Sunday, November 20, 2016

ஜெயமோகனின் முதலாளித்துவம்

எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரையைப் படிக்க நேரிட்டது. அவரின் சார்புகளை அவருடைய சார்புகளாக வைத்து விடுவோம். 

ஆனால் அவர் எழுதியிருப்பதில் உள்ள சிலச் சிக்கல்களை மட்டும் இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவருடைய கட்டுரையின் தொனி அவர் அறிந்தோ, அறியாமலோ இந்தியாவில் இருக்கிற "நட்பு முதலாளித்துவத்தை" (Crony Capitalism) அவர் ஆதரிக்கும் தொனியாகவே மாறிவிட்டது. நான் முதலாளித்துவத்தை நிராகரிப்பவன் அல்ல. நான் “Center-Left” நிலைப்பாடு உள்ளவன். 

முதலாளித்துவம் என்பது அரசின் தலையீடு இல்லாமல், அரசுடன் கூட்டணி வைக்காமல் தனியார் நிறுவனங்கள் தாங்களாகவே தொழில் நடத்தும் முறை. சிறுவணிகர்களும், சிறுகடை வியாபாரிகளும் முதலாளித்துவத்தின் அங்கம். அமெரிக்காவில் சிறு நிறுவனங்கள் தான் அமெரிக்க முதலாளித்துவத்தின் முக்கியமான அங்கம் என்று சொல்வார்கள். சிறு நிறுவனங்களுக்கு ஏராளமானச் சலுகைகள் அமெரிக்காவில் உண்டு. 

இந்தியாவில் நடப்பது முதலாளித்துவம் அல்ல. நட்பு முதலாளித்துவம் (Crony Capitalism). அதாவது அரசிடம் உள்ள தங்களின் நெருக்கத்தைப் பயன்படுத்தி ஒரு சில நிறுவனங்கள் அரசிடம் இருந்து நன்மைகளைப் பெற்று ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் தங்கள் வசம் வைத்துக் கொள்வது. அது தான் அம்பானிகளையும், அதானிகளையும் வளர விட்டுள்ளது. அந்த நட்பு முதலாளித்துவத்தைத் தான் ஜெயமோகன் ஆதரிக்கிறார். 

இந்தியாவில் சிறு வணிகர்கள் தான் உண்மையான முதலாளித்துவத்தை முன்னெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு எந்தப் பெரும் சலுகையையும் இந்திய அரசு வழங்குவதில்லை. பல நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் தங்கள் வாழ்வியலை இழந்தவர்கள் சிறு வியபாரிகளே. 

ஆனால் பெரும் நிறுவனங்களுக்கு அரசே நிலத்தை கையகப்படுத்தி வழங்குகிறது. சாமானிய மனிதர்களின் நிலங்களை அரசு கையப்படுத்தும் முறை eminent domain என்று அமெரிக்காவில் கூறப்படும். இந்த முறையை அமெரிக்காவில் வலதுசாரிகள் தீவிரமாக எதிர்ப்பார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்த தேர்தலில் டிரம்ப் eminent domainஐ ஆதரித்து பேசியதை முதலாளித்துவவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இதனை ஏன் கூறுகிறேன் என்றால் இந்தியாவில் உண்மையில் எது முதலாளித்துவம் என்பதே புரியாமல் "நட்பு முதலாளித்துவம்", "ஜமீந்தாரீ முதலாளித்துவம் (Zamindari Capitalism)" போன்றவை தான் இன்று நடைமுறையில் உள்ளது.அதனைத் தான் ஜெயமோகன் ஆதரித்து எழுதுகிறார். உண்மையான முதலாளித்துவத்தை அல்ல.

மோடியின் சமீபத்தைய அறிவிப்பு கூட இந்த நட்பு முதலாளித்துவத்தின் ஒரு பகுதியாகவே காண முடிகிறது. காரணம் சிறு வணிகர்களின் வர்த்தகங்களைச் சிதைத்து பெரும் நிறுவனங்களுக்கு அந்தப் பணத்தினைக் கொண்டு செல்லும் ஒரு மறைமுக வேலைத்திட்டமாகவே இதனைப் பார்க்க முடிகிறது. 

