வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Thursday, November 24, 2005

WALMART - என்ன பிரச்சனை ?சில்லறை வியபாரத்தில் (Retail) அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அரசின் முடிவு சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. இடதுசாரிகளின் முதல் சிறு வியபாரிகள் வரை பலரும் முன்வைத்த பலமான எதிர்ப்பு தான் இதற்கு முக்கிய காரணம்.

இந்தியாவிற்கு வால்மார்ட் வருவதால் அப்படி என்ன தான் பிரச்சனை இருக்கிறது ?

இந்தியாவின் சில்லறை வியபாரம் முறைப்படுத்தப் படாத வர்த்தகம். சிறு வியபாரிகள் முதல் அவர்களுக்கு பொருள்களை தரும் சப்ளையர்கள், பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் என பலர் இருந்தாலும் இது முறைப்படுத்தப்படாத, காலப்போக்கில் கிளை விட்டு வளர்ந்த ஒரு மிகப் பெரிய Network.

இந்த Networkல் யார் வேண்டுமானாலும் நுழைந்து அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ள முடியும். நானும் கூட இந்த Networkல் இருந்து வந்தவன் தான். என் அப்பாவுக்கு நெய்வேலியில் மளிகை கடை உண்டு. ஓய்வு நேரங்களில் நானும் கடையை பராமரித்திருக்கிறேன். இதில் இருக்கும் பல பிரச்சனைகள் புரியும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பல மாறுதல்களும் எனக்கு தெரியும்.

முன்பெல்லாம் சோடா, கலர் போன்றவை கடைகளில் அதிகளவில் விற்கும். எங்கள் கடைக்கு விற்பனை செய்யும் சோடா சப்ளையருக்கு கோடை காலங்களில் நல்ல வியபாரம் நடக்கும். எங்கள் கடையைப் போலவே நெய்வேலியில் இருக்கும் பலக் கடைகளுக்கும் அவர் தான் விற்பனையாளர். நல்ல முறையில் சென்று கொண்டிருந்த அவர் வியபாரம் அந்நிய குளிர் பான நிறுவனங்கள் இந்தியாவெங்கும் பரவிய பொழுது நசிந்துப் போனது.

அன்றைக்கு கோலி சோடாவை வைத்துக் கொண்டு இந்த கோலி குண்டு வெளியில் வருமா, வராதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நான், இன்றைக்கு அதனை ஏதாவது கண்காட்சியில் தான் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். கிராமங்களில் கூட லெகர் சோடாக்கள் கிளை பரப்பி விட்டன. கோலி சோடா/குண்டு சோடா காணாமல் போய் விட்டது

அவ்வாறே ஊறுகாய் வியபாரம். மட்டைகளில் வைக்கப்பட்டு குடிசை தொழில்களாக செய்யப்பட்டு விற்கப்பட்ட ஊறுகாய்கள், "ருசி" ஊறுகாய் பாட்டில்களாக மாறிய பொழுது அதனைச் செய்து கொண்டிருந்தவர்களின் தொழில் நசிந்தது. இது போன்ற பல வியபாரங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் நசிந்து போய்ப் இருக்கிறது.

இப்பொழுது மொத்த மளிகைக் கடைகளுக்கும் வேட்டு வைக்க கூடிய வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்க காத்திருக்கின்றன.
மளிகைக் கடைகளுக்கு வியபாரம் பாதிப்படையும் பொழுது அதனை நம்பி இருக்கிற மளிகைக் கடை வியபாரிகளில் இருந்து, சப்ளையர்கள், அவர்களுக்கு பொருள் வழங்கும் விவசாயிகள் வரை பாதிப்படைகின்றனர்.

பெரிய நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அவர்களே கொள்முதல் செய்து கொள்வார்கள். விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக - Whole Sale ஆக பொருள்களை வாங்குவதால் விவசாயிகளுக்கும் குறைவாகத் தான் கொடுப்பார்கள். ஆனால் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். பொருள் விளையும் இடத்தில் இருந்து சந்தைக்கு கொண்டு செல்லப்படும் பழைய முறைகள் மாறுதல் அடையும். Food processing போன்ற துறைகள் வளர்ச்சியடையும் வாய்ப்புகள் உள்ளன.

விவசாயிகளிடம் இருந்து பெரிய நிறுவனங்களே கொள்முதல் செய்வதால் சப்ளையர்களுக்கு வேலை இருக்காது. பொருள்களை பெற்று TVS 50ல் பலக் கடைகளுக்கும் சப்ளை செய்யும் விற்பனையாளர்கள் வேலை இழப்பார்கள்.

பலர் தங்களுக்கு ஒரு மாற்று வருமானமாக பெட்டிக்கடைகளையோ, சிறு வியபாரத்தையோ செய்து வருகின்றனர். வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் வந்தால் இவ்வாறு செய்ய முடியாது. இது இந்தியாவில் பெரிய பாதிப்புகளையும், சமுதாய மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்று இடதுசாரிக்கட்சிகள் கூக்குரலிடுகின்றன.

