வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Saturday, February 25, 2006

டெல்லி இரவு வாழ்க்கை, ஒரு கொலை

ஜெசிக்கா லால், இவர் ஒரு மாடல். மிகவும் கலகலப்பானவர். இரவு பார்ட்டிகள் மீது இவருக்கு தனிக் கவர்ச்சி உண்டு. பார்ட்டிகளில் மேல் இவர் கொண்ட ஆசை தான் இவரை Tamarind Court என்ற டெல்லியின் பிரபலமான பாரில் மது உற்றிக் கொடுக்கும் bartender வேலையில் சேர்த்து விட்டது. ஒரு மாடலாக இருந்தாலும் பகுதி நேர வேலையாக இதனை ஜெசிக்கா செய்ய காரணம் இத்தகைய பார்ட்டிகள் மீது அவருக்கு இருந்த தனி ஈடுபாடு.

Tamarind Court டெல்லியின் பிரபலமான பணக்காரர்கள் கூடும் இடம். இதனை நடத்திக் கொண்டிருந்தவர் பீனா ரமணி. பீனா ரமணி தான் பணக்காரர்களின் டெல்லி இரவு வாழ்க்கை பிசினஸில் முக்கியமானவர். பார்ட்டிகள் மூலம் இவருக்கு டெல்லியின் பினினஸ் மேக்னட்கள், அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், மாடல்கள் என அனைவருடைய அறிமுகமும் உண்டு. Tamarind Courtல் கூப்பன் முறை மூலம் மது வழங்கப்படுவது வழக்கம். 1999ல் ஒரு கூப்பன் 100ரூபாய். ஒரு கூப்பனுக்கு ஒரு மதுவகை உண்டு. ரம்மோ, விஸ்கியோ ஏதோ ஒன்றை குடிக்கலாம். டெல்லியின் பணக்காரர்கள் எல்லாம் ஒன்று கூடி வாரத்திற்கு ஒரு நாள் குடித்து விட்டு உல்லாசமாக இங்கு இரவை கழித்து விட்டு செல்வார்களாம். போலிஸ் அதிகாரிகள் முதல் மந்திரிகளின் வாரிசுகள் வரை அனைவரும் இங்கு வருவது வழக்கமானாலும் இங்கு மது விற்பனை சட்டவிரோதமாகத் தான் நடந்து கொண்டிருந்தது. அதாவது மது விற்பனைக்கான பர்மீட் Tamarind Courtக்கு இல்லை.

ஜெசிக்கா ஒரு நாள் வழக்கம் போல பார்ட்டிகளில் மது வழங்கிக் கொண்டிருக்க தமது தமிழ் சினிமா வில்லன் மாதிரி மானு சர்மா அங்கு வருகிறார். ஏற்கனவே போதையின் உச்சத்தில் இருந்த அவர், ஜெசிக்காவிடம் மது கேட்கிறார். நேரம் அப்பொழுது அதிகாலை 1.45 மணி. நேரமும் கடந்து விட்டது, மதுவும் தீர்ந்து போய் விட்டது என்கிறார் ஜெசிக்கா. ஆனால் போதை தலைக்கேறி இருந்த மானு சர்மாவுக்கு அது காதில் விழுவதாக இல்லை. வாக்குவாதம் ஏற்படுகிறது. போதையுடன் வெறி ஏற்பட கையில் இருந்த பிஸ்டலை எடுத்து வானத்தை நோக்கி சுடுகிறார், பின் ஜெசிக்காவை சுடுகிறார், ஜெசிக்கா சரிகிறார், வேகமாக அந்த இடத்தில் இருந்து மானு சர்மா அண்ட் கோ எஸ்கேப் ஆகிறது

ஏதோ தமிழ் சினிமாவில் தான் சொல்வதை கேட்க மறுப்பவர்களை வில்லன் சுட்டுக்கொல்வது போல நிஜ வாழ்க்கையிலும் நடந்து விட்டது. இந்த மானு சர்மா ஒரு முன்னாள் மத்திய அமைச்சரின் மகன். அவருடன் இருந்த பலர் பெரும் புள்ளிகள். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் அப்பாவும் அவர்களில் ஒருவர். பணம் விளையாடுகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்த ரத்தக்கறைகள் அழிக்கப்பட்டு சாட்சியங்கள் கலைக்கப்பட்டது. எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது என்கிறார் அந்த பாரின் உரிமையாளர் பீனா ரமணி. ஜெசிக்காவுடன் பாரில் மது வழங்கிக் கொண்டிருந்த சக நண்பர்கள் சட்டது மானு சர்மா கிடையாது என சாட்சியம் அளிக்கின்றனர். மானு சர்மாவும் அவரது கூட்டாளிகளும் விடுதலை செய்யப்படுகின்றனர்.

NDTV இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு நியாயம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்று கூறிக்கொண்டிருக்கிறது. இந்தியத் "திருநாட்டில்" இந்த ஒரு தீர்ப்பு மட்டும் தான் நியாயத்திற்கு புறம்பாக உள்ளது, மற்ற எல்லா தீர்ப்புகளும் மிக நியாயமாக நடந்துள்ளது என்று NDTV கருதுகிறது போலும். நாடெங்கிலும் மக்கள் மத்தியில் இந்த தீர்ப்பு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக NDTV கூறுகிறது. ஒரு வேளை நான் அமெரிக்காவில் இருப்பதால் தான் இந்திய மக்களின் அதிருப்தி எனக்கு தெரியவில்லையோ ?


ஜெசிக்காவை கொன்ற மானு சர்மா போன்ற கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இங்கு யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்தப் பிரச்சனையில் ஆதாயம் தேட முயலும் செயல் தான் எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு பிரச்சனைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அது நாடெங்கிலும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்று NDTV போன்ற செய்தி நிறுவனங்களே செய்தி வெளியிடும் பொழுது அதன் மேல் இருந்த நம்பக்தன்மை சிதறுகிறது. சன் டிவி போன்ற செய்தி நிறுவனமாக NDTV மாறுவது தான் சகிக்க முடியாததாக உள்ளது. இந்தப் பிரச்சனையில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் இந்த தீர்ப்பிற்கு முன்பாகவே இது பற்றி NDTV புலனாய்வு செய்திருக்கலாம். சாட்சியங்கள் கலைக்கப்பட்டது பற்றிய உண்மையை வெளியிட்டிருக்கலாம். குறைந்தப்பட்சம் அவர்களின் பணபலத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஜெசிக்காவின் பெற்றோர்களுக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால் அதனைச் செய்யாமல் இந்த கொலை வழக்கின் தீர்ப்பு வந்துள்ள தற்போதைய காலக்கட்டத்தில் NDTV என்ன செய்ய நினைக்கிறது என்பது புரியவில்லை.

நாடெங்கிலும் இது போன்ற நியாயத்திற்கு புறம்பான தீர்ப்புகள் தொடர்ந்து நீதிமன்றங்களால் வழங்கப்படவே செய்கின்றன. ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரு மாடல், ஒரு அரசியல்வாதி, ஒரு பாரில் சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற மிக பிரபலமான வழக்கில், பொதுமக்களை கவரக்கூடிய சுவாரசியமான வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது நல்ல விளம்பர யுத்தி என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை.

