Saturday, November 29, 2008

காஷ்மீர் விடுதலைப் போராட்டமும், மும்பை பயங்கரவாத தாக்குதலும்...

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை மையப்படுத்தி காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தினை சிதைக்கும் ஒரு பிரச்சாரத்தை ஹிந்து அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஹிந்து அடிப்படைவாதிகளுக்கு இந்தியாவை ஒரு ஹிந்து தேசமாக அமைத்திருப்பதும், காஷ்மீர் மக்களின் நியாயமான விடுதலை கோரிக்கையை சிதைப்பதும் முக்கிய நோக்கமாக உள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத தங்களின் மதம் சார்ந்த பயங்கரவாதத்தின் கோரமுகத்தை காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்து சொல்வதன் மூலம் நியாயப்படுத்த பார்க்கின்றனர்.

இங்கே சில உண்மைகள் மூடி மறைக்கப் படுகின்றன.

1. இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் பாக்கிஸ்தானை சார்ந்த இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள். அல்கொய்தா இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட
லக்க்ஷ்ர்-இ-தொய்பா அமைப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த அமைப்பு காஷ்மீர் விடுதலை என்ற நோக்கத்தை தன்னுடைய முகமூடியாக கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்தையே முன்னிறுத்துகிறது.

2. இந்த தாக்குதலில் ஒரு காஷ்மீரி கூட ஈடுபடவில்லை. கராச்சியில் இருந்த வந்த பாக்கிஸ்தானியர்கள் என தெரிகிறது. பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பாக்கிஸ்தானியர்கள் சிலரும் உள்ளனர் என தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.

3. காஷ்மீர் மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எந்த ஆயுதங்களும் ஏந்தாமல் தான் தங்கள் விடுதலையை முன்னெடுத்தனர். அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை தற்பொழுது "மனித நேயம்" கொண்டவர்களாக மாறிவிட்ட ஒரு இந்திய பிரஜையும் கண்டிக்கவில்லை.

4. காஷ்மீரில் செயல்படும் ஆயுதக்குழுக்களில் பெரும்பாலானவை பாக்கிஸ்தானின் தூண்டுதலில் செயல்பட்டவையே.

5. காஷ்மீரில் இருந்த ஆயுதக்குழுவான காஷ்மீர் விடுதலை முண்ணனி (Jammu and Kashmir Liberation Front - JKLF) போன்றவை பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்த வந்த இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாத் அமைப்புகளால் தங்கள் பலத்தை இழந்தன. JKLFன் தலைவர் யாசின் மாலிக் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளார். மதசார்பின்மையை வலியுறுத்திய தலைவர்களில் யாசின் மாலிக் முக்கியமானவர். (தற்பொழுது கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தில்லி
மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்).

உண்மைகள் இவ்வாறு இருக்க ஹிந்து அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இணைந்து காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தின் முகத்தை தற்பொழுது சிதைத்து கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து மிக விரிவாக எழுத தற்பொழுது நேரமில்லை. அதனால் இதே வகையிலான கருத்துக்களைச் சார்ந்து முன்பு நான் எழுதிய கட்டுரைகளை இங்கே சுட்டி காட்ட விரும்புகிறேன்.

காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை

இரு மாதங்களுக்கு முன்பாக காஷ்மீரில் காஷ்மீர் மக்கள் முன்வைத்த போராட்டங்களை குறித்த எனது பதிவு
காஷ்மீரில் மீண்டும் விடுதலை முழக்கம்

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு என்ன ?

என்னுடைய காஷ்மீரின் விடுதலை கட்டுரைகள் - 1, 2, 3, 4, 5, 6

தொடர்புள்ள என்னுடைய மற்றொரு பதிவு

இஸ்லாமிய அடிப்படைவாதமும், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டமும்

ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தையும், மத ரீதியிலான அடிப்படைவாதத்தின் வேறுபாட்டினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேட்சேவுக்கும், பகத்சிங்கிற்கும் வேறுபாடுகள் உள்ளன. இருவருமே கொலை குற்றவாளிகள் தான். ஆனால் ஒருவர் மத அடிப்படைவாதி, மற்றொருவர் விடுதலைப் போராளி...

12 மறுமொழிகள்:

Anonymous said...

ஐயா, காஷ்மீர் பக்கம் போயி சணடை போடுங்கய்யா. நல்லா இருங்க.

அந்த இரவுகழுகார் அப்படின்னு ஒருத்தர் இருந்தாரே அவரும் விடுதலைக்கு போரடிக்கிட்டு இருக்கிறாராம் அவருக்கும் ஒரு ரிலீஸ் போட்டு கொடுத்திருங்க
.

