வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Sunday, December 21, 2008

கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 2

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி


போர் என்பது தற்காப்பு தாக்குதல் (Defensive), வலிந்த தாக்குதல் (Offensive), தந்திரோபாய பின்நகர்வு (Tactical Withdrawal), சுற்றி வளைப்பு (Flanking maneuver), Tactical Maneuver (தந்திரோபாய நகர்வு) என அனைத்தும் சேர்ந்ததது தான். போரில் ஒரு இராணுவம் இந்த அனைத்து வியூகங்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் கடைபிடிக்கவே செய்கிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு வியூகங்களை அமைக்கும் படையே போரில் வெற்றிகளை பெற முடியும்.

தற்போதைய ஈழப் போரில் சிறீலங்கா இராணுவம் பெரிய அளவிலான வெற்றிகளை பெற்றிருக்கிறது. புலிகள் கடுமையான தற்காப்பு போரினை செய்து வருகிறார்கள். புலிகளின் போர் தந்திரங்களை முறியடிக்கும் இராணுவத்தின் வியூகங்களும் வெற்றிக்கு காரணமாக உள்ளது. தற்போதைய ஈழப் போரில் இராணுவத்தின் குறிப்பிடும்படியான வெற்றியாக மடு தேவாலயம் சார்ந்த பகுதிகளுக்கும், அடம்பன் நகருக்கும் நடந்த சண்டைகளை குறிப்பிட முடியும். பல மாதங்கள் இந்தச் சண்டை நீடித்தது.

இங்கு புலிகள் மிகவும் பலமான பாதுகாப்பு வளையங்களை அமைத்து இருந்தனர். கிட்டதட்ட முகமாலையில் இருந்தது போலவே இங்கு ஒரு வலுவான தற்காப்பு அரண் புலிகளால் செய்யப்பட்டிருந்தது. புலிகளின் தற்காப்பு அரண் பல அடுக்குகளை கொண்டது. நன்றாக அமைக்கப்பட்ட பதுங்கு குழிகள் ஒரு அரண். அதற்கு முன்பாக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கும். கண்ணி வெடிகள் என்னும் பொழுது அது ஒரு பொதுப்படையான பெயர். ஆனால் அதிலே பல விதமான வகைகள் உள்ளன. Chain Mines எனப்படுவது ஒரு வகையான கண்ணி வெடி. இதில் ஒரு வெடி வெடிக்கத் தொடங்கினால் தொடர்ச்சியாக அதனுடன் பல இடங்களில் பிணைக்கப்பட்டிருக்கும் பல வெடிகள் வெடித்து மிகவும் பலமான சேதங்களை படைகளுக்கு ஏற்படுத்தும். இது தவிர Booby trap என்ப்படும் பொறிகளும் புலிகளால் பயன்படுத்தப்பட்டன. இந்த பொறிக்குள் சிக்கும் படைகள் கடுமையான பாதிப்புகளை அடைய நேரிடும்.

புலிகளின் பதுங்கு குழிகளை கைப்பற்ற வேண்டுமானால் இந்த வளையத்தைக் இராணுவம் கடந்து செல்ல வேண்டும். அடம்பன் பகுதியில் இந்த வளையத்தை கடந்து செல்லவே முடியாத சூழ்நிலை இராணுவத்திற்கு ஏற்பட்டது. இந்த வளையத்தில் சிக்கி பல இராணுவத்தினர் தங்கள் கால்களை இழக்க நேரிட்டது. பலர் இறந்தனர். இது தவிர தங்கள் இலக்குகளை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தை தாக்க புலிகள் ஸ்னைப்பர்களை (Sniper) பயன்படுத்தினர். தூரத்தில் இருக்கும் இலக்குகளை மிகவும் சரியாக குறி பார்த்து சுடுவதே ஸ்னைப்பர் தாக்குதல். எல்லா இராணுவத்திலும் ஒரு தனிப் பிரிவே இதற்கு உண்டு. புலிகள் அமைப்பிலும் உள்ளது. தங்கள் இலக்குகளை நோக்கி வரும் இராணுவத்தினரை சுடுவதற்கு இந்த ஸ்னைப்பர்களை புலிகள் பயன்படுத்தினர்.

இப்படியான தாக்குதல்கள் காரணமாக இந்தப் பகுதிகளில் இராணுவத்திற்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. பல மாதங்களாக இந்த சண்டை நடந்தது. புலிகளின் இந்த அரண்களை உடைத்து இராணுவம் முன்னேறும் பொழுது தங்கள் நிலைகளில் இருந்து புலிகள் பின்வாங்கி விடுவார்கள். ஆரம்பத்தில் இராணுவத்தின் நோக்கம் புலிகளின் எண்ணிக்கையை குறைப்பது என்றளவில் இருந்ததால், புலிகளின் இலக்குகளை தாக்கி விட்டு பின்வாங்கி விடும் உத்தியை கடைப்பிடித்தனர். புலிகள் இராணுவம் முன்னேறும் பொழுது பின்வாங்கி விடுவார்கள். பிறகு இராணுவத்தை நோக்கி கடுமையான ஆர்ட்டிலரி தாக்குதலை தொடுப்பார்கள். புலிகளின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் இராணுவம் பின்வாங்க வேண்டிய சூழ்நிலை நேரிடும். இப்படியான சூழலில் ஒரு இடத்தை இராணுவம் கைப்பற்றுவதும், பின் அதனை புலிகள் கைப்பற்றுவதும், பின் இராணுவம் கைப்பற்றுவதும் என மாறி மாறி சூழ்நிலை நிலவி வந்தது.

அப்போதைய செய்திகளை தொடர்ந்து வாசித்து வந்தவர்களுக்கு இது தெரியும். அடம்பன் நகரை பிடித்து விட்டோம் என இராணுவம் கூறும். பின் சிறிது காலம் கழித்து மறுபடியும் அடம்பன் நகரை பிடித்து விட்டோம் எனக்கூறுவார்கள். இடையிலே அவர்கள் புலிகளிடம் இழந்தது செய்தியாக வெளியாகாது. இப்படி மாறி மாறி நடந்து கொண்டே இருந்த சூழ்நிலை ஒரு விதமான தேக்க நிலையை ஏற்படுத்தி இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தான் தங்கள் தந்திரோபாயத்தை மாற்ற வேண்டிய தேவை சிறீலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்டது.

புலிகளின் தற்காப்பு வியூகத்தை உடைக்க மூன்று திசைகளில் இருந்து அடம்பன் நகரை நோக்கி இராணுவம் படிப்படியாக நகர தொடங்கியது. சிறீலங்கா இராணுவத்தின் Flanking maneuver எனப்படும் சுற்றிவளைப்பு காரணமாக புலிகள் அடம்பன் நகரில் இருந்து பின்வாங்க நேரிட்டது. இங்கு இராணுவத்தை எதிர்த்து புலிகள் பதில் தாக்குதலை தொடுத்து இருக்கலாம். ஆனால் அது புலிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும். எனவே புலிகள் தந்திரோபாயமாக பின்நகர்ந்தார்கள். அடம்பன் இராணுவம் வசம் வந்தது. அதற்கு பிறகு பல இடங்கள் மிக வேகமாக இராணுவம் வசம் வந்தடைந்தது.

**********

அடம்பன் நகர் சார்ந்த பகுதிகளிலும், முகமாலை பகுதிகளிலும் புலிகளின் தற்காப்பு வியூகம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருந்தது. ஆனால் அடம்பனை கைப்பற்றிய சிறீலங்கா இராணுவத்தால் முகமாலையை ஏன் கைப்பற்ற முடியவில்லை ?

ஈழத்தில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் போருக்கும், கடந்த காலங்களில் ஈழத்திலும், பிற நாடுகளில் நடைபெற்ற போருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. போரில் எதிரியின் பலமான பகுதிகளை நேரடியாக போரிட்டு வெல்வதை காட்டிலும் அதனை சுற்றிவளைத்து எதிரியை நிலைகுலைய வைப்பது ஒரு போர் தந்திரம். இதைத் தான் Flanking maneuver என்கிறார்கள். உதாரணமாக சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த பொழுது ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதி தங்களுக்கு பாதகமாக இருக்கும் என நினைத்தார்கள். எனவே அந்த மலைப்பகுதிகளுக்கு சென்று தாக்குதல் நடத்தாமல், அந்த மலைப்பகுதியை வேறு வகையில் சுற்றி வளைத்து அங்கு செல்லக்கூடிய வழிகளை அடைத்தார்கள். இதன் காரணமாக சோவியத் யூனியன் வெற்றி பெற்றது. மூன்றாம் ஈழப் போரில் கூட புலிகள் ஆனையிறவை "ஓயாத அலைகள் - 3" தாக்குதலில் இவ்வாறே வென்றார்கள். இரண்டாம் உலகப் போரில் நடந்த ஐ ஆலமெய்ன்(El Alamein) சண்டையும் அவ்வாறானதே.

தற்போதைய ஈழப் போர் வியூக அமைப்பும், ஐ ஆலமெய்ன் வியூக அமைப்பும் பெரும்பாலும் ஒப்பிடக்கூடியதாகவே உள்ளது. ஐ ஆலெமெய்ன் போரில் ஜெர்மனி-இத்தாலி அச்சுப் படைகள் மிக நீண்ட ஒரு தற்காப்பு அரணை அமைத்து இருந்தார்கள். இந்த தற்காப்பு அரண் என்பது மிக நீண்ட பதுங்கு குழிகளை கொண்டதாக அமைந்து இருந்தது. சுமார் 40கி.மீ நீள பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டன. இந்த பதுங்கு குழிகளுக்கு முன்பாக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டன. பதுங்கு குழிகளுக்கு பின்புறமாக படைவீரர்களும், ஆர்ட்டலரிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதனைச் சார்ந்து நடந்த சண்டையில் அச்சுப்படைகளின் வியூகத்தை உடைத்து பிரிட்டன் - பிரான்சு உள்ளிட்ட நேச நாடுகள் வெற்றி பெற்றன. அச்சு படைகள் எதிர்பார்த்திராத திசையில் இருந்து நுழைந்து நேச நாடுகள் அந்த தாக்குதலை நடத்தின. எதிர்பாராத திசையில் இருந்து எதிர்பாராத தாக்குதல் என்பது தான் பல இராணுவ வெற்றிகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அடம்பனிலும் சிறீலங்கா இப்படியான ஒரு வெற்றியை தான் பெற்றது. புலிகள் எதிர்பாராத வகையில் மூன்று திசையில் இருந்து அடம்பனை சிறீலங்கா இராணுவம் சுற்றி வளைத்தது. ஆனால் முகமாலையில் சிறீலங்கா இராணுவத்தால் அதனை செய்ய முடியவில்லை. ஏனெனில் முகமலையில் Flanking Maneuverability க்கான வாய்ப்பு மிகவும் குறைவு. முகமாலை வெறும் 7 கி.மீ அகலம் கொண்ட குறுகலான நிலப்பகுதி. சுற்றிலும் கடலும், கடனீரேரிகளும் உள்ளன. சுற்றி வளைப்பதற்கான வாய்ப்பு இங்கே மிகவும் குறைவு. சுற்றி வளைக்க வேண்டுமானால் தென் பகுதியில் இருந்து நுழைந்து கிளிநொச்சி-பரந்தன் - பூநகரி போன்ற பகுதிகளை பிடிக்க வேண்டும். அதைத் தான் தற்பொழுது சிறீலங்கா இராணுவம் முனைந்து வருகிறது. கிளிநொச்சி-பரந்தன்-ஆனையிறவு வழியே செல்லும் A9 நெடுஞ்சாலை தான் தற்போதைய போரின் இலக்கு.

***************

புலிகள் தற்பொழுது பெரும்பாலும் தற்காப்பு தாக்குதல்களையே செய்து வருகிறார்கள். புலிகள் ஏன் தற்காப்பு தாக்குதல்களை நீண்ட காலமாக செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.



