Saturday, May 04, 2013

சாதி வெறி பாசிசப் பாதையில் பாமக

என்னுடைய முகநூலில் (Facebook) மே 2ம் தேதி எழுதியதை இங்கே மீள்பதிவு செய்கிறேன் - https://www.facebook.com/photo.php?fbid=10200582409075564&set=a.2136588627154.116605.1619275375&type=1

வடமாவட்டங்களில் நிலைமை இன்னமும் பதற்றமாக இருந்து கொண்டிருக்கிறது. வடமாவட்டங்கள் சாதி பூசலில் இருபது ஆண்டுகள் பின்நோக்கி சென்று விட்டது ஒரு ஆபத்தான போக்காவே தென்படுகிறது. ஊரில் இரு தரப்பிலும் உள்ள நண்பர்களிடம் பேசும் பொழுது ஒருவர் அடுத்தவரை குற்றம்சாட்டும் போக்கு அதிகமாக உள்ளது. எதிர்தரப்பை நோக்கி கோபமும், துவேசமும் பொங்க பேசும் வெறுப்பு பேச்சுகள் என்னை அச்சப்படுத்துகிறது. பாட்டாளி மக்கள் கட்சி வளர்த்து விட்ட சாதி வெறி போதாதென்று மக்கள் தொலைக்காட்சி பொதுமக்களின் உணர்வுகள் என்ற பெயரியில் கடந்த சில தினங்களாக இன்னும் அதிகமான வெறியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சகமனிதன் மீது ஏற்படுத்தப்படும் வெறுப்பு ஒரு ஆபத்தான போக்கு ஆகும்.

*****************

பாமக என்ற அமைப்பு மீது கடந்த காலங்களில் பல தரப்புக்கும் பல்வேறு காரணங்களால் நம்பிக்கை இருந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கு கிடைத்த நேரடி மற்றும் மறைமுக பொருளாதார உயர்வு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தங்கள் இடங்களை இழந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு, இழப்பீடு போன்றவை பாமக என்ற அமைப்பால் கிடைத்த சில பலன்கள். இது தவிர 1991க்குப் பிறகு ஈழவிடுதலையை தமிழ்நாட்டில் யாருமே பேச முடியாமல் இருந்த சூழலில் பாமக முதலில் பேச தொடங்கியதும் பாமக என்ற அமைப்பினை சாதிக்கு வெளியே "தமிழ் தேசிய" வெளிக்கு கொண்டு வந்தது. அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஈழவிடுதலையை பேசிய பாமகவை தடைசெய்ய சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றி மைய அரசுக்கு அனுப்பியது. 1991க்குப் பிறகு திமுக கைவிட்ட ஈழவிடுதலையை பாமக தன் கையில் எடுத்த சூழலில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள் பாமகவை ஆதரித்தனர். அதை தொடர்ந்து பாமக-விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து ஏற்படுத்திய தமிழ் பாதுகாப்பு இயக்கம் போன்றவை எல்லாமே ஒரு முற்போக்கு முயற்சியே. சாதியை மையப்படுத்தி எழுந்த ஒரு அமைப்பு பரந்துபட்ட வெளிக்கு தன்னை புகுத்திக் கொள்வது வரவேற்கதக்கவையாகவே இருந்தது.

ஆனால் தேர்தல் அரசியலில் பாமக சந்தர்ப்பவாத அரசியலையே மேற்கொண்டது. மாறி மாறி கூட்டணி அமைத்த பாமக 2004ல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அன்புமணியை அமைச்சார் ஆக்கியது. பதவி சுகம் கண்ட பாமக படிப்படியாக தன்னுடைய எல்லா முற்போக்கு நிலைப்பாடுகளையும் கைவிட தொடங்கியது. தன்னுடைய அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதையே முக்கிய நோக்கமாக கொண்டது. அன்புமணிக்கு ராஜசபா இடம் வாங்குவதையே முக்கிய இலக்காக கொண்டு பாமக செயல்பட்டது. 2009 பாரளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியும், 2011 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியும் பாமகவின் அதிகார வெறிக்கு சாவு மணி அடித்த நிலையில் சாதிவெறியே அதிகாரத்தை கைப்பற்ற ஒரே வழி என்று முடிவு செய்து பாமக இன்றைக்கு ஒரு முழுமையான சாதி வெறி பாசிசப் பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறது.

1980களில் வன்னியர் சங்கம் என்ற சாதி அமைப்பாக செயல்பட்ட பொழுது கூட வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை அது முன்வைத்ததே தவிர தலித்களை நோக்கி "மேளம் கொட்டுபவன்" என இழிவாக யாரும் பேசியதில்லை. ஆனால் இன்றைக்கு அத்தகைய ஒரு தரம் தாழ்ந்த நிலைக்கு பாமகவை ராமதாசும், காடுவெட்டி குருவும் கொண்டு வந்து விட்டனர். தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டு கொண்டு கூலிங் க்ளாஸ் போட்டு கொண்டு இருப்பதாக பேசும் பேச்சுகள் சாதி வெறியின் உச்சக்கட்டமாகவே உள்ளது. கலப்பு திருமணங்களை எதிர்ப்பதும், தலித்களின் பொருளாதார பலத்தை சிதைப்பதும் ஒரு பாசிச போக்கு ஆகும். அத்தகைய பாசிசத்தை மனிதநேயம் கொண்ட யாருமே ஆதரிக்க முடியாது.

