வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Sunday, January 13, 2008

ஜல்லிகட்டு தடையை ஏன் எதிர்க்க வேண்டும் ?

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுக்கு இந்தியாவின் உச்சநீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடத்த முடியாத அளவுக்கு முழுமையான தடை என்பது அதிர்ச்சி அளிப்பது மட்டுமில்லாமல், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் நீதிமன்றங்கள் எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைப்பதும், இந்தியாவில் நீதிபதிகளாக இருந்து விட்டால் பல நூறு வருடங்களாக இருந்து வரும் பண்பாட்டு அடையாளங்களையும், விளையாட்டுகளையும் எந்த ஆய்விற்கும் உட்படுத்தாமல் தடை செய்ய துணிவது தனி மனித சுதந்திரத்திற்கு பெரும் கேடு விளைவிக்க கூடியது. அதுவும் தமிழர் கலாச்சாரத்தை சாராத ஒரு அமைப்பு, எந்த ஆய்வும் செய்யாமல் இவ்வாறான தீர்ப்பை முன்வைப்பது பெருவாரியான மக்களின் ஜனநாயக உரிமையை சிதைக்கும் போக்கு என்றே நான் நினைக்கிறேன்.

முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜல்லிகட்டு ஒரு ”வீர” விளையாட்டு என்றோ, தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் அடையாளம் என்றோ நான் நினைக்கவில்லை. ஒரு அப்பாவி காளையை 20 பேர் துரத்தி வளைத்து பிடிப்பது என்பது எந்த வகையிலும் வீர விளையாட்டாக முடியாது. இங்கே இந்த காளை ஒரு பரிதாபமான ஜீவனாகவே எனக்கு தெரிகிறது.

ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜல்லிகட்டின் இன்றைய நிலை என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு விளையாட்டு சீர்குலைந்து போனதன் தோற்றமாகத் தான் எனக்கு தெரிகிறது. ஜல்லிகட்டு சுமார் 4000 ஆண்டுகளாக தமிழர்களால் (திராவிடர்களால்) கொண்டாடப்படும் ஒரு விளையாட்டு என்பது ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் ஜல்லிகட்டு இருந்துள்ளதை வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றைய ஹிந்து நாளிதழில் அந்த செய்தி வெளியாகி உள்ளது.

Evidence of jallikattu in the Indus Valley emerges

இவ்வாறு 4000 ஆண்டுகளாக இருந்து வரும் மரபு மாற்றம் பெறுவது இயல்பானதே. ஒரு காலத்தில் தென்னிந்தியா, இலங்கை, கடாரம், சுமத்ரா என பல பகுதிகளை தமிழன் ஆட்சி செய்த பொழுது அந்த விளையாட்டு உண்மையிலேயே வீர விளையாட்டாக இருந்திருக்கும். சீறி வரும் காளையை அடக்குவது என்பது சாதாரண விடயம் அல்ல.

ஆனால் இன்றைக்கு இலங்கை, கர்நாடகா, மும்பை, மலேசியா என அனைத்து இடங்களிலும் உதை வாங்கும் பிறவியாக தமிழன் மாறி விட்ட நிலையில் அது வீர விளையாட்டாக இல்லாமல் காலப்போக்கில் மாற்றம் பெற்று வெறும் உற்சாகத்தின் அடையாளமாகவே உள்ளது.

அன்றைக்கு சீறி வரும் ஒரு காளையை அடக்க ஒருவர் அல்லது இருவர் முயன்ற காலங்கள் மாறி இன்றைய தமிழனின் “வீர” (பரிதாப) நிலைக்கு ஏற்ப ஒரு காளையை 20 பேர் அடக்கும் நிலைக்கு ஜல்லிகட்டு மாற்றம் பெற்று விட்டது. இது நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான போட்டி அல்ல. இதில் மாற்றங்கள் வேண்டும் என இந்த விளையாட்டினை ஒரு முறை நேரடியாக காண நேர்ந்த பொழுதே நான் உணர்ந்தேன். அத்தகைய மாற்றங்களை கொண்டு வராமல் ஒட்டுமொத்தமாக தடைவிதிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

தவிரவும் ஜல்லிகட்டு என்பது ஒரு வரையறைக்குள் விளையாடும் விளையாட்டகவும் இல்லை. விதிமுறைகளும் இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் அந்த கிராம மக்களே தங்களுக்கான வரையறைகளை நிர்ணயித்துக் கொள்ளும் பொழுது அவர்களுக்கு தகுந்தாற் போல தான் அந்த விளையாட்டை அமைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு எந்தளவுக்கு உற்சாகம் கிடைக்கிறதோ அவ்வாறே அந்த விளையாட்டும் இருக்கும். முழுமையான பாதுகாப்பு, தற்காப்பு ஏற்பாடுகள் செய்யும் வரை சில விதிமுறைகளை விதித்து அவ்வாறு இந்த விளையாட்டை நடத்துமாறு கூறலாம்.

சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு அதைத் தான் செய்தது. சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டை அனுமதித்து இருந்தது.

Last year, the Madras High Court allowed the event to take place. But it imposed certain conditions like double barricading to prevent the bulls from running through the crowd of spectators, putting bulls through drug and alcohol tests and stationing ambulances and mobile medical teams at the venues.

ஜல்லிக்கட்டு என்பது தொடர்ச்சியாக மக்களின் விளையாட்டாகவே இருந்து வந்துள்ளது. அதிகார மையங்களின் ஒழுங்கமைப்பு என்பது இன்று வரை அந்த விளையாட்டில் நுழையவில்லை. ஜல்லிக்கட்டு தொடர்ந்து மக்களின் கையில் இருப்பதே சரியானதாக இருக்கும். அதே நேரத்தில் தற்போதைய நிலையில் இருந்து ஜல்லிக்கட்டு மாற்றம் அடைய வேண்டிய தேவையும் உள்ளது. காரணம் இன்றைய நவீன உலகிற்கு ஏற்ப விளையாட்டும் மாற்றம் அடையும் பொழுது தான் அது தொடர்ச்சியாக நிலைத்து நிற்க முடியும். பலர் சேர்ந்து காளைகளை விரட்டுவது என்பது ஏற்புடையது அல்ல. அதுவும் எந்த ஒரு ஒழுங்கும் இல்லாமல் காளைகள் மீது தாவுவது பலருக்கு கடுமையான காயங்களையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது. தகுந்த தற்காப்பு முறைகளை புகுத்துவது போன்றவை முக்கியமான விடயங்களாக நான் பார்க்கிறேன். அது போலவே விலங்குகளை வதை செய்வது குறித்த கட்டுபாடுகளையும் கொண்டு வர வேண்டும்.

ஆனால் முழுமையாக தடை செய்வது என்பது எப்படி சரியாகும் ?

இடஒதுக்கீடு குறித்த ஒரு தீர்ப்பில் ஒரு நீதிபதி இடைக்கால தடையை விலக்க மறுத்து இவ்வாறு கூறினார்.

The Bench told Solicitor-General G.E. Vahanvati: "You [the Centre] have waited for 57 years. Why don't you wait for six more months till the case is finally decided?"

இடஒதுக்கீட்டிற்காக 57 ஆண்டுகள் பொறுத்துள்ளீர்கள். இன்னும் ஆறு மாதம் பொறுத்திருங்கள் என்பதே அந்த தீர்ப்பின் சாராம்சம். அதாவது தற்போதைய நிலையை (Status-quo) அப்படியே நீடிக்கும் தீர்ப்பு அது.

முழுமையாக விசாரிக்கும் வரை Status-quoஐ அப்படியே பராமரிப்பது என்பது மரபு. ஆனால் இந்த விடயத்தில் இது மாற்றம் கண்டுள்ளது தான் ஆச்சரியமாக உள்ளது.

******

விளையாட்டு என்பதே பொழுதுபோக்கு மற்றும் உற்சாகத்திற்கு தான். விளையாட்டு, வழிபாடு, நடனம், இசை என அனைத்துமே உற்சாகத்திற்கு தான். ஒவ்வொரு தட்டு மக்களின் வாழ்க்கை முறைக்கும் சூழலுக்கும் ஏற்ப இந்த விளையாட்டுக்கள் மாறுகின்றன. மேட்டுக்குடி மக்களுக்கு கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும் உற்சாகம் என்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், ஜல்லிகட்டு போன்றவை உற்சாகம். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப அவர்களின் கலாச்சாரமும், விளையாட்டுகளும், அடையாளங்களும் மாறுபடுகின்றன.

