மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை மையப்படுத்தி காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தினை சிதைக்கும் ஒரு பிரச்சாரத்தை ஹிந்து அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஹிந்து அடிப்படைவாதிகளுக்கு இந்தியாவை ஒரு ஹிந்து தேசமாக அமைத்திருப்பதும், காஷ்மீர் மக்களின் நியாயமான விடுதலை கோரிக்கையை சிதைப்பதும் முக்கிய நோக்கமாக உள்ளது.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத தங்களின் மதம் சார்ந்த பயங்கரவாதத்தின் கோரமுகத்தை காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்து சொல்வதன் மூலம் நியாயப்படுத்த பார்க்கின்றனர்.
இங்கே சில உண்மைகள் மூடி மறைக்கப் படுகின்றன.
1. இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் பாக்கிஸ்தானை சார்ந்த இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள். அல்கொய்தா இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட
லக்க்ஷ்ர்-இ-தொய்பா அமைப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த அமைப்பு காஷ்மீர் விடுதலை என்ற நோக்கத்தை தன்னுடைய முகமூடியாக கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்தையே முன்னிறுத்துகிறது.
2. இந்த தாக்குதலில் ஒரு காஷ்மீரி கூட ஈடுபடவில்லை. கராச்சியில் இருந்த வந்த பாக்கிஸ்தானியர்கள் என தெரிகிறது. பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பாக்கிஸ்தானியர்கள் சிலரும் உள்ளனர் என தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.
3. காஷ்மீர் மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எந்த ஆயுதங்களும் ஏந்தாமல் தான் தங்கள் விடுதலையை முன்னெடுத்தனர். அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை தற்பொழுது "மனித நேயம்" கொண்டவர்களாக மாறிவிட்ட ஒரு இந்திய பிரஜையும் கண்டிக்கவில்லை.
4. காஷ்மீரில் செயல்படும் ஆயுதக்குழுக்களில் பெரும்பாலானவை பாக்கிஸ்தானின் தூண்டுதலில் செயல்பட்டவையே.
5. காஷ்மீரில் இருந்த ஆயுதக்குழுவான காஷ்மீர் விடுதலை முண்ணனி (Jammu and Kashmir Liberation Front - JKLF) போன்றவை பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்த வந்த இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாத் அமைப்புகளால் தங்கள் பலத்தை இழந்தன. JKLFன் தலைவர் யாசின் மாலிக் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளார். மதசார்பின்மையை வலியுறுத்திய தலைவர்களில் யாசின் மாலிக் முக்கியமானவர். (தற்பொழுது கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தில்லி
மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்).
உண்மைகள் இவ்வாறு இருக்க ஹிந்து அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இணைந்து காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தின் முகத்தை தற்பொழுது சிதைத்து கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து மிக விரிவாக எழுத தற்பொழுது நேரமில்லை. அதனால் இதே வகையிலான கருத்துக்களைச் சார்ந்து முன்பு நான் எழுதிய கட்டுரைகளை இங்கே சுட்டி காட்ட விரும்புகிறேன்.
காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை
இரு மாதங்களுக்கு முன்பாக காஷ்மீரில் காஷ்மீர் மக்கள் முன்வைத்த போராட்டங்களை குறித்த எனது பதிவு
காஷ்மீரில் மீண்டும் விடுதலை முழக்கம்
காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு என்ன ?
என்னுடைய காஷ்மீரின் விடுதலை கட்டுரைகள் - 1, 2, 3, 4, 5, 6
தொடர்புள்ள என்னுடைய மற்றொரு பதிவு
இஸ்லாமிய அடிப்படைவாதமும், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டமும்
ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தையும், மத ரீதியிலான அடிப்படைவாதத்தின் வேறுபாட்டினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேட்சேவுக்கும், பகத்சிங்கிற்கும் வேறுபாடுகள் உள்ளன. இருவருமே கொலை குற்றவாளிகள் தான். ஆனால் ஒருவர் மத அடிப்படைவாதி, மற்றொருவர் விடுதலைப் போராளி...
வணக்கம்
சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்
ஈழம்
என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன
ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்
காஷ்மீர்
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு
அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி
அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்
பிற கட்டுரைகள்
தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்
மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com
Saturday, November 29, 2008
காஷ்மீர் விடுதலைப் போராட்டமும், மும்பை பயங்கரவாத தாக்குதலும்...
