இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ளன. இந்த தேர்தல் தமிழர்களுக்கு ஒரு முக்கியமான தேர்தலாக அமையப் போகிறது. தமிழர்களுக்கு இது சோதனையான காலம். ஈழத்தில் இன அழிப்பு (Genocide) நடந்து கொண்டிருப்பது ஒரு பக்கம் என்றால் அதனை இந்திய/தமிழக அதிகாரமையங்கள் நேரடியாகவும்/மறைமுகமாகவும் ஆதரித்து கொண்டிருக்கும் சூழல் மற்றொரு புறம் உள்ளது.
தமிழகம் எப்பொழுதுமே திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தான் தமிழினம் சார்ந்த எல்லாப் பிரச்சனைக்கும் எதிர்நோக்கி இருந்து வந்துள்ளது. கருணாநிதி எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுத்து விடவில்லை. என்றாலும் நிராகரிப்பும் செய்ததில்லை. அதனாலேயே அவர் தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்டார். ஆனால் தற்பொழுது தன்னுடைய பதவியை காப்பாற்றும் பொருட்டு தமிழின அழிப்பிற்கு (Genocide) துணையாக நிற்கிறார்.
மைய காங்கிரஸ் அரசு ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஒட்டுமொத்த தமிழினத்தையே ஈழத்தில் அழித்துக் கொண்டிருக்கிறது. சோனியா காந்தியின் கடைக்கண் பார்வைக்காக தமிழின அழிப்பிற்கு காங்கிரஸ் கட்சி துணை போகிறது. அந்த காங்கிரஸ் கட்சியின் தயவில் ஆட்சியை செய்து கொண்டிருக்கும் கருணாநிதி வெளிப்படையாகவே தமிழின அழிப்பிற்கு துணை செய்கிறார். இனி தமிழினத்தலைவராகவோ, ஏன் தொண்டனாகவோ இருக்க கூட கருணாநிதிக்கு எந்த தகுதியும் இல்லை.
திமுக ஒரு புறம் என்றால் அதிமுகவை பற்றி கேட்கவே வேண்டாம். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஈழப்பிரச்சனையில் எப்பொழுதுமே சிறீலங்கா அரசின் கொள்கையையே பின்பற்றி வந்திருக்கிறது. இன அழிப்பு ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட ஈழத்தமிழர்கள் என எவரும் இல்லை என ஜெயலலிதா ஆணவத்துடன் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் ஆணவம், கருணாநிதியின் அலட்சியம் எங்கிருந்து பிறக்கிறது ?
ஈழத்தமிழர்களின் பிரச்சனை தேர்தல் பிரச்சனையாக மாறாது என்ற நம்பிக்கையும், அதிமுக/திமுக தவிர வேறு மாற்று கட்சிகள் இல்லாத நிலையும் தான் இந்த இரண்டு கட்சிகளையும் மக்கள் விரோதப் போக்கிற்கு தூண்டியுள்ளது.
மூன்றாவது அணி அமைக்கப் போவதாக கூறிய விஜயகாந்த் கொள்கை ரீதியில் திமுக/அதிமுக ஆகிய இரண்டு அணிகளுக்கும் தனக்கும் எவ்வித வித்யாசமும் இல்லை என்பதை தொடர்ந்து நிருபித்து வந்துள்ளார். கடந்த பல மாதங்களாக ஈழப்பிரச்சனை குறித்து எதுவுமே பேசாத விஜயகாந்த் தற்பொழுது மக்கள் மத்தியில் ஈழப்பிரச்சனை குறித்து எழுந்திருக்கும் விழிப்புணர்வை கண்டு அஞ்சி ஈழப்பிரச்சனைக்காக போராட்டங்களை முன்வைக்கிறார். விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்த பொழுது தங்களை இந்திய தேசியவாதிகளாகவும், ஹிந்தி மொழி ஆதரவாளர்களாகவும் காட்டி தமிழ் இன எதிர்ப்பாளர்களின் ஆதரவுக்காக காத்து நின்றனர்.
இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் தமிழின எதிரிகளால் தமிழக அரசியல் நிறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்த அரசியல் கட்சிகளிடம் இருந்து நமக்கு மாற்றம் வேண்டும்.