*****************

வடமாவட்டங்களில் சாதியை ஒழிக்கும் முயற்சிகள் 1980களில் இருந்து தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. சாதி ஒழிப்பில் சாதியால் வன்னியர்களாக இருந்த பலரும் பங்காற்றியிருக்கிறார்கள். தமிழகத்தில் எழுந்த தமிழ்தேசியத்தின் முக்கியமான குரல் வடமாவட்டங்களில் இருந்தே எழுந்தது. தமிழ் சமூகத்தில் உள்ள சாதிகளை ஒழிக்காமல் தமிழ்தேசியத்தை அமைக்க முடியாது என்று அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தவர் தோழர் தமிழரசன் அவர்கள். சமீபத்தில் தமிழகம் சென்றிருந்த பொழுது "சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்" என்ற புத்தகம் கிடைக்கப் பெற்றேன். தமிழ்நாடு விடுதலைப்படை என்ற அமைப்பை 1980களில் தொடங்கிய தோழர் தமிழரசன் சாதி ஒழிப்பு பற்றி எழுதிய கருத்துக்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். 1980களில் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும் இன்றைக்கும் சாதி ஒழிப்பை பேசவேண்டியுள்ளது மிக மிக அவலமான சூழ்நிலை ஆகும்.


 

1980களில் சாதி ஒழிப்பில் தீவிரமாக இருந்த இடதுசாரிக் குழுக்களை சேர்ந்த பலர் கடுமையான போலீஸ் அடக்குமுறைக்கு உள்ளாகினர். வன்னியர் சமூகத்தை சேர்ந்த பலர் 1989ல் பாமக தொடங்கிய பொழுது அதனுடன் இணைந்தனர். பாமகவின் முற்போக்கு வேடம் களைந்து விட்ட நிலையில் தமிழ்தேசிய உணர்வு கொண்ட அத்தகைய பலர் இன்றைக்கு பாமகவை விட்டு வெளியேறி வருகிறார்கள். பாமகவில் உள்ளவர்கள் உணர வேண்டியது பாமகவின் பாசிசப் பாதை ஒரு அழிவு பாதை என்பதே.

*****************

உலக வரலாறு எங்கும் வெறுப்பு காரணமாக கொல்லப்பட்ட சகமனித வரலாறுகளை நாம் வாசித்து வந்திருக்கிறோம். லட்சக்கணக்கான யூதர்களை நாசிக்கள் கொல்ல காரணமாக இருந்தது யூதர்கள் மீது ஹிட்லர் குரூரமாக பரப்பிய வெறுப்பு. துட்சி இனமக்கள் ருவாண்டாவில் கொல்லப்பட காரணமாக இருந்ததும் அதே வெறுப்பு தான். சிங்களர்கள் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக செய்த வெறுப்பு பிரச்சாரமே 2009ல் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது. தமிழகத்தில் அது போல நிகழ வாய்ப்பில்லை என்றாலும் வெறுப்பு பிரச்சாரம் ஒரு ஆபத்தான பாதை என்பதே உலக வரலாற்றில் இருந்து நாம் படிக்க வேண்டிய பாடம். அதுவும் ஒரு லட்சம் தமிழர்களை இனப்படுகொலைக்கு பறிகொடுத்த தமிழர்கள் நிச்சயம் தம் சக தமிழர்களையே வெறுக்கும் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எந்தச் சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் விலைபோக மாட்டார்கள்.

சாதி அடுக்குகளை கொண்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிற நாம் எல்லோருமே சாதி என்ற சட்டையை பிறப்பிலே அணிந்தே பிறந்திருக்கிறோம். அந்தச் சட்டையை அறிவுமுதிர்ச்சியுடன் கழுட்டி எறிவதே சரியான மனிதகுல வளர்ச்சியாக இருக்க முடியும். அடிப்படையில் மனிதநேயம் மிக்க ஒரு மனிதனாக இருப்பதையே என்னுடைய முதல் மற்றும் முக்கிய அடையாளமாக கருதுகிறேன். அதைத் தாண்டியும் ஒரு அடையாளம் வேண்டும் என்றால் "தமிழன்" என்ற அடையாளம் மட்டுமே எனக்கு தேவையாக உள்ளது. அதைத் தவிர வேறு எந்த அடையாளத்தையும் நாம் உதறித்தள்ள வேண்டும். இதையே என்னுடைய கோரிக்கையாக வன்னியர்களிடமும் பிற சாதி நண்பர்களிடமும் முன்வைக்க விரும்புகிறேன்.

மனிதநேயம் மிக்க தமிழனாக மட்டும் இருப்போம்....


1 மறுமொழிகள்:

ராஜ நடராஜன் said...

மதம்,ஈழம்,அரசியல் என இணையம் பல விவாதங்களை முன் வைத்த போதும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலை குறித்து பேசவும்,அப்படியே ஒரு சிலர் பேசினாலும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் வாயிலாக வெளிப்படுத்த தயங்கும் போக்கு தென்படுகிறது.சாதி என்ற சகதியில் கால் வைக்க வேண்டாம் என்ற முன்னெச்செரிக்கை காரணமா அல்லது பய உணர்வு காரணமா என தெரியவில்லை.

சராசரி மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கும் போது சுயநல அரசியலுக்காக மக்களை ஒன்றிணைக்கிறேன் பேர்வழி என பிரிவினைகளை சாதி கட்சிகள் வளர்க்கின்றன.அதிலும் ப.ம.க மனிதநேயத்திற்கு எதிரான வெறுப்பின் உச்சத்தை தொடுவதை காடுவெட்டி குருவின் பேச்சில் தென்பட்டது.

மக்களின் பொதுசொத்துக்களை சேதப்படுத்துவது குறித்து இதற்கான மாநாடுகள் நிகழ்த்தும் கட்சிகளிடமிருந்து இழப்பீட்டுத் தொகையை மீட்க வேண்டுமென்ற குரல்கள் எழுகின்றன.இதனை சட்டமயப்படுத்தினால் இழப்புக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

3:00 AM, May 05, 2013