திசைகள் மின்னிதழின் "தனி மனிதர் சுதந்திரம்" சிறப்பு பகுதியில் வெளியாகி இருக்கும் எனது கட்டுரை
ஒரு தனிமனிதன் தான் நினைக்கும் எதையும் எந்த வித அச்சமும் இல்லாமல் செய்ய முடிகின்ற ஒரு நிலையை தான் சுதந்திரமான உலகமாக கருதமுடியும். நாம் நினைக்கும் எதையும் என்னும் பொழுது, அது பிறர் சுதந்திரத்திற்கு பிரச்சனையாக அமைந்து விடாமல் இருப்பது முக்கியம். என்னுடைய சுதந்திரம் அளவில்லாமல் இருக்கும் பொழுது, அந்த சுதந்திரத்தை நான் தவறாக பிரயோகிக்கலாம். அவ்வாறு நான் தவறாக பிரயோகிப்பதை தடுக்க சட்டங்களும், தனி மனித சுதந்திரத்தை "குறுக்கும்" அரசாங்கத்தின் நெறிமுறைகளும் தோன்றின.
அரசாங்கத்தின் இந்தச் சட்டங்கள் தனி மனிதனை நெறிப்படுத்துவதற்காக இருந்த நிலை மாற்றம் பெற்று தன்னுடைய இருப்பை நிலை நிறுத்த அரசாங்கங்கள் செயல்படத் தொடங்கும் பொழுது தான் பிரச்சனைகளும் தோன்றுகின்றன. ஒரு நாடு தன் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் பொழுது, அந்த நிலைப்பாடு ஒரு சமூகத்தின் உரிமைகளை பாதிக்கும் பொழுது பிரச்சனைகள் தோன்றுகின்றன.
தன்னுடைய தனி மனித உரிமைக்கு பிரச்சனைகள் வரும் பொழுதெல்லாம் அதனை மக்கள் இயக்கங்கள் எதிர்த்தே வந்திருக்கின்றன. இதில் பலப் பரிமாணங்கள் உள்ளன. தன்னுடைய சுயநிர்ணய உரிமை, மொழியின் சுதந்திரம், இனத்தின் சுதந்திரம், மதச் சுதந்திரம், தன்னுடைய தனிப்பட்ட பேச்சு சுதந்திரம் போன்றவற்றை காப்பாற்ற எல்லா காலங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
தனி மனித சுதந்திரத்தில் மிக முக்கியமானதாக நான் கருதுவது என்னுடைய பேச்சு மற்றும் எழுத்துரிமையை தான். இது தான் பலப் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம். பேச்சு மற்றும் எழுத்துரிமை மிகச் சுதந்திரமாக இருக்கும் நிலையில் தான் அந்தச் சமூகம் பல ஆக்கப்பூர்வமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும். ஒரு சமூகத்தின், இனத்தின், மொழியின் வளர்ச்சி இத்தகைய ஒரு தடையில்லாத சுதந்திரமான சமூகத்தில் தான் நடைபெற முடியும். பேச்சு உரிமை ஆக்கப்பூர்வமான சிந்தனை வளத்தை உண்டாக்கும். மாற்றுச் சிந்தனைகளும், மாற்று கருத்துக்களும் வளர்ச்சி பெறும். அவ்வாறான ஒரு சமூகச் சூழலில் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி என அனைத்து நிலையிலும் பல ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் நடைபெறும்.
" I disapprove of what you say, but I will defend to the death your right to say it" என்று ஒரு பிரபல ஆங்கில எழுத்தாளர் கூறியுள்ளது போல ஒரு தனிமனிதனின் மாற்று கருத்துரிமை காப்பற்றப்பட வேண்டும்.
அதே சமயத்தில் அனைத்து நாடுகளிலுமே ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தை எந்தளவுக்கு அனுமதிப்பது என்பதும், எந்தப் பிரிவுகளில் தனிமனிதனின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது என்பதையும் சட்டங்கள் தீர்மானிக்கின்றன. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் இருக்கின்ற தீண்டாமை தடுப்பு சட்டத்தைச் சொல்லலாம். சுதந்திரத்தை தேவையில்லாமல் பயன்படுத்தி ஒரு சமூகத்தை அவமதிப்பதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. அது போல "வன்முறையை" பிரயோகித்து, மக்களின் சகஜவாழ்க்கையில் ஊறு விளைவிப்பதை பொடா போன்ற சட்டங்கள் தடைசெய்கின்றன. ஆனால் இந்தச் சட்டங்களை சரியாக பயன்படுத்தாவிட்டால் பிரச்சனைகள் தோன்றுகின்றன.
ஜனநாயக நாடுகளில் தனிமனித சுதந்திரம் மிக முக்கியமானதாக கருதப்பட்டாலும், ஜனநாயக நாடுகளிலும் பிரச்சனைகள் ஏற்படவே செய்கின்றன. ஒரே சமூக நிலையை பெற்றிருந்தால் எந்த நாடுகளிலும் பிரச்சனைகள் இருக்காது. ஆனால் ஏற்ற இறக்கங்களுடன் பல வகையான சமூக இனங்கள் வாழுகின்ற நாடுகளில் பிரச்சனைகள் ஏற்படுவது மிக இயல்பான நிலையாகவே இருக்கின்றது.
இதற்கு அடிப்படை காரணம் "பெரும்பான்மை" என்ற ஒரு நிலையைச் சுற்றியே இங்கு இருக்கின்ற ஜனநாயக அரசாங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது தான். ஒரு பெரும்பான்மை சமூகம் ஆளும் பொழுது அந்த பெரும்பான்மை சமூகத்தை முன்நிறுத்தி சிறுபான்மை சமூகத்தின் முக்கியத்துவத்தை குறைக்க "முயலும் பொழுது" பிரச்சனைகள் உருவாகின்றன. அவ்வாறு பிரச்சனைகள் உருவாகும் பொழுது மக்களை நெறிப்படுத்த வேண்டிய சட்டங்கள் தவறாக பயன்படுத்தப் படுகின்றன.
இப்படியான அடிப்படை நிலையை கொண்டு நம்மைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளை அலசும் பொழுது, தனிமனித சுதந்திரம் குறித்த போராட்டங்களை நாம் உணர முடியும்
1967ல் இந்தியை கட்டாயமாக்கிய இந்திய மைய அரசின் சட்டம் தங்களுடைய உரிமைகளை, மொழிச் சுதந்திரத்தை பாதித்ததையடுத்து தமிழகத்தில் மொழிப் போராட்டம் தொடங்கியது.
சிங்கள மொழிக்கு மட்டும் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை எதிர்த்து இலங்கையில் தொடங்கிய போராட்டம் தான் பின்னர் படிப்படியாக மாற்றம் பெற்று உரிமை போராட்டமாக, சுதந்திர தமிழீழ போராட்டமாக உருவாகி இருக்கிறது.
அது போல ஒரு தேசியத்தின் இருப்பை ஒரு சமூகம் கேள்விக்குள்ளாக்கும் பொழுது, அரசாங்கம் இந்த மாற்று சிந்தனைகளை ஒடுக்க முயலுகிறது.
இன்று உலகெங்கிலும் நிகழ்ந்து வரும் சிலப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் தேசியம் என்பதைச் சார்ந்து நடைபெறும் பிரச்சனைகளே. இது தனிமனித சுதந்திரத்தில் ஒரு சிக்கலான நிலையை தோற்றுவித்து இருக்கிறது. தேசியம் என்பது ஒவ்வொருவரின் விருப்பங்களைச் சார்ந்தே இருக்க முடியும். என்னுடைய தேசியத்தை நான் யார் மீதும் திணிக்க முடியாது. ஒரு தேசியத்தை ஏற்க மறுக்கும் சமூகத்தின் நிலையை நாம் மதிக்க வேண்டும். அவர்களின் சுயநிர்ணய உரிமைகளை நாம் பேண வேண்டும். ஒரு சமூகம் தான் விரும்பும் நாட்டினை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ப அம் மக்கள் சுயநிர்ணயம் செய்து கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு நேர்மாறான நிலையே பல தேசிய இனங்களின் பிரச்சனைகளாக இன்று உலகெங்கிலும் பல இடங்களில் நடந்து வருகிறது.
அது போல பாரம்பரியம், கலாச்சாரம் போன்ற பழமைவாதம் முன்நிறுத்தப்படும் பொழுது, அதனை எதிர்க்கும் நிலையில் பிரச்சனைகள் உருவாகின்றன. இந்தக் கட்டுரையை எழுதும் சமயத்தில் கூட சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடும் உரிமை தடைசெய்யப்பட்டது குறித்து பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. இங்கும் என்னுடைய வழிபாட்டு உரிமையை சில ஆகம கட்டுப்பாடுகள் மூலம் தடைவிதிக்கும் முயற்சிகள் என்னுடைய தனிமனித சுதந்திரத்தை பாதிக்கவே செய்கின்றன.
