தமிழக தேர்தல் கூட்டணி கணக்குகள், வியூகங்கள்

தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. கூட்டணிகளில் எத்தனை இடங்கள், எந்த தொகுதிகள் என்பதில் இருக்கும் அக்கறையும், மந்திரிசபையில் போராடி சம்பாதிக்க கூடிய துறைகளை பெறுவதில் இருக்கும் கரிசனமும் தமிழக அரசியல்வாதிகளுக்கு மக்களின் பிரச்சனைகளுக்காகவோ, ஈழத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ் மக்களின் நிலைக்காகவோ ஏற்படுவதில்லை. தமிழர்களின் போராட்டங்களை முன்னெடுப்பதாக காட்டிக் கொண்ட கருணாநிதி, ராமதாஸ் ஆகிய இருவரின் லட்சணமும் தெளிவாகவே சமீபகாலங்களில் வெளிப்பட்டு இருக்கிறது. சோனியாவை மிரட்டி தனக்கு தேவைப்பட்ட இலாக்காக்களை பெற்ற தமிழின தலைவர் தமிழன் செத்துக் கொண்டிருக்கும் நிலையில் ராஜனாமா நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார். கருணாநிதி ஒரு புறம் என்றால், கருணாநிதியின் தமிழின அரசியலை தன் கையில் எடுத்துக் கொள்ள முனையும் ராமதாஸ், தமிழின அழிப்பை செய்து வரும் காங்கிரஸ் கட்சியிடம் இடங்களுக்காக பேரம் நடத்திக் கொண்டிருந்தார். மற்றொரு தமிழின எதிரியான ஜெயலலிதாவிடம் தற்பொழுது உறவாடுகிறார். வைகோ குறித்து எதுவும் பேச தேவையில்லை என நினைக்கிறேன். கருணாநிதியை எதிர்க்க அவருக்கு ஜெயலலிதாவிடம் இருப்பதை தவிர வேறு வழி இல்லை. ராமதாஸ், வைகோ போன்ற சந்தர்ப்பவாதிகளை நம்பி ஈழத்தமிழர் போராட்டத்தில் இறங்கிய திருமாவின் நிலை தான் பரிதாபகரமாக இருந்தது. காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகளை வெளியேற்ற வலியூறுத்திக் கொண்டிருக்க, வடமாவட்டங்களில் திருமாவின் செல்வாக்கினை பயன்படுத்திக் கொள்ள கருணாநிதி திருமாவை தன்னிடம் தக்கவைத்துக் கொண்டார்.

இந்த தேர்தலில் நீண்டு கொண்டே இருந்த பாமகவின் பேரங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா என பாமக பேரங்களை நடத்திக் கொண்டிருந்தாலும் இறுதியாக எந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதோ அந்தக் கூட்டணிக்கே தாவும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அந்த வகையில் தற்பொழுது திமுக-காங்கிரஸ் கூட்டணியைக் காட்டிலும் அதிமுக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படும் சூழ்நிலையில், பாமக எப்படியும் அதிமுகவிற்கு தான் செல்லும் என்பது ஆரம்பம் முதலே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால் இந்த முறை அன்புமணி திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக நின்றதால் பாமக அதிமுக பக்கம் சென்றடைய காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.

தற்போதைய அரசியல் கூட்டணியை கவனித்தால் 1998ம் ஆண்டு இருந்த தேர்தல் கூட்டணியுடன் ஒப்பிட முடியும். 1996ம் ஆண்டு தேர்தலில் கடுமையான தோல்வியை எதிர்கொண்ட ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அதிமுகவின் பலமான வாக்கு வங்கி ஜெயலலிதாவின் சர்வாதிகார நடவடிக்கைகளால் சரியத்தொடங்கி இருந்தது. எம்.ஜி.ஆர் என்ற கவர்ச்சியான தலைவரால் எழுப்பபட்ட அந்த மாபெரும் வாக்கு வங்கியை ஜெயலலிதா தன்னுடைய நடவடிக்கைகளால் இழந்தார். இதனால் திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் அப்பொழுது பலமான கூட்டணியாக இருந்தது. 1996ம் ஆண்டில் கடுமையாக தோல்வி அடைந்த ஜெயலலிதாவிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய மைய அரசு கவிழ்ந்து தேர்தல் வந்தது ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது.
மிகவும் பலமாக இருந்த திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகளின் வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று நினைத்தார். தமிழகத்தின் வடமாவட்டங்களில் பலமாக இருந்த பாமகவும், தென்மாவட்டங்களில் பலமாக இருக்கும் மதிமுகவும் கொண்டு வரப்பட்டால் தன்னுடைய இழந்த வாக்கு வங்கியை சரிக்கட்டி விடலாம் என்பது ஜெயலலிதாவின் கணக்கு.

