காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு என்ன ?


என்னுடைய கடந்த பதிவில் காஷ்மீரில் தற்பொழுது நடந்து வரும் பிரச்சனைகள் குறித்து எழுதினேன். காஷ்மீர் பிரச்சனைக்கு காஷ்மீரின் விடுதலை என்பது தீர்வா ? அப்படியெனில் இந்துக்களை அதிகம் கொண்ட ஜம்முவை காஷ்மீருக்கு அளித்து தனி நாடாக மாற்றலாமா என்பது போன்ற கேள்விகள் எழுப்பபட்டன. அதற்கு பதிலளிக்க தொடங்கி நீண்டு விட்டதால் தனிப் பதிவாகவே பதிவு செய்கிறேன்.

காஷ்மீர் பிரச்சனை தமிழ் ஈழம், பாலஸ்தீனம் போன்ற மற்ற எல்லா பிரச்சனைகளையும் விட சிக்கலானது.

இந்தப் பிரச்சனை குறித்து சில விபரங்களை மட்டும் என்னுடைய ”காஷ்மீரின் விடுதலை” தொடரில் எழுதியுள்ளேன். இன்னும் எழுத வேண்டியது நிறைய உள்ளது.

தற்போதைய காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LoC) என்பது நிரந்தர எல்லையாக முடியாது. இந்தியா, பாக்கிஸ்தான், சீனா என மூன்று நாடுகளின் கைகளில் இருக்கும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டால் தான் காஷ்மீர் முழுமையாக முடியும். அதன் சாத்தியங்கள் என்ன என்பது குறித்து இறுதியிலே கூறுகிறேன். முதலில் காஷ்மீரில் இருக்கும் பல்வேறு பகுதிகள் குறித்து பார்க்க வேண்டும்.

காஷ்மீரில் மொத்தம் 5 பகுதிகள் உள்ளன. அதில் மூன்று பகுதிகள் இந்தியாவிடமும், 2 பகுதிகள் பாக்கிஸ்தான் வசமும் உள்ளன. மொத்த காஷ்மீர் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு பாக்கிஸ்தானிடமும், எஞ்சிய பெரும்பான்மையான பகுதி இந்தியா வசமும் உள்ளது. நிலப்பரப்பினை கொண்டு பார்த்தால் காஷ்மீர், ஜம்மு, லடாக் போன்றவை இந்தியாவின் முக்கிய பகுதிகள். அஸாத் காஷ்மீர், நார்த்தன் ஏரியாஸ் (கில்ஜில், பால்டிஸ்தான்) போன்றவை பாக்கிஸ்தானில் உள்ளன.

இந்தியா, காஷ்மீர் மன்னர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தாக கூறி ஒட்டு மொத்த காஷ்மீரும் தனக்கு தான் என வாதிடுகிறது. பாக்கிஸ்தான் இந்தியாவின் பிரிவினையின் பொழுது மூஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி பாக்கிஸ்தானுக்கும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி இந்தியாவுக்கும் என பிரிந்த நிலையில் பெரும்பான்மையாக முஸ்லீம்களை உள்ளடக்கிய காஷ்மீர் தனக்கு சொந்தம் என கூறுகிறது (இது குறித்த விரிவான தகவல்களை என்னுடைய முந்தைய கட்டுரையில் பார்க்கலாம்)

இந்தியா எவ்வாறு பெயரளவுக்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை காஷ்மீரில் நிறுவி காஷ்மீரில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறதோ அதே போல பாக்கிஸ்தான் நார்த்தன் ஏரியாஸ் என்ற பெரும்பான்மையான பகுதியை தன் வசம் வைத்திருக்கவே விரும்புகிறது. பெயரளவுக்கு அஸாத் காஷ்மீர் என்ற சிறிய பகுதியை மட்டும் “சுதந்திர காஷ்மீர்” என்பதாக வெளியுலகுக்கு காட்டி வருகிறது.

காஷ்மீர் பிரச்சனையில் இருக்கும் மிகப் பெரிய சிக்கல் ஜம்மு-காஷ்மீர் என்ற மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக முஸ்லீம்களையோ, இந்துக்களையோ, புத்தமதத்தினரையோ உள்ளடக்கி இருக்கவில்லை. காஷ்மீர், நார்த்தன் ஏரியாஸ் போன்ற பகுதிகளில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர். ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையினர். லடாக்கில் புத்தமதத்தினரும், முஸ்லீம்களும் சரிசமமாக உள்ளனர்.

