முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி
போர் என்பது தற்காப்பு தாக்குதல் (Defensive), வலிந்த தாக்குதல் (Offensive), தந்திரோபாய பின்நகர்வு (Tactical Withdrawal), சுற்றி வளைப்பு (Flanking maneuver), Tactical Maneuver (தந்திரோபாய நகர்வு) என அனைத்தும் சேர்ந்ததது தான். போரில் ஒரு இராணுவம் இந்த அனைத்து வியூகங்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் கடைபிடிக்கவே செய்கிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு வியூகங்களை அமைக்கும் படையே போரில் வெற்றிகளை பெற முடியும்.
தற்போதைய ஈழப் போரில் சிறீலங்கா இராணுவம் பெரிய அளவிலான வெற்றிகளை பெற்றிருக்கிறது. புலிகள் கடுமையான தற்காப்பு போரினை செய்து வருகிறார்கள். புலிகளின் போர் தந்திரங்களை முறியடிக்கும் இராணுவத்தின் வியூகங்களும் வெற்றிக்கு காரணமாக உள்ளது. தற்போதைய ஈழப் போரில் இராணுவத்தின் குறிப்பிடும்படியான வெற்றியாக மடு தேவாலயம் சார்ந்த பகுதிகளுக்கும், அடம்பன் நகருக்கும் நடந்த சண்டைகளை குறிப்பிட முடியும். பல மாதங்கள் இந்தச் சண்டை நீடித்தது.
இங்கு புலிகள் மிகவும் பலமான பாதுகாப்பு வளையங்களை அமைத்து இருந்தனர். கிட்டதட்ட முகமாலையில் இருந்தது போலவே இங்கு ஒரு வலுவான தற்காப்பு அரண் புலிகளால் செய்யப்பட்டிருந்தது. புலிகளின் தற்காப்பு அரண் பல அடுக்குகளை கொண்டது. நன்றாக அமைக்கப்பட்ட பதுங்கு குழிகள் ஒரு அரண். அதற்கு முன்பாக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கும். கண்ணி வெடிகள் என்னும் பொழுது அது ஒரு பொதுப்படையான பெயர். ஆனால் அதிலே பல விதமான வகைகள் உள்ளன. Chain Mines எனப்படுவது ஒரு வகையான கண்ணி வெடி. இதில் ஒரு வெடி வெடிக்கத் தொடங்கினால் தொடர்ச்சியாக அதனுடன் பல இடங்களில் பிணைக்கப்பட்டிருக்கும் பல வெடிகள் வெடித்து மிகவும் பலமான சேதங்களை படைகளுக்கு ஏற்படுத்தும். இது தவிர Booby trap என்ப்படும் பொறிகளும் புலிகளால் பயன்படுத்தப்பட்டன. இந்த பொறிக்குள் சிக்கும் படைகள் கடுமையான பாதிப்புகளை அடைய நேரிடும்.
புலிகளின் பதுங்கு குழிகளை கைப்பற்ற வேண்டுமானால் இந்த வளையத்தைக் இராணுவம் கடந்து செல்ல வேண்டும். அடம்பன் பகுதியில் இந்த வளையத்தை கடந்து செல்லவே முடியாத சூழ்நிலை இராணுவத்திற்கு ஏற்பட்டது. இந்த வளையத்தில் சிக்கி பல இராணுவத்தினர் தங்கள் கால்களை இழக்க நேரிட்டது. பலர் இறந்தனர். இது தவிர தங்கள் இலக்குகளை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தை தாக்க புலிகள் ஸ்னைப்பர்களை (Sniper) பயன்படுத்தினர். தூரத்தில் இருக்கும் இலக்குகளை மிகவும் சரியாக குறி பார்த்து சுடுவதே ஸ்னைப்பர் தாக்குதல். எல்லா இராணுவத்திலும் ஒரு தனிப் பிரிவே இதற்கு உண்டு. புலிகள் அமைப்பிலும் உள்ளது. தங்கள் இலக்குகளை நோக்கி வரும் இராணுவத்தினரை சுடுவதற்கு இந்த ஸ்னைப்பர்களை புலிகள் பயன்படுத்தினர்.
இப்படியான தாக்குதல்கள் காரணமாக இந்தப் பகுதிகளில் இராணுவத்திற்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. பல மாதங்களாக இந்த சண்டை நடந்தது. புலிகளின் இந்த அரண்களை உடைத்து இராணுவம் முன்னேறும் பொழுது தங்கள் நிலைகளில் இருந்து புலிகள் பின்வாங்கி விடுவார்கள். ஆரம்பத்தில் இராணுவத்தின் நோக்கம் புலிகளின் எண்ணிக்கையை குறைப்பது என்றளவில் இருந்ததால், புலிகளின் இலக்குகளை தாக்கி விட்டு பின்வாங்கி விடும் உத்தியை கடைப்பிடித்தனர். புலிகள் இராணுவம் முன்னேறும் பொழுது பின்வாங்கி விடுவார்கள். பிறகு இராணுவத்தை நோக்கி கடுமையான ஆர்ட்டிலரி தாக்குதலை தொடுப்பார்கள். புலிகளின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் இராணுவம் பின்வாங்க வேண்டிய சூழ்நிலை நேரிடும். இப்படியான சூழலில் ஒரு இடத்தை இராணுவம் கைப்பற்றுவதும், பின் அதனை புலிகள் கைப்பற்றுவதும், பின் இராணுவம் கைப்பற்றுவதும் என மாறி மாறி சூழ்நிலை நிலவி வந்தது.
அப்போதைய செய்திகளை தொடர்ந்து வாசித்து வந்தவர்களுக்கு இது தெரியும். அடம்பன் நகரை பிடித்து விட்டோம் என இராணுவம் கூறும். பின் சிறிது காலம் கழித்து மறுபடியும் அடம்பன் நகரை பிடித்து விட்டோம் எனக்கூறுவார்கள். இடையிலே அவர்கள் புலிகளிடம் இழந்தது செய்தியாக வெளியாகாது. இப்படி மாறி மாறி நடந்து கொண்டே இருந்த சூழ்நிலை ஒரு விதமான தேக்க நிலையை ஏற்படுத்தி இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தான் தங்கள் தந்திரோபாயத்தை மாற்ற வேண்டிய தேவை சிறீலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்டது.
