அஞ்சலி

ஈழத்திற்கான இறுதிப் போரிலே தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனும் வீரமரணம் அடைந்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்.


சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன.
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு.
நான் சசிகுமார். வலைப்பதிவில் தமிழ் சசி/Tamil SASI. நெய்வேலியில் பிறந்து, வளர்ந்து இன்று நியூஜெர்சியில் இருக்கிறேன். எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. அதனால் எழுதுகிறேன். என்னைப் பாதித்த விடயங்களை எழுதுகிறேன். நான் எண்ணுவதை எழுதுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம் இருக்கும். ஒருவரின் உலகத்தை மற்றொருவர் புரிந்து கொள்ளுதல் எளிதானது அல்ல. என்னுடைய உலகத்தில் நிகழும் நிகழ்வுகளை எழுதுகிறேன்.அந்த உலகத்தில் உள்ள ரத்தமும் சதையுமான மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன். ஆனால் நான் எழுதும் மனிதர்கள் வாழும் இடங்களில் நான் தற்பொழுது வாழவில்லை. நான் அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருக்கிறேன். அமெரிக்காவில் இருப்பதால் அவ்வாறு எழுதக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறேன். "என் உலகத்தில்" நிகழும் நிகழ்வுகளை எழுத வேண்டும் என்றால் என்னுடைய "தற்போதைய" இருப்பிடத்தை விட்டு வெளியேறியே எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தப் படுகிறேன்.
வாழ்க்கை நெடியது. பல ஆண்டுகள் கொண்ட இந்த வாழ்க்கையில் நாம் எதையும் திட்டமிட்டு அணுகுவது இல்லை. நான் என் வாழ்க்கையை திட்டமிட்டு அணுகுகிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் ஏமாற்றுகிறார்கள். நான் என் வாழ்க்கையை திட்டமிட்டு அணுகவில்லை. எதிர்பாராத பல விடயங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளது. என் வாழ்க்கைப் பாதையில் எதிர்கொண்ட ஏற்றங்கள், இறக்கங்கள், அனுபவங்களைக் கொண்டே என் வாழ்க்கையை என் அனுபவங்களால் நான் அமைத்துக் கொள்கிறேன். என் அனுபவங்களே என் வாழ்க்கையை வழி நடத்துகின்றன. அது என் தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும், என் அரசியல் கருத்துக்கள் என்றாலும், அதனை என் வாழ்க்கையின் அனுபவங்களில் இருந்தே நான் பெறுகிறேன்.
நெய்வேலியின் புறநகர்ப் பகுதியான தாண்டவன்குப்பம் என்ற குடிசைப் பகுதியை எத்தனைப் பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் நெய்வேலியில் உள்ளவர்களுக்குத் தெரியும். நான் அங்கே தான் பிறந்தேன். தாண்டவன் குப்பத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களே. நெய்வேலி டவுன்ஷிப்பில் (Township) வீடு கிடைக்காதவர்களும் இங்கே இருப்பார்கள். மொத்தத்தில் இங்கிந்தவர்கள் அடிமட்டத்தில் இருந்தவர்கள். அந்தக் காரணத்தால் அங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக இடம் இழந்தப் பலரும் நெய்வேலியைச் சுற்றிய இத்தகையப் பல குடிசைப் பகுதிகளிலேயே தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
நான் ஏழாம் வகுப்பில் படிக்கும் வரை என்னுடைய வீட்டில் மின்சாரம் இல்லை. நெய்வேலி இந்தியாவிற்கே மின்சாரம் அளிக்கும் ஒரு நகரம். ஆனால் நெய்வேலியில் இருக்கும் ஒரு பகுதியில் மின்சாரம் இல்லாத சூழ்நிலையே இருந்தது 1980கள் வரை இருந்தது. காரணம் இந்தப் பகுதியில் இருந்த பலருக்கும் பெரிய வசதி இல்லை. பலரும் சாமானிய மக்கள். சாமானிய மக்களைப் பற்றி அரசாங்கங்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ, எங்கள் நிலத்தைப் பிடுங்கிய நிறுவனங்களுக்கோ எந்தக் கவலையும் இல்லை. நெய்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட என் அப்பாவுக்கும், பாட்டிக்கும் நெய்வேலியில் வீடு இருந்தது. அன்றைக்கு அவர்கள் இருந்த கிராமத்தின் பெயர் இளவரசன்பட்டு. இன்றைக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கமாகவும், அனல்மின் நிலையமாகவும், நெய்வேலி டவுன்ஷிப்பாகவும் இருக்கும் பல கிராமங்களில் இளவரசன்பட்டு கிராமமும் ஒன்று. பலக் கிராமங்களை அழித்து அதில் எழுந்து நிற்கும் நிறுவனம் தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனம். என் பாட்டி இருந்த வீடு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காகப் பறிக்கப்பட்டப் பிறகு அவர்கள் ஆதண்டார்கொல்லை என்ற குடிசைப் பகுதியிலேயே குடி அமர்த்தப்பட்டனர். பிறகு தாண்டவன் குப்பம் என்ற மற்றொரு குடிசைப் பகுதிக்கு மாறினர். ஆதாண்டார்கொல்லை பகுதியை பேச்சுத் தமிழில் ஆண்டாக்கொல்லை என அழைப்பார்கள்.
