வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Sunday, January 30, 2005

அழிந்து கொண்டிருக்கும் தமிழக வரலாறு

வெட்கப்படவேண்டும். தமிழன் போன்ற பொறுப்பற்ற ஒரு இனம் வேறெதுவுமிருக்குமா என்று தெரியவில்லை. தன் வரலாற்றையே கொஞ்சம் கூட சிந்திக்காத மக்கள், ரொட்டித் துண்டுக்கு அலைவது போல ஓட்டுக்களுக்காக மட்டுமே அலையும் அரசியல்வாதிகள். இவர்களை உள்ளடக்கியச் சமுதாயத்தில் வெட்கித் தலைகுனிவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.

கடந்த இரு தினங்களாக வரலாறு இணையக்குழுவினரான நண்பர் கமலக்கண்ணன், கோகுல், ராம், லாவண்யா, க்ருபா ஆகியோருடனும் பொன்னியன் செல்வன் இணையக் குழுமத்தினருடனும் சோழர்களின் சில வரலாற்றுச் சின்னங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. இப் பயணத்தின் இறுதியில் வரலாறு இணைய இதழின் இராஜராஜீசுவரம் சிறப்பிதழ் வெளியீட்டு விழவிலும், பெண்தெய்வவழிபாடு புத்தக வெளியீட்டிலும் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. வரலாறுப் பற்றி ஒன்றுமே தெரியாத எனக்கு, தமிழகத்தின் தலைச் சிறந்த வரலாற்று ஆய்வாளர்களான டாக்டர் கலைக்கோவன், திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் போன்றோரின் விளக்கங்களுடன் சோழர்களின் வரலாற்றுச் சின்னங்களைக் கண்டு களிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. சோழர்களின் கட்டடக்கலைக் கண்டு வியந்தாலும், மெய்சிலிர்த்தாலும் இறுதியாக என்னுள் ஏற்பட்டது வேதனையே. அந்த வேதனையின் வெளிப்பாடு தான் இந்தப் பதிவின் முதல் பத்தி.





வரலாற்று ஆய்வு என்பது சாதாரண விஷயம் அல்ல. கடுமையான அர்ப்பணிப்பு தேவை என்பதை என்னுடன் பணியாற்றும் நண்பர் கமலக்கண்ணன் வாயிலாக நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன். மனிதர் தமிழகத்தின் பல வரலாற்று இடங்களுக்கு சுற்றி அலைந்து கொண்டே இருப்பார். இது வரை பல ஆயிரங்களை இதற்காகச் செலவழித்துள்ளார். அலுவலகம், குடும்பம், ஆய்வு, அதற்காகப் படிப்பு என்று பல விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆய்வின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இவரே இவ்வளவு சிரமப்படுகிறார் என்றால் டாக்டர் கலைக்கோவன், திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் போன்றோர் எந்தளவுக்குச் சிரமப்பட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறது. பல வருடங்களாகக் கடுமையாக உழைத்துள்ளனர். பல இலட்சங்களை இதற்காகச் செலவழித்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு கிடைத்ததென்ன ? ஒன்றுமேயில்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிகமாகக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொல்பொருள் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த திரு.ராஜவேலு தெரிவித்தார். ஆனால் சுமார் 60,000 க்கும் மேற்பட்ட இந்தக் கல்வெட்டுக்கள் மைசூரில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழக
வரலாறே 1905ம் ஆண்டு வரையில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டவைத் தான். இதற்குப் பிறகு கிடைத்த கல்வெட்டுக்கள் அதைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பல வரலாற்று ஆய்வலர்களின் புதிய ஆய்வறிக்கைகள் என எதுவுமே தமிழக வரலாற்றில் சேர்க்கப்படவில்லை. தவறாக எழுதப்பட்ட வரலாற்றை மாற்ற இது வரை தமிழக அரசு முனையவே இல்லை. ஆங்கிலேயர் சொல்லிச் சென்ற வரலாற்றை கொஞ்சம் கூட மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறோம்.



