வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னா, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் சுதந்திர தின வார இறுதியில் அமெரிக்காவின் ஏதேனும் ஒரு நகரில் பெட்னா விழாவினைக் கொண்டாடுவது தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. இந்த ஆண்டு 23வது ஆண்டு நிகழ்வு கனெக்டிக்கெட் மாநிலத்தில் உள்ள வாட்டர்பெரி நகரத்தில் ஜூலை 3,4,5 ஆகிய மூன்று தினங்களில் நடந்து முடிந்துள்ளது. முதன் முறையாக இந்த ஆண்டு பெட்னாவில் கலந்து கொண்டேன். பெட்னா குறித்து கேள்விப்பட்டதற்கும், பெட்னாவில் பெற்ற அனுபவத்திற்கு பெரிய வேறுபாடு இருந்தது. நிகழ்ச்சிகள் குறித்து பாரட்டுதல்களும், விமர்சனங்களும் உள்ளன. ஏமாற்றம், ஆச்சரியம் என இரண்டு உணர்வுகளும் பெட்னா விழாவில் ஏற்பட்டது. முதல் நாள் ஏமாற்றமும், இரண்டாம் நாள் நிகழ்வுகள் நம்பிக்கையையும் அளித்தன. மூன்றாம் நாள் இலக்கிய நிகழ்வுகளில் இலக்கியம் சார்ந்த பல்வேறு கருத்துக்களை கேட்க முடிந்தது. பெட்னாவின் அனைத்தும் பிடித்திருந்தது என சொல்லி விட முடியாது. ஆனால் மனநிறைவை அளிக்கும் நிகழ்வுகள் பெட்னாவில் இருந்தன.
முதலில் நிகழ்ச்சி நடத்திய பெட்னா குழுவினருக்கு என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டதட்ட 2500பேர் உட்காரக் கூடிய அரங்கம் நிரம்பி இருந்தது. தெருக்கூத்து, இன்னிசை நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளின் பொழுது அரங்கம் நிரம்பி இருந்தது. இவ்வளவு பேரையும் ஒழுங்குப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உணவு ஏற்பாடுகள் தொடங்கி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகவே இருந்தன.
**************
முதலில் பெட்னாவைக் குறித்து இந்த ஆண்டு எழுந்த சில விமர்சனங்களைப் பற்றி என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன். பெட்னாவையும், செம்மொழி மாநாட்டையும் ஒப்பிடுவது போன்ற லூசுத்தனமான வாதம் வேறு ஒன்றும் கிடையாது. பெட்னா என்பது ஒரு தனியார் அமைப்பு. யாருடைய வரிப்பணத்தையும் எடுத்து தன்னுடைய தனிப்பட்ட கனவுகளையும், குடும்பத்தையும் முன்னிறுத்தி பெட்னா விழா நடைபெற வில்லை. ஒவ்வொருவரிடம் இருந்தும் பெறும் தனிப்பட்ட நன்கொடைகளையும், கட்டணங்களையும் கொண்டே பெட்னா விழாக்கள் நடந்து வருகின்றன. கருணாநிதியின் ஜால்ராக்களை நாம் எதிர்ப்பதால், கருணாநிதியின் சூரியக் குடும்பம் தமிழகத்தில் செய்து வரும் தில்லுமுல்லுக்களை நாம் வெளிப்படுத்துவதால் நாம் முன்னெடுக்கும் ஒரு விழாவினை கருணாநிதியின் உடன்பிறப்புகள் எதிர்க்கின்றனர். தமிழர்கள் மத்தியில் சரிந்துப் போன செல்வாக்கினை தூக்கி நிறுத்துவதற்காக பெட்னா முன்னெடுக்கப்படவில்லை. கடந்த 22 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விழா, 23வது வருடமாக இந்த ஆண்டும் நடைபெற்றது. தவிரவும் தமிழர்களுக்கு நாடகங்களை நடத்தி துரோகங்களை பெட்னா செய்யவில்லை. அந்த துரோகங்களை மறைக்க விழா எடுக்கவில்லை. தமிழக மக்களின் வரிப்பணத்தில் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பிசினஸ் க்ளாஸ் விமானப் பயணத்துடன் செம்மொழி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மத்தியில் தங்களின் சொந்தக் காசு போட்டு அமெரிக்காவின் பல மூலைகளில் இருந்தும் விமானத்தில் பெட்னாவிற்கு வந்திருந்தனர்.