தினத்தந்தியில் வரும் "கள்ளக்காதலன் கொலை", "கள்ளக்காதலால் மனைவி கொலை" போன்ற செய்திகளை விரும்பி தேடிப் படிக்கும் எத்தனையோ நபர்களை பார்த்திருக்கிறேன். இவ்வாறு படிக்கும் வாசகர்களை மனதில் கொண்டே சின்ன செய்தியை கூட கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். விஜய் டிவியில் டாக் ஷோவாக வந்து கொண்டிருந்த ஒரு பிரபலமான நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் இதைப் போன்ற விஷயங்கள் தவிர வேறு எதுவும் இல்லாதது போன்ற நிலை ஏற்பட்டது இருந்தது. தினமும் இது போன்ற பல பிரச்சனைகளை மையமாக வைத்து ஒளிபரப்பி கொண்டிருந்தார்கள். பொதுமக்களின் இந்த சுவாரசிய விருப்பத்தின் காரணமாகவே செய்தி நிறுவனங்களும் இந்தச் செய்திகளையே வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள்.

ஜெசிக்காவின் கொலை வழக்கில் வெளியாகி இருக்கும் தீர்ப்பு பணபலத்திற்கு முன்பாக இந்தியாவில் நீதி, நியாயம் என்பதெல்லாம் கிடைக்காது என்பதை மற்றொரு முறை வலுவாக நிருபித்து இருக்கிறது.

Leia Mais…
Saturday, February 18, 2006

வைகோவின் எதிர்காலம்

தமிழக அரசியலில் வைகோ குறித்த ஒரு குழப்பமான எண்ணமே தற்பொழுது உள்ளது. இந்தப் பக்கம் தாவுவதா, அந்தப் பக்கம் செல்வதா என்பது குறித்து கணநேரத்தில் முடிவு செய்து தாவி விடும் இந்திய/தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் இந்தக் குழப்பம் விந்தையாகத் தான் இருக்கிறது. ஒரு புறம் அவரை சிறையில் தள்ளிய ஜெயலலிதா, மற்றொரு புறம் அவரது பலத்தை மட்டும் உபயோகித்து கொண்டு ஆனால் அவரை அதிகம் வளர விடாமல் செய்யும் நோக்கத்தில் இருக்கும் கலைஞர் என அவரது அரசியல் வாழ்வின் இரு எதிரிகளில் ஒரு எதிரியை தேர்ந்தெடுத்தாக வேண்டிய சூழ்நிலையில் வைகோ இருக்கிறார்.


கொஞ்சம் அதிக இடங்களை கொடுத்தால் திமுகவிடமே தங்கி விடலாம், கொள்கைவாதி என்ற இமேஜையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற நப்பாசை.அந்த நப்பாசையால், தன்னுடைய பேரத்தை தக்க வைத்துக் கொள்ள இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று வைகோ ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறார். திட்டமிட்டு இந்தக் குழப்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அந்தக் குழம்பிய குட்டையில் பெரிய மீன்களாக பிடித்து விட வைகோ முனைந்துக் கொண்டிருக்கிறார்.

வைகோ முன் இருக்கும் குழப்பாக ஊடகங்கள் எழுதிக் கொண்டிருப்பது இரண்டு தான்.

அதிக இடங்களா ? காப்பாற்ற வேண்டிய இமேஜா ?

அதிக இடங்கள் முக்கியம் இல்லை என்றால் எதற்கு அரசியல் என்ற கேள்வி வரும். இமேஜ் முக்கியம் என்றால், அதை மட்டும் வைத்து கொண்டு வைகோ எத்தகைய அரசியல் நடத்தப் போகிறார் என்ற கேள்வி எழும்.


இமேஜை காப்பாற்ற நினைத்தால் சுந்தரமூர்த்தி கூறுவது போல திக, தமிழர் தேசியக் கட்சி போன்றவை போல மதிமுகவை மாற்றி விடலாம். மதிமுக தொண்டர்கள் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் சென்று விடுவார்கள். கூடாரம் காலியாகிய பிறகு திருவாசகம் விழாவில் இளையராஜா கூறியது போல அவரை ஒத்தவர்களுடன் சேர்ந்து அவரது பேச்சாற்றலைக் கொண்டு உலகெங்கிலும் தமிழ்மணம் பரப்பலாம். கிட்டத்தட்ட ஒரு கிருபானந்த வாரியார் போல மாறிவிடலாம். ஆன்மீகத்திற்கு பதிலாக பெரியாரிசத்தையும், தமிழ் உணர்வையும் பரப்பலாம்.

ஆனால் வைகோ அதை செய்ய நினைக்கிறாரா என்ன ?

அதிகார பலம், சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் இருக்கும் எண்ணிக்கையின் பலம் மற்றும் தேர்தலில் வெற்றி இவை தான் அரசியலில் நீடித்து நிற்க தேவை. வெற்றி ஒன்றே கட்சியின் தொண்டர்களையும், பிற கட்சி தலைவர்களையும் வசியப் படுத்தும் வசிய மருந்து. அந்தப் பலத்தை எதையாவது செய்து பெற்றுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் இமேஜை காப்பாற்ற வேண்டுமானால் தனி பலம் தேவை. அந்த தனி பலம் வைகோவிடம் இல்லை.

சிறையில் வைகோ தனக்கான திட்டமாக சிலவற்றை முடிவு செய்திருந்தார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு வைகோவின் சில நடவடிக்கைகளும் அவ்வாறே இருந்தன. பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவதில்லை என முடிவு செய்தார். நடைபயணம் மேற்க்கொண்டார்ர். அந்த முயற்சிகளின் பலனை அறுவடை செய்யும் நேரமிது. அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான தருணம் இது. அதனால் தான் அவருடைய திட்டங்களின் அடுத்த அத்தியாயமாக இந்தக் "குழப்ப நாடகம்" அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

வைகோவின் கடந்த கால முடிவுகளும் அவரை இந்தத் தேர்தலில் ஒரு உறுதியான முடிவை எடுக்க தூண்டியுள்ளன. அந்த உறுதியான முடிவு "எண்ணிக்கை" மட்டுமே. இமேஜ் அல்ல.

கடந்த காலங்களில் வைகோவின் சரியான திட்டமிடாத அரசியல், சந்தர்ப்பச் சூழ்நிலை, உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள், இமேஜை காப்பாற்றும் பயம், அரசியல் தடுமாற்றம் இவற்றால் மதிமுக அழிவின் விளிம்பிற்குச் சென்றது. இரு பெரும் திராவிட கட்சிகளின் தலைவர்களும் மதிமுகவை அழிப்பதில் காட்டிய பெரும் அக்கறையும் அதனை எதிர்த்து வீம்பிற்காக தன்னந்தனியாக சாதூரியம் இல்லாமல் போராட முற்பட்டதும் மதிமுகவை காணாமல் போக செய்திருக்கும். வைகோவின் போராடும் குணம் ஒன்று மட்டுமே அவரையும் அவரது கட்சியையும் அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றியது.

ஆனால் எந்தவித சரியான பாதையும், செயல் திட்டமும் இல்லாமல் போராடிக் கொண்டே இருப்பதில் என்ன பயன் இருக்க முடியும் ? வைகோ இதனை யோசிக்காமல் இருந்திருக்க முடியாது.