தமிழகம் தற்பொழுது 1965ம் ஆண்டு இருந்த காலக்கட்டத்திற்கு பின்நோக்கி நகர்ந்து உள்ளது. மாணவர்கள் எழுச்சி கொண்டு தங்களுடைய அரசியல் தலைமையை மாற்ற துடித்துக் கொண்டுள்ளனர். மக்கள் மத்தியில் இந்திய மைய அரசாங்கம் மீதான வெறுப்பும், கோபமும் அதிகரித்து உள்ளது. மக்கள் மத்தியில் ஒரு மௌனப் புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அந்த மௌனப் புரட்சியை அரசியல் சக்தியாக மாற்றக் கூடிய தலைமை நமக்கு தற்பொழுது இல்லாமை தான் மிகப் பெரிய அவலத்தை தோற்றுவித்துள்ளது. ஆனால் வரலாற்றை புரட்டி பார்க்கும் பொழுது சோதனையான காலக்கட்டங்கள் தான் புதிய தலைமையையும், புதிய சிந்தனைகளையும், மாற்றங்களையும் கொடுத்திருக்கிறது. தமிழனுக்கு தற்பொழுது இருக்கின்ற சோதனையான காலக்கட்டத்தில் புதிய தலைமையை நாம் அடையாளம் காண வேண்டும். அதிமுக, திமுக, கொள்கைப் பிடிப்பு இல்லாத நடிகர்களை புறந்தள்ளி நமக்கென ஒரு புதிய தலைமையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான பங்களிப்பை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளங்களிலும் முன்னெடுக்க வேண்டும்.
இணையம் இன்று பல இளைஞர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக மாற்றியுள்ளது. அமெரிக்க தேர்தலில் கூட ஒபாமாவின் மாபெரும் வளர்ச்சிக்கு இணையம் துணை புரிந்திருக்கிறது. சாமானியனின் பேச்சுரிமையை இன்றைக்கு இணையம் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் மாற்றத்தை வேண்டிய ஒரு சிறிய முயற்சியாக ஒரு வலைப்பதிவு ஒன்றினை மாற்றத்திற்காக துவங்கியிருக்கிறோம். நண்பர்கள் குழுவாக தற்பொழுது இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சில ஆயிரம் வாசகர்கள் மட்டுமே கொண்ட வலைப்பதிவு மற்றும் இணைய வெளி மூலமாக இந்த முயற்சியை சாத்தியப்படுத்தி விட முடியாது. இந்த முயற்சி இணையத்தில் துவங்கி பல்வேறு தளங்களிலும் முன்னெடுக்கப் பட வேண்டும். இணையத்தளம், வலைப்பதிவு என்பதை தொடக்கமாக மட்டும் கொண்டு வேறு பல தளங்களிலும் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.
அனைவரும் நம்மால் முடிந்த சிறிய முயற்சிகளை மேற்கொண்டால் தான் அது பெருகி மாற்றங்களை உண்டாக்கும். எனவே இந்த ”மாற்றம்” குழுவில் இணைந்து கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். “மாற்றம்” குழுவிற்கு உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறோம்.
எங்கள் இணையத்தள முகவரி : http://www.changefortn.org
இந்த மாற்றம் குழுவில் இணைந்து கொள்ள வலைப்பதிவு நண்பர்களை அழைக்கிறோம்.
மாற்றத்திற்காக கட்டுரைகளை/கருத்துக்களை அனுப்ப விரும்புவோர் changefortn@gmail.com என்ற முகவரிக்கு கட்டுரைகளையும், கருத்துக்களையும் அனுப்பலாம்
புதியதோர் தமிழகத்தை அமைக்க வாருங்கள்...
வணக்கம்
சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்
ஈழம்
என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன
ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்
காஷ்மீர்
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு
அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி
அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்
பிற கட்டுரைகள்
தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்
மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com
Sunday, February 22, 2009
மாற்றம் : தமிழக அரசியல் தலைமையை மாற்றுவோம்
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 2/22/2009 08:12:00 PM
குறிச்சொற்கள் CHANGE, தமிழகத்திற்கு மாற்றம், மாற்றம்