இப்படியான பலப் பரிமாணங்களில் தனிமனித சுதந்திரம் குறித்த பிரச்சனைகள் இன்று இந்தியாவிலும், பிற நாடுகளிலும் எழுந்திருக்கிற நிலையில் தனிமனித சுதந்திரம் எந்தளவுக்கு இந்தியாவில் பேணப்படுகிறது என்ற கேள்வி இந்தியா சுதந்திர தின மலருக்காக கட்டுரை எழுதும் பொழுது எனக்கு எழுகிறது.
இந்தியாவில் தனிமனித உரிமைகள் மிக மோசமான நிலையில் இல்லை என்றாலும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் மனித உரிமைகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. பிற மாநிலங்களில் Selective மனித உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
பல தருணங்களில் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுகின்றன. ஒரு மேடைப் பேச்சிற்காக ஒரு வருடம் பொடா சிறையில் இருந்த வைகோ, ஒரு அரசாங்கத்திற்கு எதிராக இருந்த காரணத்தால் பொடாவில் அடைக்கப்பட்ட நக்கீரன் கோபால், அஸ்ஸாம் மற்றும் காஷ்மீரில் மனித உரிமைகளை துச்சமாக மதிக்கும் இராணுவம் போன்றவை இந்தியாவில் தனிமனித சுதந்திரம் எந்தளவுக்கு பேணப்படுகின்றன என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன.
வணக்கம்
சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்
ஈழம்
என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன
ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்
காஷ்மீர்
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு
அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி
அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்
பிற கட்டுரைகள்
தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்
மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com
Monday, July 31, 2006
Selective மனித உரிமைகள்
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 7/31/2006 07:19:00 PM
Sunday, July 23, 2006
இஸ்ரேலின் பயங்கரவாதம்
இந்தப் போர் இப்படியே தொடர்ந்தால் லெபனான் என்ற நாட்டின் சிலப் பகுதிகள் முற்றிலும் அழிந்து போய் விடுமோ என்று அச்சப்படும் வகையில் அங்கிருந்து ஊடகங்களில் வரும் படங்களும், தொலைக்காட்சிப் படங்களும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேல், லெபனான் மக்கள் மீது தொடுத்திருக்கும் பயங்கரவாதத்தை கோர முகத்தை உணர்த்துவதாகவே இந்த தாக்குதல் உள்ளது.
எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு மீதோ, சிவிலியன் பகுதிகள் மீதோ இவ்வளவு பெரிய தாக்குதலை இது வரை நடத்தியதில்லை. இஸ்ரேல் என்ற அரசாங்கம் இதனை செய்வதால் இதற்கு "இராணுவ நடவடிக்கை", "Deterrent Strikes" என்றெல்லாம் பெயர் சூட்டப்படுகின்றன. ஒரு அரசாங்கம் நடத்தும் தாக்குதல் என்றாலும் சரி, தீவிரவாத குழுக்கள் நடத்தும் தாக்குதல் என்றாலும் சரி பொதுமக்கள் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும் பயங்கரவாதச் செயலாகத் தான் நான் பார்க்கிறேன்.
இஸ்ரேலின் இந்த பயங்கரவாதத்தை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் நேச நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் போக்கு இந்த நாடுகளின் மோசமான சார்பு நிலையை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா இஸ்ரேல் செய்து கொண்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நியாயப்படுத்திக் கொண்டே இருக்கும் பட்சத்தில், அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாத எண்ணங்களும் இஸ்லாமிய நாடுகளில் அதிகரித்து கொண்டே தான் இருக்கும்.
இந்தப் பிரச்சனை இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. ஜூலை 12ம் தேதி இஸ்ரேல் துருப்புகளுக்கும், ஹெஸ்பொல்லா அமைப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், இரண்டு இஸ்ரேல் இராணுவ வீரர்களை ஹெஸ்பொல்லா அமைப்பினர் சிறையெடுக்கின்றனர். இது ஒரு தேவையற்ற நடவடிக்கை. இஸ்ரேலை சீண்டிப்பார்க்கும் வேலை என்பது தான் எனது கருத்து. இஸ்ரேல் வீரர்களை விடுவிக்க வேண்டுமென்றால் பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விடுக்கின்றனர். இந்தப் பிரச்சனைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறுகின்றனர். இதனை நிராகரிக்கும் இஸ்ரேல் தங்களுடைய இரு இராணுவ வீரர்களை உடனே விடுவிக்க வேண்டுமெனக் கூறுகிறது. இராணுவ வீரர்கள் விடுவிக்கப்படும் வரையில் ஹெஸ்பொல்லா நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் எனவும் கூறி லெபனான் முழுவதும் விமானத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
நம்முடைய சமகால வரலாற்றில் மிக மூர்க்கமான ஒரு நாடு இஸ்ரேல் தான். இதனை இஸ்ரேல் அபிமானிகள் "இஸ்ரேலின் தைரியம்" எனக்கூறி கொண்டாடலாம். ஆனால் இந்த மூர்க்கத்தனத்தின் தற்போதைய கோர முகம் தான் லெபனானில் நகழ்ந்து வருகிறது.
உலகெங்கிலும் அனைத்து நாடுகளின் பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தையை வலியுறுத்தும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இங்கு பேச்சுவார்த்தைக்கு அவசியம் இல்லை, தாக்குதல் தான் சரியான வழி என்ற இஸ்ரேலின் நிலையை ஆதரிக்கும் இரட்டை வேட நாடகம் நடத்திக் கொண்டு இருக்கின்றன. இரண்டு இஸ்ரேல் இராணுவ வீரர்களுக்காக தொடங்கிய இஸ்ரேலின் பதில் தாக்குதலில் சுமார் 350க்கும் மேற்பட்ட அப்பாவி லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹெஸ்பொல்லாவின் தாக்குதலில் சுமார் 36 இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் (இஸ்ரேல் சமீபகாலங்களில் இல்லாத வகையில் மிக அதிகமான இழப்பை சந்தித்து உள்ளதாக இங்கிருக்கும் ஊடகங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன!!).
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களை விட பலம் குறைந்த நாடுகளிடமே தங்களுடைய "வீரத்தை" தொடர்ந்து நிலை நிறுத்தி வருகின்றன.
லெபனான் மீது தாக்குதலை தொடுத்திருக்கும் இஸ்ரேலுக்கு தன் மீது லெபனானால் பதில் தாக்குதல் தொடுக்க முடியாது என்பது தெரியும். காரணம் லெபனான் படையின் மொத்த பலமே 40,000 இராணுவ வீரர்கள் தான். லெபனானிடம் விமானப்படை இல்லை, கடற்ப்படை இல்லை. விமான எதிர்ப்பு பீரங்கி கூட அதிகளவில் இல்லை. இந்த தைரியம் தான் இஸ்ரேலை அந் நாடு மீது குரூரமான தாக்குதல் தொடுக்க காரணமாக அமைந்து இருக்கிறது.
ஆனால் தங்கள் மீது பதிலடி கொடுக்கக் கூடிய வல்லமை பெற்ற நாடுகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் தங்களுடைய வீரத்தை பேச்சளவிலேயே வைத்துள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஈரான், வடகொரியா போன்ற நாடுகளைச் சொல்லலாம். குறிப்பாக வடகொரியா மீது அமெரிக்காவுக்கு அச்சம் உண்டு. இன்று மரபுரீதியாக அல்லாமல் ஆயுத பலத்தை ஒட்டி தான் ஒரு நாட்டின் இராணுவ பலம் தீர்மானிக்கப் படுகிறது. இதில் பலமான நாடுகள் மீது தாக்குதல் தொடுக்கக் கூடிய வல்லமை நவீன ஆயுதபலம் மூலம் கிடைத்து விடுகிறது. வடகொரியாவை அமெரிக்காவால் தாக்க முடியும் என்றாலும் வடகொரியா அமெரிக்கா மீதும் பலமான பதிலடி கொடுக்க முடியும். அலாஸ்கா வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் வடகொரியாவிடம் உள்ளன. Missile Defence system போன்றவற்றை அமெரிக்க நிறுவ முனைந்து கொண்டிருந்தாலும், வடகொரியாவின் இந்த பலம் தான் இந் நாடு மீதான அமெரிக்காவின் தாக்குதலை பேச்சளவிலேயே வைத்திருக்கிறது.
ஆனால் இராக், லெபனான் போன்ற பலமில்லாத நாடுகளை எளிதில் தாக்கி தங்கள் "வீரத்தை" நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் ஹெஸ்பொல்லா அமைப்பு தான்
லெபனானின் தென்பகுதிகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்த பொழுது, தெற்கு லெபனானை விடுவிக்க 1980களில் உருவாகிய படை தான் ஹெஸ்பொல்லா. 2000ம் ஆண்டு இஸ்ரேல் படைகள் லெபனானில் இருந்து வெளியேற ஹெஸ்பொல்லாவின் தாக்குதல் மிக முக்கியமான காரணம். இஸ்ரேல் படைகள் வெளியேறியப் பின்னால் லெபனானில் இரு படைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ஒன்று லெபனானின் அரசு இராணுவம். மற்றொன்று ஹெஸ்பொல்லா அமைப்பு.