புலிகளின் தற்காப்பு வியூகத்தை உடைக்க மூன்று திசைகளில் இருந்து அடம்பன் நகரை நோக்கி இராணுவம் படிப்படியாக நகர தொடங்கியது. சிறீலங்கா இராணுவத்தின் Flanking maneuver எனப்படும் சுற்றிவளைப்பு காரணமாக புலிகள் அடம்பன் நகரில் இருந்து பின்வாங்க நேரிட்டது. இங்கு இராணுவத்தை எதிர்த்து புலிகள் பதில் தாக்குதலை தொடுத்து இருக்கலாம். ஆனால் அது புலிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும். எனவே புலிகள் தந்திரோபாயமாக பின்நகர்ந்தார்கள். அடம்பன் இராணுவம் வசம் வந்தது. அதற்கு பிறகு பல இடங்கள் மிக வேகமாக இராணுவம் வசம் வந்தடைந்தது.
**********
அடம்பன் நகர் சார்ந்த பகுதிகளிலும், முகமாலை பகுதிகளிலும் புலிகளின் தற்காப்பு வியூகம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருந்தது. ஆனால் அடம்பனை கைப்பற்றிய சிறீலங்கா இராணுவத்தால் முகமாலையை ஏன் கைப்பற்ற முடியவில்லை ?
ஈழத்தில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் போருக்கும், கடந்த காலங்களில் ஈழத்திலும், பிற நாடுகளில் நடைபெற்ற போருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. போரில் எதிரியின் பலமான பகுதிகளை நேரடியாக போரிட்டு வெல்வதை காட்டிலும் அதனை சுற்றிவளைத்து எதிரியை நிலைகுலைய வைப்பது ஒரு போர் தந்திரம். இதைத் தான் Flanking maneuver என்கிறார்கள். உதாரணமாக சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த பொழுது ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதி தங்களுக்கு பாதகமாக இருக்கும் என நினைத்தார்கள். எனவே அந்த மலைப்பகுதிகளுக்கு சென்று தாக்குதல் நடத்தாமல், அந்த மலைப்பகுதியை வேறு வகையில் சுற்றி வளைத்து அங்கு செல்லக்கூடிய வழிகளை அடைத்தார்கள். இதன் காரணமாக சோவியத் யூனியன் வெற்றி பெற்றது. மூன்றாம் ஈழப் போரில் கூட புலிகள் ஆனையிறவை "ஓயாத அலைகள் - 3" தாக்குதலில் இவ்வாறே வென்றார்கள். இரண்டாம் உலகப் போரில் நடந்த ஐ ஆலமெய்ன்(El Alamein) சண்டையும் அவ்வாறானதே.
தற்போதைய ஈழப் போர் வியூக அமைப்பும், ஐ ஆலமெய்ன் வியூக அமைப்பும் பெரும்பாலும் ஒப்பிடக்கூடியதாகவே உள்ளது. ஐ ஆலெமெய்ன் போரில் ஜெர்மனி-இத்தாலி அச்சுப் படைகள் மிக நீண்ட ஒரு தற்காப்பு அரணை அமைத்து இருந்தார்கள். இந்த தற்காப்பு அரண் என்பது மிக நீண்ட பதுங்கு குழிகளை கொண்டதாக அமைந்து இருந்தது. சுமார் 40கி.மீ நீள பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டன. இந்த பதுங்கு குழிகளுக்கு முன்பாக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டன. பதுங்கு குழிகளுக்கு பின்புறமாக படைவீரர்களும், ஆர்ட்டலரிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதனைச் சார்ந்து நடந்த சண்டையில் அச்சுப்படைகளின் வியூகத்தை உடைத்து பிரிட்டன் - பிரான்சு உள்ளிட்ட நேச நாடுகள் வெற்றி பெற்றன. அச்சு படைகள் எதிர்பார்த்திராத திசையில் இருந்து நுழைந்து நேச நாடுகள் அந்த தாக்குதலை நடத்தின. எதிர்பாராத திசையில் இருந்து எதிர்பாராத தாக்குதல் என்பது தான் பல இராணுவ வெற்றிகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அடம்பனிலும் சிறீலங்கா இப்படியான ஒரு வெற்றியை தான் பெற்றது. புலிகள் எதிர்பாராத வகையில் மூன்று திசையில் இருந்து அடம்பனை சிறீலங்கா இராணுவம் சுற்றி வளைத்தது. ஆனால் முகமாலையில் சிறீலங்கா இராணுவத்தால் அதனை செய்ய முடியவில்லை. ஏனெனில் முகமலையில் Flanking Maneuverability க்கான வாய்ப்பு மிகவும் குறைவு. முகமாலை வெறும் 7 கி.மீ அகலம் கொண்ட குறுகலான நிலப்பகுதி. சுற்றிலும் கடலும், கடனீரேரிகளும் உள்ளன. சுற்றி வளைப்பதற்கான வாய்ப்பு இங்கே மிகவும் குறைவு. சுற்றி வளைக்க வேண்டுமானால் தென் பகுதியில் இருந்து நுழைந்து கிளிநொச்சி-பரந்தன் - பூநகரி போன்ற பகுதிகளை பிடிக்க வேண்டும். அதைத் தான் தற்பொழுது சிறீலங்கா இராணுவம் முனைந்து வருகிறது. கிளிநொச்சி-பரந்தன்-ஆனையிறவு வழியே செல்லும் A9 நெடுஞ்சாலை தான் தற்போதைய போரின் இலக்கு.
