையான தோல்வி அடையக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன.//
வீட்டு வாடகை, நிலம் விலையுயர்வு போன்றவை திமுக ஆட்சியின் போது அதிகம் ஏற்படுவதாக சென்னையில் நீண்ட காலம் வசிக்கும் சிலர் சொல்ல கேட்கிறேன். அடுத்து ஆட்சி மாறினால் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.

* வீட்டு வாடகை விசயத்தில் அரசு தனி கவனம் செலுத்தி கட்டுப்படுத்தவேண்டும். இல்லையேல் அது வருகின்ற தேர்தல்களில் பிரதிபலிக்கலாம்.

* அனு ஒப்பந்தத்தினால் அமெரிக்காவுடன் சுமார் 100 பில்லியன் அளவிற்கு வர்த்தகம் நடக்குமாம். இதை என்ன காங்கிரஸ் கட்சியா கொடுக்கப்போகிறது.

http://dinamalar.com/Topnewsdetail.asp?News_id=299&cls=

12:07 PM, July 10, 2008
மயிலாடுதுறை சிவா said...

சசி

நல்ல பதிவு. நல்ல அலசல்.

கடைசியாக இந்த வரி ஏன்?

".....திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் கடுமையான தோல்வி அடையக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன....."

அதிமுக_பாஜக வந்தால் எல்லாம் மாறிவிடுமா?!

எப்படியாவது சென்னை விலை குறைந்து ஒரு நல்ல வீடு கிட்டதட்ட 2000 சதுராடி 20 லட்சத்திற்குள் வாங்க வேண்டும் ;-))

மயிலாடுதுறை சிவா....

3:26 PM, July 14, 2008
தேரியூரான் said...

நீங்கள் வாழும் அமெரிக்காவில் கடந்த 6 மாதங்களில் அரிசியின் விலை 45% யும், மற்ற பொருட்களின் விலை சராசரியாக 29% உயர்ந்திருப்பதையும் கூறிவிட வேண்டியது தானே!! அதற்கும் மன்மோகனுக்கும் ஏதாவது தொடற்பு உண்டா?

7:14 PM, July 16, 2008
Ramya Ramani said...

நீங்க சொல்வது 100% உண்மை சென்னையின் புறநகர் பகுதின்னு சொன்ன இடங்களில் எல்லாம் இப்போ மணை விலை பெரிதும் உயர்ந்திருக்கிறது.இன்னும் பன்மடங்கு பெருகும்னு எதிர்பார்க்கபடுகிறதுன்னு கேக்கும் போதே கஷ்டமாத்தான் இருக்கு..

7:29 PM, July 16, 2008
வெற்றி said...

சசி,
சென்னையில் உள்ள சில வர்த்தக மென்பொருள் நிறுவனங்களும், சென்னையில் பணிமனை வாடகை அதிகரிப்பால் வேறு இடங்களுக்குச் செல்வதாக BBC இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

உங்களின் கட்டுரை அச் செய்தியை உறுதிப்படுத்துகிறது.

சென்னை பற்றிய BBC செய்தியின் சுட்டி:
http://news.bbc.co.uk/2/hi/business/7322802.stm

2:11 AM, September 04, 2008
அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மாதம் ஐயாயிரம் சம்பளம் எடுக்கும் திருமணமான இளைஞர்கள், சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குவது என்பது இயலாத காரியமாக இருக்கிறது.

கூவத் தமிழனே கொடுத்து வைத்தவன் என்கிற நிலையாகிவிட்டது. வாழ்க சன நாயகம்! வளர்க பார் போற்றும் தலைவர்கள்!!

போகிறப் போக்கைப் பார்த்தால் நடிகர்களும், பணக்கார அரசியல் வாதிகளும், சின்னத்திரை மீடியா காரர்களும்(முதலாளிகள்), ஒரு சில மென்பொருள் வல்லுனர்களும் மட்டுமே வாழ உகந்த இடமாக சிங்காரச்? சென்னை மாறிவருகிறது.

5:51 PM, September 04, 2008