வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Saturday, February 05, 2005

திறமை மட்டும் போதுமா ?

நம் வாழ்க்கையில் பெரும்பகுதி அலுவலகத்திலும், பணியிடங்களிலும் சென்று விடுகிறது. ஆனால் என்ன தான் கடுமையாக உழைத்தாலும் பலருக்கு அங்கீகாரமே கிடைப்பதில்லை. சரியான நபருக்கு சரியான நேரத்தில் கிடைக்காத அங்கீகாரம் பல நேரங்களில் அவர்களை ஒரு விரக்தி நிலைக்கு கொண்டுச் சென்று விடும். சிலர் அது நமது தலைவிதி, நாம் செய்யும் வேலையை செய்து, கிடைக்கும் சம்பளத்தை பெற்றுக் கொண்டு இருக்கும் நிலையிலேயே இருந்து விடுவோம் என்றே நினைக்கின்றனர். சிலரோ முன்னேறுவதற்கான உத்தியை தேர்ந்தெடுத்து அதனைச் செயல்படுத்தி திறமையுள்ளவர்களைக் காட்டிலும் மிக எளிதாக முன்னேறி விடுகிறார்கள்.

அலுவலகங்களில் எப்படி உயர் நிலைக்குச் செல்வது ? அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொழுது சில நேரங்களில் எனக்கு சீ என்று போய் விடும். அப்படியிருக்கிறது, அங்கு நடக்கும் கூத்து. நாம் அங்குச் சென்றால் நம்மை ஒரு அற்ப உயிர் போல அங்கிருப்பவர்கள் பார்பார்கள். ஆனால், அவர்களின் மேலாளர்கள் வந்து விட்டால் போதும், நாற்காலியில் இருந்து உடனடியாக எழுந்து நின்று, முதுகு வளைந்து மிகப் பவ்யமாகப் பேசுவார்கள். இவர்கள் வெகு விரைவில் உயர் பதவிக்குச் சென்று விடுவார்கள். சிலர் இருக்கிறார்கள், சுயமரியாதையே அவர்களுக்கு பிரதானம். கடைசிவரைக்கும் அப்படியே இருப்பார்கள்.

சரி..அரசாங்க அலுவலகத்தை விட்டு விலகுவோம். தனியார் அலுவலகங்களின் தற்காலச் சூழ்நிலைக்கு வருவோம். அரசாங்க அலுவலகங்களில் இருப்பது போல "ஐயா", "சார்" "மோர்" என்று மேலதிகாரியை அழைக்கும் பழக்கம் எல்லாம் இங்கு மலையேறி விட்டது. நம்மை விட பல மடங்கு அதிக வயதுள்ள மேலதிகாரியைக் கூட பெயர் சொல்லிக் கூப்பிடுவது, அவர்கள் நம் இடத்திற்கு வந்து நம்மிடம் பேசும் பொழுது கூட கால்மேல் கால் போட்டுக் கொண்டு பேசும் பழக்கம் எல்லாம் மிகச் சாதாரணம். இதனை யாரும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. இந்தப் பழக்கங்களில் இருந்து விலகி மிகப் பவ்யமாக நடந்து கொள்வது தான் பிரச்சனைக்குரியதாக மாறி விடும். பையனுக்கு Confident இல்லை, Communication சரியில்லை என்று முத்திரைக் குத்தி விடுவார்கள்.