***************
புலிகள் தற்பொழுது பெரும்பாலும் தற்காப்பு தாக்குதல்களையே செய்து வருகிறார்கள். புலிகள் ஏன் தற்காப்பு தாக்குதல்களை நீண்ட காலமாக செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
தற்காப்பு தாக்குதலுக்கும், வலிந்த தாக்குதலுக்கும் இருக்கும் பெரிய வேறுபாடு தாக்குதலுக்கு தேவைப்படும் ஆட்பலம். ஒரு மிக பலமான தற்காப்பு வியூகத்தை உடைக்க 5:1 என்ற விகிதத்தில் வலிந்த தாக்குதலுக்கு கூடுதல் படையினர் தேவைப்படுகின்றனர். அது போல தற்காப்பு வியூகத்திற்கு அனுபவம் மிக்கவர்கள் மட்டுமே தேவையில்லை. அனுபவம் இல்லாதவர்களை கூட "நல்ல பயிற்சியுடன்" தற்காப்பு போரில் களம் புகுத்த முடியும். ஆனால் வலிந்த தாக்குதலுக்கு மிகவும் கூடுதல் பலம் தேவைப்படுகிறது. போர் சார்ந்த மதி நுட்பமும், அனுபவமும் தேவைப்படுகிறது.
தற்பொழுது முகமாலை, கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவு என பல முனைகளில் நடைபெறும் போருக்காக தன்னுடைய வலிமையான படையணியை இராணுவம் களத்தில் புகுத்தியுள்ளது. புலிகள் தங்களுடைய வலுவான கமாண்டோ படையணிகளான சார்லஸ் ஆண்டனி படையணி, இம்ரான் பாண்டியன் படையணி போன்றவற்றை போரில் புகுத்தவே இல்லை. They are kept in Reserve. இந்த சூழ்நிலையில் இராணுவம் தொடர்ச்சியாக தங்களுடைய மிக வலிமையான படையணிகளை இந்தப் போரில் புகுத்தி கொண்டிருக்கும் சூழ்நிலையில், போர் நீண்ட காலம் நீடிக்கப்பட்டால் இராணுவம் தன்னுடைய முக்கிய படைகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதைத் தான் தற்பொழுது புலிகள் செய்ய நினைக்கின்றனர். இது தவிர போர் ஏற்படுத்தும் உளவியல் கூறுகளும் (Stress, Psychological Trauma) இராணுவத்திற்கு ஏற்படும்.
இராணுவம் தொடர்ச்சியான வலிந்த தாக்குதல்களில் தங்களுடைய அனுபவம் மிக்க படையணிகளை இழக்கும் பொழுது எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இராணுவம் தோற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இராணுவம் Attrition warfare என்பதை முதலில் முன்னிறுத்தினாலும், புலிகள் தற்பொழுது கிளிநொச்சியில் தங்களுடைய தற்காப்பு அரண் மூலம் செய்வதும் ஒரு வகையில் Attrition warfare தான். இராணுவத்தின் பலத்தை தங்களுடைய தற்காப்பு வியூகம் மூலமே குறைத்து விடலாம் என புலிகள் நினைக்கிறார்கள். தொடர்ச்சியான இராணுவத்தின் தாக்குதல்களை முறியடிப்பதும், அவ்வாறு முடியாத சூழ்நிலையில் பின்நகர்ந்து வேறு இடத்தில் புதிய தற்காப்பு அரண்களை அமைப்பதும் புலிகளின் தந்திரோபயமாக உள்ளது.
கடந்த காலங்களில் கூட யாழ்ப்பாணத்தை நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேறிய பொழுது புலிகள் இவ்வாறே பின்வாங்கினர். ஆனால் பின்வாங்குதல் என்பது இரணுவம் நுழைய ஆரம்பித்தவுடன் உடனே பின்வாங்கி விடுவதல்ல. புலிகள் எப்பொழுதுமே முன்னேறி வரும் இராணுவத்தை எதிர்த்து தற்காப்பு தாக்குதல் தொடுத்து பின்வாங்கி விடுவார்கள். அவ்வாறு தற்காப்பு தொடுக்கும் பொழுது இராணுவத்திற்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்திக் கொண்டும், தங்களுடைய படையணியை தற்காத்துக் கொண்டும் பின்வாங்குவது புலிகளின் வியூகம். இந்தப் போரில் கூட அவர்களின் நோக்கம் அது தான். யாழ்ப்பாணம் கடனீரேரி தொடக்கம், இரணைமேடு வரை ஒரு நீண்ட பாதுகாப்பு அரணை கிளிநொச்சி-பரந்தனை பாதுகாக்க புலிகள் அமைத்துள்ளனர். இந்த பாதுகாப்பு அரணை உடைக்கவே தற்பொழுது பெரும் சண்டை நடந்து வருகிறது. இந்த பாதுகாப்பு அரண் மூலம் இராணுவத்திற்கு பலத்த சேதங்களை ஏற்படுத்துவது புலிகளின் நோக்கம். இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றினால் கூட பலத்த சேதங்களைப் பெற்ற பிறகே கைப்பற்றக்கூடிய சூழ்நிலை தான் உள்ளது.
புலிகளின் இந்த வியூகத்தை சிறீலங்கா இராணுவம் உணர்ந்தே உள்ளது. கடந்த வாரம் நடந்த போரில் அதிகம் பயிற்சி பெறாத பல இராணுவத்தினர் புகுத்தப்பட்டுள்ளனர். அது போல புலிகளின் தற்காப்பு அரணை உடைக்க ஒரே நேரத்தில் மிகவும் அசுர பலத்தை பல முனைகளில் பிரயோகிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதன் முன்னோட்டம் தான் கடந்த வாரம் நடைபெற்றது.