ஹெஸ்பொல்லாவை தீவிரவாதக் குழு என அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறினாலும், இந்த அமைப்பிற்கு லெபனான் மக்களிடையே பலமான ஆதரவு உண்டு. இஸ்ரேல் படைகள் லெபனானில் இருந்து வெளியேற ஹெஸ்பொல்லா தான் முக்கிய காரணம். இதனால் லெபனான் மக்களுக்கு ஹெஸ்பொல்லா மீது அபிமானம் உண்டு. ஹெஸ்பொல்லா அமைப்பிற்கு அரசியல் பிரிவு, இராணுவப் பிரிவு என்ற இரு பிரிவுகள் உண்டு. லெபனான் பாரளுமன்றத்தில் இதன் அரசியல் பிரிவிற்கு உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் கட்சியிலும் இது அங்கம் வகிக்கிறது. இதன் அரசியல் பிரிவு லெபனான் மக்களுக்கு பிற நிறுவனங்களுடன் இணைந்து நிறைய உதவிகளை செய்து வருகிறது. 2000ம் ஆண்டுக்குப் பின் லெபனானில் போருக்குப் பிந்தைய பல ஆக்கப்பூர்வமான பணிகளில் ஹெஸ்பொல்லா அமைப்பிற்கு முக்கியப் பங்கு உண்டு
ஹெஸ்பொல்லா தனது இராணுவப் பிரிவையும் தொடர்ந்து பராமரித்து வருகிறது. ஹெஸ்பொல்லாவிற்கு உதவிகள் சிரீயா, ஈரான் போன்ற நாடுகள் மூலம் கிடைக்கிறது என நம்பப்படுகிறது. இந்த இராணுவப்பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்கள் இருந்தாலும் அதனை ஹெஸ்பொல்லா ஏற்றுக்கொள்வதில்லை. லெபனானுக்கு என்று ஒரு இராணுவம் இருந்தாலும், தெற்கு லெபனானை தங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும் என ஹெஸ்பொல்லா கூறுகிறது. ஹெஸ்பொல்லாவின் இராணுவப் பிரிவு கலைக்கப்பட்டு லெபனான் இராணுவம், லெபனானின் தென்பகுதிகளை தங்கள் கட்டுப்பட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது இஸ்ரேலின் வாதம். ஆனால் இதனை ஹெஸ்பொல்லா தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது. அது தவிர ஹெஸ்பொல்லாவின் இராணுவப் பிரிவை தங்கள் கட்டுப்பட்டில் கொண்டு வரக்கூடிய பலம் கூட லெபனானிடம் இல்லை என்பது தான் உண்மை.
இப்படி ஒரு சிக்கலானப் பிண்ணனியில் தான் தன்னுடைய இரண்டு இராணுவ வீரர்களை விடுவிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறி வருகிறது. ஹெஸ்பொல்லா இஸ்ரேலின் இராணுவ வீரர்களை விடுவிக்கப் போவதில்லை என்று கூறி வருகிறது. ஹெஸ்பொல்லாவின் பலத்தை குறைக்க தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஹெஸ்பொல்லாவின் பலம் குறையவில்லை என அதன் தலைவர் கூறி வருகிறார்.
இவ்வாறு பிரச்சனையின் சூழல் இருக்கும் நிலையில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி லெபனான் மக்கள் தான். ஹெஸ்பொல்லாவின் நிலைகள் என்று கூறிக் கொண்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இது ஒரு பயங்கரவாதச் செயலாகவே நான் கருதுகிறேன்
உலகெங்கிலும் மனித உரிமைகளை வலியுறுத்தி வரும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இந்த தாக்குதலை நியாயப்படுத்துவதும், போர் நிறுத்த்தை வலியுறுத்தாமல் இருப்பதும் இந் நாடுகளின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகின்றன.
ஹெஸ்பொல்லாவின் முதல் நடவடிக்கை நியாயமற்றது என்பதைக் காரணம் காட்டி லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது.
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 7/23/2006 03:25:00 PM
Saturday, July 08, 2006
சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 8
போர் நடக்கும் பொழுது எந்த நாட்டின் வெற்றிக்கும், உளவுப்பிரிவு மிக முக்கியமானது. எதிரி நாட்டை சீர்குலைப்பது. அதன் மூலம் தன்னுடைய நாட்டின் நலனை பாதுகாப்பது, போரில் தனது நாட்டை வெற்றி பெற வைப்பது இவை தான் உளவுப்பிரிவின் முக்கிய வேலையாக இருந்து வருகிறது. இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே பங்களாதேஷ் உருவாவதற்காக நடந்த போர் கூட உளவுப்படையின் பங்களிப்பிற்கு முக்கிய உதாரணமாக உள்ளது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். "முக்தி பாகினி" என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்றி இந்திய இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி என்பதை விட ராவின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தியா வெற்றி பெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு இந்திய இராணுவத்தை கிழக்கு பாக்கிஸ்தானில் நுழைத்து ரா இந்தியாவை வெற்றி பெற வைத்தது (உளவு நிறுவனங்கள் பற்றிய என்னுடைய முந்தையப் பதிவு )
இதே போன்ற ஒரு நிலை தான் இன்று இலங்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இதில் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருப்பது, புலிகள் அல்ல. சிறீலங்கா உளவுப்படை தான் வெற்றி பெற்றிருக்கிறது.
கருணா - புலிகளுக்கு இன்று முக்கிய தலைவலியாக இருக்கக் கூடிய பெயர். இந்த சமாதான காலக்கட்ட துவக்கத்தில் பிரபாகரனின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்ச்செல்வன், பாலசிங்கத்துடன் மேடையில் இருந்தவர்களில் கருணாவும் ஒருவர். புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான தலைவராக இருந்த கருணாவை அவர் சமாதானப் பேச்சுவார்த்தை குழுவில் இருந்த பொழுது தான் சிறீலங்கா உளவுப்பிரிவினர் தங்கள் பக்கம் இழுத்து விட்டனர். கருணா விவகாரம் புலிகளுக்கு மிகப் பெரிய சறுக்கல். என்றாலும் புலிகள் தங்களை அந்த இழப்பில் இருந்து சரி செய்து கொண்டனர். அவர்களுடைய பலவீனங்களை சரி செய்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் கருணா பிரச்சனை அமைந்து விட்டது. மாத்தையா தொடங்கி கருணா வரை பலக் காலங்களாக புலிகளை பிளவு படுத்தும் முயற்சியை சிறீலங்கா உளவுப்படை (இந்திய உளவுப்படை ஆதரவுடன்) தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் கருணா மூலமாக வெற்றி கிடைத்தாலும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. கடந்த காலங்களில் சிறீலங்கா இராணுவத்தின் கூலிப்படையாகிப் போன பல போராளி இயக்கங்களின் நிலை தான் இன்று கருணாவிற்கும் ஏற்பட்டு இருக்கிறது.
இதைத் தவிர புலிகள் இயக்கத்தில் சிறீலங்கா உளவுப்படையினர் ஊடுறுவி இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. இந்த வாய்ப்பினை அவ்வளவு எளிதாக நிராகரித்து விட முடியாது. புலிகளின் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் உளவாளிகள் இருக்கிறார்கள் என்பதும், புலிகளின் எதிர்ப்பாளர்கள் சிலர் சிறீலங்கா இராணுவத்தின் உளவாளிகளாக இருப்பதும் கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கிறது.
சிறீலங்கா இராணுவத்தில் புலிகளின் உளவாளிகள் இருக்கிறார்கள் என்பது சில நிகழ்வுகளில் உறுதிச் செய்யப்பட்டிருக்கிறது. புலிகள் கொழுப்பில் நடத்திய தாக்குதல்களிலேயே மிக உக்கிரமான தாக்குதால் கட்டுநாயக்கா விமானப் படை தளம் - பண்டாரநாயக விமான நிலையம் மீதான தாக்குதல் தான். இந்த தாக்குதலால் பல மில்லியன் டாலர் இழப்பை சிறீலங்கா விமானப் படையும், விமானப் போக்குவரத்து நிறுவனமும் எதிர்கொண்டது. இந்த தாக்குதல் அதிபாதுகாப்பு மிக்க பகுதியில் மிகத் துல்லியமாக நடத்தப்பட்டமைக்கு காரணம் புலிகளின் உளவுப்படை தான். இந்த தாக்குதலை பல மாதங்கள் திட்டமிட்டு நடத்தினர். புலிகளின் உளவுப்படையைச் சேர்ந்த சிலரை விமான நிலையத்தை ஒட்டியப் பகுதிகளில் பல மாதங்களுக்கு முன்பே குடி அமர்த்தினர். பின்னர் இந்த விமான நிலையத்தின் வரைபடத்தை சில இராணுவ அதிகாரிகளிடம் இருந்து பெற்றனர். அந்த வரைபடத்தின் மாதிரி வடிவத்தைக் கொண்டு பல மாதங்கள் தற்கொலைப்படையினர் பயிற்சி எடுத்தனர். அவர்கள் திட்டமிட்டதை அப்படியே செயல்படுத்தினர். இவ்வாறு பல மாதங்கள் திட்டமிட்டு பொறுமையாக நடத்தப்படும் புலிகளின் தாக்குதல் தான் துல்லியமாக அமைந்து விடுகிறது.