என் பாட்டி மிகச் சிறிய வயதிலேயே விதவையானவர். நெய்வேலிக்காக நிலத்தை இழந்த என் பாட்டி நெய்வேலி நிலக்கரி நிறுவனம் கட்டப்பட்ட ஆரம்பகாலங்களில் ஒரு கட்டிட கூலி தொழிலாளியாகவே பணிபுரிந்தார். என் அப்பா ஆரம்பக் கல்விக்கு மேல் படிக்க வில்லை. வாழ்க்கைத் தேவைக்காக வியபாரத்தை என் அப்பா சிறிய வயதிலேயே தொடங்கினார். முதலில் பெட்டிக் கடை, பிறகு சைக்கிள் கடை, டீக்கடை, மளிகைக் கடை எனப் படிப்படியாக உயர்ந்தார். அதனால் நான் பிறந்த பொழுது ஏழ்மையில் பிறக்க வில்லை. அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் ஒரு குடும்பத்திலேயே நான் பிறந்தேன். என் அப்பாவிற்கு படிப்பில் நிறைய ஆர்வம் இருந்தும் ஏழ்மையின் காரணமாகப் படிக்கவில்லை. அதனால் தன் பிள்ளைகளை படிக்க வைத்தார். அதற்காக எந்தச் செலவும் செய்ய சித்தமாக இருந்தார்.
படிப்பு தவிர வேறு எதிலும் கவனம் இருக்கக் கூடாது என சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட பல தமிழகப் பிள்ளைகளில் நானும் ஒருவன். ஆங்கில வழிப் படிப்பே சிறந்தப் படிப்பு என்ற தமிழக மக்களின் பொதுவான மனப்பாங்கிற்கு என் அப்பாவும் விதிவிலக்கல்ல. ஆங்கில வழிப் பள்ளியிலேயே என் அப்பா என்னைப் படிக்க வைத்தார். எல்.கே.ஜி முதல் பொறியியல் வரை அவ்வாறே படித்தேன். தாண்டவன் குப்பம் பகுதியில் இருந்த அரவிந்தோ வித்யாலயா தான் நான் படிப்பைத் தொடங்கிய இடம். அக் காலத்தில் இது குடிசைப் பள்ளியாகவே இருந்தது. ஆரம்பக் கல்விக்குப் பிறகு நெய்வேலி டவுன்ஷிப் பள்ளிக்கு மாறினேன். நெய்வேலி வட்டம் 4ல் இருக்கும் செயிண்ட் பால் பள்ளியில் என்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியில் கல்லூரியில் பொறியியல் படித்தேன்.
இயந்திரவியல்(மெக்கானிக்) பொறியியல் படித்தவுடன் எனக்கு உடனே வேலை கிடைக்கவில்லை. கல்லூரிப் படிப்பை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சாதாரண மதிப்பெண்களையே பெற்றேன். பலப் போராட்டங்களுக்குப் பிறகே வேலைக் கிடைத்தது. வேலையிலும் படிப்படியாக நகர்ந்து இன்று அமெரிக்காவில் ஒரு முண்ணனி வங்கியில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான பொறுப்பில் இருக்கிறேன். இதற்காக நான் கடினப்பட்டிருக்கிறேன். நெய்வேலி தாண்டவன் குப்பத்தில் இருந்து யாரும் எளிதாக இதில் வந்து விட முடியாது. வழிகாட்ட யாரும் இல்லாமல், ஒவ்வொரு முடிவையும் சுயமாக எடுத்து, அதனால் அடிபட்டு பாடம் கற்றுக் கொண்டு அடுத்த அடியை வைத்து நகர்ந்து இருக்கிறேன்.
இன்று அமெரிக்காவில் நான் சொகுசாக இருக்கிறேன் என்பதை நான் மறைக்கவில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. என் வீட்டில் லேடஸ்ட் தொலைக்காட்சி உள்ளது. இன்னும் சில லேடஸ்ட் அயிடங்கள் உள்ளன. ஓரளவுக்கு நல்ல கார் இருக்கிறது. வாடகை வீடு தான் என்றாலும் குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக இருக்கிறேன் என்பதை மறைக்க நான் விரும்பவில்லை. ஆனால் சிறு வயதில் கோடைக் காலத்தில் மிகவும் புழுக்கமான அறையில் மின்சாரம் கூட இல்லாத சூழலில் வீட்டிற்கு வெளியே காற்றோட்டமாகப் படுத்தால் தான் ஓரளவிற்கு நிம்மதியாக தூங்க முடியும் என்ற சூழலில் கட்டாந்தரையில் படுத்து, அதில் கிடைக்கும் காற்றிலும் தூங்கியிருக்கிறேன். அவ்வாறு தூங்கியிருப்பதால் இன்னமும் அதைப் போன்ற மக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.