கல்வெட்டு ஆதரங்களுடன் கண்டறியப்பட்ட தமிழக வரலாற்று உண்மைகள் ஏன் பதிவுச் செய்யப்படவில்லை ?
அறிவியலில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் தவறென்றால் உடனடியாகச் சரிசெய்யப்படும் பொழுது வரலாற்றில் அது முடியாதா என்ன ? நிச்சயமாக முடியும். அரசு மனது வைத்தால் நிச்சயம் செய்ய முடியும். வரலாற்றின் சிலப் பகுதிகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றி எழுத பாரதிய ஜனதா அரசு முனையவில்லையா?

ஆனால் நாம் நமக்குச் சாதகமாக எழுதச் சொல்லவில்லை. கல்வெட்டு ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும் தமிழகத்தின் வரலாற்று உண்மைகளை உள்ளது உள்ளப்படி எழுதச் சொல்கிறோம். ஆனால் இவை இங்கு அரங்கேறுவதில்லை ? காரணம் நம் அரசியல் தலைவர்கள். "தமிழ்", "தமிழ்" என்று கூக்குரலிட்டு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த திரவிடக் கட்சிகள் இது வரை இதற்காக எந்தப் பணியையும் மேற்கொள்ளவேயில்லை. மைசூரில் தூங்கிக் கொண்டிருக்கும் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு தமிழக வரலாற்றின் உண்மை நிலையை எழுதும் முயற்சிக்கு அரசின் உதவி வேண்டும். இதனைச் செய்ய எந்த அரசும் முயற்சிக்கவில்லை என்பதே வேதனையான ஒன்று. இது ஒன்றும் அதிகம் பணம் செலவாகும் விஷயமல்ல. கொஞ்சம் அக்கறை இருந்தால் போதும்.

கல்வெட்டுகளை பாதுகாக்கும் மையம் ஏன் மைசூரில் இருக்க வேண்டும் என்பதே விவாதத்திற்குரியது. இந்தியாவிலேயே மிக அதிகமாக கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் தமிழகக் கல்வெட்டுகள் தான். அப்படியிருக்கும் பொழுது இந்த மையம் இங்கு தானே இருக்க வேண்டும் ?



தமிழக அரசு என்றில்லை. தமிழ் மக்களுக்கு கூட தங்கள் வரலாறு மீது அக்கறையோ, வரலாறுப் பற்றிய புரிதலோ இல்லை. இவ்வாறு பலரின் அக்கறையின்மையால் எழுந்துள்ள நிலை என்ன ?

ஒரு தலைமுறையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வலர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகி விட்டது. ஒரு வருடமோ, சில வருடங்களோ அல்ல ? ஆயுட் கால உழைப்பு. ஒவ்வொரு வரலாற்றுச் சின்னத்தையும் எடுத்துக் கொண்டு, பல வருடங்கள் இதற்காகச் செலவிட்டு, ஆய்வு செய்து, புத்தகம் வெளியிட்டு, அந்தப் புத்தகங்களும் அதிகம் விற்காமல், எதற்காக இந்தப் பணி ?

தமிழக வரலாற்றைச் சரியாகச் சொல்ல வேண்டும் என்ற வேட்கையே இவர்களின் இந்த அயராத உழைப்புக்கு காரணம். நம் பாரம்பரியம் தெரியாமல் யாரோ தவறாகச் சொல்லிவிட்டுச் சென்ற நம் வரலாற்றை சரிச் செய்து விட வேண்டும் என்ற ஆவல். நம் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஆசை. இதற்காகத் தான் அவர்களின் இந்த தேடல் இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இவர்கள், ஏதோ போகிற போக்கில் ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் அல்ல. "டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்" என்ற பெயரில் ஒரு மையத்தைத் தொடங்கி பல ஆய்வறிக்கைகளை டாக்டர் கலைக்கோவன் வெளியிட்டுள்ளார். அவருடைய எந்த ஆய்வறிக்கையும் சரியான ஆதாரங்கள் இல்லாமல் வெளிவருவதில்லை. மிகத் தெளிவான ஆதாரங்கள் இருந்தால் தான் ஆய்வறிக்கையே வெளியிடுவார் என்று நண்பர் கமலக்கண்ணன் கூறியது உண்மையே என்று தஞ்சை பெரிய கோயிலில் அவருடன் பேசியபொழுது புரிந்தது. வெறும் அனுமானங்களை இவர் ஒப்புக் கொள்வதில்லை.