தற்காப்பு தாக்குதலுக்கும், வலிந்த தாக்குதலுக்கும் இருக்கும் பெரிய வேறுபாடு தாக்குதலுக்கு தேவைப்படும் ஆட்பலம். ஒரு மிக பலமான தற்காப்பு வியூகத்தை உடைக்க 5:1 என்ற விகிதத்தில் வலிந்த தாக்குதலுக்கு கூடுதல் படையினர் தேவைப்படுகின்றனர். அது போல தற்காப்பு வியூகத்திற்கு அனுபவம் மிக்கவர்கள் மட்டுமே தேவையில்லை. அனுபவம் இல்லாதவர்களை கூட "நல்ல பயிற்சியுடன்" தற்காப்பு போரில் களம் புகுத்த முடியும். ஆனால் வலிந்த தாக்குதலுக்கு மிகவும் கூடுதல் பலம் தேவைப்படுகிறது. போர் சார்ந்த மதி நுட்பமும், அனுபவமும் தேவைப்படுகிறது.

தற்பொழுது முகமாலை, கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவு என பல முனைகளில் நடைபெறும் போருக்காக தன்னுடைய வலிமையான படையணியை இராணுவம் களத்தில் புகுத்தியுள்ளது. புலிகள் தங்களுடைய வலுவான கமாண்டோ படையணிகளான சார்லஸ் ஆண்டனி படையணி, இம்ரான் பாண்டியன் படையணி போன்றவற்றை போரில் புகுத்தவே இல்லை. They are kept in Reserve. இந்த சூழ்நிலையில் இராணுவம் தொடர்ச்சியாக தங்களுடைய மிக வலிமையான படையணிகளை இந்தப் போரில் புகுத்தி கொண்டிருக்கும் சூழ்நிலையில், போர் நீண்ட காலம் நீடிக்கப்பட்டால் இராணுவம் தன்னுடைய முக்கிய படைகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதைத் தான் தற்பொழுது புலிகள் செய்ய நினைக்கின்றனர். இது தவிர போர் ஏற்படுத்தும் உளவியல் கூறுகளும் (Stress, Psychological Trauma) இராணுவத்திற்கு ஏற்படும்.

இராணுவம் தொடர்ச்சியான வலிந்த தாக்குதல்களில் தங்களுடைய அனுபவம் மிக்க படையணிகளை இழக்கும் பொழுது எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இராணுவம் தோற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இராணுவம் Attrition warfare என்பதை முதலில் முன்னிறுத்தினாலும், புலிகள் தற்பொழுது கிளிநொச்சியில் தங்களுடைய தற்காப்பு அரண் மூலம் செய்வதும் ஒரு வகையில் Attrition warfare தான். இராணுவத்தின் பலத்தை தங்களுடைய தற்காப்பு வியூகம் மூலமே குறைத்து விடலாம் என புலிகள் நினைக்கிறார்கள். தொடர்ச்சியான இராணுவத்தின் தாக்குதல்களை முறியடிப்பதும், அவ்வாறு முடியாத சூழ்நிலையில் பின்நகர்ந்து வேறு இடத்தில் புதிய தற்காப்பு அரண்களை அமைப்பதும் புலிகளின் தந்திரோபயமாக உள்ளது.

கடந்த காலங்களில் கூட யாழ்ப்பாணத்தை நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேறிய பொழுது புலிகள் இவ்வாறே பின்வாங்கினர். ஆனால் பின்வாங்குதல் என்பது இரணுவம் நுழைய ஆரம்பித்தவுடன் உடனே பின்வாங்கி விடுவதல்ல. புலிகள் எப்பொழுதுமே முன்னேறி வரும் இராணுவத்தை எதிர்த்து தற்காப்பு தாக்குதல் தொடுத்து பின்வாங்கி விடுவார்கள். அவ்வாறு தற்காப்பு தொடுக்கும் பொழுது இராணுவத்திற்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்திக் கொண்டும், தங்களுடைய படையணியை தற்காத்துக் கொண்டும் பின்வாங்குவது புலிகளின் வியூகம். இந்தப் போரில் கூட அவர்களின் நோக்கம் அது தான். யாழ்ப்பாணம் கடனீரேரி தொடக்கம், இரணைமேடு வரை ஒரு நீண்ட பாதுகாப்பு அரணை கிளிநொச்சி-பரந்தனை பாதுகாக்க புலிகள் அமைத்துள்ளனர். இந்த பாதுகாப்பு அரணை உடைக்கவே தற்பொழுது பெரும் சண்டை நடந்து வருகிறது. இந்த பாதுகாப்பு அரண் மூலம் இராணுவத்திற்கு பலத்த சேதங்களை ஏற்படுத்துவது புலிகளின் நோக்கம். இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றினால் கூட பலத்த சேதங்களைப் பெற்ற பிறகே கைப்பற்றக்கூடிய சூழ்நிலை தான் உள்ளது.

புலிகளின் இந்த வியூகத்தை சிறீலங்கா இராணுவம் உணர்ந்தே உள்ளது. கடந்த வாரம் நடந்த போரில் அதிகம் பயிற்சி பெறாத பல இராணுவத்தினர் புகுத்தப்பட்டுள்ளனர். அது போல புலிகளின் தற்காப்பு அரணை உடைக்க ஒரே நேரத்தில் மிகவும் அசுர பலத்தை பல முனைகளில் பிரயோகிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதன் முன்னோட்டம் தான் கடந்த வாரம் நடைபெற்றது.

பல முனைகளில் அதிகளவில் இராணுவத்தினர் ஒரே நேரத்தில் புலிகளை தாக்கும் பொழுது புலிகளிடம் பல முனை தாக்குதலை ஒரே நேரத்தில் சமாளிக்க ஆயுத பலம், ஆர்ட்டிலரி பலம் போன்றவை இல்லை என்பது இராணுவத்தின் கணக்கு. கடந்த வாரம் சுமார் 7000 இராணுவத்தினர் பல முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதலில் ஈடுபடுத்த பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு செய்யும் பொழுது புலிகளை ஒரே நேரத்தில் நிலைகுலைய செய்ய முடியும் என இராணுவத்தினர் நம்புகின்றனர். இதில் இராணுவத்திற்கு சாதகங்களும் உள்ளன. பாதகங்களும் உள்ளன. கடந்த வாரம் இராணுவம் பலத்த இழப்புகளை எதிர்கொண்டது. என்றாலும் இத்தகைய தொடர் தாக்குதல்களை அடுத்து வரும் நாட்களில் எதிர்பார்க்க முடியும்.

இராணுவத்தின் இத்தகைய வியூகம் புலிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. தங்களுடைய தற்காப்பு தாக்குதலை நீண்ட நாட்களுக்கு கடத்த முடியாத நிலை புலிகளுக்கு ஏற்படும். அப்படியான சூழ்நிலையில் புலிகள் தங்கள் பதில் தாக்குதலை தொடுக்க வேண்டும். புலிகள் தற்பொழுது அதைத் தான் செய்ய தொடங்கியிருக்கின்றனர்.

இதில் வெற்றி தோல்விகள் பல விடயங்களைப் பெறுத்து உள்ளது. அந்த விடயங்களை அடுத்து வரும் பகுதிகளில் எழுத உள்ளேன்.

படங்கள் : dailymirror.lk
References : sundaytimes.lk, thesundayleader.lk, transcurrents.காம்

Leia Mais…
Saturday, December 20, 2008

கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 1

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி


ஈழத்திலே நான்காவது ஈழப் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போதைய சூழலில் புலிகள் பலவீனமாக உள்ளனர் என்பதாக சிறீலங்கா அரசு கூறி வருகிறது. புலிகள் தங்கள் வசம் இருந்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை இழந்துள்ள சூழலில் இந்தக் கருத்தை பல போர் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழர்கள், புலிகள் பலவீனமாக இல்லை, இது அவர்களின் தந்திரோபாய பின்நகர்வு மட்டுமே என கூறி வருகின்றனர். புலிகள், தங்கள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை இழந்துள்ள சூழ்நிலையில் தமிழர்களின் இந்த வாதம் வெறும் நம்பிக்கையாகவே பலருக்கும் தெரிகிறது. கடந்த காலங்களில் இருந்த சூழ்நிலைக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளதாக சிறீலங்கா கூறுகிறது. எனவே போரின் போக்கினை கடந்த காலங்களில் மாற்றியது போல தற்பொழுது புலிகளால் மாற்றி விட முடியாது என சிறீலங்கா அரசு நம்புகிறது. இதற்கு சிறீலங்கா முன்வைக்கும் காரணங்களும் வலுவாகவே உள்ளது.

புலிகள் வசம் இருந்த பெரும்பாலான இடங்கள் கைப்பற்றப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக கிளிநொச்சியை கைப்பற்ற நடக்கும் இந்தப் போரில் கடுமையான சேதங்களை சிறீலங்கா இராணுவம் இந்த வாரம் அடைந்திருக்கிறது. இந்த வாரம் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட படையினரை சிறீலங்கா இராணுவம் இழந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட படையினர் பலத்த காயங்கள் அடைந்துள்ளனர். இத்தகைய சூழலில் கிளிநொச்சிக்காக நடக்கும் இந்தப்போரினை இரண்டாம் உலகப்போரில் நடந்த ஸ்டாலின்க்ரேட் போருடன் (The Battle of Stalingrad) இந்திய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியான பி.ராமன்ஒப்பிடுகிறார் . பி.ராமன் இவ்வாறு கூறுவதற்கு முன்பாகவே ஈழத்தமிழர்கள் கிளிநொச்சியை ஸ்டாலின்க்ரேடுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதம் கிளிநொச்சி ஸ்டாலின்க்ரேட் ஆகும் வாய்ப்பு குறைவு எனக்கூறிய பி.ராமன் டிசம்பரில் அதனை ஒப்புக்கொண்டுள்ளார் போலும்.

The Battle of Stalingrad என்பது இரண்டாம் உலகப்போரில் சோவியத்யூனியனில்இருந்த ஸ்டாலின்க்ரேட் நகருக்காக நடந்த சண்டை. சோவியத்யூனியன் படையினருக்கும், ஜெர்மனியின் நாஸிப் படையினருக்கும் இடையே இந்தப் போர் நடைபெற்றது. இந்தப் போரினை இரண்டாம் உலகப்போரின் முக்கிய திருப்புமுனையாக கூறுவார்கள். சுமார் 6 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த சண்டையில் ஸ்டாலின்க்ரேட் நகரத்தை இன்று கைப்பற்றுவோம், நாளை கைப்பற்றுவோம் எனக்கூறிக்கொண்டே இருந்த நாஸிப் படையினர், இறுதியில் தோற்றுப் போயினர். இந்தப் போர் இரண்டாம் உலகப்போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

கிளிநொச்சி மற்றொரு ஸ்டாலின்க்ரேட் ஆக முடியுமா ? தெரியவில்லை. ஆனால் சிறீலங்கா இராணுவம் நினைத்தது போல கிளிநொச்சி வெற்றி அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை கிளிநொச்சி போர் தெளிவுபடுத்தி வருகிறது.

நான்காவது ஈழப் போர் சார்ந்த போரியல் ஆய்வாகவே இந்தக் கட்டுரை தொடரை எழுத இருக்கிறேன். என்றாலும் ஒரு விடயத்தை இங்கே தெளிவுபடுத்த வேண்டும். எனக்கு இராணுவம் குறித்து அதிகம் தெரியாது. ஈழத்திலே நடக்கும் போர் குறித்த ஒரு சக தமிழனின் அச்சம்/கவலை இவற்றுடனே இந்தப் போரினை கவனித்து வருகிறேன். அது சார்ந்த விடயங்களை தேடி படிக்கிறேன். அவ்வாறு கிடைத்த தகவல்களை என்னுடைய கருத்துகளுடன் முன்வைப்பது தான் இந்தக் கட்டுரை தொடரின் நோக்கம்.

*********

கிளிநொச்சி போர் குறித்து பார்ப்பதற்கு முன்பு இந்தப் போர் ஆரம்பத்தில் தொடங்கிய சூழலை கவனிக்க வேண்டும்.

Attrition warfare என்பது எதிரியின் பலத்தை படிப்படியாக குறைத்து, பிறகு எதிரியை நிர்மூலமாக்கும் ஒரு போர் நுட்பம். எதிரியின் பலத்தை படிப்படியாக குறைக்கும் பொழுது போரிடும் பலத்தை எதிரி இழக்கும் பொழுது வெற்றி கிடைக்கும். இந்த நுட்பத்தை தான் சிறீலங்கா இராணுவம் மேற்கொண்டது.

