Saturday, April 01, 2006

கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படுவதன் அவசியம் குறித்தும், அதனை எப்படி அமைக்கலாம் என்பது குறித்தும் இம் மாத "திசைகள்" இதழில் திரு.மாலன் எழுதியிருக்கிறார் (கட்டுரைக்கான சுட்டிகள் - 1,2). அவர் கூறுவது போல கூட்டணி ஆட்சி அமைப்பது சாத்தியமில்லாதது என்பது எனது கருத்து. இது ஒரு Theoretical approach தான் என்றாலும் மக்களின் வாக்களிப்பு முறையில் இயல்பாக வரும் மாற்றங்கள் மூலம் தான் கூட்டணி ஆட்சி சாத்தியமாகும்.

அவ்வாறான கூட்டணி ஆட்சி முறை தமிழகத்தில் சாத்தியமாகுமா ? இந்த தேர்தல் என்றில்லாமல் எதிர்காலத்திலாவது இந்த வாய்ப்பு ஏற்படுமா ?

எந்த தியரிப்படியும் மக்கள் வாக்களிப்பதில்லை. மக்கள் ஒரே கட்சிக்கு தான் பரவலாக வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்ற கருத்து கூட இது வரையில் உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் அதுவே தொடர்ந்து கொண்டும் இருக்காது. மாற்றங்கள் ஏற்படவே செய்யும்.

மக்களின் வாக்களிக்கும் முறையில் இயல்பாகவே மாற்றங்கள் வரமுடியும். இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைந்த முறையை நோக்கும் பொழுது, தமிழகமும் அம் மாதிரியான ஒரு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது நமக்கு தெரியவரும்.

இந்தியாவில் ஒரே கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்கள் இன்று மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறார்கள். இதனை NDTVயின் பிரணாய் ராய் இந்திய ஜனநாயகம் Dynamicஆக மாறிக் கொண்டிருக்கிறது என்று வர்ணித்திருப்பார். கடந்த காலங்களில் தலைவர்களின் செல்வாக்கு, கட்சிகள் மீதான அபிமானம் போன்ற ஒரே பாணியில் வாக்களித்து கொண்டிருந்த மக்கள் (Static Pattern) சமீபகாலங்களில் கட்சிகளின் செயல்பாடுகளைக் கொண்டே வாக்களிக்கிறார்கள் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்துடன், இந்திய பொருளாதார வளர்ச்சி, குறியீடுகளின் உயர்வு போன்றவற்றுடன் ஊடகங்களின் புகழ்ச்சியுடன் கடந்த தேர்தலை சந்தித்த பாஜக தோல்வியடைந்தது கூட இந்திய வாக்காளர்கள் "மிகவும்" Dynamicஆக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தும். தங்களுடைய அடிப்படை வாழ்க்கை தேவைகளைக் கொண்டே அவர்களின் வாக்களிக்கும் முறை இருந்து வந்திருக்கிறது.

தமிழகத்திலும் இது நடந்து இருக்கிறது. 1996, 2001 ஆகிய தேர்தல்களில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களும், 2004 பாராளுமன்ற தேர்தலின் முடிவும் சமீபகால உதாரணங்கள். ஜெயலலிதா தன்னுடைய சொந்த தொகுதியில் கூட தோல்வியடைந்தார் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். மக்கள் அரசாங்கங்களின் செயல்பாடுகளை மட்டுமே கொண்டு வாக்களிக்கிறார்கள். இந்த வாக்குகளே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன. எந்தக் கட்சி எவ்வளவு வாக்கு வங்கி வைத்திருந்தாலும் அது ஒரு Static நிலை தான். அது மட்டுமே தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது இல்லை.

தமிழகத்தில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பல கருத்துக்களை பல காலமாக கூறி வந்திருக்கிறார்கள். தமிழக மக்கள் பாரளுமன்ற தேர்தலுக்கு ஒரு பாணியிலும், சட்டமன்ற தேர்தல்களில் ஒரு பாணியிலும் வாக்களிப்பார்கள் என்பதாக இரு கருத்து இருக்கிறது. சாதாரண கிராமத்து வாக்காளன், நான் பிரதமரை தேர்ந்தெடுக்கப் போகிறேன் அதனால் இவருக்கு தான் வாக்களிப்பேன் என்றோ நான் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கப் போகிறேன் அதனால் இவருக்கு தான் வாக்களிப்பேன் என்றோ தீர்மானிப்பதில்லை. படித்தவர்கள் வேண்டுமானால் இவ்வாறு வாக்களித்து கொண்டு இருக்கலாம். மக்கள் அந்த நேரத்தில் ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் கோபம் அல்லது ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் அபிமானம் இவற்றைச் சார்ந்தே வாக்களிக்கிறார்கள். அதனால் தான் 2004 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தோல்வியடைந்தது.