அலுவலகத்தில் அங்கீகாரம் பெற பலர் பல வழிகளைக் கையாளுகிறார்கள். உதாரணத்திற்கு எங்கள் அலுவலகச் சூழலை எடுத்துக் கொள்கிறேன். எங்கள் அலுவலகத்தில் நிறைய வசதிகள் உண்டு. பிரேக்பாஸ்ட், லஞ்ச், மாலையில் ஸ்னாக்ஸ், இரவு டின்னர் என அனைத்தும் இலவசம். இது போதாதென்று முற்றிலும் குளிருட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், ஒய்வு எடுக்க படுக்கை அறைகள் என அனைத்தும் உண்டு. வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே தாங்கள் தங்கியிருக்கும் அறைகளுக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள்.திருமணமாகாத நிறையப் பேர் இதனை பணம் சேமிக்க பயன்படுத்திக் கொள்வார்கள். சிலர் தங்களை விளம்பரம் செய்து கொள்ளும் ஒரு வாய்ப்பாக கூட இதனைப் பயன்படுத்திக் கொள்வார்கள். காலையில் 9மணிக்கு வேலைக்கு வந்ததில் இருந்து அலுவலகத்தில் இருக்கும் ஒய்வு அறைக்கு இரவு 11 மணிக்கு படுக்கைக்கு செல்வது வரை அவ்வப்பொழுது சில மின்னஞ்சல்களை அனுப்புவார்கள். பையன் 11 மணி வரைக்கும் உழைக்கிறானே என்ற எண்ணம் மேலாளருக்கு ஏற்படும். அலுவலகத்தில் இருக்கும் நேரத்தில் கொஞ்ச நேரம் வேலை, உடற்பயிற்சிக் கூடத்தில் சில மணி நேரங்கள் செலவிடுவது, காப்பி பிரேக், ஸ்நாக்ஸ் பிரேக் என்று செலவழித்து விட்டு தாங்கள் அலுவலகத்திலேயே பல மணி நேரங்கள் இருப்பதாக, "உழைப்பதாகக்" காட்டிக் கொள்வார்கள். இதனைப் பார்த்து புகழ்ந்து தள்ளி இவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்த மேலாளர்களும் உண்டு. இதைப் போலவே மேலாளர் கண்ணில் படும்படியாக வேலை செய்வது, அவர் கவனத்தைக் கவரும் வகையில் டெக்னிக்கலாக பேசுவது போன்றவையெல்லாம் சிலர் கையாளும் உத்திகள்.

அலுவலகத்தில் முன்னேறுவதற்கு நிறைய Communication தேவைப்படுகிறது. மேலாளர்களுடன் தினசரி பேசுவது, அலுவலக விஷயங்கள் என்றில்லாமல் பிற விஷயங்களும் பேசுவது, மேலாளரிடம் ஒரு தனிப்பட்ட நட்புறவை வளர்த்துக் கொள்வது போன்றவை அவசியம். இவ்வாறு நம்மால் செய்ய முடியவில்லை என்றால் நாம் இருக்கும் நிலையிலேயே காலத்தை ஓட்ட வேண்டியது தான். அதைப் போலவே நாம் ஒரு டீம் லீடராகவோ, ப்ராஜக்ட் லீடாரகவோ இருந்தால் நம் டீம் செய்யும் வேலையை நாம் தான் செய்ததாக வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும். நம்முடைய மேலாண்மை திறமையாலேயே நம்முடைய டீம் சிறப்பாக செயல்படுகிறது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான் நம்முடைய மேலாண்மைத் திறமை அங்கீகரிக்கப்பட்டு பதவி உயர்வுகளைப் பெறமுடியும்.

புதியதாக வேலைக்குச் சேர்ந்தப் புதிதில் இந்தத் திறமையல்லாம் எனக்கு இல்லை. அலுவலகத்திற்கு வருவேன். வேலைப் பார்ப்பேன், கொடுத்த வேலையைச் செய்து விட்டு சென்று விடுவேன். எனது மேலாளரைச் சில நாட்களில் பார்பது கூட இல்லை. இன்றைக்கு கூட நிறைய பேர் இப்படித் தான் இருக்கிறார்கள். இதனால் நம்முடைய திறமை வெளியே அறியப்படுவதில்லை. ஏதோ வருகிறார்கள், போகிறார்கள் என்று மேலாளர்களும் நினைத்துக்கொள்வார்கள். மாறாக நாம் செய்யும் வேலைகளை பலர் அறிய Promote செய்ய வேண்டும். Self Promotion அதிகமாக தேவைப்படுகிறது. பொருட்களுக்கு மட்டும் தானா விளம்பரம். நாமும் நம்மை விளம்பரம் செய்தால் தான் அலுவலகத்தில் முன்னேற முடியும். சிலர் இதனை அற்புதமாகச் செய்வார்கள். அவர்கள் தான் வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள்.

நான் அப்படி செய்தேன், இப்படி செய்தேன் என்று சொல்லவேண்டும் அதுவும், மிக நாசூக்காகச் சொல்லவேண்டும். நாம் நம்மை சுயவிளம்பரம் செய்கிறோம் என்று தெரியாத வகையில் நம் உக்தி அமைய வேண்டும். இந்தக் கலை உங்களுக்கு தெரிந்து விட்டால் அலுவலக Hirearchy ல் மிக வேகமாக முன்னேறி விடலாம். இல்லாவிடில் உங்கள் முன்னேற்றம் வேள்விக்குறி தான்.