மின்சாரம் கூட இல்லாமல் லாந்தர் வெளிச்சத்தில் படித்தக் காலமும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. நம்முடைய நிலத்தின் மீது கட்டப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இருந்து மின்சாரம் பெறவே நாம் போராடி இருக்கிறோமே என்ற ஞாபகம் என் நெஞ்சில் இருந்து அகல வில்லை. அத்தகைய அநீதி தானே சட்டிஸ்கரில், ஜார்க்கண்ட்டிலும், ஓரிசாவிலும் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படுகிறது என்பதை எண்ணும் பொழுது அம் மக்களுடனும் அவர்கள் நிலத்தை பறிக்க முயலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் நான் அமெரிக்காவில் சொகுசாக இருக்கும் சூழ்நிலையிலும் எழுதத் தோன்றுகிறது.
ஈழப் போராட்டத்தைக் குறித்து நான் நிறைய எழுதி இருக்கிறேன். அவ்வாறு எழுதுவதால் எனக்கு என்ன நோபல் பரிசா கொடுக்கப் போகிறார்கள் ? குறைந்தபட்சம் எந்த வெகுஜன இதழாவது என் கட்டுரைகளை தான் வெளியிடுமா ? இந்தியாவிற்கும், சிறிலங்காவிற்கும், கருணாநிக்கும் ஜல்ரா அடித்தால் குறைந்தபட்சம் வெற்றிப் பெற்ற ஒரு அணிக்காக வக்காலத்து வாங்கினோம் என்ற திருப்தியையாவது அடைய முடியும். ஆனால் இன்று பின்னடைவு நேரிட்ட ஒரு போராட்டத்திற்காகப் பல மணி நேரம் செலவு செய்து எழுதியிருக்கிறேன். இன்றும் எழுதி வருகிறேன். எதிர்காலத்திலும் எழுதுவேன். காரணம் அந்தப் போராட்டம் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகள் சிறிய வயதில் இருந்து என்னுள் இருந்து வந்திருக்கிறது. 10 வயதில், எங்கள் ஊரில் ஜெயவர்த்தனேவின் கொடும்பாவிகள் தெருத்தருவாக இழுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்படும். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லாம் அக் காலத்தில் எதிரொலித்த குரலாக இதனைப் பார்க்க முடியும். இதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும் என்னை இந்தப் போராட்டம் நோக்கி ஈர்த்தது.
விடுதலைப் புலிகளும், அதன் தலைவர் பிரபாகரனும் என்னுடைய சிறிய வயது ஹீரோக்கள். இதைத் தவிர நெய்வேலிக்கு பக்கத்தில் இருந்த முந்திரிக் காடுகள் தமிழ்தேசியம் பேசியக் காலம் அது. இதுவும் என்னை பாதித்தது. என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஈழத்தில் நடந்த நிகழ்வுகளை கூர்ந்து நோக்கியிருக்கிறேன். பிரபாகரனை எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டு ஒரு ஹீரோவாக மட்டுமில்லாமல் கடவுளாகவும் பார்த்த எத்தனையோ தமிழர்களில் நானும் ஒருவன். ஒரு சராசரி தமிழக ஈழ ஆதரவாளன் அவ்வாறே இருக்க முடியும். அது தான் பிரபாகரன் என்ற மனிதன் எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் அடையாளம். நான் வலைப்பதிவில் எழுதத் தொடங்கும் பொழுது ஈழத்தின் நினைவுகளை எழுதாமல் என்னால் இருக்க முடியாது. அமெரிக்காவில் வாழ்ந்தாலும் அதனை எழுதாமல் என்னால் இருக்க முடியாது.
தற்கால வாழ்க்கை சொகுசாக இருக்கலாம். தற்போதைய செகுசான வாழ்க்கைக்கு ஏற்ப நம் கருத்துக்களை அமைத்துக் கொள்ளலாம். பலர் அமைத்தும் கொள்கிறார்கள். ஆனால் நம்முடைய கடந்தக் காலத்தின் நினைவுகள், தாக்கங்கள், நாம் பார்த்த ரத்தமும் சதையுமான மனிதர்கள், அவர்களின் பிரச்சனைகள், போராட்டங்கள் போன்றவற்றை நாம் அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட்டு சென்று விட முடியாது. அந்த நினைவுகளே என்னை போராட்டத்தைக் குறித்து எழுத வைக்கின்றன. அத்தகைய மனிதர்களைப் போன்ற வேறு மனிதர்களைப் பார்க்கும் பொழுது அவர்களையும் பற்றியும் எழுத வைக்கிறது. ஈழத்தின் போராட்டத்தை பார்த்து விட்டு காஷ்மீரின் போராட்டத்தையோ, நாகா மக்களின் பிரச்சனைகளையோ புறந்ததள்ளி விட முடியாது. நெய்வேலியில் நிலம் பறிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைப் பார்த்து விட்டு சட்டிஸ்கரில் நடக்கும் பிரச்சனைகளை புறக்கணித்து விட முடியாது. இவ்வாறு எழுதுவதால் சொல்லப்படும் வாதம், நீ ஈழத்திற்கு போ, சட்ஸ்கருக்கோ போ என்பது. இந்த நுண்ணிய அரசியலை நாம் கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் இருந்தாலும், நான் கடந்து வந்த கடந்தக் காலம் என்னைக் கடந்து விடவில்லை. அது என்னுடன் ஒட்டியே வருகிறது. நினைவுகளாக ஒட்டி வருகிறது. என் வாழ்வில் நான் எதிர்கொள்ளும் நினைவுகளே என்னுடைய கருத்தாக்கங்களை வழி நடத்துகிறது. அந்த எண்ணங்களையே நான் எழுத முடியும்.