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 11/29/2008 05:49:00 PM
குறிச்சொற்கள் Kashmir, Mumbai, Terrorist Attacks, இந்திய அரசியல், காஷ்மீர், மும்பை
Thursday, November 27, 2008
இஸ்லாமிய அடிப்படைவாதமும், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டமும்
மும்பையில் இது வரை பார்த்திராத வண்ணம் மிகவும் கோரமான பயங்கரவாதச் செயல்களை பயங்கரவாதிகள் நிக்ழ்த்தியுள்ளனர். ஒபாமா அமெரிக்க குடியரசு தலைவராக பதவியேற்பதற்கு முன்பாக ஏதாவது பயங்கரவாதச் சம்பவத்தினை அல்கொய்தா நிகழ்த்தும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே அமெரிக்க, பிரிட்டிஷ், இஸ்ரேலியர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரயில் நிலையங்களில் இருந்த அப்பாவி மக்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த தாக்குதல்கள் மனித நேயம் உள்ள யாரையும் பதறவே செய்யும். இந்த தாக்குதல்களில் பலியாகிய மக்களுக்கு - அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்.
இந்த நேரத்தில் இந்திய உளவு நிறுவனங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. இந்த தாக்குதல்களை 9/11 உடன் ஒப்பிடுகிறார்கள். 9/11க்கு முன்பான காலங்களில் அமெரிக்காவில் பெரிய தாக்குதல்கள் நிகழ வில்லை. அதற்கு பிறகு ஒரு தாக்குதல் கூட நடக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் எத்தனை தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது கவலை ஏற்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல்வேறு குண்டுவெடிப்புகளில் இந்தியாவில் சுமார் 500க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஈராக்கிற்கு அடுத்ததாக இந்தியாவில் தான் இவ்வளவு அதிகப் பேர் குண்டு வெடிப்புகளில் பலியாகியுள்ளதாக ஒரு பத்திரிக்கை கூறுகிறது. தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் உளவு நிறுவனங்கள் என்ன தான் செய்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பியாக வேண்டும்.
இன்றைய தினமணி தலையங்கத்தில் எழுப்பபட்டிருக்கும் சில கேள்விகள்நியாயமானவை...
பத்து இடங்களில் கடந்த பத்து மாதங்களாகத் தொடர்ந்து குண்டுகள் வெடித்தும், பல உயிர்கள் பலியாக்கப்பட்டும், அறிக்கை கொடுப்பதைத் தவிர வேறு எதுவுமே செய்யாமல் குண்டுக்கல்லாக ஓர் உள்துறை அமைச்சர் இருக்கிறார் என்பது தான் அவர்களது தைரியம். அவரைப் பார்த்தாலும் சரி, அவருடைய செயல்பாடுகளும் சரி, இந்தியாவில் நாம் எந்தவித பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டாலும் அதைப்பற்றி சற்றும் கவலைப்படாத உள்துறை அமைச்சகம் இருக்கிறது என்பதுதான் அவர்களுக்குத் துணிவைக் கொடுத்திருக்க முடியும். இத்தனைக்குப் பிறகும் உள்துறை அமைச்சரை மாற்ற வேண்டும் என்று பிரதமரும் நினைக்கவில்லை, தனது கையாலாகத் தனத்தை ஒத்துக்கொண்டு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அமைச்சரும் நினைக்கவில்லை. என்ன பொறுப்பற்றதனம்?
கடந்த பத்து ஆண்டுகளாக, சூப்பர் உள்துறை அமைச்சராகவும், நிழல் பிரதமராகவும் செயல்படுபவர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என்கிற பதவியை வகிப்பவர். அவர் எதுவுமே பேசக்காணோமே, ஏன்? இப்படித்தான் தொடர்ந்து பயங்கரவாதச் செயல்கள் நடக்கும் என்றால், எம்.கே. நாராயணன் ஏன் தேசியப் பாதுகாப்புச் செயலராகத் தொடர வேண்டும்? அப்படி ஒரு பதவியின் அவசியம்தான் என்ன? இத்தனைக்கும் அவர் முன்னாள் உளவுத்துறைத் தலைவர். அந்தப் பதவிக்கு எந்தவிதப் பொறுப்பும் கிடையாதா?
பாவம் எம்.கே.நாராயணன். அவரை எதுவும் சொல்லாதீர்கள். அவர் இலங்கைப் பிரச்சனையின் ஸ்பெஷலிஸ்ட் (specialist on Sri Lankan affairs). அவ்வளவு தான். அவர் கவனம் முழுவதும் சிறீலங்கா இராணுவம் கிளிநொச்சியையும், முல்லைத்தீவினையும் எப்படி பிடிக்கப் போகிறது என்பதில் தான் உள்ளது. ஆனால் தேவைப்படும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுவார்.