இன்று இந்தியாவின் மைய அரசாங்கத்தை நிர்வாகிக்கும் ஆளும் கட்சியின் எதிர்காலம் மாநில அரசுகளின் செயல்பாடுகளைக் கொண்டே உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு மாநிலத்திற்கு மாநிலம் இயல்பாக மாறும் வாக்களிக்கும் முறையே இந்தியாவில் கூட்டணி ஆட்சியை தோற்றுவித்து இருக்கிறது.

இதைத் தவிர மற்றொரு முக்கியமான காரணம் - பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி.

இந்தியாவின் தேசிய கட்சிகள் இந்தியாவின் பலதரப்பட்ட மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இந்தக் காரணமே பல பிராந்தியங்களில் பிராந்திய உணர்வு தலைத்தூக்க முக்கிய காரணம். குறிப்பாக மொழிவாரியாக பிரிக்கப்பட்ட பல மாநிலங்களில் அந்த மாநிலத்தின் உரிமை கேட்டு பிராந்திய உணர்வு தலைதூக்க தொடங்கியது. தமிழகத்தில் மொழியைச் சார்ந்து இந்த இயக்கம் இருந்தது என்றால் அசாம் போன்ற மாநிலங்களில் தேசிய கட்சிகள் தங்கள் மாநிலத்திற்கு பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரவில்லை என்பதாகவும், ஆந்திராவில் ஆந்திராவின் சுயமரியாதை போன்ற கோஷங்கள் மூலமாகவும் பிராந்திய கட்சிகள் உருவாகின. பல மாநிலங்களில் வலுவாக இருந்த பிராந்திய தலைவர்கள் தாங்கள் சார்ந்து இருந்த கட்சியையோ, காங்கிரசுக்கு மாற்றாக இருந்த கட்சியையோ பலமாக வளர்த்துக் கொள்ள முடிந்தது. இவ்வாறு தான் பல தலைவர்கள் உருவாகினர். கர்நாடகாவில் தேவகவுடா, ராமகிருஷண் ஹெக்டே, ஒரிசாவில் பிஜு பட்நாயக் பிறகு அவரது மகன், முலயாம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ், ஜார்ஜ் பிரணாண்டஸ், பால்தாக்ரோ போன்றோர் தங்களுடைய மாநிலத்தில் கணிசமான ஆதரவை பெற்றிருந்தனர். இதற்கு காரணம் மைய அரசால் பல மாநிலங்களின் தேவையை தீர்க்க முடியவில்லை. பொருளாதார பிரச்சனைகள் காங்கிரசை வலு இழக்க செய்தது. இது பிராந்திய கட்சிகளையும், தலைவர்களையும் வலு இழக்க செய்தது.

இதை எல்லாவற்றையும் விட காங்கிரஸ் இயக்கம் நேருவுக்குப் பிறகு தன்னுடைய தாக்கத்தை இழக்க தொடங்கியது. இது இந்திரா காந்தி காலத்தில் வளர்ந்து ராஜீவ் காலத்தில் பிரதிபலிக்க தொடங்கியது. இந்தியா போன்ற ஒரு பெரிய தேசத்தில் அதுவும் பல வேறுபாடுகளைக் கொண்ட தேசத்தில் ஒரே கட்சி தன்னுடைய தாக்கத்தை தொடருவது சாத்தியமில்லாதது. நேரு என்ற கவர்ச்சியான பிம்பம், சுதந்திரத்திற்கு பாடுபட்ட கட்சி என்பதை கடந்து அதுவும் ஒரு சராசரி அரசியல் கட்சி என்றான பொழுது அதிலிருந்து பல கிளைக் கட்சிகள் தோன்ற தொடங்கின. மாற்று எண்ணங்களும் வலுப்பெற தொடங்கின. அந்த மாற்று எண்ணங்களின் ஒரு அங்கமாகத் தான் பாரதீய ஜனதா கட்சி தோன்றியது. பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சி, பிற பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி போன்றவை காங்கிரசின் ஓட்டுவங்கியை கரைக்க தொடங்கின.

இவ்வாறான பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி தேவ கவுடா பிரதமராகியப் பிறகு வலுப்பெற தொடங்கியது. மாநிலம் மாநில கட்சிகளுக்கு, மைய அரசு தேசிய கட்சிகளுக்கு என்ற ரீதியில் கூட்டணி அமைத்து கொண்டிருந்த மாநில கட்சிகள் மைய அரசில் பங்கேற்பும் வாய்ப்பை பெற்றவுடன் மைய அரசில் பங்கு கொள்வதிலும், மைய அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் இருக்கும் வாய்ப்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தன.இது தேசிய கட்சிகளை மேலும் பலவீனப்படுத்தின.