சிறிய கட்சிகளான பாமகவும், மதிமுகவும் தங்களுடைய தனிப்பட்ட வாக்கு வங்கிகள் மூலம் ”தனித்து நின்று” பெரிய அளவுக்கு வெற்றிகளை பெற முடியாது, கூட்டணி மூலமே வெற்றி பெற முடியும் என்ற உண்மையை உணரத்தொடங்கியிருந்த நேரம் அது. பாமக, மதிமுக போன்ற கட்சிகள் தொடர்ச்சியாக தனித்து நின்று தோல்வியை எதிர்கொண்டு இருந்தன. இப்படி ஜெயலலிதா, பாமக, மதிமுக ஆகியவற்றின் தனிப்பட்ட நலன்களுக்காவும், Survivalலுக்காகவும் அமைந்தது தான் 1998ம் ஆண்டு கூட்டணி. தேசிய கட்சியான பாரதீய ஜனதாவுக்கு தமிழகத்தில் எந்த பலமும் இல்லை. ஆனால் பிரச்சாரத்திற்கு உதவும் என்பதால் பாஜகவை ஜெயலலிதா இணைத்துக் கொண்டார்.

திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளை மையப்படுத்தியே சென்று கொண்டிருந்த தமிழக அரசியலில் சிறிய கட்சிகளின் முக்கியத்துவத்தை அதிகரித்து கூட்டணி அரசியலை கொண்டு வந்தவர் ஜெயலலிதா தான்.

அதன் விளைவு ?

பல சிறிய கட்சிகளின் முக்கியத்துவம் தொடர்ச்சியாக அதிகரித்து தற்பொழுது தமிழக அரசியல் முன் எப்பொழுதுதையும் விட குழம்பிய குட்டையாக காட்சி அளிக்கிறது.
கொள்கைகளோ, மக்களின் நலமோ, தமிழர்களின் வாழ்வுரிமையோ இன்றைக்கு முக்கியம் இல்லை. எத்தனை இடங்கள், எத்தனை இடங்களில் வெற்றி பெற முடியும், வெற்றி பெற்றால் மைய அரசில் எந்த துறை பெறலாம், எந்த துறையை பெற்றால் அதிகம் சம்பாதிக்கலாம், அடுத்து எந்த மகனை, மகளை, பேரனை, பேத்தியை, கொள்ளுப்பேரனை, கொள்ளுப்பேத்தியை அரசியலுக்கு கொண்டு வரலாம் என்பதில் தான் அரசியல் கட்சி தலைவர்களின் கவனம் உள்ளது. இந்திய அரசியல் என்பது நவீன மன்னராட்சி காலமாக மாறி விட்டது.

மக்களை உலகமயமாக்கிய பொருளாதாரம் நோக்கி திருப்புவதன் மூலம் தங்களுடைய பணப்பெட்டியை நிரப்பிக் கொள்வதும், மக்களுக்கு ஒரு போலியான இந்திய பொருளாதார வளர்ச்சியை சுட்டிக் காட்டி மக்களை அப்படியே ஆட்டு மந்தைகளாக வைத்திருப்பதும் தான் அரசியல்வாதிகளின் முக்கியமான வேலைத்திட்டம். இதில் இந்தக் கட்சி தலைவர், அந்தக் கட்சி தலைவர் என்ற பேதங்கள் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கட்சியின் கடைக்கோடி தொண்டனும், ஓட்டளிக்கும் கடைக்கோடி தமிழனும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. மைய அரசில் அமைச்சராக இருந்து சம்பாதித்த பணம் தண்ணீராக செலவழிக்கப்படும். யார் அதிகம் பணத்தை வாரி இறைக்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி என்பது தான் இன்றைய தமிழக தேர்தல் அரசியலாக உள்ளது.

