Thursday, August 14, 2008

காஷ்மீரில் மீண்டும் விடுதலை முழக்கம்

காஷ்மீரில் கடந்த சில வருடங்களாக அடங்கியிருந்த விடுதலை முழக்கம் மீண்டும் எழ தொடங்கியிருக்கிறது. இந்த வாரம் மட்டும் 20க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகியுள்ளனர். ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷேக் அப்துல் அஜீஸ் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பல போலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் 1989-1990ம் ஆண்டில் இருந்த சூழலுக்கு மறுபடியும் திரும்பியுள்ளது. காஷ்மீர் விடுதலையை கோரி பெரும் திரளான மக்கள் வீதிகளிலும், முக்கிய இடங்களிலும் குவிய தொடங்கியுள்ளதால் காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. கண்டதும் சுட உத்தரவு போன்ற கடுமையான அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களை இந்திய மைய அரசு காஷ்மீரில் பிரயோகிப்பதை மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.

அமர்நாத் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட இடம் தொடர்பாக ஆரம்பித்த இந்தப் பிரச்சனை காஷ்மீர் மீதான பொருளாதார தடையாக உருமாறி, இந்து-முஸ்லீம் பிரச்சனையாக மாற்றப்பட்டு இன்று சங்பரிவார் கும்பலுக்கு மற்றொரு தேர்தல் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது.

1990ல் இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தொடங்கிய காஷ்மீர் விடுதலை போராட்டம், பாக்கிஸ்தானின் தலையீட்டால் இஸ்லாமிய பயங்கரவாதமாக உருமாற்றம் பெற்றது. இந்திய அரசாங்கத்தின் இராணுவம், பாக்கிஸ்தான் சார்பு தீவிரவாதிகளின் பயங்கரவாதம் என இந்தப் போராட்டம் திசைமாறி இந்தியா பாக்கிஸ்தான் நாடுகளின் பகடைக் காய்களாக காஷ்மீர் மக்கள் மாற்றப்பட்டனர்.

(இது குறித்த என்னுடைய முந்தைய பதிவு - காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை)

காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியா-பாக்கிஸ்தான் பிரச்சனை என்பது போலவே பார்க்கப்பட்டது. காஷ்மீர் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு காஷ்மீரிகளை ஒரு அழைப்பாளராக கூட இந்தியாவும் பாக்கிஸ்தானும் அழைக்காமல் பார்த்துக் கொண்டன. ஆனால் 1990க்கு பிறகு முதன் முறையாக காஷ்மீர் மக்கள் தங்கள் போராட்டத்தை தாங்களாகவே முன்னெடுத்து உள்ளனர். பாக்கிஸ்தான் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் எந்த தலையீடும் இல்லாமல் இந்தப் போராட்டம் எழுந்துள்ளது.

காஷ்மீரிகளின் போராட்டம் இயல்பாக எழுந்தாலும் இதனை தொடங்கி வைத்த பெருமை சங்பரிவார் கும்பலையேச் சாரும். சங்பரிவார் கும்பலுக்கு காஷ்மீருக்கு சிறப்பு சலுகையை அளிக்கும் இந்திய அரசியல் சாசனம் 370ம் பிரிவு மீது ஒரு எரிச்சல் உண்டு. இந்தப் பிரிவை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருவது இவர்களின் வாடிக்கை. ஆனால் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்து பொழுது இந்தப் பிரிவை நீக்க எந்த முயற்சியும் எடுக்க வில்லை என்பது கவனிக்கத்தக்கது. 370ம் பிரிவு, அயோத்தியில் கோயில் கட்டுவது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் சங்பரிவார் கும்பலுக்கு இந்துத்துவா ஆதரவாளர்களிடம் தங்களின் இருப்பை தக்க வைத்து கொள்ள முடியும். இந்துத்துவா ஓட்டு வங்கிகளை தங்கள் வசம் வைத்திருக்க முடியும்.