இது முழுமையான உண்மை என்றோ, அடுத்த சில வருடங்களில் நடந்து விடும் என்றோ நிச்சயமாக கூறமுடியாது. இந்தியா போன்ற பெரிய நாட்டில், வருமானத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் நாட்டில், இத்தகைய மாற்றங்கள் வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஆனால் இது குறித்த ஒரு அச்சம் நிலவத் தான் செய்கிறது.

மாற்றங்கள் என்பது இன்றியமையாதது. சில்லறை வியபாரத் தொழில் இந்தியாவில் பல காலமாக ஒரே நிலையிலேயே இருந்து வருகின்றது. இது நிச்சயமாக ஒரு மாற்றத்தை எதிர்கொள்ள தற்பொழுது தயாராகி வருகிறது என்று சொல்லலாம்.
வால்மார்ட்டை அனுமதிக்க மாட்டோம், அதனால் சிறு வியபாரிகள் பாதிப்படைவார்கள் என்று கூறும் இடதுசாரிகள், டாட்டாவோ, ரிலையன்ஸோ இவ்வாறு ஆரம்பிக்கும் பொழுது பிரச்சனை வராது என்று நினைக்கிறார்களா ?

டாட்டா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் வால்மார்ட் போன்ற அனுபவம் வாய்ந்த நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது என்று கருதுகிறார்களா ?

வால்மார்ட் இந்தியாவில் நுழைவதில் உள்ள சிக்கல் என்ன ?


இது பற்றி அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்

Leia Mais…

புலிகளும், இந்தியப் பாதுகாப்பும் - 1

விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையான்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதான ஒரு கருத்து இந்திய ஊடகங்களால் பல காலமாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகளுக்கு ஏதிரான இவ்வாறான கருத்துக்கள் பல நிலைகளில் முன்வைக்கப்படுகிறது

  • விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் இலங்கையில் அமெரிக்க படைகள் நுழையும். அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்
  • தமிழ் ஈழம் அமைந்தால் தமிழ்நாட்டை விடுதலைப் புலிகள் பிரித்து ஒரு அகன்ற தமிழ் தேசத்தை உருவாக்க நினைப்பார்கள் அல்லது சுதந்திர தமிழ் ஈழம் அமைந்தால் அதன் பாதிப்பால் இங்குள்ள தனித் தமிழ் இயக்கங்கள் தனி நாடு கோருவார்கள்
  • ராஜீவ் காந்தியின் படுகொலை

1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு, கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்ட போதிலும் இந்த வாதங்கள் மட்டும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த உளுத்துப் போன வாதங்கள் தவிர புதிதாக சில வாதங்களும் தற்பொழுது சேர்ந்து கொண்டுள்ளன.

  • விடுதலைப் புலிகளின் புதிய விமானங்கள், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன
  • புலிகள் சமர்ப்பித்துள்ள - ISGA (Interim Self Governing Authority) எனப்படும் இடைக்கால நிர்வாக அமைப்பின் சரத்துப் படி இந்துமகா சமுத்திரத்தில் மூன்றாவது கடற்படையாக புலிகளின் கடற்படை உருவாவது நீண்ட கடற்கரையுடைய இந்தியாவின் பாதுகாப்பிற்க்கு அச்சுறுத்தலாக அமையும்

இந்த வாதங்களில் எந்தளவிற்கு உண்மையிருக்கிறது ? இந்த வாதங்களின் படி இந்தியாவின் பாதுகாப்பிற்கு புலிகள் உண்மையில் அச்சுறுத்தலாக இருக்கிறார்களா ? அல்லது தமிழ் ஈழம் அமைவதை விரும்பாத சில பத்திரிக்கைகள்/குழுக்கள் இந்த வாதங்களை பல ஆண்டுகளாக தொடர்ந்து அப்படியே பராமரித்து வருகிறார்களா ?

இது பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்தாலும், இந்த Thanks Giving விடுமுறையில் தான் அதற்கான நேரம் கிடைத்திருக்கிறது.

1987க்குப் பிறகு உலக அரசியலில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன. குறிப்பாக பனிப்போர் முடிவிற்கு வந்து உலக வரைப்படத்தில் இருந்து சோவியத் யுனியன் காணாமல் போனது. இரு வல்லரசுகளுக்கும் அதனைச் சார்ந்த சார்பு நாடுகளுக்கும் இடையே இருந்த பகையுணர்வு குறைந்து பரஸ்பரம் நட்புறவை வளர்த்துக் கொள்ள அனைத்து நாடுகளும் முனைந்தன. போரும், ஆயுதக்குவிப்பிற்குமான முக்கியத்துவம் குறைந்து நாடுகளிடையே நட்புறவும், பொருளாதார வர்த்தக உறவும் முக்கியத்துவம் பெற்றன.