இங்கே மக்களின் பிரச்சனைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. சென்ற தேர்தலில் இலவச கலர் டிவி முக்கிய தேர்தல் பிரச்சாரம் என்றால் இந்த தேர்தலில் எந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க போகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். (வெற்றி பெற்ற பிறகு ஒரு சில இடங்களில் கொடுக்கப்பட்ட இலவச டிவி இப்பொழுது வேகமாக பட்டுவாடா செய்யப்படும் சாத்தியம் உள்ளது). இவ்வாறாக தமிழக மக்கள் தொடர்ச்சியாக ஆட்டுமந்தைகளாக ஆக்கப்பட்டு விட்டார்கள். தமிழக மக்களை அவர்களுடைய முக்கிய வாழ்வியல் பிரச்சனைகளில் இருந்து மிக எளிதாக திசை திருப்பி விட முடியும். 2006ம் ஆண்டு தேர்தலில் சமமாக இருந்த தேர்தல் களத்தை இலவச கலர் டிவி திமுக கூட்டணி பக்கம் லேசாக சாய்த்தது. அதுவே திமுக கூட்டணி அதிக இடங்களை பெற போதுமானதாக இருந்தது. திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளும் தமிழக மக்களின் பரிதாப நிலையையே நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

இந்த சமயத்தில் மிகவும் பிரிதாபத்திற்குரியவர்கள் யார் ? மக்கள் அல்ல, அரசியல்வாதிகள் நிச்சயமாக அல்ல.

மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் தமிழனின் நிலை குறித்தும், இந்த சமூகத்தை குறித்தும் கவலைப்படுபவர்களும், சினிமா பக்கங்களை படிக்காமல் இந்த வறட்சியான கட்டுரையை கூட பொறுமையுடன் வாசித்து கொண்டிருக்கும் நீங்களும், வேலைவெட்டி இல்லாமல் இதனை எழுதிக்கொண்டிருக்கும் நானும் தான்.

************

தற்போதைய அரசியல் கூட்டணியை 1998ம் ஆண்டு இருந்த தேர்தல் கூட்டணியுடன் ஒப்பிட முடியும். திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் என்பது தான் 1998ம் ஆண்டு இருந்த கூட்டணி. தற்பொழுது அது திமுக, காங்கிரஸ். கூடுதலாக திருமா தற்பொழுது கூட்டணியில் இருக்கிறார். அதிமுக கூட்டணியில் அப்பொழுது பாமக, மதிமுக, பாஜக இருந்தது. தற்பொழுது பாஜகவிற்கு பதிலாக இடதுசாரிகள் இருக்கின்றனர்.

1998ல் கூட்டணியில் இருந்த கட்சிகளின் அடிப்படையில் தற்போதைய சூழ்நிலை ஒரே மாதிரியாக இருந்தாலும், கட்சிகளின் பலம் இரண்டு தரப்பிலும் சரிந்திருக்கிறது. திமுக, அதிமுக இரண்டுமே தங்களுடைய பாரம்பரிய பலத்தை இழந்து இருக்கின்றன. சிறிய கட்சிகளான பாமக, மதிமுக போன்றவையும் 1998ல் இருந்த தங்களுடைய பலத்தில் இருந்து கணிசமான பலத்தை இழந்து இருக்கின்றன. இதில் மற்றொரு புதிய வியூகமாக விஜயகாந்த் உருவாகி இருக்கிறார்.