இதைப் போலவே சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவையெல்லாம் தானாக கிடைக்கட்டும் என்று காத்திருக்க முடியாது. மேலாளரிடம் சண்டைப் போட்டால் தான் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் எங்கள் அலுவலகத்தில் Appraisal என்று நம் திறமையை மதிப்பீடு செய்து அதற்கேற்றவாறு சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும் முறை உண்டு. இது பெரும்பாலும் மேலாளரிடம் சண்டை போடும் கச்சேரியாக மாறிவிடும். மேலாளரிடம் வாதிட்டு நம்முடைய மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதிகமாக, ஆணித்தரமாக வாதிட்டால் என்ன செய்வதென்றே புரியாமல் மதிப்பெண்களை அதிகமாகக் கொடுக்கும் மேலாளர்களும் இருக்கிறார்கள். நம்முடைய வாதாடும் திறமைக்கேற்ப நல்ல உயர்வு கிடைக்கக் கூடும். நல்ல சம்பள உயர்வு கிடைத்தாலும் திருப்தி அடைந்துவிடக் கூடாது. இது மிகக் குறைவு. நான் அதிகமாக எதிர்பார்த்தேன், பிற நிறுவனங்களில் இதை விட அதிகமாகக் கிடைக்கும் என்று சொல்பவர்களும் உண்டு. இது போன்று கூறினாலாவது அடுத்த உயர்வின் பொழுது இன்னும் அதிகமாகக் கவனிக்கப்படுவோம் என்றே இவ்வாறு சொல்வார்கள்.

மற்ற நிறுவனங்களில் வேலைப் பெற்று, அந்த Offer Letter ஐ கொண்டு இங்கு விலைபேசுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களை இழக்க விரும்பாத மேலாளர்கள் அவர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்தும் விடுவார்கள். இதைப் போலவே அமெரிக்கா செல்லும் வாய்ப்பு வேண்டும் என்று வாதாடி நிறையப் பேர் பெற்றும் இருக்கிறார்கள்.

கல்லூரியில் படிக்கும் பொழுது திறமை மட்டும் போதும், முன்னேறி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அலுவலகத்தில் நுழைந்தவுடன் தான் திறமை மட்டுமே போதாது, மற்ற பிற கலைகளும் வேண்டும் என்று தெரிந்தது. ஒரே நிறுவனத்திலேயே பல வருடங்கள் ஓட்டுவதெல்லாம் இப்பொழுது பழங்கதை. வருடத்திற்கு ஒரு நிறுவனம் என்று அட்டவனைப் போட்டு தாவிக் கொண்டே இருப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுடைய சம்பளம், ஒரே நிறுவனத்தில் பல வருடங்கள் குப்பைக் கொட்டுபவர்களை விட மிக அதிகமாக இருக்கும்.

திறமையும், மேலேக் கூறியுள்ள சிலக் கலைகளையும் கைவரப் பெற்றவர்கள் சீக்கிரமாகவே உயர்பதவிக்குச் சென்று விடுகிறார்கள். அதற்காக அடுத்தவர் பயன்படுத்தும் அதே முறையை நாம் பயன்படுத்தக் கூடாது. நமது குணநலன்களுக்கேற்ப ஒரு உத்தியை நாம் தேர்தெடுத்துக் கொள்ளவேண்டும். திறமை மட்டுமே இருந்து, இந்தக் கலைகளை அறியாதவர்கள் கடைசிவரை ஒரே நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். நமது பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருப்பவரை நாம் நண்பராக பார்க்கலாம். ஆனால் அவர் நம்மை போட்டியாளராகவே கருதிகிறார். இன்றைய அலுவலகச் சூழல் அப்படித் தான் இருக்கிறது. அதில் ஒன்றும் தவறில்லை. அடுத்தவர் காலை வாரி நாம் வெற்றியடைவது தான் தவறு. நம்மை முன்னிறுத்தி அடுத்தவரை விட முன்னேறுவது தவறாகாது. Survival of the Fittest என்ற நியதிக்கேற்ப, நாம் எப்படிச் செயல்படுகிறோமோ அவ்வாறே நமது வெற்றியும் அமையும்.

Leia Mais…