வாழ்த்துக்கள் ஒபாமா

அமெரிக்காவின் முதல் கறுப்பர் இன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒபாமாவிற்கு வாழ்த்துக்கள். மாற்றம் (CHANGE) என்ற அசைக்க முடியாத கோஷத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை மக்கள் மத்தியில் ஒபாமா முன்வைத்தார். அந்த மாற்றம் என்ற கோஷம் ஒபாமாவை வெற்றி பெற வைத்திருக்கிறது.

கறுப்பர் இன மக்களின் உணர்ச்சிபூர்வமான உற்சாகத்துடன் அமெரிக்காவில் கொண்டாடங்கள் தொடங்கியுள்ளன. இந்த வெற்றி எந்தளவுக்கு உணர்ச்சிபூர்வமானது என அறிய வேண்டும் என்றால் அமெரிக்காவில் கறுப்பர்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையை திரும்பி பார்க்க வேண்டும்.
கடந்த மாதம் அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஹூஸ்டன் விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லும் பொழுது என்னுடைய டாக்சி டிரைவராக வந்த ஒரு கறுப்பர் இனத்தவருடன் இந்த தேர்தல் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். ஒபாமா வெற்றி பெற்று வெள்ளை மாளிகையில் நுழைந்தால் அது கறுப்பர்கள் இனத்தவர் அடையும் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும் என்றார். தன்னை பலர் "Nigger" என அழைத்து இருக்கிறார்கள். ஒபாமா வெள்ளை மாளிகையில் நுழையும் பொழுது மிகப் பெருமையாக உணர்வேன் என்றார். ஜெசி ஜாக்சன் சாதிக்க முடியாததை ஒபாமா சாதித்து விட்டார் என்றார். நிச்சயம் ஜனாதிபதியாவார் என்றார்.
இப்படி பல கறுப்பர்கள் ஒபாமாவின் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இன்று அந்த வெற்றி கிடைத்து இருக்கிறது.
ஜெசி ஜாக்சன் இன்று ஒபாமா வெற்றி பெற்றார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் கண்ணீர் விட்டு அழுதார். 1984, 1988 தேர்தலில் ஜனநாயக்கட்சியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னேட்ட தேர்தலில் வேட்பாளராக நின்று ஜெசி ஜாக்சன் தோற்றுப் போனார்.
ஒரு கறுப்பரால் ஒரு முக்கிய தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என கறுப்பர்கள் நம்பினர். அந்த காரணத்தாலேயே ஒபாமாவை இந்த தேர்தலின் தொடக்கத்தில் பெரும்பான்மையான கறுப்பர்கள் ஆதரிக்கவில்லை. தோற்கப்போகும் ஒபாமாவை எதற்கு ஆதரிக்க வேண்டும் என பெரும்பாலான கறுப்பர்கள் நினைத்தனர். அதனால் அவர்கள் ஆரம்பத்தில் ஹில்லரியையே ஆதரித்தனர். ஆனால் ஒபாமா அயோவா தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஒபாமா பின் கறுப்பர்கள் அணிவகுத்தனர். இன்று ஒபாமா வெள்ளை மாளிகையில் நுழையப் போகிறார்.
வெள்ளை மாளிகை என்பது அமெரிக்க வெள்ளையர்களின் அதிகாரபீடமாகவே பெரும்பான்மையான கறுப்பர்கள் கருதினர். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பர் நுழைவதை இன்றைக்கும் பல வெள்ளையர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் உள்ளது. பல வலதுசாரிகளால் ஒபாமா ஜனாதிபதி என்பதை ஜீரணிக்க பல காலம் ஆகும். இன்றைக்கும் அமெரிக்காவின் தென்பகுதிகளில் அமெரிக்க வலதுசாரிகள் பலமாகவே வெற்றி பெற்றிருக்கின்றனர். வயதானவர்கள், வெள்ளை ஆண்கள் மத்தியில் ஒபாமாவின் ஆதரவு தளம் குறைவாகவே உள்ளது. ஆனால் இளைஞர்கள் மத்தியில் கிடைத்த பலமான ஆதரவு தான் ஒபாமாவை வெற்றி பெற வைத்திருக்கிறது.
*******
ஒபாமா அதிகபட்ச எதிர்பார்ப்புகளுடன் ஜனாதிபதியாகிறார். ஆனால் அவர் முன் பலமான சவால் உள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் சிதைந்து போய் உள்ளது. அமெரிக்காவின் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் மாற்றத்தை எதிர் நோக்கியுள்ளது. அமெரிக்க முதலாளித்துவ பாதை எதிர்காலத்தில் நிச்சயம் மாறும். மாறியே தீர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஒபாமா நிறைவேற்றுவாரா ? ஒபாமாவிற்கு நிறைய அவகாசம் வேண்டும். ஒபாமாவின் தலைமைப் பண்புகள் மிகவும் அரிதானது. அவருடைய பல கருத்துக்கள் இது வரை அமெரிக்க அதிகாரபீடம் முன்வைத்ததில் இருந்து மாறுபட்டது. அந்த மாற்றம் தான் ஒபாமா மீதான மக்களின் நம்பிக்கையையும் அதிகரித்து இருக்கிறது.
ஒரு புதிய தொடக்கம் அமெரிக்காவில் ஏற்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கும் பல அமெரிக்க மக்களுக்கும், கறுப்பர் இன மக்களுக்கும், என்னுடைய வாழ்த்துக்கள்...