புலிகளின் பலத்தை படிப்படியாக குறைப்பது சிறீலங்கா இராணுவத்தின் நோக்கமாக இருந்தது. புலிகளின் பலம் என்பது அவர்களின் போர் வீரர்கள், ஆயுதங்கள் போன்றவை. எனவே முதலில் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் வழியை சிறீலங்கா இராணுவம் தடுக்க முனைந்தது. புலிகளுக்கு முல்லைத்தீவு கடல்வழியாகவே ஆயுதங்கள் வரும். இந்த வழியை அடைப்பது தான் சிறீலங்கா அரசின் முதல் நோக்கமாக இருந்தது. இந்தியா/அமெரிக்கா போன்ற நாடுகள் அளித்த அதிநவீன உளவு நுட்பங்கள் மூலம் புலிகளுக்கு ஆயுதங்களை கொண்டு வந்த பல கப்பல்களை சிறீலங்கா கப்பற்படை அழித்தது. இதனால் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் முக்கிய வழி அடைக்கப்பட்டது. இது புலிகள் தொடர்ந்து போரிடும் வலுவை குறைத்தது.

அடுத்த இலக்காக புலிகளின் முக்கிய முகாம்கள், ஆயுதக்கிடங்குகள் போன்றவற்றை விமானங்கள் மூலம் குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதலில் புலிகளின் பல முகாம்களும், ஆயுதக்கிடங்குகளும் அழிக்கப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் கூறுகிறது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட பல இடங்கள் பொதுமக்கள் உள்ள இடங்களே என புலிகள் கூறுகின்றனர். புலிகளின் மறைவிடம் என்று கூறி ஆதரவற்ற குழந்தைகள் இருந்த செஞ்சோலை இல்லத்தை சிறீலங்கா இராணுவம் தாக்கியது போன்ற துயரமான சம்பவங்கள் பல நிகழ்ந்தன என்பதை மறுக்க முடியாது.

இதையெடுத்து புலிகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியை இராணுவம் மேற்கொண்டது. சுமார் 10,000 புலிகளை தாங்கள் கொன்று விட்டதாக இராணுவம் கூறுகிறது. எப்படி இந்த எண்ணிக்கை முன்னிறுத்தப்படுகிறது என்று பார்க்கும் பொழுது சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர் வியூகம் நமக்கு புரியும். கடந்த காலங்களில் புலிகள் வசம் இருந்த இடங்களை கைப்பற்றுவதற்காக மிகப் பெரிய அளவிலான தாக்குதலை இராணுவம் தொடுத்து உள்ளது. இதனால் இராணுவத்தின் முன்னேற்றத்தை தங்களின் வியூக அமைப்பினால் புலிகள் முறியடித்து உள்ளனர். இராணுவத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

ஆனால் தற்போதைய போரில் பொன்சேகா சிறீலங்கா இராணுவத்தின் வியூகங்களை மாற்றி அமைத்தார். பெரும் அளவிலான படையெடுப்புகள் எதையும் அவர் முன்னெடுக்கவில்லை. மாறாக சிறு குழுக்களை கொண்ட படைகளை தான் தாக்குதலில் பயன்படுத்தினார். ஆனால் தாக்குதல் தொடர்ச்சியாக இருக்கும். ஒரு சிறு குழு புலிகளின் முன்னரங்கப்பகுதிகள், பதுங்கு குழிகளை தாக்கும். தாக்கும் படைக்கு புலிகள் வசம் இருக்கும் பகுதிகளை பிடிக்கும் நோக்கம் இருக்காது. ஆனால் அவர்களின் இலக்கு புலிகளின் பலத்தை குறைப்பது. அதனால் புலிகளின் இலக்குகளை தாக்கி விட்டு பின்வாங்கி விடுவார்கள். இதனை தினமும் செய்யும் பொழுது புலிகளின் எண்ணிக்கை குறையும். ஆயுதங்களும் குறையும். இவ்வாறு படிப்படியாக குறைக்கப்பட்டு பின் ஒரு மிகப்பெரிய தாக்குதலை தொடுப்பது பொன்சேகாவின் வியூகமாக இருந்தது. புலிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்பட்டு ஆயுதங்கள் வரும் வழிகளும் தடைப்பட்டு விட்ட நிலையில் புலிகள் பலம் இழப்பார்கள் என்பது தான் பொன்சேகாவின் வியூக அமைப்பு.

இதன் மூலமே தினமும் பல புலிகள் கொல்லப்பட்ட நிலையில் புலிகளின் பலத்தில் பெரும்பகுதியை தாங்கள் குறைத்து விட்டதாக சிறீலங்கா இராணுவம் கூறுகிறது.

பொன்சேகாவின் வியூக அமைப்பு இவ்வாறு இருந்தது என்றால் புலிகளின் வியூகம் இதனை எதிர்கொள்ளவே செய்தது. பொன்சேகாவின் வியூகத்திற்கு ஏற்ப தங்களுடைய வியூகங்களையும் புலிகள் அமைத்திருந்தனர்.

*********

புலிகள் போன்ற சிறு கொரில்லா அமைப்பு ஒரு மரபு சார்ந்த இராணுவத்தை எதிர்கொண்டு வருகிறது என்று சொன்னால் அதற்கு காரணம் புலிகள் மேற்கொள்ளும் "பலமான"வியூகங்கள் தான். இதனை சிறீலங்கா இராணுவத்தினரும், இந்திய இராணுவத்தினருமே ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு முன்பாக நடந்த மூன்றாவது ஈழப் போரில் புலிகள் அடைந்த வெற்றிகளே இதற்கு சாட்சிகளாக விளங்குகின்றன.

ஆனையிறவு படைத்தளம் மீது புலிகள் கொண்ட வெற்றியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. ஆனையிறவு யாழ்ப்பாண தீபகற்பத்தை வன்னி பெருநிலத்துடன் இணைக்கும் சிறு நிலப்பகுதி. யாழ் தீபகற்பத்திற்கான வாயில் என்று இதனைச் சொல்லலாம். இந்த நிலப்பகுதிக்காக பலப் போர்கள் நடந்துள்ளன. கேந்திர முக்கியத்துவம் உள்ள இடம் இது. இங்கு தான் ஆனையிறவு படைத்தளம் என்ற சீறிலங்கா இராணுவத்தின் மிகப் பெரிய முகாம் இருந்தது. பலத்த பாதுகாப்பான முகாம். பலத்த என்பதை "பலப் பல" மடங்கு என்று சொல்லலாம். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்டது இந்த முகாம். இந்த முகாமின் பாதுகாப்பு வளையங்களை பார்வையிட்ட அமெரிக்க, பிரிட்டன் (UK) இராணுவ வல்லுனர்கள் இதனை கைப்பற்ற வேண்டுமானால் விமானப் படை வேண்டும். மரபுச் சார்ந்த படையாக இருந்து முப்படைகளையும் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளின் கூட்டு படைத்திறன் மூலமே இந்த முகாமை கைப்பற்ற முடியும் என தெரிவித்திருந்தனர். புலிகள் போன்ற கொரில்லா இயக்கங்களால் இந்த முகாமை எப்பொழுதும் கைப்பற்ற முடியாது என்று கூறினர். இந்த முகாமில் சுமார் 25,000 படை வீரர்கள் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்ட இந்த முகாமை புலிகளின் 5000 பேர்களை மட்டுமே கொண்ட படை கைப்பற்றியது, உலக இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. மரபுச் சார்ந்த போர் குறித்த இராணுவ நோக்கர்களின் கருத்துகளை மாற்றி எழுதிய நிகழ்வு இது. இந்தப் போரினை திட்டமிட்டு நடத்தி வெற்றி பெற வைத்தவர் புலிகளின் தலைவர் பிரபாகரன். விமானப் படை இல்லாமலேயே ஒரு பெரிய பாதுகாப்பு அரணை உடைத்து புலிகள் இந்த வெற்றியை கடந்தப் போரில் பெற்றனர்.

ஆனையிறவை இழந்தது சிறீலங்கா இராணுவத்திற்கு மிகப் பெரிய உறுத்தலாகவே இருந்து வந்துள்ளது. இம் முறை நான்காவது ஈழப் போர் தொடங்கிய பொழுது சிறீலங்கா இராணுவத்தின் நோக்கம் ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றுவது என்பதாகவே இருந்தது. ஆனையிறவுக்கும், சிறீலங்கா இராணுவத்தின் முதல் முன்னரங்கப்பகுதியான முகமாலைக்கும் இடையேயான தூரம் வெறும் 14 கி.மீ தான். இந்தப் பகுதி மிகவும் குறுகலான ஒரு நிலப்பகுதி. கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான இந்தப் பகுதியின் அகலம் வெறும் 7கி.மீ தான். கிளாலி முதல் முகமாலை வரை ஒரு பகுதியும், நாகர்கோவில் அடுத்தும் உள்ளது (படத்தில் பார்க்கலாம்)



முகமாலையில் இருந்து ஆனையிறவை கைப்பற்றுவது இராணுவத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறை இராணுவம் முன்னேற முனைந்த பொழுதும் புலிகள் மிக பலமான ஒரு பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனால் தங்கள் நிலைகளில் இருந்து இராணுவத்தால் முன்னேற முடியாத சூழல் தான் நிலவி வந்தது. இன்றைக்கும் நிலவி வருகிறது. கடந்த வாரம் கூட இராணுவம் முன்னேற முனைந்த பொழுது மிகவும் கடுமையான சேதங்களை அடைந்தது.
சிறீலங்கா இராணுவ நிலைகளில் இருந்து 14 கி.மீ. தூரம் கொண்ட ஆனையிறவை நெருங்க முனைந்த சிறீலங்கா இராணுவம், முகமாலையில் சில மீட்டர் தூரங்களே கொண்ட புலிகளின் முதல் முன்னரங்கப்பகுதிகளையே நெருங்க முடியவில்லை.

ஆரம்பகாலங்களில் இருந்தே இராணுவத்தின் நோக்கம் ஆனையிறவு தான். கிளிநொச்சி புலிகளின் தலைநகரம் என்பதாக கூறப்பட்டாலும், கிளிநொச்சிக்கு பெரிய இராணுவ முக்கியத்துவம் இல்லை. ஆனையிறவுக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது. தற்பொழுது நடந்து வரும் போர் கூட கிளிநொச்சிக்கானது என்பதை விட ஆனையிறவு நோக்கியே என கூற முடியும். ஆனையிறவை முகமாலையில் இருந்து கைப்பற்ற முடியாத இராணுவம் இப்பொழுது தென்பகுதிகளில் இருந்து பிடிக்க முனைகிறது. பரந்தன், கிளிநொச்சி, பூநகரி போன்ற பகுதிகள் கைப்பற்றபட்டால் இராணுவத்திற்கு ஆனையிறவை கைப்பற்றுவது சுலபமாக இருக்கும். பூநகரி கைப்பற்ற பட்ட நிலையில் A9 நெடுஞ்சாலையில் இருக்கும் பரந்தன், கிளிநொச்சி போன்றவையும் இராணுவம் வசம் வந்தால் ஆனையிறவு இலக்கு சுலபமாகி விடும். அவ்வாறு நேர்ந்தால் புலிகள் பின்வாங்கி முல்லைத்தீவு பகுதிக்கு செல்ல நேரிடும்.

இது தான் இராணுவத்தின் நோக்கம்.

ஆனையிறவு புலிகள் வசம் இருக்கும் வரை இந்தப் போர் முடிவுக்கு வராது.

புலிகள் வசம் இருந்த இடங்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய இராணுவம், ஏன் முகமாலை தொடக்கம், ஆனையிறவு வரையிலான 14 கி.மீ கொண்ட இடத்தை கைப்பற்ற முடியவில்லை ? முகமாலையில் நடந்த பல சண்டைகளில் இராணுவம் சுமார் 1000பேரை இழந்திருக்க கூடும். பலர் காயம் அடைந்துள்ளனர். இங்கு தான் நாம் புலிகளின் தற்காப்பு வியூகங்களை கவனிக்க வேண்டியுள்ளது.