கருணாநிதி ஆதரவாளர்கள் ஒரு புறம் என்றால் சங்பரிவார் கும்பலும் பெட்னாவை குறித்து இணையத்தில் அவதூறுகளை பரப்பி வந்தது. அதற்கு ஒரு பிண்ணனி காரணம் உண்டு. பெட்னா அமெரிக்காவில் அனைத்து தரப்பு தமிழர்களையும் பிரதிபலிக்கும் ஒரு அமைப்பாக அமெரிக்க தமிழர்களை பிரதிபலித்து வருகிறது. சங்பரிவார் கும்பல் அமெரிக்காவில் முன்னெடுக்கும் ஹிந்துத்துவ முயற்சிகளை எதிர்க்கும் ஒரு அமைப்பாக பெட்னா செயல்பட்டு வந்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பாஜக இந்தியாவில் பாடப்புத்தகங்களில் தன்னுடைய கருத்துக்களை திணிக்க முயன்றது நினைவிருக்கலாம். அது போன்றதான ஒரு முயற்சியை 2005ல் சங்பரிவாரின் அமெரிக்க கும்பல் செய்ய முயன்றது. Vedic Foundation (VF), Hindu Education Foundation (HEF) போன்றவையே இந்த அமைப்புகள். இவை சங்பரிவாரின் அமெரிக்க முகங்கள். கலிபோர்னியா மாநிலத்தில் பாடப்புத்தகங்களில் இந்து மதம், சாதி, ஆரியர்கள் போன்ற குறிப்புகளை மாற்ற முயன்று கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் (தமிழ் உட்பட) சமஸ்கிருதமே அடிப்படை மூலம் என அமெரிக்க பாடதிட்டத்தில் இந்துத்துவத்தை திணிக்க சங்பரிவார் கும்பல் முயன்றது. ஆனால் இந்த முயற்சியை அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் விட்சல் போன்றவர்களும், பல தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட இடதுசாரி அமைப்புகளும் எதிர்த்தன. அவ்வாறான அமைப்புகளில் பெட்னாவும் ஒன்று. பெட்னாவின் அப்போதைய தலைவர் திரு.தில்லைக் குமரன், கலிபோர்னியா கல்வித்துறைக்கு எழுதிய கடிதத்தை இங்கே வாசிக்கலாம் - http://www.friendsofsouthasia.org/textbook/LetterToCAStateBoard_FeTNA.pdf. இவ்வாறான அமைப்புகளின் கூட்டு முயற்சியின் காரணமாக சங்பரிவாரின் இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது.
இவ்வாறு அமெரிக்காவில் தமிழ் மொழியைச் சார்ந்தும், அமெரிக்காவில் உள்ள தமிழர்களின் நலன்களை முன்னெடுக்கும் அமைப்பாகவும் பெட்னா இருந்து வருகிறது. அத்தகைய பெட்னா அமைப்பு தான் ஒவ்வொரு ஆண்டும் பெட்னா விழாவினை நடத்தி வருகிறது. பெட்னா விழா என்பது அமெரிக்காவில் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வு. தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் சூழலில் தமிழர்களை ஒன்றிணைக்க இத்தகைய விழாக்கள் அவசியமாகிறது. பெட்னாவில் கலந்து கொள்பவர்களில் 95% பேர் தமிழகத்தைச் சார்ந்தவர்களே. பெட்னாவை ஒரு விழாவாக மட்டும் இல்லாமல் ஒன்று கூடும் நிகழ்வாகவே பலர் பார்க்கின்றனர். மூன்று நாட்கள் கலந்து கொண்டு விட்டு திரும்பிய வழியில் என் மனைவி மூன்று நாட்களும் சென்னையில் இருந்தது போல உணர்ந்ததாக தெரிவித்தார். இத்தகைய உணர்வு புலம்பெயர்ந்து வாழும் சூழலில் அவசியமாகிறது. தவிரவும் தங்களின் குழந்தைகளின் திறமைகளை அரங்கேற்றும் களமாகவும், நண்பர்களை சந்திக்கும் இடமாகவும், தமிழ் சார்ந்த முன்னெடுப்புகளை அடுத்த ஒரு வருடத்திற்கு திட்டமிடும் சிந்தனை வெளியாகவும் பெட்னா விளங்குவதை என்னால் உணர முடிந்தது.
பெட்னாவை ஒரு முற்போக்கு அமைப்பாகவும், புலிகள் ஆதரவு அமைப்பாகவும் பல ஊடகங்கள் கடந்த காலத்தில் எழுதியிருக்கின்றன. அவ்வாறான கருத்தாக்கத்துடன் பெட்னாவில் கலந்து கொண்ட எனக்கு முதல் நாள் ஏமாற்றமே ஏற்பட்டது. பெட்னா நிகழ்ச்சிகளில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் அவசியம் தான் என்றாலும் சன் டிவி, கருணாநிதி டிவி பாணியிலான நிகழ்ச்சிகள் அவசியம் தானா என்ற கேள்வியையும், விமர்சனத்தையும் என்னால் எழுப்பாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக ப்ரியாமணி, லட்சுமி ராய் போன்ற பொம்மைக் கதாநாயகிகளை பெட்னா மேடையில் அரங்கேற்றுவதும், பிறகு மொம்மைக் கதாநாயகிகள் குறித்து கவிஞர் தாமரை பேசுவதும் பெருத்த முரண்பாடாக எனக்கு தெரிகிறது.