இந்தியாவில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் ஒரு ஆண்டில் சுமார் 500 அப்பாவி மக்கள் இத்தகைய குண்டுவெடிப்புகளில் பலியாகியுள்ளனர். இந்தியாவில் பாதுகாப்பு பலவீனமாக உள்ளதால் தான் அல்கொய்தா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என இங்குள்ள தொலைக்காட்சிகளில் கூறப்படுகிறது. அல்கொய்தாவோ அல்லது பாக்கிஸ்தானில் உள்ள வேறு ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளோ, எதுவாக இருந்தாலும் இந்திய அரசாங்கம் வழக்கம் போல பாக்கிஸ்தானை குற்றம் கூறி தப்பி விட முடியாது. பாக்கிஸ்தானில் இருந்து வந்து இருந்தாலும் மும்பை கடற்கரை வழியாக வரும் அளவுக்கு பாதுகாப்பில் இருந்த பிரச்சனைகள் குறித்த கேள்வி எழுகிறது.
தமிழக கடற்கரையோரங்களில் பலமான கண்காணிப்பு கடற்ப்படையால் மேற்கொள்ளப்படுகிறது. புலிகளுக்கு வரும் கப்பல்கள் பற்றிய உளவு செய்திகளை கூட சிறீலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா கொடுத்து உதவுகிறது. அவ்வளவு அசுரபலம் கொண்ட இந்தியாவால், இந்தியாவின் முக்கிய நகரமான மும்பையில் கடல்வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் தொடுத்து இருப்பதை ஏன் தடுக்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது ?
இந்தியா தன்னை "உலகின் அடுத்த வல்லரசு" என்பதை முதலில் மறக்க வேண்டும். அமெரிக்கா உலகின் வல்லரசு என்றால் அது தன்னுடைய நாட்டினை சரியாக பாதுகாக்கிறது. 9/11க்குப் பிறகு அமெரிக்க சுரங்க ரயில்களில் (Subway) எத்தகைய பாதுகாப்பு உள்ளது என்பது இங்கிருப்பவர்களுக்கு தெரியும். தன்னுடைய நாட்டினை சரியாக பாதுகாக்க முடிந்த அமெரிக்காவிற்கு இணையாக இந்தியா தன்னை வல்லரசாக நினைப்பதால் தான் சோமாலியாவிற்கு சென்று கடற்கொள்ளையர்களை தாக்குகிறது. ஆனால் தன்னுடைய கடல் எல்லைக்கு அருகே இருந்து வரும் பயங்கரவாதிகளின் கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை. சோமாலியாவிற்கு சென்று கப்பல் முதலாளிகளை பாதுகாக்க தெரிந்த இந்தியாவால் அப்பாவி தமிழக மீனவர்களை காப்பாற்ற முடிவதில்லை. இப்பொழுது மும்பையையும் காப்பாற்ற முடியவில்லை.
*******
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பயங்கரவாதம் என வரையறை செய்வதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.
ஆனால் பயங்கரவாதம் என்று வரும் பொழுது எல்லாவற்றையும் தட்டையாக பயங்கரவாதம் என அடைத்துவிடும் போக்கு நிலவி வருகிறது. இஸ்லாமிய அடைப்படைவாதம் என்ற ஒன்றினை மையப்படுத்தி அனைவரையும் பயங்கரவாதிகள் என்ற நோக்கில் பார்க்கப்படும் ஒரு போக்கு நிலவி வருகிறது. விடுதலைப் போராட்ட அமைப்புகளையும், இஸ்லாமிய அடைப்படைவாதத்தையும் தட்டையாக பயங்கரவாதிகள் என வரையறை செய்வது தந்திரமானது.
இங்கு அரசாங்கங்கள் செய்யும் பயங்கரவாதச் செயல்கள் கவனிக்கப்படுவதில்லை. தன்னுடைய மக்கள் மீதே குண்டு வீசும் அரசாங்கத்தை பயங்கரவாத அரசாக யாரும் பார்ப்பதில்லை. ஆனால் அதனை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தும் அரசாங்கம் அல்லாத அமைப்புகள் மட்டுமே பயங்கரவாதிகளாக பார்க்கப்படுகின்றனர். தமிழ்ச்செல்வன் போன்றோரின் படுகொலைகள் இராணுவ நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. பொன்சேகா என்ற இராணுவத் தலைமையின் மீது நடத்தப்படும் தாக்குதல் பயங்கரவாதமாக பார்க்கப்படுகிறது. பயங்கரவாதம் என்று சொல்லப்பட்டால் இரண்டையும் ஒரே தராசில் எடைபோட வேண்டும்.
