Friday, January 30, 2015

தமிழ்மணத்திற்கு மாற்று : தமிழ்மணம் முதல் பேஸ்புக் வரை

“தமிழில் எழுதலாம் வாருங்கள்” என்பதே தமிழ்மணத்தின் முழக்கமாக ஆரம்ப காலங்கள் முதல் இன்றைக்கு வரை இருந்து வருகிறது. தமிழ் வலைப்பதிவு  பெருகுவதற்கு ”ஆரம்பகாலங்களில்” தமிழ்மணம் ஒரு முக்கிய காரணம் என்பதை பரவலாக அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என நம்புகிறேன். காரணம் தமிழின் முதல் வலைத்திரட்டி என்ற பெருமை தமிழ்மணத்திற்கு உண்டு. நண்பர் காசி அதனை முதன் முதலில் உருவாக்கினார். 2003ல் இருந்து கூகுள் குழுமங்களிலும்,  வலைப்பதிவுகளிலும் வாசகனாக மட்டும் இருந்த எனக்கு எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது தமிழ்மணம் தான்.

2004ல் தமிழ்மணம் எனக்கு முதன் முதலில் அறிமுகமான பொழுது வலைப்பதிவிற்கு வாசகர்களை கொண்டு வந்து சேர்க்கும் தமிழ்மணம் எனக்கும் வாசகர்களை கொண்டு வரும் என்ற நம்பிக்கையிலேயே எழுதத் தொடங்கினேன். 2004ல் இருந்து 2006வரை தமிழ்மணத்தை ஒரு பயனாளனாக பயன்படுத்தி வந்திருக்கிறேன். 2006ல் இருந்து தான் ஒரு நிர்வாகியாக இருந்து வருகிறேன். தமிழ்மணத்தை நண்பர் காசியிடம் இருந்து பெற்று "தமிழ் மீடியா இண்டர்நேஷனல்" என்ற தன்னார்வ நிறுவத்தை உருவாக்கிய பொழுது தான் நான் இதில் இணைந்தேன். எனவே நான் முதலில் ஒரு வலைப்பதிவன். பிறகு தான் நிர்வாகி. தமிழ்மணத்தை ஒரு வாசகர், பதிவர் நிலையில் இருந்தும் பார்த்திருக்கிறேன். நிர்வாகியாகவும் பார்த்து இருக்கிறேன். இரண்டு பார்வைக்கும் இரு வேறு பரிமாணங்கள் உண்டு.

தமிழ்மணம் தொடங்கிய பயணத்தில் தமிழ் வலைப்பதிவு உலகம் வேகமாக விரிவடைந்தது. தமிழ்மணத்தை தொடர்ந்து மறைந்த சாகரன் தேன்கூடு திரட்டியை உருவாக்கினார். 2006ல் நண்பர் குழலி தமிழ்வெளியும், பிறகு நண்பர் வெங்கடேஷின் திரட்டி போன்றவையும் வந்தன. சமீப ஆண்டுகளில் பிலிக்கை அடிப்படையாக கொண்டு பல புக்மார்க்கிங் தளங்களும் வந்தன. தமிழ் எழுதுவது எப்படி என கடினப்பட்டு தேடிக் கொண்டிருந்த காலம் மறைந்து இன்றைக்கு இணைய உலகம் முழுவதிலும் “தமிழ்” விரிவடைந்து விட்டது. இதற்கு காரணமானவர்கள் பலர். தேனீ எழுத்துரு உருவாக்கிய உமர் வலைப்பதிவுகளில் தமிழ் தெரிய வழிவகுத்தார். சுரதா, முகுந்த் போன்ற நண்பர்கள் தமிழ் தட்டச்சியை எளிதாக்கினர். குறிப்பாக முகுந்த்தின் இ-கலப்பையை கொண்டு தான் தமிழ் வலைப்பதிவுகளில் உழுது கொண்டிருந்தோம். காசி ஆரம்பித்த தமிழ்மணம் வலைப்பதிவுகளை பெருக்கியது. இவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள். இவர்களை தவிர இன்னமும் எண்ணற்றோர் தமிழை இணையத்தில் கொண்டு வர உழைத்திருக்கிறார்கள்.

இந்த உழைப்பின் மூலமான தமிழின் பரவல் மகிழ்ச்சியை தருகிறது. பேஸ்புக், கூகுள் ப்ளஸ், டிவிட்டர் என இன்றைக்கு தமிழை சுலபமாக எங்கும் நுழைக்க முடிகிறது. இந்த வளர்ச்சி தமிழை இணைய வெளியெங்கும் பரவலாக்கியுள்ள போதிலும் தமிழ் எழுத்து உலகிற்கு இது ஆரோக்கியமானது தானா என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது. 2004ல் தொடங்கி நன்றாக எழுதிக் கொண்டிருந்த பலர் இன்று பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் முடங்கிப் போய் விட்டார்கள். பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களை வெறும் அரட்டை தளங்களாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. வலைப்பதிவில் இருக்கிற ”எழுத்து சுகம்” இந்த சமூகத் தளங்களில் கிடைப்பதில்லை.