வைகோவின் அரசியல் பயணத்தில் முக்கிய கட்டமான திமுகவின் பிளவு. அந்த ஆரம்பம் மிகுந்த ஆரவாரத்துடனே இருந்தது. தமிழக ஊடகங்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு திமுக இரண்டாக பிளவு பட்டு தொண்டர் பலமும், இளைஞர் கூட்டமும் வைகோ பின் திரண்டு இருப்பதாக எழுதின. சினிமாவில் இருந்து தான் சென்னை கோட்டையை எட்ட முடியும் என்று வலுவாக நம்பப்பட்ட நேரத்தில் தன்னுடைய அனல் கக்கும் பேச்சாற்றல் ஒன்றை மட்டுமே கொண்டு தமிழகத்தின் கோட்டையை தொட்டு விடும் தூரத்தில் வைகோ இருப்பதாக நம்பப்பட்டது. ஊடகங்கள் அதனை மிகைப்படுத்தி எழுதின என்றாலும் முழுமையான பொய் என்றும் சொல்லி விட முடியாது. மதிமுக தான் சந்தித்த முதல் இடைத் தேர்தலில் திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

திமுகவின் பலத்தை குறைக்க வேண்டுமானால் தனக்கு சாதகமான ஒரு நல்ல கூட்டணியை அமைத்திருக்க வேண்டும். ஆனால் வைகோ அதனைச் செய்ய வில்லை. திமுகவின் பாரம்பரிய பலம் வடமாவட்டங்கள் தான். அங்கிருந்த பாமகவுடன் கூட்டணி அமைத்திருக்கலாம். ஆனால் அவர் தமிழகத்தில் ஒன்றுக்கும் உதவாத மார்க்ஸ்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைத்தார். கலைஞர் தனது வழக்கமான அரசியல் சாணக்கியத்தனத்தை பயன்படுத்தி மூப்பனாரை வளைத்துப் பிடித்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையும் அப்பொழுது வைகோவிற்கு எதிராகவே அமைந்தது. தமிழகத்தில் கரைபுரண்டோடிய "ஜெ எதிர்ப்பு அலையில்" வைகோவால் கரை சேர முடியவில்லை. ஜெ எதிர்ப்பு, தமிழ் மாநில காங்கிரஸ் - திமுக கூட்டணி போன்றவைக்கு மத்தியில் தனதுசொந்த ஊரில் கூட வைகோவால் வெற்றி பெற முடியவில்லை.

கலைஞர் ஆட்சியை பிடித்ததும், வைகோ தன் சொந்த தொகுதியில் கூட தோல்வி அடைந்ததும் வைகோவின் கூடாரத்தில் இருந்தவர்களை திமுக நோக்கி திருப்பியது. ஆனாலும் 1996 தேர்தலில் வைகோ 15லட்சம் ஓட்டுகளை பெற்றிருந்தார். வைகோ அன்று அடைந்த சரிவில் இருந்து பிறகு மீளவே இல்லை. மறுபடியும் கடந்த சட்டமன்ற தேர்தலில் மற்றொரு மோசமான முடிவை எடுத்தார். அது தான் அவரது அரசியல் வாழ்க்கையை படுகுழிக்கு கொண்டு சென்றது.

கடந்த கால தவறுகள் வைகோவிற்கு நல்ல பாடத்தையே கொடுத்திருக்கின்றன. அதனால் தான் அவர் இன்று குழப்ப நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் திடமான ஒரு முடிவை எப்பொழுதோ எடுத்து விட்டதாக நான் நினைக்கிறேன். இது சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக மட்டுமே எடுக்கும் முடிவல்ல. திமுக எத்தனை தொகுதிகளை அவருக்கு விட்டு கொடுக்கும் என்பது அவரால் கணிக்க முடியாத சிதம்பர ரகசியம் அல்ல. கூட்டணியில் இருந்து நழுவ ஒரு நல்ல காரணத்தை தேடிக் கொண்டு தனது பேரத்தை அதிகரித்து கொண்டிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். நழுவக் கூடிய நேரமும் தற்பொழுது வந்து விட்டது.

இன்று தமிழகம் கூட்டாட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். கடந்த காலங்களில், அலை வந்தது போல ஒரு கூட்டணிக்கே தமிழக மக்கள் தொடர்ந்து வாக்களித்து வந்துள்ளனர். ஆனால் இம் முறை அது நடக்கப் போவதில்லை என்பது எனது கணிப்பு.

கடந்த சட்டமன்ற தேர்தல் கூட்டணி பலத்திற்கும் தற்போதைய கூட்டணி பலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மதிமுக-அதிமுக -விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் திமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணிக்கு அது ஒரு சரியான மாற்று கூட்டணியாகவே அமையக்கூடும். அதிமுக, மதிமுகவின் பலம் தென்மாவட்டங்கள் தான். திமுக-பாமக-விடுதலைச் சிறுத்தைகள் வடமாவட்டங்களில் பலமாக இருப்பவை. விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் சேரும் பட்சத்தில் வடமாவட்டங்கள் திமுக கூட்டணிக்கு உறுதியாக கிடைக்கும். ஆனால் திருமாவளவன் அதிமுக கூட்டணியில் சேருவார் என்றே இப்பொழுது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ. பலம் இருக்க வேண்டும். அதுவும் தவிர இந்த தேர்தலில் வைகோ பெறும் எண்ணிக்கை தான் அவரது எதிர்கால தமிழக அரசியல் நிலையை தீர்மானிக்கப் போகிறது. பாமக கடந்த சில தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் தமிழக அரசியலில் அதற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்துள்ளன. இத்தகைய வெற்றியை மதிமுகவும் இன்று பெற்றாக வேண்டும்.

இந்திய அரசியலில் மாநில கட்சிகள் வளர்ச்சி அடைந்து மைய அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பது போல, தமிழக அரசியலும் இன்று சிதறுண்டு காணப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் வாக்கு வங்கிகள் பாமக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகளால் ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட தேவர், நாடார் இன வாக்குகளும் எதிர்காலத்தில் இவ்வாறு சிறு கட்சிகளால் சிதறுண்டு போகும் அபாயமும் எழுந்துள்ளது.

இந் நிலையில் தன்னுடைய குறுகிய அரசியல் பலத்தை பலப்படுத்துவதும், தனது தளத்தை விரிவுபடுத்துவதும் வைகோவிற்கு முக்கியம். திமுக தரும் 20 தொகுதிகளை கொண்டு வைகோ அரசியலில் ஒன்றும் சாதித்து விட முடியாது. ஜெயலலிதா தரத் தயாராக இருக்கும் 40-50 தொகுதிகள் கவர்ச்சிகரமான பேரமாகவே உள்ளது. அதில் கணிசமான தொகுதியில் வெற்றி பெற்றால் மதிமுக அடுத்த நிலைக்கு தயாராகும். அடுத்த நிலையாக வைகோ கருதுவது கலைஞருக்குப் பின் இருக்கும் திமுக. அவர் நினைப்பது எல்லாம் கைகூடுமா என்பது தெரியவில்லை. ஆனால் it's worth a gamble.

