கிளிநொச்சி போர் : ஒரு முடிவின் துவக்கம் ?

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி


1996ம் ஆண்டு கிளிநொச்சியை சிறீலங்கா இராணுவம் கைபற்றியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1998ம் ஆண்டு கிளிநொச்சியை மறுபடியும் புலிகள் கைப்பற்றினர். கிளிநொச்சி மற்றும் பரந்தனை புலிகள் கைப்பற்றியது அவர்களை ஆனையிறவு வரை கொண்டு சென்றது. தற்பொழுது வரலாறு திரும்பி இருக்கிறது. பரந்தன், கிளிநொச்சி ஆகிய இரண்டு இடங்களையும் சிறீலங்கா இராணுவம் கைப்பற்றியுள்ளது. இனி ஆனையிறவு நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேறும். பரந்தன், பூநகரி போன்ற இடங்களை புலிகள் இழந்துள்ள நிலையில் இனி ஆனையிறவை புலிகள் தக்கவைத்துக் கொள்வது கடினம்.

அடுத்து இராணுவம் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவினை நோக்கி நகரக்கூடும். 1998ம் ஆண்டு போல மறுபடியும் சிறீலங்கா இராணுவத்தை முறியடித்து புலிகள் கிளிநொச்சியை கைப்பற்றுவது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. காரணம் 1998ம் ஆண்டு புலிகள் ஒரு நாட்டினை எதிர்த்து தான் போரிட்டார்கள். எனவே அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற முடிந்தது. ஆனால் இம் முறை பல நாடுகளை எதிர்த்து போரிடுகிறார்கள். சிறீலங்கா, இந்தியா, பாக்கிஸ்தான், சீனா, அமெரிக்கா, ஈரான் என அனைத்து நாடுகளையும் எதிர்த்து ஒரே நேரத்தில் போரிடுகிறார்கள். எனவே கிளிநொச்சி இழப்பு என்பது மறுபடியும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றே எனக்கு தோன்றுகிறது. இது சரியானது தானா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

இந்தப் போர் குறித்து போரியல் நோக்கில் கட்டுரை எழுத தொடங்கினேன். இன்னும் போர் முடியவில்லை என எனக்கு தோன்றுகிறது. புலிகள் தங்களின் பலத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளனர். புலிகளின் பல அடுக்கு தற்காப்பு வளையத்தில் இரண்டு அடுக்குகளை தற்பொழுது இழந்துள்ளனர். முதல் அடுக்கு தங்களது எல்லைகளை பாதுகாப்பது என்பதாகவும், இரண்டாம் அடுக்கு முக்கிய நகரங்களைச் சுற்றியும், மூன்றாவது அடுக்கு இராணுவம் சார்ந்த பகுதிகள் மற்றும் கடற்கரைச்சார்ந்த முக்கிய நிலைகளை பாதுகாப்பது என்பதாகவும் அமைந்து இருந்தது. தற்பொழுது இரண்டு அடுக்குகளை சிறீலங்கா இராணுவம் உடைத்துள்ளது. இரண்டாம் அடுக்கு சார்ந்த சில முக்கிய நிலைகளை இனி புலிகள் தக்கவைப்பது கடினம். எனவே புலிகளின் மூன்றாவது தற்காப்பு வளையத்தை நோக்கி போர் நடைபெறக்கூடும். இது தான் இறுதிப் போர்.

எனவே போர் இன்னும் முடியவில்லை. என்றாலும் பல நாடுகளை ஒரே நேரத்தில் எதிர்த்து போரிடக்கூடிய பலம் புலிகளிடம் உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. கிளிநொச்சி, பரந்தன் போன்ற பகுதிகளின் இழப்பு புலிகளின் ஈழப்போராட்டத்தின் முடிவின் துவக்கமாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. கொழும்பு ஊடகங்கள் இதனை பிரபாகரனின் வாட்டர்லு என வர்ணிக்கின்றன. "புலிகளின் முட்டாள்தனத்தையும், மூர்க்கத்தனத்தையும் தந்திரோபாயம் என கொண்டாடுபவர்கள் தான் தமிழர்கள்" என ஒரு நண்பர் சில நாட்களுக்கு முன்பு கூறினார். இது உண்மையாக இருக்கலாம்.