குரூட்டுதனமாக சோவியத் பாணி பொருளாதாரத்தை நேரு தொடங்கினார் என்ற ஒரே காரணத்திற்கு விடாப்பிடியாக பற்றி வந்த காங்கிரஸ், நரசிம்மராவ் தலைமையில் அதனை 1991ல் மாற்றியது. பொருளாதாரம் தளர்த்தப்பட்டது.

இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளிலும் 1991ல் சோவியத் யுனியன் சிதறுண்ட பிறகு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

பனிப்போர் காலத்தில் அணிசேரா நாடு என்ற முகமூடியை இந்தியா அணிந்திருந்தாலும் உண்மையில் சோவியத் யுனியனின் மிக நெருங்கிய நட்பு நாடாக தான் இந்தியா செயல்பட்டது. எனவே இயல்பாக பல நேரங்களில் அமெரிக்காவிற்கு எதிராகவும் சோவியத் யுனியனிற்கு ஆதரவாகவுமே இந்தியாவின் கொள்கைகள் அமைந்தன. இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட சமயத்தில் இலங்கை உலக இராணுவ மையத்தில் கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாக விளங்கியது. தெற்காசியாவில் தன் இரணுவத்தை நிலை நிறுத்திக் கொள்ள அமெரிக்காவிற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. எங்கே இலங்கையில் அமெரிக்கப் படைகள் நுழைந்தால் தன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேருமோ என்று எண்ணி இந்தியப் படை அமைதி காக்கும் படையாக இலங்கையில் நுழைந்தது. அதன் பிற்கு நடந்தது ஒரு சோசகமான வரலாறு.

1991க்குப் பின் இந்தியா மிகவும் நம்பியிருந்த சோவியத் யுனியன் சிதறுண்டது, இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு ஒரு புதிய திசையை கொடுத்தது. சோவியத் யுனியன் போதையில் மறந்து போய் இருந்த நாடுகளிடம் உறவை இந்தியா புதுபிக்கத் தொடங்கியது. அதே சமயத்தில் இந்தியாவின் அணு ஆயுத பலம் மற்றும் இரணுவ பலத்துடன் பொருளாதார பலமும் கைசேர பில் க்ளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த பொழுது, இந்தியாவுடன் அமெரிக்காவின் உறவை வளர்க்கத் தொடங்கினார்.

இது தவிர அமெரிக்கா சீனாவை தனக்கு எதிர்கால போட்டியாக கருதுகிறது. சீனாவின் பலத்துடன் மோத வேண்டுமானால் ஆசியாவில் அதற்கு ஒரு நட்பு நாடு தேவைப்பட்டது. சீனாவுடன் பொருளாதாரம் மற்றும் இராணுவ பலத்தில் ஆசியாவில் போட்டியிடக்கூடிய ஒரே நாடு இந்தியா தான். எனவே இந்தியாவுடன் பொருளாதார ரீதியில் மட்டுமில்லாமல் இராணுவ ரீதியிலும் தன் உறவை அமெரிக்கா வளர்த்துக் கொள்ள தொடங்கியிருக்கிறது. பல இராணுவ தளவாடங்கள், அணு ஆயுத ரீதியிலான ஒத்துழைப்பு, அணு ஆயுத எதிர்ப்பு ஏவுகணைகள் (Anti Nuclear Missile system) விற்பனை போன்ற எண்ணற்ற இராணுவ உதவிகளை இந்தியாவிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் அமெரிக்கப் படைகள் தெற்காசியாவில் நுழைவதை தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதி வந்த இந்தியா, இன்று அமெரிக்கப் படைகளுக்கு இந்தியாவிலேயே இடமளிக்க தொடங்கியிருக்கிறது.

அமெரிக்கப் படைகள் இந்தியப் படைகளுடன் ப்ல பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் இந்திய விமானப்படையும், அமெரிக்க விமானப்படையும் கூட்டதாக போர் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அமெரிக்கப் படைகள் இந்தியாவில் பயிற்சி அளித்தது தவிர இந்தியாவில் இருந்து ஒரு குழு அலாஸ்கா சென்று மேலும் பயிற்சிகளில் ஈடுபட்டது.


அமெரிக்க, இந்திய இராணுவ ஒத்துழைப்பு மிக முக்கியமான ஒரு நிலையை அடைந்திருக்கிறது. சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார பலத்தை எதிர்கொள்ள இந்தியாவை உற்ற நேச நாடாக அமெரிக்கா தற்பொழுது அங்கீகரித்திருக்கிறது. இதனால் தான் இரானுக்கு எதிராக International Atomic Energy Agency கூட்டத்தில் இந்தியா வாக்களித்தது. இந்தக் கூட்டத்தில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் வாக்களிப்பில் பங்கு பெறாமல் நடுநிலை வகித்தன. கடந்த காலங்களில் ரஷ்யாவை சார்ந்தோ அல்லது நடுநிலை வகித்தோ செயல்பட்டுவந்த இந்தியா இம் முறை அமெரிக்காவின் உற்ற தோழனாக மாறி அமெரிக்கா சார்பு நிலையை எடுத்தது.

