வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Thursday, November 30, 2006

மாவீரர் நாள் உரை - ஒரு விமர்சனம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இந்த வருட மாவீரர் நாள் உரை வழக்கம் போல பலரது கவனத்தைப் பெற்று இருக்கிறது. தமிழ் ஈழ விடுதலையே ஒரே தீர்வு என பிரபாகரன் அவர்கள் கூறியிருப்பது இந்த உரைக்கு கூடுதல் கவனத்தைப் பெற்று கொடுத்து இருப்பது மட்டுமில்லாமல் பல உலக நாடுகளின் கண்டனத்தையும் பெற்று கொடுத்து இருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, நார்வே என அனைத்து நாடுகளுமே இதனை ஏற்கவில்லை.

ஆனால் இது வரையில் புலிகள் தமிழ் ஈழ கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாக என்றுமே கூறியதில்லை. பிரபாகரனின் வெளிப்படையான அறிவிப்பு ஒரு புதிய கொள்கைப் பிரகடனமும் அல்ல. கடந்த காலங்களில் புலிகள் கூறிவருவதைத் தான் பிரபாகரன் மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழ் ஈழம் நோக்கி புலிகள் நகருவது போர் சூழ்நிலையை உருவாக்கும் என்ற நிலையில் தான் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. போர் நோக்கி புலிகள் நகருவதை தடுக்க வேண்டுமெனில் உலக நாடுகள் சிறீலங்கா அரசிடம் அதிகாரப் பகிர்வு குறித்து நிர்பந்தம் ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே A9 நெடுஞ்சாலையை திறக்க சிறீலங்கா அரசை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிர்பந்தம் செய்து வருகின்றன. இந் நிலையில் மற்றொரு போர் ஏற்படுவது வடக்கு கிழக்கு இலங்கையில் மனித அவலத்தை ஏற்படுத்தும். இதனை தடுக்க இது வரையில் எந்த பெரிய நிர்பந்தங்களையும் உலக நாடுகள் ஏற்படுத்தாத நிலையில் பிரபாகரனின் அறிவிப்பு இந் நாடுகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் மீதான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தி உள்ளது

இன்று இலங்கையில் நடக்கும் ராஜதந்திர சதுரங்க ஆட்டம் கூட விடுதலைப் புலிகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடையேயான ஆட்டம் தானே தவிர, சிறீலங்கா அரசு இந்த இரண்டு தரப்பின் ஆட்டங்களையும் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த வாரம் வாஷிங்டனில் இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டின் பொழுது சிறீலங்கா அரசுக்கு எதிராக நிர்பந்தம் ஏற்படுத்தப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. சிறீலங்கா அரசு கருணாவின் குழுவிற்கு சிறுவர்களை சேர்ப்பது குறித்து இணைத்தலைமை நாடுகள் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கும் என்பதாக எதிர்பார்க்கப்பட்டது. சிறீலங்கா அரசு கூட A9 நெடுஞ்சாலையை தற்காலிகமாக திறக்கப் போவதாக பூச்சாண்டி காட்டியது. ஆனால் எதிர்பார்க்கபட்ட அளவுக்கு கண்டனத்தை இணைத்தலைமை நாடுகள் வெளிப்படுத்த வில்லை. ஆனால் சிறீலங்கா அரசை கண்டிக்கவே செய்தன. இன்றைய நிலையில் சிறீலங்கா அரசை கடுமையாக கண்டிப்பது புலிகளை வலுப்படுத்தும் என்பதாக அமெரிக்கா நினைக்கிறது. ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், நார்வே போன்ற நாடுகளின் நிலை அவ்வாறு இல்லை. என்றாலும் அமெரிக்காவின் நிலையை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அமெரிக்காவின் நிலை இந்தியாவின் நிலையாகவும் இருக்க கூடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