இந்திய அரசியல் சாசனம் 370ம் பிரிவின் படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நிலங்களை வெளி மாநிலத்தைச் சேர்ந்தோர் வாங்க முடியாது. இது சார்ந்த பிரச்சனை 2006ல் ஒரு முறை நடந்து. குல்மார்க் சுற்றுலா தளத்தில் அதிநவீன சுற்றுலா விடுதிகளை அமைக்க அனுமதி அளித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காஷ்மீரை சாராதவர்களுக்கு நிலங்களை வழங்குவதை காஷ்மீரில் உள்ள ஹூரியத் மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இதையெடுத்து இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இப்பொழுதும் அது போலவே அமர்நாத் ஆலயத்திற்கு 40 ஏக்கர் நிலத்தை வழங்கிய ஆணையை காஷ்மீர் மக்கள் எதிர்த்தனர். இது காஷ்மீரில் இந்துக்களை புகுத்தும் மறைமுக திட்டமாகவே காஷ்மீர் மக்கள் கருதினர். பொதுவாகவே காஷ்மீரிகள் இந்தப் பிரச்சனையை உணர்வுப்பூர்வமாகவே பார்க்கின்றனர்.

"காஷ்மீரிகள்" என்ற தங்கள் அடையாளத்தை 370ம் பிரிவே இன்று வரை காப்பாற்றி வருவதாக காஷ்மீர் மக்கள் நம்புகிறார்கள். காஷ்மீரில் பிற மாநிலத்தினரின் குடியேற்றம் நிகழ்ந்தால் தங்களுடைய பெரும்பான்மையை குறைக்கப்படுமோ என்ற அச்சம் பலருக்கும் உண்டு. காஷ்மீரில் தங்கள் அடையாளத்தை தக்கவைக்க 370ம் பிரிவு அவசியம் என நினைக்கின்றனர். காஷ்மீரிகளின் இந்த உணர்வை என்னால் தவறாக பார்க்க முடியவில்லை. ஏனெனில் உலகின் பலப் பகுதிகளில் தங்கள் விடுதலையை முன்னெடுக்கும் தேசிய இனங்களின் பெரும்பான்மையை குறைக்க இவ்வாறான குடியேற்றத்தையே அதிகார மையங்கள் முன்வைக்கின்றன.

இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதியில் பெரும்பான்மையாக இருந்த தமிழர்களின் தமிழீழ கோரிக்கையை சீர்குலைக்க கிழக்குப் பகுதியில் சிங்களவர்களை சிறீலங்கா அரசு குடியேற்றியது. இன்றைக்கு தமிழர்களின் பெரும்பான்மை கிழக்கு பகுதிகளில் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. இது போலவே பாலஸ்தீன பகுதிகளில் யூதர்களை இஸ்ரேல் குடியேற்றியது.

இவ்வாறான சூழலில் 370ம் பிரிவு தங்கள் உரிமையை தக்கவைக்க உதவுவதாக காஷ்மீரிகள் நம்புகின்றனர். இந்த காரணத்தினாலேயே அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்குவதை எதிர்க்கின்றனர்.

காஷ்மீரிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த அமர்நாத் நில மாற்றம் அரசால் கைவிடப்பட்டது. ஆனால் சங்பரிவார் அமைப்புகள் இதனை எதிர்த்தன. அமர்நாத் ஆலயத்திற்கு நிலத்தை வழங்கியே தீர வேண்டும் என ஜம்முவில் போராட்டம் நடத்தினர். இதன் அடுத்த கட்டமாக காஷ்மீரில் இருந்து ஜம்மு வரும் சாலைகளை மறித்து காஷ்மீர் மீது ஒரு பொருளாதார முற்றுகையை ஜம்மு இந்துக்கள் மேற்கொண்டனர். இந்த முற்றுகையை நீக்க இந்திய மைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