ஜெயமோகன் கட்டுரையில் பலப் பிரச்சனைகளை சுட்டிக்காட்ட முடியும். ஆனால் சுருக்கமாக அவர் எழுதிய Bailout (பொருளாதார மீட்பு) குறித்து மட்டும் இங்கு எழுதுகிறேன். 

அமெரிக்காவில் 2008-2009 பொருளாதாரத் தேக்கத்தின் பொழுது இரண்டு முக்கியமான துறைகளைச் சார்ந்த நிறுவனங்களை அமெரிக்க அரசு மீட்டது. நியூயார்க்கில் இயங்கும் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் என்று சொல்லப்படும் முதலீட்டு வங்கிகள் (Investment Banks), ஏஐஜி காப்பீட்டு நிறுவனம், டெட்ராய்ட்டில் இயங்கும் கார் தொழிற்ச்சாலைகள் போன்றவை அரசால் மீட்கப்பட்டன. 

இங்கு மீட்கப்பட்டவை ஒரு சில நிறுவனங்களோ, தனியார் முதலாளிகளோ அல்ல. மாறாக ஒட்டு மொத்த பொருளாதரத்துடன் பின்னிப்பிணைந்த சில முக்கியமான நிறுவனங்கள் மீட்கப்பட்டன. உதாரணமாக டெட்ராய்ட்டில் உள்ள ஜி.எம், கிரைசலர் போன்ற கார் உற்பத்தி நிறுவனங்களை மீட்காமல் திவாலாக அனுமதித்து இருந்தால் அந்தச் சில நிறுவனங்கள் தவிர அந்த நிறுவனங்களுக்கு உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் திவாலாகும். அந்த நிறுவனங்களின் சங்கிலிப்பிணைப்புப் பொருளாதாரத் தொடர்புகள் அழியும். இதனால் லட்சக்கணக்கான பேர் வேலை இழப்பார்கள் என்ற சூழ்நிலை இருந்த நிலையில் அமெரிக்க அரசு அந்தக் கார் நிறுவனங்களை மீட்க முன்வந்தது. 

இதே போன்றதொரு மற்றொரு மீட்பு நியூயார்க் முதலீட்டு வங்களின் மீட்பு. முதலில் இந்த வங்கிகளை மீட்க அமெரிக்க அரசு முன்வரவில்லை. பியர் ஸ்டேர்ன்ஸ் நிறுவனம் திவாலாகும் சூழ்நிலையில் அதனை மற்றொரு வங்கியான ஜே.பி.மார்கன் வாங்கியது. லீமேன் பிரதர்ஸ், மெரில் லின்ஞ் போன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்துத் திவாலாகும் சூழ்நிலை ஏற்பட்ட பொழுது தான் அரசு தலையிட்டது. அதுவும் முதலில் லீமேன் பிரதர்ஸ் நிறுவனம் திவால் ஆனது. அதற்குப் பண உதவி செய்ய அரசு மறுத்து விட்டது. அதனாலேயே லீமேன் திவால் ஆனது. மற்றொரு நிறுவனமான மெரில் லிஞ்ச் நிறுவனத்தைப் பேங்க் ஆப் அமெரிக்கா நிறுவனம் வாங்கியது. லீமேன் நிறுவனம் திவாலானதால் அமெரிக்கப் பொருளாதாரம் தவிர உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டது. 

காரணம் அமெரிக்க, உலகப் பொருளாதாரத்தின் முக்கியமான கட்டமைப்பு வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள். அது தவிர ஏஐஜி போன்ற காப்பீட்டு நிறுனமும் திவாலாகும் சூழல் ஏற்பட்டது. ஒரு காப்பீட்டு நிறுவனம் திவாலாகும் சூழ்நிலை அசாதாரணமானது. சாதாரண மக்களின் பணம், பல நிறுவனங்களின் பணம் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள சூழலில் பின்னிப்பிணைந்த ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரமும் ஆட்டம் கண்ட சூழலில், ஒவ்வொன்றாக அமெரிக்காவின் பல நிறுவனங்களும் திவாலாகும் சூழ்நிலையில் அதன் தொடர்ச்சியாகப் பல நூற்றுக்கணக்கான நிறுவனங்களும் திவாலாகக்கூடிய சூழல் பல லட்சக்கணக்கன மக்கள் வேலை இழக்கும் சூழலில் தான் மிக மோசமான பொருளாதார நெருக்கடிககளைத் தவிர்க்கவே அமெரிக்க அரசு வங்கிகளை மீட்டது. ஆனால் அந்த வங்கிகளுக்கு அரசு கடன் தான் கொடுத்தது. அந்தக் கடன்களை அந்த நிறுவனங்கள் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். செலுத்தியும் விட்டன. 