புலிகளின் முகமாலை தற்காப்பு வியூகத்தை இரண்டாம் உலகப்போரில் நடந்த ஆலமெய்ன்(El Alamein) போரில் அமைக்கப்பட்டிருந்த தற்காப்பு வியூகங்களுடன்ஒப்பிடுகிறார்கள் . ஐ ஆலமெய்ன் எகிப்தில் இருக்கும் ஒரு சிறு நகரம். இந்தப் பகுதியில் நடந்த போர் இரண்டாம் உலகப்போர் அதிகம் பேசப்பட்டது. அச்சு அணி நாடுகளான ஜெர்மனி-இத்தாலி படைகளுக்கும், நேசநாடுகளாக இங்கிலாந்து, பிரான்சு போன்ற படைகளுக்கும் இடையே நடைபெற்றஇந்தப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றன. "Before Alamin we had no victory and after it we had no defeats" என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

முகமாலையில் அத்தகைய ஒரு தற்காப்பு அமைப்பினை புலிகள் அமைத்துள்ளதால் தான் மிகக் குறுகிய அந்த நிலப்பகுதியை பல முறை முனைந்தும் இராணுவத்தால் கைப்பற்ற முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து புலிகளின் அந்த வியூக அமைப்பை உடைக்க இராணுவம் முயன்று வருகிறது.

இரண்டாம் பகுதி


****************

போர் மிகவும் கொடுமையானது என்பதை தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் நான்காவது ஈழப் போர் தெளிவாகவே வெளிப்படுத்தி வருகிறது. போரில் இறந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரின் கோரமான படங்களைப் பார்க்கும் பொழுது வேதனையாக உள்ளது. சிங்கள/தமிழ் இளைஞர்கள் என இரண்டு தரப்புமே இந்தப் போரில் பலியாகி கொண்டிருக்கின்றனர். இந்தப் போரில் யாருக்கும் உறுதியான வெற்றி கிடைக்கப்போவதில்லை என்றே போர் வியூகங்கள் கூறுகின்றன. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டால் கூட போர் முடியப்போவதில்லை. புலிகள் வசம் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. அவ்வாறான சூழலில் இத்தனை உயிர்கள் ஏன் பலியாக வேண்டும் ? அதற்கு ஏதேனும் அர்த்தங்கள் உள்ளதா போன்ற கேள்விகளை எழுப்பியாக வேண்டும். இந்தக் கேள்விகளுக்கு தற்போதைய சூழலில் எந்த அர்த்தமும் இல்லை. இருந்தாலும் போர் ஏற்படுத்தும் பாதகங்களை எழுப்பி போரின் கொடுமைகளை பேசியாக வேண்டும்.

Leia Mais…
Friday, December 19, 2008

சீமான் கைது, ராஜீவ் காந்தி, பேச்சுரிமை

தமிழகத்திலே யாரைப் பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு என யாரைப் பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். இந்திய ஜனநாயகம் அதனை தாங்கிக் கொள்ளும். இந்திய ஜனநாயகம் கொடுத்திருக்கிற அந்த அசாத்திய பேச்சுரிமை நம்மை புல்லரிக்க வைக்கும். ஆனால் ராஜீவ் காந்தியை மட்டும் "தமிழகத்தில்" விமர்சனம் செய்து விட முடியாது. உடனே தமிழகத்தின் கதர்வேட்டிகள் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்க தொடங்கி விடுவார்கள். ஒரு மிக சாதாரண விமர்சனத்திற்கு கூட தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இந்த விடயத்தில் சீமான் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் சீமானை நான் பாராட்டியாக வேண்டும். தமிழகத்தின் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், "முற்போக்கு" எழுத்தாளர்கள், "மாற்று" எழுத்தாளர்கள், சமுதாயத்தை புரட்டி போடும் சிந்தனையாளர்கள் என யாருக்குமே ராஜீவ் காந்தி மீது எந்த விமர்சனமும் வைக்க கூடாது என்ற தமிழகத்தின் காட்டு தர்பாரினை எதிர்க்க வேண்டும் என்ற தைரியம் வந்ததில்லை. சீமான் முதல் முறை கைது செய்யப்பட்ட பிறகும், இம் முறை பேசினால் "மறுபடியும்" கைது செய்யப்படுவோம் என தெரிந்தும் ராஜீவ் காந்தியை விமர்சித்து பேசியுள்ளார். 

சீமான் விளம்பரத்திற்காக பேசினார் என்று சொன்னால் அதனை நம்புவதற்கில்லை. வைகோ, நெடுமாறான் போன்றோர் கைதினையே எந்த எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான் தமிழர்கள். இவ்வாறு பேசுவதால் சீமானுக்கு எந்தப் புதிய விளம்பரமும் கிடைக்கபோவதில்லை. ஆதாயங்கள் கூட இல்லை. பாதகங்கள் தான் அதிகம். சீமானின் கைதினை யாரும் எதிர்க்க போவதில்லை. இரண்டு நாள் அறிக்கைகள், பிறகு தங்கள் வழக்கமான வேலைகள் என அரசியல்வாதிகள் மாறி விடுவார்கள். காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்திருப்பது போல தேசிய பாதுகாப்புச் சட்டம் வேறு சீமானை பயமுறுத்துகிறது.

கடந்த முறையும் சரி, இம் முறையும் சரி சீமான் இந்திய தேசியத்தை பிளவு படுத்தவோ, இந்திய தேசியத்தை மறுத்தோ கூட பேசவில்லை. ராஜீவ் படுகொலையை கடந்து ஈழப் பிரச்சனையை பார்க்க வேண்டிய தேவையை தான் சீமான் முன்னிறுத்தினார். ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படையை அனுப்பிய நோக்கத்தினை தான் கேள்விக்கு உட்படுத்தினார். ராஜீவ் காந்தியின் அமைதிப்படை ஈழத்திலே செய்த போர் குற்றங்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடக்கம் லண்டன் பத்திரிக்கைகள் வரை இந்திய அமைதிப்படை ஈழத்திலே செய்த வெறியாட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளன. இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திய அமைதிப்படையின் வெறியாட்டம் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை தமிழகத்திலே பேசக்கூடாது, பேசினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும், சிறையில் போடுவோம் என்பது ஜனநாயக நாட்டின் அறிகுறி அல்ல. சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு.

அது போல சீமான் பயங்கரவாத இயக்க தலைவரை ஆதரித்து பேசினார் என்பதாக மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சீமான் அவ்வாறு பேசவில்லை. பிரபாகரன் மேல் தனக்கு இருக்கும் அபிமானத்தை வெளிப்படுத்தினார். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த பேச்சுரிமை கூட இல்லையா ? இந்திய அரசியல் சாசனம் அமைதியான வழியில் குரல் எழுப்ப அனுமதிக்கிறது. வைகோ கைது செய்யப்பட்ட வழக்கில் கூட நீதிமன்றம் பேச்சுரிமையை வலியுறுத்தியுள்ளது. பிரபாகரனுக்கு ஆதரவாக மட்டுமில்லாமல், விடுதலைப் புலிகளை ஆதரித்தும் கூட அமைதியாக தங்கள் கருத்துக்களை பேசலாம், எழுதலாம். அவ்வாறான சூழலில் காங்கிரஸ் கட்சியை அமைதிப்படுத்த சீமானை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

கலைஞர் குறித்து நாம் வைக்கும் எந்த விமர்சனத்தையும், ஜெயலலிதா ஆட்சியிலே இது போல பேசி விட முடியுமா என்ற வாதம் மூலம் தமிழகத்திலே திமுக ஆதரவாளர்கள் திமுகவின் ஜனநாயக, தமிழ் விரோதப் போக்கினை நியாயப்படுத்த முனைகின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் நடந்த சர்வாதிகாரப் போக்கினை காட்டி கலைஞர் செய்து கொண்டிருக்கும் ஜனநாயக விரோதப் போக்கினை நாம் நியாயப்படுத்தி விட முடியாது. ஜெயலலிதா தமிழர் அல்ல என கலைஞரே கூறியிருக்கிறார். ஆனால் கலைஞரை "தமிழினத்தலைவர்" என திமுகவினர் கூறுகிறார்கள் (திமுகவினர் மட்டும் தான் கூறுகிறார்கள்). தமிழினத்தலைவராக கூட தேவையில்லை. குறைந்தபட்சம் ஒரு தமிழராக தமிழகத்திலே ஈழத்தமிழர் பிரச்சனையை முழுமையாக விவாதிக்க/பேச ஒரு களம் அமைக்க திமுக ஏன் தொடர்ந்து மறுத்து வருகிறது ? காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு சீமானை கைது செய்ய வேண்டும் என்றவுடன் பாய்ந்து சென்று சீமானை கைது செய்யும் கலைஞர், தில்லிக்கு சென்று "அவரே" முன்வைத்த கோரிக்கைகளை காங்கிரஸ் இது வரை நிறைவேற்ற வில்லையே என்ற கேள்வியை எழுப்பி இருக்கலாம். ஓ...அது கலைஞர்-காங்கிரஸ் கூட்டு நாடகம் அல்லவா. அதனால் தான் கலைஞர் அமைதியாக உள்ளார். டெல்லியின் எடுபிடிகள் தமிழக காங்கிரஸ் மட்டும் அல்ல. திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தான்.

சீமான் மீது எனக்கு விமர்சனமும் உண்டு. சீமான் மீது மட்டும் அல்ல. பொதுவாக தமிழகத்திலே இருக்கும் அனைத்து தலைவர்கள் மீதான எனது விமர்சனமும் கூட. ஈழப் பிரச்சனையை உணர்ச்சிமயமாக பேசி தயவு செய்து பிரச்சனையை திசை திருப்பாதீர்கள். இது உணர்வுப்பூர்வமான பிரச்சனை தான். அதே நேரத்தில் இதனை அமைதியான முறையில் தமிழகத்து மக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டும். உணர்ச்சிமயமாக பேசுவதை விடுத்து பிரச்சனைகளை பேசுங்கள். ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை பேசுங்கள். இந்திய அமைதிப்படை செய்த போர் குற்றங்கள் குறித்து ஆதரப்பூர்வமாக பேசுங்கள். உணர்ச்சிமயமாக பேசுவது தமிழ் மக்களின் எதிரிகளுக்கு தான் சாதகமாக அமைந்து விடுகின்றது. தமிழர்களுக்கு இதனால் எந்த நன்மையும் இல்லை.

Leia Mais…
Saturday, November 29, 2008

காஷ்மீர் விடுதலைப் போராட்டமும், மும்பை பயங்கரவாத தாக்குதலும்...

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை மையப்படுத்தி காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தினை சிதைக்கும் ஒரு பிரச்சாரத்தை ஹிந்து அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஹிந்து அடிப்படைவாதிகளுக்கு இந்தியாவை ஒரு ஹிந்து தேசமாக அமைத்திருப்பதும், காஷ்மீர் மக்களின் நியாயமான விடுதலை கோரிக்கையை சிதைப்பதும் முக்கிய நோக்கமாக உள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத தங்களின் மதம் சார்ந்த பயங்கரவாதத்தின் கோரமுகத்தை காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்து சொல்வதன் மூலம் நியாயப்படுத்த பார்க்கின்றனர்.

இங்கே சில உண்மைகள் மூடி மறைக்கப் படுகின்றன.

1. இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் பாக்கிஸ்தானை சார்ந்த இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள். அல்கொய்தா இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட
லக்க்ஷ்ர்-இ-தொய்பா அமைப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த அமைப்பு காஷ்மீர் விடுதலை என்ற நோக்கத்தை தன்னுடைய முகமூடியாக கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்தையே முன்னிறுத்துகிறது.

2. இந்த தாக்குதலில் ஒரு காஷ்மீரி கூட ஈடுபடவில்லை. கராச்சியில் இருந்த வந்த பாக்கிஸ்தானியர்கள் என தெரிகிறது. பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பாக்கிஸ்தானியர்கள் சிலரும் உள்ளனர் என தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.

3. காஷ்மீர் மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எந்த ஆயுதங்களும் ஏந்தாமல் தான் தங்கள் விடுதலையை முன்னெடுத்தனர். அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை தற்பொழுது "மனித நேயம்" கொண்டவர்களாக மாறிவிட்ட ஒரு இந்திய பிரஜையும் கண்டிக்கவில்லை.

4. காஷ்மீரில் செயல்படும் ஆயுதக்குழுக்களில் பெரும்பாலானவை பாக்கிஸ்தானின் தூண்டுதலில் செயல்பட்டவையே.

5. காஷ்மீரில் இருந்த ஆயுதக்குழுவான காஷ்மீர் விடுதலை முண்ணனி (Jammu and Kashmir Liberation Front - JKLF) போன்றவை பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்த வந்த இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாத் அமைப்புகளால் தங்கள் பலத்தை இழந்தன. JKLFன் தலைவர் யாசின் மாலிக் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளார். மதசார்பின்மையை வலியுறுத்திய தலைவர்களில் யாசின் மாலிக் முக்கியமானவர். (தற்பொழுது கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தில்லி
மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்).