புலிகளுக்கு தகவல் கொடுக்க கூடிய உளவாளிகள் அரசின் பாதுகாப்பு மிக்க இராணுவ நிலையங்களிலும் இருக்கிறார்கள் என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம். இவர்கள் சிங்களவர்கள் தான். இவர்கள் உளவாளிகளாக மாற வேண்டிய அவசியம் என்ன ? "பணம்" என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும். இந்த பலவீனம் அனைத்து பிரிவினருக்குமே உரியது தான். அதனை பயன்படுத்திக் கொள்வதில் தான் ஒரு உளவு நிறுவனத்தின் திறமை உள்ளது. இதற்கு பல உளவு நிறுவனங்களை உதாரணமாக சொல்ல முடியும்.
இந்தியாவின் ரா, பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்றவை இந்தியா, பாக்கிஸ்தான் முழுவதும் இந்தியர்களையும், பாக்கிஸ்தானியர்களையும் அவர்கள் நாட்டிற்கு எதிராகவே திருப்பி உள்ளது. இவ்வாறு மாற்றுவதில் இருக்கும் ஒரு வசதி, யார் உளவாளிகள் என்பதை அவ்வளவு எளிதாக கண்டுபிடித்து விட முடியாது. இராணுவத்தினரில் ஒருவராய், இராணுவ நிலையங்களில் சுற்றி இருக்கக் கூடியப் பகுதிகளில் பல வருடங்கள் வசித்து வரும் ஒருவர் உளவாளியாக மாறுவதை இராணுவத்தால் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. இவ்வாறான உத்தியை தான் விமான நிலைய தாக்குதல், லஷ்மண் கதிர்காமர் மீதான தாக்குதலில் புலிகள் பயன்படுத்தினர். லஷ்மண் கதிர்காமரின் வீட்டிற்கு அருகில் இருக்கக் கூடிய ஒரு வீட்டில் இருந்து நடத்தப்பட்ட ஸ்னைப்பர் தாக்குதலை பல மாதங்கள் திட்டமிட்டு பொறுமையாக தக்க சமயத்திற்காக காத்திருந்து புலிகள் நடத்தி உள்ளனர். லஷ்மண் கதிர்காமர் இலங்கையில் ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் அதிகப் பாதுகாப்பினை பெற்று இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பலமான பாதுகாப்புகளை உடைத்து தாக்குதலை நடத்தியிருக்கும் புலிகள், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எத்தகைய பாதுகாப்பினை வழங்குகின்றனர் என்பதை அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பில் காண முடிந்தது. அது பற்றி அப்பொழுது கட்டுரை எழுதிய "ஹிந்து", அந்த பாதுகாப்பு உலகின் மிகச் சிறந்த உளவுநிறுவனங்களை விட மிகச் சிறப்பாக இருந்ததாக எழுதியிருந்தது. இந்த பாதுகாப்பினை வர்ணித்த ஒரு வெளிநாட்டு செய்தியாளர், "காற்று கூட புலிகளின் பாதுகாப்பு வளையத்தைக் கடந்து தான் பிரபாகரனை நெருங்க முடியும்" என்பதாக கூறினார். இங்கு கவனிக்க வேண்டியது, புலிகளின் உளவுப்படை பிற நாட்டு உளவுப்படையினருடன் ஒப்பிடத்தகுந்த அளவிற்கு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதைத் தான்.
இந்த வளர்ச்சி தான் எதிர்வரும் போரில் புலிகளுக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கப் போகிறது. இலங்கையில் போர் மறைமுகமாக நடந்து கொண்டிருந்தாலும் ஒரு முழு போர் தொடங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது தான் உண்மை. நேரடியான போருக்கு செல்வது இரு தரப்பிற்குமே சவால் நிறைந்தது தான். சிறீலங்கா அரசுக்கு புலிகளின் கணிக்க முடியாத பலம் குறித்தும், போர் தொடங்கினால் வளர்ந்து வரும் அதன் பொருளாதாரம் சீரழிந்து விடும் என்ற அச்சம் உள்ளது. புலிகள் முழுமையான போர் நோக்கி செல்வதற்கு முன்பு தங்களை பல வழிகளில் தயார் படுத்திக் கொள்ள நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. அதில் முக்கியமானது இராணுவ பலத்தை முடக்குவது.
அதன் தொடர்ச்சியாகத் தான் சிறீலங்கா இராணுவத்தின் இரு உயரதிகாரிகள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டனர். சிறீலங்கா அரசு இதனை எதிர்கொள்வதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் புலிகள் அடுத்த ஆறு மாதத்திற்குப் பிறகோ, ஒரு வருடத்திற்குப் பிறகோ நடக்கப் போகும் தாக்குதலுக்கு இப்பொழுதே தங்களை பல நிலைகளில் தயார் படுத்திக் கொள்கின்றனர். தாங்கள் குறிவைக்கும் இடம் அதன் பாதுகாப்பு என அனைத்தையும் பல மாதங்கள் மிகப் பொறுமையாக கண்காணிக்கின்றனர். தங்களுடைய இலக்கை சரியாக்கிக் கொண்டு தாக்குதல் நடத்தும் பொழுது கொழும்புவில் அவர்கள் பல மாதங்களை கழித்து இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் உளவாளிகளில் சிலர் சிங்களவர்களாக கூட இருப்பார்கள். ஆனால் சிங்களவர்களுக்கு இந்த திட்டங்கள் குறித்து தெரியாது. புலிகளுக்கு தான் உதவி செய்கிறோம் என்று கூட பலருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. ஆனாலும் அவர்களின் உதவியை பயன்படுத்திக் கொள்ளும் புலிகள், தகுந்த நேரத்தில் தங்களின் இலக்கினை தாக்குகின்றனர்.
முக்கியமான இலக்காக இராணுவ, பொருளாதார மையங்கள் இருக்க கூடும். யானையிறவுப் போரில் கூட இராணுவ வீரர்களுக்கு இருந்த தொடர்புகளை முதலில் துண்டித்தப் பின்பு தான் படிப்படியாக தாக்குதல்களை அதிகரித்து, அந்த முகாமை கைப்பற்றினார். அடுத்து நடக்கப் போகும் தாக்குதல்களில் இம் முறை பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படலாம். கட்டுநாயக்கா விமானப் படை தளம் போன்ற பிற முக்கிய இராணுவ மையங்கள் இலக்காக இருக்கலாம். இதன் மூலம் இராணுவ தளவாடங்களை அழித்து விட்டு பிறகு தாக்குதல்களை தொடுப்பது புலிகளின் உத்தியாக இருக்கக் கூடும்.
இது எல்லாவற்றையும் விட புலிகளின் எண்ணிக்கை ஒரு பரந்து பட்ட தமிழீழத்தை தக்க வைக்க கூடிய அளவில் இருக்கிறதா என்பதும் கேள்விக்குரியே. இதனால் தான் புலிகளின் பகுதியை பாதுகாக்க மக்கள் படைகளை புலிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் படைகள் மூலம் கொரில்லா வகை தாக்குதல் தொடுப்பது, புலிகளின் இராணுவப் பிரிவை கொண்டு நேரடியான பெரிய தாக்குதல்களை தொடுப்பது போன்றவை புலிகளின் உத்திகளாக இருக்க கூடும்.
புலிகள் தங்களை பெரிய அளவில் அடுத்து வரும் போருக்காக தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சிறீலங்கா அரசும் தன்னுடைய ஆயுத பலத்தை பெரிய அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது வரை நடந்த போர்களைக் காட்டிலும் இந்தப் போர் உக்கிரமாக இருக்கும் என்பது அங்கு நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது தெரிகிறது.
இலங்கையில் எந்த நிமிடமும் போர் துவங்கலாம் என்று இருக்கின்ற நிலையில், இந்தப் போரில் எவ்வளவு உயிர்கள் பலியாகும் என்பதை நினைக்கும் பொழுது அச்சமாக இருக்கிறது.
