ஜனநாயகத்தின் தூண்கள் :- ஊடகங்கள்
இது குறித்த அலசல் தான் இம் மாத திசைகள் இதழின் சிறப்பு பகுதியில் அலசப்படுகிறது. அதில் வெளியாகி இருக்கும் எனது கட்டுரையை இங்கே நான்கு பதிவுகளாக பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.
முதல் பகுதியில் ஊடகங்கள் குறித்தான எனது பார்வை
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பிரபலமான ஒரு வணிக இதழில் இந்தியாவைக் குறித்த ஒரு கட்டுரையினை வாசிக்க நேர்ந்தது. இன்று இந்தியா பொருளாதார ரீதியில் பலம் பெறுவதற்கு காரணம் இந்தியாவின் ஜனநாயகம், இந்தியாவில் இருக்கின்ற தனி மனித சுதந்திரம் என்று ஒருவர் வருணித்து இருந்தார். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் என்றாலும் இந்தியா விடுதலைப் பெற்ற பொழுது இந்தியா குறித்து இருந்த பிம்பம் வேறு வகையைச் சார்ந்தது. இந்தியா போன்ற பிந்தங்கிய ஏழ்மை நாடுகளில் ஜனநாயகம் தழைக்க முடியாது என்று ஆங்கிலேயரும், மேற்கு உலகத்தினரும் நம்பினர். இந்த நம்பிக்கையை இந்தப் பிராந்தியத்தில் இருந்த பல நாடுகளும், காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளும் உறுதிப்படுத்தின. பல நாடுகள் சர்வாதிகாரிகளின் பிடியிலும் அரசியல் குழப்பத்திற்கும் உள்ளாகின. இந்தியாவிலும் இது போன்ற ஒரு நிலை இந்திரா காந்தியின் எமர்ஜன்சி காலங்களில் எழுந்தது. இந்தியாவின் ஜனநாயக முறைக்கு இந்திரா காந்தியும், அவரது மகன் சஞ்சய் காந்தியும் கடும் சவாலினை விடுத்தனர்.
"In the name of democracy" என்ற புத்தகத்தில் பிப்பன் சந்திரா இந்தியாவின் ஜனநாயக முறைக்கு சவால் விடுத்த எமர்ஜன்சி காலம் குறித்து எழுதும் பொழுது " Not all popular mass movements lead to or strengthen democracy. Regimes which claimed to be defending democracy have themselves ended up as dictatorships" என்று கூறுகிறார். 1974க்கும் 1977க்கும் இடைப்பட்ட இந்திரா காந்தியின் அதிரடி எமர்ஜன்சி காலங்கள் தவிர இந்தியாவில் ஜனநாயகமும் தனி மனித சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாக பரவலான நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. இந்தியாவின் ஜனநாயக முறை வளர்ச்சி அடைந்து வருவதற்கு இங்கு அமையும் அரசாங்கங்களும், தேர்தல் முறைகளும் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவின் சாமானிய மக்களிடம் இது குறித்த அவநம்பிக்கை தான் அதிகமாக உள்ளது.
உலக நாடுகள் மத்தியில் இந்திய ஜனநாயகம் குறித்து இருக்கும் பரவலான நம்பிக்கை கூட இந்திய மக்களிடம் அதிகம் காணப்பட்டதில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்திய ஜனநாயகம், அரசியல்வாதிகள், ஊடகங்கள் குறித்து பரவலான அவநம்பிக்கை பலரிடம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய நண்பர்களுடன் சில நேரங்களில் நடக்கும் அமெரிக்கா குறித்தான ஒப்பீடுகளில் கூட இந்தியா விடுதலைப் பெற்று 59ஆண்டுகளே ஆகிறது என்பதையும், இந்த 59 ஆண்டுகளில் ஜனநாயகம் என்ற விதையை விதைத்து, தவறான பொருளாதார கொள்கைகள், மதக் கலவரங்கள், சாதிக் கலவரங்களுக்கிடையே இந்தியா தட்டு தடுமாறி சரியான வழியிலேயே நடந்து வந்திருக்கிறது என்பதையும் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
ஆனாலும் இந்தியாவில் ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்று சொல்லப்படும் - அரசாங்க அதிகாரிகள், சட்டங்கள் இயற்றும் மக்கள் பிரதி நிதிகள், நீதித்துறை மற்றும் ஊடகங்கள் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறதா? அல்லது செல்லரித்துப் போய்க்கொண்டிருக்கிறதா? இந்தக் கேள்வி பல நேரங்களில் எழுந்து கொண்டு தான் இருக்கிறது.