இது ஒரு புறமிருக்க தமிழகத்திலுள்ள பலக் கல்வெட்டுகள், வரலாற்றுச் சின்னங்கள் சரியானப் பரமாரிப்பு இல்லாமல் அழிந்துப் போகும் நிலையில் உள்ளன. ஏற்கனவே பலச் சின்னங்கள் அழிந்தும் போயிருக்கின்றன. இதனைக் காப்பாற்றும் அக்கறை அரசுக்கு இல்லை. இப்பொழுது பராமரிக்கப்படும் தஞ்சை பெரிய கோயில் போன்றவற்றுக்கு கூட மைய அரசிடமிருந்து குறைவான நிதியே கிடைக்கின்றது. தொல்பொருள் துறையில் பணியாற்றும் திரு.ராஜவேலு போன்ற சில வரலாற்று ஆர்வமுள்ள அதிகாரிகள் போராடி ஒரளவுக்கு நிதிப் பெறுகின்றனர். தமிழைக் காக்க எதையும் செய்யத் தயார் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் சிறிதளவு முயற்சி செய்தாலே நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆனால் இவர்கள் இதற்காக ஒன்றுமே செய்வதில்லை. இத் துறை, அரசியல்வாதிகளுக்கு வருமானம் தரும் துறையா என்ன ?

நிகழ்ச்சிக்குப் பார்வையாளராக வந்திருந்த ஒருவர் கல்வெட்டுக் குறித்துக் கவலையுடன் "பல கல்வெட்டுகள் அழிந்துப் போகும் நிலையில் இருக்கின்றன. இதனைக் காப்பாற்ற வேண்டும்" என்றார். இதற்கு டாக்டர் கலைக்கோவனின் பதில் உண்மை நிலையை பிரதிபலித்தது.

"களத்தில் இருக்கும் எங்களுக்கும் இந்தக் கவலை உண்டு. ஆனால் வெறும் வார்த்தைகளால் பேசிப் பலன் என்ன ? இங்கு முக்கியமானத் தேவை பணம் தான். எங்கள் பணத்தைக் கொண்டு செலவழித்து விட்டோம் ? அரசிடம் கேட்டுப் பார்த்து விட்டோம். பணம் கொடுங்கள். ஐந்தோ, பத்தோ கொடுங்கள். பணமிருந்தால், நாமே இந்த நிலையை மாற்றி விடலாம்"

என்றார்.

உண்மை தான். பணமிருந்தால் மிக எளிதாகக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம். ஆனால் வரலாற்றுக்கு பணம் கொடுக்கத்தான் யாருமே இல்லை.



தொடர்புடைய முந்தையப் பதிவு

Leia Mais…
Wednesday, January 26, 2005

மோசமான விளம்பரங்கள்

எளிய தமிழில், மிக அழகாக, பல நல்ல விளம்பரங்களைப் பற்றி மீனாக்ஸ் சொல்லியிருக்கிறார். அழகான விளம்பரங்களுக்கு மத்தியில் அருவருக்கத்தக்க விளம்பரங்களும் உண்டு. மைனாக்களை இம்பரஸ் பண்ணச் சொல்லும் விளம்பரங்கள் போல.

இத்தகையச் சில மோசமான விளம்பரங்களை இன்றைய இக்னாமிக் டைமிஸ் நாளிதழில் பார்த்தேன்.

ஆபாச விளம்பரங்கள் தவிர, நல்ல செய்திகளைச் சொல்ல வந்த விளம்பரங்கள் கூட அருவருக்கத்தக்க வகையில் இருக்கின்றன. உதாரணத்திற்கு கீழே உள்ளப் படத்திலிருக்கும் விளம்பரம். வறுமையில் பிறக்கும் குழந்தைகளைப் பற்றிச் சொல்ல வரும் விளம்பரம், அதை சொல்லியிருக்கும் விதம் மோசமாக இருக்கிறது. வித்தியாசமாக சொல்ல முனைந்து அருவருப்பில் முடிந்திருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை ரசிக்கும் வகையில் செய்ய முடியாது. சிந்தனையைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். மாறாக பலரின் கவனத்தைக் கவர ஒரு மோசமான முறைக் கையாளப்பட்டிருக்கிறது.