ஈழ தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று, தமிழீழம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே என்னைப் போன்ற பல தமிழர்களின் எண்ணங்களாக உள்ளது. இந்தப் பிரச்சனையின் நேரடி தாக்கத்தை உணராமல், நான் எழுதிய இந்தப் பதிவு எந்தளவுக்கு உண்மையான யதார்த்த நிலையை பிரதிபலித்து இருக்கும் என்று தெரியவில்லை.
ஆனால் அங்கு வாழ்ந்து, இந்தப் பிரச்சனைகளை அனுபவித்த பத்திரிக்கையாளர் சிவநாயகம் அவர்களின் "SRILANKA: WITNESS TO HISTORY" என்ற புத்தகத்தில் இருந்து சில வரிகளுடன் இந்த தொடரை முடித்துக் கொள்கிறேன்.
*************
In a country (ceylon) that earned its independence after 450 years of western colonial rule "without a shot being fired", the one dominating factor today is THE GUN
*************
1956ல் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக்கலவரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சிவநாயகம் பின்வருமாறு கூறுகிறார்
A gang of thugs stormed into my compartment making threatening noises against all Tamils, and there I was, the only Tamil around, an obvious sitting target. They came for me. The ruffian in front barged in, swept my glasses off my face, and began dragging me... Except my black coated neighbour who was trying to reason out with my attackers not to harm me (who was immediately silenced with a blow on his face) the others merely watched, the women with sullen disapproval, but all of them fearing to come to my defence. The intention of ruffians was very clear. they had a brilliant thought in their heads, to push me out of the moving train!.....
Looking back at my train experience that morning, it dawned on me, at the 25th year of my life that bitter truth...I was a Tamil
What i failed to realise for myself, those thugs taught me. It was the kind of experience that changed my outlook in life forever.
*************
The Tamil Fedral Party under the leadership of that gentle christian Samuel James Chelvanayakam believed in the Philosophy of non-violent action as a way of protest against injustice. Tamils had traditionally come under the influence of the Indian Gandhian movement for independence from the time of the Jaffna Youth congress of the 1920s and 30s. The value of the concept of Satyagraha was, unlike in the case of the singhalese, ingrained in the Tamil mind. It is this that led them to organise what they believed was a peaceful satayagraha at the Parliament (Against the introduction of the "singhala only" bill in parliament on June 5, 1956)
The moment the volunteers and leaders reassembled at the hotel end (Galle Face), a waiting mob of more than a thousand sinhalese toughs fell on them like a pack of wolves in a most inhuman and cowardly attack. They (the satyagrahis) were thrashed and felled prostrate on the ground. Their placards were seized and the wooden poles used as clubs.Some were trampled upon, kicked, beaten and spat upon.
Not even a single satyagrahi raised in retaliation....
*************
The period of 1956 to 1960 was one of signifiance for another reason... The realisation had come that Tamils as a People could never expect a fair deal under a unitary set-up where power was permanently entrenched in a numerically powerful sinhala majority
*************
1972 saw the birth of the Tamil Tiger movement. 1972 also saw the promulgation of the Republican constitution which while turning the country into a virtual sinhala-buddhist state effectively alienated the Tamil people from the body politic...
Pirabakaran was barely eighteen when he founded the Tiger movement in 1972, what was then called the "Tamil New Tigers"
*************
இந்த தொடரை தொடர்ந்து வாசித்து வந்த பல நண்பர்களுக்கும், பின்னூட்டங்கள் எழுதியும், நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் என்னுடன் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 7/08/2006 06:20:00 PM
குறிச்சொற்கள் Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம்
Friday, July 07, 2006
சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 7
திருகோணமலை துறைமுகம், அற்புதமான, மற்றும் பாதுகாப்பான இயற்கை துறைமுகம். இங்கு இரண்டு துறைமுகங்கள் உண்டு. உள் துறைமுகம் (Inner Harbour), வெளி துறைமுகம் - Outer Harbour என்று கூறுவார்கள். பாறைகளும், நிலங்களும் சூழ்ந்த துறைமுகம் தான் Inner Harbour எனப்படும் உள் துறைமுகம் (படத்தில் பார்க்கலாம்).இது நிலங்கள் சூழ அமைந்து இருப்பது மட்டுமில்லாமல், இயற்கையாகவே ஆழம் அதிகமான துறைமுகம். சுற்றிலும் நிலங்கள் இருப்பதாலும், ஆழம் அதிகம் இருப்பதாலும், நீர்முழ்கி கப்பல்கள் முதல் சாதாரண கப்பல்கள் வரை இங்கே பாதுகாப்பாக இருக்க முடியும். அது தவிர சுற்றிலும் நிலங்கள் சூழ, ஆழமும் அதிகமாக இருப்பதால் ரேடார் மற்றும் சோனார் (Sonar) மூலமான கண்காணிப்புகளில் இருந்து தப்பிக்கவும் முடியும்.
திரிகோணமலை துறைமுகம் மன்னர் ஆட்சி தொடங்கி, பிரிட்டிஷ் ஆட்சி முதல் இன்றைய காலகட்டம் வரை முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கு காரணம், இத்தகைய இயற்கையான பாதுகாப்பு வளையம் தான். இத்தனை பாதுகாப்பு மிக்க ஒரு துறைமுகம், பொருளாதார முக்கியத்துவம் மிக்க ஒரு கடற்பரப்பில் அமைந்து இருப்பது, இந்த துறைமுகத்தை வைத்திருக்கும் நாட்டிற்கு மிகவும் சாதகமானது. இந்த துறைமுகத்தை வைத்திருக்கும் நாடு, இந்துமகா சமுத்திரத்தை தனது பலத்தால் ஆதிக்கம் செலுத்த முடியும்.
இதனால் தான் பனிப்போர் காலத்தில் இந்த துறைமுகத்திற்காக அமெரிக்காவும், இந்தியாவும் கடுமையாக போட்டியிட்டன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால் ஏற்பட்ட மிக முக்கியப் பலன், இந்த துறைமுகத்தையோ, இலங்கையின் வேறு எந்த துறைமுகத்தையோ, இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கையால் வேறு ஒரு நாட்டிற்கு கொடுக்க முடியாது என்பது தான். இதனால் அமெரிக்காவோ, சீனாவோ, பாக்கிஸ்தானோ திரிகோணமலை என்றில்லாமல் இலங்கையின் எந்த ஒரு துறைமுகத்திலும் இந்தியாவின் நலன்களுக்கு விரோதமாக நுழைய முடியாது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரே பலன் இந்தியாவின் நலன் பாதுகாக்கப்பட்டது தான். ஒரு வகையில் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே அது தான். தன்னுடைய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற காரணத்தால் தான், இந்தியா இலங்கைப் பிரச்சனையில் கடந்த 15ஆண்டுகளாக "நேரடியாக" எந்த தலையீட்டையும் செலுத்தவில்லை.
2000ம் ஆண்டு அக்டோபர் மாதம், திரிகோணமலை துறைமுகத்தின் மீது புலிகள் கடும் தாக்குதலை தொடுத்தனர். இந்த தாக்குதலை கவனிக்கும் பொழுது அவர்களின் எதிர்கால தாக்குதல் உத்திகள் நமக்கு தெரியக்கூடியதாக இருக்கிறது. கடற்ப்படையின் பலம் அவர்களிடம் இருக்கும் தளவாடங்கள் என்றால், புலிகளின் பலம் அவர்களிடம் இருக்கும் தற்கொலைப் படை என்று சொல்லப்படும் கரும்புலிகள் தான். கரும்புலிகள் படையை அரசியல் தலைவர்களின் மீதான தக்குதல்களுக்கு மட்டும் என்றே அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் சிறீலங்கா இராணுவம் என்றில்லாமல் வேறு எந்த நாடும் அஞ்சக்கூடிய படை இந்தக் கரும்புலிகள் தான். முக்கியமான பொருளாதார, இராணுவ இலக்கு தவிர போரின் பொழுதும் கரும்புலிகளின் தாக்குதல் உக்கிரமாகவே இருக்கும். யானையிறவு தாக்குதலில் கூட கரும்புலிகளின் தாக்குதல் தான் சிறீலங்கா இராணுவத்தை தோல்வியுறச் செய்தது.