இவ்வாறான சூழ்நிலையில் நான்காவது ஈழப் போர் சார்ந்த போரியல் வியூகங்களை தொடர்ந்து இங்கு முன்வைக்கிறேன். ஏனெனில் போர் கிளிநொச்சியுடன் முடிந்து விடப்போவதில்லை.

*********************

1916ம் ஆண்டு முதல் உலகப் போர் நடைபெற்ற சூழலில் இருந்த ஒரு யுத்த வியூகத்தினை நாம் கவனிக்க வேண்டும். ஒரு புறம் ரஷ்யா மற்றொரு புறம் பிரஞ்ச், பிரிட்டன் என இரு புறமும் இருந்த எதிரிகளை சமாளிக்கவும், தொடர்ச்சியான அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ளவும், அவர்களின் எதிர்தாக்குதல்களை முறியடித்து பிறகு தங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் ஒரு வலிந்த தாக்குதலை மேற்கொள்ளவும் ஜெர்மனி ஒரு நீண்ட தற்காப்பு வளையத்தை அமைத்து இருந்தது. இந்த தற்காப்பு வளையத்தை Hindenburg Line என குறிப்பிடுவார்கள். தங்களுக்கு சாதகம் இல்லாத இடங்களை கைவிட்டு, சாதகமான இடங்களை மட்டும் தக்கவைத்துக் கொள்வது ஜெர்மனியின் வியூகமாக இருந்தது (If this meant the relinquishment of territory to achieve dominant and fortifiable terrain and features, so be it.). அது தவிர சில முக்கிய நோக்கங்களும் ஜெர்மனி படையணிக்கு இருந்தது. ரஷ்யாவில் பிரச்சனைகள் ஏற்படும், அது தங்களுக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தும் என ஜெர்மனி நினைத்தது. எனவே அது வரையிலான காலத்தை கடத்துவது ஜெர்மனியின் நோக்கம். எனவே தன்னுடைய வலுவான நிலைகளை உள்ளடக்கி ஒரு நீண்ட தற்காப்பு அரணை அமைத்துக் கொண்டது. இந்தப் பகுதியை தங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதும், குறைவான படைகளே இதற்கு தேவைப்படுவார்கள் என்பதும் ஜெர்மனியின் வியூகம்.

ஜெர்மனியின் இந்த வியூகம் அதற்கு சாதகமாகவே அமைந்தது. தொடர்ச்சியான பிரஞ்ச் படையினரின் தாக்குதல்களை தங்களுடைய தற்காப்பு வியூகங்களால் முறியடிக்க முடிந்தது. மொத்த பிரஞ்ச் படையையே இந்த தற்காப்பு வியூகம் மூலமாக ஜெர்மனி தோற்கடித்தது. முறியடிக்கவே முடியாத நிலையில் இருந்த Hindenburg Line என்ற தற்காப்பு வியூகத்தை நவம்பர் 20, 1917ல் பிரிட்டன் படைகள் முறியடித்தன. இந்த யுத்தத்தை Battle of Cambrai என கூறுவார்கள்.

பிரிட்டன் படைகள் ஜெர்மனியின் வியூகத்தை உடைத்து உள்ளே சென்றதும், பிறகு ஜெர்மனியின் பதில் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமலும் பின்வாங்கினர். இதற்கு பிறகு ஒரு வலிந்த தாக்குதல்களை பிரிட்டன் எதிர்பாராத நேரத்தில் ஜெர்மனி தொடுத்தது. இதில் ஜெர்மனிக்கு கணிசமான வெற்றி கிடைதது.

