துப்பாக்கிகள் மீதான காதல்

ஆயுதங்கள் இல்லாதவர்களை தங்களை விட மிகக் கீழாக நினைக்கும் போக்கும் ஏற்பட்டு விடுகிறது. உலகின் பல இடங்களில் நடக்கும் போராட்டங்களை கவனிக்கும் பொழுது இதனை நான் உணர்ந்திருக்கிறேன். ஈழம் தொடங்கி பல இடங்களில் நடக்கும் போராட்டங்கள் இதையே நமக்கு கூறுகின்றன. இத்தகைய போராட்ட பகுதிகளில் இருக்கும் சாமானிய மக்கள் துப்பாக்கிகளை வெறுக்கவே செய்வார்கள்.
ஆனால் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் துப்பாக்கிகளை நேசிக்கும் பெருவாரியான மக்கள் இருக்கும் நாடு ஒன்றும் இருக்கிறது. அது வேறு எதுவும் இல்லை. அமெரிக்கா தான்.
அமெரிக்காவில் சுமாராக 200 மில்லியன் (20 கோடி) துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளதாக தெரிகிறது. அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் பெரும்பாலானோர்களிடம் துப்பாக்கி இருக்கிறது. அமெரிக்காவில் துப்பாக்கிகள் வைத்து கொள்வது, கருக்கலைப்பு போன்றவை முக்கிய சமூக பிரச்சனையாக உள்ளன. தேர்தல்களிலும் இது எதிரொலிக்கும். துப்பாக்கிகளை தடை செய்யும் எந்த சட்டத்தையும் கடுமையாக எதிர்க்கும் ஒரு பெரிய கூட்டம் இங்கு இருக்கிறது. மிகவும் வலுவான நிலையில் 2000ம் வருட தேர்தலில் இருந்த அல்கோர் தோல்வியுற்றதற்கு அவர் மீது கன்சர்வேட்டிவ்கள் முன்வைத்த மோசமான பிரச்சாரங்கள் முக்கியமான காரணம். அவர் மீது முன்வைக்கப்பட்ட பல பிரச்சாரங்களில் அவர் துப்பாக்கிகளை தடை செய்யும் சட்டத்தினை கொண்டு வருவார் என்று முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரமும் ஒன்று. ஆரம்பத்தில் ஒபாமா கூட துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும், கடுமையான சட்டதிட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தவர் தான். சிக்காகோ சூழலில் வளர்ந்த ஒபாமா அங்கு பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மிக சகஜமாக துப்பாக்கிகளில் சுட்டுக் கொண்டு இறந்து போகும் சூழ்நிலையில் அது குறித்த கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தார். ஆனால் அது தன்னுடைய தேர்தல் வெற்றிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற நோக்கில் அதனை தீவிரமாக வலியுறுத்தாமல் மேலோட்டமாக அது குறித்து பூசிமொழுகி பிரச்சாரம் செய்தார்.
ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவென்றால் அமெரிக்க உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு தனிநபர்கள் துப்பாக்கிகளை வைத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதை தொடர்ந்து முன் எப்பொழுதையும் விட துப்பாக்கிகளின் புழக்கம் அமெரிக்காவில் அதிகரித்து இருப்பதாக துப்பாக்கிகளை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். கடந்த சில வருடங்களில் எத்தனை துப்பாக்கிச் சூடுகள் என்று எண்ணி பார்த்தால் கணக்கு வழக்கே இல்லை. 10, 15 பேர் ஒரு இடத்தில் இறந்தால் தான் இந்த துப்பாக்கிச் சூடுகள் பற்றி செய்தி வெளியே தெரிய வரும். சிறிய துப்பாக்கிச் சூடுகள் பற்றிய செய்திகள் எல்லாம் வெளியே வராது.