வலைப்பதிவுகள் என்பன நம் தனிப்பட்ட எண்ணங்களின் பதிவாக்கம். என் எண்ணங்களை எழுதாதே என்று செல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. என் எண்ணங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கும் யாருக்கும் உரிமையில்லை. எனக்கு தோன்றுவதை தான் நான் எழுத முடியும். இதனை ஏன் நீ எழுதவில்லை, இதனை ஏன் எழுதுகிறாய், ஈழம் பற்றி எழுத வேண்டும் என்றால் ஈழத்திற்குச் செல் போன்றவற்றை நான் நிராகரிக்கிறேன். நான் என்ன எழுத வேண்டும் என்பதை நானே தீர்மானிக்க முடியும்.
முதலில் நாம் எல்லாம் சாமானியத் தனி மனிதர்கள். நம்மைச் சுற்றி நமது குடும்பமும், நம்மை நம்பி இருப்போரும் இருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கை என்பது நமக்கு மட்டும் என்பது அல்லாமல் அவர்களுக்குமானது தான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வகையில் குடும்பமே முதன்மையானதாகிறது. ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்பவுமே வாழ்க்கை அமைகிறது. இந்த வாழ்க்கையை விடுத்து வெளியே சென்று புதிய ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது 33வயதில் எளிதானது அல்ல. இது ஒரு வகையில் இயலாமை கலந்து சுயநலம் என்பதை நான் மறுக்க வில்லை. ஆனால் நாம் ஒவ்வொருவம் அவ்வாறு தான் இருக்கிறோம் என்பதை நாம் மறந்து விட முடியாது. எனவே இருக்கின்ற சூழலுக்கு ஏற்ற பணியையே நான் செய்ய விரும்புகிறேன்.
என்னுடைய எண்ணங்களை எழுதுவதோடு மட்டுமில்லாமல் என்னால் முடிந்ததை செய்ய முயன்று கொண்டு தான் இருக்கிறேன். புலம் பெயர்ந்து வெளிநாட்டில் இருப்போர் எல்லாம் சுகமாக இருக்கிறோம், எதையும் செய்யவில்லை என்பன போன்ற வாதத்தை நான் நிராகரிக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் எத்தனையோ பேர் இந்தியாவில் இருப்போரை விட தாங்கள் கொண்ட கொள்கைக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் பின்பற்றவே விரும்புகிறேன். அப்படி நான் பின்பற்ற விரும்புகிறவர்களில் முக்கியமானவர் நண்பர் சங்கரபாண்டி அவர்கள். அவரைப் பற்றி எழுதுவதை அவர் விரும்புவாரா எனத் தெரியவில்லை. ஆனாலும் இதனை எழுதுகிறேன். அமெரிக்காவில் இருந்து கொண்டு நிறைய விடயங்களை செய்ய முடியும் என்பதை எனக்கு எடுத்துக் காட்டியவர்களில் ஒருவர் நண்பர் சங்கரபாண்டி அவர்கள். தாய்த்தமிழ்ப் பள்ளிகள், ஈழம், தமிழகம் சார்ந்த விடயங்கள் என பல்வேறு செயல்பாடுகளை எந்தத் தன்னலமும் இல்லாமல் செய்து கொண்டிருப்பவர். இதற்காக அவர் செலவிடும் நேரம் அதிகம்.
அமெரிக்காவில் இன்னும் எத்தனையோப் பேர் இது போன்று தங்களால் முடிந்த பல விடயங்களைச் செய்துக் கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழுவது ஒரு வகையில் பலமானதே என்பதைக் கடந்த காலங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். ஈழத்தமிழர்கள் அதனை வெளிப்படுத்தியிருந்தனர். நானும் என்னால் முடிந்த சிலவற்றையேனும் கடந்த சில ஆண்டுகளில் செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு ஒரு ஆறுதல் இருக்கிறது. தமிழ்ச் சார்ந்த விடயங்களுக்கு என்னால் முடிந்தவற்றை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.