இப்பொழுது ஈழத்திலே நடைபெற்று கொண்டிருக்கும் போரினை ஜெர்மனி-பிரிட்டன் யுத்தத்துடன் ஒப்பிட முடியும். புலிகளின் படைபலத்தை ஜெர்மனியுடன் ஒப்பிட முடியாது. என்றாலும் புலிகளின் வியூகம் ஜெர்மனி போலவே உள்ளதை கவனிக்க முடியும். தங்களுக்கு சாதகமான பகுதிகளைச் சார்ந்த தற்காப்பு அரணை புலிகள் அமைத்து உள்ளனர். தற்பொழுது கிளிநொச்சி சார்ந்த தற்காப்பு அரண் இராணுவத்தால் உடைக்கப்பட்டுள்ளது. என்றாலும் இன்னும் அவர்கள் வசம் எஞ்சி இருக்கிற பகுதிகளைச் சார்ந்து மற்றொரு தற்காப்பு அரணை அமைத்து உள்ளார்கள். இது தவிர கடல்சார்ந்த புலிகளின் பகுதிகளைச் சார்ந்தும் மற்றொரு தற்காப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. இறுதிப் போர் என்பது இந்த கடற்கரைச் சார்ந்த இறுதி தற்காப்பு அரணைச் சார்ந்தே அமையும் என போரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறு பிரிட்டன் படைகள் தங்களின் அசுர மற்றும் நவீன ஆயுதங்களைக் கொண்டு ஜெர்மனியின் வியூகத்தை உடைத்தார்களோ அதைப் போலவே சிறீலங்கா இராணுவம் தங்களது நவீன ஆயுத பலம் மூலம் புலிகளின் தற்காப்பு அரணை முறியடித்து உள்ளனர்.

புலிகளின் தற்காப்பு அரண் தங்களின் படைகளை தற்காத்துக் கொள்ளும் நோக்கமும் கொண்டது. அது தவிர தங்கள் பலத்தை ஒரே இடத்தில் குவிப்பதும் புலிகளின் நோக்கமாக உள்ளது (Concentration of forces). புலிகளிடம் இன்னமும் 25,000 படைப்பிரிவினர் உள்ளனர். இவர்களில் 10,000 பேர் நவீன பயிற்சி பெற்றவர்கள். இந்தப் போரில் இது வரை புலிகளின் சார்லஸ் ஆண்டனி படையணி, இம்ரான் பாண்டியன் படையணி போன்றவை அதிகம் ஈடுபடுத்தப்படவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த தாக்குதல்களில் ஈடுபட்ட இந்தப் படையணிகள் எளிதில் குண்டு துளைக்காத உடைகவசம் அணிந்தும், தலையில் கவசம் அணிந்தும் போரில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களுடைய முக்கிய படையணிகளை தற்காத்துக் கொள்ளும் புலிகளின் வியூகத்தையே இது வெளிப்படுத்துகிறது.

எந்த தற்காப்பு போரும், இறுதியில் வலிந்த தாக்குதல்களை நோக்கமாக கொண்டே அமைக்கப்படும். அந்த வகையில் ஜெர்மனி எவ்வாறு தங்களுடைய தற்காப்பு வியூகத்தை ரஷ்யாவில் இருந்த உள்நாட்டு குழப்பத்தை எதிர்பார்த்து அமைக்கப்படிருந்ததோ அது போல புலிகளும் தங்களுக்கு சாதகமான ஒரு நிலையை எதிர்பார்த்து தங்களது தற்காப்பு வியூகத்தை அமைத்து உள்ளனர்.

இது வியூகமாக இருந்தாலும், இந்த வியூகம் எந்தளவுக்கு புலிகளுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை பொறுத்தே அவர்களின் எதிர்கால வலிந்த தாக்குதல் வெற்றிகளை கொடுக்கும். அது போல சிறீலங்கா இராணுவம் எந்தளவுக்கு புலிகளின் பலத்தை குறைத்து உள்ளதோ அதனைச் சார்ந்த அதனுடைய தற்போதைய வெற்றி நிலைக்க முடியும்.