திமுக கூட்டணி

திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான ஆளும்கட்சிக்கு எதிரான காரணிகள் (anti-incumbency factor) இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒரு முக்கியமான பிரச்சனையாக இருக்கும். தனிப்பட்ட பலத்தில் திமுகவை விட அதிமுக பலமான கட்சி என்பதை மறுக்க முடியாது. திமுக வடமாவட்டங்களில் மிகவும் பலமான கட்சி என்றால் அதிமுக தென்மாவட்டங்களில் பலமான கட்சி. ஆனால் கடந்த சில வருடங்களில் மு.க.அழகிரியின் அதிரடி நடவடிக்கைகளால் தென்மாவட்டங்களில் திமுக முன்பை விட பலமாக உள்ளதாக கருதப்படுகிறது. மு.க.அழகிரியை திமுகவிற்கு பலம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். பலவீனம் என கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் வடமாவட்டங்களைச் சேர்ந்த மிகவும் பலமான தலைவர்களான பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர்களால் வடமாவட்டங்களில் பலமாக இருந்த திமுக தென்மாவட்டங்களில் சற்று தடுமாறியது உண்மையே. மதிமுகவின் பிளவும் திமுகவை பலவீனமடைய செய்தது. ஆனால் கடந்த சில வருடங்களில் அழகிரி திமுகவை பலப்படுத்தியிருக்கிறார் என்ற கருத்து பரவலாக உண்டு. இதனை இந்த தேர்தல் முடிவுகளே நமக்கு தெளிவுபடுத்த முடியும்.

இந்த தேர்தலில் வடமாவட்டங்களில் திமுக கூட்டணியும் பலமாகவே உள்ளது. பாமக அதிமுக பக்கம் சாய்ந்தது இழப்பு தான். என்றாலும் வடமாவட்டங்கள் எப்பொழுதுமே திமுகவின் பலமான பகுதி தான். அதனுடன் திருமாவின் பலமும் சேருகிறது. திருமாவிற்கு சிதம்பரம், கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் போன்ற பகுதிகளில் நல்ல பலம் உள்ளது. திமுகவின் பலத்துடன், திருமாவின் பலமும் சேரும் பொழுது வடமாவட்டங்களில் திமுகவிற்கு எதிராக இருக்கின்ற anti-incumbency factorயை கடந்தும் அதிமுக-பாமக கூட்டணி போராட வேண்டியிருக்கும். தவிரவும் விஜயகாந்த் கடந்த தேர்தலில் தன்னுடைய பலத்தை வடமாவட்டங்களில் நிருபித்து இருக்கிறார். திமுகவிற்கு எதிராக இருக்கும் ஓட்டுக்களை விஜயகாந்த் பிரிக்கும் பொழுது அதிமுக-பாமக கூட்டணி வெற்றி பெறுவது சுலபமாக இருக்காது.

காங்கிரசுக்கு ஒட்டு போடுபவர்கள் இருக்கிறார்கள். தொண்டர்கள் இல்லை என்று ஒரு காலத்தில் கூறப்பட்டது. அவ்வாறு கூறியே 10 ஆண்டுகளுக்கு மேல் ஓடி விட்டது. ஆனால் இன்னமும் காங்கிரஸ் தனக்கு ஆதரவு இருக்கிறது என்பதாக நம்பிக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட தலைவர்களின் செல்வாக்கு காரணமாக ஒரு சில இடங்களில் காங்கிரசுக்கு பலம் இருந்தாலும் அதன் பலம் மாநிலம் முழுவதும் பரவலானது அல்ல. அது எந்தளவுக்கு திமுகவிற்கு கைகொடுக்கும் என்பது கேள்விக்குரியது. இந்த தேர்தலில் அது தெளிவாகி விடும்.

அதிமுக கூட்டணி

அதிமுக பெரும்பாலும் தென்மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் பலமான கட்சி. வடமாவட்டங்களில் திமுகவுடன் ஒப்பிடும் பொழுது பலவீனமான கட்சி. தென்மாவட்டங்களில் ஒரு காலத்தில் மதிமுகவிற்கு நல்ல பலம் இருந்தது. மதிமுகவின் பலம் திமுகவை தென்மாவட்டங்களில் பலவீனப்படுத்தி இருந்தது. ஆனால் சமீபகாலங்களில் மதிமுகவின் பலம் பெரிய அளவில் சரிந்து விட்டது. மு.க.அழகிரியால் தென்மாவட்டங்களில் திமுகவின் பலம் அதிகரித்து இருக்கிறது. இந் நிலையில் 1998ம் ஆண்டு இருந்ததை போல அதிமுக-மதிமுக தென்மாவட்டங்களில் பலமான கூட்டணியாக கூற முடியாது.