புலிகளின் நிலை சிறீலங்கா அரசின் சிங்கள இனவாதத்தை வெளிப்படுத்தி, தங்களின் தமிழீழ கோரிக்கைக்கு அங்கீகாரம் தேட வேண்டும் என்ற நிலையில் இருக்கும் பொழுது உலகநாடுகளின் நிலை அவ்வாறான தனி நாட்டிற்கு அங்கீகாரம் வழங்காமல் சிறீலங்கா அரசை சார்ந்து தமிழர்களுக்கு அதிகராப்பகிர்வு வழங்க வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இவ்வாறான நிலையில் புலிகள் தங்கள் கோரிக்கைகாக போர் நோக்கி செல்லும் பொழுது சிறீலங்கா அரசு மீதான உலகநாடுகளின் அழுத்தம் அதிகரிக்கும். உலகநாடுகளின் கோரிக்கைக்கு சிறீலங்கா மறுக்கும் பட்சத்தில் சிறீலங்கா அரசிற்கு எதிரான நிலையை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு உலகநாடுகள் தள்ளப்படும். அதைத் தான் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக உதவியதன் மூலம் புலிகள் செய்தனர். இன்று சிறீலங்கா அரசு செய்து வரும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச நாடுகளுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அவ்வாறான நிலையில் பிரபாகரனின் உரை அவர்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்து இருக்கிறது.


அதே நேரத்தில் சிறீலங்கா அரசுக்கு உலகநாடுகளின் அழுத்தத்திற்கு வளைந்து கொடுக்காமல் தன் வழியில் செல்வதற்கும் சில பலமான காரணங்கள் உள்ளன. போர் சூழலிலும் ஆண்டிற்கு சுமார் 8% வளர்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் இன்றைய உலகமயமான பொருளாதாரச் சூழலில் அலட்சியப்படுத்த முடியாத ஒன்று. இலங்கை மீதான நிர்பந்தம் பொருளாதார தடையாக மாறுவதற்கான சூழ்நிலை நிச்சயமாக உலகநாடுகளின் உச்சகட்ட நடவடிக்கையாகவே இருக்கும். ஆனால் இந்த உச்சகட்ட நடவடிக்கையை உலகநாடுகள் அவ்வளவு விரைவில் எடுக்க முடியாது என்பது மட்டுமில்லாமல் உலகநாடுகளிடம் இருந்து அந்நியப்பட்டு போவதற்கான வாய்ப்புகள் சிறீலங்கா அரசுக்கு குறைவாகவே உள்ளது. சர்வதேச நாடுகளின் நிர்பந்தங்களுக்கு முழுமையாக அடிபணியாமல் ஒரு பொம்மையான கூட்டாட்சியை நிறுவ சிறீலங்கா அரசு முனையக்கூடும். அதனால் தான் சமீபகாலங்களில் மகிந்த ராஜபக்ஷ புலிகள் ஒட்டுமொத்த தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று கூறி வருகிறார். மாற்று தமிழர் குழுக்களை வளர்க்கவும் தலைப்படுகிறார். ஆனால் மகிந்தவின் இந்த உத்தி பல சிங்கள தலைவர்கள் கடைப்பிடித்த உளுத்துப்போன உத்தி தானே தவிர அது சர்வதேச நாடுகளிடம் எடுபடப்போவதில்லை. அதுவும் தமிழர் தாயகப் பகுதிகளில் சுமார் 70% இடத்தை தங்கள் வசம் வைத்துள்ள புலிகளை அவ்வளவு சீக்கிரம் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று விலக்கி விட முடியாது. இது சிறீலங்கா அரசுக்கு தெரிந்தே இருந்தாலும், இந்த உத்தி மூலம் அதிகாரப் பகிர்வினை பலருக்கும் பிரித்து அளித்து விட, புலிகள் எதிர்ப்பு குழுக்களை ஒன்று சேர்த்து விட முனைந்து கொண்டிருக்கிறது.

புலிகள் மற்றும் சிறீலங்கா அரசின் உத்திகளைக் கொண்டு சில விடயங்களை கணிக்க முடியும். அதாவது புலிகளின் தலைவர் தமிழீழம் தான் ஒரே தீர்வு என்று நினைத்தாலும் அதனை உடனடியாக அடைந்து விட முடியும் என்று நினைக்கவில்லை. புலிகள் எப்பொழுதுமே இடைக்கால தீர்வு என்ற ஒன்றை தொடர்ந்து வலியுறுத்தி வருவதை கவனிக்க வேண்டும். ஒரு இடைக்கால தீர்வினை எட்டியப் பிறகு தான் தமிழீழம் நோக்கி நகர முடியும்.