காஷ்மீரின் முக்கிய பொருளாதாரமான காஷ்மீர் ஆப்பிள்கள் மற்றும் பிற பழ வகைகள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு ஜம்மு வழியாகவே செல்ல முடியும். எனவே ஜம்முவில் சாலைகளை மறிப்பது என்பது காஷ்மீரின் ஒரு முக்கிய பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது. இதனால் காஷ்மீரில் உள்ள பழ வியபாரிகள் தங்கள் பொருட்களை விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அரசும் இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்ய முசாராபாத் செல்வோம் (Muzzafarabad Chalo) என போராட்டத்தை காஷ்மீர் பழவியபாரிகள் இந்த வாரம் துவங்கினர். இந்தப் போராட்டம் வலுவடைந்து பெரும்திரளான மக்களை உள்ளடக்கிய போராட்டமாக உருமாறியது. சுமார் 1.5லட்சம் மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

முசாராபாத் செல்ல தொடங்கிய இந்தப் போராட்டத்தை தடுக்க எந்த திட்டமிடலும் செய்யாத அரசு, இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தின் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் இது வரை 20க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை ஒரு பொருளாதார போராட்டம் விடுதலை போராட்டமாக மறுபடியும் மாற வழிவகுத்துள்ளது. பலர் கொல்லப்பட்ட நிகழ்வு காஷ்மீரில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் போலீசாரை தாக்கியுள்ளனர். காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மீறுபவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. சில வருடங்களாக அமைதியாக இருந்த காஷ்மீர் மீண்டும் கலவர பூமியாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களாக அதிகம் கேட்காத காஷ்மீர் விடுதலை முழக்கம் இப்பொழுது ஓங்கி ஒலிக்கிறது.

****

முசாராபாத் பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ளது. ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீரிகள் ஏன் பாக்கிஸ்தான் பகுதிக்கு செல்ல முயல வேண்டும் ? எதற்காக போராட்டம் நடத்த வேண்டும் ?

காஷ்மீர் பிரச்சனையில் எப்பொழுதுமே தவறான தகவல்களை வழங்கி கொண்டிருக்கும் இந்திய ஊடகங்கள் "எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடக்க முயன்ற காஷ்மீரிகள்" என்ற மேலோட்டமான செய்தியை தான் வழங்கி கொண்டிருக்கின்றன. Muzzafarabad Chalo என்ற இந்தப் போராட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீநகர்-முசாபராபாத் சார்ந்த வர்த்தக தொடர்புகளையும், அதனைச் சார்ந்த பிரச்சனைகளையும் கவனிக்க வேண்டும்.

முசாராபாத்தும் ஸ்ரீநகரும் காஷ்மீருக்கு சொந்தமானவை. தமிழ்நாட்டின் மதுரையும், திருச்சியும் போல.

இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளால் காஷ்மீர் துண்டாடப்பட்டது. இந்தியாவிடம் ஒரு பகுதியும், பாக்கிஸ்தானிடம் மற்றொரு பகுதியும் என காஷ்மீர் இரு துண்டுகளாக பிரிந்தது. ஸ்ரீநகர் இந்தியாவிடமும், முசாராபாத் பாக்கிஸ்தான் வசமும் உள்ளது. இந்த காஷ்மீர் பிரிவினையால் உறவுகள் பிரிந்தன. காஷ்மீர் மக்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் சீர்குலைந்தது.