காஷ்மீர் என்று சொல்லப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கு (Kashmir Valley) பகுதியில் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்கள். ஆனால் இந்துக்களும் இங்கு உண்டு. காஷ்மீர் முஸ்லீம்கள் பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் போல இல்லாமல் அவர்களுக்கேயுரிய கலாச்சாரத்துடன் தனித்தன்மையுடன் இருந்தனர். அது போல இங்கு இருந்த இந்துக்கள், பண்டிட் என்று அழைக்கப்படும் பிராமணப் பிரிவைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு என தனித்தன்மை உண்டு. பண்டிட்களுக்கும் இந்தியவின் பிற இந்துக்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. மொத்தத்தில் காஷ்மீர் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் என்று ஒரு தனித்தன்மை இருந்தது.

அதுவும் தவிர முஸ்லீம்கள் என சொல்லப்படுபவர்களும் ஒரே மாதிரியாக இல்லை. பூன்ச் பகுதியில் இருந்த முஸ்லீம்களும், பாக்கிஸ்தான் பகுதியில் இருக்கும் நார்த்தன் ஏரியாஸ் பகுதியில் இருக்கும் முஸ்லீம்களும் ஒரு வகையினர். ஆனால் காஷ்மீரில் உள்ள முஸ்லீம்கள் சற்று மாறுபட்டவர்கள். காஷ்மீர் முஸ்லீம்கள் சுபிஸம் - Sufism என்ற ஒரு முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். இதனை Liberal Islam என்று கூறுவார்கள். இதனை முஸ்லீம்களின் ஒரு பிரிவாக கூட சிலர் ஒப்புக் கொள்வதில்லை. இஸ்லாமுக்கு வெளியே இருந்து இது தோன்றயதாக கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

காஷ்மீர் முஸ்லீம்களுக்கு பாக்கிஸ்தானின் முஸ்லீம்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும். அது போலவே காஷ்மீரில் பண்டிட் என்று அழைக்கப்படும் அனைவருமே ஹிந்துகள் என்று கூறி விட முடியாது. முஸ்லீம்கள் கூட தங்கள் பெயருடன் பண்டிட் என்பதை இணைத்துக் கொள்வது வழக்கம். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் மிக இணக்கமாக இருந்த சூழலில் ஹிந்து கலாச்சார தாக்கம் முஸ்லீம்களிடம் இருந்தது. காஷ்மீரில் இருந்த முஸ்லீம் மதகுருக்களை "முஸ்லீம் ரிஷிகள்" என்று அழைக்கும் வழக்கம் கூட இருந்தது.

இன்னும் சொல்லப்போனால் அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்பவர்களுக்கு முஸ்லீம்கள் உதவி செய்வது என்பது காஷ்மீரில் காலங்கலமாக இருந்து வரும் மரபு (அமர்நாத் குகையை முதலில் கண்டுபிடித்தது ஒரு முஸ்லீம் ஆடு மேய்க்கும் சிறுவன் என்பன போன்ற மதநல்லிணக்க ”கதைகளும்” வழக்கத்தில் உண்டு).

காஷ்மீரில் பாக்கிஸ்தான் நுழைந்த பொழுது பயங்கரவாதத்தை புகுத்தியது. பாக்கிஸ்தானின் பஸ்தூன்களும், முல்லாக்களும், ஆப்கானிஸ்தானின் அடிப்படைவாதிகளும் காஷ்மீரில் புகுந்து காஷ்மீரின் முகத்தையும், காஷ்மீர் முஸ்லிம்களின் வாழ்க்கைமுறையையும் சிதைத்து விட்டனர். காஷ்மீர் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே இருந்த நெருங்கிய இணக்கம் பாக்கிஸ்தானின் வருகைக்குப் பிறகு சிதைந்து போனது. இந்துக்கள் மீதான தாக்குதலை பாக்கிஸ்தான் ஆதரவு குழுக்கள் தொடுத்தன. காஷ்மீர் பூர்வீக இந்துக்களான காஷ்மீரி பண்டிட்களை காஷ்மீரில் இருந்து விரட்டியவர்கள் கூட பாக்கிஸ்தான் அதரவு குழுக்கள் தான். இதனை காஷ்மீரின் ஆயுதக்குழுக்களும், மிதவாத போராட்டக் குழுக்களும் எதிர்த்தன என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

காஷ்மீரின் இப்படியான பன்முகத் தன்மை தான் காஷ்மீருக்கான தீர்வினையும் சிக்கலாக்குகிறது.

