திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற
ரோசாவசந்த்தின் பதிவும், அதற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட
ரவியின் (Voice on Wings) பதிவையும் சார்ந்ததே இந்தக் கட்டுரை.
இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு செல்வதற்கு முன்பாக தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டிய தேவை உள்ளது.
இந்திய விடுதலைக்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி தமிழக அரசியல் என்பது பார்பனீயம் சார்ந்த இந்திய தேசியத்திற்கும், திராவிட அரசியலுக்கும் இடையே நடக்கும் தொடர்ச்சியான போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. திராவிட நாடு கோரிய அண்ணா பிறகு அதனை கைவிட்டார். இந்திய தேசியம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல், ஹிந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் மூலம் தமிழ் சார்ந்த திராவிட அரசியல் பாதைக்கு திரும்பியது. 1967ல் தமிழ் ஆதரவு - தமிழ் எதிர்ப்பு என்ற இரண்டு அரசியல் வியூகங்களில் தான் தமிழக அரசியல் அமைந்து இருந்தது. தமிழ் ஆதரவு, திராவிட அரசியல் பார்வை வலுப்பெற்றவுடன் திமுக வெற்றி பெற்றது. அதற்கு எதிரான காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டது.
அடுத்த இருபது ஆண்டுகள் திராவிட தமிழ் அரசியல் சார்ந்த பாதையிலேயே தமிழக அரசியல் நகர்ந்தது. அது தமிழ் சார்ந்த அரசியலுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையையும் அமைத்து கொடுத்தது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் இன்றும் தனித்துவமாக தெரிய இது முக்கியமான காரணம் .சில விடயங்களில் ஆரோக்கியமற்ற சூழ்நிலையும் அமைந்தது. குறிப்பாக ஈழப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளையும், கருணாநிதி டெலோ போன்ற அமைப்புகளையும் ஆதரிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது. என்றாலும் தமிழக அரசியல் என்பது தமிழின ஆதரவு என்ற வட்டத்தில் இருக்கும் போட்டியாகவே வளர்ந்தது. இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு தமிழ் ஆதரவு அரசியலில் சுழன்றன.
இதை மாற்ற பார்ப்பன ஊடகங்கள் எப்பொழுதும் துடித்துக் கொண்டே தான் இருந்தன. எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அதற்கு பயன்படுத்தின. ஆனால் அது நிறைவேற வில்லை. அதற்கு காரணம் கருணாநிதிக்கு இருந்த வசீகரம் மற்றும் திராவிடத் தலைவர் என்ற அடையாளம். பேரறிஞர் அண்ணா காலத்தில் அண்ணாவை விட போர்க்குணம் மிக்கவராக கருணாநிதியே இருந்தார். அது தான் கருணாநிதி பல முண்ணனி தலைவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னே வர காரணம். 1992ல் இருந்த வைகோவுடன் கருணாநிதியை அப்பொழுது ஒப்பிடலாம். என்னுடைய சமகாலத்தில் வளர்ந்த வைகோவை என்னால் எப்பொழுதும் தமிழ் அரசியல் சார்ந்து விலக்க முடியவில்லை. வைகோ போன்றவர்கள் தலைவராக முடியவில்லையே என்ற வேதனை எனக்கு உண்டு. அதே போலத் தான் கருணாநிதி காலத்தில் இருந்த தமிழ் உணர்வாளர்கள் இன்றும் உள்ளனர். கருணாநிதி மீதான பற்றினை அவ்வளவு சீக்கிரம் அவர்களால் விட முடியவில்லை என்பதை பலருடன் விவாதிக்கும் பொழுது உணர்ந்திருக்கிறேன். வலைப்பதிவில் இருக்கும் எனக்கு முந்தைய தலைமுறை சார்ந்தவர்களின் உணர்வு இவ்வாறே உள்ளதை கவனித்து இருக்கிறேன். எனவே பார்ப்பன ஊடகங்கள் மற்றும் அதிகாரமையத்தின் முயற்சிகள் அக் காலகட்டத்தில் எடுபடவில்லை. திராவிட அரசியல் என்பது கருணாநிதியின் அரசியல் என்பதாகவும், அதற்கு எதிரானது கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பதாகவும் அமைந்தது. கருணாநிதியை சுற்றி கருணாநிதி எதிர்ப்பு, கருணாநிதி ஆதரவு என்ற பாதையிலே திராவிட அரசியல் அமைந்தது. இந்த போக்கு 1991 வரை தொடர்ந்தது.