ரோட்டில் நடந்து செல்லுபவரிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிக்கும் சம்பவங்கள் இங்கே வெகு சகஜம். அதுவும் டெக்சாஸ் போன்ற பகுதிகளில் மிக அதிகம். டெக்சாசுக்கு புதியதாக வந்த பொழுது நாங்கள் கேள்விப்பட்ட தகவல்கள் உண்மையில் அதிர்ச்சி அடைய வைத்தன. நியூஜெர்சியில் இது போன்ற சம்பவங்கள் மிகவும் குறைவு. வீட்டில் இருந்த ஒரு இந்திய நண்பரின் வீட்டு கதவை தட்டி இருக்கிறார்கள். கதவை திறந்தவுடன் நெற்றிக்கு நேராக துப்பாக்கி நீட்டப்பட்டு பணம் கேட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பர்சில் இருக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு போய் கொண்டே இருப்பார்கள். டெக்சாஸ் போன்ற பகுதிகளில் திருட்டும் அதிகம். இந்தியர்கள் வீடுகளில் நகைகள் இருக்கும் என்பது பெரிய ரகசியம் அல்ல. நம்மவர்கள் ரொம்ப புத்திசாலித்தனமாக வீட்டின் சந்து பொந்துகளில் மறைத்து வைப்பார்கள். ஆனால் இங்கு திருட வருபவர்கள் மெட்டல் டிடக்டருடன் (Metal Detector) வருவார்களாம். சில நிமிடங்களில் வீட்டில் இருக்கும் மொத்த நகையையும் எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்கள். இது ஏதோ ஒரு சில இடங்களில் நடக்கும் கதைகள் அல்ல. மிக சகஜமாக டெக்சாசில் அடிக்கடி கேள்விப்படும் தகவல்களாக உள்ளது. இங்கு இருக்கும் அப்பார்ட்மெண்ட்களில் துப்பாக்கிச் சூடுகள் இல்லாத அப்பர்ட்மெண்ட் எது என தேட வேண்டியிருக்கும். நியூஜெர்சியில் இத்தனை மோசம் இல்லை.
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் ஆண்டு தோறும் பல்வேறு துப்பாக்கிச்சூடுகளிலும், துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டும் இறக்கின்றனர். இவற்றில் நிறைய குழந்தைகளும் உண்டு என்பது வேதனை அளிக்கும் உண்மை. அமெரிக்க வரலாற்றில் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் இவ்வளவுக்கு பிறகும் துப்பாக்கிகளை கட்டுப்படுத்த அமெரிக்க அரசியல்வாதிகளால் ஒரு வலுவான சட்டத்தை கூட கொண்டு வரமுடியவில்லை. மக்களின் எதிர்ப்பு அத்தகையது. இதிலே கன்சர்வேட்டிவ்-லிபரல் இடையே கொள்கை ரீதியிலான வேறுபாடுகளும் உண்டு. ஒபாமா துப்பாக்கிகளை பறித்து விடுவார் என மெக்கெயின் பிரச்சாரம் செய்தார்.
மக்களுக்கு துப்பாக்கிகள் மீது அப்படி என்ன காதல் ?

துப்பாக்கிகள் அமெரிக்காவின் கலச்சாரத்தில் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. அமெரிக்காவில் வெள்ளையர்கள் குடியேறிய பொழுது இது அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்ததால் காட்டு விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக துப்பாக்கிகளை வைத்திருக்க தொடங்கினர். அது தவிர செவ்விந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும் துப்பாக்கிகள் வீட்டின் ஒரு அங்கமாக மாறியதாக கூறப்படுகிறது. இவை தவிர ஆரம்பகாலங்களில் காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுக்கள், காடுகளில் இருந்து தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு வர ஒரு பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக துப்பாக்கிகள் சகஜமாக இருந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்க அரசியல் சட்டத்தில் இரண்டாம் சட்டதிருத்தம் அமெரிக்க மக்கள் துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளவதை வலியுறுத்துகிறது.
A well regulated militia being necessary to the security of a free State, the right of the People to keep and bear arms shall not be infringed.
இந்த இரண்டாம் சட்டதிருத்தம் அமெரிக்காவின் மிகவும் சர்ச்சைக்குரிய சட்டங்களில் ஒன்று. ஆனால் ஒவ்வொரு முறை துப்பாக்கிகளை தடை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் பொழுதும் துப்பாக்கிகளை ஆதரிக்கும் குழுக்கள் இந்த சட்டத்தை சுட்டிகாட்டி துப்பாக்கிகளை பறிப்பது தங்களது தனிமனித உரிமையை பறிப்பதாகும் என கடுமையாக எதிர்க்கின்றன. இந்த சட்டதிட்டம் எவ்வாறான சூழ்நிலையில் கொண்டு வரப்பட்டது, ஏன் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து பல்வேறு பார்வைகள் உள்ளன. அமெரிக்கா மீது பிற நாடுகள் போர் எடுத்தால் ஆயுதங்களை பெருமளவில் கொண்டிருக்கும் மக்கள் அதனை எதிர்த்து போராட முடியும் என்பதே இதன் பொருள். இன்றைய சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு அத்தகைய நெருக்கடி ஏற்படப்போவதில்லை. அதனால் துப்பாக்கிகளுக்கு அவசியமும் இல்லை.