*****

காஷ்மீரின் தற்போதைய கட்டுப்பாட்டு கோடு (LoC) என்பது ஒரு வரையறைக்கப்பட்ட எல்லை அல்ல. இந்தியாவின் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது போல மொழி சார்ந்தோ, கலாச்சாரம் சார்ந்தோ பிரிக்கப்பட்டது அல்ல. இந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு உறவுகளை பிரித்தது. மக்களின் நிலங்களை, பொருளாதாரத்தை பிளந்தது.

காஷ்மீர் எந்த தேசத்திற்கு சொந்தமானது, அல்லது காஷ்மீரே ஒரு தனி நாடாகலாமா என்ற கேள்விகளை விட காஷ்மீரின் பகுதிகள் முதலில் இணைக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய முக்கிய நிலைப்பாடு. எந்த தேசியங்களையும் விடவும் மக்கள் முக்கியமானவர்கள்.

காஷ்மீரின் பகுதிகள் இணைக்கப்பட்டு காஷ்மீரின் எந்தப் பகுதிக்கும் காஷ்மீரைச் சார்ந்த யார் வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அது போல காஷ்மீருக்கும், முசாராபாத் போன்ற நகரங்களுக்கும் இடையிலேயான வர்த்தக தொடர்புகளை ஏற்றுமதி, இறக்குமதி போன்ற பிரச்சனைகள் இல்லாமல் ஒரு நாட்டிற்குள்ளேயே வர்த்தகம் செய்வது போன்ற நிலையினை கொண்டு வர வேண்டும். அதைத் தான் முசாராபாத் செல்வோம் (Muzzafarabad Chalo) என்ற காஷ்மீரிகளின் தற்போதைய போராட்டம் உணர்த்துகிறது.

அதைப் போலவே இந்தியாவும், பாக்கிஸ்தானும் இந்தப் பகுதியில் குவித்து இருக்கிற மிகப் பெரிய இராணுவத்தை விலக்கி கொள்ள வேண்டும். இராணுவம் விலக்கப்பட்டால் தான் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை இயல்பாக நடத்த முடியும். எல்லா காஷ்மீர் இளைஞர்களையும் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்துடன் கடத்துவதும், பிறகு அவர்கள் காணாமல் போவது போன்ற மனித உரிமை மீறல்களும் நிறுத்தப்பட வேண்டும்.

இது உண்மையில் சாத்தியமா ?

நிச்சயம் சாத்தியமே என்பதை வெளிப்படுத்தும் வகையில் 2005ல் பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் ஒரு தீர்வினை முன்வைத்தார். பாக்கிஸ்தான் ஜனாதிபதி முஷ்ரப் மீது எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன. ஒரு இராணுவ சர்வாதிகாரி, பதவி ஆசை பிடித்தவர், ஜனநாயகத்தை நசுக்க துணிந்தவர் என பல விமர்சனங்கள் இருந்தாலும் காஷ்மீர் பிரச்சனைக்கு பலரும் ஏற்கத்தக்க ஒரு தீர்வினை முன்வைத்தவர் முஷ்ரப் மட்டுமே. ஆனால் அவருடைய இந்த தீர்வினை இந்தியாவின் சங்பரிவார் கும்பலும் ஏற்காது. பாக்கிஸ்தானின் மத அடிப்படைவாத கும்பலும் ஏற்காது.

ஆனால் காஷ்மீரில் இருந்த பல அமைப்புகள் அவரின் இந்த திட்டத்தை வரவேற்றிருந்தன. இந்தியாவில் இருந்த நடுநிலையான அமைப்புகள் கூட அவரின் இந்த திட்டத்தை ஒரு நல்ல தொடக்கமாக ஏற்றுக் கொண்டன.