வடமாவட்டங்களைப் பொறுத்தவரை அதிமுக சற்று பலவீனமான கட்சி. இன்னும் சொல்லப்போனால் சில இடங்களில் (சிதம்பரம் போன்ற பகுதிகள்) திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு அடுத்த நான்காவது இடம் தான் அதிமுகவிற்கு என சொல்ல முடியும். ஆனால் பாமகவுடன் சேரும் பொழுது அந்தக் கூட்டணி வடமாவட்டங்களில் பலம் பெறுகிறது.

பாமகவின் பலம் வடமாவட்டங்களே. வடமாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாமகவுக்கு நல்ல பலம் உண்டு. அது தேர்தல் கூட்டணியுடன் சேரும் பொழுது அந்தக் கூட்டணி வடமாவட்டங்களில் பலம் பெறும் என்பது தேர்தல் கணக்கு. வன்னியர் வாக்கு வங்கி என்பது திமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளிடையே தான் உள்ளது. திமுகவின் வாக்கு வங்கியும் வடமாவட்டங்களில் வன்னியர்களை பெருமளவில் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பாமக வாக்கு வங்கியின் பெரும் பகுதி திமுகவில் இருந்து பிரிந்து வந்ததே ஆகும். இந்த வாக்கு வங்கி மறுபடியும் திமுக நோக்கி செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே தான் இந்த இரண்டு கட்சிகளுக்கும் எப்பொழுதும் பூசல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பாமக தன் வாக்கு வங்கியை சாதி அடிப்படையில் கொண்டு சென்று விடுமோ என்ற கவலை திமுகவிற்கு உண்டு. பெரிய கட்சியான திமுக தன்னை அழித்து விடுமோ என்ற அச்சம் பாமகவிற்கு உண்டு. இதனால் இரண்டு கட்சிகளும் தலைமை மட்டத்தில் தங்களுக்குள் தாக்கி கொள்வதன் மூலம் இரு கட்சியின் தொண்டர்கள் இடையே ஒரு சுவரினை எழுப்பி தங்களை தக்கவைத்துக் கொள்ள முனைகின்றனர். ராமதாஸ் அடிக்கடி கருணாநிதியை தாக்குவது இதன் அடிப்படையில் தான். இதனால் ஏற்பட்ட பலன் என்னவென்றால் தற்பொழுது இரண்டு கட்சி தொண்டர்களும் முட்டிக் கொண்டிருக்கின்றனர். ராமதாசிற்கு அது தான் தேவை.

பாமகவின் தற்போதைய பலம் 1996/1998ல் அது பெற்ற வாக்கு வங்கி கொண்டே கணிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு பிறகு அதன் வாக்கு வங்கி சரிந்திருக்கிறது. குறிப்பாக 2006 சட்டமன்ற தேர்தலில் பாமக தடுமாறியது. நான் மேலே கூறியுள்ளது போல பாமகவின் சரிவு என்பது திமுகவிற்கு பலம். அதனைக் கொண்டு பார்க்கும் பொழுது கூட்டணி அளவில் அதிமுக-பாமக என்பது திமுக-விசி-காங்கிரசுடன் ஒப்பிடக்கூடியதாகவே இருக்கும் என நான் நம்புகிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள் காங்கிரசுக்கு எதிராக வேலை செய்தால் அதிமுகவிற்கு அது சாதகமாகலாம்.

விஜயகாந்த்

விஜயகாந்த் திமுக, அதிமுகவிற்கு அடுத்து தமிழகம் முழுவதும் பரவலான வாக்கு பெறக்கூடியவராக வளர்ந்து வருகிறார். விஜயகாந்த் பேசுவது நகைச்சுவையான உளறலாக இருந்தாலும் அவரது அரசியல் பயணம் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டுகிறது. அவரது நகர்வுகள் ஒரு நீண்ட கால இலக்கை நோக்கி இருப்பது போன்றே தோன்றுகிறது. இந்த சரியான திட்டமிடல் மற்றும் வியூகங்கள் காரணமாகவே அவர் கடந்த தேர்தலில் 8% வாக்குகளை பெற்றார். அவரது Masterstroke என்றால் அது விருத்தாசலத்தில் போட்டியிட்டு வென்றதே. தற்போதைய தேர்தலிலும் அவரது அணுகுமுறை சரியான திசையிலேயே உள்ளது.