அதே சமயத்தில் சிறீலங்கா அரசு தொடர்ந்து ஒரு முழுமையான தீர்வினை வலியுறுத்தி வருவதையும் கவனிக்க வேண்டும். புலிகள் தமிழீழம் குறித்த தங்கள் போக்கில் தீவிரத்தை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களின் தற்காலிக இலக்கான இடைக்கால தீர்வு என்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். ஏனெனில் புலிகள் போரினை தீவிரப்படுத்தும் பொழுது சர்வதேச நாடுகளிடம் இருந்து எழும் நிர்பந்தம் புலிகளின் இடைக்கால தீர்வு குறித்த வாய்ப்பினை அதிகரிக்கும். சிறீலங்கா அரசு இடைக்கால தீர்வினை அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அதிகப்பட்ச அதிகாரங்களுடன் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கான அதிகாரப்பரவல் தான் இடைக்கால தீர்வு ஆகும். இதனை புலிகள் முன்னிறுத்துவதற்கான காரணங்கள் என நான் சிலவற்றை கருதுகிறேன். முதலில் தமிழீழத்திற்கான சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் இராணுவ நிலையில் இருந்தோ, தமிழர் பகுதிகள் அனைத்தையும் புலிகள் கைப்பற்றுவதாலோ நிகழ்ந்து விடாது. இன்றைய உலகம் வணிகமயமான பொருளாதார உலகம் ஆகும். இந் நிலையில் உலகநாடுகளின் அங்கீகாரம் கூட பொருளாதார காரணங்களால் தான் நிகழ முடியுமே தவிர இராணுவக் காரணங்களால் நிகழ முடியாது. ஒரே இலங்கையின் கீழ் அதிகப்பட்ச அதிகாரங்களுடன் கூட்டாட்சி அமையும் பட்சத்தில் இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதார உலகில் பிற நாடுகளுடனான உறவுகளை புலிகளால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். அந்த பொருளாதார உறவுகள் மூலம் தான் அடுத்தக் கட்டமான சுதந்திர தமிழீழம் நோக்கி புலிகள் நகர முடியும் என நான் நம்புகிறேன். புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக அமைப்பான - Interim Self Governing Authority (ISGA) கூட இத்தகைய அதிகப்பட்ச அதிகாரங்களைக் கொண்டதாக புலிகள் அமைத்து இருப்பதையும், பிற நாடுகளிடம் இருந்து பொருளாதார உதவிகளை பெற்றுக் கொள்வதாக இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

சிறீலங்கா அரசு கூட இதனை சரியாக அவதானித்து தான் இந்த இடைக்கால அதிகார அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், புலிகளை தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளாக ஏற்காமல், புலிகளின் எதிர்ப்பு தமிழர் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதையும் கவனிக்க வேண்டும். இது ஒரு புறம் என்றால் தமிழர்களுக்கு இந்தியாவின் கிராம பஞ்சாயத்து அமைப்புகளைச் சார்ந்த அதிகாரங்களை வழங்க பரிசீலித்து வருவதாகவும், இந்திய மாநிலங்களுக்கு இருப்பது போன்ற அதிகாரங்கள் கொண்ட தமிழர் மாநிலங்களை ஏற்படுத்த போவதாகவும் நகைச்சுவை உணர்வுடன் பேசிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இருப்பது கூட்டாட்சி அல்ல என்பது கூட தெரியாமலா தமிழர்கள் இருக்கிறார்கள் ?

புலிகளின் கோரிக்கை மிக அதிகப்பட்ச அதிகாரப்பரவல் நோக்கி உள்ளது. தனி இராணுவம், பொருளாதார உதவிகளை தனித்து பெற்றுக் கொள்வது போன்றவை கூட்டாட்சியில் மிக அதிகப்பட்சமான அதிகாரங்கள் ஆகும். ஆனால் சிறீலங்கா அரசு வழங்க நினைப்பது எந்த வகையிலும் கூட்டாட்சி சார்ந்து இல்லை. மிகக் குறைந்தபட்ச அதிகார அமைப்பைச் சார்ந்ததாகத் தான் சிறீலங்கா அரசின் நிலை உள்ளது.

இதில் இருவரும் சில சமரசங்களை செய்து கொள்ளக்கூடும். ஆனால் எந்த வகையிலும் புலிகள் தங்களின் தற்போதைய இராணுவ பலத்தை விட்டுக்கொடுக்கப்போவதில்லை.

