2006 தேர்தலில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தொகுதியாக விருத்தாசலம் மாறியிருக்கிறது. விஜயகாந்த் இந்த தேர்தலில் இங்கு களமிறங்குகிறார். விருத்தாசலத்தில் விஜயகாந்த் களமிறங்குவது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடமாவட்டங்களில் விஜயகாந்த்திற்கு குறிப்பிடத்தகுந்த "செல்வாக்கு" இருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருவது அவரை இங்கு நிற்க தூண்டி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றவர்கள் பாமகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பாமக வலுவாக இருக்கும் இடங்களில் தங்களை தேவையில்லாமல் நுழைத்து கொள்கிறார்கள் என்று தோன்றினாலும் ரஜினிகாந்த்துடன் விஜயகாந்த்தை என்னால் ஒப்பிட முடியவில்லை. ரஜினிகாந்த் தோல்வி அடைந்து விட்டதால் விஜயகாந்த்தும் தோற்று விடுவார் என்றும் நாம் முடிவு செய்து விட கூடாது. ரஜினிகாந்த்தை விட விஜயகாந்த் கொஞ்சம் "புத்திசாலி" என்பது என் எண்ணம். எனவே அவரது இந்த முடிவின் பின் இருக்கும் சில காரணங்களை நாம் ஒதுக்கி விட முடியாது.
விஜயகாந்த் தன்னை ஒரு சக்தியாக இந்த தேர்தலில் நிலைநிறுத்திக் கொள்ள முனைகிறார். அது தேர்தலில் வெற்றி என்பதை விட கணிசமாக வாக்குகளை பெறுவது அவரது குறிக்கோளாக இருக்கிறது. இந்த கணிசமான வாக்குகளை வடமாவட்டங்களில் பெற்று விட முடியும் என்று விஜயகாந்த் நினைக்கிறார். இதற்கு குமுதம், தினமலர் போன்ற பத்திரிக்கைகளும் தூபம் போட்டுள்ளன. குமுதம் தன்னுடைய கருத்து கணிப்பில் வடமாவட்டங்களில் விஜயகாந்த்திற்கு பல தொகுதிகளில் 10-15% வாக்காளர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
விஜயகாந்த்திற்கு வடமாவட்டங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் ரஜினியை விட ஆதரவு அதிகம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நெய்வேலியை ஒட்டிய ஊர் விருத்தாசலம் என்பதால் இங்கிருக்கும் சில கிராமங்களின் அறிமுகம் எனக்கு உண்டு. இங்கிருக்கும் பல இளைஞர்கள் விஜயகாந்த்தின் தீவிர ரசிகர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அதாவது 30வயதிற்குட்பட்ட பலர் விஜயகாந்தின் ரசிகர்கள். இதற்கு அடுத்த நிலையில் தான் ரஜினி, சரத்குமார் போன்றோர் உள்ளனர். இங்கு பலருக்கும் ரசிகர்கள் உண்டு. எந்த நடிகர்களுக்கும் ரசிகர்கள் பஞ்சம் ஏற்படுவதில்லை. விஜய், அஜித், விக்ரம் தொடங்கி சிலம்பரசன், தனுஷ் வரை அனைவருக்கும் ரசிகர்கள் உண்டு. இவர்களிடையே விஜயகாந்த்தின் ரசிகர்கள் அதிகளவில் இருக்கின்றனர்.
விஜயகாந்த் ரசிகர்களில் அதிகளவில் வன்னியர்கள் குறிப்பாக பாமகவினர் இருப்பதாக பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. இருக்கலாம். பிற கட்சியினரும் இருக்கலாம். குறிப்பாக திமுகவினர் இருக்கலாம். இவர்களில் பலர் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்திருக்கலாம். சிலர் தங்களுடைய சாதி மற்றும் கட்சி அபிமானத்தால் பாமக, திமுக ஆகிய கட்சிகளில் தொடர்ந்து கொண்டும் இருக்கலாம். 90% விஜயகாந்த் ரசிகர்கள் விஜயகாந்த் கட்சியில் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மொத்தமாக விருத்தாசலத்தில் 5000பேர் இருக்கலாம்.
இதை மட்டுமே கொண்டு விஜயகாந்த் களத்தில் இறங்குவாரா ? அதுவும் கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களில் இங்கு தன்னுடைய பலத்தை நிருபித்து இருக்கும் பாமகவை எதிர்த்து எந்த தைரியத்தில் விஜயகாந்த் களத்தில் இறங்குகிறார் ?