கரும்புலிகளில் இது வரை அதிக அளவு பயன்படுத்தப்பட்டிருப்பவர்கள் கடற்ப்புலிகளே. 2000ம் ஆண்டு திரிகோணமலை கடற்ப்படை தளம் மீதான தாக்குதலுக்கு Stealth Boats என்று சொல்லக்கூடிய ஒரு வகை சண்டைப் படகினை புலிகள் பயன்படுத்தினர். Stealth Boats அதிவேகமாகச் செல்லக்கூடியவை. இவை ரேடார் கண்காணிப்பில் மண்ணைத் தூவி விட்டு தங்கள் இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. இரண்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த Stealth Boatsல் ஆயுதங்களை நிரப்பி, அதனை எதிரியின் இலக்கின் மீது கரும்புலிகள் மோதச் செய்வார்கள். கரும்புலிகள் இந்த தாக்குதல்களை நடத்துவதற்கு சாதகமாக புலிகளின் பிறப்படையினர், இராணுவ நிலைகள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களின் கவனத்தை திசை திருப்புவார்கள். இரணுவத்தின் கவனம் திசை திரும்பும் சமயத்தில் இந்தப் படகுகள் சீறிப்பாய்ந்து இராணுவத்தின் நிலைகளை தாக்கும். கடல் அலையின் மறைவில், இந்தப் படகு செல்வதாலும், ரேடாரில் தெரியாததாலும், இதனை கண்காணிப்பது இராணுவத்திற்கு கடினம். இந்தப் படகுகள் இராணுவ நிலையை அழிக்கும் பொழுது, இராணுவத்தினர் தன்னம்பிக்கை குலைகிறது. தொடர்ச்சியாக இத்தகைய தற்கொலை தாக்குதல் நடக்கும் பொழுது இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் இராணுவம் பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது.
2000ம் ஆண்டு புலிகள் இந்த Stealth Boatsஐ பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தியது இராணுவத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இராணுவத்தினர் ஆயுதங்களை பெறும் பொழுதெல்லாம், அந்த ஆயுதப் பலத்தினை அழிக்க கூடிய வல்லமையை புலிகள் பெற்று விடுகின்றனர். இப்பொழுது கூட புலிகளிடம் சில சிறிய வகை நீர்முழ்கிக் கப்பல்கள் இருக்க கூடும் என்றும், இவை தற்கொலைப் படையினருக்கு பயன்படக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. இவை தவிர கடலுக்குள் முழ்கிச் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய சிலப் படைப்பிரிவிரை புலிகள் வைத்திருப்பதாகவும் ஊடகங்களில் பார்க்க முடிந்தது. இத்தகையப் படையுடன் உயிரைச் துச்சமென மதிக்கும் படையினரும் சேர்ந்து கொள்ள, புலிகளுக்கு சிறீலங்கா இராணுவத்தைக் காட்டிலும் ஒரு Advantage அமைந்து விடுகிறது.
இது ஒரு புறம் இருக்க, புலிகள் இந்த துறைமுகத்தை கைப்பற்றுவது அத்தனை எளிதல்ல. சிறீலங்கா கடற்ப்படை மிகவும் பலமாக இங்கு நிறுவப்பட்டிருக்கிறது என்பது மட்டுமில்லாமல், தன்னுடைய பலத்தை சிறீலங்கா கடற்ப்படை அதிகரித்துள்ளது.
ஆனாலும் சிறீலங்கா இராணுவத்தை தோற்கடிக்க கூடிய சில வழிகளைப் புலிகள் கடந்த ஆறு மாதங்களில் செய்து கொண்டிருக்கிறார்கள். கடற்ப்படை வீரர்களின் தன்னம்பிக்கையை குலைப்பது, சிறீலங்கா இராணுவத்தின் ஆயுத தளவாடங்கள் மற்றும் இராணுவத்தின் உயரதிகாரிகளை அழிப்பது, சிறீலங்கா இராணுவத்தினுள் ஊடுறுவது போன்றவையே அந்த நடவடிக்கைகள். இதைத் தான் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புலிகள் செய்து வருகிறார்கள். இராணுவமும் இதே வகையில் தங்கள் Deep Penetration Unit மற்றும் கருணா குழு மூலமாக எதிர்த்தாக்குதலை தொடுத்து வருகிறது. இவை இரண்டுமே மறைமுகமாக நடந்து வரும் போர் தான் என்றாலும் எதிர்கால போருக்கான ஆயத்தங்களாகவே இருக்கிறது.
புலிகளுக்கும், சிறீலங்கா இராணுவத்திற்கும் இடையே நடக்கும் இந்த மறைமுக தாக்குதல் நேரடி தாக்குதலை விட மிக மோசமாக இருப்பதன் வெளிப்பாடு தான் கடந்த ஆறு மாதங்களாக வடகிழக்கு மாகாணங்களில் நடந்து வரும் கொலை வெறி தாக்குதல்கள். இந்த தாக்குதலை தொடுப்பது சிறீலங்காவின் இராணுவ மற்றும் துணை ஆயுதக் குழுக்கள். இது போலவே கொழும்புவில் நடக்கும் தாக்குதலை நடத்துவது புலிகளின் உளவுப் பிரிவு.
அடுத்து நடக்க இருக்கும் போர், இறுதிப் போராக இருக்கும் என புலிகள் கூறிக்கொண்டிருக்கின்றனர். இந்த இறுதிப் போரில் முக்கியமான படையாக இருக்கப் போகும் மற்றொரு பிரிவு புலிகளின் உளவுப்படை. புலிகளின் இந்த உளவுப்படை சிறீலங்கா அரசின் பொருளாதார, இராணுவ மையங்கள் என்றில்லாமல் கொழும்பு எங்கும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. சிறீலங்கா அரசு முன் இப்பொழுது இருக்கும் மிகப் பெரிய சவால் இந்த உளவுப்பிரிவினரிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதே. ஏனெனில் வடகிழக்கு மாகாணங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைத் தொடர்புகளையும், இராணுவத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை துண்டிக்கவும் புலிகளின் உளவுப்படை முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
புலிகளின் உளவுப்படையை எதிர்கொள்வது, சிறீலங்கா அரசுக்கு அத்தனை எளிதாக இருக்காது
ஏனெனில் புலிகளின் உளவுப்பிரிவில் இருப்பவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல. சிங்களவர்களும் அதிக அளவில் புலிகளின் உளவுப்படையில் இருப்பதே சிறீலங்கா அரசிற்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது
( அடுத்தப் பதிவுடன் இந்த தொடர் நிறைவு பெறும் )
Tags
Strategic Analysis
தமிழ்ப்பதிவுகள்
ஈழம்
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 7/07/2006 06:10:00 PM
குறிச்சொற்கள் Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம்
Tuesday, July 04, 2006
சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 6
கடந்தப் பதிவில் கூறியிருந்தது போல புலிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் "அவசர" தடை சிலக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டது. இது முழுக்க முழுக்க ஐரோப்பிய யூனியனின் ஒப்புதலுடன் செய்யப்பட்டது என்றும் கூற முடியாது. புலிகள் மீது ஒரு "நிர்பந்தத்தை" விதிக்க அமெரிக்காவின் "வற்புறுத்தல்" காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டது என்பது பொதுவாக அனைவரும் கூறும் வாதம். இது சரியானதே. ஆனாலும் அமெரிக்காவின் வற்புறுத்தல் தவிர திடீர் என்று விதிக்கப்பட்ட இந்த தடைக்கு சில பிண்ணனிக் காரணங்கள் இருப்பதை நாம் மறுக்க முடியாது.
மே மாதம் 11ம் தேதி நடந்த நிகழ்வுகள் தான் புலிகள் மீது ஐரோப்பிய யூனியன் தடை விதிக்க முக்கிய காரணம் என நான் நினைக்கிறேன். அன்று Pearl Cruise என்ற சிறீலங்கா கடற்ப்படையின் கப்பல், சுமார் 700 கடற்ப்படை வீரர்களை ஏற்றிக் கொண்டு திரிகோணமலையில் இருந்து காங்கேசன்துறை செல்லத் தொடங்கியது. அந்தக் கப்பலில் இரண்டு SLMM (Srilanka Monitoring Mission) பிரதிநிதிகளும் பயணம் செய்து கொண்டிருந்தனர். கடந்த ஆறு மாத காலங்களில் தொடர்ந்து நடந்து வந்த கடற்ச்சமரின் உச்சகட்டம் அன்று நடந்தது. திரிகோணமலையில் இருந்து காங்கேசன்துறைச் செல்ல புலிகளின் பகுதிகளை ஒட்டிய கடல் வழியாகத் தான் செல்ல வேண்டும். இந்தக் கடற்ப்பரப்பு தங்களுக்குச் சொந்தமானது என்பதை முன்நிறுத்துவதில் புலிகளுக்கு ஆர்வம் அதிகம்.