நல்ல இருங்கடே

9:51 PM, November 29, 2008
Anonymous said...

எங்க வூட்டுகுள்ள தண்ணீ பூகுந்திடுமோ இல்லை பம்பாயில இருக்கற நம்ம சொந்தகாரன்/தெரிஞ்சவன் செத்துடுவானோன்னு எங்களுக்கு கவலை. உமக்கு காஷ்மீர்காரன் போரட்டத்தை கொச்சைபடுத்துறாங்கன்னு கவலை. ம்ம் அவ அவனுக்கு அவனவன் கவலை.

10:05 PM, November 29, 2008
ரவி said...

///அந்த இரவுகழுகார் அப்படின்னு ஒருத்தர் இருந்தாரே அவரும் விடுதலைக்கு போரடிக்கிட்டு இருக்கிறாராம் அவருக்கும் ஒரு ரிலீஸ் போட்டு கொடுத்திருங்க ///

இல்லையே ? நான் வெளியில தானே இருக்கேன் ???

10:42 PM, November 29, 2008
Anonymous said...

//
எங்க வூட்டுகுள்ள தண்ணீ பூகுந்திடுமோ இல்லை பம்பாயில இருக்கற நம்ம சொந்தகாரன்/தெரிஞ்சவன் செத்துடுவானோன்னு எங்களுக்கு கவலை. உமக்கு காஷ்மீர்காரன் போரட்டத்தை கொச்சைபடுத்துறாங்கன்னு கவலை. ம்ம் அவ அவனுக்கு அவனவன் கவலை.
//

சக மனிதனின் நியாயமான போராட்டம் கொச்சைப்படுத்தப்படுகிறது என்ற கவலை தான் சசிக்கு.

ஆனால் உனக்கு உன்னோட சுற்றம், நட்பு, சொந்தம் நல்லா இருந்தா போதும். எவன் கெட்டா நமக்கு என்ன, எவன் செத்தா நமக்கு என்ன.

பெரிய சுயநலவாதியா இருப்ப போலிருக்கே

சசி, பதிவுக்கு நன்றி

11:13 PM, November 29, 2008
Anonymous said...

//பெரிய சுயநலவாதியா இருப்ப போலிருக்கே//

ஓ அப்ப நீங்கெல்லாம் பிற நலவாதிகளோ?

சிங்கப்பூர்ல ஏசி ரூம்புக்குள்ள பாதுகாப்பா இருந்தா நானும் சகமனிதன் சுதந்திர போராட்டம்ன்னு சிந்திப்பனோ என்னவோ..

11:39 PM, November 29, 2008
வாசகன் said...

சசி,
இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற சொல்லாடலே ஏகாதிபத்தியத்தின் வசதிக்காக கட்டமைக்கப்பட்ட ஒன்று.

இஸ்லாம் அப்பாவிகளை போர்க்களத்தில் கொல்வது கூடபெரும்பாவம் என்றே அடிப்படையாகச் சொல்கிறது. ஆனால் பொதுபுத்தியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது வன்முறையின் சார்புச்சொல்லாக ஆக்கப்பட்டுவிட்டதை உங்க பிடித்துக்கொண்டு விட்டீர்கள்.

மதங்களை கண்மூடி எதிர்ப்பது தான் முற்போக்கின் அடையாளம் என்று நீங்கள் கருதுவீர்களானால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

பார்ப்பனீய அடிப்படைவாதமென்பது சமூக மேலாண்மையை நோக்கமாகக் கொண்டது. இஸ்லாமிய தீவிரவாதமென்பது எதிர்வினையாக உச்சக்கட்ட வெறுப்பால் விளைவது. நாம் இரண்டையும் புறந்தள்ளவே வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஈழ, காஷ்மீர் போராட்டங்கள் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் எழுச்சி என்பதிலும் மாற்றில்லை.

பிறகு பேசுகிறேன்.

5:25 AM, November 30, 2008
ROSAVASANTH said...

சசி, இதை ஒரு பரிந்துரையாக உங்கள் முன்னும் மற்றவர்கள் முன்னும் வைக்கிறேன்.