இவ்வாறான நிலையில் புலிகள் தமிழீழம் நோக்கி தங்கள் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொழுது உலகநாடுகள் சிறீலங்கா அரசின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும். அதைத் தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன் இந்த உரை மூலமும், அடுத்த வரும் மாதங்களிலும் செய்ய நினைக்கிறார். புலிகள் போர் நோக்கி செல்வதை தடுக்க தமிழர்களுக்கான அத்தியாவிச பொருட்களை கூட தடை செய்து ஒரு மனித அவலத்தை ஏற்படுத்த சிறீலங்கா அரசு முனைந்து கொண்டிருக்கிறது. "வெளிநாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்கள் போரினை விரும்பக்கூடும். ஆனால் ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் அதனை விரும்ப மாட்டார்கள்" என்கிறார் டி.பி.எஸ்.ஜெயராஜ். அவர் கூறுவது உண்மையும் கூட. அதனால் தான் புலிகள் தங்கள் இராணுவ நடவடிக்கைகளைக் கூட தாமதமம் செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்க முடியாது என்பதைத் தான் பிரபாகரனின் உரை தெளிவுபடுத்துகிறது. சிறீலங்கா அரசின் பிடியை விடுவிக்க புலிகள் முனையக்கூடும்.

அடுத்த வரும் நாட்களில் ஈழப் போர் தீவிரம் அடையக்கூடும். இன்று ஈழத்தில் தலைவிரித்தாடும் வறுமை ஒரு மனித அவலத்தை ஏற்படுத்தும் நிலை நோக்கி நகர்ந்து வருகிறது. போர் ஏற்படும் பட்சத்தில் இது மிகவும் தீவிரமாகக்கூடும் என்பது தான் வருத்தமான உண்மை


தொடர்புடைய சில சுட்டிகள் :

பிரபாகரனின் மாவீரர் நாள் உரையின் வீடியோ
Sri Lanka ignoring India’s advice

Leia Mais…
Thursday, November 16, 2006

வன்முறை சமுதாயம்

ஒரு சமூகத்தில் வன்முறை நீண்ட காலங்களாக நிலவும் பொழுது அந்த வன்முறை சமூகத்தின் பல நிலைகளிலும் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தி, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது. பல தலைமுறைகள் அந்த வன்முறையால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அப்படியான ஒரு வன்முறை சமுதாயமாகத் தான் இன்றைய இலங்கை காட்சியளிக்கிறது. இலங்கை போன்று காட்சியளிக்ககூடிய பிற நாடுகள் என்று பார்த்தால் அவை ஆப்கானிஸ்தான், ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாக்கிஸ்தான் பகுதிகள், காஷ்மீர், ஈராக், பாலஸ்தீனம் போன்றவை ஆகும்.

இந்த வன்முறைக்கு யார் காரணம் என்பதை ஆராய்வதைக் காட்டிலும் பல காலமாக நிலவி வரும் வன்முறை மக்களின் அன்றாட வாழ்விற்கும், எதிர்கால தலைமுறையினரின் இயல்பான வாழ்விற்கும் விடுக்கக் கூடிய சவால் மிகவும் கவலை அளிக்க கூடியதாகும். என்னுடைய முந்தைய ஒரு கட்டுரையில் கூறியிருந்தது போல அரசாங்கம் ஒரு சமூகத்தின் மீது வன்முறையை திணிக்கும் பொழுது, அந்தச் சமூகம் அரசாங்கத்தின் வன்முறையை தன் எதிர் வன்முறையால் தான் எதிர்க்க முயலுகிறது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கூட ஜாலியன்வாலாபாக்கில் பிரிட்டிஷ் எகாதிபத்தியம் நிகழ்த்திய வன்முறைக்கு எதிராக எழுந்த இந்திய எதிர்ப்பும் அத்தகைய எதிர்வன்முறை தான். இவ்வாறு பல இடங்களில் அதிகார மையங்கள் முன்நிறுத்தும் வன்முறையை எதிர்த்து முன்வைக்கபடும் எதிர்வன்முறையை நியாயப்படுத்துவதும், மறுப்பதும் அவரவரின் சார்புகளைப் பொறுத்தே உள்ளது.