கடந்த சில ஆண்டுகளாக செய்திகளில் அதிகம் அடிபடாமல் இந்தியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளும் இரணுவ ஒத்துழைப்பு வியப்பை அளிக்கிறது. இந்தியா தவிர ஆசியாவின் பிற இடங்களில் இந்தியாவும், அமெரிக்காவும் தங்கள் இராணுவ ஒத்துழைப்பை அதிகப்படுத்தி வருகின்றன. மலாக்கா நீரிணையில் இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகள் கூட்டாக ரோந்து மற்றும் இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன. இப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் இந்தியாவை சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டுள்ளது.பனிப் போர் காலத்தில் இலங்கை விஷ்யத்தில் அதிக அக்கறை காட்டிய இந்தியா தற்பொழுது இப் பிரச்சனையில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கொள்ளாமைக்கு முக்கிய காரணம், அமெரிக்காவால் தனக்கு இந்தப் பிராந்தியத்தில் அச்சம் இல்லை என்பது தான். தன்னுடைய நலனுக்கு பிரச்சனையில்லாத பொழுது இலங்கையின் உள்விவகாரத்தில் தேவையில்லாத தலையீட்டையும் இந்தியா விரும்பவில்லை.

1980களில் அமெரிக்காவுடனும், பிரிட்டனுடனும் இணைவதாக பூச்சாண்டிக் காட்டிய இலங்கை, தற்பொழுது அது பற்றியெல்லாம் பேசாமல், இந்தியாவுடன் இராணுவ ஒத்துழைப்பை வேண்டுவது கூட இந்தியாவை தன் சார்பாக தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி தான்.

இன்று அமெரிக்கா இலங்கையில் நுழைந்தால் கூட இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காது என்றே கருதப்படுகிறது (நான் மட்டும் சொல்ல வில்லை. ஆசியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் பற்றி ஒரு முறை கட்டுரை எழுதிய ஹிந்துவும் இதைத் தான் தெரிவிக்கிறது).

சுனாமிக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் முதன் முறையாக இலங்கை, மாலத்தீவு போன்ற தெற்காசிய நாடுகளில் நுழைந்த பொழுது இந்தியா அதனை வரவேற்கவே செய்தது. இந்தியாவிலேயே அமெரிக்க படைகள் இருக்கும் பொழுது, இலங்கையில் அமெரிக்கப் படைகள் நுழைவதால் என்னப் பிரச்சனை ஏற்படப் போகிறது ?

இவ்வாறான நிலையில் 1987ல் கூறப்பட்ட அதே உளுத்துப் போன வாதத்தை கூறி இந்தியா தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்க கூடாது என்று கூறுவது படு அயோக்கியத்தனமான நிலைப்பாடாக தான் நான் நினைக்கிறேன்.

அது போலவே ராஜீவ் காந்தியின் படுகொலை என்ற ஒரே கண்ணாடியை கொண்டு ஈழப் பிரச்சனையை அணுகுவதும் முறையானது அல்ல என்பது எனது கருத்து.

இந்தியாவில் நிகழ்ந்த சோகமான மூன்று படுகொலைகள் - மகாத்மா காந்தி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைகள்

இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றான் என்பதற்காக சீக்கிய இனத்தையே நாம் பலிவாங்கி விடவில்லை.

அது போல காந்தியை கொன்ற RSS இயக்கம் அதன் அரசியல் Proxy பா.ஜ.க மூலமாக இந்தியாவை ஆட்சி செய்து விட்டது. மகாத்மா காந்தியை படுகொலை செய்த சதியில் சம்மந்தப்பட்டவரான வீர்சர்வார்காரின் படம் இந்தியப் பாரளுமன்றத்தில் மகாத்மா காந்தியின் படத்திற்கு எதிராகவே ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும் கொடுமையெல்லாம் இந்த நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ராஜீவ் காந்தியின் படுகொலையை கடந்து ஒரு இனத்தின் விடுதலை, அம் மக்களின் வாழ்க்கை என்ற நோக்கில் பிரச்சனையை அணுகவேண்டும்.

ஒரு நாட்டின் வரலாற்றிலோ, இயக்கத்தின் வரலாற்றிலோ மாற்றங்களும், பரிணாம வளர்ச்சிகளும் ஏற்படத்தான் செய்கின்றன. புலிகளின் வளர்ச்சியை நோக்கும் பொழுது கூட ஒரு சிறு கூட்டம், கொரில்லாப் படை, மரபு சார்ந்த படையாக வளர்ச்சிப் பெற்றது போன்ற நிலைகளை கடந்து இன்று ஒரு அரசியல், இராணுவ இயக்கமாக மாறியிருக்கிறார்கள். ஒரு தேசத்தின் உள்கட்டமைப்பை தனி அமைப்பாக இருந்து நிறுவி முன்னேறி இருக்கிறார்கள்.