மற்றொரு விளம்பரம், ஒரு ஜவுளி விளம்பரம். புதிதாகத் துணிகளை வாங்க புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொண்டு விளம்பரம் செய்கிறது.



தினமும் வெளிவரும் பல விளம்பரங்களுக்கு மத்தியில் இந்த விளம்பரங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து விட்டன. அது தானே விளம்பரங்களின் நோக்கம். அந்த வகையில் விளம்பர நிறுவனங்கள் வெற்றிப் பெற்று விட்டன. இங்கு மற்றவர்களின் உணர்வுகளா முக்கியம். பணமும், தொழிலும் தானே முக்கியம்.

பிற விளம்பரங்களைப் பார்க்க இந்தச் சுட்டிக்கு செல்லுங்கள்

http://live.indiatimes.com/ppt/picppt/index.html


Leia Mais…

குடியரசு தினம் : காஷ்மீர் : அசாம்

இன்று குடியரசு தினம். இந்தியாவின் வல்லமையை வெளிக்காட்ட இராணுவ அணிவகுப்பு



இது ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் குடியரசு தினம், சுதந்திர தினம் வந்தாலே காஷ்மீர், அசாம் போன்ற மாநிலங்களில் திகில் தான். இன்று கூட அசாமில் சில லேசான குண்டுவெடிப்புகள் இருந்தன.("லேசான" - குண்டுவெடிப்புகள் சர்வசாதாரணமாய் போய் விட்டப் பிறகு லேசான குண்டுவெடிப்பு என்றால் நிம்மதி ). மற்றொரு நிகழ்வாக அசாமில் இராணுவம் சுட்டு 8 பேர் இறந்து விட்டார்கள். இவர்கள் பொதுமக்கள் என்று ஒரு செய்தியும், தீவிரவாதிகள் என்று இராணுவத்தினரும் சொல்கின்றனர். இராணுவம் வடகிழக்கு மாநிலங்களில் பல சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்கிறது

காஷ்மீர், அசாம் போன்ற பிரச்சனைகளுக்கு என்ன தான் தீர்வு ஏற்படப்போகிறது என்று தெரியவில்லை.

காஷ்மீரில் உள்ளக் கட்டுப்பாட்டு கோட்டை சர்வதேச எல்லையாக மாற்றி விடலாம் என்ற ஒரே நிலைப்பாடு தான் இந்தியாவிற்கு. இதன் படி இந்தியாவில் உள்ள காஷ்மீர் இந்தியாவிற்குச் சொந்தமாகி விடும். பாக்கிஸ்தானிடம் இருக்கும் மற்றொரு காஷ்மீர் பாக்கிஸ்தானுக்குச் சொந்தமாகி விடும். ஆனால் இந்திய தன்னிடம் இருக்கும் காஷ்மீரை சட்டப்பூர்வமாக்கவே இந்த திட்டத்தை முன்வைப்பதாக பாக்கிஸ்தான் நினைக்கிறது.

சமீபத்தில் பாக்கிஸ்தான் அதிபர் முஷ்ரப் ஒரு திட்டத்தை முன்வைத்தார். இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள காஷ்மீரை 7 கூறுகளாக பிரித்துக் கொண்டார். அவற்றில் இரண்டு பகுதிகள் பாக்கிஸ்தானிடம் உள்ளவை. மீதி ஐந்து இந்தியாவிடம் இருக்கின்றன (லடாக். பூன்ச், கார்கில், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு). இந்தப் பகுதிகளில் இருந்து இந்தியாவும் பாக்கிஸ்தானும் இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். சர்சைக்குரியப் பகுதிகளை இரு நாடுகளும் கூட்டாக ஆளுவது. பிறகு இந்தப் பகுதிகளை காஷ்மீர் மக்களிடம் ஒப்படைப்பது. இந்தியா இந்தத் திட்டத்தை பரிசீலனைக் கூட செய்யாது என்பது ஒரு புறம் இருக்கட்டும். பாக்கிஸ்தானில் உள்ள காஷ்மீர் பிரிவினரும், ஜிகாத் அமைப்புகளும் முஷ்ரப்பின் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர்.