இந் நிலையில் ஜெயலலிதா தன்னை கைது செய்தது போன்ற செண்ட்டிமெண்ட் விஷயங்களில் தனது கவனத்தை வைகோ சிதற விட மாட்டார். தமிழக அரசியலில் அவரது Mr.Clean, கொள்கைவாதி என்ற இமேஜ் சரியப்போகிறது. அந்த இழப்பு தேர்தலில் வெற்றியாக மாறுமா, எதிர்காலத்தில் வைகோ பெரிய சக்தியாக மாறுவாரா என்பதை இந்த தேர்தலும், எதிர்வரும் காலங்களும் தான் பதில் சொல்ல வேண்டும்.வைகோ அவ்வாறு ஒரு சக்தியாக உருமாறும் பட்சத்தில் தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்று தலைவருக்கு காணப்படும் வெற்றிடம் நிரப்பப்பட்டு விடும்.

Leia Mais…
Sunday, February 05, 2006

கார்டூன் விவகாரம்

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபி அவர்களைப் பற்றி டென்மார்க் பத்திரிக்கையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட கார்டூன்கள் இஸ்லாமியர்களுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மற்றொரு பெரும் புயலை ஏற்படுத்தி உள்ளது. டென்மார்க், நார்வே போன்ற நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக இஸ்லாமிய நாடுகள் அச்சுறுத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பல இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போராட்டத்தின் உச்சகட்டமாக லெபனானில் டென்மார்க் தூதரகத்தை இஸ்லாமிய ஆர்பாட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியிருக்கிறார்கள்.பல மேற்கத்திய நாடுகளின் பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அந்த கார்டூன்கள் மறுபிரசுரம் செய்யப்படுகின்றன. தங்களுடைய கருத்துரிமைக்கு எதிராக இது இருப்பதால் தாங்கள் இது போன்ற கார்டூன்களை வெளியிடவே செய்வோம் என்ற போக்கில் அதே கார்டூன்களையும், வேறு சில புது கார்டூன்களையும் அமெரிக்க, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த சில பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. இணையம் எங்கும் இது போன்ற பல கார்டூகள் தற்பொழுது கொட்டிக் கிடக்கின்றன.

உருவ வழிபாடும், நபிகள் நாயகத்தை உருவமாக வரைவதையும் இஸ்லாம் மதம் தடை செய்கிறது. தங்களுடைய மத உணர்வை புண்படச் செய்து விட்டதாக இஸ்லாமியர்கள் கொதித்து எழ, மற்றொரு சர்சைக்கு இது அடித்தளமிட்டு இருக்கிறது. ஏற்கனவே இஸ்லாமிய மக்களிடையே மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான உணர்வுகளுக்கு இது மேலும் உரமூட்டி இருக்கிறது.

இந்தப் பிரச்சனையின் பிண்ணணி என்ன ?

முகமது நபியைப் பற்றி குழந்தைகளுக்காக புத்தகம் (The Quran and the prophet Muhammad's life) எழுதிய டென்மார்க் எழுத்தாளர் Kare Bluitgen என்பவர் முகமது நபி அவர்களை குறித்து குழந்தைகளுக்கு விளக்க தனக்கு முகமது நபி அவர்களை விளக்கும் சித்திரம் தேவைப்படுவதாகவும், ஆனால் அதனை வரைந்து கொடுக்க கூடிய தைரியம் யாருக்கும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். முகமது நபி அவர்களை உருவமாக வரைவது இஸ்லாமியர்களிடம் இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் யாருமே இதற்கு முன்வர வில்லை.


இதையெடுத்து Jyllands-Posten பத்திரிக்கை செப்டம்பர் 30, 2005ல் "முஸ்லீம்கள் தங்களுக்கு தனியான சிறப்பு இடத்தை கேட்கிறார்கள். தற்பொழுது இருக்கும் சுதந்திர உலகில் இது யாருக்கும் கிடைக்காது" என்று கூறி முகமது நபியை கார்டூனாக வெளியிட்டுள்ளது. டென்மார்க்கில் உள்ள காட்டூனிஸ்டுகளிடம் முகமது நபியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படியே வரையுங்கள் to draw Muhammad as they see him என்று கூறியிருக்கிறது.

இவ்வாறு தான் முகமது நபியை சித்தரிக்கும் வகையில் 12 கார்டூன்கள் வெளியிடப்பட்டன.

இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. இவ்வாறு கார்டூன்கள் வெளியிடுவது சர்சையைக் கிளப்பக் கூடும் என்பது தெளிவாக தெரிந்திருந்தும் Jyllands-Posten விஷமத்தனமாக இதனை செய்துள்ளது. இது பத்திரிக்கை சுதந்திரம் என்று கூறும் Jyllands-Posten ஒரு முறை சர்சையைக் கிளப்பக் கூடும் என்று கூறி ஒரு கிறுத்தவ செய்தியை வெளியிட மறுத்த தகவலும் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அப்பொழுது பத்திரிக்கைச் சுதந்திரத்தைப் பற்றி அப் பத்திரிக்கை நினைக்கவில்லை என்பதும் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புண்பட செய்யும் பொழுது மட்டும் பத்திரிக்கைச் சுதந்திரம் என்று கூறுவதும் மேற்கத்திய ஊடகங்களின் இரட்டை வேடமே.

முகமது நபி பல் வேறு காலக் கட்டங்களில் உருவமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சில இணையத்தளங்கள் எழுதியுள்ளன. முகமது நபி வெவ்வேறு காலக்கட்டங்களில் உருவமாக வரையப்பட்ட சித்திரங்களையும் சில இணையத் தளங்களில் பார்த்தேன். எனவே இஸ்லாமியர்கள் கூறும் வாதம் பொருந்தாது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. சில இஸ்லாமியர்கள் நபிகள் அவர்களை படமாக வரைவது தவறு கிடையாது என்று சொல்வதாகவும் அந்த ஊடகங்கள் கூறுகின்றன.

ஆனால் Jyllands-Posten வெளியிட்ட கார்டூன்கள் - கேலிச் சித்திரங்கள். இது வரை முகமது நபியை யாரும் இது போல வரைந்ததில்லை என்பதை இந்த ஊடகங்கள் கூறாமல் பிரச்சனையை திசை திருப்ப பார்க்கின்றன. அதுவும் தவிர இந்த 12 கார்டூன்களில் சில கார்டூன்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களையும், மிதவாத இஸ்லாமியர்களையும் எரிச்சல் படுத்தவே செய்யும்.

ஒரு கார்டூனில் முகமது நபியின் தலைக் கவசத்தில் வெடிகுண்டு தீப்பற்ற வைத்துள்ளது போல உள்ளது. மற்றொன்றில் இறந்த பின்பு மேலே செல்லும் தற்கொலை குண்டுதாரிகளை முகமது நபி வரவேற்பது போன்ற படம் உள்ளது. முகமது நபியை பயங்கரவாதியாக சித்திரிக்கும் முயற்சியாக முஸ்லீம்கள் இதனை பார்க்கின்றனர். முகமது நபியை உருவமாக வரைவதே தீவிர பிரச்சனையாகும் பொழுது இவ்வாறான செயல் எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் இருக்க முடியாது. விஷமத்தனமான சர்சைகளுக்கு அடிபோடவே இவ்வாறான செயல்கள் செய்யப்படுகின்றன.

இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும், ஊடகங்களும் கடந்த காலங்களில் செயல்பட்ட விதம், ஆப்கானிஸ்தானை சோவியத் யுனியன் ஆக்கிரமித்தது போன்றவையே இஸ்லாமிய தீவிரவாதம் வளர முக்கிய காரணம். ஜிகாத் இயக்கங்கள் தோன்ற காரணமே மேற்கத்திய நாடுகள் தான்.

அதன் பிறகு இராக் மீது படையெடுத்தது, அதில் பலியான பெண்கள், குழந்தைகள் போன்றவை இஸ்லாமிய மக்களிடையே அமெரிக்க, மேற்கத்திய நாடுகள் மீதான துவேஷத்தை பன் மடங்கு அதிகரித்தன. இஸ்லாமிய மக்களிடம் ஏற்பட்டுள்ள அந்த அதிருப்தியை அதிகரிக்கும் வண்ணம் ஈரானை அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும் அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன.இப்பொழுது இது போன்ற விவகாரங்கள் மேற்கத்திய நாடுகளுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் இருக்கின்ற இடைவெளியை அதிகரிக்கவே செய்யும். சில இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் கார்டூன் வெளியிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை கொல்லப்போவதாக அச்சுறுத்தி இருக்கின்றன. இது போன்ற செயல்கள் நடக்கும் பொழுதெல்லாம் சில தீவிரவாதிகள் உருவாகிறார்கள் என்பதை மலிவு விலை விளம்பரத்திற்காக சர்ச்சையை கிளப்பும் ஊடகங்கள் எப்பொழுது புரிந்து கொள்ளுமோ ?. அது புரிந்து கொள்ள படாத வரை தீவிரவாதம் பெருகிக் கொண்டே தான் இருக்கும். எத்தனை நாடுகளை கூட்டணி அமைத்து தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்டாலும் அதனால் பலன் ஏதும் இருக்கப் போவதில்லை.

உலகில் சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் அனைவருமே பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விஷமத்தனத்தை கண்டிக்கவே செய்வார்கள்

படங்கள் : BBC

Leia Mais…

நெய்வேலியின் 50 ஆண்டுகள்

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. மன்மோகன் சிங் நெய்வேலியில் பொன்விழா ஆண்டை நேற்று துவக்கி வைத்துள்ளார்.1956ம் ஆண்டு தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது (Neyveli Lignite corporation - NLC).நெய்வேலி உருவாகிய கதை

நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை முதலில் கண்டவர் ஜம்புலிங்க முதலியார் என்பவர் தான். இவரது நிலத்தில் 1935ம் ஆண்டு ஆழ் குழாய் கிணறுகள் தோண்ட துவங்கிய பொழுது கறுப்பு நிறத்திலான பொருள் கிடைத்தது. இதனை கறுப்பு களிமண் என்று நினைத்து அப்பொழுது யாரும் பொருட்படுத்த வில்லை. ஆனால் அது காய்ந்த பிறகு தீப்பற்றி கொண்ட பொழுது இது ஏதோ ஒரு எரி பொருள் என்று ஜம்புலிங்க முதலியார் உணர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அரசு சில நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்தப் பணியில் தாமதம் ஏற்பட்டு கொண்டே இருந்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 1943-47 இடையே பல ஆழ் குழாய் கிணறுகளை இங்கு அரசு தோண்ட துவங்கியது. கோஷ் என்பவர் தலைமையில் ஆழ் குழாய் கிணறு தோண்டும் பணி துவங்கியது. விருத்தாச்சலம், மந்தாரகுப்பம் (பழைய நெய்வேலி) பகுதிகளில் தோண்டப்பட்ட ஆழ் குழாய் கிணறுகளின் மூலம் இந்தப் பகுதியில் இருக்க கூடிய நிலக்கரி வளம் உறுதி செய்யப்பட்டது.

பல சோதனைகளுக்குப் பிறகு 1953ம் ஆண்டு நிலக்கரி தோண்டும் பணி துவங்கியது. 1955ம் ஆண்டு இது மாநில அரசிடம் இருந்து மைய அரசுக்கு மாற்றப்பட்டது,

1956ம் ஆண்டு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது.

(என்.எல்.சி இணையத் தளத்தில் ஜம்புலிங்க முதலியார் குறித்து சரியாக கூறப்பட வில்லை. என்றாலும் நெய்வேலியின் நிலக்கரி வளத்தை முதலில் அறிந்தவர் அவர் தான் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை)

இது தான் நெய்வேலியின் சுருக்கமான கதை

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்படும் முன்பு நெய்வேலியைச் சுற்றிலும் பெரும்பாலும் முந்திரி காடுகளும், வயல் வெளிகளும், பல சிறு கிராமங்களும் இருந்தன. நெய்வேலி நகரம், சுரங்கம், அனல்மின் நிலையம் ஆகியவற்றை அமைக்கும் பொருட்டு இங்கிருந்த பல கிராம மக்கள் வெளியேற்றப் பட்டனர். அவர்களின் வாழ்க்கை தேவையாக இருந்த நிலங்கள் பறிக்கப்பட்டதால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அம் மக்கள் குடியிருக்க மாற்று இடங்களை வழங்கிய என்.எல்.சி நிர்வாகம் அவர்களுக்கு உரிய நஷ்ட ஈடோ, வாழ்க்கை தேவைக்கான மாற்று ஏற்பாடோ வழங்கவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் என்.எல்.சி. வழங்கிய மாற்று இடங்களுக்கான "பட்டா" என்று சொல்லப்படும் நில உரிமை கூட அம் மக்களின் பெயர்களில் இல்லை. சுருங்கச் சொன்னால் நெய்வேலியில் குடியிருந்த மக்களை அப்படியே அகற்றி வேறு பகுதிகளில் குடிஅமர்த்தி விட்டனர். நெய்வேலியில் நிலம் எடுத்தவர்களுக்கு வேலை வழங்கும் உத்திரவாதத்தை வழங்கிய நிர்வாகம் சிலருக்கு மட்டுமே வேலை வழங்கியது. பலருக்கு வேலை வழங்க வில்லை. இதனால் பல குடும்பங்கள் ஏழ்மை நிலையில் இருக்க நேரிட்டது. நிலம் எடுத்தவர்களுக்கு வேலை என்பது மிக முக்கியமான பிரச்சனையாக பல காலமாக நெய்வேலியில் பேசப்பட்டு பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தாலும் 1990 வரை பலன்
ஏதும் ஏற்படவில்லை.இங்கிருந்த பல கிராம மக்கள் வன்னியர் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பாமக தொடங்கப்பட்ட பிறகு இந்தப் பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு பாமக தலைவர் ராமதாஸ் நேரடியாக நெய்வேலி வந்து மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினார். அதன் பிறகு என்.எல்.சி நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகளால் நிலம் இழந்த ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒருவருக்கு வேலை, நஷ்ட ஈடு போன்றவை வழங்க நிர்வாகம் ஒப்புக் கொண்டது. பலருக்கு இதன் மூலம் வேலை கிடைத்தது. பல குடும்பங்களின் பொருளாதார நிலையும் உயர்ந்தது என்று சொல்லலாம்.