அதே நேரத்தில் அவர் கடந்த தேர்தலில் பெற்ற 8% வாக்குகளை அவரது வாக்கு வங்கியாக கருத முடியாது. விஜயகாந்த் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் இந்த முறை உயர்வதற்கும், சரிவதற்கும் சமமான வாய்ப்புகள் உண்டு. எனவே அவர் பெற்ற 8% என்பதே உறுதியான வாக்கு வங்கியாக முடியாது. அது 12% உயரவும் கூடும். 5%மாக குறையவும் கூடும்.

வாக்கு வங்கி என்பது தலைவர், கட்சி, சாதி இவை சார்ந்த விசுவாசத்தின் அடிப்படையில் உருவாகுவதே ஆகும். கருணாநிதியின் வசீகரம், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கவர்ச்சி போன்றவை காரணமாக இருக்கும் வாக்கு வங்கி அசைக்க முடியாமல் இருந்து வந்திருக்கிறது. என்னுடைய ஓட்டு எப்பொழுதும் உதயசூரியனுக்கு தான், இரட்டை இலைக்கு தான் என கூறுபவர்கள் பல காலமாக இருக்கிறார்கள். அந்தளவுக்கு ஒரு தலைமை, கட்சியை சார்ந்த விசுவாசமான வாக்கு வங்கி தான் திமுக, அதிமுகவினுடையது. அது போல பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை சாதி சார்ந்தவை. அதுவும் ஒரு விசுவாசமான வாக்கு வங்கியே.

ஆனால் விஜயகாந்தின் வாக்குகள் திசை மாறக்கூடியது. திமுக, அதிமுகவிற்க்கு பதிலாக மற்றொரு கட்சி வேண்டும் என நினைப்பவர்களின் வாக்குகளே விஜயகாந்த்திற்கு விழுகின்றன. இவை தேர்தல் களநிலையை பொறுத்தது. தேர்தல் களநிலை மாறும் பொழுது விஜயகாந்த் பெறும் வாக்கு விகிதங்களும் மாறும். உதாரணமாக ஒரு பெரிய அலை அடித்தால் விஜயகாந்த்திற்கு விழும் வாக்குகள் வேறு திசையில் போய் விடும். தவிரவும் மைய அரசுக்காக தேர்தல் நடக்கும் பொழுது விஜயகாந்த்திற்கு என்ன முக்கியத்துவம் இருக்கும் என்ற கேள்வியும் உண்டு. மாநில அரசியல் என்னும் பொழுது அது வேறு விதமான தாக்கத்தை விஜயகாந்த்திற்கு ஏற்படுத்தும். இதனால் தான் விஜயகாந்த் தேர்தலை புறக்கணிப்போம் என சில காலமாக பேசிக் கொண்டிருந்தார் என நான் நம்புகிறேன்.

விஜயகாந்த் எங்கிருந்து வாக்குகளை பெறுவார் என்பதையும் கவனிக்க வேண்டும். புதியதாக வாக்களிக்க வருபவர்களும், எந்தக் கட்சியையும் சாராதவர்களும் தான் விஜயகாந்திற்கு அதிகளவில் வாக்களிக்க போகிறவர்கள். கடந்த தேர்தலில் அவருக்கு வாக்களித்தவர்கள் இம்முறையும் அவருக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வியும் உண்டு.

விஜயகாந்த எந்தக் கட்சியின் வாக்கு வங்கியை பெறுவார் என்ற கேள்வியும் உண்டு.

பாரம்பரியமாக ஒரு கட்சிக்கு வாக்களித்து கொண்டிருக்கும் பெரும்பாலானோர் திடீரென்று ஒரு புதிய கட்சிக்கு வாக்களிப்பதில்லை. கவர்ச்சியின் காரணமாக சிலர் வாக்களிக்க கூடுமே தவிர பெரிய கட்சியின் வாக்குகள் விஜயகாந்த்திற்கு மாறாது. ஆனால் கூர்ந்து கவனிக்கும் பொழுது அதிமுக வாக்கு வங்கியை கவரக்கூடிய தன்மை விஜயகாந்த்திற்கு உண்டு. ஏனெனில் சினிமா கவர்ச்சியால் கட்டமைக்கப்பட்டதே அதிமுகவின் வாக்கு வங்கி. அதை விஜயகாந்த் பெறுவது சுலபம். மாறாக திமுகவின் வாக்கு வங்கியை பெறுவது அவ்வளவு சுலபமானது அல்ல. என்ன தான் ஈழப்பிரச்சனையை சார்ந்து திமுக விமர்சிக்கப்பட்டாலும் திராவிட அரசியல் என்னும் பொழுது பெரும்பாலானோர் திமுகவை நோக்கியே செல்கின்றனர். ஸ்டாலின், அழகிரி செயல்பாடுகள் எதிர்காலத்தில் அதனை மாற்றலாம். ஆனால் குறுகிய காலத்தில் திமுகவின் பலம் சரியப்போவதில்லை.