************

பிரபல பதிவர்கள் என்ற சொற்றொடர் தற்பொழுது வலைப்பதிவுகளில் பிரபலமாக உள்ளது. பிரபல பதிவர் என்ற இடத்தைப் பிடிக்க பலத்த போட்டியும் நிலவுகிறது.  ஆனால் உண்மை என்னவென்றால் வலைப்பதிவில் பிரபல பதிவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். கால ஓட்டத்தில் வாழ்க்கைச் சக்கரத்தில் வலைப்பதிவு செய்து கொண்டே இருந்தால் வாழ்க்கையில் நகர முடியாது.

நானும் வலைப்பதிவு செய்து கொண்டே இருந்த காலத்தில் வாழ்க்கையில் நகரவில்லை. வாழ்க்கையில் நகர வேண்டும் என முடிவு செய்த பின்பு வலைப்பதிய நேரமில்லை. இப்படி பிரபல பதிவர்களாக இருந்து இன்று வலைப்பதிவில் காணாமல் போன நிறையப் பேரினை தெரியும். எழுத்தினை தங்களின் முழு நேர தொழிலாக செய்யாத யாரும் வருடக்கணக்கில் தொடர்ச்சியாக வலைப்பதிந்து கொண்டிருப்பது கடினம். வருடக்கணக்கில் தொடர்ச்சியாக வலைப்பதிந்து வருபவர்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக கூட இருக்கும். ஆனாலும் எதுவும் செய்வதற்கில்லை. எனக்கு முழு நேர தொழில் எழுத்து அல்ல. எழுத்து ஒரு ஆர்வம் மட்டுமே. சமூகம் மீதான நம்முடைய பார்வையை பகிர்ந்து கொள்ளும் ஒரு இடம். ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் அந்த ஓட்டத்தினூடே பகிர்ந்து கொள்ள டிவிட்டரும், பேஸ்புக்கும், கூகுள் பஸ்சும் தான் சுலபமாக இருக்கிறது. அதே நேரத்தில் அந்த ஊடகங்களில் இருக்கும் மாயையும், எழுத்தில் இருக்கும் போதையும் அதனை எழுதும் பொழுது தான் தெரிகிறது.

இப்படியான வாழ்க்கைச் சக்கரத்தால் தான் பதிவர்கள் வலைப்பதிவில் இருந்து மறைவதும், புதியவர்கள் நுழைவதும் நடந்து கொண்டே இருக்கிறது. எனவே நாங்கள் தான் வலைப்பதிவர்கள். எங்களைச் சார்ந்து தான் எல்லாமும் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஒரு வலைப்பதிவருக்கு வாசகர்கள் தேவை என்றால் திரட்டிகள் தேவை. திரட்டிகள் ரயில்கள் போன்றவை. ரயில்களில் புதியவர்கள் ஏறுவதும், பழையவர்கள் இறங்குவதும் இயல்பாக நடப்பவை. ரயில்களில் ஏறுபவர்கள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் ரயில்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கும் - For men may come and men may go. We will go on forever.

பதிவர்களே மாறிக் கொண்டே இருக்கும் சூழலில் வலைப்பதிவர்களாக இருந்து தமிழ்மணத்தை நிர்வாகம் செய்யும் நாங்கள் இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடித்து நிற்பதே ஒரு இமாலய சாதனை தான். இதனை ஏதோ தற்பெருமையாக சொல்ல வில்லை. ஒரு தளத்தினை நடத்தும் எவரும், நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புரிந்து கொள்வார்கள். இவ்வளவு பிரச்சனைகளுக்கும் இடையே தமிழ்மணத்தினை நடத்திக் கொண்டிருக்க காரணம் தமிழ்மணம் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரு மாற்று ஊடகமாக பார்க்கப்பட்டு வருகிறது. எனவே அந்த தளத்தினை தொடர்ந்து நடத்துவதை நாங்கள் ஒரு கடமையாக கருதுகிறோம். எனவே எங்களுடைய ரயில் ஓடிக் கொண்டே தான் இருக்கும். எங்களால் ஓட்ட முடியா விட்டால் நண்பர் காசி செய்தது போல எங்களைப் போன்றே கொள்கை உடைய தன்னார்வ நண்பர்களிடம் ஒப்படைப்போமே தவிர இழுத்து மூடி விட மாட்டோம்.

