ஈழப் போராட்டம் குறித்த என் நிலைப்பாடு, சில விளக்கங்கள்

என்னுடைய கடந்த கட்டுரைக்கு வந்த விமர்சனங்கள், தனி மின்னஞ்சல்களில் சில நண்பர்கள் தெரிவித்து இருந்த கருத்துக்களைச் சார்ந்தே இந்த விளக்கங்களை கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.

கடந்த சில மாதங்களாக மனதில் ஈழப் பிரச்சனை ஏற்படுத்திய வலியும், இயலாமையும் மட்டுமே என்னை அந்தப் பதிவு எழுத தூண்டவில்லை. கடந்த சில மாதங்களாகவே நண்பர்களுடன் இத்தகைய கருத்துக்களை பேசியும், எழுதியும் வந்திருக்கிறேன். என்னுடைய டிவிட்டரில் கூட கடந்த வாரம் சில டிவிட்களில் இதனைச் சார்ந்து எழுதியிருக்கிறேன்.
ஈழம் தொடர்பாகவும், ஈழப் போராட்டம் தொடர்பாகவும் பலப் பதிவுகளை கடந்த சில வருடங்களாக எழுதி விட்டு, சில நிமிடங்களில் உணர்ச்சி வேகத்தில் ஈழப்போராட்டத்தினை சார்ந்து இத்தகைய ஒரு பதிவை எழுதி விட முடியாது. ஈழத்தில் பிறக்காமல் ஈழப் போராட்டத்தினை தன்னுடைய நெஞ்சில் சுமக்கும் எத்தனையோ பேரில் நானும் ஒருவன். எனவே அந்த பதிவை நான் சுலபமாக எழுதி விடவில்லை. ஆனால் நான் அவ்வாறு எழுதியிருக்கிறேன் என்றால் அதற்கு வலுவான காரணங்கள் உள்ளது. பலர் அதனை உணராமல் மறுமொழியிட்டுள்ளது தான் வருத்தத்தை தருகிறது.

வன்னியிலும் ஈழத்தின் பிற பகுதிகளிலும் இருந்தும் செய்திகளை அறிந்து கொண்டுள்ளவர்களுக்கு நான் எதன் பொருட்டு அவ்வாறு எழுதினேன் என்பதை புரிந்து கொள்வதில் பிரச்சனை இருக்காது. அவ்வாறு இல்லாதவர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தான் நான் உணர்ச்சி மிகுதியில் எழுதியதாக தோன்றும். பல நாட்கள் மனதில் போட்டு உழன்று கொண்டிருந்ததை தான் அந்தக் கட்டுரையில் கொண்டு வந்திருந்தேன். ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்ட பின்பும், நான் அதனை எழுதாமல் இருப்பது என்னுடைய எழுத்திற்கும், மனசாட்சிக்கும், நியாயமாக இருக்காது என்ற காரணத்திற்காக தான் எழுத வேண்டாம் என நினைத்து மனதில் புழுங்கிய ஒன்றினை எழுத்தில் கொண்டு வந்தேன்.

நீண்ட விளக்கங்களை அளிக்க கூடிய சூழ்நிலை தற்பொழுது இல்லை. அதனால் மிக சுருக்கமாக என்னுடைய விளக்கங்களை அளிக்க முயல்கிறேன்.