பல முனைகளில் அதிகளவில் இராணுவத்தினர் ஒரே நேரத்தில் புலிகளை தாக்கும் பொழுது புலிகளிடம் பல முனை தாக்குதலை ஒரே நேரத்தில் சமாளிக்க ஆயுத பலம், ஆர்ட்டிலரி பலம் போன்றவை இல்லை என்பது இராணுவத்தின் கணக்கு. கடந்த வாரம் சுமார் 7000 இராணுவத்தினர் பல முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதலில் ஈடுபடுத்த பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு செய்யும் பொழுது புலிகளை ஒரே நேரத்தில் நிலைகுலைய செய்ய முடியும் என இராணுவத்தினர் நம்புகின்றனர். இதில் இராணுவத்திற்கு சாதகங்களும் உள்ளன. பாதகங்களும் உள்ளன. கடந்த வாரம் இராணுவம் பலத்த இழப்புகளை எதிர்கொண்டது. என்றாலும் இத்தகைய தொடர் தாக்குதல்களை அடுத்து வரும் நாட்களில் எதிர்பார்க்க முடியும்.
இராணுவத்தின் இத்தகைய வியூகம் புலிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. தங்களுடைய தற்காப்பு தாக்குதலை நீண்ட நாட்களுக்கு கடத்த முடியாத நிலை புலிகளுக்கு ஏற்படும். அப்படியான சூழ்நிலையில் புலிகள் தங்கள் பதில் தாக்குதலை தொடுக்க வேண்டும். புலிகள் தற்பொழுது அதைத் தான் செய்ய தொடங்கியிருக்கின்றனர்.
இதில் வெற்றி தோல்விகள் பல விடயங்களைப் பெறுத்து உள்ளது. அந்த விடயங்களை அடுத்து வரும் பகுதிகளில் எழுத உள்ளேன்.
படங்கள் : dailymirror.lk
References : sundaytimes.lk, thesundayleader.lk, transcurrents.காம்
வணக்கம்
சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்
ஈழம்
என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன
ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்
காஷ்மீர்
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு
அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி
அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்
பிற கட்டுரைகள்
தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்
மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com
Sunday, December 21, 2008
கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 2
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 12/21/2008 08:22:00 PM
குறிச்சொற்கள் Killinochi, Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம், கிளிநொச்சி
Saturday, December 20, 2008
கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 1
முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி
ஈழத்திலே நான்காவது ஈழப் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போதைய சூழலில் புலிகள் பலவீனமாக உள்ளனர் என்பதாக சிறீலங்கா அரசு கூறி வருகிறது. புலிகள் தங்கள் வசம் இருந்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை இழந்துள்ள சூழலில் இந்தக் கருத்தை பல போர் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழர்கள், புலிகள் பலவீனமாக இல்லை, இது அவர்களின் தந்திரோபாய பின்நகர்வு மட்டுமே என கூறி வருகின்றனர். புலிகள், தங்கள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை இழந்துள்ள சூழ்நிலையில் தமிழர்களின் இந்த வாதம் வெறும் நம்பிக்கையாகவே பலருக்கும் தெரிகிறது. கடந்த காலங்களில் இருந்த சூழ்நிலைக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளதாக சிறீலங்கா கூறுகிறது. எனவே போரின் போக்கினை கடந்த காலங்களில் மாற்றியது போல தற்பொழுது புலிகளால் மாற்றி விட முடியாது என சிறீலங்கா அரசு நம்புகிறது. இதற்கு சிறீலங்கா முன்வைக்கும் காரணங்களும் வலுவாகவே உள்ளது.
புலிகள் வசம் இருந்த பெரும்பாலான இடங்கள் கைப்பற்றப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக கிளிநொச்சியை கைப்பற்ற நடக்கும் இந்தப் போரில் கடுமையான சேதங்களை சிறீலங்கா இராணுவம் இந்த வாரம் அடைந்திருக்கிறது. இந்த வாரம் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட படையினரை சிறீலங்கா இராணுவம் இழந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட படையினர் பலத்த காயங்கள் அடைந்துள்ளனர். இத்தகைய சூழலில் கிளிநொச்சிக்காக நடக்கும் இந்தப்போரினை இரண்டாம் உலகப்போரில் நடந்த ஸ்டாலின்க்ரேட் போருடன் (The Battle of Stalingrad) இந்திய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியான பி.ராமன்ஒப்பிடுகிறார் . பி.ராமன் இவ்வாறு கூறுவதற்கு முன்பாகவே ஈழத்தமிழர்கள் கிளிநொச்சியை ஸ்டாலின்க்ரேடுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதம் கிளிநொச்சி ஸ்டாலின்க்ரேட் ஆகும் வாய்ப்பு குறைவு எனக்கூறிய பி.ராமன் டிசம்பரில் அதனை ஒப்புக்கொண்டுள்ளார் போலும்.
The Battle of Stalingrad என்பது இரண்டாம் உலகப்போரில் சோவியத்யூனியனில்இருந்த ஸ்டாலின்க்ரேட் நகருக்காக நடந்த சண்டை. சோவியத்யூனியன் படையினருக்கும், ஜெர்மனியின் நாஸிப் படையினருக்கும் இடையே இந்தப் போர் நடைபெற்றது. இந்தப் போரினை இரண்டாம் உலகப்போரின் முக்கிய திருப்புமுனையாக கூறுவார்கள். சுமார் 6 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த சண்டையில் ஸ்டாலின்க்ரேட் நகரத்தை இன்று கைப்பற்றுவோம், நாளை கைப்பற்றுவோம் எனக்கூறிக்கொண்டே இருந்த நாஸிப் படையினர், இறுதியில் தோற்றுப் போயினர். இந்தப் போர் இரண்டாம் உலகப்போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
கிளிநொச்சி மற்றொரு ஸ்டாலின்க்ரேட் ஆக முடியுமா ? தெரியவில்லை. ஆனால் சிறீலங்கா இராணுவம் நினைத்தது போல கிளிநொச்சி வெற்றி அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை கிளிநொச்சி போர் தெளிவுபடுத்தி வருகிறது.