ஆனால் துப்பாக்கிகளை ஆதரிப்பவர்கள் சமூக விரோதிகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காகவே துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள வேண்டும் என அரசியல் சட்டம் வலியுறுத்துவதாக கூறுகின்றனர். தங்களுடைய பாதுகாப்பிற்கு துப்பாக்கிகள் அவசியம் எனவும் மக்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக பல வீடுகளில் துப்பாக்கிகள் நிச்சயம் இருக்கும் என்ற நிலை தான் உள்ளது. இப்படி புழக்கத்தில் இருக்கும் துப்பாக்கிகள் தான் பல நேரங்களில் கிரிமினல்கள் கைகளிலும், மனநிலை சரியில்லாதவர்கள் கைகளிலும் சிக்கி விடுகிறது. அதனால் பல நேரங்களில் பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு தொடர்கதையாகவே உள்ளது.
இது தவிர மிக முக்கிய பிரச்சனையாக வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு துப்பாக்கிகளை கையாளுவது மிக சகஜமாக சிறு வயதிலேயே தெரிந்து விடுகிறது. துப்பாக்கிகள் வைத்துக் கொள்வது ஒரு கலாச்சாரமாகவே உள்ளதால் பெற்றோர்களே குழந்தைகளுக்கு துப்பாக்கி பயிற்சிகளை கொடுக்கிறார்கள். வீட்டில் இருக்கும் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். அங்கு ஏற்படும் சிறு பூசல்களுக்கு கூட துப்பாக்கிகள் வெடிக்கின்றன. பல குழந்தைகள் இறக்கின்றனர். சிகாகோ நகரில் ஒரு வருடத்தில் சுமார் 30ம் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் துப்பாக்கிச் சூட்டில் இறந்திருக்கிறார்கள் என ஒபாமா ஒரு தேர்தல் விவாதத்தில் கூறினார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வாறான துப்பாக்கிச் சூடுகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர். அதனால் துப்பாக்கிகளை கட்டுப்படுத்துவதை எதிர்க்கிறார்கள். தங்களுடைய வேலையிடங்களுக்கு (அலுவலகங்களுக்கு) துப்பாக்கிகள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளன. யாராவது அலுவலகத்தில் திடீரென்று நுழைந்து சுட தொடங்கினால் என்ன செய்வது ? எனவே எங்களுடைய பாதுகாப்பிற்காக துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே இவர்களது வாதம். இங்கே ஒரு சில முக்கியமான அரசு அலுவலகங்களில் மெட்டல் டிடக்கர் சோதனைக்கு பிறகே அனுமதிப்பார்கள். என் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் தபால் நிலையத்தில் கூட மெட்டல் டிடக்கடர் சோதனைக்கு பிறகே அனுமதிப்பார்கள். ஆரம்பத்தில் இந்தளவுக்கு பயங்கரவாத பயம் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கிறதோ என தோன்றியது. ஆனால் பிறகு தான் அதன் உண்மையான காரணங்கள் புரிந்தது. யாராவது அரசு அலுவலகங்களில் தங்களுடைய கோபத்தை காட்டி விடக்கூடாது என்பதே இதற்கு காரணம். ஆனாலும் இதையும் மீறியே இங்கு துப்பாக்கிச் சூடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் நியூயார்க் குடியேற்ப்பு மையத்தில் நடந்தது போல.