ஈழப்போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அசுர வளர்ச்சி பெற்றதே ஈழப்போராட்டம் அடைந்த முக்கிய பின்னடைவுகளுக்கு காரணமாக நான் கருதுகிறேன். 2002ல் புலிகள் இராணுவத்தைக் காட்டிலும் பலமாக இருந்தனர். ஆனையிறவை கைப்பற்றி யாழ்ப்பாணத்தை நோக்கி செல்லக்கூடிய சூழ்நிலையில் தான் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தகர்க்கப்பட்டன. உலகில் இருந்த பல அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து அப்பொழுது கேள்விகள் எழுப்பபட்டன. அந்த அமைப்புகளின் விடுதலை நோக்கங்கள் புறந்தள்ளப்பட்டு அனைத்து ஆயுதப் போராட்ட குழுக்களையும் பயங்கரவாத அமைப்புகளாக பார்க்கும் போக்கு தோன்றியது.
இந்த மாற்றத்தை சிறீலங்கா போன்ற நாடுகள் பயன்படுத்துக் கொண்டன. தேசிய விடுதலையை முன்னெடுத்த அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக பிற நாடுகளைப் பார்க்க வைத்தன. அந்த வளையத்தில் இருந்து புலிகள் போன்ற அமைப்புகளால் வெளியேற முடியாத சூழ்நிலை உள்ளது. இன்று அனைத்து உலக நாடுகளும் சிறீலங்காவிற்கு உதவி செய்து வருகின்றன. புலிகளின் தற்போதைய பின்னடைவிற்கு இதுவே காரணம்.
அமெரிக்காவின் அடுத்த வெளியூறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ககூடும் என எதிர்ப்பார்க்கப்படும் ஹில்லரி க்ளிண்டன் பயங்கரவாதம் குறித்து பின்வருமாறு கடந்த வருடம் கூறினார்.
Well, I believe that terrorism is a tool that has been utilized throughout history to achieve certain objectives. Some have been ideological, others territorial. There are personality- driven terroristic objectives. The bottom line is, you can't lump all terrorists together. And I think we've got to do a much better job of clarifying what are the motivations, the raisons d'être of terrorists. I mean, what the Tamil Tigers are fighting for in Sri Lanka, or the Basque separatists in Spain, or the insurgents in al-Anbar province may only be connected by tactics. They may not share all that much in terms of what is the philosophical or ideological underpinning. And I think one of our mistakes has been painting with such a broad brush, which has not been particularly helpful in understanding what it is we were up against when it comes to those who pursue terrorism for whichever ends they're seeking.
பயங்கரவாதத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டிய தேவையை ஹில்லரி முன்வைத்தார்.
*******
மும்பையில் நடைபெற்றிருக்கும் தாக்குதலை மையப்படுத்தி தற்பொழுது தமிழகத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான உணர்வுகளை அடக்கும் ஒரு முயற்சி நடக்கக்கூடும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக நிராகரிப்பதும், அப்பாவி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கடுமையாக கண்டிப்பதும் நம்முடைய தார்மீக கடமையாகும். அதே நேரத்தில் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்து வரும் அரசு பயங்கரவாதத்தை எதிர்ப்பதும், அந்த அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதும் அவசியமாகிறது.
பயங்கரவாதத்திற்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் இருக்கும் வேறுபாட்டினை நாம் தமிழக/இந்திய மக்களிடம் முன்வைக்க வேண்டும்.
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 11/27/2008 11:14:00 PM
குறிச்சொற்கள் Mumbai, Terrorist Attacks, மும்பை
Sunday, November 23, 2008
இலங்கை தமிழர் போராட்ட க்ரைம் நாவல்
சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்த சரித்திர நாவல்கள் என்றால் அது சாண்டில்யன் மற்றும் கல்கியின் நாவல்கள் தான். அதுவும் சாண்டில்யன் நாவல்களை நெய்வேலி நூலகத்தில் முன்பதிவு செய்து படித்தது தனிக்கதை. சரித்திர நாவல்களை "உண்மையான வரலாறாகவே" கண்டு கொள்ளும் போக்கு தமிழக வாசகர் வட்டத்தில் இருந்து வந்துள்ளது. இன்றைக்கும் உள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை உண்மையான சோழ சரித்திரமாக நினைத்துக் கொண்ட பலரை நான் அறிவேன்.