சினிமாவையோ, சினிமாக் கலைஞர்களையே நான் முழுமையாக நிராகரிக்கவில்லை. ஆனால் தமிழ்ச்சினிமா பாணியில் சினிமாக் கலைஞர்களை அழகுப் பதுமைகளாக மேடை ஏற்றுவதை தான் நான் நிராகரிக்கிறேன். விக்ரம், ப்ரியாமணி, லட்சுமி ராய், ஸ்ரீராம் போன்றவர்கள் சில லட்சங்களை செலவழித்து விழாவிற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் அவர்களால் விழா ஏதேனும் நன்மைகளைப் பெற்றதா ? Did they add any value to the function ? சினிமா நட்சத்திரங்களிலேயே தன்னை அழைத்து வந்தமைக்கு நகைச்சுவை நடிகர் சந்தானம் மட்டுமே எதனைப் பேச வேண்டும் என ஒரு திட்டத்துடன் வந்திருந்தார். அனைவரையும் சிரிக்கவும் வைத்தார். ஆனால் விக்ரம் எந்த ஒரு திட்டமும் இல்லமால், மேடை ஏறி என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் தான் மேடையேறினார். ஏதோ பேசினார். என்னமோ கேள்வி கேட்டார்கள். பதில் சொன்னார். மறுநாள் இன்னிசையில் பாடல் சில பாடி தன் கடமையை முடித்து விட்டுச் சென்று விட்டார். குத்தாட்டம் ஆடி அவர் விருப்பத்திற்கு விழாவினை ப்ரியாமணி கடத்திச் சென்றார். தமிழும் பேசத் தெரியாமல் என்ன செய்வது என்றும் தெரியாமல் ஜவுளிக் கடை பொம்மை போல வந்துச் சென்றார் லட்சிமி ராய்.
நான் சினிமா நட்சத்திரங்களை விமர்சிப்பதை விட பெட்னா மீது தான் இந்த விடயத்தில் என்னுடைய விமர்சனத்தை வைக்கிறேன். பாரதிராஜா போன்றவர்களை மேடையேற்றுவது போல இவர்களையும் மேடையேற்றி தமிழா விழித்து எழு, பொங்கி எழு என இவர்கள் பேசுவார்கள் என விழாக் குழுவினர் நினைத்தார்களா என்ன ? விழாவிற்கு ஏதோ வந்தோம், சென்றோம் என இல்லாமல் விழாவில் இதனைச் செய்ய வேண்டும் என்று சினிமா நட்சத்திரங்களுக்கு விழாக் குழு ஏதேனும் பணித்திருக்க வேண்டும். சினிமா நட்சத்திரங்களை நாம் தான் இயக்க வேண்டுமே தவிர அவர்களாக இயங்க மாட்டார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு. சினிமா நட்சத்திரங்களை அழைப்பது கூட்டத்தை கொண்டு வருவதற்கான ஒரு முயற்சி தான் என்றாலும் அவர்களை சில இலட்சங்கள் கொடுத்து அழைத்து வந்தமைக்கான நியாயம் விழாவில் எனக்கு தெரியவில்லை.
**********
பெட்னா விழாவின் உச்சம் என்றால் அது தெருக்கூத்து தான். முதல் நாள் நிகழ்ச்சிகளைச் சார்ந்து எனக்கு எழுந்த ஏமாற்றம், இரண்டாம் நாள் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியால் தான் தணிந்தது. புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் நாடகத்துறைத் தலைவர் முனைவர் வ. ஆறுமுகம் அவர்களின் தலைக்கோல் தெருக்கூத்து குழுவினர் வழங்கிய ”மதுரை வீரன்” நாடகம் பெட்னாவின் மற்றொரு பரிமாணத்தை கொண்டு வந்தது. தெருக்கூத்து குறித்து கூறும் முன்பு இந்த தெருக்கூத்தினை மேடையேற்றுவதற்காக விழாக் குழுவினர் எவ்வளவு சிரமப்பட்டுள்ளனர் என்பதை விளக்க வேண்டும். இந்த முயற்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர்கள் திரு.சாக்ரடீஸ், திரு.முத்துவேல் செல்லையா, திரு.சங்கரபாண்டி போன்றோர்களே என்பது என்னுடைய புரிதல். அமெரிக்காவிற்கு விசா கிடைப்பது என்பது எளிதானது அல்ல. தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து விட்டு திரும்பிச் செல்வார்களா என ஆராய்ந்தே அமெரிக்காவிற்கான விசாவினை சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வழங்கும். பலர் அமெரிக்காவில் நுழைந்து பிறகு நிரந்தரமாக சட்டவிரோதமாக தங்கி விடுவதால் இந்த விடயத்தில் அமெரிக்கத் தூதரகம் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. இதன்படி அமெரிக்காவிற்கு வரும் ஒவ்வொருவரும் தமிழகத்தில் சொத்துக்கள் வைத்திருக்க வேண்டும். வங்கிக் கணக்கில் நிறையப் பணம் வைத்திருக்க வேண்டும். பிள்ளைகள் ஊரில் இருக்கிறார்கள் என்பதை நிருபிக்க வேண்டும். இப்படி பலப் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இவையெல்லாம் இருந்தால் தான் அமெரிக்கா வந்து விட்டு ஊருக்கு திரும்பிச் செல்வார்கள் என்பது அமெரிக்கத் தூதரகத்தின் நிலையாக உள்ளது.