நான்காவது ஈழப் போர் சார்ந்த போரியல் ஆய்வாகவே இந்தக் கட்டுரை தொடரை எழுத இருக்கிறேன். என்றாலும் ஒரு விடயத்தை இங்கே தெளிவுபடுத்த வேண்டும். எனக்கு இராணுவம் குறித்து அதிகம் தெரியாது. ஈழத்திலே நடக்கும் போர் குறித்த ஒரு சக தமிழனின் அச்சம்/கவலை இவற்றுடனே இந்தப் போரினை கவனித்து வருகிறேன். அது சார்ந்த விடயங்களை தேடி படிக்கிறேன். அவ்வாறு கிடைத்த தகவல்களை என்னுடைய கருத்துகளுடன் முன்வைப்பது தான் இந்தக் கட்டுரை தொடரின் நோக்கம்.
*********
கிளிநொச்சி போர் குறித்து பார்ப்பதற்கு முன்பு இந்தப் போர் ஆரம்பத்தில் தொடங்கிய சூழலை கவனிக்க வேண்டும்.
Attrition warfare என்பது எதிரியின் பலத்தை படிப்படியாக குறைத்து, பிறகு எதிரியை நிர்மூலமாக்கும் ஒரு போர் நுட்பம். எதிரியின் பலத்தை படிப்படியாக குறைக்கும் பொழுது போரிடும் பலத்தை எதிரி இழக்கும் பொழுது வெற்றி கிடைக்கும். இந்த நுட்பத்தை தான் சிறீலங்கா இராணுவம் மேற்கொண்டது.
புலிகளின் பலத்தை படிப்படியாக குறைப்பது சிறீலங்கா இராணுவத்தின் நோக்கமாக இருந்தது. புலிகளின் பலம் என்பது அவர்களின் போர் வீரர்கள், ஆயுதங்கள் போன்றவை. எனவே முதலில் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் வழியை சிறீலங்கா இராணுவம் தடுக்க முனைந்தது. புலிகளுக்கு முல்லைத்தீவு கடல்வழியாகவே ஆயுதங்கள் வரும். இந்த வழியை அடைப்பது தான் சிறீலங்கா அரசின் முதல் நோக்கமாக இருந்தது. இந்தியா/அமெரிக்கா போன்ற நாடுகள் அளித்த அதிநவீன உளவு நுட்பங்கள் மூலம் புலிகளுக்கு ஆயுதங்களை கொண்டு வந்த பல கப்பல்களை சிறீலங்கா கப்பற்படை அழித்தது. இதனால் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் முக்கிய வழி அடைக்கப்பட்டது. இது புலிகள் தொடர்ந்து போரிடும் வலுவை குறைத்தது.
அடுத்த இலக்காக புலிகளின் முக்கிய முகாம்கள், ஆயுதக்கிடங்குகள் போன்றவற்றை விமானங்கள் மூலம் குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதலில் புலிகளின் பல முகாம்களும், ஆயுதக்கிடங்குகளும் அழிக்கப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் கூறுகிறது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட பல இடங்கள் பொதுமக்கள் உள்ள இடங்களே என புலிகள் கூறுகின்றனர். புலிகளின் மறைவிடம் என்று கூறி ஆதரவற்ற குழந்தைகள் இருந்த செஞ்சோலை இல்லத்தை சிறீலங்கா இராணுவம் தாக்கியது போன்ற துயரமான சம்பவங்கள் பல நிகழ்ந்தன என்பதை மறுக்க முடியாது.
இதையெடுத்து புலிகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியை இராணுவம் மேற்கொண்டது. சுமார் 10,000 புலிகளை தாங்கள் கொன்று விட்டதாக இராணுவம் கூறுகிறது. எப்படி இந்த எண்ணிக்கை முன்னிறுத்தப்படுகிறது என்று பார்க்கும் பொழுது சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர் வியூகம் நமக்கு புரியும். கடந்த காலங்களில் புலிகள் வசம் இருந்த இடங்களை கைப்பற்றுவதற்காக மிகப் பெரிய அளவிலான தாக்குதலை இராணுவம் தொடுத்து உள்ளது. இதனால் இராணுவத்தின் முன்னேற்றத்தை தங்களின் வியூக அமைப்பினால் புலிகள் முறியடித்து உள்ளனர். இராணுவத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆனால் தற்போதைய போரில் பொன்சேகா சிறீலங்கா இராணுவத்தின் வியூகங்களை மாற்றி அமைத்தார். பெரும் அளவிலான படையெடுப்புகள் எதையும் அவர் முன்னெடுக்கவில்லை. மாறாக சிறு குழுக்களை கொண்ட படைகளை தான் தாக்குதலில் பயன்படுத்தினார். ஆனால் தாக்குதல் தொடர்ச்சியாக இருக்கும். ஒரு சிறு குழு புலிகளின் முன்னரங்கப்பகுதிகள், பதுங்கு குழிகளை தாக்கும். தாக்கும் படைக்கு புலிகள் வசம் இருக்கும் பகுதிகளை பிடிக்கும் நோக்கம் இருக்காது. ஆனால் அவர்களின் இலக்கு புலிகளின் பலத்தை குறைப்பது. அதனால் புலிகளின் இலக்குகளை தாக்கி விட்டு பின்வாங்கி விடுவார்கள். இதனை தினமும் செய்யும் பொழுது புலிகளின் எண்ணிக்கை குறையும். ஆயுதங்களும் குறையும். இவ்வாறு படிப்படியாக குறைக்கப்பட்டு பின் ஒரு மிகப்பெரிய தாக்குதலை தொடுப்பது பொன்சேகாவின் வியூகமாக இருந்தது. புலிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்பட்டு ஆயுதங்கள் வரும் வழிகளும் தடைப்பட்டு விட்ட நிலையில் புலிகள் பலம் இழப்பார்கள் என்பது தான் பொன்சேகாவின் வியூக அமைப்பு.
இதன் மூலமே தினமும் பல புலிகள் கொல்லப்பட்ட நிலையில் புலிகளின் பலத்தில் பெரும்பகுதியை தாங்கள் குறைத்து விட்டதாக சிறீலங்கா இராணுவம் கூறுகிறது.