காஷ்மீர் மக்களுக்கு என்ன தேவை என்பது பற்றிய ஒரு விவாதம் சமீபத்தில் NDTV தொலைக்காட்சியில் நடந்தது. காஷ்மீர் முன்னாள் முதல்வர் டாக்டர் பரூக் அப்துல்லா, காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது மகள் மெக்பூபா முப்தி,
சாஜித் அகமது லோன் (சில ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹுரியத் அமைப்பின் தலைவர் அப்துல் கானி லோனின் மகன் தான் சாஜித் அகமது லோன்) போன்றோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.

அப்பதுல்லா, முப்தி முகமது போன்றவர்கள் மட்டும் தான் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால் ஹுரியத் அமைப்பு தேர்தலில் போட்டியிடுவது இல்லை. அப்பதுல்லாவின் வாதம் தற்போதையச் சூழலில் ஏற்புடையதாக இல்லை. பிரிவினைவாதக் குழுக்களிடம் பேச்சு வார்த்தைக் கூடாது என்று சொல்கிறார். மெக்பூபா முப்தியின் வாதம், அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், தனி நாடு ஏற்கமுடியாது ஆனால் சுயாட்சி வேண்டுமென்கிறார். அப்துல் கானி லேன் கொல்லப்பட்டப் பிறகு அவரது மகன் சாஜித் லோன் பாக்கிஸ்தான் எதிர்ப்பாளராக மாறி விட்டார். இவரும் வலியுறுத்துவது சுயாட்சி தான்.

மாநில சுயாட்சி என்பது நம் தமிழ்நாட்டு அரசியலில் ஆரம்பத்தில் இருந்த ஒரு முக்கியமான விஷயம். இப்பொழுதெல்லாம் தி.மு.க. மாநாடு நடத்தினால் அதில் ஒரு தீர்மானமாக இதுவும் இருக்கும். மாநில சுயாட்சி என்பது இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய் விட்டது.

காஷ்மீருக்கு சுயாட்சி அளிக்கலாம் என்ற கோரிக்கையும், கூடாது என்ற எதிர்ப்பும் பரவலாக இருந்து வருகிறது. காஷ்மீருக்கு கொடுத்தால் மற்ற மாநிலங்களான அசாம், சிக்கிம், பஞ்சாப் போன்றவையும் இந்தப் பிரச்சனையை எழுப்பக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் காஷ்மீரின் சுயாட்சிக்காக வாதிடுபவர்கள் சுட்டிக் காட்டுவது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் 370வது சட்டப்பிரிவை.

காஷ்மீருக்கும் மற்ற மாநிலங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. எனவே எங்களை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாதீர்கள் என்பது தான் இவர்கள் வாதம். ஆனால் சங்பரிவார் அமைப்புகள் இந்த 370வது பிரிவையே நீக்க வேண்டும் என்று சொல்கின்றன.

காஷ்மீருக்கு சுயாட்சி கேட்பவர்கள் எல்லாம் காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதை ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால் ஹுரியத் அமைப்பு போன்ற குழுக்கள் கேட்பதெல்லாம் "சுதந்திரம்". தனி காஷ்மீர். இவர்கள் இந்தியாவில் சுயாட்சியுடன் இருக்கும் காஷ்மீரை ஏற்றுக் கொள்வதில்லை.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்க வேண்டும் என்பதே இந்தியர்கள் பலரின் எண்ணம். காஷ்மீர் இந்தியாவில் இருந்துப் பிரிவது இந்தியாவில் பல குழப்பங்களை ஏற்படுத்தும் . இதோடு அசாம், நாகாலாந்து, சிக்கிம் போன்ற மாநிலங்களிலும் தீவிரவாதப் பிரச்சனைகள் எழ தொடங்கி விட்டன.

தீவிரவாதத்திற்கும், குண்டு வெடிப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க என்ன தான் தீர்வு ?

Leia Mais…
Friday, January 07, 2005

சுனாமி நிவாரணப் பணிகளில் ஊழல்

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 60கிலோ அரிசி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதில் நடக்கின்ற ஊழலை NDTV வெளியிட்டுள்ளது

நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசின் சலுகைகளை சில அரசு அதிகாரிகள் காசாக்கப் பார்க்கும் அவலம்

இவர்களை என்னச் செய்ய ?


Leia Mais…