வரலாற்று நாவல்களை முழுமையான கற்பனையாக மட்டும் இல்லாமல் வரலாற்றை சரியாக பொருத்தி எழுதிய நாவல்களாக நான் வாசித்த எழுத்தாளர் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும் போன்ற நாவல்களை குறிப்பிட முடியும். புதுவையில் இருந்த பிரஞ்ச் ஆட்சி குறித்து ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்புகளை அடிப்படையாக கொண்டு பிரபஞ்சன் எழுதிய நாவல் வரலாற்றை தன் எழுத்து சுவராசியத்திற்காக வளைத்து விடவில்லை. இந்த தொடர்கள் தினமணிக்கதிரில் வெளிவந்தது என்பதை குறிப்பிட வேண்டும். வெகுஜன ஊடகத்தில் எழுதினாலும் பிரபஞ்சன் வரலாற்றை சிதைத்து விடவில்லை.
வரலாற்று நாவல்களே இவ்வாறு என்றால், முழுமையான வரலாற்று தொடர் எப்படி இருக்க வேண்டும் ?
வரலாறு குறித்து எழுதுவது சவால் நிறைந்தது. அதீத பொறுப்புணர்வு இத்தகைய பணிகளுக்கு தேவைப்படுகிறது. சுவாரசியமாக எழுத வேண்டும் என்பதற்காக வரலாற்றை சிதைத்து விடக்கூடாது. அதுவும் வெகுஜன ஊடகங்களில் சரித்திரத்தை முன்வைக்கும் பொழுது வாசகனை படிக்க வைக்க அதனை சுவாரசியமாக எழுத வேண்டியது தான். அதற்காக சரித்திரத்தை ஒரு க்ரைம் நாவல் போன்று எழுத வேண்டுமா ? சரித்திரத்தை மிகவும் சுவாரசியமாக எழுத முனையும் பொழுது அங்கு சுவாரசியத்திற்கு தான் முக்கியத்துவம் கிடைக்கிறது. வாசகனை கட்டிப்போட வேண்டும் என்ற எண்ணம் சரித்திரத்தை சிதைத்து விடுகிறது.
பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத தொடங்கியிருக்கின்ற "யுத்தம் சரணம்" என்ற தொடர் அந்த வகையில் பெருத்த ஏமாற்றத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இரண்டு பாகங்களே வெளியாகி இருக்கின்றன. அந்த இரண்டு பாகங்களும் பல தகவல் பிழைகளுடன், குழப்பங்களுடன் வெளியாகி உள்ளது.
இத்தனைக்கும் இது இன்னும் 1948 நிகழ்வுகளுக்கோ, 1990க்கு முன்பான சூழலுக்கோ செல்ல வில்லை. கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து தான் இந்த தொடர் தற்பொழுது பேசுகிறது. அதிலேயே இத்தனை பிழைகள் என்றால் இலங்கையின் குழப்பமான ஆரம்பகாலம், போராளிக்குழுக்களுக்குள் நிகழ்ந்த சண்டை, இந்தியாவின் தலையீடு போன்றவை குறித்து எழுதும் பொழுது இன்னும் எத்தனை குழப்பங்களை முன்வைக்கப் போகிறதோ என்ற அச்சமே ஏற்படுகிறது.
பொன்சேகா மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் தான் தற்பொழுது நடைபெறும் போருக்கான முக்கிய காரணம் என்பதான கருத்தாக்கத்தை இந்த தொடரின் முதல் பாகம் வாசகர் மனதில் விதைக்கிறது. இலங்கைப் பிரச்சனை குறித்து பெரிய புரிதல் இல்லாத சாமானிய வாசகர்கள் இதனை மனதில் கொண்டே அடுத்து வருகின்ற பாகங்களை வாசிக்கப்போகிறார்கள். பொன்சேகா மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டும் தானா இந்தப் போருக்கான முக்கிய காரணம் ? போருக்கான சூழல் ஏற்பட்ட பிறகு, இனி நிச்சயமாக போர் தான் என்ற நிலை ஏற்பட்ட பிறகே பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதே உண்மையான நிலை.
இது குறித்த நண்பர் திருவின் பதிவு - ‘யுத்தம் சரணம்’ தொடரின் எழுத்து அரசியல்!
************
இரண்டாம் பாகத்தில் வரும் சில வரிகள்...
ஐரோப்பிய யூனியன் தன் மீது விதித்த தடையைச் சுட்டிக்காட்டி, அமைதித் திட்டத்தின் அங்கத்தினர்களாக இருந்த ஐரோப்பிய தேசங்களான ஸ்வீடன், டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே ஆகிய தேசங்களை `யூனியனிலிருந்து விலகுங்கள்' என்று விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ம்ஹும். சாத்தியமில்லை. டென்மார்க்கும் ஃபின்லாந்தும் செப்டம்பர் 1 முதல் அமைதித் திட்டத்திலிருந்து விடைபெறுவதாகச் சொல்லிவிட்டன.
