வதந்திகளை புறக்கணித்து, மக்களின் பிரச்சனைகளை பேசுவோம்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து வரும் வதந்திகளை புறக்கணிப்போம்.

பிரபாகரன் அவர்களின் மாவீரர் பிம்பத்திற்கு முதலில் களங்கம் விளைவிக்க பிரபாகரன் தப்பியோட முனைந்தார், சுடப்பட்டார் என சிங்கள ஊடகங்களும், இந்திய பார்ப்பனீய, பனீயா ஊடகங்களும் தொடர்ந்து செய்தி பரப்பின. அது தமிழர்கள் மத்தியில் எடுபடவில்லை என்றவுடன் தற்பொழுது புதுக் கதைகளை வெளியிட்டு வருகின்றன.

இறந்த பிறகு தன்னுடைய உடல் கூட எதிரிகளிடம் கிடைக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் பிரபாகரன். இந்திய அமைதிப்படைகளின் காலத்தில் அவருடன் இரு விடுதலைப் புலிகள் பெட்ரோல் டின்களுடன் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் உண்டு. அப்படி இருந்தவரின் உடலை கைப்பற்றியிருக்கும் செய்திகள் எதுவும் நம்பக்கூடியதாக இல்லை. நம்பாமல் அதனை புறக்கணிப்பதே நாம் இப்பொழுது உடனடியாக செய்ய வேண்டியது.

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பிரபாகரனை சாகடித்து பார்த்து விட்டார்கள் இந்த ஊடகங்கள். பிரபாகரனுக்கு குறைவான வயதே ஆகிறது. இன்னும் அவர் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்புள்ளது என ஹிந்து நாளிதழ் எரிச்சல்பட்ட வரிகள் இன்றும் என் நினைவில் உள்ளது. சுனாமியில் பிரபாகரன் இறந்தார் என செய்தி வெளியிட்டு மகிழ்ந்த ஹிந்து நாளிதழ் தான், இன்று தன்னுடைய தொலைக்காட்சியுடன் தமிழகத்தில் இத்தகைய செய்திகளை சிங்கள அரசின் ஊதுகுழலாக இருந்து பரப்பி வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த வதந்திகளை புறக்கணித்து மக்கள் பிரச்சனையை பேசுவதே தற்போதைய சூழ்நிலையில் முக்கியமானது. தற்போதைய சூழலில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களுக்கும் நிவாரணம் தேவை. மக்களை அந்த முகாம்களிலேயே அடைத்து வைத்து விட்டு கிளிநொச்சி, மன்னார் பகுதிகளை சிங்கள மயமாக்கும் முயற்சிகளை விழிப்புடன் தடுக்க வேண்டிய தேவை உள்ளது. உலக நாடுகளை நோக்கி நாம் மறுபடியும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தற்போதைய போராட்டம் முன் எப்பொழுதையும் விட அதிகமாக இருக்க வேண்டும்.

முன் எப்பொழுதையும் விட தற்பொழுது தான் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பொறுப்பு அதிகரித்து உள்ளது. இலங்கையில் போராடக் கூடிய சூழ்நிலை மக்களுக்கு இல்லை. இந்தியாவில் போராடினாலும் பலன் இருக்க போவதில்லை. மேற்குலக நாடுகளை (ஐரோப்பிய, கனடா, அமெரிக்கா) நோக்கியே நாம் நம் கோரிக்கையை முன்வைத்து போராட வேண்டும். தமிழரின் நிலங்கள் சிங்கள எடுபிடிகளான டக்ளஸ் தேவானந்தாவுக்கும், பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் சென்று சேராமல் இருக்க தமிழர்கள் தங்கள் போராட்டத்தினை உடனே முன்னெடுக்க வேண்டிய அவசரம் உள்ளது.

கடந்த காலங்கள் போலவே தற்பொழுதும் பிரபாகரன் உகந்த தருணத்தில் மக்கள் முன் வருவார். அது வரையில் நம் மக்களுக்காக நாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.

மனம் தளர்ந்து விடாமல் நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து நம் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்...