உண்மைகள் இவ்வாறு இருக்க ஹிந்து அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இணைந்து காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தின் முகத்தை தற்பொழுது சிதைத்து கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து மிக விரிவாக எழுத தற்பொழுது நேரமில்லை. அதனால் இதே வகையிலான கருத்துக்களைச் சார்ந்து முன்பு நான் எழுதிய கட்டுரைகளை இங்கே சுட்டி காட்ட விரும்புகிறேன்.

காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை

இரு மாதங்களுக்கு முன்பாக காஷ்மீரில் காஷ்மீர் மக்கள் முன்வைத்த போராட்டங்களை குறித்த எனது பதிவு
காஷ்மீரில் மீண்டும் விடுதலை முழக்கம்

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு என்ன ?

என்னுடைய காஷ்மீரின் விடுதலை கட்டுரைகள் - 1, 2, 3, 4, 5, 6

தொடர்புள்ள என்னுடைய மற்றொரு பதிவு

இஸ்லாமிய அடிப்படைவாதமும், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டமும்

ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தையும், மத ரீதியிலான அடிப்படைவாதத்தின் வேறுபாட்டினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேட்சேவுக்கும், பகத்சிங்கிற்கும் வேறுபாடுகள் உள்ளன. இருவருமே கொலை குற்றவாளிகள் தான். ஆனால் ஒருவர் மத அடிப்படைவாதி, மற்றொருவர் விடுதலைப் போராளி...

Leia Mais…
Thursday, November 27, 2008

இஸ்லாமிய அடிப்படைவாதமும், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டமும்

மும்பையில் இது வரை பார்த்திராத வண்ணம் மிகவும் கோரமான பயங்கரவாதச் செயல்களை பயங்கரவாதிகள் நிக்ழ்த்தியுள்ளனர். ஒபாமா அமெரிக்க குடியரசு தலைவராக பதவியேற்பதற்கு முன்பாக ஏதாவது பயங்கரவாதச் சம்பவத்தினை அல்கொய்தா நிகழ்த்தும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே அமெரிக்க, பிரிட்டிஷ், இஸ்ரேலியர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரயில் நிலையங்களில் இருந்த அப்பாவி மக்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த தாக்குதல்கள் மனித நேயம் உள்ள யாரையும் பதறவே செய்யும். இந்த தாக்குதல்களில் பலியாகிய மக்களுக்கு - அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்.

இந்த நேரத்தில் இந்திய உளவு நிறுவனங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. இந்த தாக்குதல்களை 9/11 உடன் ஒப்பிடுகிறார்கள். 9/11க்கு முன்பான காலங்களில் அமெரிக்காவில் பெரிய தாக்குதல்கள் நிகழ வில்லை. அதற்கு பிறகு ஒரு தாக்குதல் கூட நடக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் எத்தனை தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது கவலை ஏற்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல்வேறு குண்டுவெடிப்புகளில் இந்தியாவில் சுமார் 500க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஈராக்கிற்கு அடுத்ததாக இந்தியாவில் தான் இவ்வளவு அதிகப் பேர் குண்டு வெடிப்புகளில் பலியாகியுள்ளதாக ஒரு பத்திரிக்கை கூறுகிறது. தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் உளவு நிறுவனங்கள் என்ன தான் செய்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பியாக வேண்டும்.

இன்றைய தினமணி தலையங்கத்தில் எழுப்பபட்டிருக்கும் சில கேள்விகள்நியாயமானவை...

பத்து இடங்களில் கடந்த பத்து மாதங்களாகத் தொடர்ந்து குண்டுகள் வெடித்தும், பல உயிர்கள் பலியாக்கப்பட்டும், அறிக்கை கொடுப்பதைத் தவிர வேறு எதுவுமே செய்யாமல் குண்டுக்கல்லாக ஓர் உள்துறை அமைச்சர் இருக்கிறார் என்பது தான் அவர்களது தைரியம். அவரைப் பார்த்தாலும் சரி, அவருடைய செயல்பாடுகளும் சரி, இந்தியாவில் நாம் எந்தவித பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டாலும் அதைப்பற்றி சற்றும் கவலைப்படாத உள்துறை அமைச்சகம் இருக்கிறது என்பதுதான் அவர்களுக்குத் துணிவைக் கொடுத்திருக்க முடியும். இத்தனைக்குப் பிறகும் உள்துறை அமைச்சரை மாற்ற வேண்டும் என்று பிரதமரும் நினைக்கவில்லை, தனது கையாலாகத் தனத்தை ஒத்துக்கொண்டு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அமைச்சரும் நினைக்கவில்லை. என்ன பொறுப்பற்றதனம்?

கடந்த பத்து ஆண்டுகளாக, சூப்பர் உள்துறை அமைச்சராகவும், நிழல் பிரதமராகவும் செயல்படுபவர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என்கிற பதவியை வகிப்பவர். அவர் எதுவுமே பேசக்காணோமே, ஏன்? இப்படித்தான் தொடர்ந்து பயங்கரவாதச் செயல்கள் நடக்கும் என்றால், எம்.கே. நாராயணன் ஏன் தேசியப் பாதுகாப்புச் செயலராகத் தொடர வேண்டும்? அப்படி ஒரு பதவியின் அவசியம்தான் என்ன? இத்தனைக்கும் அவர் முன்னாள் உளவுத்துறைத் தலைவர். அந்தப் பதவிக்கு எந்தவிதப் பொறுப்பும் கிடையாதா?

பாவம் எம்.கே.நாராயணன். அவரை எதுவும் சொல்லாதீர்கள். அவர் இலங்கைப் பிரச்சனையின் ஸ்பெஷலிஸ்ட் (specialist on Sri Lankan affairs). அவ்வளவு தான். அவர் கவனம் முழுவதும் சிறீலங்கா இராணுவம் கிளிநொச்சியையும், முல்லைத்தீவினையும் எப்படி பிடிக்கப் போகிறது என்பதில் தான் உள்ளது. ஆனால் தேவைப்படும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுவார்.

இந்தியாவில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் ஒரு ஆண்டில் சுமார் 500 அப்பாவி மக்கள் இத்தகைய குண்டுவெடிப்புகளில் பலியாகியுள்ளனர். இந்தியாவில் பாதுகாப்பு பலவீனமாக உள்ளதால் தான் அல்கொய்தா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என இங்குள்ள தொலைக்காட்சிகளில் கூறப்படுகிறது. அல்கொய்தாவோ அல்லது பாக்கிஸ்தானில் உள்ள வேறு ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளோ, எதுவாக இருந்தாலும் இந்திய அரசாங்கம் வழக்கம் போல பாக்கிஸ்தானை குற்றம் கூறி தப்பி விட முடியாது. பாக்கிஸ்தானில் இருந்து வந்து இருந்தாலும் மும்பை கடற்கரை வழியாக வரும் அளவுக்கு பாதுகாப்பில் இருந்த பிரச்சனைகள் குறித்த கேள்வி எழுகிறது.

தமிழக கடற்கரையோரங்களில் பலமான கண்காணிப்பு கடற்ப்படையால் மேற்கொள்ளப்படுகிறது. புலிகளுக்கு வரும் கப்பல்கள் பற்றிய உளவு செய்திகளை கூட சிறீலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா கொடுத்து உதவுகிறது. அவ்வளவு அசுரபலம் கொண்ட இந்தியாவால், இந்தியாவின் முக்கிய நகரமான மும்பையில் கடல்வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் தொடுத்து இருப்பதை ஏன் தடுக்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது ?

இந்தியா தன்னை "உலகின் அடுத்த வல்லரசு" என்பதை முதலில் மறக்க வேண்டும். அமெரிக்கா உலகின் வல்லரசு என்றால் அது தன்னுடைய நாட்டினை சரியாக பாதுகாக்கிறது. 9/11க்குப் பிறகு அமெரிக்க சுரங்க ரயில்களில் (Subway) எத்தகைய பாதுகாப்பு உள்ளது என்பது இங்கிருப்பவர்களுக்கு தெரியும். தன்னுடைய நாட்டினை சரியாக பாதுகாக்க முடிந்த அமெரிக்காவிற்கு இணையாக இந்தியா தன்னை வல்லரசாக நினைப்பதால் தான் சோமாலியாவிற்கு சென்று கடற்கொள்ளையர்களை தாக்குகிறது. ஆனால் தன்னுடைய கடல் எல்லைக்கு அருகே இருந்து வரும் பயங்கரவாதிகளின் கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை. சோமாலியாவிற்கு சென்று கப்பல் முதலாளிகளை பாதுகாக்க தெரிந்த இந்தியாவால் அப்பாவி தமிழக மீனவர்களை காப்பாற்ற முடிவதில்லை. இப்பொழுது மும்பையையும் காப்பாற்ற முடியவில்லை.

*******

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பயங்கரவாதம் என வரையறை செய்வதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் பயங்கரவாதம் என்று வரும் பொழுது எல்லாவற்றையும் தட்டையாக பயங்கரவாதம் என அடைத்துவிடும் போக்கு நிலவி வருகிறது. இஸ்லாமிய அடைப்படைவாதம் என்ற ஒன்றினை மையப்படுத்தி அனைவரையும் பயங்கரவாதிகள் என்ற நோக்கில் பார்க்கப்படும் ஒரு போக்கு நிலவி வருகிறது. விடுதலைப் போராட்ட அமைப்புகளையும், இஸ்லாமிய அடைப்படைவாதத்தையும் தட்டையாக பயங்கரவாதிகள் என வரையறை செய்வது தந்திரமானது.

இங்கு அரசாங்கங்கள் செய்யும் பயங்கரவாதச் செயல்கள் கவனிக்கப்படுவதில்லை. தன்னுடைய மக்கள் மீதே குண்டு வீசும் அரசாங்கத்தை பயங்கரவாத அரசாக யாரும் பார்ப்பதில்லை. ஆனால் அதனை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தும் அரசாங்கம் அல்லாத அமைப்புகள் மட்டுமே பயங்கரவாதிகளாக பார்க்கப்படுகின்றனர். தமிழ்ச்செல்வன் போன்றோரின் படுகொலைகள் இராணுவ நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. பொன்சேகா என்ற இராணுவத் தலைமையின் மீது நடத்தப்படும் தாக்குதல் பயங்கரவாதமாக பார்க்கப்படுகிறது. பயங்கரவாதம் என்று சொல்லப்பட்டால் இரண்டையும் ஒரே தராசில் எடைபோட வேண்டும்.

ஈழப்போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அசுர வளர்ச்சி பெற்றதே ஈழப்போராட்டம் அடைந்த முக்கிய பின்னடைவுகளுக்கு காரணமாக நான் கருதுகிறேன். 2002ல் புலிகள் இராணுவத்தைக் காட்டிலும் பலமாக இருந்தனர். ஆனையிறவை கைப்பற்றி யாழ்ப்பாணத்தை நோக்கி செல்லக்கூடிய சூழ்நிலையில் தான் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தகர்க்கப்பட்டன. உலகில் இருந்த பல அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து அப்பொழுது கேள்விகள் எழுப்பபட்டன. அந்த அமைப்புகளின் விடுதலை நோக்கங்கள் புறந்தள்ளப்பட்டு அனைத்து ஆயுதப் போராட்ட குழுக்களையும் பயங்கரவாத அமைப்புகளாக பார்க்கும் போக்கு தோன்றியது.

இந்த மாற்றத்தை சிறீலங்கா போன்ற நாடுகள் பயன்படுத்துக் கொண்டன. தேசிய விடுதலையை முன்னெடுத்த அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக பிற நாடுகளைப் பார்க்க வைத்தன. அந்த வளையத்தில் இருந்து புலிகள் போன்ற அமைப்புகளால் வெளியேற முடியாத சூழ்நிலை உள்ளது. இன்று அனைத்து உலக நாடுகளும் சிறீலங்காவிற்கு உதவி செய்து வருகின்றன. புலிகளின் தற்போதைய பின்னடைவிற்கு இதுவே காரணம்.

அமெரிக்காவின் அடுத்த வெளியூறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ககூடும் என எதிர்ப்பார்க்கப்படும் ஹில்லரி க்ளிண்டன் பயங்கரவாதம் குறித்து பின்வருமாறு கடந்த வருடம் கூறினார்.