இந்தக் காலக்கட்டத்தில் பல அமெரிக்க நிறுவனங்கள் திவாலாகி கொண்டு தான் இருந்தன. அவற்றையெல்லாம் அரசு மீட்கவில்லை. காரணம் நிர்வாகத்திறமை இல்லாத எல்லா நிறுவனங்களையும் காப்பாற்றிக் கொண்டிருப்பது அரசின் வேலை இல்லை. அது முதலாளித்துவமும் இல்லை. 

முதலாளித்துவதும் என்பது அரசை நம்பியிருப்பது அல்ல. அரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுவது அல்ல. கிங்பிஷர் நிறுவனத்தின் நிர்வாகத் திறமையின்மைக்கு அரசைக் காரணம் காட்டி ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அரசு வங்கிகளின் நிர்வாகத்திறமையின்மையை சாடிய ஜெயமோகன், ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாக திறமையின்மைக்கும் அரசையே குற்றம் சொல்கிறார். கிங்பிஷர் நிறுவனத்தின் ஆடம்பரப் போக்கு, விளம்பர மோகம், நிர்வாகத் திறமையின்மை போன்ற பலக் காரணங்களால் தான் அந் நிறுவனம் மோசமான நிலையை எட்டியது.

முதலாளித்துவ கட்டமைப்பில் அரசின் தலையீட்டை பெரும்பாலும் முதலாளித்துவவாதிகள் விரும்புவதில்லை. அமெரிக்காவில் கூட அமெரிக்க அரசு மோசமான சூழலில் இருந்த நிறுவனங்களை மீட்கவே கூடாது என்று தான் வாதிட்டனர். ஆனால் வேலைஇழப்புகள், பொருளாதாரப் பாதிப்புகள் போன்றவற்றை முன்னிட்டே அமெரிக்க அரசு இந்த நிறுவனங்களை மீட்டது. 

அமெரிக்க அரசு 2009ல் இத்தகைய நிறுவனங்களை மீட்க முயன்று கொண்டிருக்கும் பொழுது இந்த நிறுவனங்களை மீட்க கூடாது, இவர்கள் திவாலாக வேண்டும் என்று வாதிட்டனர் அமெரிக்காவின் முதலாளித்துவவாதிகள். அவற்றில் மிக முக்கியமானவர் 2012ம் ஆண்டுத் தேர்தலில் ஒபாமாவை குடியரசுக் கட்சி சார்பில் எதிர்த்து போட்டியிட்ட மிட் ராம்னி. “Let Detroit Go Bankrupt” என்று மிட் ராம்னி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கட்டுரை எழுதினார். காரணம் தொழிற்சங்களின் கட்டுப்பாட்டில் கார் தொழிற்சாலைகள் உள்ளன. எனவே தொழிலாளர்களின் ஊதியங்களைக் குறைத்து நிறுவனங்களை மறு சீரமைக்க, இந் நிறுவனங்கள் திவாலாக வேண்டும் என்று மிட் ராம்னி வாதிட்டார். ஆனால் தொழிற்சங்கங்கள் இந்த நிறுவனங்களை மீட்க வேண்டும் என்று கோரின. 

இந்தியாவில் அப்படியா நடக்கிறது ? 

இந்தியாவில் நடப்பது Crony Capitalism. கிங்பிஷ்ர் நிறுவனம் இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியமான அங்கம் அல்ல. ஒரு நிறுவனம் நிர்வாகத் திறமையின்மையால் திவாலாகும் பொழுது இருக்கும் சூழ்நிலை தான் கிங்பிஷ்ர் சூழ்நிலையும். ஆனால் அரசு அதற்கு ஆதரவாக உள்ளது. இது போன்ற பல நிறுவனங்களுக்கு அரசு வங்களில் இருந்து கடன் வழங்கப்பட்டுள்ளது. அது தான் நட்பு முதலாளித்துவம். அரசியல்வாதிகளுடனும், அதிகாரிகளிடமும் நட்புடன் உள்ள பெரும் முதலாளிகள் தப்பி விடுவார்கள்.