இப்படி பல துப்பாக்கிச் சூடு இங்கே நடந்து கொண்டிருந்தாலும், துப்பாக்கிகளை ஆதரிப்பவர்கள் துப்பாக்கிகளை குறை சொல்வது தவறு என்கிறார்கள். துப்பாக்கிகள் தானாக சுடுவதில்லை. மனிதன் தான் சுடுகிறான். எனவே துப்பாக்கிகளை காரணமாக சொல்ல முடியாது. மனிதர்களின் மனநிலையும், சமூக நிலையும் மாறினால் இவ்வாறான துப்பாக்கிச் சூடுகள் நடைபெறாது என கூறுகிறார்கள். இந்த வாதமே வேடிக்கையாக உள்ளது. துப்பாக்கிகள் வைத்திருக்கும் பொழுது அதனை பயன்படுத்தும் நோக்கம் பல நேரங்களில் இயல்பாக எழுந்து விடுகிறது. மனிதன் மனம் இத்தகைய தன்மை மிக்கதே. மிக அரிதாக பயன்படுத்தும் நோக்கம் மறைந்து குடும்பச்சண்டைகள், வாக்குவாதங்கள் போன்றவற்றுக்கு கூட துப்பாக்கிகளை பயன்படுத்தும் நோக்கம் ஏற்பட்டு விடுகிறது. இது அமெரிக்கர்கள் என்றில்லாமல் இங்கு குடியேறும் அனைவருக்கும் பொருந்தும். சமீபகாலங்களில் துப்பாக்கி சூடு நடத்திய சிலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள் மத்தியிலும் இந்த கலாச்சாரம் வளர்ந்து வருவது ஆபத்தானது. கடந்தவாரம் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய குடும்ப பிரச்சனைக்காக தன்குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சுட்டுக் கொன்று தானும் சுட்டுக் கொண்டுஇறந்திருக்கிறார். இதில் குழந்தைகளும் அடக்கம்.
ஒவ்வொரு முறை அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு பெரியளவில் நடக்கும் பொழுது அன்று ஒரு நாள் மட்டும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்து பேசப்படும். துப்பாக்கிகளுக்கு ஆதரவான மற்றும் எதிரான வாதங்கள் முன்வைக்கப்படும். அடுத்த நாள் அது மறந்து போய் விடும். ஆரம்பத்தில் அமெரிக்காவில் இத்தகைய துப்பாக்கிச் சூடுகள் பற்றிய செய்திகள் வெளியாகும் பொழுது எனக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் இப்பொழுது வெகு சகஜமாகி விட்டது. ஐயோ, பாவம் என்ற எண்ணத்துடன் சேனல்களை மாற்றும் போக்கு ஏற்பட்டு விட்டது. கடந்த வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்த செய்தியை பார்த்து விட்டு அடுத்த சேனலுக்கு நகர்ந்த பொழுது தான் நாமும் அமெரிக்க மனப்பான்மைக்கு வந்து விட்டோமோ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.
************
துப்பாக்கி கலச்சாரம் (Gun Culture) என்பது பெரும்பாலான நாடுகளில் வன்முறையையே குறிக்கும். ஆனால் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பதற்கு வேறு பார்வையும் உண்டு. இங்கு துப்பாக்கிகள் வைத்திருப்பதும் ஒரு கலாச்சாரமே. மேலே கூறியிருப்பது போல அமெரிக்காவில் வெள்ளையர்கள் குடியேறிய காலங்களில் இருந்தே துப்பாக்கிகள் அமெரிக்காவின் வீடுகளில் சகஜமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி என்பது கலாச்சாரத்தின் ஒரு அங்கமும் கூட. இதன் பிரதிபலிப்பு தான் ஹாலிவுட் திரைப்படங்களில் துப்பாக்கிகள் சகஜமாக பயன்படுத்தபடுவதற்கு முக்கிய காரணம். ஆனால் ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்கிறேன் எனக் கூறி தமிழ் சினிமாவில் தற்பொழுது துப்பாக்கி காட்சிகளை படங்களில் தேவையில்லாமல் புகுத்த தொடங்கி இருக்கின்றனர். ஏன் ஹாலிவுட் படங்களில் துப்பாக்கிகள் பெருமளவில் பயன்படுத்த படுகின்றன என்ற காரணம் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு புரிகிறதா என தெரியவில்லை.
************
ஈழத்தில் துப்பாக்கிகள் போராட்டத்தின் அடையாளமாக கூறப்பட்டாலும் அங்கு துப்பாக்கிகளைச் சார்ந்த வேறு சமூகவியல் பார்வையும் உள்ளது. ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் ஒரு துப்பாக்கி கிடைப்பதற்கே மிக கடினமாக இருந்தது. பணத்தேவையும் அதற்கு அதிகம். துப்பாக்கிகளை பெற ஈழத்தில் இருந்த மக்களிடம் இருந்து பணம் திரட்டுவதும் கடினம். அந்தளவுக்கு மக்களிடம் பணம் இல்லை. இதனால் துப்பாக்கிகளின் புழக்கம் அங்கு வெகுவாக இல்லை. ஆரம்பகாலத்தில் ஒரு நல்ல துப்பாக்கிக்காக பல போராளிகள் அலைந்திருக்கின்றனர். ஆனால் இந்தியாவின் தலையீட்டிற்கு பிறகும், வெளிநாட்டுத் தமிழர்கள் பெருமளவில் நிதி அளிக்க தொடங்கிய பிறகும் துப்பாக்கிகள் அங்கு பெருகின. துப்பாக்கிகளின் பெருக்கம் துப்பாக்கிகளை கொண்டிருந்தவர்களை அதிகாரம் மிக்கவர்களாக சமூகத்தில் பிரதிபலித்தது.