**************
தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் நிறைய எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். முழு நேரப் பணி, குடும்பம் இவற்றுக்குப் பிறகு தான் எழுத்து என்று இருக்கிற யதார்த்தமான வாழ்க்கைச் சூழலில் எழுத நினைத்தவற்றை முழுமையாக எழுதவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. ஆனாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதியதில் எனக்கு ஒரளவிற்கு திருப்தியும் இருக்கிறது. இனி தொடர்ந்து எழுத முடியும் என நம்புகிறேன்.
வாய்ப்பளித்த தமிழ்மணம் நண்பர்களுக்கும், வாசித்த வலைப்பதிவு வாசகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நட்சத்திர வாரத்தை ஈழப் போரில் ஆர்ட்டலரிகளுக்கும், செல்லடிகளுக்கும் பலியான மக்களுக்கும், போராளிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன். ஈழப் போராட்டம் சார்ந்த நினைவுகளை அடுத்த வாரமும் தொடர இருக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்...
தமிழ்மணத்தின் நட்சத்திரமாகி இருக்கிறேன். 2005ல் முதல் முறையாக நட்சத்திரமாகியப் பிறகு 2010ல் மறுபடியும் நட்சத்திரம். 2004ல் தொடங்கி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வலைப்பதிவுகளுடன் நெருக்கமாக இருந்து வருவது எனக்கே ஆச்சரியமான ஒன்று தான். நான் எழுதத் தொடங்கியக் காலத்தில் எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலர் இப்பொழுது எழுதுவதை நிறுத்தி விட்டார்கள். பலப் புதியவர்கள் ஒவ்வொரு மாதமும் வலைப்பதிவில் நுழைந்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்கிப் பெருகி விட்டது. இன்றைக்குச் சுமார் ஏழாயிரத்திற்கும் அதிகமான வலைப்பதிவுகள் தமிழில் உள்ளன. எழுதப்படும் அனைத்தையும் வாசிக்க முடிவதில்லை. வாசிக்க முடிவதெல்லாம் சிறந்த படைப்புகளாக இருப்பதும் இல்லை. தினந்தோறும் எழுதப்படும் எண்ணற்றக் கட்டுரைகளில் எத்தனையோ நல்லப் படைப்புகள் யார் கண்ணிலும் படாமல் எங்கோ ஒளிந்து கொள்கின்றன.
வலைப்பதிவுகள் குழு மனப்பான்மை உடையது. நம்முடையப் படைப்புகள் வாசிக்கப்பட வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு குழுவுடன் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. தங்களை ஏதேனும் குழுவுடன் ஐக்கியப்படுத்திக் கொள்பவர்கள் வேகமாக பிரபலமாகிறார்கள். திரட்டிகளின் ஓட்டுகளை பெறுவதற்கும் அது ஒரு முக்கிய தேவையாகவும் இருக்கிறது. நான் முதலில் வலைப்பதிவுகளை வாசிக்கத் தொடங்கிய பொழுது மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வலைப்பதிவுகள் இருந்தன. அந்தச் சூழ்நிலையிலும் குழு மனப்பான்மையை உணர்ந்து இருக்கிறேன். சில மாதங்கள் வலைப்பதிவுகளை வாசித்தப் பிறகு நாமும் எழுத வேண்டும் என யோசித்த பொழுது பங்குச்சந்தைக் குறித்த வலைப்பதிவை தொடங்கினேன். அப்பொழுது பங்குச்சந்தைக்கு என்று ஒரு தனி வலைப்பதிவை தமிழில் யாரும் வைத்திருக்கவில்லை. நான் பங்குச்சந்தை குறித்து எழுதத்தொடங்கியதற்கு அதுவும் ஒரு காரணம். அது தான் எந்தக் குழுவிலும் சேராமல் என்னை ஒரளவுக்கு அடையளப்படுத்தியது. அதனை தொடர்ந்து என்னுடைய காஷ்மீர் குறித்தக் கட்டுரைகளும், பல்வேறு அரசியல் கட்டுரைகளும் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தன.
***************************
தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை கூடிய அளவிற்கு தரம் கூட வில்லை என்ற குறைபாடும், குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இது ஒரளவுக்கு உண்மை தான். என்றாலும் இன்று இருக்கின்ற வெகுஜனப் பத்திரிக்கைகளை விட தமிழ் வலைப்பதிவுகளில் நல்ல படைப்புகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
ஒரு பிரச்சனைக் குறித்த பல்வேறு கோணங்களை வலைப்பதிவுகள் நமக்கு வழங்குகின்றன. தமிழ் எழுத்து உலகில் ஒரு சில எழுத்தாளர்கள், வெகுஜன ஊடகங்களின் பார்வை மட்டுமே நமக்குக் கிடைத்துக் கொண்டிருந்த சூழலில் இது மிகப் பெரிய கருத்தாக்க வெளியை நமக்கு வழங்குகிறது. ஆனால் அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா என்று நோக்கினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. திரைப்பட விமர்சனம் போன்றவற்றில் ஒரு திரைப்படம் குறித்து பலக் கோணங்கள் கிடைக்கின்றன. ஆனால் முக்கிய சமூகப் பிரச்சனைகளில் பல வேறுபட்ட கோணங்கள் கிடைப்பதில்லை. சினிமாவை மாறுபட்டு உள்வாங்கும் நமது சமூகம், சமூக வாழ்வியல் பிரச்சனைகளை ”பெரும்பாலும்” ஒற்றைப் பரிமாணத்திலேயே பார்க்கிறதோ என்ற கருத்து எனக்குள்ளது.
