வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Wednesday, July 27, 2005

இந்தியா-பாக்கிஸ்தான் பொருளாதார உறவு

பத்ரியின் பதிவுக்கு பதிலளிக்க தொடங்கி, பதில் பெரிதாகி விட்டதால் தனிப் பதிவாக பதிவு செய்கிறேன்.

இந்தியா, பாக்கிஸ்தான் இடையிலேயான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்ட பிறகு தான் பொருளாதார ரீதியான உடன்படிக்கைகளை செய்து கொள்ள வேண்டுமென்றால் அது இந்த நூற்றாண்டில் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

மாறாக அண்டை நாடுகளுக்கு இடையிலேயான பொருளாதார உறவுகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் எல்லைப் பிரச்சனைகள் முதற்கொண்டு பிற பிரச்சனைகளை முழுவதுமாக தீர்த்துக் கொள்ள முடியாவிட்டாலும் ஓரளவுக்கு சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த வகையில் இந்தியா பாக்கிஸ்தான் இரான் இடையிலேயான பைப்லைன் திட்டம் முதல் பல்வேறு பொருளாதார உறவுகளை பாக்கிஸ்தானுடன் வளர்த்துக் கொள்வது முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

இந்தியா சீனா இடையிலேயான உறவில் ஏற்பட்ட மாற்றமும், அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவில் ஏற்பட்ட மாற்றமும் பொருளாதார காரணங்களால் தான் ஏற்பட்டது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்தியாவுடன் சிக்கிம் இணைந்ததை அங்கீகரிக்க மறுத்துக் கொண்டிருந்த சீனா கடந்த ஆண்டு திடீரென்று தன் முடிவினை மாற்றிக் கொண்டதையும், இந்தியாவை ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக ஏற்றுக் கொள்ள மறுத்துக் கொண்டிருந்த சீனா திடீரென்று அதனை ஆதரிக்க தொடங்கியதையும் பார்க்கும் பொழுது இன்று உலகம் ஒரு இணக்கமான பொருளாதார சூழ்நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இந்த பைப்லைன் திட்டம் பாக்கிஸ்தான் வழியாக வருவதால் இதனை பாதுகாக்கும் பொருட்டு இந்தியா பாக்கிஸ்தானுக்கு பல மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும். தனக்கு ஒரு செலவும் இல்லாமல் வரும் பல மில்லியன் டாலர் தொகையை பாக்கிஸ்தான் இழக்க விரும்பாது. எனவே பைப்லைனுக்கு பாதகம் வரும் என்ற கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது போல இந்த பைப்லைன் ஆப்கானிஸ்தான் வழியாக வருவதாக எனக்கு தெரியவில்லை. இரானில் இருந்து பாக்கிஸ்தான் வழியாகத் தான் இந்தியாவிற்கு வருகிறது.

தீவிரவாதிகளால் இந்த திட்டத்திற்கு ஆபத்து வரும் என்றால் அது எந்த நிலையில் இருந்தாலும் வரும். கடல் மூலம் பைப்லைன் கொண்டு வந்தாலும் வரும், மலையைக் குடைந்து கொண்டு வந்தாலும் வரும். அவ்வாறு இருக்கையில் பாக்கிஸ்தான் மூலம் வருவதால் மட்டுமே ஆபத்து இருக்கிறது என்ற வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தீவிரவாதிகளால் ஆபத்து வரும் என்று அஞ்சினால் ஒரு உருப்படியான திட்டத்தையும் கொண்டு வர முடியாது

கடந்த மார்ச் மாதம் காண்டலிசா ரைஸ் இந்தியாவிற்கு வந்த பொழுது இந்தியாவின் மாற்று எரிவாயு தேவைகளை கவனிப்பதாகவும் அமெரிக்கா அதற்கு உதவும் என்றும் தெரிவித்திருந்தார். அது பற்றி அப்பொழுது நான் எழுதிய பதிவு.

http://thamizhsasi.blogspot.com/2005/03/blog-post.html

அமெரிக்காவின் உதவிக்கு விலையாக அவர் கேட்டது இரான் - பாக்கிஸ்தான் - இந்தியா இடையிலேயான பைப்லைன் திட்டத்தை கைவிடுவது.


இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டு வரும் சூழ்நிலையில் நமது எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளும் பெருகி கொண்டு வருகிறது. தற்பொழுது கச்சா எண்ணெய் நிலையான விலையில் இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பது இந்திய பொருளாதார வளர்ச்சியை குறைக்கும். இதற்கான தீர்வு, நமது தேவைக்கான எண்ணெய்யை விலை குறைவாக இருக்கும் காலத்தில் சேகரித்துக் கொள்வது - Inventory, மாற்று எரிசக்திகளை வளர்த்துக் கொள்வது போன்றவை. இந்தியா ஒரு தொலைநோக்குடன் இந்த திட்டத்தை அணுக வேண்டும்.

இரான் - பாக்கிஸ்தான் இடையிலேயான பைப்லைன் திட்டமானாலும் சரி அல்லது அமெரிக்காவுடனான அணுசக்தி திட்டமானலும் சரி நம்முடைய தேவையை எதிர்காலத்தில் பூர்த்தி செய்யும் திட்டத்தில் நாம் நம்மை இணைத்துக் கொள்வது முக்கியமானது.

பாக்கிஸ்தான் ஒரு Rogue State என்ற மனப்பான்மையை நாம் மாற்றிக் கொள்வதும் முக்கியம். தெற்காசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அது மிக முக்கியமானது. பாக்கிஸ்தான் தனது பொருளாதாரத்தை தற்பொழுது தாராளமயமாக்கி இருக்கிறது. ஆனால் இந்திய நிறுவனங்கள் பாக்கிஸ்தானில் செயலாற்றுவதற்கு இன்னமும் தடை இருக்கிறது. பாக்கிஸ்தானுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் இந்திய நிறுவனங்கள் பாக்கிஸ்தானில் முதலீடு செய்வதும், இந்திய பொருட்களை பாக்கிஸ்தான் சந்தையில் விற்பதும் அதிகரிக்கும். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் அது முக்கிய பங்காற்றும்.

பொருளாதார ரீதியாக Mutual Interdependece அதிகரிக்கும் பொழுது பிற பிரச்சனைகள் தீர்க்கப்படவும், சமாதானம் பெருகவும் சாத்தியக் கூறுகள் நிறைய உண்டு.

Leia Mais…
Monday, July 04, 2005

காஷ்மீரின் விடுதலை - 2

ரோஜா திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். மதுபாலா கோபமாக காஷ்மீர் தீவிரவாதியாக காண்பிக்கப்படும் வாசிம்கானை நோக்கி கூறுவார். "உங்களுக்கு இந்தியா பிடிக்கவில்லை என்றால் பாக்கிஸ்தானுக்கு போக வேண்டியது தானே ?"



உணர்ச்சி மயமான படம். அந்தப் படத்தில் காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன சொல்லப்பட்டது ? காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது. பாக்கிஸ்தான் தூண்டுதலால் பயங்கரவாதிகள் சுதந்திரம் கேட்கிறார்கள். அவர்களை எதிர்த்து இந்திய இராணுவத்தினர் போராடுகிறார்கள். அவ்வளவு தான்.

இவ்வாறு தான் இந்திய அரசும், ஊடகங்களும் கூறுகின்றன. ஒரு சராசரி இந்தியனின் மனதில் இவை தான் விதைக்கப்படுகின்றன.

இந்தியா காஷ்மீரை தன்னுடையது என்று எப்படி கூறுகிறது ?

காஷ்மீர் மன்னர் ஹரி சிங் இந்தியாவை காஷ்மீருடன் இணைக்க ஒரு உடன்படிக்கை செய்தார். அதனால் ஒட்டு மொத்த காஷ்மீரும் இந்தியாவிற்கு சொந்தமாகும்.

ஆனால் நாம் வசதியாக மற்றொரு கிளைக் கதையை மறந்து விட்டோம்.