1991க்கு பிறகு திராவிட தமிழ் அரசியல் புறந்தள்ளப்பட்டு இந்திய தேசியத்தின் பார்வையில் தமிழக அரசியல் நகர்ந்தது. பார்ப்பன ஊடகங்கள் ராஜீவ் காந்தி மரணத்தை இதற்கு பயன்படுத்திக் கொண்டன. இந்திய தேசியத்திற்கு ஆதரவானவராக ஜெயலலிதாவும், இந்திய தேசியத்திற்கு விரோதியாக கருணாநிதியும் பார்க்கப்படும் சூழ்நிலை உருவெடுத்தது. கருணாநிதியை பார்ப்பன ஊடகங்களும், ஜெயலலிதாவும் தொடர்ச்சியாக இந்திய தேசிய விரோதியாக வெளிப்படுத்திய சூழ்நிலையில் இந்திய தேசியத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு கருணாநிதி தள்ளப்படுகிறார். சோவின் அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரியவரும். கருணாநிதியை மையப்படுத்தி கருணாநிதி ஆதரவு, கருணாநிதி எதிர்ப்பு என்ற பாதையில் நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல் 1991க்கு பிறகு ஜெயலலிதா ஆதரவு, ஜெயலலிதா எதிர்ப்பு என்ற பாதைக்கு மாறத் தொடங்கியது.
இந்த போக்கு 2008ம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. தமிழக அரசியல் கட்சிகள் மைய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சூழ்நிலையில் இந்த போக்கு வளர்ந்தது. திமுக தன்னை முழுமையாக இந்திய தேசியத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. திமுகவை தீண்டத்தகாத கட்சியாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பார்த்தன. திராவிட தமிழ் அரசியலின் அடையாளமாக, பார்ப்பனர்களை எரிச்சல்படுத்திய கருணாநிதி, 1991க்கு பிறகு நேர்ந்த அரசியல் மாற்றங்களால் தன்னை தமிழ் சார்ந்த பாதையில் இருந்து விலக்கி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இந்திய தேசியத்திற்கு முன்பு மண்டியிட வேண்டிய அவலம் கருணாநிதிக்கு நேர்ந்தது. இவ்வாறன சூழ்நிலையில் அமைந்த காங்கிரஸ் கூட்டணியை தனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருணாநிதி பார்த்தது தான் தற்போதைய கருணாநிதியின் துரோக அரசியலுக்கு முக்கிய காரணம். கூடவே திமுகவுடன் கருணாநிதி குடும்ப அரசியலும் ஒட்டிக் கொண்டது.
இவ்வாறு திமுக இந்திய தேசியம் சார்ந்த நிர்பந்தத்திற்கு அடிபணிய தொடங்கியதும் ஒட்டு மொத்த தமிழினமும் அந்த பாதையிலே சென்றது. ஏனெனில் திமுகவை தவிர வேறு அமைப்புகளால் அதனை மாற்றக்கூடிய சக்தி இல்லை. இது ஒரு வகையில் பார்ப்பனீய அரசியலின் வெற்றி என்றும் சொல்லலாம்.
திமுகவை தொடர்ந்து பல கட்சிகள் திமுகவின் பாதையை பின்பற்ற தொடங்கின. சாதிக் கட்சியாக தொடங்கினாலும் பாமக தமிழ் அரசியலை பின்பற்ற தொடங்கியது. திமுக ஏற்படுத்திய தமிழின அரசியல், தமிழ் மொழி சார்ந்த இடைவெளியை தன் கையில் எடுத்துக் கொள்வதே பாமகவின் நோக்கமாக ஆரம்ப காலங்களில் இருந்தது. இதன் வெளிப்பாடு தான் மக்கள் தொலைக்காட்சி, பொங்குதமிழ் பண்ணிசை மன்றம் போன்றவை. இந்த காரணத்தினாலேயே கருணாநிதி கைவிட்ட ஈழ அரசியலையும் பாமக அதிகமாக முழங்கியது. கருணாநிதியே ராமதாஸ் தன் தமிழின அரசியலை கடத்துகிறார் என்று குற்றம் சாட்டினார். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தீண்டத்தகாத கட்சியாக பார்க்கப்பட்ட பாமக பின் மைய அரசில் பங்கு கொண்ட சூழ்நிலையில் தன்னை காங்கிரசின் நண்பனாக காட்டிக் கொள்ள முனைந்தது. திமுக எப்படி தமிழின அரசியலில் இருந்து மாறியதோ அதே போன்று பாமகவும் மாறியது.