ஆனால் முதலாளித்துவத்தின் மிக முக்கியமான அங்கமான சிறு முதலாளிகளான வியாபாரிகளையும், வணிகர்களையும் அழித்து, அந்த நிறுவனங்களைச் சார்ந்த தொழிலாளர்களின் அன்றாட வாழ்வை அழித்து ஒரு சில பெரிய நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்குப் பெயர் முதலாளித்துவம் அல்ல. Crony Capitalism. மோடியின் திட்டத்தால் பயன்பெறப் போவது கடன் அட்டை நிறுவனங்கள் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் தான். 

இந்தியாவில் பன்னெடுங்ககாலாமாக இருந்து வரும் வர்த்தக
முறையை ஒரு இரவில் மாற்றுவது என்பது ஒரு நாள் முதலமைச்சர் போன்ற திரையுலகக் கற்பனையில் மட்டுமே சாத்தியம். நிஜ உலகில் கொண்டு வந்தால் ஏற்படக்கூடிய பொருளாதாரச் சிக்கல்கள் தான் இன்று இந்தியா எங்கும் தென்படுகிறது. சிறு வியாபாரிகள், சிறு வணிகர்கள் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். அவர்களும் முதலாளித்துவத்தின் ஒரு அங்கம் தான். 


ஆனால்... அவர்கள் நட்பு முதலாளித்துவத்தின் அங்கம் அல்ல. அதனால் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்களாக இந்த அரசு கருதுகிறது. அதன் ஒரு பகுதி தான் மோடி அரசின் அதிரடி அறிவிப்பு.

******

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் வெவ்வேறு தேவைகள், வரலாறு உண்டு. அமெரிக்காவின் முதல் வங்கி 1791ல் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏராளமான வங்கிகள் தொடங்கப்பட்டன. வங்கிகளுக்கு என்று சட்டதிட்டங்களும் இயற்றப்பட்டன. அமெரிக்காவின் மிகப் பெரிய பொருளாதாரத் தேக்கம் 1930களில் வங்கிகளால் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கிகளையும், முதலீட்டு வங்கிகளையும் கட்டுப்படுத்தும் சட்டங்கள் அப்பொழுதே கொண்டு வரப்பட்டன. 

இதைப் போலவே க்ரெடிட் கார்டு என்று சொல்லப்படுகிற கடன் அட்டைகளின் வரலாற்றை நோக்கினால் 1900களிலேயே நடைமுறையில் இருந்தது. இவை படிப்படியாகப் பல வடிவம் பெற்று இன்றைய வடிவத்தைப் பெற்று இருக்கிறது. 

இதனை ஏன் சொல்கிறேன் என்றால் வங்கிகள் சில நூறு ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ளன. கடன் அட்டை முறை கிட்டத்தட்ட கடந்த பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. அதனால் பல பறிமாற்றங்கள் வங்கிகள் மூலமாகப் படிப்படியாக மாறி விட்டது. தொழில் நுட்பம் வளர தொடங்கியதும், இந்தப் பயன்பாடும் பரவலாக விரிவடைந்தது. 

ஆனால் நம் முறை என்ன ? அமெரிக்காவைப் போன்று மாற வேண்டும் என்று ஒரே இரவில் மாற முடியாது. இன்னும் பல காலங்கள் தேவைப்படும். தொழில்நுட்பம் கிராமங்கள் எங்கும் பரவ வேண்டும். இன்னமும் 50% மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. இன்னும் சில தசாப்தங்கள் தேவைப்படும். 