1947ம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்ற பொழுது இந்திய விடுதலை ஒடன்படிக்கைப்படி (INDIAN INDEPENDENCE ACT, 1947) இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகள் உருவாக்கப்பட்டது. மதம் அடிப்படையிலான இந்த பிரிவினையின் படி முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் பகுதியான மேற்கு பஞ்சாப் மற்றும் கிழக்கு வங்காளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி பாக்கிஸ்தான் உருவாக்கப்பட்டது. பிற பகுதிகள் இந்தியாவின் கீழ் வந்தன. பிரிவினையின் பொழுது பிரிட்டிஷாரின் நேரடி ஆளுமையில் இல்லாமல் பிரிட்டிஷ்ரின் ஆட்சியை ஒப்புக் கொண்டு மன்னர்களால் ஆளப்பட்ட 565 பகுதிகளின் நிலை குறித்து கேள்வி எழுந்தது. இதனை Princely States என்று கூறுவர். இந்த நாடுகள் இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணைந்து விட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்தியாவுடன் இணைய ஹைத்ராபாத், ஜுனாகத், காஷ்மீர் ஆகிய மூன்று பகுதிகள் மறுத்தன. இவற்றில் காஷ்மீர் தவிர மற்ற இரு பகுதிகளின் மன்னர்கள் முஸ்லீகள். பெரும்பான்மையான மக்கள் ஹிந்துக்கள்.

காஷ்மீரின் நிலை அதற்கு நேர் எதிரானது. பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்கள் ஆனால் மன்னர் ஹிந்து.

ஹைத்ராபாத், ஜுனாகத் போன்ற பகுதிகளை சுற்றிலும் இந்திய பகுதிகள் இருப்பதாலும், பெரும்பான்மையான மக்கள் ஹிந்துக்களாக இருப்பதாலும் முறையாக அவை இந்தியாவுடன் சேர்ந்திருக்க வேண்டும். அப் பகுதி மக்களின் விருப்பமும் அது தான். ஆனால் ஜுனாகத்தின் மன்னராக இருந்த நவாப்பும், ஹைத்ராபாத்தின் மன்னராக இருந்த நிஜாமும் முஸ்லீம்களாக இருந்ததால் இந்தியாவுடன் இணைய விரும்ப வில்லை.

ஹைத்ராபாத் தான் மன்னராட்சியின் கீழ் இருந்த நாடுகளில் பெரிய பகுதி. அது மட்டுமில்லாமல் நிஜாம் செல்வச் செழிப்புடனும் இருந்த மன்னர். அதனால் ஹைத்ராபாத் தனி நாடாக இருப்பதையே அவர் விரும்பினார். இந்தியாவின் பகுதியில் மற்றொரு நாடு இருப்பதை நேரு விரும்பவில்லை. அதுமட்டுமில்லாமல் ஹைத்ராபாத்தின் மக்கள் தொகையில் 85% ஹிந்துகள். எனவே அது இந்தியாவுடன் இணைவது தான் சரி. செப்டம்பர் 13, 1948ல் இந்தியப் படைகள் ஹைத்ராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.

ஜுனாகத் என்பது தற்போதைய குஜராத்தில் இருக்கும் ஒரு பகுதி. அதனை சுற்றிலும் இந்தியப் பகுதிகள் இருக்க ஜுனாகத்தை அதன் மன்னர் நவாப் பாக்கிஸ்தானுடன் 1947, செப்டம்பர் மாதம் 15ம் தேதி இணைத்தார். இதனை இந்தியா ஏற்றுக் கொள்ள வில்லை. பெரும்பான்மை மக்கள் இந்தியாவுடன் தான் இணைய விரும்பினர், இந்தியப் பகுதிக்குள் குட்டி தீவு போல பாக்கிஸ்தானின் ஒரு பகுதி இருப்பதையும் இந்தியா விரும்பவில்லை. இது குறித்து நடந்த சில பிரச்சனைகளுக்கு பிறகு நவம்பர் 9, 1947ல் இந்தியப் படைகள் ஜுனாகத்தில் நுழைந்து அதனை இந்தியாவின் ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.