இந்தக் கப்பலுக்கு பாதுகாப்பாக சிறீலங்கா கடற்ப்படையின் பிற கப்பல்களும் சென்று கொண்டிருந்தன. இதனை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டிய கடற்ப்பரப்பில் புலிகள் தாக்கினர். மிகக் கடுமையான சண்டை நடந்தது. புலிகளின் தற்கொலைப் படையினரும் இந்த தாக்குதலில் பங்கேற்று இருந்தனர். அவர்களால் 700கடற்ப்படை வீரர்களை கொண்ட கப்பலை எளிதில் முழ்கடித்து இருக்க முடியும். ஆனால் அதனைச் செய்ய வில்லை. மாறாக தங்களின் கடற்ப்பரப்பு மீது இருக்கும் ஆதிக்கத்தை நிலை நாட்டும் வகையில் அந்தக் கப்பலை சர்வதேச கடல்பரப்பிற்குச் செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். சிறீலங்கா இராணுவத்தின் அந்தக் கப்பலும் சர்வதேச கடற்ப்பரப்பிற்க்குச் சென்று பிறகு காங்கேசன் துறைமுகத்தைச் சென்றடைந்தது (அது குறித்தச் செய்தி)
இதன் மூலம் அவர்கள் விடுக்கும் செய்தி தெளிவானது. சிறீலங்கா கடற்ப்படைக்கு முல்லைத்தீவினை ஒட்டிய கடற்ப்பரப்பு மீது எந்த அதிகாரமும் இல்லை. அதாவது இந்த கடற்ப்பரப்பு தங்களுக்குச் சொந்தமானது என்பதாகவும் இந்துமகா சமுத்திரத்தின் கடற்பரப்பில் தாங்களும் ஒரு கடற்ப்படை என்பதை அறிவிக்கும் ஒரு செயலாகவும் இதனை முன்நிறுத்தியிருந்தனர்.
இதற்குப் பிறகு நடந்த SLMM - புலிகள் மோதல் முக்கியமானது. இந்தப் பிரச்சனைக்குப் பிறகு "இலங்கையை சுற்றிலும் இருக்கும் அனைத்து கடற்பரப்பும் அரசாங்கத்திற்கு "மட்டுமே" சொந்தமானது என்றும், புலிகளுக்கு இந்த கடற்ப்பரப்பு மீதோ, இலங்கையின் வான்வெளி மீதோ எந்த அதிகாரமும் இல்லை" என்றும் SLMM கூறியது.
Sea surrounding Sri Lanka is a Government Controlled area. Non-state actors cannot rule open sea waters or airspace. The LTTE has therefore no rights at sea
இது புலிகளுக்கும், SLMMக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தியது. கடற்ப்புலிகளின் தலைவர் சூசை, அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர், புலிகளின் பகுதிகளைச் சார்ந்த கடல், வான்வெளி மீது தங்களுக்கு முழு உரிமையும் இருப்பதாக தெரிவித்தனர். ஒரு வகையில் இவ்வாறு தங்களின் ஆதிக்கத்தை கடல் மீது நிலை நிறுத்துவது தான் இந்தப் பிரச்சனையின் முக்கிய நோக்கமாக இருந்தது. கடந்த ஆறு மாதங்களாக புலிகளின் கடற்ப்படைக்கும், சிறீலங்கா இராணுவ கடற்ப்படைக்கும் இடையே நடந்த மோதலின் முக்கிய நோக்கமே இதனை நிலை நிறுத்துவதாகத் தான் இருந்து வருகிறது.
சூசை, மற்றும் தமிழ்ச்செல்வனின் அறிக்கையை படிக்கும் பொழுது இதனை தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. தமிழ்நெட் இணையத்தளம் இவ்வாறு தெரிவிக்கிறது
Soosai reiterates sovereign right to seas bordering Tamil Homeland என்று தொடங்கும் அந்தச் செய்தி இவ்வாறு தெரிவிக்கிறது.
"We have openly established our control, and have unequivocally asserted our rights to maritime waters adjoining our homeland, in the same way we recovered and control large areas of northeast. We are not prepared to relinquish sovereign rights to the seas which we have won with the sacrifice of our people," said Col.Soosai
SLMM has no mandate to rule on Tamils sovereign rights - Thamilchelvan என்று தொடங்கும் மற்றொரு செய்தி இவ்வாறு தெரிவிக்கிறது
"We entered the peace process based on a status-quo achieved in the battlefield in our territory. Nobody has the right to pass judgement on the sovereign rights of our access to the adjacent sea and airspace of our homeland," told LTTE's Political Head S.P.Thamilchelvan
SLMM-புலிகளின் இந்த கருத்து மோதல் நடந்தது மே 12ம் தேதி.
புலிகள் தங்களை ஒரு கடற்ப்படையாக நிலை நிறுத்திக் கொள்ள முனைவதை மிகத் தெளிவாக இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது. இந் நிலையில் தான் அமெரிக்கா தனது கடந்த கால நிர்பந்தங்களை மீண்டும் வலியுறுத்தியது. அதன் விளைவு மிகச் சில தினங்களில் வெளிப்பட்டது. அதாவது மே 17ம் தேதி ஐரோப்பிய யூனியன் புலிகள் மீது விரைவில் தடை விதிக்கும் என்ற செய்தி வெளியாகிறது. விரைவில் என்றால் அடுத்த இரு தினங்களில் இந்த தடை வரும் என்று அறிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் தடை விதிப்பது உறுதி என்ற வகையில் மே20ம் தேதி செய்திகள் வெளியாகின.
புலிகள் மீது தடை விதிப்பதை நார்வே மற்றும் பிற நார்டிக் நாடுகள் விரும்பவில்லை (Scandinavian countries). இது சமாதான முயற்சிகளுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் நினைத்தனர். இது தவிர இந் நாடுகளுக்கு உலகின் பலப் பிரச்சனைகளில் சமாதான அணுசரணையாளராக ஈடுபடுத்திக் கொள்ளும் ஆர்வம் இருப்பதால், இது ஒரு நல்ல உத்தியாக இருக்காது என்பதும் அவர்களது எண்ணம் (என்னுடைய முந்தைப் பதிவைப் பார்க்கலாம்). இது தொடர்பாகவும் சில செய்திகள் அப்பொழுது வந்து கொண்டிருந்தன. என்றாலும் இதனை ஒப்புக்கொள்ளும்படி நார்வே மற்றும் இந் நாடுகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் கடும் நிர்பந்தம் கொடுத்தன. இறுதியாக மே29ம் தேதி ஐரோப்பிய யூனியன் தடைவிதித்தது.
இதற்குப் பிறகு ஓஸ்லோவில் நடக்க இருந்த பேச்சுவார்த்தை அதிக கவனத்தை ஈர்த்து இருந்தது. புலிகள் மீதான தடைக்குப் பிறகு உலக நாடுகளின் நிர்பந்தத்தை புலிகளிடம் மீண்டும் வலியுறுத்த இந்த பேச்சுவார்த்தை ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த கவன ஈர்ப்பை தங்கள் நிலையை வெளிப்படுத்த புலிகள் பயன்படுத்திக் கொண்டனர்.
முதலில் சிறீலங்கா அரசு பிரதிநிதிகளை சந்திக்க மறுத்ததன் மூலம் தங்கள் மீது கவனத்தை ஈர்த்துக் கொண்டது மட்டுமில்லாமல், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் SLMM குழுவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று புலிகள் கோரிக்கை விடுத்தனர். புலிகளின் இந்த எதிர்வினை உலகநாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புலிகள் மீது நிர்பந்தத்தை விதிக்க மேற்க்கொண்ட இந்த நடவடிக்கை எதிர்வினையாக தங்கள் மீது பாய்ந்ததை உலக நாடுகள் மற்றும் அணுசரணையாளரான நார்வே எதிர்பார்க்க வில்லை.
இவை தவிர பொதுவாக இத்தகைய சமாதான முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை ஒரு முக்கியமான வெளியுறவுக் கொள்கையாக கடைப்பிடித்து வரும் நார்ட்டிக் நாடுகளுக்கு, புலிகள் தங்களை சமாதான முயற்சியில் இருந்து வெளியேற நிர்பந்தித்தது அவர்களின் வெளியூறவுக் கொள்கைக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது.
இதன் மூலம், எந்த நாட்டாலும் தங்களை நிர்பந்திக்க முடியாது என்பது மட்டுமில்லாமல், அந்த நாடுகளின், அமைப்பின் நடுநிலைமையை கேள்விக்குரியாக்குவது, அதன் மூலம் தங்களின் நிலையை வெளிப்படுத்துவது, தங்களுடைய முயற்சி "தமிழ் ஈழத்தை" நோக்கியதாக மட்டுமே இருக்கும் என்பதை அறிவிப்பது என்பன தான் புலிகளின் நோக்கங்களாக இருந்தது. ஐரோப்பிய யூனியனின் தடை மிகத் தவறான ஒன்று என நார்வே மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த Scandinavian நாடுகளான ஸ்வீடன், டென்மார்க் போன்றவையும் பின்னர் தெரிவிக்க தொடங்கியதை கவனிக்க வேண்டும்.
முன் எப்பொழுதையும் விட ஐரோப்பிய யூனியன் தடைக்குப் பிந்தைய நாட்களில் தங்களுடைய நோக்கம் தமிழீழம் என்பதை மிகத் தெளிவாகவே உலக நாடுகளுக்கு புலிகள் உணர்த்தியுள்ளனர். ஓஸ்லோவில் வெளியிட்ட அறிக்கை அதனையே வெளிப்படுத்தியது
The de facto State of Tamil Eelam exercising jurisdiction over 70 percent of the Tamil Homeland, with control over the seas appurtenant there, with its own laws, independent judiciary, police force and full administrative apparatus
என்று தொடங்கும் அந்த அறிக்கை,
Reaffirms its policy of finding a solution to the Tamil national question based on the realisation of its right to self-determination.