ஒரு கட்சி ஆட்சி முறை களையப்பட்டு பல கட்சி கூட்டணி முறைக்கு இந்தியா இவ்வாறு தான் வந்து சேர்ந்தது. இன்று இந்த நிலையில் இருந்து இந்தியாவால் விலக முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

இதே மாதிரியான போக்கு தற்பொழுது தமிழக அரசியலில் காணப்படுகிறது. காங்கிரசின் ஓட்டு வங்கியை 1967க்குப் பிறகு கைப்பற்றிய திமுக, பின் தன்னுடைய வாக்கு வங்கியை அதிமுகவிடம் இழந்தது. வடமாவட்டங்களில் திமுகவின் பலமான வன்னியர் வாக்கு வங்கியை பாட்டாளி மக்கள் கட்சி பகிர்ந்து கொண்டது. தலித் மக்களை கொண்ட காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கியை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் கைப்பற்றியது. இது போல மதிமுகவிடம் தன்னுடைய தென் மாவட்ட வாக்கு வங்கியில் கணிசமான பங்கினை திமுக இழந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அதிமுகவின் பலமான தேவர் வாக்கு வங்கி சரியலாம்.

இதற்கும் பொருளாதார காரணங்களை தான் கூற வேண்டும். உதாரணமாக பாமக எப்படி தோன்றியது என்பதை பார்க்கு பொழுது இது நமக்கு தெரியவரும். வடமாவட்ட பிற்படுத்தப்பட்ட வன்னிய மக்கள் ஏழ்மையில் இருந்த நிலையில் அவர்களின் கல்வி வேலைவாய்ப்பிற்கான இடஒதுக்கீடு போராட்டமாக தொடங்கி பின் பொருளாதார ரீதியில் ஒரளவிற்கு முன்னேறிய நிலையில் அரசியல் அதிகாரங்களை பிடிக்க பாமக உருவாகியது. வன்னிய மக்களின் போராட்டம் நடைபெறும் வரை திராவிட கட்சிகள் இந்த மக்களை குறித்து அக்கறை கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அந்த நிலையை தனக்கு சாதகமாக வன்னியர் சங்கம் மற்றும் பாமக பாமக பயன்படுத்திக் கொண்டது.

அது போல தலித் மக்களை இரு கட்சிகளும் உதாசினப்படுத்திய நிலையில் அவர்களுக்கான இயக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் உருவாகியது. தலித் மக்களுக்ம் இந்த இயக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.

இந்தியாவில் எப்படி பிராந்திய உணர்வைச் சார்ந்து இந்த இயக்கங்கள் வளர்ந்தனவோ அது போல தமிழகத்தில் சாதியை அடிப்படையாக கொண்டு இந்த இயக்கங்கள் வளர்கின்றன. இந்தியாவில் எப்படி பிராந்திய உணர்வுகள் இயல்பாக இருக்கின்றனவோ அது போல தமிழகத்தில் சாதீய உணர்வு இயல்பாக இருப்பதால் அதனைச் சார்ந்து தான் இயக்கங்கள் வளர முடியும். தமிழகம் போன்று இருக்கும் மற்றொரு மாநிலம் உத்திரபிரதேசம். அங்கு இன்று கூட்டணி ஆட்சியைத் தான் அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்,

வடமாவட்டங்களில் ஏற்பட்ட இந்த மாற்றம் தென்மாவட்டங்களில் ஏற்படவில்லை என்றாலும் அதிமுகவைச் சார்ந்து இருக்கின்ற தேவர் வாக்குகள் எதிர்காலத்தில் சரியலாம். அப்பொழுது தென்மாவட்டங்களில் பலமாக தெரியும் அதிமுக தன்னுடைய பலத்தை இழக்கும். ஏற்கனவே வடமாவட்டங்களில் அதிமுகவிற்கு பெரிய செல்வாக்கு இல்லை. இந்த நிலையில் தென்மாவட்ட வாக்கு வங்கி சிதறும் பொழுது கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் உறுதியாகும் (இது என்னுடைய கருத்து தான். நடக்காமலும் போகலாம்). ஆனால் தற்போதைய சூழலில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் குறைவு தான்.

இன்று தமிழக அரசியலில் பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை எந்தக் கட்சியும் தனித்து போட்டியிடும் நிலையில் இல்லை. இது பெரிய கட்சிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. பாமக 30இடங்களை திமுக கூட்டணியிலோ அதிமுக கூட்டணியிலோ பெற்றுக் கொண்டு அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்ந்த முன்வந்து விடுகிறது. தனித்து போட்டியிட்டு ஒரு இடம் கூட கிடைக்காமல் இன்று மதிமுகவும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இதற்கு காரணம் சிறுகட்சிகள் தங்களை ஒரு அணியாக அமைத்துக் கொள்வதில் இருக்க கூடிய சிக்கல்கள். அதனால் பெரிய கட்சிகள் இவ்வளவு தொகுதிகள் தான் கொடுக்க முடியும் என்று சொல்லும் பொழுது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் சிறு கட்சிகளுக்கு ஏற்படுகிறது.