ஆனால் இவ்வாறு எழும் எதிர்வன்முறை வலுத்து ஆயுதக்கலாச்சாரம் பரவும் பொழுது, அந்த சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் தான். அவர்களின் வாழ்க்கை அந்த வன்முறை சமூகத்தில் சிக்கி சீர்குலைந்து போய் விடுகிறது. அவ்வாறான ஒரு சமுதாயமாக அனைத்து மட்டங்களிலும் வன்முறையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இடமாக இலங்கை உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் தொடுத்த வன்முறையை எதிர்க்க தொடங்கிய தமிழ் போராளிக்குழுக்கள், அதன் பிறகு தொடங்கிய போர், ஆயுதக்கலாச்சாரம் போன்றவை இலங்கையில் மிக ஆழமாக ஊடுறுவி விட்டன. இலங்கையில் சமாதானம் நிலைப்பெற்றால் கூட ஆயுதங்களின் பிடியில் இருந்து விலகி இலங்கை ஒரு சகஜமான சூழ்நிலையைப் பெற பல காலங்கள் பிடிக்கும். அந்தளவுக்கு வன்முறை இலங்கையின் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளது.

ஆயுதங்களின் புழக்கம் மிக அதிகளவில் காணப்படுகிறது. பிபிசி தமிழோசையில் தினமும் வடகிழக்கு இலங்கையில் நிகழும் வன்முறை குறித்து தொகுத்து அளிக்கப்படும் தகவல்கள் அதிர்ச்சியை அளிக்க கூடியதாக உள்ளது. தினமும் சிலர் சுடப்பட்டு இறக்கும் நிகழ்வுகளும், அரசாங்கத்தின் மேற்பார்வையிலேயே பலர் கடத்தப்படுவதும், பணத்திற்காக மிரட்டப்பட்டு கொலை செய்யப்படுவதும், எம்.பிக்கள் கொலை செய்யப்படுவதும் மிகச் சாதாரணமான நிகழ்வாகி விட்டது. கடந்த வாரம் தமிழ் எம்.பி. ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்கு முந்தைய வாரம் பலர் மர்மான முறையில் அரசாங்கத்தால் கடத்தப்படுவது குறித்து மனித உரிமை அமைப்புகள் அதிருப்தி தெரிவித்து இருந்தன.

இவ்வாறு நடந்து வந்த தொடர் வன்முறையின் உச்சக்கட்டமான ஒரு செய்தியை ஐநா வெளியிட்டு உள்ளது. கடந்த காலங்களில் இதனை தமிழ் ஊடகங்கள் எழுதியிருந்தாலும், இது அதிகம் பொருட்படுத்தப்படவில்லை. ஆனால் இம்முறை இதனை அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து ஐநா அமைப்பு வெளியிட்ட பொழுது கடந்த வாரம் அது உலகெங்கிலும் தலைப்புச்செய்தியாக இருந்தது. பிபிசி தன்னுடைய உலகச்செய்திகளில் அதிகளவு முக்கியத்துவம் அளித்து இந்தச் செய்தியை வெளியிட்டு இருந்தது. சமீபகாலங்களில் இலங்கை விடயத்தில் பிபிசியின் செய்தி வழங்கும் முறை மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. மிகுந்த நடுநிலையுடன் சரியான செய்திகளை பிபிசி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

அந்தச் செய்தி - சிறீலங்கா இராணுவம், குழந்தைகளை வலுக்கட்டாயமாக கருணாவின் குழுவில் சேர்த்து புலிகளுக்கு எதிராக அவர்களை "குழந்தைப் போராளியாகளாக" மாற்றியிருக்கிறது என்பது தான். கடந்த காலங்களில் புலிகள் மீது முன்வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு இம்முறை சிறீலங்கா அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. புலிகள் குழந்தைகளை அவர்கள் அமைப்பில் சேர்ப்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதனை கண்டிக்கும் அதே வேளையில் சிறீலங்கா அரசாங்கத்தின் செயலை சர்வதேச நாடுகள் கண்டிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்றைய உலகமயமாக்கப்பட்ட சந்தையில் இலங்கை மீதான பொருளாதார தடை எந்தளவுக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனால் சிறீலங்கா அரசாங்கத்தைச் சேர்ந்த சிலருக்கு ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்யும் தடையை விதிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் பரிசீலிக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் சிறீலங்கா அரசாங்கம் மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டிய கட்டயத்திற்கு சர்வதேச சமூகம் வந்துள்ளது.