என்று முடிந்துள்ளது.
தமிழர்களின் "சுயநிர்ணய உரிமை" என்பதை நோக்கி தான் தீர்வு இருக்க வேண்டும் என்பது தான் அந்த அறிக்கை மூலம் புலிகள் தெரிவித்த செய்தி. அது தமிழீழம் என்பது தான் தீர்வாக இருக்க முடியும் என்ற புலிகளின் ஒரே அஜண்டாவை தான் வெளிப்படுத்துகிறது. இந்தியாவை நோக்கிய புலிகளின் அணுகுமுறை கூட இதனை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
புலிகளின் இந்த நிலைப்பாடு தான் இந்தப் பிரச்சனையின் நிச்சயமற்ற தன்மையையும் அதிகரித்து இருக்கிறது. சிறீலங்கா அரசாங்கம், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் அணுசரனையாளரான நார்வே என அனைத்து தரப்பிற்கும் இந்தப் பிரச்சனையை எப்படி அணுகுவது என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால் இப் பிரச்சனையில் எந்தக் குழப்பமும் இல்லாமல் ஒரே இலக்கை நோக்கி, சமயத்திற்கேற்ப தனது சாதூரியங்களை மாற்றி அமைத்துக் கொண்டு, தெளிவாக இருக்கும் ஒரே தரப்பு புலிகள் தான்.
புலிகளுக்கு தமிழ் ஈழம், சிறீலங்கா அரசுக்கு ஒரே நாடு, சர்வதேச சமூகத்திற்கு கூட்டாட்சி என மூன்று பக்கமாக இழுக்கப்படும் இந்தப் பிரச்சனையில், சமாதானம் என்பது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றது என்பதும் போர் என்பது தவிர்க்க முடியாதது என்பதும் தான் தற்போதைய சூழ்நிலை.
(தொடரும்)
Tags
Strategic Analysis
தமிழ்ப்பதிவுகள்
ஈழம்
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 7/04/2006 06:30:00 PM
குறிச்சொற்கள் Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம்
Monday, July 03, 2006
சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 5
கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் நடந்து வரும் சண்டைகளுக்கு புலிகள் மீது கருணா குழு என்ற பெயரில் இராணுவமும், இராணுவம் மீது பொங்கு தமிழ்ப் படை என்ற பெயரில் புலிகளும் மறைமுகமாக தொடுக்கும் தாக்குதல் ஒரு முக்கிய காரணம். இரு பிரிவுகளின் உளவுப்படையினர் கடும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் தான் புலிகள் மீதான கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் தடை விதித்தன. கனடாவின் தடை எதிர்பார்த்த ஒன்று என்பதால் அது ஆச்சரியம் அளிக்க வில்லை. ஐரோப்பிய யூனியன் தடை விதிக்கக் கூடும் என கடந்த காலங்களில் எச்சரிக்கை மற்றும் நிர்பந்தங்களை வெளியிட்டு இருந்தாலும், ஐரோப்பிய யூனியன் தடை விதிக்க கூடும் என்ற நிலை இருந்தாலும், ஒரு சில நாட்களில் திடீர் என எடுத்த முடிவு ஆச்சரியப்படுத்தியது. லஷ்மன் கதிர்காமர் படுகொலை சமயத்தில் பயணத் தடை விதித்தப் பிறகு ஐரோப்பிய யூனியன் ஓரளவிற்கு நடுநிலைமையாகவே இந்தப் பிரச்சனையை அணுகி வந்துள்ளது.
சிறீலங்கா இராணுவத் தளபதி போன்ஸ்கா மீதான தற்கொலை தாக்குதலுக்குப் பிறகு கூட ஐரோப்பிய யூனியன் புலிகள் மீது தடையினை விதிக்க ஆர்வம் காட்டவில்லை (இது நடந்தது ஏப்ரல் 25ம் தேதி). புலிகளின் தளபதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக எழுந்த இந்த பதிலடியை ஐரோப்பிய யூனியன் தடை செய்யத்தக்க அளவில் அணுகவில்லை.
பொதுவாகவே நார்வே போன்ற நாடுகளுக்கு உலகின் பல நாடுகளில் நடக்கும் பிரச்சனைகளில் அணுசரணையாளராக இருப்பதற்கு ஆர்வம் அதிகம். இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனை, இலங்கைப் பிரச்சனை மற்றும் பல்வேறு நாடுகளின் பிரச்சனைகளில் தொடர்ச்சியாக நார்வே பல அணுசரணை முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாய் உலக நாடுகளின் பல்வேறு பிரச்சனைகளில் ஒரு முக்கியமான நாடாக தன்னை மாற்றிக் கொள்ள நார்வே முயற்சி செய்து வந்துள்ளது. இதன் மூலம் உலக அரங்கில் தனது முக்கியத்துவத்தை நிலை நிறுத்துவது நார்வேயின் நோக்கம். பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்துள்ள நார்வே, இதற்காக தனது நாட்டின் GDPல் (உள்நாட்டு மொத்த உற்பத்தி) ஒரு சதவீதத்தை (1%) இத்தகைய பல்வேறு நதி உதவிகளுக்கு பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் தான் புலிகளுக்கும் நிறைய நிதி உதவிகளை நார்வே அளித்துள்ளது. உலகின் பிற நாடுகளுக்கும் தொடர்ந்து செய்து வருகிறது. (இது குறித்து ஹிந்து பத்திரிக்கையில் எழுந்த விமர்சனத்தை உங்களின் சார்புகளுக்கு ஏற்ப யூகப்படுத்திக் கொள்ளலாம்). உலகிலேயே தன்னுடைய உள்நாட்டு உற்பத்தி அளவில் அதிக நிதியுதவி செய்யும் ஒரே நாடு நார்வே தான்.
நார்வே, சமாதானத்திற்கு மட்டுமில்லாமல், தன்னுடைய சுயதேவைகளுக்காகவுமே இலங்கையின் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பிரச்சனையில் ஒரு தீர்வு ஏற்படும் பட்சத்தில் நார்வே உலக அரங்கில் இத்தகையப் பிரச்சனைகளில் ஏற்கனவே தனக்கு இருக்கும் ஒரு முக்கியமான நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும்.
நார்வேயின் இத்தகைய முயற்சிகளை முன் உதாரணமாகக் கொண்டு, உலக அரங்கில் தங்களின் ஈடுபாட்டை அதிகரித்துக் கொள்ள மேலும் சில நாடுகளும் முயற்சி எடுத்து வருகின்றன. முக்கியமாக ஸ்விட்சர்லாந்து, மற்றும் பிற நார்டிக் நாடுகளான (Nordic countries) ஸ்வீடன், டென்மார்க் போன்றவையும் இத்தகைய முயற்சிகளில் ஆர்வம் காட்டுகின்றன.
இவை தவிர ஜப்பானுக்கு இத்தகைய நோக்கத்துடனும், பொருளாதார தேவைகளுக்காகவும் இந்தப் பிரச்சனையில் தன்னையும் ஒரு அணுசரனையாளராக இணைத்துக் கொள்ளும் ஆர்வம் உண்டு. ஜப்பான் தன்னிச்சையாக இதற்கு சில முயற்சிகளை மேற்க்கொண்ட நிலையில் ஜப்பானின் பிரதிநிதி பிரபாகரனை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் புலிகள் இதனை நிராகரித்து விட்டனர். இவை தவிர நியுசிலாந்து போன்ற நாடுகளும் இத்தகைய பிரச்சனைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வம் கொண்டுள்ளன.
இராணுவ ரீதியில் தங்களுக்கென ஒரு பலத்தை நிறுவிக் கொள்வதன் மூலம் உலக அரங்கில் தங்களை ஒரு வல்லரசாக நிறுவிக் கொள்வதில் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு ஆர்வம் இருப்பது போல இராணுவ பலத்தை பெற முடியாமல் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நிலையில் உலக அரங்கில் வேறு வகையில் தங்களுக்கு ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொள்வது சிறு நாடுகளுக்கு ஆர்வமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தான் உலகெங்கிலும் பல நாடுகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு சமாதான அணுசரனையாளராக தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் சில நாடுகளுக்கு ஆர்வம் உள்ளது.
அந்த ஆர்வத்தை ஐரோப்பிய யூனியன் தடையிலும் புலிகள் பயன்படுத்திக் கொண்டனர்.
அது குறித்தும், ஐரோப்பிய யூனியன் தடையின் பிண்ணனி காரணங்கள் குறித்தும் அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்
(தொடரும்)
Tags
Strategic Analysis
தமிழ்ப்பதிவுகள்
ஈழம்
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 7/03/2006 11:45:00 PM
குறிச்சொற்கள் Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம்