Thursday, May 13, 2010

ஈழ மக்களின் இன்றைய தேவை...

மே 2009ல் நடந்த பேரழிவுக்குப் பிறகு, திக்கு திசை இல்லாமல் தமிழ்ச் சமுதாயம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. அர‌சிய‌ல் த‌லைமை எதுவும் இல்லாமல், எந்த‌ நோக்கும் இல்லாமல், தெளிவானப் பார்வையும் இல்லாமல் ஒரு குழ‌ப்பான‌ சூழ்நிலையிலே த‌மிழ் ம‌க்க‌ளை விட்டுச் சென்றிருக்கிறார்க‌ள் தமிழீழ விடுத‌லைப் புலிக‌ள். விடுதலைப் புலிகள் தமிழீழத்தின் பெரும்பான்மையான நிலங்களையும், வெளிநாட்டுத் தமிழர்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொழுது ஒன்றாக தெரிந்த ஈழத்தமிழினம் இன்றைக்கு பல்வேறு துண்டுகளாக தெரிகிறது.

தமிழீழ தேசியத் தலைவர் பிர‌பாகரன் போன்ற‌ ஆளுமை மிக்க‌ த‌லைவ‌ர்க‌ளின் திடீர் மறைவும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாத சூழ்நிலையும் குழ‌ப்ப‌ங்க‌ளையே ஏற்படுத்தும். அது தான் தற்பொழுது ந‌ட‌ந்தேறி வ‌ருகிற‌து. அடுத்த‌ த‌லைமையைக் கைப்ப‌ற்ற‌ ந‌ட‌க்கும் போட்டி, ப‌ல்வேறு குழுக்க‌ளுக்குள் ந‌ட‌க்கும் மோத‌ல்க‌ள் என‌ குழ‌ப்ப‌மான‌ சூழ்நிலையே தற்பொழுது உள்ள‌து. தற்பொழுது ந‌ட‌ந்துக் கொண்டிருக்கின்ற‌ எந்த‌ நிகழ்வும் தமிழர்களுக்கு ந‌ம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஒரு மோச‌மான‌ கால‌க்க‌ட்ட‌த்திலே த‌மிழ‌ர்க‌ள் இருக்கிறோம். ஒரு வலுவான தலைவனை இழக்கும் ஒரு சமூகம் இப்படியான ஒரு சூழ்நிலையையே எதிர்கொண்டு வந்துள்ளதை பல்வேறு வரலாறுகளில் கண்டுள்ளோம். அதனையே தமிழர்களும் எதிர்கொண்டு வருகிறோம்.


ஈழ‌த்திலே இன்ன‌மும் சுமார் ஒரு ல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் த‌டுப்பு முகாம்க‌ளில் உள்ள‌ன‌ர். போர்க் காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணிக் காரணமாக மக்களை இன்னமும் முகாம்களில் வைத்திருக்க வேண்டியுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் கூறுகிறது. அது தான் காரணம் என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. தமிழர் பகுதியில் நடைபெற்று வரும் சிங்களக் குடியேற்றம், சிங்கள-புத்த மயமாக்கம் போன்றவை தமிழர்கள் நிலங்களைக் களவு கொண்டு வருகின்றன. ஆரம்பக் காலங்களில் கிழக்குப் பகுதியில் நடந்த குடியேற்றங்கள் போலவே தற்பொழுது கிளிநொச்சியிலும் குடியேற்றங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் நிலம் எங்கும் சிங்கள இராணுவ முகாம்கள் நிறைந்து உள்ளன. இந்திய வியாபாரிகளும், முதலாளிகளும் ஈழ நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கி உள்ளனர். நெல் விளையும் மன்னாரின் விளை நிலங்களை வர்த்தகமயமாக்கும் போக்கும் நடந்து வருவதாக செய்திகளில் காண முடிகிறது.


தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களில் பிற இடங்களில் உறவினர்களை உடையவர்கள் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே சென்றிருக்கிறார்கள். ஆனால் எந்த உறவும் அற்ற மக்கள் இன்னமும் தடுப்பு முகாம்களில் அடைப்பட்டு இருக்கின்றனர். ஈழத்தின் போரை தங்களின் தலையில் சுமந்து போராடிய வன்னி மக்களை தங்கள் உறவினர்களாக்கிக் கொள்ள யாழ்ப்பாணத்தில் இருந்தோ, திருகோணமலையில் இருந்தோ, மட்டக்களப்பில் இருந்தோ, ஈழ மக்களின் போராட்டத்தை தாங்களே இனி சுமக்கப் போவதாக கூறும் வெளிநாட்டில் இருந்தோ இன்னமும் யாரும் முன்வாராதது வேதனையான சூழ்நிலையே ஆகும். த‌டுப்பு முகாம்க‌ளை விட்டு வெளியே வ‌ந்த‌ ம‌க்க‌ளுக்குச் ச‌ரியான‌ வாழ்வியில் தேவைகள் இன்னும் கிடைக்காத சூழ்நிலையே உள்ள‌து. போரில் த‌ங்க‌ள‌து உற‌வுக‌ளை, பெற்றோர்க‌ளை, குழ‌ந்தைக‌ளை இழ‌ந்து த‌விக்கும் இம் ம‌க்க‌ளுக்கு கூடுதல் பிரச்சனையாக த‌ற்பொழுது வாழ்விய‌ல் பிர‌ச்ச‌னைக‌ளையும் எதிர்கொள்ளும் அவ‌ல‌மான‌ சூழ்நிலையே உள்ளது.