ஆனால் இந்த நிலையில் கூட எதிர்காலத்தில் மாற்றம் வரலாம். அது சிறிய கட்சிகள் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. சமீபத்தில் கூட பாமக-விடுதலைச் சிறுத்தைகள் இவ்வாறு இணைய தொடங்கியதையும், இவ்வாறு இணைபவர்களுக்கு நிறைய இடங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக திமுக அதனை நிராகரித்ததையும் நாம் கவனிக்க வேண்டும். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெறும் பட்சத்தில் இது எதிர்வரும் தேர்தல்களில் சாத்தியமாகலாம். அப்பொழுது பெரிய கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை குறைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் எழலாம்.

இன்று திமுக கூட்டணி போட்டியிடும் இடங்களைப் பார்க்கும் பொழுது கூட்டணி ஆட்சியை நோக்கி நாம் நகர்ந்து செல்வது தெரியவரும். திமுக 130 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. இதில் சுமார் 80% தொகுதிகளில் வெற்றி பெற்றே தீரவேண்டும். பெரிய அலை இல்லாமல் கடுமையாக போட்டியிருக்கும் இந்த தேர்தலில் இது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. அதுவும் தவிர தென்மாவட்டங்களில் பலவீனமாக இருக்கும் திமுக தென்மாவட்ட தொகுதிகளை கைப்பற்ற முடியுமா என்பதை பொறுத்தே திமுக தனித்து ஆட்சி அமைப்பதோ, கூட்டணி ஆட்சி அமைப்பதோ இருக்கிறது. திமுகவின் வெற்றியே தென்மாவட்டங்களில் அந்தக் கட்சி பெறும் வெற்றியை கொண்டே இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

அது போல அதிமுக வடமாவட்டங்களில் பலவீனமான கட்சி. விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக தவிர இந்தக் கூட்டணிக்கு வடமாவட்டங்களில் திமுக-பாமக கூட்டணியுடன் ஓப்பிடத்தகுந்த அளவில் செல்வாக்கு இல்லை. எனவே வடமாவட்டங்கள் தான் அதிமுகவின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகின்றன.

வடமாவட்டமும், தென்மாவட்டமும் இரு கூட்டணி இடையே பிரிந்து போனால் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் உருவாகும். அப்படி இல்லாவிட்டால் ஒரு கட்சி ஆட்சி தான் ஏற்படும்.

தமிழக மக்கள் எப்பொழுதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள். இந்தியாவின் முதல் தேர்தலில் இந்தியாவெங்கும் இந்திய தேசிய காங்கிரஸ் பெருவாரியாக வெற்றி பெற்று கொண்டிருக்க, சென்னை மாகாணத்தில் (தமிழகம், ஆந்திராவின் சிலப் பகுதிகளை உள்ளடக்கிய மாகாணம்) காங்கிரஸ் குறைவான இடங்களையே வெல்ல முடிந்தது.

அன்றைக்கு தொடங்கி பல தேர்தல்களில் பொதுவாக ஊடகங்கள் முன்வைத்த வாதங்களை தமிழக மக்கள் மறுத்தே வந்திருக்கிறார்கள். அது வெற்றி பெறும் கட்சிகள் குறித்து கணிப்புகளாக இருந்தாலும் சரி, சினிமா நடிகர்களை முன்வைக்கும் ஊடகங்களின் பிரச்சாரங்களாக இருந்தாலும் சரி அவற்றையெல்லாம் மக்கள் பொருட்படுத்துவதில்லை. மக்களின் உணர்வுகளை ஊடகங்கள் சரியாக பிரதிபலித்ததும் இல்லை.

இந்த தேர்தலிலும் ஆச்சரியங்கள் இருக்கலாம்.

9 மறுமொழிகள்:

குழலி / Kuzhali said...

சசி அருமையான அலசல், தேர்தல் 2006 - அரசியலின் கூட்டல், கழித்தல்கள் என்ற என் பதிவில் கிட்டத்தட்ட இதே கருத்துகளை எழுதியுள்ளேன்

7:25 PM, April 01, 2006
யாழ்ப்பாணம் said...