நெய்வேலி தனியார் மயமாக்கப்படும் என்ற அச்சம் இங்கிருக்கும் ஊழியர்களுக்கு உண்டு. இரண்டாம் அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட் - Zero unit தனியார் மூலம் மின் உற்பத்தி பெறும் நிலை ஏற்பட்ட பொழுது இங்கு பல போராட்டங்கள் வெடித்தன.

நெய்வேலி நிர்வாகத்தில் தொழிற்சங்கங்களின் தலையீடு ஒரு காலத்தில் அதிகம் இருந்தது. தொழிற்சங்க தலைவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, நெய்வேலியில் வழங்கப்படும் வேலைகள், Apprentice போன்றவற்றில் தொழிற்சங்கங்களின் ஆதரவு பெற்றவர்களுக்கு சலுகைகள் போன்றவை நெய்வேலி தொழிற்சங்க தலைவர் பதவியை கவர்ச்சிகரமான பதவியாக, பணம் சாம்பாதிக்க கூடிய பதவியாக மாற்றி இருந்தது. தொழிற்சங்கங்களின் தேர்தல் ஒரு எம்.எல்.ஏ தேர்தல் அளவுக்கு இங்கு பிரபலமாக இருக்கும். ஆரம்ப காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சார்ந்த தொழிற்சங்கங்களுக்கே நிர்வாக அங்கீகாரம் கிடைக்கும். இதனை எதிர்த்து இடதுசாரி தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றன. பாமக, விசி போன்ற கட்சிகளின் வளர்ச்சிக்குப் பிறகு இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டது
நெய்வேலியில் பலமான தொழிற்சங்கம் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் - தொமுச தான். இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் தொழிற்சங்கம். பாமகவின் தொழிற்சங்கம் மூன்றாவது இடத்திலும், இடதுசாரிகளின் தொழிற்சங்கம், அதிமுக ஆகியவை நான்காம், ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன. முன்பு
என்.எல்.சி நிர்வாகம் முதல் ஐந்து இடம் பெறும் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கும். ஆனால் இப்பொழுது முதல் இடம் பெறும் ஒரு தொழிற்சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நெய்வேலி சார்ந்த சில விடயங்கள்
 • நெய்வேலியின் குடிதண்ணீர் - சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட பல நேரங்களில் லாரிகள் மூலம் நெய்வேலியில் இருந்து தான் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. நெய்வேலி சுரங்கத்தின் மேற்பகுதியில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றினால் தான்
  நிலத்தடி நீருக்கு கீழே இருக்கும் நிலக்கரியை எடுக்க முடியும். இவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீர் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குடிதண்ணீராக நெய்வேலியில் வழங்கப்படுகிறது. இந்த தண்ணீர் லாரிகள் மூலமாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வீராணம் குழாய் மூலமும் நெய்வேலி தண்ணீரை சென்னைக்கு கொண்டு செல்ல அரசு திட்டம் வகுத்தது.

  இது தவிர நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வெளியாகும் குடிதண்ணீருக்கு உதவாத உபரி நீர், நெய்வேலி சுற்றிலும் இருக்கின்ற நிலங்களுக்கு பாசனத்திற்குவழங்கப்படுகிறது. இதற்காக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த நிலத்தில் விளையும் நெல்லுக்கு பெரிய விலை இல்லை. காரணம் நிலக்கரி சார்ந்த தண்ணீர் என்பதால் விளையும் நெல் அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல என்ற கருத்து உள்ள. உள்ளூரில் இந்த நெல் விற்பதில்லை. வெளியூரில் விற்கிறார்கள். நெய்வேலியைச் சுற்றிலும் இருக்கின்ற பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. இது நெய்வேலியைச் சுற்றி இருக்கிற நிலங்களின் விவசாயத்தை பாதிக்கிறது. இதற்கு நெய்வேலியின் சுரங்கங்கள் தான் காரணம். நிலக்கரி எடுக்கும் பொருட்டு நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதால் எதிர்காலத்தில் நிலத்தடி நீருக்கு தட்டுபாடு இருக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுற்றுப்புறச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை உள்ளது.

 • மின்சாரம் - மின்சாரம் தயாரிக்கப்படும் நெய்வேலியிலில் மின்சாரம் மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் நெய்வேலி நிர்வாகத்தின் கீழ் இருந்த எங்கள் பகுதியில் நான் ஏழாவது படிக்கும் வரையில் மின்சாரம் இல்லை என்பது தான் ஆச்சரியம். எங்கள் வீடும், கடையும் நெய்வேலி நகரத்திற்கு (Neyveli Township) வெளியே இருக்கும் புறநகரில் உள்ளது (தாண்டவன் குப்பம்). எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் மின்சாரம் வழங்கப்படவேயில்லை. ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக எங்கள் பகுதிக்கு வந்த என்.எல்.சி நிர்வாக இயக்குனர் எம்.பி.நாரயணனிடம் வியபாரிகள் சங்க தலைவரக இருந்த என் அப்பா வழக்கம் போல மனு கொடுத்தார். மின்சாரம் தயாரிக்கும் நெய்வேலியின் ஒரு பகுதியைச் சார்ந்த வீடுகளுக்கு மின்சாரம் இல்லை என்பது புது நிர்வாக இயக்குனராக வந்த நாராயணனுக்கு அதிர்ச்சியை அளித்தது. உடனே மின்சாரம் வழங்க உத்தரவிட்டார். மின்சாரமும் உடனே வழங்கப்பட்டது. (ஒரு உத்தரவு மூலம் உடனே வழங்கப்பட்ட மின்சாரம் இத்தனை நாள் ஏன் வழங்கப்பட வில்லை ? பதில் இல்லை). எனக்கு அப்பொழுது அது மகிழ்ச்சியான ஒரு தருணம். தொலைக்காட்சி பெட்டி வாங்கலாமே என்பது தான் அந்த மகிழ்ச்சிக்கு காரணம்.

  இன்றைக்கு கூட நெய்வேலியின் நிர்வாகத்திற்கு உட்பட்ட சில குடிசைப் பகுதிகளில் மின்சாரம் இல்லை என்பது வருத்தமான உண்மை. இந்தப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களாக என்.எல்.சி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் அந்தப் பகுதிகள் பல காலமாக
  அப்படியே தான் இருந்து வருகிறது.