தன்னுடன் இணைந்த ஒரு பகுதியை இந்தியா கைப்பற்றியதை பாக்கிஸ்தான் ஏற்கவில்லை. ஜுனாகத்தின் மன்னர் அதனை பாக்கிஸ்தானுடன் இணைத்து விட்டதால் அது தனக்கு தான் சொந்தமானது, இந்தியாவிற்கு உரிமையில்லை என்று பாக்கிஸ்தான் வாதிட்டது,

ஆனால் பெரும்பான்மையான மக்களின் விருப்பம் இந்தியாவுடன் இணைவது தான் என்னும் பொழுது அது இந்தியாவின் பகுதி தான் என்பது இந்தியாவின் வாதம். இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு ஒட்டெடுப்பை - Plebiscite ஜுனாகத் பகுதிகளில் பிப்ரவரி 20, 1948ல் இந்தியா நடத்தியது. சுதந்திரமாக நடந்த இந்த ஒட்டெடுப்பில் 1,90,870 பேர் ஓட்டளித்தனர். மொத்த வாக்காளர்கள் 2,01,457. இதில் 91 ஓட்டுகள் மட்டுமே பாக்கிஸ்தானுடன் இணைவதற்கு கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜுனாகத் இந்தியாவின் பகுதி என்பது நிருபிக்கப்பட்டது.

இப்பொழுது காஷ்மீர் பிரச்சனைக்கு வருவோம்

காஷ்மீர் மன்னர் ஹரி சிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார். பாக்கிஸ்தான், ஜுனாகத் பிரச்சனையில் செய்த வாதத்தின் படி காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை ஏற்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு தன் நிலையை பாக்கிஸ்தான் மாற்றிக் கொண்டது. காஷ்மீரில் பாக்கிஸ்தானுக்கு பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களாகவும் அவர்கள் இந்தியாவுடன் இணைய விரும்பாததும் தான் பெரிதாக தெரிந்தது.

ஜுனாகத்தில் பெரும்பான்மை ஹிந்துக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பியதால் அதன் மன்னருக்கு அப் பகுதியை பாக்கிஸ்தானுடன் இணைக்க அதிகாரமில்லை என்று வாதிட்ட இந்தியா, காஷ்மீர் விடயத்தில் வசதியாக அதனை மறந்து விட்டு மன்னர் ஹரி சிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முடிவு செய்து விட்டதால் ஒட்டுமொத்த காஷ்மீரும் தனக்கு தான் சொந்தம் என்று வாதிட்டது.

இவ்வாறு இரு நாடுகளும் சுதந்திரத்திற்கு பிறகு செய்த குளறுபடிகள் தான் காஷ்மீர் பிரச்சனை 1947லேயே தீர்வு காணாமல் இன்று வரை தொடர்வதற்கு முக்கிய காரணம்.

கடந்த பதிவை படித்த என் நண்பர்களும், பின்னுட்டமிட்ட வலைப்பதிவாளர்களும் நான் பாக்கிஸ்தானின் நிலைப்பாட்டை தூக்கிப் பிடித்ததாக கருதினர். என்னுடைய பதிவில் வழக்கமான இந்தியப் பல்லவியை ஒப்பிக்காமல் இந்தியா செய்த தவறுகளை முன்வைத்தேன். அதனால் இந்தியா மட்டும் தான் இந்தப் பிரச்சனையில் தவறிழைத்தது. பாக்கிஸ்தானின் அனைத்து வாதங்களும் சரியானது என்பது பொருளல்ல. இந்திய அரசும், இந்திய ஊடகங்களும் பரப்பும் செய்திகளை கடந்த ஒரு உண்மை நிலை இருக்கிறது என்பது தான் எனது வாதம். அது போலவே காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக காஷ்மீர் இந்தியாவின் கீழ் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.