ஊடகங்கள் குறித்து இந்தியா என்றில்லாமல் பல நாடுகளிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் ஊடகங்கள் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறதா என்பதை கவனிக்கும் முன்பு ஊடகங்களின் பணி என்ன என்பதை கவனிக்க வேண்டும். ஊடகங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்வார்கள். ஜனநாயகம் என்பதே மக்களுக்கானது தான். ஜனநாயகத்தின் தூண்கள் மக்களுக்கான, மக்களின் உரிமைகளை காப்பாற்றும் தூண்களாக, மக்களின் பிரச்சனைகளை முன்நிறுத்தும் நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் ஊடகங்களை ஜனநாயகத்தின் தூண்களின் ஒன்றாக கருதினர். ஜனநாயக முறையில் ஊடகங்களின் வீச்சு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. எங்கோ ஒரு குக்கிராமத்தில் நடக்கும் விடயங்களை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க ஊடகங்களால் முடியும். மக்களின் பிரச்சனைகளை பலர் அறியத் தர முடியும். மக்கள் பிரச்சனைகள் குறித்த தீர்வுகளை முன்வைக்க முடியும். மக்களிடைய பலப் பிரச்சனைகளில் தன்னுடைய கருத்துக்களை எளிதாக பரப்ப முடியும். இதன் மூலம் மக்களின் அறிவையும், அவர்களின் மனித ஆற்றலையும் நாட்டின் முக்கியப் பிரச்சனைகளுக்கு பயன்படுத்த தூண்ட முடியும். மக்களின் பிரச்சனைகளை பரவலாக இருக்கும் செய்தியாளர்கள் மூலம் ஆட்சியாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். ஊடகங்களுக்கு இருக்கும் இத்தகைய பலத்தால் தான் பத்திரிக்கைகளை ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாக கூறினர். ஜனநாயக நடைமுறையில் ஊடகங்களின் சுதந்திரத்திற்கு அதிக மதிப்பும் கொடுக்கப்பட்டது.
ஆனால் இந்தியாவில் இந்த நெறிமுறைப் படி தான் ஊடகங்கள் நடந்து கொள்கிறதா ?
இந்தியா போன்ற ஏழ்மை நிறைந்த நாடுகளில் ஊடகங்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது. மக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் அமைப்புகளாக ஊடகங்கள் இருக்க வேண்டும். ஆனால் எண்ணற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிக்கைகள் என நிரம்பப் பெற்ற இந்தியாவில் ஊடகங்கள் சரியான வகையில் தங்கள் பங்களிப்பைச் செய்வதில்லை.
கடந்த வாரம் அமெரிக்காவின் ஒரு தொலைக்காட்சியில் ஒரு செய்தி ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது. அமெரிக்காவில் 911 என்ற காவல்துறையின் அவசரப் பிரிவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த எண்ணுக்கு தொலைபேசியில் அழைத்தால் உடனே மருத்துவக் குழுவோ, காவல்துறையினரோ விரைந்து வந்து விடுவார்கள். பெரும்பாலான அவசர மருத்துவ உதவிக்கு 911ஐ தொடர்பு கொள்வது வாடிக்கையான நடைமுறை. ஆனால் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒரு 10வயது சிறுவன் தன் அம்மாவிற்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்று கூறிய பொழுது சிறுவன் ஏதோ விளையாட்டாக கூறுகிறான் என்று 911ல் அலட்சியப்படுத்தி விட்டார்கள் (இவ்வாறு சிறுவர்கள் விளையாடுவதும் இங்கு நடப்பது உண்டு). அந்தச் சிறுவனின் தாய் இறந்து விட்டார். பெரும்பாலும் 911க்கு தொலைபேசியில் அழைத்தால் மிகவும் துரிதமாக வந்து விடுவார்கள். ஆனால் வெகுசில நேரங்களில் மட்டுமே இது போன்று நடந்து விடும். இது ஊடகங்களில் பெரிது படுத்தப்பட்டு அந்தச் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருதப்பட்டு 911ன் தவறு விமர்சிக்கப்பட்டது. இது போல நடந்தால் இங்கு ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்தி செய்தி வெளியிடுவதால் அரசாங்கமோ, அரசு அலுவலகங்களோ இது போன்ற விடயங்களில் தனி அக்கறை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. நம்மூர் அரசாங்க அலுவலகங்கள் போல இல்லாமல் இங்கு அரசாங்க அலுவலகங்களில் நான் கவனித்தவரையில் மிகுந்த பொறுப்புடனும், அக்கறையுடனும், "மரியாதையுடனும்" கவனிக்கிறார்கள். இதனுடைய பின்புலம் என்ன என்பது குறித்து கவனித்தால், இங்கு இந் நிலை ஏற்பட ஊடகங்களும் "ஒரு" காரணம் என்பதை மறுக்க முடியாது.