இந்த வரிகளைப் படித்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து ஸ்வீடன், டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே போன்ற நாடுகளை விலக புலிகள் கேட்டு கொண்டார்களா ? பா.ராகவன் எங்கே இருக்கிறீர்கள் ? புலிகள் என்ன கேட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நார்வே ஐரோப்பிய யூனியனில் இல்லை என்பது கூடவா உங்களுக்கு தெரியாது ? ஐரோப்பியாவில் இருக்கின்ற அனைத்து நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் இல்லை.
என்ன நடந்தது என்பதை நான் ஏற்கனவே என்னுடைய "சதுரங்க ஆட்டத்தில் தமிழீழம்" என்ற தொடரில் எழுதியுள்ளேன். மறுபடியும் இங்கே குறிப்பிடுவதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. பா.ராகவன் குறிப்பிடுவது போல ஸ்வீடன், டென்மார்க் போன்றவை அமைதித்திட்டத்தின் அங்கத்தினர்கள் அல்ல. அமைதித்திட்டத்தின் அங்கத்தினர்கள் என பொதுவாக எதனை குறிப்பிடுகிறார் என்றும் தெரியவில்லை. Co-chairs என்று சொல்லப்படும் கூட்டுத்தலைமையை குறிப்பிடுகிறாரா என தெரியவில்லை. அதில் நார்வே, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவை உள்ளன. ஸ்வீடன், டென்மார்க் போன்றவை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவை சேர்ந்தவர்கள் - SLMM (Srilanka Monitoring Mission). ஐரோப்பிய யூனியன் தடைக்கு பிறகு ஐரோப்பிய யூனியனை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருக்க கூடாது என்று தான் புலிகள் கூறினார்கள். ஐரோப்பிய யூனியனை விட்டே விலக வேண்டும் என்று கேட்கவில்லை. அவ்வாறு கேட்டால் பலர் சிரிப்பார்கள்.
இது மட்டுமா இன்னும் பிழைகள் உள்ளன...
மாவிலாறு என்பது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. ராணுவத்தின் நோக்கம் வேறு. செயல்திட்டம் வேறு. இலக்கு முற்றிலும் வேறு. மட்டக்களப்பில் ஆரம்பித்து திருகோணமலை வழியே வவுனியா வரை உள்ள புலிகளின் அத்தனை தளங்களையும் கைப்பற்றி அழிக்கும் திட்டம் அவர்கள் வசம் இருந்தது. அப்படியே முடிந்தால் யாழ்ப்பாணம். சுற்றி வளைத்துக் கிளிநொச்சி. நிறுத்தப் போவதில்லை. என்ன ஆனாலும் சரி. போர் நிறுத்த ஒப்பந்தப் பத்திரம், பத்திரமாக இருக்கிறது. இன்னும் கிழித்துப் போடவில்லை. யார் கேட்கப்போகிறார்கள்?
அடுத்து சில வரிகள் யாழ்ப்பாணம் குறித்த குழப்பத்தை இன்னும் அதிகரிக்கிறது.
பூநகரியைப் பிடிக்க முடிந்தது மிகப்பெரிய விஷயம். அது புலிகளின் வலுவான கோட்டை. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல்.
யாழ்ப்பாணம் புலிகள் கைகளில் உள்ளதா ? இராணுவத்தின் கைகளில் உள்ளதா ? யாழ்ப்பாணம் புலிகள் வசம் இல்லை என்ற உண்மையை தெரியாமல் பா.ராகவன் இருக்க முடியாது என நம்புகிறேன். ஆனால் இலங்கை குறித்து அதிகம் தெரியாத சாமானிய வாசகர்கள் இந்த வரிகள் குறித்து படித்தால் என்ன நினைப்பார்கள் ?
இங்கு மற்றொரு தகவல் பிழை உள்ளது. பூநகரியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நிலம் வழியான பாதை இல்லை. படகுகள் மூலமாகவே செல்ல முடியும். சாலை வழியாக செல்ல வேண்டும் என்றால் ஆனையிறவு தான் வழி. A9 நெடுஞ்சாலை ஆனையிறவு வழியாகவே யாழ்ப்பாணத்தை வன்னியுடன் இணைக்கிறது. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல் என்பது மட்டும் அல்ல, யாழ்ப்பாணத்தை ஏன் சிறீலங்கா இராணுவம் பிடிக்க வேண்டும் ? அது தான் அவர்கள் வசம் ஏற்கனவே உள்ளதே :)
அடுத்து...
தனி ஈழம் என்கிற ஒற்றை இலக்கிலிருந்து இன்றுவரை ஓரங்குலம் கூட நகராதவர்களாக விடுதலைப் புலிகள் மட்டுமே இருக்கிறார்கள்.