ஆனால் ஒரு சாமானிய கிராமத்து தெருக்கூத்து கலைஞனுக்கு இவையெல்லாம் இருக்காது. இவ்வாறான நிலையில் இவர்களுக்கு விசா வாங்கி அமெரிக்காவிற்கு கொண்டு வர பெட்னா நிறையச் சிரமப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தை அணுகி சிறப்பு அனுமதி பெற்று இந்தக் கலைஞர்களை பெட்னா கொண்டு வந்துள்ளது. இந்தக் கலைஞர்களில் பலருக்கு பாஸ்போர்ட் கூட இல்லை. அவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து, விசா வாங்குவதில் இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் பெட்னா செய்துள்ளது. பாஸ்போர்ட் எடுத்துக் கொடுப்பதில் இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் பெட்னா ஏன் செய்ய வேண்டும் ? அங்கு தான் பெட்னா என்ற அமைப்பின் மீது நமக்கு மரியாதை ஏற்படுகிறது. வெறும் சினிமாக் கூத்துக்களை மட்டும் நம்பியிருக்கும் தானா (TANA - பெட்னா போன்ற தெலுங்கு சார்ந்த அமைப்பு) போன்று இல்லாமல் தமிழ் மண்ணின் கலைகளை அமெரிக்காவில் அறிமுகப்படுத்துவதும், கிராமத்து கலைஞர்களை ஊக்குவிப்பதும் பெட்னாவின் நோக்கமாக உள்ளது. இது பாரட்டத்தக்க, ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒன்று. பெட்னாவிற்கு என்னுடைய பாராட்டுக்கள்.
விழா தொடங்கியதில் இருந்து முதன் முறையாக அரங்கம் நிறைந்தது என்றால் அது தெருக்கூத்து நிகழ்ச்சியின் பொழுது தான். மற்ற நிகழ்ச்சிகளின் பொழுது கிட்டதட்ட சிந்துபைரவியில் வரும் சுகாசினி போன்று தான் நான் உணர்ந்தேன். மேடையில் என்னவோ நடக்க, பார்த்துக் கொண்டிருந்த மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர். ஆனால் தெருக்கூத்து அனைவரையும் மேடையை நோக்கி கட்டிப் போட்டு இருந்தது. நட்டுப்புறக் கலைகளுக்கு இருக்கும் சிறப்பே பார்வையாளர்களை வசீகரிப்பது தான். அதனை வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது.
அடிமையாக வாழும் தமிழர்களின் இன்றைய நிலையை ஒட்டி மதுரை வீரன் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் விடுதலைக்கு போராடும் வீரர்களின் போராட்டம் வெற்றி பெறாமலேயே மடிந்து போவது தமிழர் வரலாற்றில் தொடர்ச்சியாக நடந்து வரும் ஒன்று. இன்றைய சூழ்நிலையை ஒட்டியக் கருத்துக்கள் மதுரை வீரன் கதையில் வந்தது சிறப்பாக இருந்தது. ஆனால் கூத்து ஆரம்பித்த பொழுது இருந்த சுவாரசியம் மதுரை வீரன் - பொம்மியின் காதல் பாடல்களால் தொய்வு அடைய தொடங்கியது. அந்த நேரம் இரவு உணவு நேரமாகவும் இருக்க, கூட்டம் கலைய தொடங்கியது. மதுரை வீரன் - மொம்மி காதல் மிக நீண்ட விவரணையுடன் இருக்க இறுதிக் காட்சிகள் உடனே முடிந்து விட்டது. இது தெருக்கூத்தின் முழுமையான உணர்வை எனக்கு தரவில்லை. இதனை மாற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
**********
விழாவிற்கு வந்திருந்த அமெரிக்க பேராசிரியர் போயல், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் இலியன் ஷாண்டர், பேராசிரியர் அடிலே பார்கர், தோழர் தியாகு போன்றோரின் பேச்சுகள் சிறப்பாக இருந்தது. பேராசிரியர் போயல் சிறீலங்காவின் பிரச்சனையை தென்னாப்ரிக்காவில் நடந்த இனவெறிப் பிரச்சனையுடன் ஒப்பிட்டுப் பேசினார். தொடர்ச்சியான முயற்சிகள் மூலமாக சிறீலங்காவை பணிய வைக்க முடியும். தமிழர்களின் உரிமையை பெற்றிட முடியும் என்பதை வலியுறுத்தி பேசினார்.
இலியன் ஷாண்டர் சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் பிரச்சாரத்தை அமெரிக்கா முழுவதும் பரப்பி வருபவர். இலியன் ஷாண்டர் ஒரு மருத்துவர். சுனாமியின் பொழுது ஈழத்திற்குச் சென்ற ஷாண்டர் அங்கிருந்த மக்களின் பிரச்சனைகளையும், விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளையும் பார்த்து இந்தப் போராட்டத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். அமெரிக்காவில் தொடர்ச்சியாக ஈழம் சார்ந்த முன்னெடுப்புகளை செய்து வரும் ஒருவராக டாக்டர் இலியன் ஷாண்டர் இருக்கிறார். அவரது பேச்சு "அடுத்த வரும் தமிழீழம் - Next Year in Tamil Eelam" என்பதைச் சார்ந்து இருந்தது. அடுத்த வருடம் தமிழீழம் என்பது
தமிழீழ போராட்டத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் ஒரு முழக்கம். இத்தகைய முழக்கத்தையே யூதர்கள் முன்வைத்து இருந்தனர். அதனை Next Year in Jerusalem என அழைப்பார்கள்.
அடிலே பார்கர் ஒரு பேராசிரியராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தடுப்பு முகாம்களில் அடைப்பட்டதையும், அவர்களை மீட்க யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முன்வைத்துப் பேசினார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர் செய்து வரும் பணிகளையும் விவரித்தார். மூன்று அமெரிக்கர்களும் மூன்று வெவ்வேறு கோணங்களில் ஈழப் பிரச்சனையை விவரித்தனர்.
தோழர் தியாகுவின் பேச்சு பலமான சிந்தனையை என்னுள் எழுப்பியது. உணர்ச்சிமயமான பேச்சுக்களை எப்பொழுதுமே நிராகரித்து வருபவர் தோழர் தியாகு. அதனால் அவரது பேச்சுகளில் எப்பொழுதுமே உணர்வுகளை தூண்டும் விடயங்கள் இருக்காது. மாறாக சிந்தனைகளை எழுப்பும் கருத்துக்களே புதைந்து இருக்கும்.
***************
தோழர் தியாகுவின் பேச்சுக்கு நேர் எதிராகத் தான் பிற விருந்தினர்களின் பேச்சுக்கள் இருந்தது. கைதட்டல்களைப் பெறுவது என்பதைத் தவிர பாரதிராஜாவின் பேச்சில் எந்தப் பெரிய சிந்தனையும் வெளிவந்து விடவில்லை. பர்வீன் சுல்தானாவின் அரசியல் பேச்சும் கைத்தட்டல் பெறுவதைக் குறித்தே இருந்தது. பர்வீன் சுல்தானாவின் இலக்கியப் பேச்சு சிறப்பாக இருந்தது. பாரதி, பாரதிதாசனை ஒட்டிய தோழர் தியாகுவின் இலக்கிய உரையும் சிறப்பாக இருந்தது.
திராவிடத்தால் இழந்தோம் என்ற பாரதிராஜாவின் பேச்சு சில சர்ச்சைகளை இணையத்தில் ஏற்படுத்தி உள்ளதை கவனிக்க முடிந்தது. என்னைப் பொருத்தவரை திராவிடத்தால் இழந்தோம் என்ற பாரதிராஜாவின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. இதனைக் குறித்து மற்றொரு தருணத்தில் விரிவாக எழுதுகிறேன். தற்போதைக்கு இதனைச் சார்ந்து நான் டிவிட்டரில் எழுதிய சில டிவிட்களை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்.
- திராவிடத்தால் இழந்தோம் என்ற பாரதிராஜாவின் கருத்தில் உடன்பாடு உண்டு. இல்லாத திராவிட அடையாளத்தை முன்னிறுத்தி தமிழ் அடையாளம் சிதைக்கப்பட்டது
- கடவுள் மறுப்பு என்ற முழக்கமே தமிழர்களை இன்றைக்கு பார்ப்பனியப் பிடியில் தள்ளி இருக்கிறது; ஆன்மீகம் மனிதனுக்கு தேவையான ஒன்று
- பார்ப்பனீய வழியிலான ஆன்மீகம் மறுக்கப்பட்டு தமிழ் வழிலான நமது மரபு சார்ந்த சிறு தெய்வ வழிபாடு முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆன்மீகம் மொத்தமாக நிராகரிக்கப்பட்டதால் இன்றைக்கு ஆன்மீகம் பார்ப்பனிய மயமாகி விட்டது
- ஆன்மீகம் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. அதனை நிராகரித்தது வரலாற்று தவறு. பார்ப்பனீயம் தழைத்து வளர்வதற்கு அடிப்படைக் காரணமே ஆன்மீகம் தான்; மாற்று ஆன்மீகமே நமக்கு தேவை. முழுமையான நிராகரிப்பு எதையும் சாதித்து விடாது. இன்று வரைக்கும் சாதிக்கவும் இல்லை; சமூக நீதியில் நாம் பெற்ற வெற்றியை பிற துறைகளில் கிடைக்காமைக்கு காரணம் என்ன என்பதை நாம் யோசிக்க வேண்டும்
- வாழ்க்கையின் கடினமான தருணங்களில் மனிதன் ஆன்மீகத்தையே நாடுகிறான்; அது வெகு இயல்பாக நடக்கிறது; தவிரவும் ஆன்மீகம் என்பது ஒரு கொண்டாட்டம்; மனிதனுக்கு கொண்டாட்டம் அவசியமான ஒன்று. 2006ல் தேர்தல் சமயத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் இதனை தொட்டுச் சென்றிருக்கிறேன் - http://blog.tamilsasi.com/2006/03/blog-post_09.html
- மேலே உள்ள என்னுடையக் கருத்துக்கள் சாமானிய மனிதனைச் சார்ந்தே நான் முன்வைத்துள்ளேன்.
21 மறுமொழிகள்:
சசி ,
4:02 PM, July 08, 2010விழா குறித்து நிறைய முக்கியமான விஷயங்களை உங்கள் பார்வையில் எழுதியிருக்கிறீர்கள்.நன்றி.
உங்களின் சில கருத்துகளில் உடன்பாடில்லை.நாத்திகத்தால் எதுவும் இழந்துவிடவில்லை.அந்த காலத்தில் அறிவு சார் நாத்திகமாக இல்லாமல் சமூகம் சார்ந்த ஒன்றாக கையில் எடுக்க அவசியம் இருந்தது.எப்படி நாத்திகம் என்பது அறிவாளிகளுக்கானது என்று நீங்கள் சொல்கிறீர்களோ , அப்படித்தான் ஆத்திகமும்.
பலருக்கு சாமி கும்பிடுவது ஒரு இக்கட்டு நேர ரிலீஃப்.பார்ப்பனர் அல்லாத தமிழர்களை இந்துத்துவத்தின் கீழ் (மாற்று மதத்தினரை என்ன செய்ய?) ஒன்று சேர்ப்பது என்பது எதிர்பொதுபுத்தி.யதார்த்ததுக்கு எதிரான வாதமாக எனக்கு படுகிறது.