கடந்த ஓராண்டாக நடந்து வரும் நிகழ்வுகளை நோக்கும் பொழுது "தேர்தல் திருவிழா" ஜனநாயக நாடு என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருந்த சிறீலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாத சிங்கள கோரமுகம் மிக தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இதன் அனைத்து பெருமையும் சிங்கள தேசியவாதத்தை முன்நிறுத்தும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையேச் சாரும். மகிந்த ராஜபக்ஷ மிக மோசமான மனித உரிமை மீறல்களை தமிழர்கள் மீது கட்டவிழ்த்துள்ளதை உலகநாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டிக்க தொடங்கியுள்ளன. அதே சமயத்தில் மகிந்த ராஜபக்ஷ இராணுவ நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பது இராணுவத்தின் பலம் சிவிலியன் நிர்வாகத்தைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் நிலை நோக்கிச் செல்வது, இலங்கையின் "தேர்தல் திருவிழா" ஜனநாயகத்திற்கு கூட கேடுவிளைவிக்க கூடியது ஆகும்.

உலகின் பிரச்சனைக்குரிய பலப்பகுதிகளில், உள்நாட்டுக் கலவரம் அதிகளவில் இருக்கும் நாடுகளில் இராணுவத்திற்கு அதிக பலம் இருக்கும். சில நேரங்களில் அந்த பலம் சிவிலியன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு கூட காரணமாக அமைந்து விடுகிறது. இலங்கையின் நீண்ட உள்நாட்டு போர் சூழலில் சிவிலியன் அரசு தொடர்ந்து தாக்கு பிடிப்பதே கூட ஒரு வகையில் வெற்றி தான். ஆனால் கடந்த காலச் சூழ்நிலைகள் போல இல்லாமல் இம்முறை சர்வதேச நாடுகளின் நிர்பந்தம், சிங்கள தேசியவாதிகளின் ஆதிக்கம், சிறீலங்கா இராணுவத்தில் ஆதிக்கம் பெற்று வரும் சிங்கள தேசியவாதிகள் என நோக்கும் பொழுது சிறீலங்கா இராணுவத்தின் ஆதிக்கம் சிவிலியன் நிர்வாகத்தை நெருக்குதலுக்கு உள்ளாக்கும் நிலையை எட்டி விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

BBC செய்தி: செய்திப்படம்

Leia Mais…
Sunday, November 12, 2006

என்னைக் குறித்தான அவதூறு

என்னைக் குறித்து ஒரு வலைப்பதிவர் சில அவதூறுகளை வாரி இறைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதையெல்லாம் பொருட்படுத்தி விளக்கம் அளிக்க தேவையில்லை என்று நினைத்தாலும், இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வலைப்பதிவில் இருந்து வருவதாலும், தொடர்ந்து இருக்க நினைப்பதாலும், என்னை அவதூறுகள் மூலம் தாக்கி அழிக்க நினைக்கும் சிலருக்கும், என் மேல் நம்பிக்கை கொண்ட சிலருக்கும் சில விளக்கங்களை அளிக்க வேண்டிய தேவை உள்ளது

முதலில் வீரவன்னியன் என்ற பதிவருடன் சம்பந்தப்படுத்தி இருப்பது.

சாதி ஒரு வலுவான ஆயுதம். இந்திய/தமிழக சூழலில் சாதியை மையமாக வைத்து நடக்கும் தாக்குதல்கள் ஒன்றும் புதிது அல்ல. சாதி ரீதியாக ஒருவரை தாக்கும் பொழுதும், சாதி வெறியராக சித்தரிக்கும் பொழுதும் அவருடைய அனைத்து சித்தாந்தங்களையும் கேள்விக்கு உள்ளாக்க முடியும். அவருடைய நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்ப முடியும். இங்கும் அது தான் நடக்கிறது. திராவிட சிந்தனையும், ஈழ ஆதரவும் கொண்ட என்னை ஒரு சாதி வெறியனாக சித்தரிப்பதால் என்னுடைய நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுகிறது. என்னை சாதி வெறியனாக கட்டமைத்து விட்டால் நான் கொண்ட தமிழ் தேசியம், திராவிடம், ஈழம், பெண் விடுதலை போன்ற முற்போக்கு சிந்தனையை கேள்விக்குள்ளாக்கி என்னை சிதைத்து விட முடியும். ஒரு சாதாரண வலைப்பதிவு சண்டைக்கு, தமிழ்மணம் சார்ந்த பிரச்சனைக்கு இப்படி ஒரு வடிமா ? சிரிப்பு தான் வருகிறது