அப்படி என்ன திட்டத்தை அவர் முன்வைத்தார். இது குறித்து நான் முன்பே எழுதியிருக்கிறேன். என்றாலும் மறுபடியும் இங்கே முன்வைக்கிறேன்.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள காஷ்மீரை 7 கூறுகளாக முஷ்ரப் பிரித்துக் கொண்டார். அவற்றில் இரண்டு பகுதிகள் பாக்கிஸ்தானிடம் உள்ளவை (நார்தன் ஏரியாஸ், அஸாத் காஷ்மீர்). மீதி ஐந்து இந்தியாவிடம் இருக்கின்றன (லடாக். பூன்ச், கார்கில், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு). இந்தப் பகுதிகளில் இருந்து இந்தியாவும் பாக்கிஸ்தானும் இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். சர்சைக்குரியப் பகுதிகளை இரு நாடுகளும் கூட்டாக ஆளுவது. பிறகு இந்தப் பகுதிகளை காஷ்மீர் மக்களிடம் ஒப்படைப்பது.

இந்த திட்டம் ஒன்றிணைந்த காஷ்மீர், காஷ்மீருக்கு முழுமையான விடுதலை ஆகியவற்றை நோக்கிய ஒரு முக்கியமான திட்டம்.

முஷ்ரப்பின் இந்த திட்டத்தில் சில ”சிறிய” பிரச்சனைகள் இருந்தன. அது தான் பெரும்பாலும் விமர்சிக்கப்பட்டது. என்றாலும் அடிப்படையில் மிக முக்கியமான திட்டம்.

அவர் திட்டத்தில் இருந்த பிரச்சனைகள் என்ன ?

இந்தியாவில் உள்ள காஷ்மீரின் பகுதிகளை ஐந்து என முஷ்ரப் பிரித்தது தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐந்து பகுதிகள் அல்ல. மூன்று மட்டுமே என்பது இந்தியாவின் வாதம். அது போல சீனாவிடம் இருக்கும் பகுதிகள் குறித்து இந்த திட்டத்தில் எதுவும் இல்லை.

என்றாலும் இந்த திட்டத்தை ஏன் முக்கியமான திட்டம் என சொல்கிறேன் ?

பாக்கிஸ்தான் முதன் முறையாக நார்தன் ஏரியாஸ் என்று சொல்லப்படும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை காஷ்மீருக்கு விட்டுக் கொடுக்க சம்மதித்து தான். கடந்த காலங்களில் பாக்கிஸ்தான் இவ்வாறு கூறியது இல்லை. இந்த திட்டம் இந்தியாவை ஆச்சரியப்படுத்தியது. இதனை அடிப்படையாக கொண்டு ஒரு இறுதியான தீர்வினை நோக்கி இந்தியா நகர்ந்திருக்கலாம். ஆனால் இந்தியா அதனை செய்யவில்லை.

இந்தியாவின் நிலைப்பாடு என்பது எப்பொழுதும் போலவே காலத்தை கடத்துவது, தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தொடர்ந்து தன் வசம் வைத்திருப்பது என்றளவிலேயே உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டினை (LoC) நிரந்தர எல்லையாக்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிரச்சனையே அந்த எல்லைக் கோடு தான் என்னும் பொழுது எது எப்படி தீர்வாக முடியும் ?

இந்தியாவின் வாதம் பொருந்தாது, பொறுப்பற்றது.

இந்தியா இந்தப் பிரச்சனையில் காலத்தை கடத்திக் கொண்டே இருப்பது தான் சிறந்த உத்தி என எப்பொழுதும் நினைக்கிறது. காலங்கள் கடந்து கொண்டே இருந்தால் பிரச்சனையின் தீவிரம் குறைந்து விடும். இந்தியாவின் அந்த உத்தி இந்தியாவிற்கு பல வகையில் கைகொடுத்து இருக்கிறது.


அவ்வப்பொழுது எழும் காஷ்மீரிகளின் தற்போதைய போராட்டங்களை தன்னுடைய அதிகார பலம் மூலம் நசுக்கி கொண்டே இருந்தால் அடுத்து வரும் தலைமுறை இந்தி சினிமாவை பற்றி மட்டும் தான் பேசும். காஷ்மீர் விடுதலையா அது என்ன என்று தான் கேட்கும் ? அந்த நாளுக்கு தான் இந்தியா காத்திருக்கிறது.