ஈழ‌ ம‌க்க‌ளின் போராட்டத்தை இனி தாங்க‌ளே சும‌க்க‌ப் போவ‌தாக‌ கூறும் வெளிநாடுத்த‌மிழ‌ர்க‌ளோ, அதிகார‌த்தைக் கைப்ப‌ற்றும் போட்டியில் பிரிந்து கிட‌க்கின்ற‌ன‌ர். நியூயார்க்கைச் சேர்ந்த வழக்கறிஞர் உருத்திரகுமார் நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌த்தை உருவாக்கும் முய‌ற்சியிலே இருக்கின்ற‌ன‌ர். ம‌ற்றொரு குழு நார்வேயைச் சேர்ந்த‌ நெடிய‌வ‌ன் த‌லைமையில் ம‌றுப‌டியும் ஆயுத‌ப் போராட்ட‌த்தை முன்னெடுக்கும் முய‌ற்சிக‌ளை செய்வ‌தாக‌க் கூற‌ப்ப‌டுகிற‌து. இரு வார‌ங்க‌ளுக்கு முன்பு மே முதல் வாரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான‌ தேர்தல் அமெரிக்கா, க‌ன‌டா உள்ளிட்ட‌ நாடுக‌ளில் ந‌ட‌ந்தேறிய‌து. ந‌டைபெற்ற‌ தேர்த‌லில் ப‌ல்வேறு குழ‌ப்ப‌ங்க‌ளும், குள‌றுப‌டிக‌ளும் ந‌ட‌ந்தேறி இருப்பதாக தமிழ்நெட் இணையத்தளம் கூறி வருகிறது. புதின‌ம் இணைய‌த்த‌ள‌மோ த‌மிழ்நெட் குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்துவ‌தாக‌ கூறுகிற‌து. புதின‌ம் உருத்திர‌குமார் அமைக்கும் நாடு க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌த்தை ஆத‌ரிக்கிற‌து. தமிழ்நெட் இணையத்தளம் நெடியவன் தலைமையிலான குழுவை முன்னிறுத்துகிறது. ஒரு வருடம் முன்பு ஆங்கில‌த்தில் த‌மிழ்நெட், த‌மிழில் புதின‌ம் என‌ ஈழ‌த்தில் ந‌டைபெறும் செய்திக‌ளை த‌மிழ‌ர்க‌ளின் பார்வைக்கு ஒரே மாதிரியாக‌ கொடுத்து‌ வ‌ந்த‌ செய்தித்த‌ள‌ங்க‌ள் இன்று இரு வேறு குழுக்க‌ளை பிர‌திப‌லிக்கும் த‌ள‌ங்க‌ளாக‌ மாறிப் போன‌து தற்போதைய தமிழர்களின் வேத‌னையான‌ சூழ்நிலையை நினைவுப‌டுத்திக் கொண்டிருக்கிற‌து.


இன்னொரு புற‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ சிறீலங்கா தேர்த‌லில் ராஜ‌ப‌க்சே த‌ன்னுடைய‌ அதிகார‌த்தை ”வலுவாக” நிலை நாட்டி இருக்கின்றார். ஆனால் ஈழத்தில் பெருவாரியான‌ த‌மிழ் ம‌க்க‌ள் தேர்த‌லைப் புற‌க்க‌ணித்து உள்ள‌ன‌ர். அவ்வாறான சூழ்நிலையிலும் த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பு அதிக‌ இட‌ங்க‌ளைக் கைப்ப‌ற்றி இருக்கிறது - 13 இடங்கள். புலிக‌ள் இருந்த‌ கால‌த்திலே இவ‌ர்க‌ள் கைப்ப‌ற்றிய‌ இட‌ங்க‌ள் 22. அத‌னுட‌ன் ஒப்பிடும் பொழுது இது குறைவான‌து தான் என்றாலும் இது ஒரு குறிப்பிட‌த்த‌க்க‌ வெற்றியாகும். என்றாலும் பெருவாரியான‌ த‌மிழ் ம‌க்க‌ள் இந்த‌ வாக்குப்ப‌திவை புற‌க்க‌ணித்து த‌ங்க‌ள் ந‌ம்பிக்கையின்மையையே வெளிப்ப‌டுத்தி உள்ள‌ன‌ர். என‌வே த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பு மீதும் ம‌க்க‌ளுக்கு பெரிய‌ ந‌ம்பிக்கை இல்லை என்ப‌தையே இந்தப்‌ புற‌க்க‌ணிப்பு தெளிவுப‌டுத்துகிற‌து.த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பும் ப‌ல்வேறு பிள‌வுக‌ளை எதிர்கொண்டே இந்த தேர்த‌லை ச‌ந்தித்த‌து. த‌னித் த‌மிழீழ‌ம் என்ற‌ கோரிக்கையை கைவிடுவ‌தாக‌வும் ச‌ம்ப‌ந்த‌ம் அறிவித்து இருந்தார்.

த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பை வெளிநாட்டில் உள்ள‌ த‌மிழ‌ர் குழுக்க‌ள் ஏற்றுக் கொள்ள‌வில்லை. ஈழ‌த்தில் உள்ள‌ ப‌ல்வேறு த‌மிழ‌ர் அமைப்புக‌ளும் வெளிநாட்டில் இருந்து முன்வைக்க‌ப்ப‌டும் எதையும் ஏற்றுக் கொள்வ‌தில்லை என்ற‌ முர‌ண்ப‌ட்ட‌ச் சூழ்நிலையே த‌ற்பொழுது உள்ள‌து.

******************

போராட்ட‌ம் என்ப‌து வெற்றி அல்ல‌து தோல்வி குறித்தான‌து அல்ல என்பதையே ஈழம் என‌க்குக் க‌ற்றுக் கொடுத்துள்ளது. போராட்டம் நடைபெறுவதற்கான அடிப்படைக் காரணிகள் இருக்கும் வரை, போராட்ட‌ம் என்ப‌து போராடும் இருப்பை தொட‌ர்ந்து த‌க்க‌வைத்துக் கொள்வ‌தே ஆகும். போராட்டம் என்பது மிகவும் நெடியது. வெற்றிகளும், தோல்விகளும் இந்தப் போராட்ட சூழ்நிலையில் தொடர்ந்து நேரக்கூடிய நிகழ்வுகளே ஆகும். தோல்விகளுக்கும், வெற்றிகளுக்கும் மத்தியிலும் தொடர்ந்து போராடும் திறனைத் தக்கவைத்துக் கொள்வதே போராட்டம் ஆகும்.

Protracted People's war என்று சொல்லப்படுகின்ற மிக நீண்ட மக்கள் யுத்தத்தை மாவோ வலியுறுத்துகிறார். புலிகளின் 30 ஆண்டு காலப் போராட்டமும் மிக நெடிய போராட்டம் தான். பல வெற்றி, தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வந்த இயக்கம் தான் புலிகள் இயக்கம். மிக மோசமான தோல்விகளின் பொழுதும் புலிகள் தங்களின் போராடும் இருப்பை தக்கவைத்துக் கொள்வதையே வழக்கமாக கொண்டிருந்தனர். அதனாலேயே அவர்களால் தோல்விகளில் இருந்து தொடர்ந்து மீண்டு வர முடிந்தது. ஆனால் 30 ஆண்டு கால நெடிய போராட்டத்தால் களைப்புற்ற புலிகள் தங்களின் ஒட்டு மொத்த போராட்ட களத்தையே வெற்றியை நோக்கி குறிவைத்தனர். வெற்றியா அல்லது தோல்வியா என்ற இரண்டு நிலைக்குள் போராட்டம் என்ற இருப்பு பறிபோனது. வெற்றி கிடைக்காமல் தோல்வி அடைந்த பொழுது போராட்டக் க‌ள‌ம் பறி போன‌து.


இன்றைக்கும் போராட்டத்திற்கான காரணிகள் அப்படியே தான் உள்ளது. சிங்கள இனவெறி முன் எப்பொழுதும் இல்லாத உச்சக்கட்டத்தில் இருக்கிறது. ஆனால் நாம் போராடுவதற்கான களம் தான் இல்லாமல் போனது. அது தான் புலிகள் செய்த மிகப் பெரிய தவறு. நான் புலிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றவில்லை. தமிழ் மக்களுக்காக செயல் திறனுடன் போராடிய இயக்கம் புலிகள் இயக்கம். விடுதலைப் புலிகள் இருந்த வரை தமிழ் மக்களை இந்த உலகம் நோக்கியப் பார்வையும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த உலகம் தமிழர்களை அணுகும் முறையையும் கவனிக்கும் பொழுது புலிகள் தமிழர்களுக்கு கொடுத்த அங்கீகாரம் நமக்கு தெளிவாகிறது. இறுதிக் காலத்தில் தமிழர்களை தடுத்து வைத்தது போன்ற குற்றங்களை புலிகள் புரிந்து இருந்தாலும், தமிழர்களுக்கான ஒரு அங்கீகாரத்தை கட்டி எழுப்பிய வகையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது நமக்கு இன்னமும் மதிப்பு அதிகமாகிறது.

அதே நேரத்தில் புலிகளின் முழுமையான இராணுவ அணுகுமுறை நம்முடைய அரசியல் வெளியை சிதைத்தும் வந்துள்ளது. மிக நெடியப் போராட்டத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையும் மிகவும் அவசியமாகிறது. ஒரு தலைமுறை தங்களின் வாழ்க்கையைச் சிதைத்து எதிர்காலத்திற்கு விட்டுச் செல்லப் போகும் ஒரு கொடையாக போராட்டத்தை கொண்டுச் செல்ல முடியாது. அதைத் தான் ஈழப் போராட்டம் செய்தது. தொடர்ச்சியான போர் மக்களை தங்கள் வாழ்வியலை இழக்கச் செய்தது. வாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வாய்ப்புக் கிடைக்காத மக்கள் ஈழப் போராட்டத்தை முன்னெடுக்கும் சூழ்நிலையை போராட்டக் களம் ஏற்படுத்தியது. வன்னியில் உள்ள மக்கள் ஆர்ட்டலரியிலும், பிற ஆயுதங்களாலும் பலியான பொழுதும் அது அவர்கள் எதிர்கால சந்ததியினருக்காக செய்யும் தியாகமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இத்தகைய வாதங்களை பல ஈழத்தமிழர்கள் முன்வைத்திருந்தனர். போராடும் வலுவை சிதைக்கவே சிங்கள இரணுவம் அடிப்பதாகவும், அதனை எதிர்த்தே போராட வேண்டி இருப்பதாகவும் பல நண்பர்கள் எதிர்வினையாற்றி இருந்தனர்.

இதை விட அபத்தமான சித்தாந்தம் எதுவும் இல்லை. தற்போதைய மக்களின் வாழ்க்கையைச் சிதைத்து எதிர்கால வாழ்க்கையை வளமாக்குவது என்பது கால ஓட்டத்தின் நியாதிகளின் படி அபத்தமானது. தற்கால மக்களின் வாழ்க்கையை பணயம் வைப்பது எந்த வகையிலும் அறமான செயலாகாது. எனவே தான் போராட்டம் என்பது மக்களின் யுத்தமாக அந்த மக்களாகவே போராடுவதாக இருக்க வேண்டியுள்ளது. சூழலுக்கு ஏற்ற போராட்டமே அவசியமாகிறது. போராட்டத்தை காலத்திற்கு ஏற்ப மாற்றுவதையும், விலக்குவதையும் பல்வேறு நாட்டின் போரட்டக்களங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். மாறாக ஈழப் போராட்டம் என்பது ஒரே மாதிரியாக கணிக்க கூடியதாகவும் அமைந்து விட்டது.

******

தற்பொழுது போராட்டக் களத்தையே நாம் இழந்திருக்கும் சூழ்நிலையில் போராட்டத்தை மீள் அமைப்பது என்பது களநிலையையே பொறுத்தது. வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும், மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் மக்கள் போராட தொடங்கினால் போராட்டம் தொடங்கும்.

இந்த உலகு ஒழுங்கு என்பது மாறிக்கொண்டே இருக்கக் கூடியதே. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பது ஒரு காலத்தில் இருந்தது. இன்றைக்கு அது அந்த சாம்ராஜ்யம் உருவான இடத்திலேயே சுருங்கி விட்டது. சோவியத் யூனியன் என்ற தேசம் மிகவும் பலமான வலுவான தேசமாக இருந்தது. இன்றைக்கு அது சுருங்கி விட்டது. நிரந்தரமாக வலுவான தேசம் என்பது எதுவும் இல்லை. அது காலவெள்ளத்திலும், ஓட்டத்திலும் மறையக்கூடியதே. புதிய தேசங்கள் உருவாவதும் நிகழக்கூடியதே. அதே நேரத்தில் அதற்கான நெடியப் போராட்டம் மக்களைச் சார்ந்தாக மட்டுமே இருக்க முடியும். அந்தப் போராட்டம் மக்களை உள்ளடக்கியது. மக்களின் உரிமைகளைச் சார்ந்தது. தனி நாடு என்பது இறுதி இலக்காக இருந்தாலும் தற்போதைய‌ சூழ்நிலையில் மக்களின் உரிமைகளே நமக்கு முக்கியமானது. இன்றையச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் உரிமை என்பது அவர்களின் வாழ்வியல் தேவைகளே.

*******************

ஈழத்திலே இருக்கின்ற தமிழ் மக்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் ஈழத்தின் எதிர்கால கட்டமைப்பிலும், போராட்டங்களிலும் கைகோர்த்து நின்றாக வேண்டியது அவசியமாகிறது. தற்பொழுது ஈழமக்களின் அடிப்படை வாழ்வியல் முன்னுரிமைப் பெறுகிற சூழலில் அந்த அடிப்படை தேவைகளை ஈழ மக்களுக்குச் செய்யும் கடமை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உள்ளது.

ஈழத்திலே தற்பொழுது இருக்கின்ற சிங்கள ஆதிக்கமும், ஒடுக்குமுறையும் எதிர்காலத்திலும் தொடருகின்ற பட்சத்தில் போராட்டங்கள் வெடிப்பது வெகு இயல்பான ஒன்றே. அத்தகைய தருணத்திலே ஈழ மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களே.

புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலையும், புலம் பெயர்ந்த யூத மக்களின் நிலையும் அடிக்கடி ஒப்பிடப்படுகிறது. இத்தகைய ஒப்பீடுகளில் எனக்கு மாறுபட்டக் கருத்து இருந்தாலும், அந்த ஒப்பீடுகளில் இருக்கும் சில உண்மைகளை நாம் கவனிக்க வேண்டும். இஸ்ரேலின் நன்மையையும், இஸ்ரேலில் உள்ள யூதர்களின் நலனையுமே புலத்திலே இருக்கின்ற யூத மக்கள் முன்னெடுக்கின்றனர்.

புலம் பெயர்ந்த தமிழர்களும் ஈழத்திலே இருக்கின்ற மக்களின் நலன்களையும், ஈழத்திலே இருக்கின்ற மக்களின் தேவையையுமே முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வது புலம் பெயர்ந்த தமிழர்களின் கடமையும் ஆகும்.

தற்போதைய தலைமுறை பல ஆண்டுகளாக நடந்தப் போரில் பலவீனமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் போராட்டத்திற்கான களம் நமக்கு இல்லை என்பதே யதார்த்தமான சூழ்நிலை ஆகும். இன்றைய சூழ்நிலையில் மக்களின் வாழ்வியல் தேவைகள் மீள்கட்டமைக்கப்பட வேண்டும். மக்களின் இயல்பான வாழ்கைக்குரிய சூழல் அமைய வேண்டும். அவ்வாறு அமைய நாம் வழிவகுக்க வேண்டும்.



19 மறுமொழிகள்:

nerkuppai thumbi said...

A nice write-up.

I have reproduced in my blog:
makaranthapezhai.blogspot.com

I trust you will kindly appreciate.

6:15 AM, May 13, 2010
Anonymous said...

அதனையே தமிழர்களும் எதிர்கொண்டு வருகிறோம்/// Please leave Newjersy and Neyveli and work for them on the spot at Srilanka if your eyes open only to them and brain consider they and you are the only tamil people.

Open your brain to see the people who is sitting in GH of Neyveli and Kayanguppam, and who is selling old newspapers and cucumber on Neyveli-cuddalore cud road. Don't blame me immediately with my caste, me also belong to Kalthondra naagarigam
Tamilnadu Tamilan

7:49 AM, May 13, 2010
ஜோதிஜி said...

தமிழீழ தேசியத் தலைவர் பிர‌பாகரன் போன்ற‌ ஆளுமை மிக்க‌ த‌லைவ‌ர்க‌ளின் திடீர் மறைவும்....

உங்கள் பழைய இடுகையில் பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை நான் நம்பவில்லை. இந்திய அமைதிப்படை உள்ளே இருந்த சமயத்தில் இரண்டு பேர்கள் பெட்ரோலுடன் பிரபாகரன் உடன் இருந்தார்கள். உடல் எதிரிகள் கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக. அவர் உடல் அல்ல இது.

இவ்வாறு எழுதியுள்ளீர்கள்.

இப்போது மேலே உள்ள வார்த்தைகளுக்கும் ஏற்கனவே எழுதியுள்ள வரிகளுக்கும் உள்ள வித்யாசத்தை விளக்க முடியுமா?

12:20 PM, May 13, 2010
Anonymous said...

-நம்முடைய தனிநாட்டுக் கனவுகளை அம் மக்கள் மீது திணித்தல் என்பது எவ்வகையிலும் சரியானது அல்ல இந்த வரிகளுக்கு நிறைய எதிர்ப்பு வரலாம். புலம் பெயர்ந்த தமிழர்கள் இதனை ஏற்று கொள்ளவும் மாட்டார்கள்! - மயிலாடுதுறை சிவா-
புலம் பெயர்ந்த தமிழர்கள் ஈழ‌த்தில் வாழபோகிற ம‌க்க‌ள் அல்ல. Holidayக்கு இலங்கைக்கு போய் வருவார்கள். ஈழ‌த்தில் வாழும் மக்களின் நலன்களை அடிப்படியாக கொண்டு எழுதிய சசியை பாராட்டுகிறேன்.

3:23 PM, May 13, 2010
-/பெயரிலி. said...

ஈழத்திலிருப்பவர்களுக்கு என்ன வேண்டும் என்று எழுதினால் ஈழத்திலிருக்காத ஈழத்துக்கு ஆதரவான தமிழர்கள்தான் அத்தனைக்கும் காரணம் என்று சொல்ல மட்டும் அநாமதேயர்களுக்கு வரிசை திறந்திருக்கின்றது. வெளிப்புலத்திலிருக்கும் தமிழர்கள் ஈழத்துக்கு ஆதரவு தெரிவித்ததாலேயே இத்தனையும் நடந்தது என்று நிறுவத்துடிக்கின்றவர்கள் ஈழத்திலேதானா இருக்கின்றார்கள்? இந்தியர்கள் என்றால், இந்தியா திரும்பிப்போய்த்தானா சசியை நெய்வேலிக்குப் போ என்கின்றார்கள்? ;-)

புலம்பெயர்ந்த தமிழர்களும் வாயை மூடிக்கொண்டால் எது நன்றாக நடக்கவேண்டுமோ அதெல்லாம் நன்றாகவே நடந்தது என்று எழுதிவிட்டுப்போய்விடலாமில்லையா? ஈழத்தமிழரைப் பற்றி இந்திய அரசுத்தேவாங்கு அதிகாரிகள் மட்டுமேதான் நாட்டுக்கு வெளியேயிருந்து கருத்துச் சொல்லலாமென்றுதானே இந்தியச்செய்திகளிலே வாசித்துக்கொண்டிருக்கிறோம்? ஈழத்தமிழர்களின் தேவை என்னவென்று அவர்களுக்குச் சம்பந்தமேயில்லாத நாராயணன் சொல்லலாம்; சிவசங்கர் மேனன் சொல்லலாம்; சோ சொல்லலாம்; ராம் சொல்லலாம்; கருணாநிதிகூடத் தந்தி அடிக்கலாம்; கல்கி தலையங்கம் எழுதலாம்; ஆதவன் தீட்சண்யாவும் அறுபது வயது முதியவர் அ. மார்க்சும் கருத்துச் சொல்லலாம்; தமக்குச் சார்பான புலம்பெயர்ந்த தமிழர்களோடு பேசிச் சமரசம் செய்வோமெனும் பாலித கோகண்ணவுக்கு உரிமையிருக்கலாம். ஆனால், அங்கே பிறந்து வளர்ந்து புலம் பெயர்ந்து உறவுகளையும் நினைவுகளையும் இன்னும் அங்கே ஈழத்தமிழர்கள்மட்டும் கருத்துச் சொல்லக்கூடாது. அநாநிமசு சூப்பர்! ;-)


ஈழத்தமிழர்களின் இன்றையதேவைகளைப் பற்றி, கொன்றொழிக்க உதவின இந்தியமிராண்டிகளைக் கேள்வி கேட்காமல், சுறாவுக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் சசி தாரூருக்கும் நித்தியானந்தவின் காவிக்கோவணம் பிரியும் வீடியோவுக்கும் ஒதுக்கின நேரம்போக மீதி நேரங்களிலே கவலைப்படும் தமிழ்நாட்டுத்தமிழியன் அநாநிமசிரைவிட புலம்பெயர்ந்த ஒவ்வோர் ஈழத்தமிழனுக்கும் சரியோ பிழையோ கருத்துச் சொல்ல உரிமையிருக்கின்றது. விஸ்வலிங்கம் உருத்திரகுமாரனா, தமிழ்நெற் ஜெயச்சந்திரனா சரி என்பது பற்றியோ, "வட்டுக்கோட்டையா? கொட்டைப்பாக்கு நாடா?" என்பது பற்றியோ என்னைப் போல இயக்கம் சார்ந்து அரசியல் செய்யாத புலம் பெயர்ந்த பலருக்குக் கவலையில்லை. ஆனால், அங்கேயிருக்கும் மக்களைப் பற்றிய கவலை இந்தியநலனுக்காக அவர்களின் பேச்சாளர்களெனப் பாசாங்கு செய்யும் தம்மசக்கரக்கோவணதாரிகளைவிட எமக்கு உண்டு. இத்தனை கொலைகளையும் வதைகளையும் சத்தமின்றி மூடி அதற்குமேலே மேடைபோட்டு ஓராண்டுக்குள் செந்தமிழ்மகாநாடு நடத்துவதுதான் உடன்பிறப்புகளின் உன்னதகவலையென்றால், அதற்கு நாம் குடைபிடிக்கமுடியாது. உங்களின் தேவைகளுக்காக இதுவரை ஈழத்தமிழரை வைத்து எந்த அரசியலும் செய்யாத எங்களின் (அதாவது என்னைப் போன்ற கணிசமானவர்களின் - எல்லோருக்காகவும் நான் பேசமுடியாது) உண்மையான கரிசனையையும் கவலையினையும் வெறுமனே "புலம்பெயர் ஈழத்தமிழர்களின் திணிப்பு" என்று எழுதித் திசை திருப்பிவிட்டு இந்தியநலனையும் யாழ்ப்பாணத்தில் இந்தியத்தூதரகத்தினையும் இந்தியவர்த்தகத்தளங்களையும் நீங்கள் முன்னெடுத்துப் போகமுடியாது. இந்திய-இலங்கை ஒப்பந்தமென்று எப்போதும் ஈழத்தமிழர்களின் நலன்களைப் பேச உங்களைப் பிரதிநிதிகளாக்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?

6:16 PM, May 13, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

புலம் பெயர்ந்த தமிழர்கள் ஈழ‌த்தில் வாழபோகிற ம‌க்க‌ள் அல்ல. Holidayக்கு இலங்கைக்கு போய் வருவார்கள்

******

இவ்வளவு எளிமையாக நான் இந்தப் பிரச்சனையை அணுகவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். (தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் குறுகியக் காலத்தில் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருப்பதால் மிக விரிவாக நினைக்கும் அனைத்தையும் பதிவு செய்ய முடியவில்லை)

ஈழத்திலே இருக்கின்ற தமிழ் மக்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் ஈழத்தின் எதிர்கால கட்டமைப்பிலும், போராட்டங்களிலும் கைகோர்த்து நின்றாக வேண்டியது அவசியமாகிறது. தற்பொழுது ஈழமக்களின் அடிப்படை வாழ்வியல் முன்னுரிமைப் பெறுகிற சூழலில் அந்த அடிப்படை தேவைகளை ஈழ மக்களுக்குச் செய்யும் கடமை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உள்ளது.

ஈழத்திலே தற்பொழுது இருக்கின்ற சிங்கள ஆதிக்கமும், ஒடுக்குமுறையும் எதிர்காலத்திலும் தொடருகின்ற பட்சத்தில் போராட்டங்கள் வெடிப்பது வெகு இயல்பான ஒன்றே. அத்தகைய தருணத்திலே ஈழ மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களே.

புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலையும், புலம் பெயர்ந்த யூத மக்களின் நிலையும் அடிக்கடி ஒப்பிடப்படுகிறது. இத்தகைய ஒப்பீடுகளில் எனக்கு மாறுபட்டக் கருத்து இருந்தாலும், அந்த ஒப்பீடுகளில் இருக்கும் சில உண்மைகளை நாம் கவனிக்க வேண்டும். இஸ்ரேலின் நன்மையையும், இஸ்ரேலில் உள்ள யூதர்களின் நலனையுமே புலத்திலே இருக்கின்ற யூத மக்கள் முன்னெடுக்கின்றனர்.

புலம் பெயர்ந்த தமிழர்களும் ஈழத்திலே இருக்கின்ற மக்களின் நலன்களையும், ஈழத்திலே இருக்கின்ற மக்களின் தேவையையுமே முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வது புலம் பெயர்ந்த தமிழர்களின் கடமையும் ஆகும். அவ்வாறு இல்லாமல் ஈழத்தில் இருக்கின்ற மக்களின் நலன்களுக்கு விரோதமாக தங்களின் எண்ணங்களை ஈழமக்கள் மீது திணிக்கக் கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடாகும்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்களின் தாய் நாட்டின் மீதும், தங்களது மக்களின் மீதும் கொண்டப் பற்றினை நாம் அலட்சியப்படுத்தவோ/நிராகரிக்கவோ/கொச்சைப்படுத்தவோ முடியாது.

நன்றி...

8:42 PM, May 13, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

இப்போது மேலே உள்ள வார்த்தைகளுக்கும் ஏற்கனவே எழுதியுள்ள வரிகளுக்கும் உள்ள வித்யாசத்தை விளக்க முடியுமா?

************
ஜோதிஜி,

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் போரில் வீரமரணம் அடைந்து விட்டார். ஈழத்தில் பலியான பல ஆயிரம் மக்களுடன் தேசியத்தலைவரும் வீரமரணம் அடைந்து விட்டர். அவருக்கான அஞ்சலியை செலுத்துவது நமது கடமையாகும்.

தமிழர் வரலாற்றிலே இவ்வளவு ஆளுமை மிக்க ஒரு தலைவன் தமிழர்களுக்கு எப்பொழுதும் கிடைத்ததில்லை. அவரது இழப்பின் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தையே இப்பொழுது அனுபவித்து வருகிறோம்.

9:00 PM, May 13, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

Don't blame me immediately with my caste, me also belong to Kalthondra naagarigam

Tamilnadu Tamilan

****************

தமிழ் நாட்டில் தமிழன் இருக்கிறானா ? ஆச்சரியம் தான். எனக்கு தெரிந்து தமிழ் நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் திமுககாரன், அதிமுககாரன், காங்கிரஸ்காரன், பாமககாரன், விசிகாரன் போன்றவர்களே. அதைத் தவிர பார்ப்பனர்,செட்டியார், முதலியார், நாடார், வன்னியர், தேவர், பள்ளர், பறையர் போன்றாரும் உள்ளனர்.

தமிழன் இருக்கிறான் என்று நீங்கள் சொன்னது இன்னும் ஆச்சரியம் தான். அதுவும் நெய்வேலி ஜி.எச்ல் தமிழனா, நம்பவே முடியவில்லை சார்...

10:55 PM, May 13, 2010
Anonymous said...

\\
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் போரில் வீரமரணம் அடைந்து விட்டார். ஈழத்தில் பலியான பல ஆயிரம் மக்களுடன் தேசியத்தலைவரும் வீரமரணம் அடைந்து விட்டர். அவருக்கான அஞ்சலியை செலுத்துவது நமது கடமையாகும்.
\\

பல குழப்பமான தகவல்கள் உலவி வரும் வேளையில் இந்த உறுதியான செய்தி,அதுவும் உங்களிடமிருந்து வருவது வியப்பாக இருக்கிறது.
இது உறுதி செய்யப்பட்டதுதானா?

11:19 AM, May 14, 2010
Anonymous said...

சரியோ பிழையோ கருத்துச் சொல்ல உரிமையிருக்கின்றது.//////
சூப்பருங்க, பிழையானாலும் சொல்லுவோம் என்கிற ஜல்லியடி இருக்கிறதுதான் நீங்கள் தமிழனென்று தெள்ளத்தெளிவாக்குகிறது, புலம் பெயர்ந்தாலும் இந்த ஒரு solid point காவாவது
நீங்க மட்டும் தமிழனென்று ஒத்துக்கொள்கிறேன், (ரெம்ப யோசிக்காதீக, அப்புறம் என்னோட point புரிந்துவிட்டால் நீங்க தமிழன் இல்லை !)

அதுவும் நெய்வேலி ஜி.எச்ல் தமிழனா, நம்பவே முடியவில்லை சார்..////
இது மெகா சூப்பர், இப்படி மாற்றி மாற்றி கேள்வி கேட்டுவிட்டாலும், அவனெல்லாம் தமிழன் இல்லையென்று ஜல்லியடித்துவிட்டாலே
நெய்வேலி அரசாங்க மருத்துவமனை சுபிட்சம் அடைந்துவிடும் !! நான் சொன்ன பிரச்சனையினை பற்றி உங்களால் பேசமுடியாது சசி, உங்கள் ஜல்லியில் மாட்டாமல் நெய்வேலி அரசாங்க மருத்துவமனை மற்றும் கூட்ரோடு வெள்ளரிவிற்கிற மக்களை
பற்றி மட்டுமே நான் பேசினால் நான் தமிழன் இல்லையென்று ஆகிவிடும், நானும் தன்மானத் தானை தமிழனென்று நிருபிக்கவேண்டியிருப்பதால் அது பற்றியெல்லாம் இனிமே கேட்கமாட்டேன்.. நியுஜெர்சியில் சுறா ரிலிஷ் ஹிட்டாமே !!!

சாந்தமான பங்குச் சந்தை சசிக்கு இப்போ கோபம் வரப் போகுது பாருங்க.
முகமூடி பேரவை
விளாம்பட்டி (GH இல்லை)
சிவகாசி வடக்கு

11:25 AM, May 14, 2010
Anonymous said...

திரு பெயரிலி
பழைய ஜோக்குதான் இருந்தாலும் திரும்பவும் சொல்றேன்.

நீங்கள் தமிழில் பதில் சொன்னால் இன்னும் சிறப்பாயிருக்குமே. (நன்றி:மோகன கிருஷ்ணகொமாரு)

11:33 AM, May 14, 2010
Unknown said...

போராட்ட‌ம் என்ப‌து வெற்றி அல்ல‌து தோல்வி குறித்தான‌து அல்ல என்பதையே ஈழம் என‌க்குக் க‌ற்றுக் கொடுத்துள்ளது.


வெற்றிகளுக்கும் மத்தியிலும் தொடர்ந்து போராடும் திறனைத் தக்கவைத்துக் கொள்வதே போராட்டம் ஆகும்.


மிக தெளிவான விளக்கம்...!

பொருள் புதைந்த பதிவு,,!

பகிர்தலுக்கு மிக்க நன்றி

2:12 AM, May 15, 2010
அ.முத்து பிரகாஷ் said...

அன்பு சசி

.........................................
..................................
..........................

அன்புடன்
நியோ

6:08 AM, May 15, 2010
அற்புதன் said...

//எனவே தான் போராட்டம் என்பது மக்களின் யுத்தமாக அந்த மக்களாகவே போராடுவதாக இருக்க வேண்டியுள்ளது. சூழலுக்கு ஏற்ற போராட்டமே அவசியமாகிறது. போராட்டத்தை காலத்திற்கு ஏற்ப மாற்றுவதையும், விலக்குவதையும் பல்வேறு நாட்டின் போரட்டக்களங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். மாறாக ஈழப் போராட்டம் என்பது ஒரே மாதிரியாக கணிக்க கூடியதாகவும் அமைந்து விட்டது.//

போராட்டம் சூழலுக்கு ஏற்ப மாற்றம் அடைந்து இருக்கிறது என்பதே எனது பார்வை.இது சரியா பிழையா என்பது சில வருடங்களில் தெரிந்து விடும்.ஈழப் போரட்டம் இனி வேண்டியதில்லை என்று நீங்கள் எழுதியது உங்கள் மன அழுததின் விழைவே என்று நான் அன்றே உணர்ந்திருந்தேன்.அதற்கு நான் சொன்னேன் போராட்டதிற்கான் காரணிகள் இருக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அதனையே இன்று நீங்கள் எழுதி இருப்பது மகிழ்ச்சி அழிக்கிறது.மேலும் பிரபாகரன் பற்றிய உங்கள் முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம்.இது பற்றி பல முரணான விடயங்கள் உண்டு.இது பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.பிராபகரன் அழிந்தாலும் அவர் காட்டிய வழி ஒன்று என்றுமே தமிழரின் சரிதிரத்தில் இருக்கும்.அது அழியாது.புலத் தமிழர்களிடையே பல்வேறு குழுக்களும் பல்வேறு கருதுக்களும் இருந்தாலும் எல்லொருமே ஒரு விடயதில் மிகத் தெளிவாகவே இருகிறார்கள்.குழுவாதாம் என்பது அடுத்த கட்ட நடவடிக்கை போராட்ட வழிமுறை சார்ந்தே இருக்கிறது என்பதே எனது பார்வை.இது சரியான வழிமுறை தலமை என்பதைத் தேர்தெடுப்பதற்கான அவசியமான ஒரு படி முறை.இவை எல்லாவற்றையும் தாண்டி நாம் போராடுவோம் ஈற்றில் வெல்வோம் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்பிக்கை தான் போராட்டம் அதனை இழக்காதீர்கள்.எமக்கு அடுத்த சந்ததி அதற்க்கு அடுத்த சந்ததி என இது தொடரப் போவது.வெற்றி பெறும் வரை நாம் ஓயப் போவதில்லை.

1:32 PM, May 15, 2010
அற்புதன் said...

//புலம் பெயர்ந்த தமிழர்களும் ஈழத்திலே இருக்கின்ற மக்களின் நலன்களையும், ஈழத்திலே இருக்கின்ற மக்களின் தேவையையுமே முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வது புலம் பெயர்ந்த தமிழர்களின் கடமையும் ஆகும். அவ்வாறு இல்லாமல் ஈழத்தில் இருக்கின்ற மக்களின் நலன்களுக்கு விரோதமாக தங்களின் எண்ணங்களை ஈழமக்கள் மீது திணிக்கக் கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடாகும்.//

நீங்கள் சொல்வது உண்மை தான்.இங்கே போராட்டம் என்பது ஈழத்தில் வாழும் மக்களுக்கானது.அந்த மக்கள் தங்களின் தேவைகளை தங்களின் அரசியல் அபிலாசைகளை கூறக் கூடிய திறனை தக்கவைப்பதுவும் தற்கான அரசியல் வழிமுறைகளை அமைப்பதுவுமே தற்போது நடக்கும் விடயங்கள்.ஈழத்தில் நடக்கும் அரசியலும் தற்போது புலத்தில் நடக்கும் அரசியலும் வெவ்வேறானதாக் தற்போது தெரிந்தாலும் பின்னைய நாட்களில் இவை ஒரு கோட்டில் இணையும்.தற்போதைய களச் சுழலே தற்போதைய கள அரசிய்லைத் தீர்மானிக்கிறது.மக்கள் உண்மையில் என்ன வேண்டுகிறார்கள் என்பதை மக்களோடு இருப்பவர்களே அறிவார்கள்.இதனை நாங்கள் இணையம் வழியாகவோ பத்திரிகை அறிக்கை வாயிலாகவோ அறிய முடியாது.மேலும் புலத் தமிழர்கள் பலர் நேரிடையாகவும் பாடசாலைச் சங்கள் மூலமாகவும் மக்களைப் பலப்படுதுவதற்கான நடவடிகைகளை எடுது வருகிறார்கள் இவை அமைப்பு ரீதியாகச் செய்வதற்கான சூழல் ஈழத்தில் இல்லை.

1:44 PM, May 15, 2010
Indian said...

One year on, Sri Lanka still divided

...
Sustainable peace still seems a long way off. The Sinhala-Tamil divide remains wide, with critics saying a political solution to the ethnic conflict is not on the government's agenda.

...
However, its unclear if he has the will to find a political solution.

Defense Secretary Gotabaya Rajapaksa, the president's brother, wrote in a recent article in the Sri Lankan English weekly newspaper, Sunday Times, that he "sincerely believes priority should be given not to political reforms but to infrastructure development and attending to other basic social needs of the people".

...

A task force headed by another brother of the president, Minister for Economic Development Basil Rajapaksa, has been set up to oversee development in the north, with companies from Colombo, India and China setting up shop. Banks, finance companies, hotels and businesses dealing with consumer goods are springing up.

While the kick-starting of the economy in the north and the improvement of north-south transport links have eased daily difficulties for the Tamils over the past year, local Tamils are disappointed. They are not being hired. They feel that they don't own the development happening around them and are being relegated to being bystanders. The benefits of development are being reaped by "outsiders" - the government, foreign companies and Sinhalese.