காத்ரீனா போன்ற இயற்கை சீற்றங்களில் அமெரிக்கா போன்ற நாடுகளே சரியான நிவரணப் பணிகள் மேற்கொள்ளாமல் தாமதமாகத் தான் நிவாரணப் பணிகளை துவங்கியது. ஆனால் சுனாமிக்குப் பின் சில மணி நேரங்களில் புலிகள் மேற்க்கொண்ட நிவாரணப் பணிகளை உலக நாடுகள் கவனிக்க தவறவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை கொண்டே கொள்கைகளை ஒரே நோக்கில் வைத்திருக்க முடியாது. மாறிவரும் உலக நிலைக்கேற்ப கொள்கைகள் மாற்றம் பெற வேண்டும். இந்தியாவில் எண்ணற்ற குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி மனித உயிர்களையும், பொருளாதார சேதங்களையும் விளைவித்த பாக்கிஸ்தானுடன் கைகுலுக்க முடியும் என்றால் புலிகளிடமும் நிச்சயமாக கைகுலுக்க முடியும்.

கைகுலுக்க முடியாவிட்டால் குறைந்தபட்சம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்காமல் இருக்கலாம். ஏனெனில் தமிழீழ மக்களிடம் மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் மூலமாக இந்தியாவிற்கு தொப்புள் கொடி உறவு இருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவிற்குமான பிரச்சனைகளாக சிண்டு முனையப் படும் மேலும் சில பிரச்சனைகள் பற்றியும், தமிழீழம் அமைவதால் இந்தியாவிற்கு என்ன நன்மைகள் ஏற்படும், பாதகம் ஏற்படும் வாய்ப்பு உண்டா என்பது பற்றியும் அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்

Leia Mais…
Tuesday, November 22, 2005

ஒரு தேசத்தின் சோகம்இந்தப் படத்தில் இருக்கும் குழந்தைக்கு ஒரு சோகமான சரித்திரம் உள்ளது. உலகிலேயே மிகச் சிறிய வயதில் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட ஒரு மழலைக் கைதி இந்தக் குழந்தை தான். இன்று வரை இந்தக் குழந்தை (இன்றைக்கு இவர் இளைஞர்) வெளியுலகிற்கு காண்பிக்கப்படவில்லை. இதைச் செய்தது ஏதோ ஒரு சாதாரண நாடு அல்ல. மிகப் பெரிய வல்லரசு. அமெரிக்காவிற்கு சரிசமமாக போட்டியிடும் வல்லரசு.

அந்த சோக பூமியின் பெயர் திபெத். திபெத்தின் சுதந்திரம் பறி போக காரணமாக இருந்த வல்லரசு - சீனா

பல ஆயிரம் ஆண்டு கால பழமையான பாரம்பரிய வரலாறு உடைய சுதந்திர நாடான திபெத் 1950ம் ஆண்டு சீனாவால் ஆக்ரமிக்கப்பட்டது. சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்ற திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய்லாமா தான் சீனாவின் முதல் எதிரி

திபெத்தை சீனா ஆக்கிரமித்தது முதல் கட்டுக்கடங்காத மனித உரிமை மீறல்கள், எண்ணற்ற அவலங்களை அரங்கேற்றியது. திபெத் மக்கள் அகதிகளாக இந்தியாவிடமும், பிற நாடுகளிடமும் தஞ்சம் புகுந்தனர். 1959ம் ஆண்டு தலாய்லாமா திபெத்தில் இருந்து தப்பித்து இந்தியாவிடம் தஞ்சம் அடைந்தார். இந்தியாவில் உள்ள தர்மசாலா என்ற நகரத்தில் திபெத்திய அரசாங்கத்தை தொடங்கினார். ஆம்.. திபெத்தின் அரசாங்கம் (Government in exile), இந்தியாவில் இருந்து தான் செயல்படுகிறது.

திபெத்தின் புத்த மத வழக்கம்படி தலாய்லாமா தான் மதகுரு மற்றும் திபெத்திய ஆட்சித்தலைவர். அவர் காலத்திற்கு பிறகு தலாய்லாமா தேர்ந்தெடுக்கும் ஒருவர் மற்றொரு தலாய்லாமா ஆவார். இதற்கு பஞ்சன்லாமா என்று பெயர். இது பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கம். தற்போதைய தலாய்லாமா திபெத்தின் 14வது தலாய்லாமா ஆவார்.

10வது பஞ்சன்லாமா என்பவர் தற்போதைய தலாய்லாமாவிற்கு பிறகு 15வது தலாய்லாமாவாக பதவியேற்க வேண்டியவர். சீனாவால் கைது செய்யப்பட்ட இவர் சுமார் 8ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 1989ம் ஆண்டு இவர் மறைந்தார்.