Well, I believe that terrorism is a tool that has been utilized throughout history to achieve certain objectives. Some have been ideological, others territorial. There are personality- driven terroristic objectives. The bottom line is, you can't lump all terrorists together. And I think we've got to do a much better job of clarifying what are the motivations, the raisons d'être of terrorists. I mean, what the Tamil Tigers are fighting for in Sri Lanka, or the Basque separatists in Spain, or the insurgents in al-Anbar province may only be connected by tactics. They may not share all that much in terms of what is the philosophical or ideological underpinning. And I think one of our mistakes has been painting with such a broad brush, which has not been particularly helpful in understanding what it is we were up against when it comes to those who pursue terrorism for whichever ends they're seeking.

பயங்கரவாதத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டிய தேவையை ஹில்லரி முன்வைத்தார்.

*******

மும்பையில் நடைபெற்றிருக்கும் தாக்குதலை மையப்படுத்தி தற்பொழுது தமிழகத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான உணர்வுகளை அடக்கும் ஒரு முயற்சி நடக்கக்கூடும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக நிராகரிப்பதும், அப்பாவி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கடுமையாக கண்டிப்பதும் நம்முடைய தார்மீக கடமையாகும். அதே நேரத்தில் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்து வரும் அரசு பயங்கரவாதத்தை எதிர்ப்பதும், அந்த அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதும் அவசியமாகிறது.

பயங்கரவாதத்திற்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் இருக்கும் வேறுபாட்டினை நாம் தமிழக/இந்திய மக்களிடம் முன்வைக்க வேண்டும்.

Leia Mais…
Sunday, November 23, 2008

இலங்கை தமிழர் போராட்ட க்ரைம் நாவல்

சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்த சரித்திர நாவல்கள் என்றால் அது சாண்டில்யன் மற்றும் கல்கியின் நாவல்கள் தான். அதுவும் சாண்டில்யன் நாவல்களை நெய்வேலி நூலகத்தில் முன்பதிவு செய்து படித்தது தனிக்கதை. சரித்திர நாவல்களை "உண்மையான வரலாறாகவே" கண்டு கொள்ளும் போக்கு தமிழக வாசகர் வட்டத்தில் இருந்து வந்துள்ளது. இன்றைக்கும் உள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை உண்மையான சோழ சரித்திரமாக நினைத்துக் கொண்ட பலரை நான் அறிவேன்.

வரலாற்று நாவல்களை முழுமையான கற்பனையாக மட்டும் இல்லாமல் வரலாற்றை சரியாக பொருத்தி எழுதிய நாவல்களாக நான் வாசித்த எழுத்தாளர் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும் போன்ற நாவல்களை குறிப்பிட முடியும். புதுவையில் இருந்த பிரஞ்ச் ஆட்சி குறித்து ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்புகளை அடிப்படையாக கொண்டு பிரபஞ்சன் எழுதிய நாவல் வரலாற்றை தன் எழுத்து சுவராசியத்திற்காக வளைத்து விடவில்லை. இந்த தொடர்கள் தினமணிக்கதிரில் வெளிவந்தது என்பதை குறிப்பிட வேண்டும். வெகுஜன ஊடகத்தில் எழுதினாலும் பிரபஞ்சன் வரலாற்றை சிதைத்து விடவில்லை.

வரலாற்று நாவல்களே இவ்வாறு என்றால், முழுமையான வரலாற்று தொடர் எப்படி இருக்க வேண்டும் ?

வரலாறு குறித்து எழுதுவது சவால் நிறைந்தது. அதீத பொறுப்புணர்வு இத்தகைய பணிகளுக்கு தேவைப்படுகிறது. சுவாரசியமாக எழுத வேண்டும் என்பதற்காக வரலாற்றை சிதைத்து விடக்கூடாது. அதுவும் வெகுஜன ஊடகங்களில் சரித்திரத்தை முன்வைக்கும் பொழுது வாசகனை படிக்க வைக்க அதனை சுவாரசியமாக எழுத வேண்டியது தான். அதற்காக சரித்திரத்தை ஒரு க்ரைம் நாவல் போன்று எழுத வேண்டுமா ? சரித்திரத்தை மிகவும் சுவாரசியமாக எழுத முனையும் பொழுது அங்கு சுவாரசியத்திற்கு தான் முக்கியத்துவம் கிடைக்கிறது. வாசகனை கட்டிப்போட வேண்டும் என்ற எண்ணம் சரித்திரத்தை சிதைத்து விடுகிறது.

பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத தொடங்கியிருக்கின்ற "யுத்தம் சரணம்" என்ற தொடர் அந்த வகையில் பெருத்த ஏமாற்றத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இரண்டு பாகங்களே வெளியாகி இருக்கின்றன. அந்த இரண்டு பாகங்களும் பல தகவல் பிழைகளுடன், குழப்பங்களுடன் வெளியாகி உள்ளது.

இத்தனைக்கும் இது இன்னும் 1948 நிகழ்வுகளுக்கோ, 1990க்கு முன்பான சூழலுக்கோ செல்ல வில்லை. கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து தான் இந்த தொடர் தற்பொழுது பேசுகிறது. அதிலேயே இத்தனை பிழைகள் என்றால் இலங்கையின் குழப்பமான ஆரம்பகாலம், போராளிக்குழுக்களுக்குள் நிகழ்ந்த சண்டை, இந்தியாவின் தலையீடு போன்றவை குறித்து எழுதும் பொழுது இன்னும் எத்தனை குழப்பங்களை முன்வைக்கப் போகிறதோ என்ற அச்சமே ஏற்படுகிறது.

பொன்சேகா மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் தான் தற்பொழுது நடைபெறும் போருக்கான முக்கிய காரணம் என்பதான கருத்தாக்கத்தை இந்த தொடரின் முதல் பாகம் வாசகர் மனதில் விதைக்கிறது. இலங்கைப் பிரச்சனை குறித்து பெரிய புரிதல் இல்லாத சாமானிய வாசகர்கள் இதனை மனதில் கொண்டே அடுத்து வருகின்ற பாகங்களை வாசிக்கப்போகிறார்கள். பொன்சேகா மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டும் தானா இந்தப் போருக்கான முக்கிய காரணம் ? போருக்கான சூழல் ஏற்பட்ட பிறகு, இனி நிச்சயமாக போர் தான் என்ற நிலை ஏற்பட்ட பிறகே பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதே உண்மையான நிலை.

இது குறித்த நண்பர் திருவின் பதிவு - ‘யுத்தம் சரணம்’ தொடரின் எழுத்து அரசியல்!


************

இரண்டாம் பாகத்தில் வரும் சில வரிகள்...

ஐரோப்பிய யூனியன் தன் மீது விதித்த தடையைச் சுட்டிக்காட்டி, அமைதித் திட்டத்தின் அங்கத்தினர்களாக இருந்த ஐரோப்பிய தேசங்களான ஸ்வீடன், டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே ஆகிய தேசங்களை `யூனியனிலிருந்து விலகுங்கள்' என்று விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ம்ஹும். சாத்தியமில்லை. டென்மார்க்கும் ஃபின்லாந்தும் செப்டம்பர் 1 முதல் அமைதித் திட்டத்திலிருந்து விடைபெறுவதாகச் சொல்லிவிட்டன.

இந்த வரிகளைப் படித்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து ஸ்வீடன், டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே போன்ற நாடுகளை விலக புலிகள் கேட்டு கொண்டார்களா ? பா.ராகவன் எங்கே இருக்கிறீர்கள் ? புலிகள் என்ன கேட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நார்வே ஐரோப்பிய யூனியனில் இல்லை என்பது கூடவா உங்களுக்கு தெரியாது ? ஐரோப்பியாவில் இருக்கின்ற அனைத்து நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் இல்லை.

என்ன நடந்தது என்பதை நான் ஏற்கனவே என்னுடைய "சதுரங்க ஆட்டத்தில் தமிழீழம்" என்ற தொடரில் எழுதியுள்ளேன். மறுபடியும் இங்கே குறிப்பிடுவதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. பா.ராகவன் குறிப்பிடுவது போல ஸ்வீடன், டென்மார்க் போன்றவை அமைதித்திட்டத்தின் அங்கத்தினர்கள் அல்ல. அமைதித்திட்டத்தின் அங்கத்தினர்கள் என பொதுவாக எதனை குறிப்பிடுகிறார் என்றும் தெரியவில்லை. Co-chairs என்று சொல்லப்படும் கூட்டுத்தலைமையை குறிப்பிடுகிறாரா என தெரியவில்லை. அதில் நார்வே, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவை உள்ளன. ஸ்வீடன், டென்மார்க் போன்றவை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவை சேர்ந்தவர்கள் - SLMM (Srilanka Monitoring Mission). ஐரோப்பிய யூனியன் தடைக்கு பிறகு ஐரோப்பிய யூனியனை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருக்க கூடாது என்று தான் புலிகள் கூறினார்கள். ஐரோப்பிய யூனியனை விட்டே விலக வேண்டும் என்று கேட்கவில்லை. அவ்வாறு கேட்டால் பலர் சிரிப்பார்கள்.

இது மட்டுமா இன்னும் பிழைகள் உள்ளன...

மாவிலாறு என்பது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. ராணுவத்தின் நோக்கம் வேறு. செயல்திட்டம் வேறு. இலக்கு முற்றிலும் வேறு. மட்டக்களப்பில் ஆரம்பித்து திருகோணமலை வழியே வவுனியா வரை உள்ள புலிகளின் அத்தனை தளங்களையும் கைப்பற்றி அழிக்கும் திட்டம் அவர்கள் வசம் இருந்தது. அப்படியே முடிந்தால் யாழ்ப்பாணம். சுற்றி வளைத்துக் கிளிநொச்சி. நிறுத்தப் போவதில்லை. என்ன ஆனாலும் சரி. போர் நிறுத்த ஒப்பந்தப் பத்திரம், பத்திரமாக இருக்கிறது. இன்னும் கிழித்துப் போடவில்லை. யார் கேட்கப்போகிறார்கள்?

அடுத்து சில வரிகள் யாழ்ப்பாணம் குறித்த குழப்பத்தை இன்னும் அதிகரிக்கிறது.

பூநகரியைப் பிடிக்க முடிந்தது மிகப்பெரிய விஷயம். அது புலிகளின் வலுவான கோட்டை. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல்.

யாழ்ப்பாணம் புலிகள் கைகளில் உள்ளதா ? இராணுவத்தின் கைகளில் உள்ளதா ? யாழ்ப்பாணம் புலிகள் வசம் இல்லை என்ற உண்மையை தெரியாமல் பா.ராகவன் இருக்க முடியாது என நம்புகிறேன். ஆனால் இலங்கை குறித்து அதிகம் தெரியாத சாமானிய வாசகர்கள் இந்த வரிகள் குறித்து படித்தால் என்ன நினைப்பார்கள் ?

இங்கு மற்றொரு தகவல் பிழை உள்ளது. பூநகரியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நிலம் வழியான பாதை இல்லை. படகுகள் மூலமாகவே செல்ல முடியும். சாலை வழியாக செல்ல வேண்டும் என்றால் ஆனையிறவு தான் வழி. A9 நெடுஞ்சாலை ஆனையிறவு வழியாகவே யாழ்ப்பாணத்தை வன்னியுடன் இணைக்கிறது. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல் என்பது மட்டும் அல்ல, யாழ்ப்பாணத்தை ஏன் சிறீலங்கா இராணுவம் பிடிக்க வேண்டும் ? அது தான் அவர்கள் வசம் ஏற்கனவே உள்ளதே :)

அடுத்து...

தனி ஈழம் என்கிற ஒற்றை இலக்கிலிருந்து இன்றுவரை ஓரங்குலம் கூட நகராதவர்களாக விடுதலைப் புலிகள் மட்டுமே இருக்கிறார்கள்.

ISGA (Interim Self Governing Authority) என்ற ஒன்றை புலிகள் சமர்ப்பித்தார்களே ? அது என்ன ? அது எதற்காக ? அதை வைத்து ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா ? ஏன் நடக்கவில்லை ? யார் காரணம் ?