கடந்த காலங்களில் நேரு போன்ற தலைவர்கள் இந்தப் பிரச்சனையை கையாண்ட விதம், இந்திய விடுதலையின் பொழுது நடத்தப்பட்ட பிரிவினையை முறையாக திட்டமிடாமல் செய்தது போன்றவையே இன்றைக்கு இந்தியா எதிர் கொண்டுள்ள பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன்.

இந்தியா பொருளாதார ரீதியில் இத்தனை ஆண்டுகள் முன்னேறாமல் இருந்தமைக்கு காரணம் நேரு போன்ற தலைவர்கள் இந்திய விடுதலைக்கு பிறகு எடுத்த சில தவறான முடிவுகள் தான் காரணம். சரி..அதனை பிறகு கவனிப்போம். காஷ்மீரின் பிரச்சனையை தொடருகிறேன்.

ஜுனாகத், ஹைத்ராபாத் போன்ற பகுதிகளுக்கும் காஷ்மீருக்கும் பூவியியல் ரீதியாக ஒரு வேறுபாடு உண்டு. ஹைத்ராபாத், ஜுனாகத் போன்ற பகுதிகள் இந்தியாவினுள் ஒரு தனி நாடு போல இருந்ததன. ஆனால் காஷ்மீர் அவ்வாறு இல்லை. இந்தியா, பாக்கிஸ்தானின் எல்லையை ஒட்டி இருந்தது. இந்திய விடுதலையின் பொழுது செய்யப்பட்ட நியதியின் படி முஸ்லீம் பகுதிகள் பாக்கிஸ்தானுடனும், ஹிந்துக்கள் அதிகம் உள்ள பகுதிகள் இந்தியாவுடனும் இணைய வேண்டும் என்ற ஏற்பாட்டின் படி காஷ்மீர் பாக்கிஸ்தானுடன் இணையவே அதிக வாய்ப்புகளும் இருந்தன. காஷ்மீரின் மன்னர் ஹிந்து என்பதை தவிர பிற அனைத்தும் பாக்கிஸ்தானுக்கு சாதகமாவே இருந்தது.

பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்கள் என்பதால் காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ள பாக்கிஸ்தானும் விரும்பியது. அதன் படி பஸ்தூன் பழங்குடிகள் காஷ்மீர் மீது படையெடுத்தனர். அவர்களும் காஷ்மீரின் பகுதிகளை கைப்பற்றிக் கொண்டு ஸ்ரீநகரை நெருங்கினர். மன்னர் ஹரி சிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தார். இந்தியப் படைகள் சாலை மார்க்கமாக ஸ்ரீநகருக்கு சென்றால் காஷ்மீர் பாக்கிஸ்தான் வசம் சென்று விடும் என்று கருதி விமானம் மூலம் இந்தியப் படைகளை ஸ்ரீநகருக்கு அனுப்பி காஷ்மீரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்,

ஹரி சிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கும் உடன்படிக்கையை கையெழுத்திடும் முன்பாகவே இந்தியப் படைகள் காஷ்மீருக்கு சென்றதா, இல்லை கையெழுத்திட்டவுடன் காஷ்மீருக்கு சென்றதா என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது. பாக்கிஸ்தான் இந்தியப் படைகள் மன்னர் ஹரி சிங் உடன்படிக்கையை கையெழுத்திடும் முன்பாகவே காஷ்மீருக்குள் நுழைந்து விட்டதாக கூறுகிறது. காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளும் அவ்வாறு தான் கூறுகின்றன. ஆனால் தெளிவான கருத்துக்கள் எதுவும் தெரியவில்லை. மன்னர் ஹரி சிங் கையெழுத்திட்ட பிறகு தான் இந்தியப் படைகள் காஷ்மீருக்கு சென்றன என்பது இந்திய தரப்பு வாதம்.

இவ்வாறு தொடங்கியப் போருக்கு பிறகு இந்தியா இந்தப் பிரச்சனையை ஜ.நா. சபையிடம் முறையிட, ஜ.நா. பாதுகாப்பு சபை இது குறித்து தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது. இந்த தீர்மானமும் பிரச்சனைக்குரியதாக மாறி விட்டது.