பொன்சேகாவின் வியூக அமைப்பு இவ்வாறு இருந்தது என்றால் புலிகளின் வியூகம் இதனை எதிர்கொள்ளவே செய்தது. பொன்சேகாவின் வியூகத்திற்கு ஏற்ப தங்களுடைய வியூகங்களையும் புலிகள் அமைத்திருந்தனர்.
*********
புலிகள் போன்ற சிறு கொரில்லா அமைப்பு ஒரு மரபு சார்ந்த இராணுவத்தை எதிர்கொண்டு வருகிறது என்று சொன்னால் அதற்கு காரணம் புலிகள் மேற்கொள்ளும் "பலமான"வியூகங்கள் தான். இதனை சிறீலங்கா இராணுவத்தினரும், இந்திய இராணுவத்தினருமே ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு முன்பாக நடந்த மூன்றாவது ஈழப் போரில் புலிகள் அடைந்த வெற்றிகளே இதற்கு சாட்சிகளாக விளங்குகின்றன.
ஆனையிறவு படைத்தளம் மீது புலிகள் கொண்ட வெற்றியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. ஆனையிறவு யாழ்ப்பாண தீபகற்பத்தை வன்னி பெருநிலத்துடன் இணைக்கும் சிறு நிலப்பகுதி. யாழ் தீபகற்பத்திற்கான வாயில் என்று இதனைச் சொல்லலாம். இந்த நிலப்பகுதிக்காக பலப் போர்கள் நடந்துள்ளன. கேந்திர முக்கியத்துவம் உள்ள இடம் இது. இங்கு தான் ஆனையிறவு படைத்தளம் என்ற சீறிலங்கா இராணுவத்தின் மிகப் பெரிய முகாம் இருந்தது. பலத்த பாதுகாப்பான முகாம். பலத்த என்பதை "பலப் பல" மடங்கு என்று சொல்லலாம். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்டது இந்த முகாம். இந்த முகாமின் பாதுகாப்பு வளையங்களை பார்வையிட்ட அமெரிக்க, பிரிட்டன் (UK) இராணுவ வல்லுனர்கள் இதனை கைப்பற்ற வேண்டுமானால் விமானப் படை வேண்டும். மரபுச் சார்ந்த படையாக இருந்து முப்படைகளையும் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளின் கூட்டு படைத்திறன் மூலமே இந்த முகாமை கைப்பற்ற முடியும் என தெரிவித்திருந்தனர். புலிகள் போன்ற கொரில்லா இயக்கங்களால் இந்த முகாமை எப்பொழுதும் கைப்பற்ற முடியாது என்று கூறினர். இந்த முகாமில் சுமார் 25,000 படை வீரர்கள் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்ட இந்த முகாமை புலிகளின் 5000 பேர்களை மட்டுமே கொண்ட படை கைப்பற்றியது, உலக இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. மரபுச் சார்ந்த போர் குறித்த இராணுவ நோக்கர்களின் கருத்துகளை மாற்றி எழுதிய நிகழ்வு இது. இந்தப் போரினை திட்டமிட்டு நடத்தி வெற்றி பெற வைத்தவர் புலிகளின் தலைவர் பிரபாகரன். விமானப் படை இல்லாமலேயே ஒரு பெரிய பாதுகாப்பு அரணை உடைத்து புலிகள் இந்த வெற்றியை கடந்தப் போரில் பெற்றனர்.
ஆனையிறவை இழந்தது சிறீலங்கா இராணுவத்திற்கு மிகப் பெரிய உறுத்தலாகவே இருந்து வந்துள்ளது. இம் முறை நான்காவது ஈழப் போர் தொடங்கிய பொழுது சிறீலங்கா இராணுவத்தின் நோக்கம் ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றுவது என்பதாகவே இருந்தது. ஆனையிறவுக்கும், சிறீலங்கா இராணுவத்தின் முதல் முன்னரங்கப்பகுதியான முகமாலைக்கும் இடையேயான தூரம் வெறும் 14 கி.மீ தான். இந்தப் பகுதி மிகவும் குறுகலான ஒரு நிலப்பகுதி. கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான இந்தப் பகுதியின் அகலம் வெறும் 7கி.மீ தான். கிளாலி முதல் முகமாலை வரை ஒரு பகுதியும், நாகர்கோவில் அடுத்தும் உள்ளது (படத்தில் பார்க்கலாம்)
முகமாலையில் இருந்து ஆனையிறவை கைப்பற்றுவது இராணுவத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறை இராணுவம் முன்னேற முனைந்த பொழுதும் புலிகள் மிக பலமான ஒரு பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனால் தங்கள் நிலைகளில் இருந்து இராணுவத்தால் முன்னேற முடியாத சூழல் தான் நிலவி வந்தது. இன்றைக்கும் நிலவி வருகிறது. கடந்த வாரம் கூட இராணுவம் முன்னேற முனைந்த பொழுது மிகவும் கடுமையான சேதங்களை அடைந்தது.
சிறீலங்கா இராணுவ நிலைகளில் இருந்து 14 கி.மீ. தூரம் கொண்ட ஆனையிறவை நெருங்க முனைந்த சிறீலங்கா இராணுவம், முகமாலையில் சில மீட்டர் தூரங்களே கொண்ட புலிகளின் முதல் முன்னரங்கப்பகுதிகளையே நெருங்க முடியவில்லை.