புலிகள் மீதான குற்றச்சாட்டு

1983ல் இனப்படுகொலை செய்த ஜெயவர்த்தனேவை விட மிகவும் கொடிய சர்வாதிகாரர்களாக இருக்கும் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே, சரத் பொன்சேகா போன்றவர்கள் இலங்கையில் இருக்கும் சூழ்நிலையில் புலிகளின் தேவை முன் எப்பொழுதையும் விட தற்பொழுது அதிகரித்து இருப்பதாக நான் நினைத்த தருணங்கள் உண்டு. புலிகளின் சகோதர படுகொலைகளை கூட வரலாற்று ரீதியிலான தவறுகளாகவே நான் பார்த்தேன். தவிரவும் சகோதர படுகொலைகளுக்கு புலிகள் மட்டும் காரணம் அல்ல. ஒவ்வொரு போராளி இயக்கங்களுக்குள்ளும் தனி மனித மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் இருந்து வந்திருக்கின்றன. அந்த மோதல்களை பேசி தீர்க்காமல் துப்பாக்கிகளால் தீர்த்துக் கொண்டனர். போராளி இயக்கங்களுக்குள் சண்டையை வளர்த்ததில் அனைத்து போராளி இயக்கங்களுக்கும், இந்திய உளவு அமைப்புகளுக்கும் பங்கு உள்ளது. எனவே மொத்த சகோதர படுகொலைகளையும் புலிகள் மீது போட்டு அவர்களை நிராகரிக்காமல் அந்த கசப்பான கறுப்பு பக்கங்களை கடந்து எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும் என நினைத்தேன். என்னைப் போலத் தான் பலரும் நினைத்தனர். தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக புலிகள் இருந்ததும் அதற்கு காரணம்.

அப்படி மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய புலிகள் இன்று மக்களை தங்களின் தற்காப்பிற்காக அடைத்து வைத்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் ஏதோ சிங்கள ஊடகங்களும், இந்திய ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும் தரும் செய்திகளை அப்படியே நம்பி எழுதுவதாக சிலர் கருதுகிறார்கள். இந்த ஊடகங்களின் செய்திகளை நான் என்றைக்கும் நம்பியதில்லை. என் பல கட்டுரைகள் வெகுஜன ஊடகங்களில் அதிகம் வெளிவராத தகவல்களை கொண்டே இருந்திருக்கிறது. எனவே சிங்கள் ஊடகங்களும், இந்திய ஊடகங்களும் கூறிய தகவல்களை நான் நம்பி எழுதியதாக சிலர் கூறியுள்ளதில் எந்த உண்மையும் இல்லை. அதைத் தவிர வேறு எதுவும் சொல்லும் சூழல் தற்பொழுது இல்லை.


தமிழ் ஈழம்

ஈழப் போராட்டமே வேண்டாம், சரணடைந்து விடுவோம் என நான் சொல்லவில்லை. என் கட்டுரையில் கூட கீழ்க்கண்ட வரிகளில் என் கருத்தினை வெளிப்படுத்தி இருந்தேன்.

இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்


தமிழ் மக்கள் அமைதியாக வாழ, தங்களுக்கான உரிமைகளை இன்று பெறுவதற்கு கூட போராட்டம் நடத்த வேண்டிய தேவை உள்ளது

தனி நாடாக இன்றைக்கு ஈழம் பெறுவது என்பது சாத்தியம் அற்ற ஒன்று. உணர்ச்சிவசப்படாமல் இன்றைய யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து கொண்டால் இது நமக்கு புரியும். ஒரு புதிய நாடு இன்றைய உலக சூழ்நிலையில் உருவாகுவது இயலாத ஒன்று. வல்லாதிக்க நாடுகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு புதிய நாடு உருவாக முடியும். கொசாவோ, தீமோர் லெசுடே போன்ற நாடுகள் ஏதோ ஒரு வல்லரசு நாடுகளின் ஆதரவில் உருவானவை தான். இன்றைக்கு தமிழர்களுக்கு ஆதரவு தரும் அப்படியான நாடு ஒன்றும் இல்லை. பலர் ஒரு விடயத்தை இன்னும் உணரவேயில்லை. இன்று நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்களுக்கு இதை விட ஒரு பேரவலம் நேர்ந்து விட முடியாது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் உலகமே வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறது. பிரிட்டன், பிரான்சு போன்ற இரு நாடுகள் மட்டும் ஏதோ கூக்குரல் எழுப்பி கொண்டிருக்கின்றன. மற்ற நாடுகள் இந்த பேரவலத்தை கண்டு அமைதியாக இருக்கும் பொழுது ஒரு தனி நாட்டினை நம் கையில் தூக்கி கொடுத்து விடுவார்கள் என நினைப்பது அப்பாவித்தனமாக தெரியவில்லையா ?