சசி, இந்த தேர்தலில் தான் தி.மு.க அதன் வரலாற்றிலேயே முதன் முறையாக குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிந்தேன். இம் முறை தி.மு.க 129 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதாக தமிழகத்தைச் சேர்ந்த என் நண்பர் ஒருவர் சொன்னார். சரியான எண்ணிக்கை எனக்கு தெரியாது. தனிக் கட்சியாக ஆட்சி அமைக்க 118 தொகுதிகளை கட்டாயம் வெல்ல வேண்டும். 129 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் தி.மு.க , 118 தொகுதிகளை கைப்பற்றுமா? அதாவது போட்டியிடும் தொகுதிகளில் 95 சத வீதமான தொகுதிகளில் தி.மு.க வெல்ல வேண்டும். தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளில் 95 சதவீதமான தொகுதிகளை வெல்வதென்பது மிகவும் கடினமான காரியம் என்றே நான் நினைக்கிறேன்
எனவே தி.மு.க வின் கூட்டுக் கட்சிகள்
போட்டியிடும் பல தொகுதிகளில் வென்று, தி.மு.க 118 தொகுதிகளை வெல்ல தவறும் பட்சத்தில், தமிழகத்தில் இம் முறை கூட்டாட்சி வரக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகவே நான் நினைக்கிறேன். அ.தி.மு.க அதிகமான தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்துவதால், தி.மு.க எதிர்நோக்கும் பிரச்சனைகளை அ.தி.மு.க எதிர்கொள்ள வேண்டி வராது என்றே கருதுகிறேன். சுருக்கமாகச் சொன்னால் இத் தேர்தலில், தி.மு.க வென்றால் கூட்டாட்சி, அ.தி.மு.க வென்றால் தனிக்கட்சி ஆட்சி.

8:41 PM, April 01, 2006
தமிழ் சசி said...

குழலியின் பதிவில் நான் எழுதிய பின்னூட்டம்

என்ன தான் ஜெயலலிதா சலுகைகளை அள்ளிக் கொடுத்திருந்தாலும், 2004 பாரளுமன்ற தேர்தலில் இருந்த நிலையில் இருந்து பெருத்த மாறுதல் இருக்கும் என்று சொல்ல முடியவில்லை. திமுக கூட்டணிக்கு 2004ல் சாதகமாக இருந்த Vote Swing இம் முறை கொஞ்சம் குறையும். ஆனால் எந்தளவுக்கு கடந்த முறை Vote Swing இருந்தது என்பதை பார்க்கும் பொழுது இம் முறை ஜெயலலிதா கொடுத்த சலுகைகள் பலனை கொடுக்குமா என்று தெரியவில்லை.

கடந்த முறை திமுகவிற்கு சாதகமாக சுமார் 22.56 vote swing இருந்தது. இம் முறை இந்தளவிற்கு இருக்காது என்றாலும் திமுகவிற்கு சாதகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் தங்களுடைய கருத்து கணிப்பில் அனைத்து தொகுதிகளையும் அதிமுகவிற்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் பத்திரிக்கைகளின் கருத்து கணிப்பு தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

9:05 PM, April 01, 2006
Muthu said...

சசி,
நல்ல அலசல். தமிழகத்தில் இம்முறை கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு அதிகமிருப்பதாகவே கருதுகிறேன். மக்கள் இதுவரை பல கருத்துக்கணிப்புகளையும், ஆருடங்களையும் மற்றும் தியரிகளையும் பொய்யாக்கியிருக்கிறார்கள். என்றாலும் இது ஒரு சின்ன அனுமானமே. இதுபற்றி நான் எழுதியது இங்கே.

5:34 AM, April 02, 2006
maalan said...

அன்புள்ள சசி,

தங்கள் எதிர்வினைக்கு நன்றி. என் கட்டுரையில் தெரிவித்துள்ள பல கருத்துக்களைத்தான் நீங்களும் எதிரொலித்திருக்கிறீர்கள்.மக்கள் ஒரே கட்சிக்கு வாக்களிப்பது மாறி வருகிறது என்றும், எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரி வாக்களிக்காத சூழ்நிலையில் கூட்ட்ணி ஆட்சி ஏற்படுகிறது என்பதை (என் இரண்டாவது கட்டுரையிலும்)யும், திமுக இந்த முறை 130 தொகுதிகளில் போட்டியிடுகிறது அதிலும் 106 தொகுதிகளில் அதிமுகவோடு நேரடியாக மோதுகிறது எனவும், அதனால் அது தனித்து ஆட்சியமைப்பது கடினம் என்றும் என் கட்டுரையில் விளக்கமாகவே எழுதியிருக்கிறேன். அநேகமாக அதே கருத்துக்களை நீங்களும் உங்கள் கட்டுரையில் எதிரொலித்திருக்கிறீர்கள். அப்படியிருக்க இந்தத் தேர்தல் கூட்டணி ஆட்சி அமைவதற்கான துவக்கமாக இராது என்று எப்படிக் கருதுகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. கூட்டணி ஆட்சி அமையாது என்பதற்கான உங்களின் premise என்ன வென்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
மக்கள் எந்த தியரிப்படியும் வாக்களிப்பதில்லை என்பது உண்மைதான். அவர்கள் அரசியல் யதார்த்தத்தின் அடிப்படையில்தான் வாக்களிக்கிறார்கள். ஆனால் தியரிகள் அந்த யதார்த்தத்திலிருந்தான் பிறக்கின்றன. அவை முற்றிலுமான கற்பனாவாதம் அல்ல.