***************************
தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சியும், இணையத்தின் வளர்ச்சியும் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. இன்றைக்குப் பல எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு உடனுக்குடன் வாசகர்கள் கிடைக்கிறார்கள். அவ்வாறு கிடைப்பதால் அவர்கள் எழுதும் எழுத்துக்கு "ரசிகர்களும்" பெருகி இணைய வாசகர் உலகம் பல ரசிக குழுக்களால் சினிமா ரசிகர் மன்றங்கள் போன்ற குழும மன்றங்களாக மாறி விட்டது. சாருவுக்கு ஒரு கோஷ்டி, ஜெயமோகனுக்கு ஒரு கோஷ்டி என சினிமா ரசிகர் மன்றங்களை ஒத்த ரசிகர் குழுக்கள் இங்கே உருவாகி விட்டது.
இந்தக் குழுக்களை தொடர்ச்சியாக கட்டமைக்க எழுத்தாளர்கள் முனைகின்றனர். இந்தக் குழுக்களை தக்கவைக்க இவர்களும் அவ்வப்பொழுது தங்களுக்குள் சண்டைகளை உருவாக்கி, நல்ல சுவாரசியமான மோதலை அவ்வப்பொழுது வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய கார்ப்பரேட் யுகத்தில் எல்லாமும் கார்ப்பரேட் மயமாகி வரும் சூழலில் எழுத்தும் கார்ப்பரேட் யுகத்தை நோக்கித் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. வாசகர்கள் ரசிகர் மன்றங்களாகவும் பிறகு வாடிக்கையாளர்களாகவும் மாறும் பரிணாம வளர்ச்சியில் தான் சாமியார்களுக்கு விளம்பர சேவைகளையும் இந்த எழுத்தாளர்கள் புரிந்து வருகின்றனர். எழுத்தாளர்கள் தங்களின் வாசகர்களைத் தக்கவைத்துக் கொள்ள தொடர்ச்சியான குப்பைகளை தங்கள் வலைத்தளத்தில் ஓய்வில்லாமல் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படிக் குப்பைகளைக் கொட்டிக் கொண்டிருப்பதில் குறிப்பிடத்தக்கவர்கள் சாரு நிவேதிதாவும், ஜெயமோகனும்.
இவர்கள் எழுதுவது பெரும்பாலும் சுவாரசியமான குப்பைகள் தான் என்றாலும் சாரு கொட்டும் குப்பைகளை கூட கலகம் என புளகாங்கிதம் அடைய ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்தியக் காலத்திலும், போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தக் காலத்திலும் ஈழத்தைப் பற்றி எழுதவே சாரு தொடை நடுங்குவார். மே2009க்குப் பிறகு பிரபாகரன் சேவ் செய்து சரணடைந்து விட்டார் எனப் பல மாதங்களுக்குப் பிறகு யோசித்து எந்தப் பிரச்சனையும் தனக்கு ஏற்படாது என உறுதிப் படுத்திக் கொண்டு எழுதினார் சாரு. உடனே அவர் ரசிக சிகாமணிகள் எல்லாம் சாருவுக்கு எவ்வளவு தைரியம் பாருங்கள், பெரிய கலகத்தையே புரிந்து விட்டார் என புல்லரித்து மகிழ்ந்தனர்.
இந்த எழுத்துலகக் கலகப் புல்லரிப்பின் மிகை உணர்ச்சியைப் பார்த்தால் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியை விட அசத்தலான நகைச்சுவையாக இருக்கும். தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் ”நொஞ்சான்” தமிழ்மணத்தை நாலு சாத்து சாத்தினால் பெரும் கலகத்தை ஏற்படுத்தியவர் என்ற பட்டம் கிடைக்கும். யோனி என்ற வார்த்தையை எழுதினாலே கலகம். காமக்கதை என்ற தலைப்பு வைத்தாலே பெரும் கலகம். இதுவெல்லாம் கொஞ்சம் ”ஓவர்” என்று இந்த கலக எழுத்தாளர்களுக்கும், ரசிக சிகாமணிகளுக்கும் தெரியாதது தான் அதை விட நகைச்சுவையானது.