இவ்வாறு தமிழக அரசியலின் போக்கு மாறியதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவின் தமிழின எதிர்ப்பு, இந்திய தேசிய ஹிந்துத்துவ ஆதரவு அரசியல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழின எதிர்ப்பு அரசியல். காங்கிரசின் போக்கு ராஜாஜி, பக்தவச்சலம் காலத்தில் தொடங்கியது. அவ்வளவு சீக்கிரம் அது மாறி விடாது.
நிலை நிறுத்தப்பட்ட கட்சிகள் இவ்வாறு என்றால் புதியதாக கட்சி ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார் போன்றோர் இன்னும் ஒரு படி மேலே சென்று ”இந்திய தேசியம்” என்பதை ஓங்கி ஒலிக்க தொடங்கினர். இவர்கள் இதனை செய்தது இவர்கள் இந்திய தேசியம் மேல் கொண்டிருக்கிற ஆழ்ந்த பற்றினால் அல்ல. தமிழக அரசியல் அந்த பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது அவர்களும் அப்படி தான் நகரமுடியும். அதைத் தான் அவர்கள் செய்தார்கள். ஹிந்தி எதிர்ப்பு என்ற திராவிட அரசியலின் அடிப்படை அடித்தளத்தையே விஜயகாந்த் தகர்க்க பார்த்தார். எனவே தான் திராவிட அரசியலை விலக்க விஜயகாந்த்தை பார்ப்பன ஊடகங்கள் பரப்புரை செய்ய தொடங்கின.
இந்த ஆபத்தான பாதை திருமாவையும் விட்டு வைக்காது என்ற அச்சம் இப்பொழுது ஏற்பட்டு வருகிறது. இந்த போக்கில் இருந்து ஓரளவுக்கு தன்னை விலக்கி கொண்டவர் வைகோ மட்டும் தான். அதனால் தான் வைகோ வளரவே இல்லை. வைகோவின் ஒரு முக்கியமான சக்தியாக வளராமல் போனதற்கு அவரது உணர்ச்சிவசப்படும் போக்கு மட்டும் காரணம் அல்ல. அவரைச் சார்ந்த தமிழ் பிம்பமும் முக்கிய காரணம். 1992ல் திமுக பிளவு பட்ட பொழுது அவரை ஊடகங்கள் ஆதரித்தே எழுதின. மதிமுக தொடங்கப்பட்ட காலங்களில் வைகோவிற்கு நல்ல விளம்பரம் ஊடகங்களில் கிடைத்தது. அவர் விஜயகாந்த் போன்று ஒரு சோனகிரியாக இருந்திருந்தால் அது தொடர்ந்திருக்கும். வைகோ அப்படி பட்டவர் இல்லை என்பதால் அவருக்கு எந்த ஊடக விளம்பரமும் கிடைக்கவில்லை. பின்னர் மூப்பனார் ஊடகங்களை ஆக்கிரமித்தார்.
1991ல் தொடங்கிய இந்த போக்கு 2008ல் திசை மாற தொடங்கி 2009ல் முழுமையான மாற்றத்திற்கு வந்திருக்கிறது. இதற்கு காரணம் ஈழப்பிரச்சனை.
எந்த அரசியலும் தெளிவாக அமைய ஒரு போராட்ட களம் தேவைப்படுகிறது. போராட்டம் தான் அரசியல் களத்தை தெளிவுபடுத்துகிறது. ஈழப் பிரச்சனை எப்பொழுதுமே தமிழக அரசியல் பாதையை மாற்றியிருக்கிறது. பெரியாரின் சுயமரியதை இயக்கம், ஹிந்தி எதிர்ப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளையும் விட தமிழக அரசியலில் நீண்ட காலம் தாக்கத்தை ஏற்படுத்தியது ஈழப் போராட்டம் மட்டுமே. அதன் தாக்கம் தமிழின அரசியலுக்கு ஆதரவாகவும் அமைந்தது, எதிர்மறையாகவும் அமைந்தது. 1980களிலும், 1990களிலும் ஈழப்போராட்டத்தின் தாக்கமே தமிழக அரசியல் பாதையை மாற்றியது. தற்பொழுது 2008லும் அது தான் மாற்றப் போகிறது.