இதையடுத்து ஒரு புதிய பஞ்சன்லாமாவை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் தலாய்லாமாவிற்கு ஏற்பட்டது. இவர் தேர்ந்தெடுத்த 6வயது குழந்தை தான் இந்தப் படத்தில் காணப்படும் 11வது பஞ்சன்லாமா எனப்படும் நய்மா (Gedhun Choekyi Nyima). தற்போதைய தலாய்லாமா இவரை தனக்கு அடுத்து 15வது தலாய்லாமாவாக பதவியேற்க கூடியவராக 1995ம் ஆண்டு மே 15ல் அறிவித்தார் . இது தான் இந்தக் குழந்தையின் வாழ்க்கையில் சோகத்தை விளைவித்தது. இதற்கு அடுத்த இரு தினங்களில் மே 17ம் தேதி சீன அரசு இந்தக் குழந்தையை கைது செய்தது. 6வயதில் சிறையெடுக்கப்பட்ட மிக இளவயது அரசியல் கைதி இவர் தான்.

அதன் பிறகு இவர் வெளியுலகுக்கு கொண்டு வரப்படவேயில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இவர் எங்கிருக்கிறார், இவர் குடும்பம் எங்கிருக்கிறது போன்ற தகவல்களை சீனா வெளியிடவேயில்லை. கடந்த 2002ம் ஆண்டு இவர் நலமுடன் இருப்பதாக சீனா அறிவித்தது. ஆனால் மேல் விபரங்களை தெரிவிக்க வில்லை.

தலாய்லாமா அறிவித்த பஞ்சன்லாமாவிற்கு போட்டியாக சீனா மற்றொரு பஞ்சன்லாமாவை அறிவித்தது. ஆனால் இதனை திபெத் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.11வது பஞ்சன்லாமா கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்டதால், 2005ம் ஆண்டை பஞ்சன்லாமாவை விடுவிக்கும் ஆண்டாக திபெத் மக்கள் அனுசரிக்கின்றனர். பல போரட்டங்களையும் நடத்துகின்றனர். ஆனால் 2005 முடிவடையும் தருவாயில் கூட இது பற்றி சீனா கண்டுகொள்ளவேயில்லை.திபெத்தின் விடுதலைக்கு ஆரம்பம் முதலே தனது முழு ஆதரவையும், திபெத் அரசாங்கம் இந்தியாவில் இருந்து செய்ல்படுவதற்கு அனுமதியும் அளித்த இந்தியா, தற்பொழுது சிறிது சிறிதாக சீனாவிடம் தன் நட்புறவை பேணும் பொருட்டு திபெத் விடுதலையையோ அல்லது சீனாவில் தீபெத்திற்கு சுயாட்சி வழங்குவது பற்றியோ அதிகம் பேசுவதில்லை.

இம் மாதம் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் புஷ் பெயரளவுக்கு சில கருத்துகளை தெரிவித்து விட்டு நழுவி விட்டார். அவரது சீனப் பயணத்திற்கு முந்தைய வாரத்தில் தலாய்லாமா, புஷ்யை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். எங்கே இந்தச் சந்திப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் சீனாவுடனான தன் உறவு பாதிக்கப்படுமோ என்று அஞ்சி அந்தச் சந்திப்பு பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகாமல் பார்த்து கொண்டார். சீனாவின் நாணயத்தில் மாற்றங்களை கொண்டு வர சீனாவிடம் கெஞ்சி விட்டு நாடு திரும்பியிருக்கிறார்.

கடந்த காலங்களில் திபெத்திய விவகாரத்தில் அதிக அக்கறை கொண்டிருந்த அமெரிக்கா, வளர்ந்து வரும் பொருளாதார உலகில் சீனாவை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருப்பதால் இந்தப் பிரச்சனையில் இப்பொழுது மொளனம் சாதிக்க தொடங்கியிருக்கிறது.

உலகெங்கிலும் பல இடங்கில் நடந்து வரும் ஆக்கிமிப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் பல நாடுகளின் அங்கீரம் பெற்றிருக்கும் திபெத்திற்கே அதன் எதிர்காலம் குறித்து ஒரு கேள்விக்குறியான நிலை தான் தற்பொழுது உள்ளது.

தற்போதைய தலாய்லாமா மரணமடையும் பட்சத்தில், பஞ்சன்லாமா பிரச்சனை பெரிய அளவில் மறுபடியும் விஸ்ரூபம் எடுக்கும்.

ஆனால் 6வயதில் கடத்தப்பட்டு இன்று வரை சீனாவின் பிடியில் இருக்கும் 11வது பஞ்சன்லாமா, திடீர் என்று வெளிவந்து திபெத் சீனாவிற்கு தான் சொந்தம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சீனாவின் பராமரிப்பில் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வரும் அவர் மூளை சளவை செய்யப்பட்டிருக்கும் என்று தான் நான் நினைக்கிறேன்

Leia Mais…
Saturday, November 19, 2005

தேர்தலும், தமிழ் ஈழ அங்கீகாரமும்

விடுதலைப் புலிகளின் புண்ணியத்தால் சிங்கள தேசியவாதத்தை தேர்தலில் முன்னிறுத்திய மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருக்கிறார். இந்தச் சொற்றொடரை எழுதும் பொழுதே எனக்கு ஆச்சரியம் தான். விடுதலைப் புலிகள் ஏன் ஒரு சிங்கள இனவாத தலைவரை வெற்றி பெற வைக்க நினைக்கிறார்கள் ?

மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியை அறிவித்த பல செய்தி நிறுவனங்களின் தலைப்பு செய்திகளைப் பார்த்தால் விடுதலைப் புலிகள் ஏன் இதனைச் செய்தார்கள் என்பது தெளிவாகும். Hardliner wins Sri Lanka election என்று BBC கூறுகிறது. CNN, சமாதானத்தை முன்னிறுத்தக் கூடிய ரனில் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவிக்கிறது. Economist மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றி சமாதானத்திற்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கிறது.தற்பொழுது உலக நாடுகளின் மத்தியில் சமாதானத்திற்கு வேட்டு வைக்க கூடிய வில்லனாக மஹிந்த ராஜபக்ஷ தெரிகிறார். இதைத் தான் புலிகள் எதிர்பார்த்தனர். ஹிந்து தன் தலையங்கத்தில் கூறியிருப்பது போல சிங்கள இனவாதத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்துவது தான் விடுதலைப் புலிகளின் நோக்கம். இந்த நோக்கத்தில் புலிகள் வெற்றி பெற்றிருக்கின்றனர்

இந்த தேர்தலில் இருவருக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. ஒன்று சிங்கள இனவாத முழக்கத்திற்கு. மற்றொரு வெற்றி புலிகளுக்கு. தமிழர்களின் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பு மூலம் தங்கள் ஆதரவு எவ்வளவு முக்கியமானது என்பதை இலங்கையின் தெற்க்கில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தி இருக்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் நிலை பரிதாபமாகத் தான் தெரிகிறது. அவர் வெற்றி பெற்ற நேரத்தில் இலங்கையின் பங்குச்சந்தை சுமார் 7% வீழ்ச்சி அடைந்தது. இலங்கையில் வலது சாரி பொருளாதார சீர்திருத்தத்தை முன்னிறுத்தி தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர் ரனில். அவரது தோல்வி இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஒரு மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தும் என்று அங்கு முதலீடு செய்ய முயலும் நிறுவனங்கள் நினைக்கின்றன. அது தவிர ராஜபக்ஷவின் தீவிர இடது சாரி நிலைப்பாடு, அவர் அணி சேர்ந்துள்ள ஜே.வி.பி யின் மார்க்ஸ்ட நிலைப்பாடு போன்றவை இலங்கையின் பொருளாதாரத்தையும் அங்கு இனி வர இருக்கும் முதலீடுகளையும் குறைக்கும். ஏற்கனவே இலங்கையின் பொருளாதார நிலை தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறது. கோட்டா முறை நீக்கப்பட்ட பிறகு இலங்கையின் ஜவுளித் துறை சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் ஜவுளி ஏற்றுமதியில் ஈடுகொடுக்க முடியாமால் திணறிக் கொண்டிருக்கிறது.

புலிகளைப் பொறுத்தவரை தமிழ் ஈழத்திற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பலக் கட்ட திட்டத்தில் முதல் கட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். கடந்த தேர்தல்களில் சந்திரிகா, ரனில் போன்றோர் சமாதானத்தை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்று விட்டு உலக நாடுகளின் மத்தியில் தாங்கள் சமானத்தை அதிகம் விரும்புவதாகவும், விடுதலைப் புலிகள் மட்டுமே சமாதானத்தை எதிர்ப்பதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தனர். தென்னிலங்கையில் இருக்கும் தீவிர சிங்கள, புத்த இனவாதம் அதிகம் வெளிக்கொணரப்படவில்லை. ஜே.வி.பி, புத்த பிக்குகள் போன்ற சில குழுக்கள் மட்டுமே சிங்கள இனவாத அமைப்புகளாக வெளிஉலகுக்கு தெரிந்தது. ஆனால் தற்பொழுது இலங்கையின் ஜனாதிபதியை சிங்கள தேசியவாத தலைவராக விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அது மட்டுமில்லாமல் இலங்கையின் தேர்தல் முடிவுகளில் தெரியும் ஒரு Polarized சமுதாயமும், இத்தகைய சமுதாயத்தில் சமாதானமோ, தங்களுக்கான உரிமையோ சரியாக கிடைக்காது என்று கூறி ஏற்கனவே அவர்கள் அமைத்து விட்ட தமிழ் ஈழத்திற்கு உலக நாடுகள் மத்தியில் அங்கீகாரம் கோருவது தான் விடுதலைப் புலிகளின் பல கட்ட திட்டங்களின் இறுதி நோக்கமாக தெரிகிறது. இதனை நோக்கியே அடுத்து வரும் நாட்கள் இருக்கும். சமாதானப் பேச்சு வார்த்தை என்பது தற்போதைய இலங்கை சூழலில் நடக்கும் என்று தோன்றவில்லை.