என்னைப் பொறுத்தவரையில் பாமக, திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளை எல்லாம் ஒரே தட்டில் தான் பார்க்கிறேன். என்னுடைய தேர்தல் பதிவுகளைப் பார்த்தால் நான் திராவிட, தமிழர் ஆதரவு, ஈழ ஆதரவு, ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு பெற்றக் கட்சிகளை ஒரே மாதிரியாத் தான் பார்க்கிறேன் என்பதை புரிந்து கொள்ள முடியும். என்னுடைய திராவிட அடையாளத்திற்கு ஒரு உதாரணம் கொடுக்க வேண்டுமென்றால், என்னுடைய திருமணமே திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தான் நடைபெற்றது.
என்னுடைய திருமணமே மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்திருந்தும் திமுகவின் கொள்கைகளிலும், நடைமுறைகளிலும் நிறைய கருத்து வேறுபாடுகள் எனக்கு உண்டு. என்னுடைய பதிவுகளில் திமுகவுக்கு ஆதரவாக நான் எழுதியதில்லை என்றாலும் சில பதிவுகளில் அந்த திமுக ஆதரவு முகம் வெளிப்பட்டிருக்கலாம். அவ்வாறு இருந்தும் என் சாதியை சார்ந்து இங்கு அவதூறு செய்ய முற்படுவது எதனைக் குறிக்கிறது ? நான் சார்ந்த சாதியை வைத்து மட்டும் அவதூறு செய்ய நினைத்ததால் இங்கே வன்னியராக நான் சித்தரிக்கப்பட்டு இருக்கிறேன். அந்தளவுக்கு சாதியை அவதூறு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.

அடுத்து என் பெயரில் இருக்கும் தமிழை சார்ந்து வேறொரு பதிவருடன் என்னை இணைத்திருக்கிறார்கள். அவதூறு பதிவரின் லாஜிக் மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழ் மொழி மீது அபிமானம் கொண்டிருக்கும் பலரும் தமிழை தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்கிறார்கள்.
தமிழ் நதி, தமிழ் நிதி, தமிழ் பாம்பு என்று இருக்கும் வலைப்பதிவுகளுடன் என்னை சம்பந்தப்படுத்தாமல் இருக்குமாறு விண்ணபித்துக்கொள்கிறேன் :)

உண்மைகள் இவ்வாறு இருக்க, நான் தமிழ்மணத்திற்கு ஆதரவாக சில பின்னூட்டங்களை (இரண்டு பின்னூட்டங்களை இது வரை எழுதியிருக்கிறேன்) எழுதியதாலும், ஈழத்திற்கு ஆதரவாக பதிவுகளை தொடர்ந்து எழுதி வருவதாலும் தான் இந்த தாக்குதலுக்கு உள்ளானதாக நம்புகிறேன். ஏற்கனவே நான் ஈழத்திற்கு ஆதரவாக பதிவு எழுதியதில் கோபம் கொண்டு என்னை குறித்து முன்பே ஒரு பதிவு இட்டவர் தான் இந்த அவதூறு பதிவாளர்.

கடந்த முறை நான் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால் இம்முறை சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகளை பரிசீலனை செய்ய உள்ளேன்.

இறுதியாக நான் உறுதிபட இதனை கூற நினைக்கிறேன்...

இவ்வாறான அவதூறு தாக்குதல்கள் நான் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதான நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது. என்னுடைய பங்குச்சந்தை, பொருளாதாரம், ஈழம், அரசியல், உலகின் பல்வேறு மக்கள் போராட்டங்களைச் சார்ந்தப் பதிவுகளை தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன்.

என்னை நம்பும் நண்பர்களும், வாசகர்களும் என்னை பின் தொடருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. என் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை விட்டு விலகலாம். அவதூறுகளை எல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. இது என் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கான விளக்கம் மட்டுமே...

Leia Mais…