1967க்கு பிறகு எந்த பெரிய போராட்ட களமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த தமிழக அரசியல் இந்திய தேசியம் நோக்கி நகர தொடங்கியது. திமுக உடைந்து அகில இந்திய அதிமுக தேசிய அடையாளத்துடன் உருவாகியது. இந்திய தேசியம் நோக்கி சென்ற தமிழக அரசியலை தடுத்து நிறுத்தியது 1980களில் வீசிய ஈழ ஆதரவு அலையே. ஆனால் அதே ஈழப் போராட்டம் 1991க்கு பிறகு தமிழகத்தை இந்திய தேசிய அரசியல் பாதைக்கு திருப்பியது. தற்பொழுது மறுபடியும் தமிழகத்தை ஈழப் போராட்டம் தமிழ் அரசியல் பாதைக்கும், இந்திய தேசிய எதிர்ப்பு அரசியலுக்கும் கொண்டு வந்திருக்கிறது. முன் எப்பொழுதையும் விட குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் இன்றைக்கு நம் முன் இருப்பது ஒரே கேள்வி தான் ? இன்றைய சூழ்நிலையில் யாரை எதிர்க்க வேண்டும் ?
திமுக, காங்கிரஸ் கூட்டணியையே எதிர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஒழிப்பது தான் நம்முடைய நோக்கம். திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலுடன் தமிழகத்தில் இருந்து ஒழித்துகட்டும். காங்கிரஸ் ஒழிக்கப்பட்டால் தமிழின அரசியல் சார்ந்தே தமிழகம் நகர முடியும். தற்பொழுது ஈழ ஆதரவாக பல்டி அடித்திருக்கிற ஜெயலலிதா அந்தப் பாதையில் இருந்து விலகினால் கருணாநிதி ஜெயலலிதாவை தமிழின அரசியல் சார்ந்தே எதிர்ப்பார். கருணாநிதியும் தமிழின அரசியல் பாதைக்கு திரும்புவார். புதியதாக கட்சி ஆரம்பித்து காங்கிரசின் கடைக்கண் பார்வைக்காக காத்து இருக்கிற விஜயகாந்த்தும் தமிழின அரசியல் நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இரண்டு திராவிட கட்சிகளின் முதுகிலும் சுகமாக சவாரி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் உத்திரபிரதேசத்திலும், பிகாரிலும் 1990களில் அடைந்த பின்னடைவை சந்திக்கும். தனிமை படுத்தப்படும். அது தான் நாம் செய்ய வேண்டியது என நான் திடமாக நம்புகிறேன்.
ஆனால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டு போடுவது என்பதே சகிக்க முடியாத ஒன்று. அதனை எப்படி செய்வது ?
ரோசாவசந்த்தின் பதிவில் நான் எழுதியிருந்தது போல, இந்த தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. அந்த நோக்கத்தினை ஆரோக்கியமாக செயல்படுத்த தமிழர்களுக்கு தேர்தல் அரசியலில் எந்த வழியும் இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. இந்த தேர்தல் போன்று ஒரு குழப்பமான தேர்தலை தமிழ் உணர்வாளர்கள் முன் எப்பொழுதுமே எதிர்கொண்டதில்லை. ஒரு பக்கம் துரோகியாக மாறி விட்ட கருணாநிதி, மற்றொரு புறம் எதிரியாக இருக்ககூடிய ஜெயலலிதா. இவர்கள் இருவரையும் நிராகரித்து விட்டு விஜயகாந்த்தை ஆதரிக்கலாம் என்றால் ஆரம்பத்திலேயே காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் மறைமுக உடன்பாடு கொண்டிருக்கிற அவரின் கபடநாடகம். தனித்து அணி அமைப்பர்கள் என எதிர்பார்க்கப்பட்ட ராமதாஸ், வைகோ, திருமா போன்றோரின் சந்தர்ப்பவாதம்.