ஜி.நாகராஜன் மிகச் சிறந்த எழுத்தாளர். அவரது குறத்தி முடுக்கு, நாளை மற்றொரு நாளே போன்ற நாவல்கள் வெளிவந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பாலியல் தொழிலாளர்களும், தன் மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவனும் இவர் நாவலின் கதாநயகர்கள். தான் கலகம் புரிவதாக இவர் சொல்லிக் கொண்டதில்லை. அதன் பிறகு எத்தனையோ பேர் தமிழில் பாலியல் கலகத்தைப் புரிந்து விட்டனர். பாலியல் வெகுஜன ஊடகங்களிலும் பரவலாக பலரால் அலசப்பட்டது. பல வெகுஜன பத்திரிக்கைகள் மிக விலாவாரியாக கட்டுரைகள் எழுதி பாலியல் மூடு மந்திரங்களை அவிழ்த்தன. விஜய் டிவியில் வந்த புதிரா, புனிதமா அந்தக் காலக்கட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும் ஒரு பெண் பாலியல் கேள்வி கேட்பதா எனக் கூக்குரல் எழுந்தது. இன்றைய நவீன இணையக் காலத்தில், இணையத்தை பயன்படுத்துபவர்கள் மத்தியில் பாலியல் குறித்த விழிப்புணர்வு பெருமளவில் உள்ளது என்றே சொல்லலாம். அவ்வாறான நிலையில் காமக்கதை என்று எழுதுவதே கலகம் என்று எண்ணும் காமெடி எல்லாம் தமிழ் வலைப்பதிவுலகில் மட்டுமே நிகழ்க்கூடியது. இதனால் என்ன பயன் என்றால் தமிழ்மணம் வலைப்பதிவுக்கு வரும் தேடலில் பெரும்பாலும் காமக்கதையை தேடிய கூகுள் தேடல்கள் தான் அதிகமாக வருகின்றன. இனி என்னுடைய இந்தக் கட்டுரைக்கும் அதிக தேடல் கிடைக்கும் என நம்புகிறேன். அந்த வகையில் இது ஒரு தேடல் கலகம் தான்.
இன்னொரு நகைச்சுவையை உதாரணமாக கூற வேண்டும் என்றால் சமீபத்தில் வலைப்பதிவில் நடந்த லீனா மணிமேகலைச் சார்ந்த விடயத்தை கூறலாம். லீனா ஒரு கவிதையை எழுத அதனை விமர்சித்து வினவு தளத்தில் ஒரு கட்டுரை வெளியானது. கலகம், கட்டுடைப்பு என்று கூறும் லீனா மணிமேகலை போன்றவர்கள் விமர்சனம் என்று வரும் பொழுது மட்டும் பெண் என்ற கேடயத்தை பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். அவர்களை ஆதரிப்பவர்களும், விமர்சனம் செய்பவர்களை ஆணாதிக்கம் மிக்கவர்கள் என குற்றம்சாட்டுகின்றனர். இது ஒரு அலுப்பூட்டும் வாதம். பெண்ணியவாதிகளை விமர்சிக்கவே பல நேரங்களில் தயக்கமாக உள்ள காரணங்களில் இந்த ஆணாதிக்க முத்திரையும் ஒரு முக்கியக் காரணம். இங்கே விமர்சனம் செய்த வினவுக்கு ஆணாதிக்கவாதி என்ற பட்டமே கிடைத்தது. லீனா மணிமேகலைக்கு எதிராக ஒரு விமர்சனக் கட்டுரை முன்வைக்கப்பட்டவுடன் தமிழ் அறிவுஜீவிகள் எல்லாம் சிலிர்த்து எழுந்தனர். ஈழப் போராட்டம் நடந்தக் காலத்தில் ஒரு கூட்டம் கூட நடத்த துப்பில்லாத தமிழ் நாட்டின் அறிவுஜீவிகள் எல்லாம் கொதித்து எழுந்து இல்லாத எதிர்ப்புக்கு கண்டன கூட்டம் நடத்த தொடங்கி விட்டனர். லீனா மணிமேகலை எழுதுவதை யார் தடை செய்தார்கள்? லீனா மணிமேகலைக்கு அப்படி என்ன தான் எதிர்ப்பு எழுந்தது ? அவர் எழுதியக் கவிதைக்கு ஒரு விமர்சனக் கட்டுரை. அவ்வளவு தான். இல்லாத எதிர்ப்புக்கு ஒரு கண்டனக் கூட்டம் நடத்தும் போலி அறிவுஜீவிகளுக்கு அ.மார்க்சின் தலைமை ஆச்சரியப்படுத்த வில்லை. இதில் இன்னொரு உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் லீனா மணிமேகலையின் கவிதை, தமிழ்க் கவிதையை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்கிறதாம். இது வேறையா...அடங் கொய்யால...நல்ல வேளையாக இதைப் பார்க்க அடுத்த நூற்றாண்டில் நான் இருக்கப் போவதில்லை.
இப்படி நாம் கூறினால் உடனே யோனி என்ற புரட்சி வார்த்தைக்கு நாம் எதிரானவர்கள், கலாச்சாரக் காவலர்கள், ஆணாதிக்கவாதிகள் என பட்டம் கிடைக்கும். ஆனால் கோணேஸ்வரிகள்...என்ற இந்தக் கவிதை தரும் உணர்வுகளையும், கருத்தின் ஆழத்தையும் லீனா மணிமேகலை போன்ற கவிஞர்களின் புரட்சிக்(?) கவிதைகள் நமக்குத் தருவதில்லை.