ஐ.நா. சபையின் இந்த தீர்மானம் இரு பிரிவுகளாக வெளியாகியது
1.போர் நிறுத்த உடன்படிக்கை
2.காஷ்மீர் மக்களின் சுயநிர்ணயம்

ஐ.நா. பாதுகாப்பு சபை நிறைவேற்றிய இந்த தீர்மானம் இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குமே சாதகமாக அமையவில்லை.

போர் நிறுத்த உடன்படிக்கையின்படி பாக்கிஸ்தான் மற்றும் அதன் குடிமக்கள், பழங்குடிகள் காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஐ.நா. சபை கூறியது. பாக்கிஸ்தான் இதனை மதிக்க வில்லை. பாக்கிஸ்தான் படைகள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய பிறகு இந்தியப் படைகளும் காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டும் என்று தீர்மானம் கூறியது.

பாக்கிஸ்தான் படைகள் வெளியேறாததால் இந்தியப் படைகளும் வெளியேற வில்லை.

ஜ.நா. சபை தீர்மானத்தின் மற்றொரு பிரிவான காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையின் படி இந்தியா காஷ்மீரில் ஓட்டெடுப்பு - Plebiscite நடத்த வேண்டும் என்று கூறியது. 1951 வரை காஷ்மீரில் ஒட்டெடுப்பு நடத்தப்படும் என்று கூறிய இந்தியா (நேரு) பிறகு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தான் நடத்திய தேர்தல் ஒட்டெடுப்புக்கு இணையானது என்று வாதிட தொடங்கியது. ஆனால் ஐ.நா. சபையின் தீர்மானத்தின் படி இந்த தேர்தல் ஓட்டெடுப்புக்கு இணையானது அல்ல.

ஜுனாகத்தில் தானகவே முன் வந்து ஒட்டெடுப்பு நடத்திய இந்தியா, காஷ்மீரில் ஜ.நா. சபை மற்றும் காஷ்மீர் மக்கள் வலியுறுத்தியும் ஏன் ஒட்டெடுப்பு நடத்த வில்லை ?

காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பவில்லை என்பது தான் காரணம்.

காஷ்மீர் உண்மையில் முஸ்லீம் மக்கள் மட்டுமே உள்ள பிரதேசமா ?

ஒன்றிணைந்த ஜம்மு காஷ்மீர் என்று அழைக்கப்படும் காஷ்மீரின் முக்கிய பகுதிகள் - ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக், பூன்ச், கில்கிட், பால்டிஸ்தான் போன்றவை. 1947க்கு முன்பாக இதனை தோக்ரா மன்னர்கள் ஆண்டு வந்தனர். இந்தப் பகுதியில் இருக்கும் அனைவரும் காஷ்மீரிகள் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு வேறுபாடுகளுடனும் தங்களுக்கேயுரிய தனித்தன்மையும் பெற்றிருந்தன. இந்தியா எப்படி ஒரே நாடாக இருந்தாலும் பல வேறுபாடுகளுடன் இருக்கிறதோ அது போலவே காஷ்மீரும் - காஷ்மீர் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் பல வேறுபாடுகளுடனே இருந்தது. அது தான் காஷ்மீரின் பிரச்சனைக்கும் முக்கிய காரணமாக மாறி விட்டது.



காஷ்மீர் என்று சொல்லப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கு (Kashmir Valley) பகுதியில் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்கள். ஆனால் இந்துக்களும் இங்கு உண்டு. காஷ்மீர் முஸ்லீம்கள் பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் போல இல்லாமல் அவர்களுக்கேயுரிய கலாச்சாரத்துடன் தனித்தன்மையுடன் இருந்தனர். அது போல இங்கு இருந்த இந்துக்கள், பண்டிட் என்று அழைக்கப்படும் பிராமணப் பிரிவைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கும் இந்தியவின் இந்துக்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. மொத்தத்தில் காஷ்மீர் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் என்று ஒரு தனித்தன்மை இருந்தது.