இத்தகைய சூழ்நிலையில் பேசாமல் தேர்தலை புறக்கணிக்கலாம், 49ஓ போடலாம் என பல்வேறு சிந்தனைகள் பலரின் மனதிலே ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆக...இந்த தேர்தலில் நாம் யாரையும் ஆதரித்து வாக்களித்து விட முடியாது என்பது ஒரு முக்கிய நிலைப்பாடாக அனைவரது மனதிலும் உள்ளது.
இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்க கூடிய அசாதாரணமான சூழ்நிலையில் தான் இந்த தேர்தலை அணுக வேண்டியுள்ளது. இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இருந்தாலும் நடைமுறையில் இருந்து விலகி வெறும் வறட்டுத்தனமான சித்தாந்த அறிவுஜீவியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. அந்த அவசியமும் எனக்கு இல்லை. எனவே தான் 0% ஓட்டு பதிவு கூட இருக்க கூடாது அப்பொழுது தான் உலகம் நம்மை திரும்பி பார்க்கும், 49ஓ செலுத்த வேண்டும் அப்பொழுது தான் இந்தியா நம்மை திரும்பி பார்க்கும் போன்ற நடைமுறை சாத்தியமற்ற வறட்டுத்தனமான சித்தாந்தங்களில் இருந்து என்னை நான் விலக்கி கொள்கிறேன். இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில், ஒரு எழவு வீட்டில் எது நடைமுறை சாத்தியம் மிக்கதோ அதனையே நான் பின்பற்ற விரும்புகிறேன். அது தான் இயல்பும் கூட.
இந்தியா போன்று ஆரோக்கியமற்ற ஜனநாயக சூழ்நிலையில் தற்போதைய சூழ்நிலையை கொண்டே எதையும் அணுக முடிகிறது. அமெரிக்காவில் உள்ளது போல ஒபாமாவின் கொள்கைகளையும், மெக்கெயின் கொள்கைகளையும் பார்த்து அணுகும் சூழ்நிலையில் இந்திய ஜனநாயகம் இன்றைக்கு இல்லை. தற்போதைய நடைமுறை அப்படியே தொடரத்தான் போகிறது. அதனால் எப்பொழுதும் இந்தியாவில் மாற்றம் வரும் வாய்ப்பும் இல்லை. அதே போல ஆட்டுமந்தைகளாக ஆக்கப்பட்ட மக்கள் புரட்சிகர தத்துவங்களை கைக்கொண்டு இடதுசாரி அமைப்புகளின் பக்கம் திரும்புவார்கள் என்பதும் ஒரு வறட்டு வேதாந்தமே. தேர்தல் என்பது மக்களுக்கு தமிழகத்தில் ஒரு கொண்டாட்டம். மக்கள் இந்த கொண்டாட்டத்தில் இருந்து எப்பொழுதும் தங்களை விலக்கி கொள்ள மாட்டார்கள்.
ஈழத்தில் உள்ள மோசமான சூழ்நிலையும், தமிழர்களுக்கு எதிரான காங்கிரசின் செயல்பாடும், தமிழினத்தின் துரோகியாக மாறிய கருணாநிதியின் அயோக்கியத்தனமும் இன்றைக்கு இருந்திருக்காவிட்டால், நாமும் வறட்டு வேதாந்தங்களை பேசிக் கொண்டு அமைதியாக தேர்தலை புறக்கணித்து விட்டு போய்க் கொண்டு இருக்கலாம். ஆனால் இன்றைக்கு உள்ள சூழ்நிலை அப்படியானது அல்ல. நாம் நம் எதிர்ப்பை ஏதோ ஒரு வழியில் காட்டியாக வேண்டிய தேவை உள்ளது. அந்த எதிர்ப்பை காட்ட நமக்கு கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு இந்த தேர்தல் மட்டுமே..
இப்படியான சூழ்நிலையில் தான் ஜெயலலிதாவின் ஈழப் பிரச்சனை சார்ந்த பல்டி நிகழ்கிறது. இந்தப் பேச்சைக் கொண்டு ஜெயலலிதாவை நம்பலாமா என்று கூட நாம் யோசிக்க முடியாது. நிச்சயமாக ஜெயலலிதாவை நம்ப கூடாது. நம்ப முடியாது. நான் ஏற்கனவே கூறியிருந்தது போல, இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியையும் நாம் ஆதரித்து வாக்களித்து விட முடியாது. அதனால் யார் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நாம் பார்க்க வேண்டியுள்ளது.