பாட்டாளி மக்கள் கட்சி வடமாவட்டங்களில் வலுவாக இருக்கும் தொகுதிகளில் விருத்தாசலம் முக்கியமான தொகுதி. இங்கிருக்கும் பல கிராமங்கள் முழுக்க முழுக்க வன்னிய இன மக்கள் மட்டுமே இருக்கும் கிராமங்கள் ஆகும். பல கிராமங்களில் பிற கட்சியினரை வாக்கு சேகரிக்க கூட விடுவதில்லை. அப்படியான ஒரு கிராமம் தான் ஆதாண்டர்கொல்லை என்னும் கிராமம். இது எங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் சிறு கிராமம். இங்கு ஒரு சில ஓட்டுகளை தவிர மொத்த ஓட்டுகளும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் விழும். இங்கு பிற கட்சியினர் எவரும் வாக்கு சேகரிக்க கூட செல்வதில்லை. இங்கிருக்கும் இளைஞர்கள் அனைவருமே தீவிர பாமக தொண்டர்கள். இவ்வாறான பல கிராமங்களை உள்ளடக்கியது தான் விருத்தாசலம் தொகுதி. இந்த தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகள் கிராமத்து வாக்குகள் தான்.
1991ல் தன்னுடைய முதல் தேர்தலை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி, தனித்து போட்டியிட்டு இங்கு சுமார் 37,634 ஓட்டுகளை பெற்று இரண்டாமிடம் பெற்றது. அந்தக் கட்சியின் அப்போதைய தலைவரும் பின்பு பாமகவில் இருந்து நீக்கப்பட்டவருமான தீரன் இங்கு போட்டியிட்டார். இந்த தேர்தலில் ராஜீவ் காந்தி அனுதாப அலையில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி வென்றது. திமுகவிற்கு மூன்றாமிடம் கிடைத்தது.
1996 தேர்தலில் கடுமையான ஜெ எதிர்ப்பு அலையில் பாமகவின் வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி சுமார் 42,218 ஓட்டுகளைப் பெற்றார். இந்த தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிட்டு இரண்டாமிடத்தை பெற்றது. தமிழகமெங்கும் மிக எளிதாக வெற்றி பெற்ற திமுக இங்கு போராடி 6885 ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு பாமகவின் செல்வாக்கு தவிர டாக்டர் கோவிந்தசாமியின் தனிப்பட்ட செல்வாக்கும் முக்கிய காரணம். டாக்டர் கோவிந்தசாமி இங்கு மிகவும் பிரபலமான டாக்டர். குறிப்பாக கிரமத்து மக்களிடையே குறிப்பிடத்தகுந்த செல்வாக்கு மிக்கவர். இங்கு டாக்டர் கோவிந்தசாமி தான் வெற்றி பெறுவார் என்று அந்த தேர்தலில் கருதப்பட்டது. பல பத்திரிக்கைகளும் அப்படி தான் எழுதிக் கொண்டிருந்தன. அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
கடந்த 2001 தேர்தலில் பாமக-அதிமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக போட்டியிட்ட டாக்டர் கோவிந்தசாமி சுமார் 68,905 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக-விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி சுமார் 61,777 ஓட்டுகளைப் பெற்றது.
இங்கு பலமான கட்சிகள் என்று பார்த்தால் முதல் இடம் பாமகவிற்கு தான். அடுத்த நிலையில் திமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் உள்ளன. இதற்கு அடுத்த நிலையில் இருப்பவை அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள். காங்கிரசுக்கு இங்கு ஒரளவிற்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
முதன் முறையாக திமுக-பாமக இணைந்து இந்த தொகுதியில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. பாமகவின் வாக்கு வங்கியாக இங்கு சுமார் 37,000 முதல் 40,000 ஓட்டுகள் உள்ளன. திமுகவிற்கு சுமாராக 30,000 முதல் 40,000 வாக்குகள் உள்ளன. இங்கு காங்கிரசுக்கும் கணிசமான ஆதரவு இருக்கிறது. இதன் படி பார்த்தால் இங்கு பாமக மிக எளிதாக வெற்றி பெற வேண்டும். 2004 பாரளுமன்ற தேர்தலில் கூட இங்கு
திமுக-பாமக-காங்கிரஸ் கூட்டணி அதிக ஓட்டுகளை பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன். சரியான எண்ணிக்கை தெரியவில்லை.