 • மரங்கள் சூழ்ந்த நகரம் என்று நெய்வேலி நகரத்தைச் சொல்லலாம். ஒவ்வொரு வீட்டிலும் பல மரங்கள் இருக்கும். மிக அழகான நேர்த்தியான சாலைகள் கொண்ட குட்டி நகரம் நெய்வேலி நகரம்

 • நெய்வேலியில் எழுத்தாளர்களும், இலக்கிய அமைப்புகளும் நிறைய இருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் நெய்வேலி நிர்வாகத்தின் கீழ் ஒரு நல்ல நூலகம் இயங்கி வருகிறது என்பது உண்மை. நெய்வேலியில் வாசகர்களுக்கு வசதிகள் மிக அதிகம். எனக்குக் கிடைத்த வசதி "நடமாடும் நூல் நிலையம்". ஒரு பேருந்தை நூல் நிலையமாக மாற்றி, நெய்வேலி பொது நூலகத்தில் இருந்து வெகுதூரத்தில் இருக்கும் பல் வேறு பகுதிகளுக்கும் அனுப்புவார்கள். வாரத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டுக்கு எதிரிலேயே அந்தப் பேருந்து நிற்கும். பல நல்ல எழுத்துக்களை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

  ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தக கண்காட்சி நடப்பது வழக்கம். நிறைய கூட்டம் வரும். புத்தகம் வாங்குவதை விட பக்கத்தில் இருக்கும் கேண்டீனுக்கு நிறையப் பேர் செல்கிறார்கள் என்று நான் நினைப்பேன். புத்தக கண்காட்சி என்றால் எனக்கு தெரிந்த வரையில் நெய்வேலியில் இருக்கும் அத்தனை குடும்பங்களும் வட்டம் 10க்கு ஒரு முறையாவது சென்று விடுவார்கள். ஒரு பொழுது போக்கு அவ்வளவு தான்.
தற்பொழுது நெய்வேலி பொன்விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மின்மோகன் சிங் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். இரண்டாவது சுரங்க விரிவாக்கத் திட்டம்.

இது போன்ற திட்டங்களை பார்க்கும் பொழுது அச்சமாக இருக்கும். விரிவாக்கப்படும் என்.எல்.சி க்காக ஒரு நாள் என் வீட்டை விலையாக கொடுக்க நேரலாமோ என்பது தான் அந்த அச்சத்திற்கு காரணம். ஏற்கனவே என் தாத்தாவும், பாட்டியும் அவர்களின் வீட்டை விலை கொடுத்து இருக்கிறார்கள். என் அப்பாவிற்கும் நடந்துள்ளது. நெய்வேலியில் இருந்த பலருக்கு நிகழ்ந்துள்ளது. எனக்கும் கூட ஒரு நாள் நேரலாம். எனக்கு இது பொருளாதாரம் சார்ந்து எழும் அச்சம் அல்ல. நாம் வாழ்ந்த இடத்தையும், விளையாடிய இடத்தையும் நம் சந்ததிக்கு விட்டுச் செல்லலாம். பெருமையாக சுட்டிக் காட்டலாம்.ஆனால் நம் வீட்டை இடித்து அதன் மீது எழுந்து நிற்கும் சுரங்கங்களையோ, அனல் மின் நிலையங்களையோ ஜீரணிக்க முடியாது. ஏனெனில் நாம் வாழ்ந்த வீடும், வளர்ந்த இடமும் உணர்வுப் பூர்வமான விஷயம்.
Leia Mais…
Friday, February 03, 2006

தேர்தல் களம் : ஊடகங்களின் பங்களிப்பு

தேர்தல் நேரங்களில் பத்திரிக்கைகளின் சர்குலேஷன் அதிகமாக இருக்கும். தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆனால் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் கொடுக்கப்படும் செய்திகளில் ஆரோக்கியமில்லாத சூழ்நிலை நிலவுகிறது.

இரு முக்கியமான தொலைக்காட்சிகளும் இரு திராவிட கட்சிகளின் கைகளில் உள்ளதால் தொலைக்காட்சிகள் பிரச்சாரம் செய்யும் இடங்களாக மாறி விட்டன. NDTV நிறுவனம் முன்பு விஜய் தொலைக்காட்சியில் வழங்கிய செய்திகள் மிகச் சாதாரணமாக தான் இருந்தன. அதனுடைய ஆங்கில செய்திகளில் கொடுக்கப்பட்ட தரம் தமிழ் செய்திகளில் இல்லை. ஆனாலும் நடுநிலையான செய்திகளைப் பார்க்க அந்த தொலைக்காட்சி உதவியது. விஜய், ராஜ் தொலைக்காட்சிகளில் செய்திகள் நிறுத்தப்பட்டு விட்டதால் அந்த வாய்ப்பும் இப்பொழுது இல்லாமல் போய் விட்டது. நடுநிலையான தொலைக்காட்சி செய்தியை பார்க்க முடியாத நிலை தான் தமிழகத்தில் உள்ளது.

தொலைக்காட்சிகளில் தான் இந் நிலை என்றால் பத்திரிக்கைகளிலும் இதே கதை தான். தினமலரின் ஊடக வன்முறையும், சார்பு நிலையும் உலகறிந்த கதை. தினத்தந்தி குறித்து எதுவும் சொல்வதற்கில்லை. தினகரனை பொது ஜன பத்திரிகையாக சொல்ல முடியாது. திமுக வின் பிரச்சார பத்திரிக்கையாகவே அது செயல்பட்டு வந்திருக்கிறது. தினமணியை மட்டுமே நடுநிலையான பத்திரிக்கையாக கூற முடியும். ஆனால் தினமணியின் தரம் படிப்படியாக குறைந்து போய் விட்டது. தினமணிக்கு அழகை கொடுத்த தினமணிக் கதிர் அதனுடைய தரத்தில் இருந்து எப்பொழுதோ சரிந்து போய் விட்டது. அது தவிர தினமணி பரவலான வாசகர்களால் படிக்கப் படுவதில்லை.

வட இந்தியாவின் NDTV போன்ற செய்தி தொலைக்காட்சிகள் தமிழகத்தில் இல்லாமை மிகப் பெரிய குறை. NDTV தொலைக்காட்சிகளில் வட இந்திய செய்திகள், வட மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து அலசும் அளவுக்கு தமிழக அரசியல் சூழ்நிலைப் பற்றி அலசப்படுவதில்லை. நான் பார்த்த வரையில் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலைக் குறித்து தெளிவாக தெரிந்த செய்தியாளர்கள் அங்கு இல்லை. மும்மையில் இருந்து மகாராஷ்டிரா செய்திகளை அலசும் ஸ்ரீனிவாசன் ஜெயின் போன்ற செய்தியாளர்கள் போன்று தமிழக அரசியல் சூழ்நிலையை NDTV அலசுவதில்லை. NDTV தமிழகத்தில் உள்ள நிலைப் பற்றி கருத்து கேட்க அடிக்கடி சோ போன்ற சார்பு நிலை பத்திரிக்கையாளர்களை தான் நடுநிலை பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் அழைக்கிறார்கள். தமிழகத்தில் வேறு சொல்லும்படியான பத்திரிக்கையாளர்களின் பெயர்கள் அவர்களுக்கு தெரியவில்லையா என்பது புரியவில்லை.

பொதுவாக "there is a huge disconnect between the mass media and the mass reality" என்று இந்திய ஊடகங்கள் குறித்து கடந்த தேர்தலின் முடிவில் விமர்சனம் எழுந்தது. மக்களின் உணர்வுகளை ஊடகங்கள் சரியாக கொண்டு வருதில்லை என்பதே அந்த விமர்சனம். இந்திய ஊடகங்கள் பரபரப்பான செய்திகளையே படம் பிடித்து அந்தச் செய்திகள் தான் நாட்டின் முக்கியமான தலையாய பிரச்சனை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தன. ஆனால் பெரிய நகரங்களிலோ, சில இடங்களிலோ நடக்கும் நிகழ்ச்சிகள் எங்கோ குக்கிராமத்தில் இருக்கும் மக்களை பாதிப்பதில்லை. அவர்களின் அன்றாட பிரச்சனைகள், உள்ளூர் பிரச்சனைகள், வாழ்க்கை தேவைகள் இவை தான் தேர்தலில் கட்சிகளின் வெற்றி தோல்விகளை முடிவு செய்கின்றன.