TamilNet இணையத்தளத்தில் இருக்கும் இரு செய்திகள் என்னை மிகவும் கவர்ந்தன.

ஒன்று, தமிழ் ஈழப் பகுதியில் நுழைந்த இலங்கையின் காவல்துறையைச் சேர்ந்த மூன்று போலீசாருக்கு "தமிழ் ஈழ நீதி மன்றம்" ஜாமீன் வழங்க மறுத்துள்ள செய்தி. இந்த வழக்கு "தமிழ் ஈழ சட்டதிட்டங்களின்" கீழ் நடைபெறுவதாக TamilNet தெரிவிக்கிறது. இது ஏதோ பாக்கிஸ்தான் ஏஜெண்டுகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கைதாகும் செய்தி போல உள்ளது. தங்களின் எல்லையை புலிகள் அதிகம் கண்காணிப்பதாக TIME இதழும் கூறுகிறது. இலங்கை ஏற்கனவே இரண்டு துண்டுகளாக உள்ளதை இது உறுதிப்படுத்துகிறது.

மற்றொரு செய்தி "தமிழ் ஈழ தேசிய கீதத்தை" இயற்றுமாறு தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இம்மாதம் வர இருக்கும் மாவீரர் நாளில் இந்த கீதம், தமிழ் ஈழ தேசிய கீதமாக அங்கீகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே தமிழ் ஈழ தேசியக் கொடி, தேசிய மலர் போன்றவற்றை புலிகள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த செய்திகள் கடந்த காலங்களில் அதிகமாக வெளிஉலகுக்கு தெரியவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக புலிகளின் தமிழ் ஈழ தேசிய உள்கட்டமைப்பு ஊடகங்கள் மூலமாக அதிகம் பேசப்படுகிறது. இலங்கையின் தேர்தல் பற்றி எழுதியுள்ள TIME இதழ் ராஜபக்ஷ கூறும் "ஒரே நாடு" என்ற பேச்சு புலிகள் ஏற்கனவே அமைத்து விட்ட ஒரு தனி தேசத்தை மறைக்கும் நோக்கில் பேசப்படும் பேச்சாக தெரிவிக்கிறது.

அதிக அளவில் கண்காணிக்கப்படும் எல்லைகள், நீதிமன்றங்கள், சிவில் நிர்வாக மையங்கள், காவல்துறை, தேசியக் கொடி, தேசிய கீதம் போன்றவற்றின் மூலம் புலிகள் ஏற்கனவே ஒரு தனி தேசத்தை உருவாக்கி விட்டதாக TIME இதழ் தெரிவிக்கிறது

புலிகள் தற்பொழுது கோருவதெல்லாம் தமிழ் ஈழத்திற்கான உலக நாடுகளின் அங்கீகாரம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்த நோக்கத்தை நிறைவேற்றும் திட்டத்தின் முதல் படி தான் இந்த தேர்தல் புறக்கணிப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு உதவியதன் முக்கிய நோக்கம்.

தமிழ்ச்செல்வன் TIME இதழுக்கு அளித்த பேட்டியிலும் அதனை உறுதிப்படுத்துகிறார்

TIME: It's plain if you look around L.T.T.E. territory that you have, in fact, built most of the facets of a separate state. You have borders, an army, police, courts, a civil administration, a flag. I even hear you're writing a national anthem. Do you think the debate in Colombo regarding Tamil separatism is historical—that they're arguing about something that's actually already happened?

T: It is historic. Colombo is behind on their history. What the Tamil people have established has all the hallmarks of a separate state. But this is nothing new. There was a distinct Tamil nation prior to the 16Th century. There was a Tamil nation here, with its own sovereignty and a rich heritage and culture. The people lost it, and now they are taking it back. About 60-70% of our homeland is liberated and nobody can prevent this process going further. This is reality. What Colombo says about a unitary nation is imagination. If Colombo refuses to accept this reality, Colombo has to pay for it one day. And the cost will be terribly high and the damage irreparable for them.

புலிகளின் தனி தேசத்தை உலக நாடுகள் தற்பொழுது நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு அங்கீகாரம் தருவார்களா ?
அது புலிகள் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே உள்ளது.

லஷ்மன் கதிர்மாரின் படுகொலைக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் புலிகளின் இந்த நோக்கத்திற்கு தடை போடுவதாகவே அமைந்துள்ளது.

சிங்கள தேசியவாதத்தை வெளிப்படுத்தியும், சமாதானத்தை அதிகம் விரும்பும் குழுவாக தங்களை வெளிப்படுத்துவதும் தான் புலிகளுக்கு தற்பொழுது இருக்கும் சவால். அதனை நோக்கி தான் இரு குழுக்களும் நகரப் போகின்றன.

இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது தான் இப்பொழுது உள்ள கேள்வி

Leia Mais…