ISGA (Interim Self Governing Authority) என்ற ஒன்றை புலிகள் சமர்ப்பித்தார்களே ? அது என்ன ? அது எதற்காக ? அதை வைத்து ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா ? ஏன் நடக்கவில்லை ? யார் காரணம் ?
************
இந்த தொடரில் முன்வைக்கப்பட்டிருக்கும் சில தகவல்கள் உண்மையில் சரியானது தானா என்ற கேள்வி எனக்கு உள்ளது. சிறீலங்கா குறித்து உண்மையில் அறிந்தவர்கள் இது சரியா அல்லது தவறா என்பதை கூறட்டும்.
தொடரில் இப்படியான ஒரு வரி வருகிறது.
அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் அவருக்குமான உறவு, வெறும் அதிபர் - ராணுவத் தளபதி உறவல்ல. மேலே. ரொம்ப மேலே. ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும். நோக்கம் தெளிவானது. புலிகளை ஒழித்துவிடலாம். சிம்பிள்.
இது எந்தளவுக்கு உண்மையானது ? எனக்கு தெரிந்த வரையில் ஜனாதிபதி ராஜபஷேவின் தம்பி கோத்தபாய ராஜபக்ஷேவும், பொன்சேகாவும் ஒன்றாக இராணுவத்தில் இருந்தவர்கள். அவர்கள் ஒன்றாக இராணுவத்தில் இருந்த காரணத்தால் நெருங்கிய நண்பர்கள் என்றே வைத்துக் கொண்டாலும் (Assumption, not fact), இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்ததால் பொன்சேகவும், அதிபர் ராஜபக்சேவும் நண்பர்களா ? அதுவும் "ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும்" ?
இது உண்மையா என்பதை சிறீலங்கா குறித்து தெரிந்தவர்கள் கூறட்டும். எனக்கும் உண்மையை தெரிந்து கொள்ளும் ஆவல் உள்ளது.
ஒரு நண்பரிடம் இருந்து கிடைத்த தகவல் படி...
ராஜபக்க்ஷ, பொன்சேகா இருவரும் அம்பாந்தோட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது தவிர எதுவுமே பொதுவில்லை. ஒருவர் படித்தது, ஆனந்தா கல்லூரி; மற்றையவர் நாளந்தா கல்லூரி. இரண்டுமே கொழும்புவட்டாரத்திலே ஆளுக்காள் எதிரும் புதிருமான சிங்களப்போட்டிக்கல்லூரிகள்.
வரலாற்றை சுவரசியமாக, க்ரைம் நாவல் போன்று எழுத முனைந்தால் இப்படியான விபரீதங்கள் தான் விளையும். இன்னும் என்ன என்ன வரப்போகிறதோ ?
************
இந்த தொடர் ஒரு வியபாரம் என்பதே என்னுடைய கருத்து. ஒரு பிரச்சனை தமிழகத்தில் முக்கியமாக பேசப்படும் பொழுது அதனை வியபாரமாக மாற்றும் இந்திய வெகுஜ ஊடக, எழுத்து வியபாரிகளின் முயற்சி தான் இந்த தொடர். அதனை சுவரசியமாக க்ரைம் நாவல் போன்று எழுதி, பரபரப்பாக வாசகர்களிடம் கொண்டு சென்று பணம் சேர்க்க நடக்கும் இந்த வியபாரம் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 11/23/2008 10:42:00 PM
Wednesday, November 05, 2008
வாழ்த்துக்கள் ஒபாமா
அமெரிக்காவின் முதல் கறுப்பர் இன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒபாமாவிற்கு வாழ்த்துக்கள். மாற்றம் (CHANGE) என்ற அசைக்க முடியாத கோஷத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை மக்கள் மத்தியில் ஒபாமா முன்வைத்தார். அந்த மாற்றம் என்ற கோஷம் ஒபாமாவை வெற்றி பெற வைத்திருக்கிறது.
கறுப்பர் இன மக்களின் உணர்ச்சிபூர்வமான உற்சாகத்துடன் அமெரிக்காவில் கொண்டாடங்கள் தொடங்கியுள்ளன. இந்த வெற்றி எந்தளவுக்கு உணர்ச்சிபூர்வமானது என அறிய வேண்டும் என்றால் அமெரிக்காவில் கறுப்பர்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையை திரும்பி பார்க்க வேண்டும்.