ந்டாளுமன்றத்திற்கு ஒரு மாதிரி, சட்டமன்றத்திற்கு வேறு ஒரு மாதிரி மக்கள் வாக்களிப்பதில்லை என்றால் 1980 தேர்தலில் மக்கள் நாடாளுமன்றத்திற்குக் காங்கிரசிற்கும், சட்டமன்றத்திற்கு அதன் எதிரணியில் இருந்த எம்.ஜி.ஆருக்கும் வாக்களித்தது ஏன்?

இந்தத் தேர்தலிலும் ஆச்சரியங்கள் இருக்கலாம் என்கிறீர்களே அது என்ன? அதிமுக கூட்டணிக்கு வெற்றி எனச் சில அறிவியல் ரீதியில் அமையாத கருத்துக் கணிப்புக்களை சில இதழ்கள் வெளியிட்டு வருகின்றன. அந்தக் கணிப்பின்படி அமையாது, திமுக அணி வெற்றி பெற்றால் அதை ஆச்சரியம் என்பீர்களா? கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்குகளைக் கூட்டி அதன் அடிப்படையில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்கிறார்கள் திமுக அபிமானிகள். அதை மீறி திமுக வென்றால் ஆச்சரியம் என்பீர்களா? அல்லது பாரம்பரியமாக திமுகவோ அதிமுகவோதான் ஜெயிக்கும் தமிழகத்தில் தொங்கு சட்டமன்றமும், சிறுபான்மை அரசோ அல்லது கூட்டணி அரசோ அமைந்தால் அதை ஆச்சரியம் என்பீர்க்ளா?
இந்த மூன்று விதமாகவும் இல்லாமல் முடிவுகள் வேறு விதமாக இருக்கவும் சாத்தியங்கள் உண்டா?

அன்புடன்
மாலன்

9:26 AM, April 03, 2006
தயா said...

அங்கங்கே உள்ள நிலவரப்படி ஒவ்வொரு கட்சியும் கணிசமான எண்ணிக்கை பெற்று தொங்கு சட்டமன்ற நிலை வருவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது.

பெரும்பாண்மை கிடைக்குமா என்று சந்தேகம் எழுகிறது. இந்த பதிவில் உங்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தேன். http://deedaya.blogspot.com/2006/04/blog-post_01.html

நீங்கள் கவனீத்தீர்களா தெரியவில்லை.

உங்கள் பதிவின் மூலம் ஜாதி ரீதியான வாக்குகளே தொங்கு சட்டமன்ற நிலைக்கு தள்ளிவிடும் போல தெரிகிறது.

இங்கே இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளின் "commitment" ஐ கவனிக்கும் போது தமிழகத்திற்கு கூட்டணி அரசால் நன்மை விளையுமா என யோசித்தால் பயமாய் இருக்கிறது.

11:46 PM, April 03, 2006
rajkumar said...

தமிழ்சசி,

இந்த தேர்தலில் கவனிக்க வேண்டிய அம்சம்- அதிமுக அரசு முன்வைக்கும் சாதனைகளுக்கான ஆதரவு ஓட்டுக்கள் கிடைகுமா? என்பது.

தமிழக வரலாற்றில் நல்லாட்சி செய்தார்கள் என்ற காரணத்துக்காக மட்டும் மக்கள் ஒரு கட்சியை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்தியதில்லை. அதையும் மீறி உணர்ச்சிகரமான காரணங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் கூட நல்லாட்சியை மற்றும் முன்வைத்து வெற்றி பெறவில்லை. 80ல் ஆட்சி கலைப்பு, 84ல் உடல்நிலை என பிற காரணங்கள் உதவின.

இத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் நல்லாட்சிக்கான ஆதரவு பெற்ற முதல் கட்சி என்ற சாதனையை நிகழ்த்தும்.

இரண்டாவதாக, வட மாவட்டங்களில் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு கூடிய கூட்டத்தை பற்றி தினத்தந்தியில் வரும் செய்திகளை படிக்கிறீர்களா?அது உண்மையாய் உள்ள பட்சத்தில் ஜெ. ஆதரவு அலை நாடெங்கும் வீசுகிறது எனலாம். உண்மையற்ற பட்சத்தில், தினகரன் போட்ட சூட்டில் திமுக எதிர்ப்பு நிலையை தினத்தந்தி மேற்கொண்டுள்ளது என்ற முடிவுக்கு வரலாம்

12:21 AM, April 04, 2006
தமிழ் சசி said...