காஷ்மீரிகளின் சுதந்திர முழக்கம் என்பது வெறும் பிரிவினைவாதமாகவே இந்தியாவில் பார்க்கப்படுகிறது. பாக்கிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரும் தன்னுடையது தான் என்ற பொருந்தாத வாதத்தை இந்தியா தொடர்ந்து முன்வைத்து வருகிறது. காஷ்மீர் என்பது இந்தியாவின் பகுதியே அல்ல (என்னுடைய காஷ்மீரின் விடுதலை தொடரில் அதற்கான ஆதாரங்களை முன்வைத்திருக்கிறேன்). பாக்கிஸ்தானுக்கும் காஷ்மீர் சொந்தமானது அல்ல. ஆனால் பல நூற்றாண்டுகளாக காஷ்மீருக்கும், பாக்கிஸ்தானில் உள்ள பகுதிகளுக்கும் இடையே தான் வர்த்தக தொடர்பே இருந்து வந்திருக்கிறது. தில்லியுடனோ, இந்தியாவின் பிற பகுதிகளுடனோ காஷ்மீருக்கு பெரிய வர்த்தக உறவுகள் இருந்ததில்லை. காரணம் பூளோக அமைப்பு ரீதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி பாக்கிஸ்தானுடன் நெருக்கமாக இருந்தளவுக்கு இந்தியாவுடன் நெருக்கமாக இருக்க வில்லை.

காஷ்மீர் இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே பிரிந்த பொழுது காஷ்மீர் மக்கள் மட்டும் துண்டாடப்படவில்லை. அவர்களின் வர்த்தகம், பொருளாதாரம் என அனைத்தும் சீர்குலைந்து போனது. அது தான் காஷ்மீரிகள் இன்று வரை தங்களை இந்தியாவுடன் பொருத்தி பார்க்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்ததால் இயற்கையாக அமைந்த தங்களுடைய பொருளாதாரம் சீர்குலைந்ததாக பெரும்பாலான காஷ்மீர் மக்கள் நம்பினர். அதன் தொடர்ச்சியாக எந்த புதிய பொருளாதார வாய்ப்புகளும் இந்தியாவுடன் இணைந்த பிறகு காஷ்மீருக்கு ஏற்படவில்லை.

*********

2005ம் ஆண்டு நான் எழுதிய "காஷ்மீரின் விடுதலை" தொடரில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
(காஷ்மீர் குறித்த எனது பதிவுகள் - 1, 2, 3, 4, 5, 6)

ஸ்ரீநகர்-முசாராபாத் நெடுஞ்சாலை தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் மக்களை பிற முக்கிய பகுதிகளுக்கு இணைக்க கூடிய முக்கியமான இணைப்புச் சாலை.

250கி.மீ, தூரமுள்ள இந்த நெடுஞ்சாலை தான் காஷ்மீர் மக்களின் முக்கிய வணிகச் சாலையாக இருந்தது. இந்தச் சாலை ஸ்ரீநகரை முசாராபாத்துடன் இணைப்பதுடன், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. 1947 காஷ்மீர் பிரச்சனைக்குப் பிறகு இந்த சாலையும் மூடப்பட்டு விட்டது. இதனால் காஷ்மீரிகள் துண்டிக்கப்பட்டனர். அவர்களின் வணிகமும், பொருளாதாரமும் சீர்குலைந்தது.

காஷ்மீர் ஆப்பிள்கள் ஒரு முக்கிய வணிகப் பொருள். காஷ்மீரில் பயிரிடப்படும் ஆப்பிள்களை தில்லி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தான் இங்குள்ள விவசாயிகளால் தற்பொழுது விற்க முடியும். நீண்ட தூரத்தில் இருக்கும் வர்த்தக தளங்களால் இவர்களின் லாபம் குறைகிறது. மாறாக இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் முசாராபாத், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களுக்கும் மிக எளிதாக வர்த்தகம் செய்ய இயலும். லாபமும் அதிகரிக்கும்.

**********

..... பிரிந்த உறவுகள் இணைக்கப்பட வேண்டும். இரண்டு துண்டுகளாக பிளக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் இணைய வேண்டும்.பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு இரு ஜெர்மனிகளும் இணைந்தது போல இந்தியாவின் வசம் இருக்கும் காஷ்மீரும், பாக்கிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீரும் இணைக்கப்படவேண்டும்.