வலைப்பதிவில் தமிழ்மணம் ”கல்லா கட்டுவதாக” பலர் எழுதும் பொழுது சிரிப்பு தான் வருகிறது. இவ்வாறு எழுதுபவர்கள் ஒரு இணையத்தளம் என்றால் என்னவென்றே தெரியாத ”அறியாமையில்” உளறுவதாக தான் புரிந்து கொள்ள முடியும். தமிழ்மணத்தை விடுங்கள். வணிக ஊடகங்களாக உள்ள விகடன், குமுதம்,  நக்கீரன் போன்ற தளங்களே இணையத்தளம் மூலமாக எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது கேள்விக்குறியே. இத்தனைக்கும் விகடன் போன்றவை கட்டணத் தளங்கள். இணையம் என்பது தமிழ் ஊடகத்துறையை பொறுத்தவரை ஒரு சேவையாக மட்டுமே செய்ய வேண்டியிருக்கிறது என்பது தான் யதார்த்தமான உண்மை.  தமிழ்மணத்தின் மாதந்திர வழங்கிச் செலவுக்கே (Hosting Charges) தமிழ்மணத்தின் விளம்பர வருவாய் போதுமானதாக இல்லை என்பதே யதார்த்தம்.

இதையெல்லாம் நான் எங்களை நோக்கி அவதூறு செய்பவர்களுக்கு சொல்ல வில்லை. தமிழ்மணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே சொல்கிறேன்.  அவதூறு செய்பவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக கருதியிருந்தால் எப்பொழுதோ தமிழ்மணம் காணாமல் போய் இருக்கும். தமிழ்மணத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே அவதூறுகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

************

2004ல் தமிழ்மணம் தொடங்கப்பட்ட காலம் முதலே தமிழ்மணத்திற்கு மாற்றாக ஒரு திரட்டி தேவை என்ற கருத்தினை பலரும் முன்வைத்து வந்துள்ளனர். இன்றைக்கு பல புக்மார்க்கிங் தளங்கள் உருவாக்கப்பட்டு விட்டாலும் ஒரு வலைப்பதிவினைச் சார்ந்த அத்தனை பரிமாணங்களையும் (பதிவுகள், மறுமொழிகள், குறிச்சொற்கள்,  வகைப்படுத்தல், முன்னணி பதிவுகள், வாசகர் பரிந்துரைகள் போன்றவை) கொண்ட திரட்டியாக தமிழ்மணம் இருந்து வருகிறது. இது போன்ற ஒரு திரட்டியை உருவாக்குவது ஒன்றும் கடினம் அல்ல. மிக மிக சுலபமானது தான். அவதூறு செய்யும் நேரத்தில் உருப்புடியாக எழுதலாம். இது போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்கலாம்.

2007ல் வேறொரு வலைப்பதிவு பிரச்சனையில் ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ? என்ற பதிவை எழுதினேன். தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் 2007  என்பது தற்பொழுது கற்காலம் போன்றது. ஆனாலும் இந்த அடிப்படையை வைத்து எவரும் எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம். தமிழ்மணத்தை விட மிகவும் சிறப்பான திரட்டி உருவானால் எங்களுக்கும் மகிழ்ச்சியே

ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ? - http://blog.tamilsasi.com/2007/12/blog-aggregator-for-dummies.html

3 மறுமொழிகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

திரட்டிகள் - ரயில்கள் - மிகச்சரி...

உங்களின் விளக்கங்களும் ஆதங்கங்களும் அறிந்தேன்...

10:48 PM, January 30, 2015
வலிப்போக்கன் said...

“தமிழில் எழுதாலாம் வாருங்கள்” என்ற தங்களின் பதிவை பல தடவை படித்துதான் எவர் துணையின்றி தளம் தொடங்கி ஐந்தாவது ஆண்டை நோக்கி எனக்கேற்றபடி சென்று கொண்டு இருக்கிறேன்.......வாழ்த்துக்கள் தலைவரே...

11:14 PM, January 30, 2015
இ.பு.ஞானப்பிரகாசன் said...

இணையவுலகின் முதல் தலைமுறைப் பதிவர்களில் முதன்மையான ஒருவரான உங்களுடைய பதிவைப் படிக்க முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்! நான் சொந்தமாக இணையத்தளம் நடத்தவில்லை என்றாலும் என் நண்பர் நடத்துகிறார். அவர் பட்ட சிரமங்களும், செய்த செலவுகளும் குறித்து நான் நன்றாகவே அறிவேன். 'இமாலய சாதனை' என்கிற உங்கள் வார்த்தைகள் துளியும் மிகையில்லை! 'தமிழ்மணம்' வழங்கி வரும் சேவை எளிதானதில்லை. என் உளமார்ந்த நன்றிகள் அதற்காக! குறை சொல்பவர்கள் உளறி விட்டுப் போகட்டும்! அதை நாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை. தமிழ்மணத்தின் அருமை எங்களுக்குத் தெரியும். என்றும் உங்களுடன் இருப்போம்!

5:50 AM, February 25, 2016