திரு.மாலன் அவர்களுக்கு,

உங்கள் கருத்துக்கு நன்றி

உங்களது கட்டுரையின் இரண்டாம் பகுதியான "கூட்டணி அரசை நான் எப்படி உருவாக்க முடியும்?" என்பதைத் தான் சாத்தியமில்லாத தியரி என்று நான் கூறினேன். கூட்டணி ஆட்சி இயல்பாகத் தான் உருவாக முடியும். வாக்களர்கள் கூடி உருவாக்கி விட முடியாது. இதனை காலத்திற்கேற்ப மாறும் பொருளாதார அரசியல் நிலைகள் தான் தீர்மானம் செய்கிறது.

என்னுடைய Premise குறித்து என்னுடைய பின்னூட்டத்தில் மேலோட்டமாக கூறியிருந்தேன்

ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் Vote swing, 2004 தேர்தலில் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. சுமார் 22.56% வாக்குகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இடம்மாறின. இது தான் தமிழகமெங்கும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்தது. அது மட்டுமில்லாமல் பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசங்கள் 1லட்சத்திற்கு மேல் தான் இருந்தது என்பதையும் கவனிக்க வேண்டும். இவ்வளவு வாக்குகள் திமுக கூட்டணிக்கு இடமாறியதன் காரணமாக அதிமுக தமிழகமெங்கும் வெகுசில சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதற்கு திமுக கூட்டணி பலம் ஒரு காரணம் என்றால் தமிழக அரசுக்கு எதிராக இருந்த Anti incumbency factor ஒரு முக்கிய காரணம்.
ஆக, திமுக இந்த தேர்தலில் தோல்வியடைய வேண்டுமானால் தன்னுடைய கூட்டணி ஓட்டுக்களில் திமுக 23% முதல் 24% இழக்க வேண்டும்.

இந்த Anti incumbency factor மொத்தமாக காணாமல் போய் விட்டது, ஜெயலலிதா அள்ளிக் கொடுத்த சலுகைகள் மக்களை அதிமுகவிற்கு சாதகமாக திருப்பி விட்டது போன்ற ஒரு பிம்பம் ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு ஆதரவாக சிறிது ஓட்டுக்கள் இடமாறலாம். ஆனால் திமுக -23% முதல் -24% ஓட்டுக்களை இழக்க எந்தவித காரணங்களையும் என்னால் பார்க்க முடியவில்லை. திமுகவிற்கு ஆதரவாக இருக்கும் ஓட்டுக்களில் இரண்டு வருடங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நான் கருதவில்லை. அதுவும் எதிர்கட்சியாக இருக்கும் ஒரு கட்சிக்கு மக்கள் மத்தியில் இயல்பாக ஆதரவு கூடியே இருந்து வந்திருக்கிறது. அரசின் மிதமிஞ்சிய செயல்பாடுகள் மட்டுமே மக்களை ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாற்றும்.

ஆனால் ஜெயலலிதா சில சலுகைகளை பறித்து திரும்ப கொடுத்தார், சில சலுகைகள் கொடுத்தார் என்பதற்காக அவருக்கு ஆதரவான நிலை எடுக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிறிதளவு ஓட்டுக்கள் இடமாறாலாம் என்ற கோணத்திலேயே நான் இதனைப் பார்க்கிறேன்.

ஜெயலலிதா எடுத்த பல நடவடிக்கைகள் பொருளாதார பார்வையில் பாரட்டப்பட வேண்டியவை என்ற எண்ணமுடையவன் நான். ஆனால் அது அவருக்கு அரசியலில் தோல்வியையே ஏற்படுத்தும். பொருளாதாரச் சீர்திருத்தம் என்பது மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களில் கைவைப்பதல்ல என்பது தான் இந்தியாவில் யதார்த்தமான அரசியல் நிலை. பாரதீய ஜனதா அரசு தோல்வியடைந்தது கூட இதனை உறுதிப்படுத்தியது. இதனைக் கடந்து ஒரு தனித்த பொருளாதார சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். மக்களுக்கு சலுகைகளையும் கொடுக்க வேண்டும் அதே நேரத்தில் பொருளாதாரத்தையும் அரசு கொடுக்கும் சலுகைகள் பாதிக்காத வண்ணம் கொண்டுச் செல்ல வேண்டும். இது தான் இந்திய அரசியல்வாதிகளுக்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய சவால்.