அமெரிக்காவிலும் ரொக்க வர்த்தகம் உண்டு. பெரும்பாலும் அன்றாடச் செலவீனங்களுக்கு ரொக்கமாகச் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. அதில் நன்மையும் உண்டு. ரொக்கமாகச் செலுத்தினால் 5% விலைக்குறைப்பு கூடக் கிடைக்கும். இதனை நான் பல இடங்களில் பயன்படுத்துகிறேன். அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் 40% பரிவர்த்தனைகளை ரொக்கமாகச் செலுத்துவதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ரொக்கமாகச் செலுத்தினால் விலையைக் குறைக்க முடியும் என்று கூறும் வர்த்தகர்கள் பலரை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். இவர்கள் எல்லோரும் சிறு வர்த்தகர்கள் தான். அத்தகைய இடங்களில் ரொக்கமாகச் செலுத்தியும் இருக்கிறேன். ரொக்கமாகச் செலுத்துவது குற்றம் அல்ல. மாறாக ஏதோ ஒரு கடன் அட்டை நிறுவனத்திற்கு அழுவதை விட வாடிக்கையாளரான எனக்கு அந்தப் பலனை கொடுக்க வர்த்தகர்கள் தயாராக இருக்கிறார்கள். சில சிறு வியாபாரிகள் கடன் அட்டையைப் பயன்படுத்த ஒரு குறைந்தபட்ச வரம்பு வைத்துள்ளனர். அதற்குக் கீழ் இருந்தால் ரொக்கமாகத் தான் கொடுக்க வேண்டும். 

கடன் அட்டை ஒரு வசதி. பணத்தை எல்லா இடங்களுக்கும் கொண்ட செல்ல இயலாது. ஆனால் அதனால் சிறு வியபாரிக்கு நன்மை இல்லை. ஒரு பரிவர்த்தனையில் சுமார் 2-3% பணத்தைத் தேவையே இல்லாமல் கடன் அட்டை நிறுவனத்திற்குச் செலுத்தியாக வேண்டும். எல்லோரிடமும் கடன் அட்டை உள்ள சூழ்நிலையில் ஒரு வியபாரி அதன் மூலம் தன் வாடிக்கையாளரிடம் பணம் பெற்றுக் கொள்வது இயல்பானது. ஆனால் பெரும்பாலானோரிடம் கடன் அட்டை இல்லாத சூழலில் நீ வைத்து தான் தீர வேண்டும் என எப்படி ஒரு அரசு நிர்பந்திக்க முடியும். இது முதலாளித்துவமே அல்ல.

******

அமெரிக்காவில் உள்ள ஒரே தேசிய வங்கி Bank of North Dakota தான். முதலாளித்துவக் கட்டமைப்பில் அரசு எந்த வங்கியையும் நிர்வாகம் செய்யக்கூடாது. அமெரிக்காவில் அவ்வாறு தான் உள்ளது. இந்தியாவில் இருந்த சோசலிச பொருளாதாரத்தின் மிச்சம் தான் தேசிய வங்கிகள். அந்த வங்கிகளின் நிர்வாகம் தான் "நட்பு பொருளாதாரத்திற்கும்" வழி வகுக்கிறது. வங்கிகளின் பணத்தை ஹர்ஷ்த் மேத்தா பங்குச்சந்தைக்குத் திருப்பியது தொடங்கி இந்தியா தீவிர முதலாளித்துவத்துக்கு அடி எடுத்து வைத்த காலம் தொடங்கி இன்று வரை இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் அரசு வங்கிகளைத் தங்களின் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. 

1 மறுமொழிகள்:

Anonymous said...

ஜெயமோகனின் கட்டுரையில் இருக்கும் அடிப்படை சிக்கல்களை சுட்டிக்காட்டி நன்றாக விளக்கம் அளித்திருக்கிறீர்கள். ஜெயமோகன் வழக்கமாக தெளிவான எதிர் வினைகளுக்கு தரும் பதில் தான் ஒரு எழுத்தாளன் மட்டுமே என்பதும் ஒரு துறை சார்ந்த நிபுணரோ ஆய்வாளரோ இல்லை என்பதும்தான். ஒரு சிக்கலான பொருளாதார நடவடிக்கையை அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தனது சார்புக்காகவே ஆதரித்து எழுதுவதும் அதை அவரது வாசகர் கூட்டம் பெரும்பாலும் கேள்வி கேட்காமல் ஏற்று பாராட்டுவதும் ஆச்சரியம்தான்.

10:25 PM, November 21, 2016