FeTNAவை பற்றி உங்கள் பார்வையில் சொன்னது நல்லதே. பதில் பின்னூட்டம் இடுவதற்கு பதில் பதிவிடுதலே நல்லது என நினைக்கிறேன்.
4:29 PM, July 08, 2010//
5:07 PM, July 08, 2010சினிமா நட்சத்திரங்களை நாம் தான் இயக்க வேண்டுமே தவிர அவர்களாக இயங்க மாட்டார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.
//
நான் என்ன பேசணும்னு தயார்படுத்திக்கிட்டு வரலைன்னு பிரியாமணி மேடையிலே சொன்னாங்களே. இந்தியாவிலேருந்து இங்க வந்தவங்களுக்கு என்ன பேசணும்னு தயார் பண்ண நேரம் இல்லை பாவம்....
சசி
7:53 PM, July 08, 2010முதன் முறையாக பெட்னா வந்துவிட்டு நீங்கள் எழுதிய விமர்சனம் நன்றாக இருந்தாலும், ஏன் கலைஞரை தாக்கமால் உங்களால் எதுவும் எழுத அல்லது சிந்திக்க முடியாதா?
செம்மொழி மாநாட்டையும், பெட்னாவையும் யாரும் ஒப்பிட்டு பேசவில்லை! அப்படி பேசினால் அவர்களுக்கு "எதுவும்" புரியவைக்க முடியாது என்பது என் கருத்து.
பெட்னா வருடா வருடம் அமெரிக்க மண்ணில் நடக்கும் விழா!
செம்மொழி மாநாடு என்பது தமிழக அரசால் தாய் மொழிக்கு எடுத்த விழா!
செம்மொழி மாநாடு வரலாறு காணத வெற்றி! உங்களை போல மக்கள் தொடர்ந்து பேசுவதால், எழுதுவதால் எந்த பலனும் இல்லை! அதைப் பற்றி கவலையும் எங்களுக்கு இல்லை!
உங்களை போல மக்களை எனக்கு நினைக்கும் பொழுது எனக்கு சிரிப்புதான் வருகிறது. மாநாடு முடிந்து நாங்கள் அடுத்து அடுத்து வேலையை கவனித்துக் கொண்டு இருக்கும் பொழுது, நீங்கள் இன்னமும் சென்ற மாதத்திலே இருந்து கொண்டு உள்ளீர்கள்!!!
எதை எழுதும் பொழுதும் "கலைஞரை" திட்டிதான் எழுத தொடங்குவேன் என்று நீங்கள் அடம் பிடித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?
தயவு செய்து "யதார்த்த" வாழ்க்கைக்கு வரவும் நண்பரே!
மயிலாடுதுறை சிவா....
சில விசயங்களிலும், கருத்துக்களிலும் உடன்பாடில்லாவிட்டாலும் , நல்ல சிந்தனைகளின் வெளிப்பாடு . அரிய செய்திகளை அறிந்தேன் .பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள் .
8:14 PM, July 08, 2010நல்ல பதிவு. மதம் குறித்த உங்கள் கருத்து எனக்கு உடன்படுகிறேன்.
8:52 PM, July 08, 2010சிவா,
10:59 PM, July 08, 2010தமிழரின் ”இருப்பிற்கு” திருக்குவளை முத்துவேல் கருணாநிதியை எதிர்ப்பது அவசியமாகிறது. கருணாநிதியை அண்டி இருப்பது தமிழின அரசியலை நீர்த்துப் போகச் செய்யும்.
கருணாநிதியின் அரசியலை எதிர்ப்பதே தமிழின அரசியலுக்கு அவசியமாகிறது. எனவே தொடர்ச்சியாக என்னுடைய பதிவுகள் கருணாநிதி எதிர்ப்பு அரசியலை வலியுறுத்தும்
நன்றி...
பார்ப்பனர் அல்லாத தமிழர்களை இந்துத்துவத்தின் கீழ்
11:02 PM, July 08, 2010*****
இந்து என்ற சொல் வழக்கம் தமிழ்ச் சூழலில் இருந்தது இல்லை. சைவம், வைணவம் என்பதே தமிழ்ச் சூழலில் வழக்கில் இருந்தது. கடவுள் மறுப்பு நம்மை இந்துக்களாக மாற்றி விட்டது.
நாம் சைவர்கள் என்பதை சொல்வதையே நான் வலியுறுத்துகிறேன்.
நன்றி...
சசிகுமார்
11:23 PM, July 08, 2010உங்களுடைய எழுத்துக்கள் பலவற்றிலும் எனக்குச் சரியாகப்படாதது நிறைய இருந்தாலும், கோர்வையாக தமிழில் நீங்கள் எழுதுவதால் மட்டுமே உங்கள் பதிவுகளை படிக்கிறேன், அதுவும் தலைப்பைப் பொறுத்து.
ஃபெட்னா விழா பற்றிய பதிவு நடுநிலையாக தோன்றுகிறது.