************

இந்த தொடரில் முன்வைக்கப்பட்டிருக்கும் சில தகவல்கள் உண்மையில் சரியானது தானா என்ற கேள்வி எனக்கு உள்ளது. சிறீலங்கா குறித்து உண்மையில் அறிந்தவர்கள் இது சரியா அல்லது தவறா என்பதை கூறட்டும்.

தொடரில் இப்படியான ஒரு வரி வருகிறது.

அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் அவருக்குமான உறவு, வெறும் அதிபர் - ராணுவத் தளபதி உறவல்ல. மேலே. ரொம்ப மேலே. ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும். நோக்கம் தெளிவானது. புலிகளை ஒழித்துவிடலாம். சிம்பிள்.

இது எந்தளவுக்கு உண்மையானது ? எனக்கு தெரிந்த வரையில் ஜனாதிபதி ராஜபஷேவின் தம்பி கோத்தபாய ராஜபக்ஷேவும், பொன்சேகாவும் ஒன்றாக இராணுவத்தில் இருந்தவர்கள். அவர்கள் ஒன்றாக இராணுவத்தில் இருந்த காரணத்தால் நெருங்கிய நண்பர்கள் என்றே வைத்துக் கொண்டாலும் (Assumption, not fact), இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்ததால் பொன்சேகவும், அதிபர் ராஜபக்சேவும் நண்பர்களா ? அதுவும் "ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும்" ?

இது உண்மையா என்பதை சிறீலங்கா குறித்து தெரிந்தவர்கள் கூறட்டும். எனக்கும் உண்மையை தெரிந்து கொள்ளும் ஆவல் உள்ளது.

ஒரு நண்பரிடம் இருந்து கிடைத்த தகவல் படி...

ராஜபக்க்ஷ, பொன்சேகா இருவரும் அம்பாந்தோட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது தவிர எதுவுமே பொதுவில்லை. ஒருவர் படித்தது, ஆனந்தா கல்லூரி; மற்றையவர் நாளந்தா கல்லூரி. இரண்டுமே கொழும்புவட்டாரத்திலே ஆளுக்காள் எதிரும் புதிருமான சிங்களப்போட்டிக்கல்லூரிகள்.

வரலாற்றை சுவரசியமாக, க்ரைம் நாவல் போன்று எழுத முனைந்தால் இப்படியான விபரீதங்கள் தான் விளையும். இன்னும் என்ன என்ன வரப்போகிறதோ ?

************

இந்த தொடர் ஒரு வியபாரம் என்பதே என்னுடைய கருத்து. ஒரு பிரச்சனை தமிழகத்தில் முக்கியமாக பேசப்படும் பொழுது அதனை வியபாரமாக மாற்றும் இந்திய வெகுஜ ஊடக, எழுத்து வியபாரிகளின் முயற்சி தான் இந்த தொடர். அதனை சுவரசியமாக க்ரைம் நாவல் போன்று எழுதி, பரபரப்பாக வாசகர்களிடம் கொண்டு சென்று பணம் சேர்க்க நடக்கும் இந்த வியபாரம் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

Leia Mais…
Wednesday, November 05, 2008

வாழ்த்துக்கள் ஒபாமா


அமெரிக்காவின் முதல் கறுப்பர் இன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒபாமாவிற்கு வாழ்த்துக்கள். மாற்றம் (CHANGE) என்ற அசைக்க முடியாத கோஷத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை மக்கள் மத்தியில் ஒபாமா முன்வைத்தார். அந்த மாற்றம் என்ற கோஷம் ஒபாமாவை வெற்றி பெற வைத்திருக்கிறது.



கறுப்பர் இன மக்களின் உணர்ச்சிபூர்வமான உற்சாகத்துடன் அமெரிக்காவில் கொண்டாடங்கள் தொடங்கியுள்ளன. இந்த வெற்றி எந்தளவுக்கு உணர்ச்சிபூர்வமானது என அறிய வேண்டும் என்றால் அமெரிக்காவில் கறுப்பர்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையை திரும்பி பார்க்க வேண்டும்.

கடந்த மாதம் அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஹூஸ்டன் விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லும் பொழுது என்னுடைய டாக்சி டிரைவராக வந்த ஒரு கறுப்பர் இனத்தவருடன் இந்த தேர்தல் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். ஒபாமா வெற்றி பெற்று வெள்ளை மாளிகையில் நுழைந்தால் அது கறுப்பர்கள் இனத்தவர் அடையும் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும் என்றார். தன்னை பலர் "Nigger" என அழைத்து இருக்கிறார்கள். ஒபாமா வெள்ளை மாளிகையில் நுழையும் பொழுது மிகப் பெருமையாக உணர்வேன் என்றார். ஜெசி ஜாக்சன் சாதிக்க முடியாததை ஒபாமா சாதித்து விட்டார் என்றார். நிச்சயம் ஜனாதிபதியாவார் என்றார்.

இப்படி பல கறுப்பர்கள் ஒபாமாவின் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இன்று அந்த வெற்றி கிடைத்து இருக்கிறது.

ஜெசி ஜாக்சன் இன்று ஒபாமா வெற்றி பெற்றார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் கண்ணீர் விட்டு அழுதார். 1984, 1988 தேர்தலில் ஜனநாயக்கட்சியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னேட்ட தேர்தலில் வேட்பாளராக நின்று ஜெசி ஜாக்சன் தோற்றுப் போனார்.

ஒரு கறுப்பரால் ஒரு முக்கிய தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என கறுப்பர்கள் நம்பினர். அந்த காரணத்தாலேயே ஒபாமாவை இந்த தேர்தலின் தொடக்கத்தில் பெரும்பான்மையான கறுப்பர்கள் ஆதரிக்கவில்லை. தோற்கப்போகும் ஒபாமாவை எதற்கு ஆதரிக்க வேண்டும் என பெரும்பாலான கறுப்பர்கள் நினைத்தனர். அதனால் அவர்கள் ஆரம்பத்தில் ஹில்லரியையே ஆதரித்தனர். ஆனால் ஒபாமா அயோவா தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஒபாமா பின் கறுப்பர்கள் அணிவகுத்தனர். இன்று ஒபாமா வெள்ளை மாளிகையில் நுழையப் போகிறார்.

வெள்ளை மாளிகை என்பது அமெரிக்க வெள்ளையர்களின் அதிகாரபீடமாகவே பெரும்பான்மையான கறுப்பர்கள் கருதினர். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பர் நுழைவதை இன்றைக்கும் பல வெள்ளையர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் உள்ளது. பல வலதுசாரிகளால் ஒபாமா ஜனாதிபதி என்பதை ஜீரணிக்க பல காலம் ஆகும். இன்றைக்கும் அமெரிக்காவின் தென்பகுதிகளில் அமெரிக்க வலதுசாரிகள் பலமாகவே வெற்றி பெற்றிருக்கின்றனர். வயதானவர்கள், வெள்ளை ஆண்கள் மத்தியில் ஒபாமாவின் ஆதரவு தளம் குறைவாகவே உள்ளது. ஆனால் இளைஞர்கள் மத்தியில் கிடைத்த பலமான ஆதரவு தான் ஒபாமாவை வெற்றி பெற வைத்திருக்கிறது.

*******

ஒபாமா அதிகபட்ச எதிர்பார்ப்புகளுடன் ஜனாதிபதியாகிறார். ஆனால் அவர் முன் பலமான சவால் உள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் சிதைந்து போய் உள்ளது. அமெரிக்காவின் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் மாற்றத்தை எதிர் நோக்கியுள்ளது. அமெரிக்க முதலாளித்துவ பாதை எதிர்காலத்தில் நிச்சயம் மாறும். மாறியே தீர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஒபாமா ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாகிறார். பலமான எதிர்பார்புகளுடன் உலக அரசியலில் பதவியேற்றவர்கள், அந்த நம்பிக்கையை நிறைவேற்றியதில்லை.


ஒபாமா நிறைவேற்றுவாரா ? ஒபாமாவிற்கு நிறைய அவகாசம் வேண்டும். ஒபாமாவின் தலைமைப் பண்புகள் மிகவும் அரிதானது. அவருடைய பல கருத்துக்கள் இது வரை அமெரிக்க அதிகாரபீடம் முன்வைத்ததில் இருந்து மாறுபட்டது. அந்த மாற்றம் தான் ஒபாமா மீதான மக்களின் நம்பிக்கையையும் அதிகரித்து இருக்கிறது.

ஒரு புதிய தொடக்கம் அமெரிக்காவில் ஏற்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கும் பல அமெரிக்க மக்களுக்கும், கறுப்பர் இன மக்களுக்கும், என்னுடைய வாழ்த்துக்கள்...

Leia Mais…
Wednesday, October 29, 2008

ஹிந்து ராமுக்கு மற்றொரு சிறீலங்கா விருது

ஹிந்து ராம் தொடர்ச்சியாக சிறீலங்கா அரசுக்கும், சிங்கள மக்களுக்கும் ஹிந்து நாளிதழ் மூலம் செய்து வரும் சேவையை பாராட்டி மற்றொரு விருதினை சிறீலங்கா அரசு சார்ந்த NGO நிறுவனம் அளித்து இருக்கிறது. Sri Lanka Mass Media Society (a government-supported NGO to promote excellence in the media world) என்ற நிறுவனம்இதனை வழங்கியுள்ளது.

சிறீலங்கா அரசு சார்ந்த ஒரு நிறுவனம் ஊடகங்களை பாராட்டி விருது வழங்குகிறதாம். புல்லரிக்கிறது. ஏன் புல்லரிக்கிறது என்றால் - Sri Lanka has been ranked as the third most dangerous place for the media in the world என்பது தான்...

சமீபத்தில் வெளியான பி.பி.சி செய்தி
'Drop' in S Lanka press freedom
International media watchdog groups say there has been a marked deterioration in press freedom in Sri Lanka.




பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டத்தை தொடர்ந்து ஊடக அமைப்புகள் Stop the War on Journalists in Sri Lanka என்று போராட்டத்தையும் நடத்தினர்.


TV journalist killed in Sri Lanka




இந்தளவுக்கு ஊடகங்கள் மீது கரிசனமாக இருக்கும் சிறீலங்கா அரசாங்கம், அதனுடைய ஒரு அமைப்பு மூலமாக ஆசியாவின் சிறந்த ஊடகவியலாளர் என்ற விருதினை ராமுக்கு அளிக்கிறதாம். புல்லரிக்காதா பின்னே ?

அந்த விருதினை வாங்கிக் கொண்டு ஆற்றோ, ஆற்றோன்னு ஒரு உரையாற்றி இருக்கிறார் பாருங்கோ, அதனை நினைச்சா இன்னும் புல்லரிக்கிறது.

“Time has come for the media in South Asia to seriously introspect on its role on how it could improve its performance in betterment of the welfare of the people and the peace processes in the society,” N. Ram, Editor-in-chief of The Hindu, said here on Tuesday.

அவருடைய ஹிந்து நாளிதழை அவர் முதலில் introspect செய்தால் பரவாயில்லை.

****

ஹிந்து நாளிதழை தொடர்ச்சியாக நான் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் என்பன போன்ற கேள்விகள் என்னுடைய கடந்த பதிவை சார்ந்து முன்வைக்கப்பட்டது. ஹிந்து நாளிதழ் ஆசிரியர் குறித்து முன்பு எழுதிய ஒரு பதிவை அவர்களுக்கு சுட்டி காட்ட விரும்புகிறேன்.
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...

இந்திய அதிகார மையத்திற்கு, ஈழம் சார்ந்து தாங்கள் முன்வைக்க விரும்புகிற விடயங்களை நேரிடையாக மக்கள் மத்தியில் வைக்க முடியாத சூழல் உள்ளது. அதனால் எப்பொழுதுமே ஹிந்து அதனை முன்வைத்து வந்திருக்கிறது. 1980களில் இருந்து 2000ம் வரை இதே நிலை தான். அதனால் தான் ஹிந்துவை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. ஹிந்து நாளிதழை எதிர்ப்பது இந்திய அதிகாரமையத்தை எதிர்க்கும் ஒரு செயல் என நான் நம்புகிறேன்.

Leia Mais…
Friday, October 17, 2008

ஹிந்து நாளிதழை புறக்கணிப்போம்

தமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள உணர்வுகளை ஹிந்து ஆசிரியர் என்.ராமால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான அஜீரண கோளாறு காரணமாக கருத்துச் சுதந்திரம் குறித்து எல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். கருத்துச் சுதந்திரம் குறித்து யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லையா ? செய்திகளை கூட இருட்டடிப்பு செய்து வெளியிடும் ஹிந்து நாளிதழ் எல்லாம் கருத்துச்சுதந்திரம் குறித்து பேசுவது தான் உச்சகட்ட காமெடி.