வேறு கட்சிகள்

வேறு பல உதிரிக் கட்சிகள் இருந்தாலும், இந்த தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொருவரும் இருக்கிறார். அவர் தான் சரத்குமார். தென்மாவட்டங்களில் இருக்கும் நாடார் சமூகத்தை குறிவைத்து கட்சி தொடங்கியிருக்கும் சரத்குமார் எந்தளவுக்கு நாடார் சமூக ஓட்டுக்களை பெறுவார் என்ற கேள்வியும் தற்பொழுது உள்ளது. சரத்குமார் இது வரையில் தன்னை ஒரு அரசியல் சக்தியாக நிருபிக்கவில்லை. சரத்குமார் நாடார் சமூகத்தை மையமாக வைத்து கட்சி தொடங்கும் முன்பே நாடார் சமூகம் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் நடந்திருக்கின்றன. தினத்தந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் தலைமையில் ”சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்” என்ற அமைப்பு சரத்குமார் திமுகவில் இருந்த காலங்களிலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட திருநெல்வேலி மாநாட்டிற்கு நானும் சென்றிருக்கிறேன். இது நாடார் சமூகத்தை ஒன்று திரட்டி சிவந்தி ஆதித்தன் அரசியலில் இறங்க செய்யும் ஒரு முயற்சி என நான் கருதினேன். ஆனால் ஏனோ சிவந்தி ஆதித்தன் அரசியலில் இறங்க வில்லை. ஆனால் அவரது குடும்பத்தை சேர்ந்த சரத்குமாரை இறக்கி விட்டிருக்கிறார். நாடார் சமூகம் மத்தியில் சிவந்தி ஆதித்தனுக்கு நல்ல மரியாதை உண்டு. எனவே ஒரு சில தொகுதிகளில் சரத்குமாரை உதாசீனப்படுத்தி விட முடியாது என்பதே என்னுடைய எண்ணம். ஆனால் மாநில அளவில் கூட்டணியின் வெற்றி பலத்தை நிர்ணயிக்கும் பலம் இவருக்கு இல்லை.


கூட்டணி அளவில் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஆளும்கட்சிக்கு எதிரான காரணிகள் (anti-incumbency factor) திமுகவிற்கு பலவீனமானதே. அதே நேரத்தில் அது மட்டுமே தேர்தலில் பெரிய வெற்றியை தற்பொழுது கொடுத்து விட முடியாது. இந்த தேர்தலில் இரு கட்சிகளின் வெற்றி தோல்விகளை முடிவு செய்யக்கூடியாக சக்தியாக விஜயகாந்த் இருப்பார் என தோன்றுகிறது. விஜயகாந்த அதிகளவில் ஓட்டுக்களைப் பிரித்தால் திமுக, அதிமுக கூட்டணி இரண்டும் சமமான இடங்களை பெற முடியும். விஜயகாந்த் அதிகமாக ஓட்டுக்களை பிரிக்காவிட்டால் அதிமுக வெற்றி பெறும்.

கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் பிரித்த 8% வாக்கு தான் தற்போதைய திமுக அரசை மைனாரிட்டி அரசாக்கியது.

விஜயகாந்த்தின் முந்தைய 8%, தற்பொழுது 12% என்ற அளவுக்கு உயர்ந்தால் திமுகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும்.

8%, 5-6% என்றானால் அதிமுகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும்

முழுமையான 40 யாருக்கும் கிடைக்காது

மக்களுக்கு ?
சில்லறை காசும், பட்டை நாமமும் கிடைக்கும்.