பதிவை படித்த பின் தோன்றியவை:
நாட்டார் கலைகளுக்கு முதலிடம் கொடுத்து, விழாவை சுருக்கினால் (1 1/2 நாள்) இன்னும் கூட்டம் கூடும். 3 நாட்கள் என்பது ரொம்ப நீளம். தமிழில் அற்புதமாய் பாடும் மதுரை சந்தானகோபாலன், ஓ.எஸ். அருண் போன்றோரை வைத்து தமிழிசை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பட்டிமன்றம் போன்ற கவைக்குதவாத பேச்சுகள் இல்லாமல், முன்னோடிகளாய் விளங்கும் அமேரிக்கத் தமிழர்களை அழைத்து பேச சொல்ல வேண்டும். உதாரணம் : மைக்ரோசாப்ட் லிருக்கும் சோமசேகர். ஆராய்ந்து பார்த்தால் மருத்துவம் மற்றும் கணினித்துறைகளில் பல நிபுணர்கள் இருப்பார்கள். இது தவிர்த்து அமேரிக்க தொழிற்துறைகளில் வெற்றிகண்ட தமிழர்களையும் அழைக்கலாம். த.நா திரைப்பட கும்பல்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டும். மெல்லிசை இருந்தே ஆக வேண்டுமென்றால், அமேரிக்கா வாழ் கிதார் பிரசன்னா போன்றோரை வைத்து இசை நிகழ்ச்சிகள் நடத்தலாம். அமேரிக்கா என்பது நமது இல்லம் என்பதும் முன்னிறுத்தப்பட வேண்டும்.
இன்னொன்று:
http://www.sangam.org/articles/view2/?uid=585 சுட்டியில் யூ எஸ் ஏ வாழ் தமிழர்கள் 300,000 என காணப்படுகிறது. இது சரியா எனத் தெரியவில்லை.150,000 என வைத்துக் கொண்டாலும், 2000 லிருந்து 3000 தாண்டி ஃபெட்னாவிற்கு தமிழர்கள் வருவதில்லை. அமேரிக்கா வாழ் தமிழர்களில் 1950-60 களிலிருந்து இருப்பவர்கள் நிறைய பேர்கள் இல்லாவிட்டாலும், அவர்கள் கூட விழாவிற்கு வரும் வகையில் விளம்பர படுத்த வேண்டும். பெரும்பான்மை அமேரிக்கத் தமிழர்களும் இது தங்கள் விழா என உணர முடிந்தால் கொடை அதிகரிக்கும். பங்கேற்பாளர்கள் - நிகழ்ச்சிகளின் தரமும் உயரும். என்னால் இது போன்று உணர முடியவில்லை; 3 தடவைகள் கொடை வள்ளலாக இருந்ததும் இன்றுவரை ஃபெட்னா விழாவை நினைத்தால் சங்கடமாகத்தான் உணர முடிகிறது.
150,000 என வைத்துக் கொண்டாலும், 2000 லிருந்து 3000 தாண்டி ஃபெட்னாவிற்கு தமிழர்கள் வருவதில்லை
11:41 PM, July 08, 2010******
இதற்கு பலக் காரணங்கள் உள்ளன. முதலில் இதற்காகச் செய்ய வேண்டிய செலவு. பெட்னா குறித்து போதுமான விளம்பரம் இல்லை. இது தவிர தமிழர்கள் அதிகம் இருப்பது நியூஜெர்சி, டெக்சஸ், கலிபோர்னியா போன்ற பகுதிகளில் தான் என நினைக்கிறேன். இந்தப் பகுதிகளில் நடந்தால் கூட்டம் அதிகம் வரலாம். பிற பகுதிகள் என்னும் பொழுது பணச் செலவினை பலர் யோசிக்க கூடும்.
தமிழ்சசி,
11:48 PM, July 08, 2010ஃபெட்னா மற்றும் செம்மொழி மாநாடு பற்றிய விளக்கம் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் நல்லது!
ஃபெட்னா பற்றிய தங்கள் பார்வை,கருத்துகள்,விமர்சனம் நன்று!
உலகமெங்கும் பாரதி சங்கங்கிற பேருல பார்பனக் கொடியும் கோமணமும் பறக்குதுன்னு சொல்றாங்க, பெட்னா அது போல் மாறாமல் இருந்தால் சரிதான்.
1:55 AM, July 09, 2010படிச்சுப் பார்த்துட்டு ஒரு + ஓட்டு போட்டாச்சு.
"Did they add any value to the function ?"..Without Priyamani and Vikram the crowd would be far less. Tamilians are a cinema crazed crowd (thanks to Dravidian politics). Dont tell me that cine stars are for 'entertainment'. For FeTNA its the other events that are for entertainment. This is a cine function with some literary aspect thrown on the side.
6:34 AM, July 09, 2010As for atheism debate: Like Jayakanthan said for the DK thindan his God is Ramasamy Naicker (some call him Periyar), for DMK Thondan its Annathurai and Mu.Ka. For PMK its Ramdoss...so on and so forth.
....எனவே தொடர்ச்சியாக என்னுடைய பதிவுகள் கருணாநிதி எதிர்ப்பு அரசியலை வலியுறுத்தும்...
9:26 AM, July 09, 2010இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை....அது உங்கள் விருப்பம் மற்றும் ஜனநாயகம்....
ஆனால் பெட்னாவுடன் / செம்மொழி மாநாட்டை இணைத்து பேசுவது அர்த்தமற்றது என்பதே என் வாதம்...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
ஆனால் பெட்னாவுடன் / செம்மொழி மாநாட்டை இணைத்து பேசுவது அர்த்தமற்றது என்பதே என் வாதம்...