மும்பை பற்றி பேசுவதை நாம் முதலில் நிறுத்த வேண்டும்; குறைந்த படசம் பேசமாட்டோம் என்று அறிவிக்கவாவது வேண்டும். கர்னாடகத்தில், இந்திய கடலெல்லைக்குள் தமிழ் கடற்கரையில், ஈழத்தில் தமிழர்கள் தாக்கப்படும்பொதெல்லாம் எந்த குரலையும் எழுப்பாத இந்திய சமூகத்திற்கு எதிராக இப்படி ஒரு முடிவை / எதிர்வினையாக அறிவிப்பையாவது நாம் செய்ய வேண்டும். அருள் சொன்ன மாதிரி, எங்கள் கவலைகள் வேறு என்று சொல்ல வேண்டும். இது சற்று வக்கிரமாக இருக்கலாம். ஆனால் ஒரு இனவாத முன்நம்பிக்கையயுடன் தமிழர்கள் இருப்பையே புறக்கணிக்கும் இந்திய சமூகத்தின் வக்கிரத்தை விட குறைவானதுதான்.

1:42 PM, November 30, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

எங்கள் கவலைகள் வேறு என்று சொல்ல வேண்டும். இது சற்று வக்கிரமாக இருக்கலாம். ஆனால் ஒரு இனவாத முன்நம்பிக்கையயுடன் தமிழர்கள் இருப்பையே புறக்கணிக்கும் இந்திய சமூகத்தின் வக்கிரத்தை விட குறைவானதுதான்.

****

ரோசாவஸந்த்,

உண்மை தான்...

நன்றி...

3:04 PM, November 30, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

மதங்களை கண்மூடி எதிர்ப்பது தான் முற்போக்கின் அடையாளம் என்று நீங்கள் கருதுவீர்களானால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

****

மதங்களை கண்மூடி எதிர்க்க வில்லை. மதங்கள் முன்வைக்கிற மூடநம்பிக்கைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றையே எதிர்க்க வேண்டியுள்ளது. தவிரவும் மதங்கள் அதிகாரமையமாக செயல்படும் பொழுது தங்கள் மதத்தின் அதிகாரத்தை தக்கவைக்க அடிப்படைவாதத்தை போதிக்கின்றன.

புத்த மதத்தை விட அன்பையும், சமாதானத்தையும் போதித்த மதம் வேறு ஒன்றும் இல்லை. ஆனால் அந்த மதம் சார்ந்த அதிகாரமையத்தை தக்கவைக்க வன்முறை போதிக்கப்படுகிறது.

மதம் சார்ந்த அடிப்படைவாதத்தையும், அதிகாரமையத்தையும் வலுவாக எதிர்க்க வேண்டிய தேவை உள்ளது

நன்றி...

8:04 PM, November 30, 2008
SK said...

//
எங்கள் கவலைகள் வேறு என்று சொல்ல வேண்டும். இது சற்று வக்கிரமாக இருக்கலாம். ஆனால் ஒரு இனவாத முன்நம்பிக்கையயுடன் தமிழர்கள் இருப்பையே புறக்கணிக்கும் இந்திய சமூகத்தின் வக்கிரத்தை விட குறைவானதுதான்.

****

ரோசாவஸந்த்,

உண்மை தான்...
//

-------------------------

சசி, ரோசாவசந்த்,

How insensitive!

Don't you realize that Tamils could be among the injured and the dead in Mumbai? உங்களுக்குத் தமிழ் உயிர்கள் மட்டும் தான் உயிர்களா? இப்படி ஒரு வருத்தமான நேரத்திலா இப்படி ஒரு பாகுபாடு பார்ப்பீர்கள்? Don't you see that what happened in Mumbai could happen to anyone - irrespective of their caste, creed, religion, financial condition or nationality?

"கர்நாடகத்தில், இந்திய கடலெல்லைக்குள், தமிழ் கடற்கரையில், ஈழத்தில்" மடிந்த உயிர்களுக்குப் போதுமான அஞ்சலி கிடைக்கவில்லை என்கிற வருத்தம் புரிகிறது. But, now is not the time to position these tragedies in an adversarial fashion against Mumbai. The under-representation of these tragedies was not caused by the people who lost their lives in Mumbai! It was a fault of "systems" (govt, media etc.) not "people" (as individual lives). So, do not fault these people for the mistakes of the systems.

So, do us all a favour, will you? Stop these untimely comparisons and just spend a couple of minutes in silence for those lives in Mumbai.


-SK

11:11 AM, December 04, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

SK,

நான் ஏற்கனவே என்னுடைய பதிவில் கூறியிருந்தது போல மும்பை சம்பவம் மனிதாபிமானம் கொண்ட அனைவரையும் பதறவே செய்யும்.

அதே நேரத்தில் மும்பை மக்களுக்கு கிடைத்த கவனஈர்ப்பு தமிழன் அடைந்த எத்தனையோ இன்னல்களுக்கு கிடைக்காதது தான் என்னுடைய வருத்தம். அதனால் தான் இந்த புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்ற ரோசாவஸந்த்தின் கருத்தினை நானும் ஆதரிக்கிறேன்.