துப்பாக்கிகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கிகள் கிடைத்தவுடன் அதனை தங்கள் அதிகாரத்தின் சின்னங்களாக வெளிப்படுத்திக் கொண்டனர். தங்களிடம் துப்பாக்கிகள் இருக்கிறது என பகீரங்கமாக வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தங்களை குறித்த பய உணர்ச்சியையும் தோற்றுவித்தனர். இயக்கங்களை எதிர்த்து பேச மக்கள் அஞ்சும் சூழ்நிலையும் எழுந்தது. துப்பாக்கிகளின் வளர்ச்சியும் பய உணர்ச்சியும் இயக்கங்கள் மத்தியில் அதிகாரமையங்களையும் உருவாக்கியது. தங்களுக்கு தாங்களே வகுத்து கொண்ட சட்டங்கள், மற்றவருக்கு அளித்த தண்டணைகள் போன்றவற்றுக்கு துப்பாக்கிகள் கொடுத்த அளவில்லாத சுதந்திரமும் ஒரு முக்கிய காரணம்.
ஈழம் என்றில்லாமல் துப்பாக்கிகளை தங்களுடைய கைகளில் எடுக்கும் எந்த அமைப்பும், இயக்கமும் அளவில்லாத சுதந்திரத்தையும் தங்கள் கைகளில் எடுத்து கொள்கின்றன. இந்த அளவில்லாத சுதந்திரம் அவர்களை எந்த எல்லைக்கும் கொண்டு சென்று விடுகிறது. அதே நேரத்தில் துப்பாக்கிகளை கொண்டு நடக்கும் போராட்டம் மக்களைச் சார்ந்து இருக்கும் வரையில் அதாவது போராட்டத்தினை நடத்த பணத்திற்காக மக்களைச் சார்ந்து இருக்கும் வரையில் அந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக இருக்கும். மக்களை நம்பாமல் தங்களை மட்டும் நம்பும் பொழுது அது போராட்ட பாதையில் இருந்து விலகி சென்று விடுகிறது. ஈழப் போராட்டத்தினை இங்கே பொருத்தி பார்க்க முடியும். ஈழத்திலே உள்ள மக்கள் எப்பொழுதும் ஈழப்போராட்டத்தினை நிர்ணயித்தது இல்லை. அதற்குரிய பணபலம் அவர்களிடம் இல்லை. மாறாக ஆரம்பகாலத்தில் இந்தியா, தமிழகம் (எம்.ஜி.ஆர் போன்றவர்கள்) பிறகு புலம் பெயர்ந்த தமிழர்கள் போன்றோரே ஈழப்போராட்டத்தினை நிர்ணயம் செய்தவர்கள். எனவே இயக்கங்களுக்கு மக்களை சார்ந்து இருக்கும் அவசியம் இல்லாமல் போனது. They were not Accountable to People. இதுவும் ஈழப் போராட்டம் ஒரு விடுதலைப் போராட்டம், அரசியல் போராட்டம் என்பதில் இருந்து நகர்ந்து இன்று தமிழன் வாழ்வுரிமை சார்ந்த இராணுவ போராட்டமாக மாறியதற்கு ஒரு முக்கிய காரணம்.
************
துப்பாக்கிகளை ஈழத்திலும், அமெரிக்காவிலும் பார்த்தவரையிலும் இந்த துப்பாக்கிகளை விளையாட்டு மொம்மையாக கூட குழந்தைகளுக்கு வாங்கித்தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவை பாதுகாப்பின் அடையாளம் அல்ல. வன்முறையின் சின்னம். வன்முறையை மனிதன் எளிதாகவும், சுலபமாகவும் கைக்கொள்ள துப்பாக்கிகள் வழிவகுத்து விடுகின்றன.