இது சாத்தியமா ?

நேற்று வரை திருச்சியும், மதுரையும் ஒரே நாடாக இருக்க, திடீரென்று இவை இரண்டும் இரு வேறு துண்டுகளாகி, மதுரையில் இருப்பவர்கள் திருச்சிக்கும், திருச்சியில் இருப்பவர்கள் மதுரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் ?

திருச்சிக்கும், மதுரைக்கும் இடையே இருக்கும் மனித உறவுகள் துண்டிக்கப்படும். மகள் மதுரையில் இருக்கலாம். அப்பா திருச்சியில் இருக்கலாம். ஆனால் இவர்கள் இருவரும் சந்திக்க கடவுச்சீட்டு பெற்று, விசா கிடைத்து விமானம் ஏறி பல மைல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் ? எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் சாதாரண குடும்பத்திற்கு விமானம் ஏறக் கூடிய வசதி இருக்குமா ?

அது தான் காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டது.

****

இந்தியாவின் மைய அரசாங்கம் கடந்த காலங்களில் செயல்பட்டது போலவே இம்முறையும் செயல்பட்டிருக்கிறது. ஜம்முவில் போராட்டம் நடத்திய இந்துக்களிடம் அரசாங்கம் நடந்து கொண்ட முறையும், காஷ்மீரில் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட மூர்க்கமான தாக்குதல்களையும் ஒப்பு நோக்க வேண்டியுள்ளது. போராட்டம் துவங்கிய முதல் சில நாட்களில் 20க்கும் மேற்பட்ட காஷ்மீர் முஸ்லீம்கள் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி உள்ளது மைய அரசாங்கம் காஷ்மீர் மக்களின் நியாயமான போராட்டத்தை தொடர்ந்து தன்னுடைய அதிகார பலத்தை கொண்டு அடக்கி ஒடுக்க முயலுவதையே காட்டுவதாக உள்ளது. மாறாக ஜம்முவில் பல நாட்களாக மறியல் செய்து வரும் ஜம்மு இந்துக்களின் மீது என்ன நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது ?

ஜம்முவில் இந்துக்கள் அதிகம் என்பதால், இந்தப் பிரச்சனையை இந்து-முஸ்லீம் பிரச்சனையாக மாற்றி அதில் குளிர்காய சங்பரிவார் கும்பல் நினைக்கிறது. காஷ்மீர் மக்களுக்கு சாதகமாக மைய அரசுகளும், காஷ்மீர் அரசுகளும் தொடர்ச்சியாக நடந்து வருவதாக ஒப்பாரி வைக்கின்றன. ஜம்மு இந்துக்களுக்கு தொடர்ச்சியாக அரசாங்கங்கள் அநீதி இழைப்பதாக இந்திய ஊடகங்களும் ஒப்பாரி வைக்கின்றன. அதனைச் சார்ந்த கருத்து ஒற்றுமையை இந்தியாவின் பிற மாநிலங்களில் ஏற்படுத்த ஊடகங்கள் முயலுகின்றன.

ஆனால் உண்மை என்னவென்றால் தொடர்ச்சியாக இந்திய இராணுவம் மற்றும் போலீசாரின் அடக்குமுறைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாகியவர்கள் காஷ்மீர்கள் தான். ஜம்முவில் இருக்கும் இந்துக்களுக்கு என்ன பிரச்சனை இருந்தது ? அரசாங்கம் ஜம்மு இந்துக்களை எண்கவுண்ட்டரில் போட்டு தாக்கியதா, இல்லை ஜம்மு இந்துக்கள் தான் காணாமல் போய் சடலங்களாக மீண்டு வந்தார்களா ?