இந்தியாவிலே கர்நாடகத்தில் வருடம் தோறும் தமிழன் அடி வாங்குகிறான். இந்தியாவின் கடல் எல்லைக்குள்ளும், சர்வதேச எல்லைக்குள்ளும் வந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள்.

இது குறித்த இந்திய வெகுஜன மக்களின் நிலைப்பாடு, சக மனிதன் என்பதை விடுங்கள் சக "இந்தியன்" என்றளவில் கூட இல்லை.

Enough is Enough என இந்திய வெகுஜன ஊடகங்கள் அலறுகின்றன. இதையே தான் ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பொழுதும் தமிழகத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். ஆனால் கேட்பதற்கு தான் எவரும் இல்லை.

தமிழனின் வரிப்பணம் இந்திய கடற்படைக்கும் செல்கிறது என்பது ஏனோ ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.

****

இது தவிர மும்பையில் நடந்ததை விட மிக கோரமான தாக்குதல்கள் தினமும் ஈழத்தில் நடைபெறுகிறது. ஒரு சகதமிழனாய் நாம் முன்வைக்கிற நியாயமான கோரிக்கைகள் கூட இந்திய அதிகாரமையத்தால் புறக்கணிக்கப்படுகிறது. புலிகள் விமானப்படையால் இந்தியாவின் அணு உலைகளுக்கு பாதிப்பா, புலிகளின் கடற்ப்படையால் இந்தியாவின் கடற்கரைக்கு பாதிப்பா என இந்திய ஊடகங்களும், இந்திய பாதுகாப்பு அதிகாரிகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டிருக்க, எல்லா தாக்குதலும் வடக்கில் தான் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இப்பொழுது கூட ஹிந்து ராம் என்னும் பத்திரிக்கையாள நெறி கூட இல்லாத ஒருவர் மும்பை தாக்குதலை தன்னுடைய புலி எதிர்ப்பு அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள முனைகிறார். சிறீலங்காவில் இருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிக்கைகள் இந்த தாக்குதலில் சில தென்னிந்தியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்புகள் உள்ளன என்று எழுதி கொண்டிருக்கின்றன.

நீங்கள் உண்மையிலேயே இந்த விஷயத்தில் Sensitive என்றால் முதலில் ஹிந்து ராம் போன்றவர்களின் மலிவுத்தனமான போக்கினை கண்டித்து ஒரு பதிவையாவது எழுதி விட்டு வாருங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு என்னைப் போன்றவர்களை நோக்கி கைநீட்டி கேட்க எந்த அருகதையும் இல்லை என்பதை சொல்லிவைக்கிறேன்.

நன்றி...

11:24 PM, December 04, 2008
SK said...

//
நீங்கள் உண்மையிலேயே இந்த விஷயத்தில் Sensitive என்றால் முதலில் ஹிந்து ராம் போன்றவர்களின் மலிவுத்தனமான போக்கினை கண்டித்து ஒரு பதிவையாவது எழுதி விட்டு வாருங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு என்னைப் போன்றவர்களை நோக்கி கைநீட்டி கேட்க எந்த அருகதையும் இல்லை என்பதை சொல்லிவைக்கிறேன்.
//


சசி,

True. I noticed the twist by Hindu as well. Using the tragedy to score a political point is indeed very mean.

எனக்கு வலைப்பதிவு வாசிப்பாளனாக இருக்கும் பொழுது பெரும்பாலும் எழுதியவரின் கருத்தில் இருந்து வெகுவாக வேறுபடும் போது தான் விமரிசனம் எடுத்து வைக்கும் உத்வேகம் வருகிறது. ஒத்துப்போகும் போது "ஆம் இது சரி தானே - இதில் சொல்ல என்ன இருக்கிறது" என்று தோன்றிவிடுகிறது. அதனால் தான் பல பதிவுகளில் மௌனம் காக்கிறேன். கருத்து வேறுபாட்டால் அல்ல (of course, there are some occasions in which I disagree with the author but the disagreement is not strong enough to warrant a post). இனி, நேரம் கிடைப்பதைப் பொறுத்து பாராட்டுக்களும் எடுத்து வைக்க முயல்கிறேன்.

அதே சமயம், two wrongs do not make a right. ஹிந்து நாளிதழோ, அரசியல்வாதிகளோ செய்யும் தவறுக்காக ஒரு எதிர்த் தவறாக மும்பையைப் புறக்கணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

-SK

10:25 AM, December 05, 2008