10:05 AM, July 09, 2010****
இந்த அர்த்தமற்ற வாதத்தை தொடங்கியது உங்களது சக உடன்பிறப்புகளும், கி.வீரமணியின் ஜால்ராக்களுமே. எனவே அவர்களிடம் சென்று விளக்கி புரியவையுங்கள்.
நன்றி...
என்ன பண்றது சசி.. என்னை போன்ற விசிலடிச்சாங்குஞ்சுகளை கூட்டணும்னா ஒரு பிரியாமணி தேவைபடுது...
11:04 AM, July 09, 2010வந்ததுக்கு அப்புறம் தோழர் தியாகு, எலியன் ஷாண்டர் போன்றோர்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது, அந்த வகையில் ப்ரியாமணிக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும் :)
மத்தபடி தொடர்ந்து FeTNA விற்க்கு வருகை தருபவர்களுக்கு, ப்ரியாமணி ம்ற்றும் லட்சுமிராயின் பங்களிப்பில் எந்தவித ஏமாற்றம் இருந்த்ததாக தெரியவே இல்லை..
இதற்கு முன் ”ஸ்நேகா”வும் இதே மாதிரியான “ப்ளாங்க் மைண்டோட” தான் வந்ததாக செவி வழி செய்தி.
இதுவும் எனக்கு முதன் முறை தான். எனக்கு இதில் முழு திருப்தி கிடைத்தது, FeTNA விற்கு என்னுடைய வாழ்த்துக்ளும் பாராட்டுகளும்.
திருக்குவளை முத்துவேல் கருணாநிதியை நீங்கள் எதிர்ப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நடந்த விஷயங்களுக்கு திருக்குவளை முத்துவேல் கருணாநிதியை மட்டும் குற்றம் காணும் தவறை செய்துவிட வேண்டாம். குறிப்பாக கிளைமாக்ஸ் சமயத்தில் உங்கள் சில பதிவுகள் உண்மை நிலவரத்தை உணர்ந்து எழுதப்பட்டது போல் இருந்தது. ஊழல் போன்ற சமாச்சாரங்களை வைத்து எதிர்த்தீர்கள் என்றால் ஒரு அர்த்தம் இருக்கும். மற்றபடி துரோகி,எதிரி என்றெல்லாம் காமெடி சீன் போட்டால் நாம் திருப்திக்கு நாம் எழுதுவது போல்தான் ஆகும்.
11:39 AM, July 09, 2010//கருணாநிதியின் அரசியலை எதிர்ப்பதே தமிழின அரசியலுக்கு அவசியமாகிறது. எனவே தொடர்ச்சியாக என்னுடைய பதிவுகள் கருணாநிதி எதிர்ப்பு அரசியலை வலியுறுத்தும்//
12:21 PM, July 09, 2010ராமதாஸ் மாதிரி கோமாளி லூசுங்களை பற்றி உங்கள் பதிவுகள் அமைதி காக்குமா?
நண்பர் சசிக்கு,
4:21 PM, July 09, 2010நீங்கள் கேட்ட இதே கேள்வியை தான் நாங்களும் நிர்வாகிகளுடன் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில் இது தான், 3ஆம் நாள் இலக்கிய கூட்டம் நடத்த தான் முதல் 2 நாள் கூட்டம் என்று சொன்னார்கள்.
3ஆம் நாள் கூட்டத்திற்கு எவ்வளவு கூட்டம் வருகிறது என்றும் பார்க்க வேண்டும். விடுதி அறைகளை 10:00க்குள் ஒப்படைத்துவிட்டு காலை உணவுக்கு பிறகு ஊர் போய் சேரும் வேலையை தான் முக்கால் வாசி மக்கள் செய்கிறார்கள்.
அது அது அவரவர் இரசிப்புக்கும் விருப்பத்திற்கு உட்பட்ட தனிபட்ட விருப்பம். அவர்களது விருப்பம் அவர்களுக்கு நமது விருப்பம் நமக்கு. அவர்களின் இரசிப்பின் பலனிலே இலக்கிய கூட்டம் நமக்கு அமைத்து கொடுக்கும் பெட்னா அமைபினருக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.
மற்றபடி நல்ல விமர்சனம். பாராட்டுக்கள்.
பனிமலர்.
உங்கள் சிந்தனைகள் மழுங்காமல் இதே போல் தைரியமாக முன் எடுத்துச் செல்லுங்கள்.
7:19 AM, July 10, 2010சிறிய பத்திகளாக பிரித்து எழுதுங்கள்.
தமிழன் என்பவன் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் ஆப்ரிக்காவில் வாழ்ந்தாலும் அதே புத்தி ........ போன்ற பல விடயங்களை நண்பர்களை படிக்கும் போது புரிந்து கொண்டேன்.
சில தளங்களில் உள்ள பின்னோட்டங்களைப் பார்த்து யோசித்து உள்ளேன். இப்போது அதன் முழுமையான காரணம் இன்று புரிந்து கொண்டேன்.
+1
//மாறாக வெகுஜன மக்களின் பொதுப் புத்திக்கு காரணமான காரணிகளை ஆராய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பவன்//
5:03 AM, October 23, 2011Somewhat right
Post a Comment