அரசாங்கம், பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்ட சண்டையின் இடையில் சிக்கி மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்கள் காஷ்மீர் முஸ்லீம்கள் தான். தங்களின் பதவி உயிர்வுக்காக காஷ்மீர் இளைஞர்களை பலியிட்ட கொடுமையெல்லாம் காஷ்மீரில் தான் நடந்தது. ஜம்முவில் அல்ல. (இது குறித்த என்னுடைய முந்தைய பதிவுகள்
- காணாமல் போகும் காஷ்மீரிகள்
- காஷ்மீர் பற்றிய குறும்படம் )

இவ்வறான சூழலில் ஜம்மு மக்கள் புறக்கணிக்கப்பட்டதாக சொல்வது இந்தப் பிரச்சனையை திசை திருப்பும் ஒரு போக்காகவே நான் நினைக்கிறேன்.

எல்லப் பிரச்சனைக்கும் காரணமான சங்பரிவார், இதனை இந்தியா முழுவதும் இந்து முஸ்லீம் கலவரமாக மாற்றி வரும் தேர்தலில் இந்தப் பிரச்சனை மூலம் வெற்றி பெற துடித்துக் கொண்டிருக்கிறது.

இன்று இந்தியாவின் சுதந்திர தினமாம். காஷ்மீர் மக்களை பொறுத்தவரை இது அவர்களின் கறுப்பு தினம்.

*****

அமர்நாத் பனிலங்கம் என்பதே ஒரு மோசடியான, மூடநம்பிக்கையான ஒன்று. இது குறித்த உண்மைகளை ஏற்கனவே அறிவியல் ரீதியாக திராவிடர் கழகம் அம்பலப்படுத்தியுள்ளது. அது குறித்த ஒரு வீடியோவை பெரியார் வலைக்காட்சியில் பார்க்க முடியும் - சு.அறிவுக்கரசு திராவிடர் கழக பொதுச்செயலாளர் - அமர்நாத் பனி லிங்க மோசடி - தொடர்வது என்ன?

20 மறுமொழிகள்:

ஜோ/Joe said...

அருமையான பதிவு ..மிக்க நன்றி சசி!

10:22 PM, August 14, 2008
Thamiz Priyan said...

நல்ல விளக்கங்களுடன் கூடிய கட்டுரை... உண்மை உறைக்கும்.. :)

10:52 PM, August 14, 2008
அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். அனைத்தும் தரமானவை. நிறைய தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளன.

அன்புடன்,
ஜோதிபாரதி.

11:01 PM, August 14, 2008
Voice on Wings said...

காஷ்மீருக்கும் விரைவில் சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்று 'இந்திய' சுதந்திர தினமான இன்று வாழ்த்திக் கொள்கிறேன்.

11:56 PM, August 14, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

ஜோ, தமிழ் பிரியன், ஜோதிபாரதி,

நன்றி

Voice on Wings,

நன்றி...

அடுத்தவர்களின் சுதந்திரத்தை பறித்து விட்டு "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என்பது தந்திரமானது. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், தமிழீழம் என அனைத்து இடங்களிலும் உள்ள தேசிய இன மக்களின் சுதந்திரத்தை இந்தியா மறுத்து வருகிறது.

சுதந்திரத்தை கொண்டாடுபவர்களுக்கு, அடுத்தவர்களுக்கும் சுதந்திரம் வேண்டும் என்பது உறைக்க வேண்டும். ஆனால் இந்தியாவுக்கு 1947லேயே அது உறைக்க வில்லை. 61 வருடங்களுக்குப் பிறகு உறைத்து காஷ்மீருக்கு விடுதலை வழங்குமா ? குறைந்தபட்சம் தன் அடக்குமுறையை குறைக்குமா ?
எனக்கு நம்பிக்கை இல்லை.

12:25 AM, August 15, 2008
Anonymous said...

Your article is very informative and neutral. Every Indian must know these truths about Kashmir.

-Kalaiyagam
http://kalaiy.blogspot.com

12:53 AM, August 15, 2008
Anonymous said...

in this happiest day i saw these bitches comment

12:57 AM, August 15, 2008
தமிழன்-கறுப்பி... said...