ஆனால் பாமகவின் வெற்றிக்கு முக்கியச் சவாலாக இருக்கப் போவது இரண்டு காரணங்கள்
- பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி
- விஜயகாந்த் factor (அப்படி ஒன்று இருந்தால்)
பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி எந்தளவுக்கு தொகுதியில் பிரபலமாக இருந்தாரோ அதே அளவுக்கு அவருக்கு தொகுதியில் தற்பொழுது கெட்டப் பெயர். தன்னுடைய டாக்டர் தொழிலை மட்டும் பார்க்கிறார். கிராமங்கள் பக்கம் வரவேயில்லை. கிராம மக்களிடம் சரியாக பேசுவதில்லை என்பன போன்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மணிமுத்தாறு பாலம் உடைப்பட்டது மிக முக்கிய தேர்தல் பிரச்சனையாக உள்ளது. டாக்டர் ராமதாசுக்கு மிக நெருக்கமானவர் என்பதால் மட்டுமே டாக்டர் கோவிந்தசாமிக்கு தேர்தலில் சீட் கிடைத்திருக்கிறது. இந்த தேர்தலில் பாமக தோல்வியடைந்தால் அதற்கு முக்கிய காரணகர்த்தா டாக்டர் கோவிந்தசாமி தான்.
அடுத்ததாக சொல்லப்படுவது விஜயகாந்த factor. அவரின் ரசிகர் மன்றத்தினர், சினிமா கவர்ச்சி தவிர கிராமத்து மக்கள் டாக்டர் கோவிந்தசாமி மேல் உள்ள அதிருப்தியை விஜயகாந்த்திற்கு சாதகமாக மாற்றக் கூடும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே விஜயகாந்த்தை அவரது அரசியல் ஆலோசகர் பண்ருட்டியார் இங்கு போட்டியிட வைத்திருக்க கூடும் என்று நினைக்கிறேன். இதன் மூலம் ஓரளவிற்கு கணிசமான வாக்குகளை விஜயகாந்த் பெறக்கூடும் என்று பண்ருட்டியார் நினைத்திருக்க கூடும்.
அதே சமயத்தில் இங்கு முக்கிய போட்டி பாமகவிற்கும் அதிமுகவிற்கும் தான். ஆனால் அதிமுகவில் அதிகம் அறிமுகமில்லாத வேட்பாளர் களமிறங்கி இருப்பது பாமகவிற்கு சாதகமான அம்சம். அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ஆர் என்று இங்கு அழைக்கப்படும் ஆர்.டி.ரங்கநாதன் களமிறங்கி இருந்தால் அதிமுகவிற்கு இன்னும் பலம் சேர்ந்திருக்கும்.
மொத்தத்தில் வி.ஐ.பி தொகுதியாக மாறியிருக்கும் விருத்தாசலத்தில், பாமக தேர்தல் முன்பு வரை தன்னுடைய தோழனாக இருந்த திருமாவளவனின் இழப்பை முக்கியமாக உணரும். பாமக தன்னுடைய தனிப்பட்ட பலத்தை ஓரளவிற்கு இழந்தாலும் திமுக, காங்கிரஸ் என்ற வலுவான கூட்டணி பலத்துடன் இருப்பதால் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நிச்சயம் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது.
விடுதலைச் சிறுத்தைகள் இங்கு பாமகவிற்கு உதவுக்கூடும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.விஜயகாந்த்தே நேரடியாக களத்தில் இறங்கி இருப்பதால் இது நாள் வரை ரசிகர் மன்றங்களுக்கு எதிராக குரல் எழுப்பிக்கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் பாமகவிற்கு Cross-voting செய்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
"கேப்டன்" தன்னுடைய டெபாசிட்டை காப்பாற்றிக் கொள்ளுவார் என்று நம்புகிறேன். இரண்டாமிடம் எதிர்பார்க்க முடியாது.
இரண்டாமிடம் அதிமுகவிற்கோ, பாமகவிற்கோ தான்.
(ஒவ்வொரு தேர்தலிலும் என்னுடைய அப்பாவின் கணிப்பு சரியாக அமைந்திருப்பதை நான் கவனித்து வந்திருக்கிறேன். ஒரு வியபாரியாக இருப்பதால் பலதரப்பு மக்களிடமும் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் நிற்கிறார் என்றதும் ஒரு ஆர்வத்தில் உடனே என்னுடைய அப்பாவையும், விருத்தாசலத்தில் இருக்கும் சில நண்பர்களையும் தொடர்பு கொண்டேன். அவர்கள் கொடுத்த தகவல்களை என்னுடய கணிப்புகளுடன் கலந்து இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்)