ஜெயலலிதா அரசு ஊழியர்கள் மேல் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் தன்னுடைய 2004 தோல்விக்குப் பிறகு தன்னுடைய நடவடிக்கைகளை விலக்கி கொண்டார். இதனால் அரசு ஊழியர்கள் மனம் மகிழ்ந்து இந்த தேர்தலில் ஜெயலலிதாவிற்கு ஓட்டுப்போடுவார்கள் என்று ஊடகங்கள் எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனால் இவர்களுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ஞாபகமிருக்கும் அளவுக்கு அவர் திரும்பி வழங்கிய சலுகைகள் ஞாபகமிருக்குமா என்று தெரியவில்லை. சிறுபான்மையினருக்கு அவரது மதமாற்றச் சட்டம் தான் ஞாபகத்தில் இருக்கும். இது போலவே அவரின் பல நடவடிக்கைகளைப் பார்க்கிறேன். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் வேறுபாடு தெரிகிறது. ஜெயந்திரரை கைது செய்த பொழுது ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள் என்ற ஒரு விஷயம் மட்டும் இந்த வகையில் இருந்து வேறுபட்டு இருக்கிறது.

ஆட்சியின் இறுதிக் காலத்தில் அவர் வழங்கிய கவர்ச்சிகரமான பல திட்டங்களுக்கு ஈடுகொடுக்க தமிழகத்தின் ஆதி கால பிரச்சனையான அரிசி 2ரூபாயில் இருந்து இன்றைய நவீன கவர்ச்சியான கலர் டீவி வரை கருணாநிதி அறிவித்து இருக்கிறார். கருணாநிதியின் இந்த திட்டங்கள் ஓட்டுக்களைப் பெற்று கொடுக்க முடியுமா என்பதும் ஜெயலலிதா வழங்கிய சலுகைகள் ஓட்டுக்களை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதும் கேள்விக்குறிகளே.

திமுகவின் கூட்டணி பலம், ஆளும்கட்சிக்கு எதிரான Anti incumbency factor, திமுகவிற்கு எதிராக பெருமளவில் இடம்மாற முடியாத அளவுக்கு (-23% முதல் -24%) இருக்க கூடிய கடந்த பாரளுமன்ற தேர்தல் vote swing போன்றவை திமுக கூட்டணிக்குச் சாதகமாகவே உள்ளது. இதன் அடிப்படையிலேயே கூட்டணி ஆட்சி இந்த தேர்தலில் சாத்தியம் தானா என்ற கேள்விக்குறியை எழுப்புகிறேன்.

இந்த தேர்தலில் ஊடகங்கள் எழுப்பும் பிம்பம் அதிமுக சார்பாகத் தான் இருக்கிறது. எனக்கு தமிழக கள நிலவரம் பத்திரிக்கைச் செய்திகளால் தான் தெரிகிறது. அதன் படி பார்த்தால் அதிமுக மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது. என்னுடைய மேற்கண்ட கணிப்பு இந்த தோற்றத்திற்கு எதிராக இருப்பதால் தான் ஆச்சிரியங்கள் இருக்கும் என்று என் பதிவில் எழுதினேன்.

//
ந்டாளுமன்றத்திற்கு ஒரு மாதிரி, சட்டமன்றத்திற்கு வேறு ஒரு மாதிரி மக்கள் வாக்களிப்பதில்லை என்றால் 1980 தேர்தலில் மக்கள் நாடாளுமன்றத்திற்குக் காங்கிரசிற்கும், சட்டமன்றத்திற்கு அதன் எதிரணியில் இருந்த எம்.ஜி.ஆருக்கும் வாக்களித்தது ஏன்?
//

1980 தேர்தல் குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது (அப்பொழுது எனக்கு 4வயது).
என்னுடைய தேர்தல் பதிவுகள் எல்லாமே நான் கவனித்த விஷயங்கள், அதனால் நான் வளர்த்துக் கொண்ட எண்ணங்களின் பதிவுகள் தான். நான் அருகில் இருந்து கவனித்த வந்த மக்களின் இயல்புகளை தான் பதிவுகளாக எழுதியிருக்கிறேன்.

1989க்குப் பிறகு நான் கவனித்த வந்த தேர்தல்களில் இவ்வாறான போக்கு இல்லை என்று நான் நிச்சயமாக சொல்ல முடியும். நீங்கள் கூறுவது போல 1980ல் மட்டுமே அது நடந்திருந்தால் அதனை ஒரு விதிவிலக்காக மட்டுமே பார்க்க வேண்டும்.

மாநிலத்தைச் சார்ந்த தங்கள் பிரச்சனைகளை ஒட்டியே மக்கள் வாக்களிக்கிறார்கள். இது தான் மக்களின் இயல்பாகவும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

இந்தப் பின்னூட்டத்தில் உள்ள சில கருத்துக்களை தனிப்பதிவாகவும் பதிவு செய்கிறேன்

http://thamizhsasi.blogspot.com/2006/04/blog-post_04.html

7:59 PM, April 04, 2006
Sivaprakasam said...

அருமையான அலசல். "திசைகளி"ல் மாலன்மூலம் உங்கள் blog எனக்கு கிடைத்தது. மிக்க நன்றி.

3:09 PM, April 07, 2006