\\
காஷ்மீருக்கும் விரைவில் சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்று 'இந்திய' சுதந்திர தினமான இன்று வாழ்த்திக் கொள்கிறேன்.
\\

இதையே நானும் சொல்லிக்கறேன்..

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

1:10 AM, August 15, 2008
SurveySan said...

////இன்று இந்தியாவின் சுதந்திர தினமாம்//

அது என்ன தினமாம்? "தினம்"னு இல்ல இருக்கணும்?


முஷாரஃப் ரிஸைன் பண்ணினா, ப்ரச்சனை பெருசாகுமா சின்னதாகுமா?

1:41 AM, August 15, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

//அது என்ன தினமாம்? "தினம்"னு இல்ல இருக்கணும்? //

இன்று இந்தியாவின் சுதந்திர தினம் என்றால் எனக்கும் இதில் ஒப்புதல் உண்டு என்பது பொருள்.
இன்று இந்தியாவின் சுதந்திர ”தினமாம்” என்றால் எல்லோரும் அப்படி சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பது பொருள்.

இவ்வாறு எண்ணி தான் எழுதினேன். என் தமிழறிவுக்கு தெரிந்தது இது தான். தவறு என்றால் திருத்திக் கொள்வதில் பிரச்சனையில்லை

***********

முஷாரஃப் ரிஸைன் பண்ணினா, ப்ரச்சனை பெருசாகுமா சின்னதாகுமா?

***

என் பதிவில் கூறியிருந்தது போல, காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியா-பாக்கிஸ்தான் பிரச்சனை இல்லை. காஷ்மீர் மக்களின் பிரச்சனை. கடந்த காலங்களில் தலையிட்டது போல இந்தப் பிரச்சனையில் பாக்கிஸ்தான் தலையிட கூடாது. கடந்த காலங்களில் பாக்கிஸ்தான் தலையீட்டால் ஆயுதங்கள் ஆப்கான் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்டு காஷ்மீர் போராட்டம் என்பது இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

இது தவிர தன்னுடைய உள்நாட்டில் இருக்கின்ற பிரச்சனைகளையே பாக்கிஸ்தானால் தீர்க்க முடியவில்லை. பாக்கிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பகுதிகள் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டிலேயே இல்லை. பாக்கிஸ்தான் பாலூட்டி வளர்த்த பயங்கரவாத அமைப்புகள் பாக்கிஸ்தான் படைகளை தாக்கியும், கடத்தியும் வருகின்றன. இவை தவிர பாக்கிஸ்தானில் பல மத அடிப்படைவாத அமைப்புகள் பாக்கிஸ்தானை சீர்குலைக்க முயற்சி செய்து வருகின்றன. இவ்வாறான சூழலில் முஷ்ரப் இருந்தாலும், அல்லது வேறு யார் வந்தாலும் பாக்கிஸ்தான் உள்நாட்டு பிரச்சனைகளை முதலில் தீர்க்க வேண்டிய தேவை இருக்கும்.

முன்பு போல காஷ்மீர் பிரச்சனையை கொண்டு உள்நாட்டு பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்வது எல்லாம் சாத்தியம் இல்லை.

காஷ்மீர் போராட்டத்தை காஷ்மீரிகள் தான் முன்னெடுக்க வேண்டும். அதைத் தான் காஷ்மீர் மக்கள் இப்பொழுது செய்கிறார்கள். பாக்கிஸ்தான் காஷ்மீரிகளுக்கு ஆதரவாக உலக அரங்கில் குரல் எழுப்பலாம்.

10:46 AM, August 15, 2008
Kalaiyarasan said...

You said what you have to say. I want to link to my blog.

-Kalaiyarasan

http://kalaiy.blogspot.com

12:17 PM, August 15, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

கலையரசன், தமிழன்,

நன்றி...