சரணடைந்து விடுவதா என பலர் கேட்கிறார்கள். வசதியான, பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு இவ்வாறு கேட்பது சுலபம். ஆனால் ஈழத்திலே போர் சூழ்நிலையில் இராணுவத்திடம் சிக்கி கொண்டு தினமும் செல், ஆர்ட்டிலரி தாக்குதல்கள் மத்தியில், பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் செத்துக் கொண்டும், பச்சிளம் குழந்தைகள் எல்லாம் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் சூழலில் இந்தக் கேள்வியை கேட்போமா ? பிறக்கும் குழந்தைக்கு கூட செல்லடி தானே கிடைக்கிறது. வன்னியில் போர் சூழ்நிலையில் பசியும், பட்டினியுமாய், செல்லடி பட்டும் மனநிலை பிழன்ற சூழ்நிலையிலும் தமிழர்கள் உள்ளனர். அவர்களிடம் கேளுங்கள் இந்தப் போரினைப் பற்றியும், சரணடையாலாம் என்பது குறித்தும். எந்த தாய் தன்னுடைய குழந்தை செத்தாலும் பரவாயில்லை, புலிகளோடு இருப்பேன் என நினைப்பாள் ? மக்கள் தாமாகவே அந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதில் எந்த உண்மையும் இல்லை.

சிங்கள அரசின் கோர இனவெறி இன்று வெளிப்பட்டு இருந்தாலும் தனி நாடு என்ற கோரிக்கையே தமிழர்களை பிற நாடுகள் ஏற்றுக் கொள்ளாமைக்கு காரணம். நம் மீதான உலகத்தின் பார்வை நியாயமற்றது தான். அதனை சரி செய்ய கூட நம்மிடம் பலம் இல்லை என்பதே உண்மை. We are Powerless. பழங்கதைகளை பேசி தமிழனின் வீரபிரதாபங்களை மேடைகளில் முழங்குவதால் எந்த மற்றமும் நம்மிடம் வந்து விடாது.

மாறாக நம்முடைய சம உரிமைக்கான அரசியல் போராட்டம் நம் போராட்டத்தின் நியாயத்தினை வெளிப்படுத்தும். சிங்கள அரசு மீது உள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும், தமிழர்களின் நியாயமான காரணங்களும் இன்றைக்கு வெளிவந்து விட்டது. சரியான அரசியல் வியூகம் நமக்கு இருக்குமானால், இலங்கையில் சமமான உரிமையும், நிம்மதியான வாழ்வையும் தமிழர்களுக்கு பெற்று தர முடியும். அப்படி இல்லாவிட்டால் கிழக்கு மாகாணம் பிள்ளையானுக்கும், வடக்கு மாகாணம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சென்று சேரும் அபாயத்தையே இன்றைக்கு நான் காண்கிறேன்.

நான் போராட்டம் தோற்கும் நிலையில் அதனை விட்டு வெளியேறுவதாக வானதி போன்றவர்கள் கூறியது வருத்தத்தை தருகிறது. சிறு வயதில் இருந்து ஈழப் போராட்டத்தினை கவனித்து வருகிறேன். அது என்னுடன் கலந்த ஒன்று. அதற்கு என்னுடைய வலைப்பதிவே ஒரு சாட்சியாக உள்ளது. தற்பொழுது நான் எதனை செய்து கொண்டிருக்கிறேனோ அதனை நிச்சயமாக செய்து கொண்டிருப்பேன். என்னுடைய எழுத்து எதையும் சாதித்து விடவில்லை. But, Something is better than Nothing. என்னுடைய பங்களிப்பு ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டே தான் இருக்கும். நான் ஏற்கனவே கூறியிருந்தது போல ஈழப்பிரச்சனையை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன். மக்களின் அவலங்கள், மனித உரிமைகளை சார்ந்ததாகவே அது இருக்கும்.

நான் ஒரு சாமானியன். என் மனதில் சரி என்று நினைக்கும் விடயங்களையே எழுதுகிறேன். அது தான் என்னுடைய எழுத்திற்கும் நியாயம் செய்வதாக இருக்கும். ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதே என் எண்ணம். அதைத் தவிர வேறு எதுவும் என் எழுத்தினை செலுத்துவதில்லை. அது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன். மறுமொழிகள் மூலமும், மின்னஞ்சல் மூலமும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...