பிரச்சனை இங்கே தான் தொடங்கியது. இங்கிருந்த சிறுபான்மை காஷ்மீர் பண்டிட்கள் காஷ்மீர் பாக்கிஸ்தானுடன் இணைவதை விரும்பவில்லை. ஆனால் முஸ்லீம்கள் பாக்கிஸ்தானுடன் இணைய விரும்பினர். ஜவகர்லால்நேரு காஷ்மீரி பண்டிட் பிரிவை சேர்ந்தவர். அவருக்கு தன்னுடைய பூர்வீக பூமி மீது தனி ஈடுபாடு உண்டு. இந்த தனி ஈடுபாடு தான் காஷ்மீரை அவர் இழக்க விரும்பாததன் முக்கிய காரணம்.

ஜம்மு, இந்துக்களும் சீக்கியர்களும் அதிகம் இருக்கும் பகுதி. தோக்ரா மன்னராட்சி பரம்பரையினர் இந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் தாம். இது தவிர லடாக் பகுதியில் புத்த மதத்தினர் அதிகம் உள்ளனர். ஜம்மு, லடாக் பகுதியில் உள்ளவர்கள் காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதையே விரும்பினர்.

பூன்ச் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம்.

பிற பகுதிகளான கில்கிட், பால்டிஸ்தான் போன்ற பகுதிகளிலும் முஸ்லிம்கள் அதிகம். கில்கிட், பால்டிஸ்தான் பகுதிகளில் உள்ள முஸ்லீம்களுக்கும் பாக்கிஸ்தான் முஸ்லீம்களுக்கும் நெருங்கிய கலாச்சார தொடர்புகள் உண்டு.

இந்திய பிரிவினையின் பொழுது முஸ்லீம் பெரும்பான்மை பகுதிகளாக இருந்த காஷ்மீர் பாக்கிஸ்தானுக்கு செல்வே அதிக வாய்ப்புகள் இருந்தன. மன்னர் ஹிந்து என்பதை தவிர. மன்னர் ஹரி சிங் ஹிந்துவாக இருந்தது கூட பிரச்சனையில்லை.

ஆனால் அவர் காஷ்மீர் மக்களின் மதிப்பை பெற்றவராக இருந்தாரா ? காஷ்மீர் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக மன்னர் இருந்தாரா ?

காஷ்மீரின் ஹிந்து மற்றும் முஸ்லீம் ஆகிய இருவரின் மதிப்பையுமே ஹரி சிங் பெற்றிருக்க வில்லை. 1946ல் காஷ்மீர் மக்களின் முக்கிய தலைவரான சேஷக் அப்துல்லாவை ஹரி சிங் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தார். மன்னர் ஹரி சிங்கிற்கு எதிராக போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன.

சேஷக் அப்துல்லா, நேருவின் நெருங்கிய நண்பர். அவரை விடுவிக்கும் பெருட்டு இந்தியா விடுதலை அடையும் முன்னரே நேரு காஷ்மீருக்கு அடிக்கடி செல்லத் தொடங்கினார். இது குறித்தும் காங்கிரசில் சலசலப்புகள் இருந்தன.

"என்னுடைய காஷ்மீர் மக்களுக்கு நான் இப்பொழுது தேவைப்படுகிறேன். இந்தியாவின் முதல் பிரதமராவதா, காஷ்மீருக்கு செல்வதா என்பது குறித்து கேள்வி எழுந்தால் நான் காஷ்மீருக்கு செல்வதையே விரும்புவேன்" என்று நேரு காந்திக்கு கடிதம் எழுதினார் (Selected Works of Jawaharlal Nehru).