முதலில் சிறீலங்கா இராணுவத்தின் வெற்றி எப்படியானது என்பதை நாம் கவனிக்க வேண்டும். சிறீலங்கா இராணுவம் புலிகள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது அதன் முக்கிய வெற்றியாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் இந்த வெற்றியை தக்கவைப்பதும் எதிர்காலத்தில் இராணுவத்திற்கு இருக்ககூடிய சவால் என்பதையும் நான் கவனிக்க வேண்டும். இப்பொழுது கைப்பற்றியுள்ள இடங்களை தக்கவைக்க வேண்டுமானால் புலிகளின் பலத்தை இராணுவம் அழிக்க வேண்டும். அவ்வாறு இது வரை செய்திருக்கிறதா என்பதை ஆராய்ந்தால் அப்படியான எந்த வெற்றியும் இராணுவத்திற்கு ஏற்படவில்லை என்று தான் கூற வேண்டும். இது வரை புலிகள் தரப்பில் சுமார் 10,000 பேரை தாங்கள் கொன்று விட்டதாக இராணுவம் கூறி வருகிறது. ஆனால் புலிகள் ஆண்டுதோறும் வெளியிடும் மாவீரர்கள் பட்டியல் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான நிலவரத்தை தரும். அவ்வாறு நோக்கம் பொழுது புலிகள் தரப்பில் பெருத்த சேதங்கள் ஏற்படவில்லை என்பதை கவனிக்க முடியும். இது தவிர புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் வழங்கல் பாதை (Supply Lines) இன்னும் முழுமையாக முடக்கப்படவில்லை என்பதையும் சமீபத்தைய நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் சிறீலங்கா இராணுவத்தின் தற்போதைய வெற்றி என்பது உறுதியான வெற்றி அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அது போல புலிகளின் தற்காப்பு வியூகங்கள் எந்தளவுக்கு வெற்றி பெற்று உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். தங்களுடைய தற்காப்பு அரண் மூலம் இராணுவத்திற்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்துவது, தொடர்ச்சியான போர் மூலமாக சிறீலங்காவின் பொருளாதாரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது போன்றவை புலிகளின் நோக்கமாக இருந்தது. புலிகளின் இந்த முயற்சிக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என்பதை நாம் போர் நிலவரங்கள் மூலம் கவனிக்க முடியும். சில குறிப்பிடத்தக்க இழப்புகளை இராணுவத்திற்கு புலிகள் ஏற்படுத்தியிருந்தாலும் அந்த இழப்புகள் இராணுவத்தை பொறுத்தைவரை மிகவும் குறைவே. அது தவிர கடந்த காலங்களில் கட்டுநாயக்க விமான தளம் மீதான தாக்குதல் போன்றவை மூலம் சிறீலங்கா பொருளாதாரத்திற்கு கடுமையான அழுத்தங்களை புலிகள் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் தற்பொழுது புலிகளால் அது போன்ற ஒரு பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்த முடியவில்லை.

இவ்வாறான நிலையில் இந்தப் போர் எந்த வெற்றியையும், யாருக்கும் கொடுக்க முடியாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். என்றாலும் இடங்களை கைப்பற்றியதன் மூலம் இராணுவம் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளை நான்காவது ஈழப் போரில் பெற்றிருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

*************************

2008ம் ஆண்டு முடிந்து 2009ம் ஆண்டு தொடங்கி விட்டது. A32 சாலைக்காக நடந்த சண்டையில் இராணுவத்தின் Attrition warfare நோக்கம் தங்களுக்கு தெரிவதாகவும், அதற்கு ஏற்ப தங்களுடைய வியூகமும் அமையும் என புலிகள் அமைப்பின் ஒரு மூத்த தலைவர் தெரிவித்து இருந்தார். 2008ம் ஆண்டு போர் பற்றிய ஒரு தெளிவினை கொடுக்கும் என 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் அவர் கூறினார். 2008ம் ஆண்டு முடிந்து விட்ட நிலையில் ஒரு விடயம் தெளிவாகவே புரிகிறது..... அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

2008ம் ஆண்டில் இது வரை இல்லாத அளவுக்கு பல தோல்விகளை புலிகள் அடைந்து உள்ளனர். அடம்பன், பூநகரி தொடங்கி தற்பொழுது பரந்தன், கிளிநொச்சி என பல இராணுவ முக்கியத்துவம் பெற்ற இடங்களை புலிகள் இழந்து உள்ளனர். கிளிநொச்சி தவிர முல்லைத்தீவு பகுதியையும் புலிகள் இழக்ககூடும். கிளிநொச்சியை புலிகள் தற்காக்க தீவிர போர் புரிந்த சூழ்நிலையில் அதனை தங்களுக்கு சாதகமாக சிறீலங்கா இராணுவம் பயன்படுத்திக் கொண்டது. முல்லைத்தீவினை நோக்கி இராணுவம் நகர்ந்து வருகிறது. முல்லைத்தீவு நகரை அண்டிய முள்ளியவளை, தண்ணீரூற்று, சிலாவத்தை ஆகிய இடங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு பகுதியை தக்கவைக்க வேண்டுமானால் கிளிநொச்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலை தான் புலிகளுக்கு இருந்தது. அதைத் தான் தற்பொழுது புலிகள் செய்திருக்கின்றனர்.