தமிழகம் எப்பொழுதுமே திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தான் தமிழினம் சார்ந்த எல்லாப் பிரச்சனைக்கும் எதிர்நோக்கி இருந்து வந்துள்ளது. கருணாநிதி எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுத்து விடவில்லை. என்றாலும் நிராகரிப்பும் செய்ததில்லை. அதனாலேயே அவர் தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்டார். ஆனால் தற்பொழுது தன்னுடைய பதவியை காப்பாற்றும் பொருட்டு தமிழின அழிப்பிற்கு (Genocide) துணையாக நிற்கிறார். எதற்கெடுத்தாலும் தந்தி அனுப்புவதும், நாடகம் ஆடுவதும், தாயே மனது வையுங்கள் என்று சோனியாவிடம் கதறுவதும், என்னால் இவ்வளவு தான் முடியும் எல்லாவற்றையும் செய்து விட்டேன் என புலம்புவதும் என தன்னுடைய சுயமரியாதையை மட்டும் அல்ல தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்ட வகையில் ஒட்டுமொத்த தமிழினத்தின் சுயமரியாதையையும் கருணாநிதி அவமதித்து விட்டார். தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தின் நலத்தின் பொருட்டு ராஜபக்சேவின் குரலை ஒலித்து கொண்டிருக்கிற காங்கிரசுக்கு கருணாநிதி துணை போய் விட்டார்.
பிரபாகரன் எனது நண்பர் என முதல் நாள் சொல்வதும், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தவுடன் பல்டி அடித்து பேசுவதும் என இவர் நடந்த விதம் தமிழினத்தலைவர் என்பது போல அல்ல. சோனியாவின் வேலைக்காரன் என்ற நிலையில் தான் இருந்து வருகிறது.
இவ்வளவு நடந்த பிறகும் கருணாநிதியை திராவிடத்தின் தலைவர் என்று கூறுபவர்களை பார்த்தால் பரிதாபமாகவே உள்ளது. இவர்கள் இன்னும் கடந்த கால கருணாநிதியையே பார்க்கிறார்கள். நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பார்க்க மறுக்கிறார்கள். திராவிடத்தின் தேவைக்காக திமுகவை ஆதரிக்க வேண்டும் என கூறுபவர்கள் கருணாநிதியின் கடந்த ஒரு வருட நாடகங்களை வாய்மூடி பார்த்து கொண்டு மட்டுமே இருக்கின்றனர். தற்பொழுது கருணாநிதி நடத்திக் கொண்டிருப்பது என்ன திராவிட அரசியலா ? அல்லது எதிர்காலத்தில் ஸ்டாலினும், அழகிரியும் நடத்தப்போவது தான் திராவிட அரசியலா ?
கருணாநிதி தன்னுடைய ஆட்சி பறிபோய் விடும் என்ற கவலையை விடுத்து, ஈழ ஆதரவுடன் இந்த தேர்தலை எதிர்கொண்டு இருந்தால் ஒட்டுமொத்த தமிழினமும் அவரது தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டிருக்கும். இன்று தங்களின் சொந்த காசு போட்டு களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற தமிழின உணர்வாளர்கள் திமுக பின் அணிவகுத்து இருப்பார்கள். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் திராவிடத்தின் தலைவராக, தமிழனத்தலைவராக கருணாநிதியை கொண்டாடி இருக்க முடியும். அப்படி இல்லாத சூழ்நிலையில் கருணாநிதியை தண்டிக்க வேண்டும். மிக மோசமான தோல்வி தான் கருணாநிதிக்கு ஒரு பாடமாக அமையும்.
திமுகவை திராவிட அரசியலின் பார்வையாக நாம் பார்த்தால் அந்த அமைப்பு தவறு செய்யும் பொழுது தண்டிக்கவும் வேண்டும். இந்த தேர்தலில் கருணாநிதி அடையும் படுதோல்வி அவரின் துரோக அரசியலுக்கு தமிழர்கள் கொடுக்கும் பாடமாக இருக்கும். எதிர்காலத்தில் திராவிட அரசியலை இன்னும் ஆழமாக பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்தை திமுகவிற்கு கொடுக்கும்.
அதற்காக ஜெயலலிதாவிற்கு ஒட்டு குத்த வேண்டிய நிர்பந்தம் இருப்பதாகவே நான் நம்புகிறேன்.
மேலும் படிக்க...