***************************
2005ல் முதலில் வலைப்பதிவுகளில் நுழைந்தேன். இன்றைக்குத் திரும்பி பார்த்தால் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. என்னுடைய எழுத்து பெரும்பாலும் அரசியல் சார்ந்தாகவே இருந்து வந்திருப்பதால் நான் சார்ந்த, ஆதரித்த, முன்வைத்த அரசியல் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டது போன்ற உணர்வு எனக்குள்ளது. நாம் முன்வைத்த அரசியலை எல்லாம் மீள் ஆய்வு செய்து, முதலில் இருந்து அரசியலையும், கருத்தாக்கங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டுமோ என்ற உணர்வு கூட ஒரு நேரத்தில் எழுந்தது உண்டு. அதே நேரத்தில் தற்போதைய சமுதாய முறையையும், அநீதியான சூழலையும், அராஜகமான அதிகாரமையப் போக்கினையும், தற்போதைய உலக ஒழுங்கினையும் எப்பொழுதும் நிராகரித்து வந்திருக்கிறேன் என்ற வகையில் ஒரு வகையான திருப்தியும் எனக்குள்ளது.
***************************
மே 2010, தமிழினப் பேரவலத்தின் ஒரு வருடத்தை குறிக்கும் நினைவு மாதம். புலிகளின் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 12 மாதங்கள் முடிந்து விட்டன. சுமார் 25,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் முல்லைவாய்க்கால் கடற்க்கரை மணலில் புதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் விட்டனர். ஒரு மனிதப் பேரவலத்தை உலகமே கண்டுகொள்ளாத உலக ஒழுங்கிலும், சக தமிழர்கள் கூட முழுமையாக இந்த அவலத்தை உள்வாங்காத சூழ்நிலையிலும் வாழ நேர்ந்ததன் துக்கத்தை மறுபடியும் நினைவு கூறும் மாதமாக மே 2010 மாறியுள்ளது.
இந்த ஒரு வருடத்தில் ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வியலை மீள் அமைக்கவே அராஜகச் சூழலை எதிர்கொள்ளும் நிலையில் அவர்களுக்கான அரசியல் என்பது இன்றைக்கு ஏதும் இல்லை என்பதான சூழ்நிலையே உள்ளது. இன்றைய அநீதியான உலக ஒழுங்கை மட்டுமல்ல அவர்களின் அரசியல் பாதையை செப்பனிட வேண்டிய தமிழ் அரசியல் சூழலும் அந்த அரசியலை முன்னிலைப்படுத்த வேண்டிய தமிழ் அறிவுஜீவி சூழலும் தமிழர்களுக்கு சாதகமாக அமையவில்லை. தற்போதைய ஒட்டுமொத்த பின்னடைவுக்கும் புலிகளே காரணம் என முடிவு செய்து விட்ட தமிழ் அறிவுஜீவி உலகம் அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரணை செய்து கொண்டிருந்ததிலேயே கடந்த 12 மாதங்கள் கழிந்து போய் விட்டன. சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கியே தமிழ் மக்களுக்கான தீர்வுகளை கேட்க வேண்டி உள்ளதாக குரல் எழுப்பிய அறிவுஜீவிகள் எல்லாம் இன்று தமிழ் திரையுலகில் கதை, வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் தமிழீழத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்தியவர்கள் எல்லாம் இன்று தமிழின அரசியல் என்ற பெயரில் தங்களின் சுயநல அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். வைகோ, திருமா, கி.வீரமணி, நெடுமாறன், சுப.வீரபாண்டியன் என எல்லோரும் தங்களின் தேவைக்கு ஏற்ப தமிழின அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய பள்ளிக் காலத்தில் என்னை அதிகம் பாதித்தவர்கள் சுப.வீரபாண்டியன் மற்றும் தியாகு போன்றோர்களே. ஆனால் இன்றைக்கு சுப.வீரபாண்டியனை பார்க்கும் பொழுது எனக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது.
கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் இன்றைக்கு ஒரே தராசில் தான் எடை போட வேண்டி இருக்கிறது. தமிழின உணர்வாளர்களாக இருந்த உடன்பிறப்புகளை ரத்தத்தின் ரத்தமாக மாற்றிய பெருமை கருணாநிதியையேச் சாரும். அது தான் அவர் தமிழ் சமுதாயத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் விட்டுச் செல்லும் பாரம்பரியம் (Legacy).
***************************
அடுத்த ஒரு வாரத்திற்கு இத்தகைய பல்வேறு விடயங்களை தொட்டுச் செல்வதான எண்ணத்தில் இருக்கிறேன். விரிவாக எழுத முடியா விட்டாலும் தொட்டுச் செல்ல முடியும் என நம்புகிறேன்.
தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த நண்பர் சங்கரபாண்டிக்கு என்னுடைய நன்றி...