தமிழகத்தில் ஊடகங்களுக்கும், வெகுஜன மக்களுக்கும் இடையே இருக்கின்ற இடைவெளி அதிகமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இது வரை தமிழகத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள் எல்லாம் தவாறாகவே போய் இருக்கின்றன. 1998ம் ஆண்டு நடந்த பாரளுமன்ற தேர்தலில் திமுக-தாமாக கூட்டணி வெற்றி பெறும் என்று அனைத்து ஊடகங்களும் எழுதின. ஆனால் அந்த தேர்தலில் ஜெயலலிதா அமைத்த அதிமுக-பாஜக-மதிமுக-பாமக கூட்டணி வெற்றி பெற்றது. தங்களின் இந்தக் கருத்து கணிப்பு தோல்வியை ஊடகங்கள் அப்பொழுது ஓப்புக்கொள்ளவே இல்லை. அப்பொழுது நிகழ்ந்த கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு தான் திமுக கூட்டணி

தோல்விக்கு முக்கிய காரணம் என்று ஊடகங்கள் நம்பின. கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு கோயம்புத்தூரில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நெய்வேலியில் வேலை செய்யக்கூடிய சாதாரண ஊழியருக்கோ, பண்ருட்டி வயல்களில் வேலை செய்யும் சாமானிய மக்களுக்கோ எந்த வகையில் அது அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்க கூடும் என்பது எனக்கு விளங்கவில்லை. பிற இடங்களில் இருக்கும் சாமானிய மக்களுக்கு குண்டுவெடிப்புகள் ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இது போன்றே கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்து இருந்தன. திமுக ஆட்சியில் ஊழல் இல்லை. அதனால் திமுக மறுபடியும் வெல்லும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்மாறாக அதிமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணி வெற்றி பெற்றது. இதனையும் ஊடகங்கள் சரியாக கணிக்கவில்லை. அப்பொழுது நிலவிய மக்களின் மொளனப் புரட்சி ஊடகங்களால் வெளிக்கொணரப்படவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இந்தியாவெங்கும் இதே நிலை தான். "இந்தியா ஒளிர்கிறது" என்ற கோஷத்துடன் தேர்தலை சந்தித்த பாஜகவிற்கு ஊடகங்களும் ஜால்ரா போட்டன. இந்திய பொருளாதாரத்தின் உயர்வு, பங்குச் சந்தையின் வளர்ச்சி போன்றவை தங்களின் சாதனைகளாக பாஜக கூறியது. ஆனால் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியோ, பங்குக் குறியீடுகளின் உயர்வோ எங்கோ கிராமத்தில் குடி தண்ணீருக்காக பல மைல்கள் அலைய வேண்டிய இந்திய கிராம மக்களுக்கு எந்த வகையில் நன்மை அளிக்கும் என்பது குறித்து ஊடகங்கள் யோசிக்காமல் போனது தான் ஆச்சரியம்.

மக்களின் நாடி துடிப்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள், செய்திகளை அலசி ஆராய்ந்து எழுதாமல் வெகுஜன பரபரப்பு சிந்தனையுடனே தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள முனைந்து வருகிறது. தங்களுடைய பத்திரிக்கைகளின் விற்பனையை அதிகரிக்கும் எண்ணத்தில் சிறு பங்கு கூட கொடுக்கப்படும் செய்திகள் குறித்த அக்கறை இல்லாமல் வெளியிடப்படுகின்றன. இவை தவிர சார்பு நிலை ஊடகங்களாக சில அரசியல் கட்சிகளை, அமைப்புகளை ஆதரித்து செய்தி வெளியிடும் போக்கும் வெகுஜன ஊடகங்களில் பெருகி வருகின்றன.

கடந்த பாரளுமன்ற தேர்தலின் பொழுது ரஜினி-ராமதாசின் மோதலே தமிழகத்தின் தலையாய பிரச்சனை என்பன போன்று பல ஊடகங்கள் தலைப்பு செய்தி வாசித்தன.

ரஜினியின் பேட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். ஊருக்கு சில ரசிகர் மன்றங்கள் இருக்கும் ரஜினிக்கு மக்கள் பலம் இருப்பதாக எந்த வகையில் நம்பப்பட்டது என்பது புரியவில்லை. எம்.ஜி.ஆர் எப்படி மக்கள் சக்தி மிக்கவராக உயர்ந்தார் என்பது குறித்து கூட ஆராயாமல் வெறும் சினிமா காரணமாக மட்டுமே எம்.ஜி.ஆர் உயர்ந்தார் என்று கூறுவது வரலாற்று தவறு என்பது கூட ஊடகங்களுக்கு விளங்காமல் போனது தான் ஆச்சரியம். ஒரு மிகப் பெரிய இயக்கத்தை தன் வசீகரத்தால் பிளவு படுத்தி, அந்த இயக்கத்தின் பலத்தை கொண்டு தான் எம்.ஜி.ஆர் உயர்ந்தாரே தவிர எங்கோ ஓளிந்து கொண்டு இருந்து விட்டு திடீரென்று மக்களை தன் பக்கம் வசீகரீத்து விட வில்லை. இப்பொழுது ரஜினியை விட சற்று பலம் குறைந்தவராக ஊடகங்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட விஜயகாந்த்தை பெரிய கட்சிகளின் ஓட்டுகளை பிளக்க கூடிய வல்லமை மிக்கவராக சில ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகின்றன.

இந்த நிலையில் தான் வெகுஜன ஊடகங்களை தவிர்த்த மாற்று ஊடகங்களின் வளர்ச்சி முக்கியமானதாகப் படுகிறது. சில ஆங்கில வலைப்பதிவுகளில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் சில நேரங்களில் யோசிக்க வைக்கின்றன. வெகுஜன ஊடகங்களில் கூட அத்தகைய சிந்தனைகள் எழுப்பபட்டதாக தெரியவில்லை. தேவ கவுடா - இன்போசிஸ் நாராயணமூர்த்தி மோதலில் கூட எல்லா ஊடகங்களும் ஒரே பல்லவியை பாடிக் கொண்டு இருக்க, இன்போசிஸில் நாராயணமூர்த்தி குறித்து சில
வலைப்பதிவுகளில் வைக்கப்பட்ட விமர்சனங்கள் யோசிக்க வைத்தன.

வலைப்பதிவுகள் மாற்று ஊடகங்களாக முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் இவற்றில் முன்வைக்கப்படும் பல சிந்தனைகள் வெகுஜன ஊடகங்களில் காணப்படாத ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஆனால் தமிழ் வலைப்பதிவுகளில் இன்னும் அவ்வவறான நிலை ஏற்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இந்த தேர்தல்களிலும் கடந்த தேர்தல் போலவே ஊடகங்கள் தங்களுடைய நிலையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் அரைத்த மாவையோ அரைப்பது, ஸ்டீரியோடைப்பாக எந்த பத்திரிக்கையில் எந்த மாதிரியான செய்திகளை எழுதுவார்கள் என்பது கணிக்க கூடியதாக இருப்பது, அலுப்பையே ஏற்படுத்துகிறது.

Leia Mais…