12:21 PM, August 15, 2008
ILA (a) இளா said...

அருமையான விளக்கத்துடன் கூடிய நல்ல பதிவு.. பொருத்து மீதி இருக்கும் பழைய பதிவுகளையும் படிக்க வேண்டும்.

12:36 PM, August 15, 2008
ILA (a) இளா said...

அருமையான விளக்கத்துடன் கூடிய நல்ல பதிவு.. பொருத்து மீதி இருக்கும் பழைய பதிவுகளையும் படிக்க வேண்டும்.

12:36 PM, August 15, 2008
SurveySan said...

//இன்று இந்தியாவின் சுதந்திர தினம் என்றால் எனக்கும் இதில் ஒப்புதல் உண்டு என்பது பொருள்.
இன்று இந்தியாவின் சுதந்திர ”தினமாம்” என்றால் எல்லோரும் அப்படி சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பது பொருள்.
///

:) 'மாம்'ன் அர்த்தம் புரியுது.
ஆனா, நிங்க 'மாம்'னு முடிச்சத படிச்சதும், ஏதோ அந்நியன் மாதிரி சொல்ர மாதிரி தெரிஞ்சுது.

உள்குத்தோட சொன்னதுன்னா, ஓ.கே தான் :). தவறில்லை.

12:55 PM, August 15, 2008
Anonymous said...

இந்தியா காஷ்மீருக்கு விடுதலை கொடுத்து தண்ணி தெளிச்சு விடறது அவ்வளவு எளிதான வேலையா?

காஷ்மீர் பாகிஸ்தான் ஏப்பம் விட்ட 'நார்த்தன் ஏரியாஸ்' எனப்படும் கில்ஜித் மற்றும் பல்டிஸ்தான் பகுதிகளை திரும்பப் பெறுமா?

நார்த்தன் ஏரியாஸ் பகுதியில் குடியமர்த்தப்பட்ட சுன்னி முஸ்லிம்கள் என்ன ஆவார்கள்?

புத்த மதத்தினர் அதிகமுள்ள லடாக் பகுதியையும் கொடுத்துவிட வேண்டுமா?

சீனா ஆக்ரமித்திருக்கும் அக்சாய் சின் திரும்பக் கிடைக்குமா?

இந்துக்கள் அதிகமுள்ள ஜம்முவையும் கொடுத்திரலாமா?

சீனாவுக்கு பாகிஸ்தான் தானம் கொடுத்த காஷ்மீர் திரும்பக் கிடைக்குமா?

காஷ்மீரில் இருந்து விரட்டப்பட்ட 2 லட்சம் பண்டிட்டுகள் டெல்லியில் அகதிகளாக உள்ளார்களே? அவர்கள் திரும்பி காஷ்மிர் செல்வார்களா?

1:56 PM, August 15, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

இளா,

நன்றி...

சர்வேசன்,

உள்குத்து எல்லாம் இல்லை. வேதனைக் குத்து

2:21 PM, August 15, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

அனானி...

வாங்க...வாங்க...

என்னடா பதிவு எழுதி இவ்வளவு நேரம் ஆச்சு நம்ம பழைய நண்பர்கள் கேள்விகளுடன் வருவார்கள் என்று பார்த்தால் இன்னும் வரவில்லையே என நினைத்தேன். வந்து விட்டீர்கள்

விரிவாக இந்த இடுகையிலேயே பதில் அளிக்கிறேன். அதற்கு தானே தவமாக தவம் இருந்தேன் :)

2:21 PM, August 15, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

அனானி,

உங்கள் கேள்விகளுக்கு இந்தப் பதிவில் விரிவாகவே பதிலளித்து உள்ளேன்.


http://blog.tamilsasi.com/2008/08/solution-to-kashmir-problem.html


படித்து விட்டு மேலும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள். பதிலளிக்க தயாராகவே இருக்கிறேன் :)

6:41 PM, August 15, 2008