ஆரம்பகாலங்களில் இருந்தே இராணுவத்தின் நோக்கம் ஆனையிறவு தான். கிளிநொச்சி புலிகளின் தலைநகரம் என்பதாக கூறப்பட்டாலும், கிளிநொச்சிக்கு பெரிய இராணுவ முக்கியத்துவம் இல்லை. ஆனையிறவுக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது. தற்பொழுது நடந்து வரும் போர் கூட கிளிநொச்சிக்கானது என்பதை விட ஆனையிறவு நோக்கியே என கூற முடியும். ஆனையிறவை முகமாலையில் இருந்து கைப்பற்ற முடியாத இராணுவம் இப்பொழுது தென்பகுதிகளில் இருந்து பிடிக்க முனைகிறது. பரந்தன், கிளிநொச்சி, பூநகரி போன்ற பகுதிகள் கைப்பற்றபட்டால் இராணுவத்திற்கு ஆனையிறவை கைப்பற்றுவது சுலபமாக இருக்கும். பூநகரி கைப்பற்ற பட்ட நிலையில் A9 நெடுஞ்சாலையில் இருக்கும் பரந்தன், கிளிநொச்சி போன்றவையும் இராணுவம் வசம் வந்தால் ஆனையிறவு இலக்கு சுலபமாகி விடும். அவ்வாறு நேர்ந்தால் புலிகள் பின்வாங்கி முல்லைத்தீவு பகுதிக்கு செல்ல நேரிடும்.
இது தான் இராணுவத்தின் நோக்கம்.
ஆனையிறவு புலிகள் வசம் இருக்கும் வரை இந்தப் போர் முடிவுக்கு வராது.
புலிகள் வசம் இருந்த இடங்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய இராணுவம், ஏன் முகமாலை தொடக்கம், ஆனையிறவு வரையிலான 14 கி.மீ கொண்ட இடத்தை கைப்பற்ற முடியவில்லை ? முகமாலையில் நடந்த பல சண்டைகளில் இராணுவம் சுமார் 1000பேரை இழந்திருக்க கூடும். பலர் காயம் அடைந்துள்ளனர். இங்கு தான் நாம் புலிகளின் தற்காப்பு வியூகங்களை கவனிக்க வேண்டியுள்ளது.
புலிகளின் முகமாலை தற்காப்பு வியூகத்தை இரண்டாம் உலகப்போரில் நடந்த ஐஆலமெய்ன்(El Alamein) போரில் அமைக்கப்பட்டிருந்த தற்காப்பு வியூகங்களுடன்ஒப்பிடுகிறார்கள் . ஐ ஆலமெய்ன் எகிப்தில் இருக்கும் ஒரு சிறு நகரம். இந்தப் பகுதியில் நடந்த போர் இரண்டாம் உலகப்போர் அதிகம் பேசப்பட்டது. அச்சு அணி நாடுகளான ஜெர்மனி-இத்தாலி படைகளுக்கும், நேசநாடுகளாக இங்கிலாந்து, பிரான்சு போன்ற படைகளுக்கும் இடையே நடைபெற்றஇந்தப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றன. "Before Alamin we had no victory and after it we had no defeats" என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.
முகமாலையில் அத்தகைய ஒரு தற்காப்பு அமைப்பினை புலிகள் அமைத்துள்ளதால் தான் மிகக் குறுகிய அந்த நிலப்பகுதியை பல முறை முனைந்தும் இராணுவத்தால் கைப்பற்ற முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து புலிகளின் அந்த வியூக அமைப்பை உடைக்க இராணுவம் முயன்று வருகிறது.
இரண்டாம் பகுதி
****************
போர் மிகவும் கொடுமையானது என்பதை தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் நான்காவது ஈழப் போர் தெளிவாகவே வெளிப்படுத்தி வருகிறது. போரில் இறந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரின் கோரமான படங்களைப் பார்க்கும் பொழுது வேதனையாக உள்ளது. சிங்கள/தமிழ் இளைஞர்கள் என இரண்டு தரப்புமே இந்தப் போரில் பலியாகி கொண்டிருக்கின்றனர். இந்தப் போரில் யாருக்கும் உறுதியான வெற்றி கிடைக்கப்போவதில்லை என்றே போர் வியூகங்கள் கூறுகின்றன. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டால் கூட போர் முடியப்போவதில்லை. புலிகள் வசம் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. அவ்வாறான சூழலில் இத்தனை உயிர்கள் ஏன் பலியாக வேண்டும் ? அதற்கு ஏதேனும் அர்த்தங்கள் உள்ளதா போன்ற கேள்விகளை எழுப்பியாக வேண்டும். இந்தக் கேள்விகளுக்கு தற்போதைய சூழலில் எந்த அர்த்தமும் இல்லை. இருந்தாலும் போர் ஏற்படுத்தும் பாதகங்களை எழுப்பி போரின் கொடுமைகளை பேசியாக வேண்டும்.
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 12/20/2008 05:31:00 AM
குறிச்சொற்கள் Killinochi, Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம், கிளிநொச்சி
Friday, December 19, 2008
சீமான் கைது, ராஜீவ் காந்தி, பேச்சுரிமை
இந்த விடயத்தில் சீமான் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் சீமானை நான் பாராட்டியாக வேண்டும். தமிழகத்தின் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், "முற்போக்கு" எழுத்தாளர்கள், "மாற்று" எழுத்தாளர்கள், சமுதாயத்தை புரட்டி போடும் சிந்தனையாளர்கள் என யாருக்குமே ராஜீவ் காந்தி மீது எந்த விமர்சனமும் வைக்க கூடாது என்ற தமிழகத்தின் காட்டு தர்பாரினை எதிர்க்க வேண்டும் என்ற தைரியம் வந்ததில்லை. சீமான் முதல் முறை கைது செய்யப்பட்ட பிறகும், இம் முறை பேசினால் "மறுபடியும்" கைது செய்யப்படுவோம் என தெரிந்தும் ராஜீவ் காந்தியை விமர்சித்து பேசியுள்ளார்.