இன்றைக்கு பேச்சுரிமை குறித்து பேசும் ஹிந்து, ஈழத்திற்கு ஆதரவாக குரலெழுப்புவதும் பேச்சுரிமை தான் என்பதையும், கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரலெழுப்ப முயன்ற வைகோ போன்ற தலைவர்களின் கைதினை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்டதையும் சுட்டி காட்ட வேண்டிய தேவையுள்ளது.

என்.ராமின் பின்புலம் குறித்து தெரியதவர்களுக்கு ஒரு நீண்ட விளக்கம் கொடுப்பது அவசியம் என்று தோன்றினாலும், நேரமின்மை காரணமாக ஒரு செய்தியை மட்டும் சுட்டிக்காட்டி விட்டு செல்லலாம் என நினைக்கிறேன். ஹிந்து ராம் சிறீலங்கா அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்படாத தூதுவராக தமிழகத்திலும், இந்தியாவிலும் செயலாற்றிக் கொண்டிருந்தார்/கொண்டிருக்கிறார். சிறீலங்கா அரசாங்கத்திற்கு அவர் விசுவாசமாக பணியாற்றியதன் அடையாளமாக அவருக்கு அவருடைய "குடும்ப நண்பர்" சந்திரிகா குமாரதுங்கா "ஸ்ரீலங்கா ரத்னா" என்ற சிறீலங்காவின் உயரிய விருதினை அளித்து கொளரவப்படுத்தினார். இந்த விருதினைப் பெற்ற ஒரே இந்தியர் என்ற தனிப்பெரும் பெருமையும் என்.ராமிற்கு உண்டு.

இது குறித்து செய்தியினை ஹிந்து நாளிதழிலேயே சென்று வாசிக்கலாம்.
http://www.hinduonnet.com/2005/11/15/stories/2005111517191400.htm

அந்தச் செய்தியின் ஒரு சாரத்தினை இங்கே அளிக்கிறேன்.

The "Sri Lanka Ratna" is conferred for "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka in particular and\or humanity in general." Mr. Ram is the first Indian recipient of the honour, which is conferred on a restrictive basis.

அதாவது சிறிலங்காவிற்கு அவர் அளித்த "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka" என்ற காரணத்திற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. இந்த "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka" என்பதை அவர் எப்படி சாதித்தார் ?

130 வருட "பாரம்பரியம்" மிக்க ஹிந்து நாளிதழை சிறீலங்கா அரசாங்கத்தின் கொள்கைப் பரப்புச் சாதனமாக மாற்றியதன் மூலம் சாதித்தார். செய்திகளை தமிழகத்தில் திரித்து வெளியிட்டார். பத்திரிக்கை ஆசிரியர் என்ற முகமூடியை அணிந்து கொண்டு அவர் செய்த அரசியல் புரோக்கர் வேலைகளை யாருமே அதிகம் அம்பலப்படுத்தாமல் போனதும், ஹிந்துவின் "பாரம்பரிய பேனரும்" அவருக்கு வசதியாக இருந்தது.

**********

ஈழப் பிரச்சனையில் ஹிந்துவின் பிரச்சார போக்கில் தற்பொழுது ஒரு மாற்றம் தெரிவதை ஹிந்துவை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியும். ராஜீவ் காந்தி படுகொலை என்ற வாதத்தை தொடர்ந்து ஈழப் பிரச்சனையில் ஹிந்து வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் இன்றைக்கு தமிழக காங்கிரஸ் கூட அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அரசியல் நிர்பந்தங்களுக்காக ஈழ மக்களுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுத்துள்ளது ஹிந்துவிற்கு தன் நிலைப்பாட்டினை மாற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் இவ்வாறான ஒரு போக்கினை எடுக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை. தமிழ்ச்செல்வன் மரணத்தை சார்ந்த சூழ்நிலையின் பொழுது, தமிழ்ச்செல்வனை கொன்றது பிரபாகரன் என கூறிய அறிவுஞீவி "தமிழர்கள்" தான் காங்கிரஸ் கதர் வேட்டிகள். டெல்லியின் எடுபிடிகளான காங்கிரஸ் கதர்வேட்டிகள் மீது எனக்கு பெரிய நம்பிக்கையோ, மரியாதையோ இல்லை. ஆனால் தங்களின் அரசியல் தேவைக்காக தமிழக காங்கிரஸ், ஈழப்பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாட்டினையே சார்ந்துள்ள சூழ்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ், விகடன் உள்ளிட்ட கருத்துகணிப்புகளில் ராஜீவ் காந்தியின் படுகொலையை கடந்து ஈழப் பிரச்சனையை தமிழக மக்கள் அணுகியுள்ள சூழ்நிலையில் ராஜீவ் படுகொலை என்ற வாதம் வலுவிழக்கிறது.

தமிழ் ஈழத்தை எதிர்க்க, ராஜீவ் படுகொலை என்ற ஆயுதத்தை கடந்த காலங்களில் வெற்றிகரமாக பிரயோகித்து வந்த ஹிந்து, அது கூர்மழுங்கியதும் தற்பொழுது புதிய ஆயுதத்தை எடுத்துள்ளது.

அது தான் காஷ்மீர் பயங்கரவாதம்.

காஷ்மீர் பிரச்சனையையும், ஈழப் பிரச்சனையும் பிணைத்து விடுவதன் மூலம் "இந்திய தேசிய உணர்வை" சீண்டி விட்டு ஈழத்திற்கு எதிரான சூழ்நிலையை ஏற்படுத்த முனைந்து வருகிறது. ஈழப் பிரச்சனையை காஷ்மீருடன் ஒப்பிடுவதன் மூலம் அண்டை நாட்டில் ஒரு புதிய நாடு உருவானால், நம் நாட்டிலும் புதிய நாடு உருவாகும் என்ற அச்சத்தை விதைப்பதே ஹிந்துவின் நோக்கம். இதன் மூலம் இந்தியத் தமிழர்களை, இந்தியர்களாக மட்டும் வைத்திருக்க முனைவதும், ஈழத்தமிழர்களுக்கு எதிராக தமிழகத் தமிழர்களை திருப்புவதும் ஹிந்துவின் நோக்கமாக உள்ளது.

ஹிந்துவில் மாலினி பார்த்தசாரதி என்பவர் பின்வருமாறு எழுதுகிறார்

Tamil Nadu’s politicians clearly have different standards for India and for Sri Lanka. It would appear that they accept that battling terrorism in India and saving Kashmir from Islamist jihadis are important national tasks but not so in Sri Lanka which has been menaced for more than two decades by the LTTE.


....When Pakistani generals and Islamist militants characterise the separatist uprising in Kashmir as a "freedom struggle," the collective Indian national consciousness is understandably outraged. Politicians in India are rarely exercised over concerns that the human rights of innocent citizens are often trampled upon in police action against terrorists or their perceived accomplices. There is indeed a broad-based political consensus behind the Indian state when it takes strong steps to root out terrorism.

என்னைப் போன்றவர்கள் காஷ்மீர் மக்களின் விடுதலையையும் ஆதரிக்கவே செய்கிறோம் என்பதால் இந்த வாதம் எந்த மாற்றத்தையும் எங்களுடைய நிலைப்பாட்டில் ஏற்படுத்தப்போவதில்லை.

ஆனால் ஆனால் மைய அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் காஷ்மீர் குறித்த பெரிய புரிதல் இல்லாத சூழ்நிலையை தங்களுடைய சிங்கள அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைக்கு ஹிந்து பயன்படுத்திக் கொள்கிறது. ஈழப் பிரச்சனையை எப்படியெல்லாம் எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் ஹிந்து ராம் இருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஸ்ரீலங்கா ரத்னா பட்டத்தை கட்டிக் காக்க வேண்டும் அல்லவா ?

இந்திய தேசிய உணர்வுகளை தூண்டி விட்டு, சிறீலங்காவை கட்டிகாக்க ஹிந்து துடிப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிறீலங்காவை அப்படி கட்டிக்காக வேண்டிய தேவை அவருக்கு ஏன் உள்ளது என்றும் தமிழர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அப்பொழுது தான் ஹிந்துவின் குள்ளநரித்தனத்தை புரிந்து கொள்ள முடியும்.

**********

சிறீலங்காவை கட்டிகாக்க துடிக்கும் ஹிந்து, தமிழர்கள் குறித்த செய்திகள் எதையேனும் வெளியிடுகிறதா ?

சிறீலங்கா அரசாங்கத்தின் போர் நடவடிக்கை ஒரு பெரிய மனித அவலத்தை ஈழத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. கிளிநொச்சியை விட்டு தமிழ் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள விமானப்படை விமானம் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது. ஒரு பாரம்பரிய மிக்க பத்திரிக்கை நியாயமாக இந்தச் செய்திகளை வெளியிட வேண்டாமா ? கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் பத்திரிக்கை, பத்திரிக்கை தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டாமா ? ஆனால் ஹிந்து அதனை செய்யவில்லை.

பிபிசி போன்ற செய்தி தளங்களில் தமிழர்கள் தினமும் கைது செய்யப்படுவது (Sri Lanka Tamils 'being arrested' ), கிளிநொச்சியில் மக்கள் போரினால்பாதிக்கப்பட்டுள்ளது போன்ற செய்திகள் தற்பொழுது வெளியாகியுள்ளன ('The intolerable noise of ஷேல்ல்ஸ்')

இப்படியான செய்திகளை வெளியிட்டால், தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலை இன்னும் அதிகரிக்கும். எனவே ஹிந்து அதனை செய்யாது. மாறாக இன்றைக்கு ஹிந்து ஒரு முக்கியமான செய்தியினை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


‘I am committed to political solution and ending Tamil civilian hardships’

N. Ram

Chennai: “I am firmly committed to a just and enduring political solution” to the Tamil question in Sri Lanka and “am clear that there are no military solutions to political questions,” President Mahinda Rajapaksa told me in a telephonic conversation from Colombo on Thursday morning.

மகிந்த ராஜபக்ஷ என்.ராமிடம் மேற்கண்டவாறு தொலைபேசியில் கூறியிருக்கிறாராம். உடனே ஹிந்து அதனை முதல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இத்தனை நாளாக ஹிந்து ஏன் கேட்கவில்லை ? மகிந்த ராஜபக்ஷ ஏன் கூற வில்லை ?

இத்தனை நாளாக தமிழர்கள் தமிழகத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு விழித்துக் கொண்டார்கள். அதனால் தமிழகத்தில் எழுந்துள்ள சூட்டை தணிக்க ஹிந்து தன்னலான உதவியை செய்கிறது. வாங்கிய "ஸ்ரீலங்கா ரத்னா" என்ற ரொட்டி துண்டுக்கு உழைக்க வேண்டாமா ? ஹிந்து ராம் என்ற விசுவாசமான "பிறவி" அந்த ரொட்டி துண்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறது.

********

போரினால் மிகப் பெரிய மனித அவலம் நேரும் இந்த தருணத்திலும் மனிதநேயம் அற்ற வகையில் செயல்பட்டு வரும் ஹிந்து நாளிதழை கண்டிப்பதோ, எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதோ தேவையில்லாதது. தமிழர்களாக தங்களை நினைக்கும் அனைவரும் ஹிந்து நாளிதழை "காசு கொடுத்து" வாங்க கூடாது. தமிழர்களின் காசில் கொழுத்து தமிழர்களுக்கு எதிராகவே செயல்படும் ஹிந்துவை முற்றிலும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

அப்படி செய்தால் ஹிந்து அலுவலகம் தானாகவே சென்னை அண்ணாசாலையில் இருந்து கொழும்பு LakeHouse க்கு மாறிவிடும். ஹிந்து இருக்க வேண்டிய இடமும் கொழும்பு LakeHouse தான்.

எனவே ஹிந்து நாளிதழை புறக்கணிப்போம்...

*******

விகடனை அடுத்து இந்தியன் எக்ஸ்பிரசும் சமீபத்தில் ஈழப்பிரச்சனை குறித்து தமிழகத்தில் கருத்துகணிப்பு நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் கீழே உள்ளது

Leia Mais…