நான் கடந்த பகுதியில் கூறியிருந்தது போல புலிகள் போன்ற சிறிய இராணுவ அமைப்பிற்கு பல முனைகளில் ஒரே நேரத்தில் நடத்தப்படும் பெரிய தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஆட்பலமோ, ஆயுதபலமோ இல்லை. அதைத் தான் இந்த வார நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதையும் விளக்க வேண்டும். தங்களுடைய தற்காப்பு அரண் முழுவதையும் பாதுகாப்பதற்கு போதிய போராளிகள் பலமோ, ஆயுத பலமோ புலிகளிடம் இல்லை. தற்காப்பு அரணை சார்ந்த பகுதிகளில் குறைந்த அளவிலான போராளிகளே இருப்பார்கள். இது இராணுவத்தின் ஆர்ட்லரி தாக்குதல்கள் போன்றவற்றை சமாளிப்பதற்கான ஒரு உத்தியும் கூட. இராணுவம் தாக்குதல் தொடுக்கும் பொழுது தாக்குதல் நடத்தப்படும் இடங்களுக்கு, தாக்குதல்களின் பலத்தை பொறுத்து போராளிகளையும், ஆயுதங்களையும் அனுப்புவது புலிகளின் வழக்கம். இது புலிகள் என்றில்லாமல் எல்லா இராணுவ அமைப்புகளின் செயல்பாடும் இவ்வாறு தான் இருக்கும். பல முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் பொழுது இந்த வழங்கல் பாதையில் (Supply Lines) சுணக்கம் ஏற்படுகிறது. அது தவிர இராணுவத்தின் விமானத் தாக்குதல் இந்த வழங்கல் பாதையை குறிவைக்கிறது. இதன் காரணமாகவே புலிகளின் தற்காப்பு அரணை பல முனை, எதிர்பாராத தாக்குதல்களை மூலம் இராணுவம் முறியடிக்க முனைகிறது. அதற்கு வெற்றியும் கிடைத்து உள்ளது.

இதனை எதிர்கொள்ள தங்களால் பாதுகாக்க முடிந்த சிறிய பகுதிகளை மட்டும் பாதுகாத்து கொள்வதும், தங்களால் பாதுக்காக்க முடியாத முக்கிய நிலைகளை விட்டு பின்வாங்குவதும் புலிகளின் தற்போதைய வியூகமாக உள்ளது. தற்போதைய நிலையில் மூன்று புறமும் புலிகளை இராணுவம் சுற்றிவளைத்துள்ளது. ஒரு புறம் கடல் வழியே வரும் ஆயுதங்களை இராணுவம் தடுக்க முனைந்து வருகிறது. இருந்தாலும் புலிகள் அவ்வப்பொழுது ஆயுதங்களை பெற்றே வந்திருக்கின்றனர் என்பதையும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. புலிகள் எந்தளவுக்கு ஆயுதங்களை கடல் வழியாக பெறுகின்றனர் என்பதை பொறுத்தே போரின் எதிர்கால போக்கு அமையும். இந்த கடல் வழிப் பாதையை எந்தளவுக்கு இராணுவம் தடுக்கிறதோ அந்தளவுக்கு அது இராணுவத்திற்கு வெற்றியையும் கொடுக்கும்.

*************************

இராணுவத்தின் இந்த தொடர்ச்சியான வெற்றிகளை தடுக்க புலிகள் வலிந்த தாக்குதல்களை தொடுக்க வேண்டும். புலிகள் ஏன் தங்களுடைய வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள வில்லை என்ற கேள்வி தொடர்ச்சியாக பல ஊடகங்களில் எழுப்பபட்டு வருகிறது. புலிகளிடம் வலிந்த தாக்குதல்களை தொடுக்க கூடிய பலம் இல்லை என இராணுவம் கூறுகிறது. அது உண்மையா என்பதை காலம் தான் பதில் சொல்லும்