இவ்வாறு இந்தியா விடுதலை பெற்ற சூழ்நிலையில் நேரு முதல் பிரதமராக பதவியேற்றதாலும், சேஷக் அப்துல்லாவிற்கும் நேருவுக்கும் இடையே இருந்த நெருங்கிய நட்பாலும் தான் மன்னர் ஹரி சிங் முதலில் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பவில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

காஷ்மீர் முஸ்லீம், ஹிந்து, புத்த மதத்தினர் பரவலாக ஒற்றுமையுடன் இருந்த பூமி. மன்னருக்கு எதிராக பிரச்சனையிருந்தாலும் ஹிந்து முஸ்லீம் போன்ற பிரச்சனைகள் காஷ்மீரில் இருந்தது கிடையாது. ஆனால் இந்தியா, பாக்கிஸ்தான் இணைப்பில் காஷ்மீரின் மக்களிடையே இரு வேறான கருத்து நிலவியது உண்மை.

ஆக.. இந்திய விடுதலை பெற்ற பொழுது காஷ்மீர் மிகுந்த குழப்பத்துடன் இருந்த ஒரு பகுதி. இந்த குழப்பத்தை தீர்க்க கூடிய ஒரே தீர்வாக இருந்திருக்க கூடியது ஓட்டெடுப்பு - Plebiscite. ஆனால் அது நடத்தப்படாததால் இன்று வரை இந்த குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜம்மு, லடாக் போன்ற பகுதிகள் இந்தியாவிற்கும், முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் காஷ்மீர் பாக்கிஸ்தானுக்கும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தால் கூட பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கலாம்.

இதற்கு பிறகு காஷ்மீருக்காக 1965ல் மற்றொரு போர் வெடித்தது. இந்தப் போரில் பாக்கிஸ்தானின் ஆளுமையில் இருந்த காஷ்மீரின் சில முக்கிய தளங்களை இந்தியா கைப்பற்றியது. ஆனால் தஷ்கின் ஒப்பந்தத்தின் படி படைகள் போருக்கு முந்தைய இடத்திற்கு திரும்பின. இந்தப் போரினில் எந்த நன்மையும் யாருக்கும் இல்லை. இந்தியா தான் கைப்பற்றிய சில முக்கிய தளங்களை விட்டுக்கொடுத்தது குறித்து கடும் அதிருப்தி எழுந்தது.

1971ல் மறுபடியும் இந்தியா - பாக்கிஸ்தான் இடையே போர் மூண்டது. இது காஷ்மீருக்கான போர் அல்ல. கிழக்கு பாக்கிஸ்தான் (பங்ளாதேஷ்) பகுதியில் மூண்ட பாக்கிஸ்தானின் உள்நாட்டு கலவரம். இதனால் பாக்கிஸ்தான் உடைந்து இந்தியாவின் ஆதரவுடன் பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவானது. அப்பொழுது இந்திரா காந்தி - பூட்டோ இடையிலேயான சிம்லா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பூட்டோவுக்கு பிறகு வந்த காஷ்மீரின் இராணுவத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. இந்தியா இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறது.

இதன் படி காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை (Line of Control - LOC) சர்வதேச எல்லையாக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தியாவின் வசம் இருக்கும் காஷ்மீர் இந்தியாவிற்கும், பாக்கிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீர் பாக்கிஸ்தானுக்கும் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்தியா, பாக்கிஸ்தான் இன்று இரண்டு நாடுகளுக்கு இடையே துண்டிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் நிலை ? அது குறித்து இந்தியாவோ, பாக்கிஸ்தானோ கவலைப்படவில்லை.

இந்த நீண்ட காஷ்மீர் பிரச்சனையின் சோகமான திருப்புமுனையாகத் தான் 1987ல் நடந்த காஷ்மீர் தேர்தல் அமைந்தது. இந்த தேர்தலில் நடந்த முறைகேடுகள் தான் காஷ்மீர் பிரச்சனை தீவிரவாத போராட்டமாக உருமாற காரணம் என்று கூறப்படுகிறது.

(காஷ்மீரில் தீவிரவாதம் உருவானதன் பிண்ணனி, காஷ்மீரிகளின் சுதந்திர போராட்டமாக உருவாகி தாலிபான் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதமாக அது உருமாறியது, இவை குறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன் )



முந்தையப் பதிவு - காஷ்மீரின் விடுதலை - 1

Leia Mais…