The Tamil group's alienation from the Sri Lankan state remains considerable, indicating that economic development, while helpful, is not enough to resolve the ethnic conflict. Analysts say that as Sri Lanka moves from a post-war to a post-conflict era, it will need to find a political solution that involves power sharing, as well as pursuing development that is equitable and inclusive. They say the government needs to take decisive steps towards reconciliation.

While the government as seen as showing no appetite for a political solution, its reconciliatory gestures are often seen as hollow. A fortnight ago, it announced the setting up of a Commission on Lessons Learnt and Reconciliation. Few expect anything to come of it and Human Rights Watch has dismissed the commission as "yet another attempt [by the government] to deflect an independent international investigation" into allegations of war crimes by government forces during the final phase of the fighting.

Few Tamils are impressed by Rajapaksa's promises of reconciliation, with many saying there is scant reconciliation in what the government has been doing in Tamil areas over the past year. For instance, they point to armed forces systematically bulldozing LTTE cemeteries in the north as well as the homes and offices of LTTE leaders, including those of Prabhakaran. The government has also started erecting "victory monuments" commemorating at various locations in the north.

This has the potential to spark anger against the state, since the fighters buried in the cemeteries are also the relatives of the living. The graves played an important role in the LTTE's building of a martyrs' cult, no doubt. But they also helped many Tamils come to terms with their grief.

The government is reportedly building Buddhist shrines in the predominantly Hindu north and building permanent housing for the families of the tens of thousands of troops - overwhelmingly Sinhalese - who fought there. This has underscored fears among Tamils that the government, alongside its military occupation, is bent on altering the demography and religio-cultural identity of their land.
...

Sudha Ramachandran is an independent journalist/researcher based in Bangalore.

2:26 AM, May 18, 2010
vanathy said...

தமிழ்சசி ,
.மூன்று மாதங்களுக்கு முன்பு நீங்கள் எழுதிய கட்டுரையை இன்றுதான் படித்தேன். பல மாதங்களுக்கு பிறகு உங்கள் ஆக்கம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.கடந்த வருடமும் அதன் பின்பும் நடந்த சம்பவங்களால் பல தமிழர்கள் மாதிரி நானும் மனச்சோர்வும் வேதனையும் அடைந்திருந்தேன்.கப்பலை இழந்த மாலுமி மாதிரி ஈழத்தமிழர்கள் திக்குதிசை தெரியாமல் எங்கு போவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். ஈழத்தமிழினம் கடந்த ஒரு ஆண்டு காலமாக ஒரு குழப்பநிலையை அடைந்திருக்கும் இந்த வேளையில் தெளிவான சிந்தனை தேவை எனக்கூறும் உங்கள் கருத்தை நான் முற்று முழுதாக ஆதரிக்கிறேன்.ஒரு வலிமையான குடும்பத்தலைவனை இழந்தால் ,வழி காட்ட யாரும் இல்லாமல் குடும்பத்தில் குழப்பம் வந்து சகோதரர்களும் உறவினர்களும் சிண்டைப் பிடித்துகொண்டு சண்டை பிடிப்பதுமாதிரி குழப்பங்களும் குழு மோதல்களுமாக தமிழர்கள் நிலை மிக மோசமான காலகட்டத்தில் உள்ளது. தங்கள் சக்தியை குறை கூறுவதிலும் துரோகி பட்டம் கட்டுவதிலுமே பல தமிழர்கள் வீணே செலவழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.அது மட்டுமல்ல வலைத்தளங்களும் ஊடகங்களும் எதை எதையோ எழுதி தமிழ் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி கொண்டுள்ளார்கள்.எது உண்மை எது பொய் என்று தெரியாமல் பலர் வெறுத்து ஒதுங்கி உள்ளார்கள். நானும் அப்படித்தான் பல மாதங்களாக வலைத்தளங்கள் படிப்பதையே நிறுத்தியிருந்தேன்.
ஒரு தலைமுறையின் இளம் உயிர்களை அவர்களின் வாழ்க்கையை லட்சக்கணக்கான சாதாரண தமிழ் மக்களின் உயிர்களை ,பலி கொடுத்தும் தமிழரின் சமூக கல்வி பொருளாதார கட்டமைப்பை இழந்தும் இன்னும் இந்தப் போராட்டம் ஒரு முடிவுக்கு வரவில்லை என்பது உண்மைதான் .
நீங்கள் சொல்வதுபோலே போராட்டம் மக்கள் போராட்டமாகத்தான் தொடங்கவும் வேண்டும், முடியவும் வேண்டும்.ஈழத்தில் உள்ள மக்கள் தான் தமக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் ,புலம் பெயர்ந்த தமிழர்களும் உலகத் தமிழர்களும் அவர்களுக்கு பக்கக பலமாக இருந்து உதவ வேண்டுமே தவிர எங்கள் கனவுகளையும் கருத்துக்களையும் அவர்கள் மீது திணிக்க முயற்சிக்கக் கூடாது.
ஈழக்கனவும் போராட்டமும் பல கசப்பான பாடங்களைப் பலருக்கும் கற்பித்துவிட்டது அப்படி கற்றவர்களில் நானும் ஒருத்திதான்

-வானதி

9:38 AM, August 18, 2010
ஜோதிஜி said...

வானதி அற்புதமான விமர்சனம். ஆனால் மக்கள் போராட்டம் என்பது சிங்கள வெறி பிடித்த சுய நல தலைவர்களுக்கு பிடிக்குமா? புரியுமா?

தந்தை செல்வா கொண்டு செல்லாத மக்கள் போராட்டமா? அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் பெறாத அவமானமா?

நரிகள் ஊளையிடும் கூட்டத்தில் நியாய தர்மங்கள் எடுபடுமா?

இந்த நிமிடம் வரைக்கும் உள்ளே உள்ள தமிழ் ஜனநாயக புத்திசாலிகள் என்ன சாதித்தார்கள்?

இனவாதத்தின் உச்சத்தில் உள்ள வல்லூறுகளின் பார்வையில் சிங்களர் சரத் பொன்சேகா படுகின்ற பாடு நீங்கள் அறிந்தது தானே?

பிரபாகரன் குறித்து இன்னமும் கொத்துக்கறி போட்டுக் கொண்டுருப்பவர்கள் மக்கள் போராட்டத்தை முன் எடுத்து நடத்திச் செல்வார்கள் என்று நம்புகிறீர்களா ?

4:01 AM, September 05, 2010