கடந்த மாதம் அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஹூஸ்டன் விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லும் பொழுது என்னுடைய டாக்சி டிரைவராக வந்த ஒரு கறுப்பர் இனத்தவருடன் இந்த தேர்தல் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். ஒபாமா வெற்றி பெற்று வெள்ளை மாளிகையில் நுழைந்தால் அது கறுப்பர்கள் இனத்தவர் அடையும் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும் என்றார். தன்னை பலர் "Nigger" என அழைத்து இருக்கிறார்கள். ஒபாமா வெள்ளை மாளிகையில் நுழையும் பொழுது மிகப் பெருமையாக உணர்வேன் என்றார். ஜெசி ஜாக்சன் சாதிக்க முடியாததை ஒபாமா சாதித்து விட்டார் என்றார். நிச்சயம் ஜனாதிபதியாவார் என்றார்.
இப்படி பல கறுப்பர்கள் ஒபாமாவின் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இன்று அந்த வெற்றி கிடைத்து இருக்கிறது.
ஜெசி ஜாக்சன் இன்று ஒபாமா வெற்றி பெற்றார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் கண்ணீர் விட்டு அழுதார். 1984, 1988 தேர்தலில் ஜனநாயக்கட்சியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னேட்ட தேர்தலில் வேட்பாளராக நின்று ஜெசி ஜாக்சன் தோற்றுப் போனார்.
ஒரு கறுப்பரால் ஒரு முக்கிய தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என கறுப்பர்கள் நம்பினர். அந்த காரணத்தாலேயே ஒபாமாவை இந்த தேர்தலின் தொடக்கத்தில் பெரும்பான்மையான கறுப்பர்கள் ஆதரிக்கவில்லை. தோற்கப்போகும் ஒபாமாவை எதற்கு ஆதரிக்க வேண்டும் என பெரும்பாலான கறுப்பர்கள் நினைத்தனர். அதனால் அவர்கள் ஆரம்பத்தில் ஹில்லரியையே ஆதரித்தனர். ஆனால் ஒபாமா அயோவா தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஒபாமா பின் கறுப்பர்கள் அணிவகுத்தனர். இன்று ஒபாமா வெள்ளை மாளிகையில் நுழையப் போகிறார்.
வெள்ளை மாளிகை என்பது அமெரிக்க வெள்ளையர்களின் அதிகாரபீடமாகவே பெரும்பான்மையான கறுப்பர்கள் கருதினர். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பர் நுழைவதை இன்றைக்கும் பல வெள்ளையர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் உள்ளது. பல வலதுசாரிகளால் ஒபாமா ஜனாதிபதி என்பதை ஜீரணிக்க பல காலம் ஆகும். இன்றைக்கும் அமெரிக்காவின் தென்பகுதிகளில் அமெரிக்க வலதுசாரிகள் பலமாகவே வெற்றி பெற்றிருக்கின்றனர். வயதானவர்கள், வெள்ளை ஆண்கள் மத்தியில் ஒபாமாவின் ஆதரவு தளம் குறைவாகவே உள்ளது. ஆனால் இளைஞர்கள் மத்தியில் கிடைத்த பலமான ஆதரவு தான் ஒபாமாவை வெற்றி பெற வைத்திருக்கிறது.
*******
ஒபாமா அதிகபட்ச எதிர்பார்ப்புகளுடன் ஜனாதிபதியாகிறார். ஆனால் அவர் முன் பலமான சவால் உள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் சிதைந்து போய் உள்ளது. அமெரிக்காவின் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் மாற்றத்தை எதிர் நோக்கியுள்ளது. அமெரிக்க முதலாளித்துவ பாதை எதிர்காலத்தில் நிச்சயம் மாறும். மாறியே தீர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஒபாமா ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாகிறார். பலமான எதிர்பார்புகளுடன் உலக அரசியலில் பதவியேற்றவர்கள், அந்த நம்பிக்கையை நிறைவேற்றியதில்லை.
ஒபாமா நிறைவேற்றுவாரா ? ஒபாமாவிற்கு நிறைய அவகாசம் வேண்டும். ஒபாமாவின் தலைமைப் பண்புகள் மிகவும் அரிதானது. அவருடைய பல கருத்துக்கள் இது வரை அமெரிக்க அதிகாரபீடம் முன்வைத்ததில் இருந்து மாறுபட்டது. அந்த மாற்றம் தான் ஒபாமா மீதான மக்களின் நம்பிக்கையையும் அதிகரித்து இருக்கிறது.
ஒரு புதிய தொடக்கம் அமெரிக்காவில் ஏற்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கும் பல அமெரிக்க மக்களுக்கும், கறுப்பர் இன மக்களுக்கும், என்னுடைய வாழ்த்துக்கள்...
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 11/05/2008 12:26:00 AM
குறிச்சொற்கள் Obama, அமெரிக்க தேர்தல் 2008, ஒபாமா