மக்களின் பிரச்சனைகளை ஊடகங்களில் ஒளிபரப்பும் பொழுது, அந்தப் பிரச்சனைகள் குறித்த விபரங்கள், தங்களுடைய உரிமைகள் போன்றவை குறித்த தகவல் மக்களிடம் பரப்பப்படுகிறது. அரசாங்கம் தங்களுக்கு கொடுக்கும் சலுகைகளை "demand" செய்து பெற்றே தீர வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுகிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் பொழுது இயல்பாக ஆட்சியாளர்களிடம் ஒரு எச்சரிக்கை உணர்வும், மக்கள் நலம் குறித்த அக்கறையும் ஏற்படுகிறது. ஆரம்ப காலங்களில் அமெரிக்காவில் ஊடகங்களின் வளர்ச்சி இதனை சரியாக செய்திருக்கிறது என்று சொல்லலாம்.
ஆனால் இந்தியாவில் இந் நிலை இன்னும் ஏற்படவில்லை. பல தொலைக்காட்சி நிறுவனங்கள் இருக்கும் இந்தியாவில் திரைப்பட நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சாதாரண மனிதனின் பிரச்சனைகளுக்கு தரப்படுவதில்லை. ஜெசிக்காலால் போன்ற கவர்ச்சிகரமான பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தலித்களின் பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. நம்முடைய சொந்த நாட்டில் நடக்கும் காஷ்மீர், அசாம் போன்ற பிரச்சனைகள் குறித்த உண்மை நிலைகளை ஊடகங்கள் ஒளிபரப்புவதில்லை. இங்கு பல ஊடகங்களுக்கும் ஒரு சார்பு நிலை இருக்கவேச் செய்கிறது. அந்த சார்பு நிலைகளைச் சார்ந்து தான் அந்த நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நடுநிலை பத்திரிக்கைகள் என்று வருணிக்கப்படும் சில ஆங்கிலப் பத்திரிக்கை தொடங்கி மஞ்சள் பத்திரிக்கை வரை சார்பு நிலை, வியபார நோக்கு தவிர வேறு எதையும் இந் நிறுவனங்கள் யோசிப்பதில்லை. இன்று இந்திய ஊடகங்கள் வியபார நோக்கு என்ற ஒரு நிலையில் தான் தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளன. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லத்தக்க அளவிலான வெகுஜன ஊடகங்கள் இந்தியாவில் மிகவும் குறைவே. தமிழகத்தில் இருக்கின்ற ஆங்கில, தமிழ் வெகுஜன ஊடகங்களை நோக்கும் பொழுது சார்பு நிலை இல்லாத ஒரு நிறுவனத்தையும் பார்க்க முடியவில்லை என்பதே நம்முடைய ஊடகங்கள் எந் நிலையில் தற்பொழுது இருக்கின்றன என்பதற்குச் சிறந்த சான்று.
இந்தியா போன்ற ஏழ்மை நாடுகளில், அன்றாடம் பிரச்சனைகளை சந்திக்கும் மக்கள் அதிகம் இருக்கும் நாடுகளில், அரசாங்க இயந்திரங்கள் சரியான வகையில் தங்கள் பணிகளை செய்யாத நிலையில் ஊடகங்களின் பங்களிப்பு மக்கள் பிரச்சனைகளில் அதிகமாக இருக்க வேண்டும். ஊடகங்களின் போக்கில் வணிகநோக்கு இருப்பதில் தவறில்லை. அது நியாயமானதும் கூட. பல நாடுகளிலும் ஊடகங்கள் வணிகநோக்கிலும், தங்களுக்கான சார்பு நிலைகளுடனும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறன. அமெரிக்காவில் ஊடகங்களின் சார்பு நிலைகள் இராக் போரின் பொழுதும், தேர்தல்களின் பொழுதும் வெளிப்பட்டு இருக்கிறன.
ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் பிரச்சனைகளில் ஊடகங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது முக்கியம் என நான் கருதுகிறேன். வணிகநோக்கு, சார்பு நிலைகள் போன்றவற்றை விலக்காமலேயே ஊடகங்கள் மக்கள் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடியும்.
இதனை சில ஊடகங்கள் செய்ய முயற்சி எடுத்தன. ஆனால் இந்த முயற்சிகள் அதிக விளம்பர நோக்குடன் அரசாங்க அதிகாரிகள் ஊழல் பெறுவது, அரசியல்வாதிகள் ஊழல் பெறுவது போன்றவை சார்ந்து தான் இருந்தனவே தவிர சாமானிய மக்களின் பிரச்சனைகளைச் சார்ந்து இருந்ததில்லை. இந்திய ஊடகங்களில் CNN-IBN, NDTV, Thelkha போன்றவை செய்த, தொடர்ந்து செய்து வரும் சில முயற்சிகள் ஊடகங்கள் பயணிக்க வேண்டிய திசையை சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் இது ஒரு சிறு தொடக்கம் மட்டுமே. செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.
இந்தியா போன்ற பல மொழிவாரி மாநிலங்கள் உடைய நாட்டில் பிராந்தியப் பிரச்சனைகளை அந்த மாநிலங்களில் இருக்கின்ற ஊடகங்கள் தான் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இந் நிலை பிராந்திய ஊடகங்களில் காணப்படவில்லை. பிராந்திய ஊடகங்கள் செய்திகள், பொழுதுபோக்கு, சினிமா, அரசியல் போன்றவற்றைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கின்றன. இது அச்சு ஊடகங்களாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களாலும் சரி, இந் நிலையில் இருந்து பெரிய மாறுதல் இல்லை.
ஆசியாவில் இருக்கின்ற பல நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் ஊடகங்களுக்கான சுதந்திரம் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடத்தகுந்த அளவிற்கு இருக்கிறது. ஆனால் அதனுடைய செயல்பாட்டில் ஆரோக்கியம் காணப்படுவதில்லை. இந் நிலையில் ஊடகங்கள் சரியான பாதையில், இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறதா என்ற ஐயம் எழவேச் செய்கிறது. இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது எனக்கு பல காலமாக அவநம்பிக்கையே இருந்து வந்துள்ளது. அது தொடர்ந்து வலுப்பெற்று கொண்டு இருக்கிறதே தவிர நம்பிக்கை பெரிய அளவில் ஏற்பட்டதேயில்லை.
ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டினை கொண்டு வருவது மூலம் இந்தியாவில் இருக்கின்ற தனிப்பட்ட குடும்ப ஊடகங்களின் ஆதிக்கத்தை மாற்ற முடியும். இதன் மூலம் ஊடகங்களின் தொழில்நுட்பம், செயல்பாடுகள் போன்றவற்றில் மாற்றம் கொண்டு வர முடியும். கொடுக்கப்படும் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் ஏற்படும். ஆனால் இந்த ஊடகங்கள் இந்திய ஊடகங்கள் போல சார்பு இல்லாமல் செயல்படும் பொழுது நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் குறித்த வேறுபட்ட தன்மையினை பிரதிபலிக்கும் என்ற அச்சம் இருக்கிறது. ஆனால் பிரச்சனைகள் குறித்த வேறுபட்ட கருத்துக்களை கூறுவதிலோ, நாட்டின் முக்கிய பிரச்சனைகளாக காஷ்மீர் போன்றவற்றில் இருக்கின்ற உண்மை நிலையை மக்களிடம் கொண்டு வருவதிலோ எந்த தவறும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். அதே சமயத்தில் இந்த வெளிநாட்டு ஊடகங்கள் இந்திய மக்களின் பிரச்சனைகளை கொண்டு வரப்போவதில்லை.
இந்திய ஊடகங்களை ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லக்கூடாது. சில இடங்களில் இது கார்ப்ரேட் நிறுவனங்களாகவும், சில இடங்களில் அரசியல் கட்சிகளின் உபபிரிவுகளாகவுமே ஊடகங்கள் உள்ளன. மேலும் படிக்க...