சீமான் விளம்பரத்திற்காக பேசினார் என்று சொன்னால் அதனை நம்புவதற்கில்லை. வைகோ, நெடுமாறான் போன்றோர் கைதினையே எந்த எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான் தமிழர்கள். இவ்வாறு பேசுவதால் சீமானுக்கு எந்தப் புதிய விளம்பரமும் கிடைக்கபோவதில்லை. ஆதாயங்கள் கூட இல்லை. பாதகங்கள் தான் அதிகம். சீமானின் கைதினை யாரும் எதிர்க்க போவதில்லை. இரண்டு நாள் அறிக்கைகள், பிறகு தங்கள் வழக்கமான வேலைகள் என அரசியல்வாதிகள் மாறி விடுவார்கள். காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்திருப்பது போல தேசிய பாதுகாப்புச் சட்டம் வேறு சீமானை பயமுறுத்துகிறது.
கடந்த முறையும் சரி, இம் முறையும் சரி சீமான் இந்திய தேசியத்தை பிளவு படுத்தவோ, இந்திய தேசியத்தை மறுத்தோ கூட பேசவில்லை. ராஜீவ் படுகொலையை கடந்து ஈழப் பிரச்சனையை பார்க்க வேண்டிய தேவையை தான் சீமான் முன்னிறுத்தினார். ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படையை அனுப்பிய நோக்கத்தினை தான் கேள்விக்கு உட்படுத்தினார். ராஜீவ் காந்தியின் அமைதிப்படை ஈழத்திலே செய்த போர் குற்றங்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடக்கம் லண்டன் பத்திரிக்கைகள் வரை இந்திய அமைதிப்படை ஈழத்திலே செய்த வெறியாட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளன. இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திய அமைதிப்படையின் வெறியாட்டம் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை தமிழகத்திலே பேசக்கூடாது, பேசினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும், சிறையில் போடுவோம் என்பது ஜனநாயக நாட்டின் அறிகுறி அல்ல. சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு.
அது போல சீமான் பயங்கரவாத இயக்க தலைவரை ஆதரித்து பேசினார் என்பதாக மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சீமான் அவ்வாறு பேசவில்லை. பிரபாகரன் மேல் தனக்கு இருக்கும் அபிமானத்தை வெளிப்படுத்தினார். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த பேச்சுரிமை கூட இல்லையா ? இந்திய அரசியல் சாசனம் அமைதியான வழியில் குரல் எழுப்ப அனுமதிக்கிறது. வைகோ கைது செய்யப்பட்ட வழக்கில் கூட நீதிமன்றம் பேச்சுரிமையை வலியுறுத்தியுள்ளது. பிரபாகரனுக்கு ஆதரவாக மட்டுமில்லாமல், விடுதலைப் புலிகளை ஆதரித்தும் கூட அமைதியாக தங்கள் கருத்துக்களை பேசலாம், எழுதலாம். அவ்வாறான சூழலில் காங்கிரஸ் கட்சியை அமைதிப்படுத்த சீமானை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
கலைஞர் குறித்து நாம் வைக்கும் எந்த விமர்சனத்தையும், ஜெயலலிதா ஆட்சியிலே இது போல பேசி விட முடியுமா என்ற வாதம் மூலம் தமிழகத்திலே திமுக ஆதரவாளர்கள் திமுகவின் ஜனநாயக, தமிழ் விரோதப் போக்கினை நியாயப்படுத்த முனைகின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் நடந்த சர்வாதிகாரப் போக்கினை காட்டி கலைஞர் செய்து கொண்டிருக்கும் ஜனநாயக விரோதப் போக்கினை நாம் நியாயப்படுத்தி விட முடியாது. ஜெயலலிதா தமிழர் அல்ல என கலைஞரே கூறியிருக்கிறார். ஆனால் கலைஞரை "தமிழினத்தலைவர்" என திமுகவினர் கூறுகிறார்கள் (திமுகவினர் மட்டும் தான் கூறுகிறார்கள்). தமிழினத்தலைவராக கூட தேவையில்லை. குறைந்தபட்சம் ஒரு தமிழராக தமிழகத்திலே ஈழத்தமிழர் பிரச்சனையை முழுமையாக விவாதிக்க/பேச ஒரு களம் அமைக்க திமுக ஏன் தொடர்ந்து மறுத்து வருகிறது ? காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு சீமானை கைது செய்ய வேண்டும் என்றவுடன் பாய்ந்து சென்று சீமானை கைது செய்யும் கலைஞர், தில்லிக்கு சென்று "அவரே" முன்வைத்த கோரிக்கைகளை காங்கிரஸ் இது வரை நிறைவேற்ற வில்லையே என்ற கேள்வியை எழுப்பி இருக்கலாம். ஓ...அது கலைஞர்-காங்கிரஸ் கூட்டு நாடகம் அல்லவா. அதனால் தான் கலைஞர் அமைதியாக உள்ளார். டெல்லியின் எடுபிடிகள் தமிழக காங்கிரஸ் மட்டும் அல்ல. திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தான்.
சீமான் மீது எனக்கு விமர்சனமும் உண்டு. சீமான் மீது மட்டும் அல்ல. பொதுவாக தமிழகத்திலே இருக்கும் அனைத்து தலைவர்கள் மீதான எனது விமர்சனமும் கூட. ஈழப் பிரச்சனையை உணர்ச்சிமயமாக பேசி தயவு செய்து பிரச்சனையை திசை திருப்பாதீர்கள். இது உணர்வுப்பூர்வமான பிரச்சனை தான். அதே நேரத்தில் இதனை அமைதியான முறையில் தமிழகத்து மக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டும். உணர்ச்சிமயமாக பேசுவதை விடுத்து பிரச்சனைகளை பேசுங்கள். ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை பேசுங்கள். இந்திய அமைதிப்படை செய்த போர் குற்றங்கள் குறித்து ஆதரப்பூர்வமாக பேசுங்கள். உணர்ச்சிமயமாக பேசுவது தமிழ் மக்களின் எதிரிகளுக்கு தான் சாதகமாக அமைந்து விடுகின்றது. தமிழர்களுக்கு இதனால் எந்த நன்மையும் இல்லை.
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 12/19/2008 11:40:00 AM
குறிச்சொற்கள் சீமான் கைது, தமிழகம், பேச்சுரிமை, ராஜீவ் காந்தி