தயிரும், நெய்யும் சாப்பிட்டு வேதங்களை ஓதுபவர்கள், மிதமான வேலைகளை செய்பவர்கள் ராகங்களை ஆலாபனை செய்கின்றனர். வயலில் கடுமையாக உழைத்து களைத்து வருபவனுக்கு ஆர்ப்பாட்டமானவைகளாக இருக்கும் கரகாட்டங்கள், தப்பாட்டங்கள், ஜல்லிக்கட்டு போன்றவை உற்சாகமாகின்றன. இதில் ஒருவர் மற்றொருவரை பார்த்து உன் உற்சாகம் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது என்பது எப்படி பொருந்தும் ?

விலங்குகளை வதைப்பது காட்டுமிராண்டித்தனம் தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் விலங்குகளை இறச்சிக்காக பலியிடுவது அதை விட காட்டுமிராண்டித்தனம் இல்லையா ? எனவே இனி யாரும் இறச்சி சாப்பிட கூடாது என தடை விதிக்க முடியுமா ?

அவரவர் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப உற்சாகங்களும், பொழுதுபோக்குகளும் மாறுகின்றன. அடிக்கடி கிரிக்கெட்டில் தோற்று கொண்டே இருக்கும் இந்திய அணி ஒரு போட்டியில் சுமாராக விளையாடி தோற்ற பொழுது, அந்தப் போட்டியில் விளையாடும் ஒருவர் லூசுத்தனமாக மற்றவரை பார்த்து ”குரங்கு” எனக் கூறி நீக்கப்பட்ட பொழுது சிலர் இந்தியாவிற்கே அவமானம் ஏற்பட்டு விட்டதாக கொதித்தனர். எனக்கோ அது எந்த வகையிலும் அவமானமாக தெரியவில்லை. மாறாக முஸ்லீம்களை திட்டமிட்டு கொன்று 21ம் நூற்றாண்டின் ஹிட்லராக இருக்கும் நரேந்திர மோடி மறுபடியும் தேர்தலில் வெற்றி பெற்றதும், அவரின் குற்றங்களுக்கு இந்தியாவின் சர்வ அதிகாரம் பெற்ற நீதிமன்றங்கள் இன்று வரையிலும் தண்டனை வழங்காமல் இருப்பதும் தான் அவமானமாக தெரிகிறது.

பள்ளியில் படிக்கும் பொழுது Social Studies என்று ஒரு பாடம் இருக்கும். அதில் பல மாநிலங்கள், அவர்களின் பண்பாடுகள் குறித்த பாடங்கள் வரும். தமிழ்நாட்டின் முக்கிய கலைகளாக பரதநாட்டியமும், கர்நாடக சங்கீதமும் தான் அதில் முன்நிறுத்தப்படும். பரதநாட்டியமும், கர்நாடாக சங்கீதமுமா தமிழனின் கலை ? அது பாப்பனியத்தின் கலை. தமிழனின் கலை என்பது கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், கூத்து போன்றவையே. ஆனால் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்றவை மேலான கலைகளாக கற்பிதம் செய்யப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் கலையை சிறுமைப்படுத்தும் போக்கு தொடர்ச்சியாக நிலவி வருகிறது. இதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் கலைகள் அழிவை நோக்கி நகர்ந்து வருகின்றன. சில அழிந்தும் விட்டன. அந்த அபாயத்தால் தான் சென்னை சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் இன்றைக்கு தேவையாக உள்ளன. சென்னை சங்கமத்திற்கு வரும் கூட்டம் எவ்வளவு, சென்னை சபாக்களுக்கு வரும் கூட்டம் எவ்வளவு என கணக்கிட்டால் எது மக்களின் கலை என்பது புரியும்.

ஆனால் அதிகார மையங்கள் மேட்டுக்குடிவசம் உள்ளதால் அவர்களின் கலையை உயர்வாக கற்பிதம் செய்ய முடிகிறது. மேட்டுக்குடி அல்லாத மக்கள் மத்தியில் அக் கலைகள் குறித்த ஒரு உயர்வு மனப்பான்மையை ஏற்படுத்தவும் முடிகிறது. இன்றைக்கு இந்திய ஊடகங்களின் வளர்ச்சியும், இந்திய ஊடகங்களின் மேட்டுக்குடி தன்மையும் இத்தகையை நிலையை மேலும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான தொலைக்காட்சிகளில் மேட்டுக்குடியினரின் பண்பாடுகள் தான் பரப்ப்பபடுகின்றன. அதனுடைய தாக்கம் எப்படிபட்டது என்றால் கிராமத்தில் இருந்து நகரங்களுக்கு நகரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பரதநாட்டியமும், கர்நாடக சங்கீதமும் தான் சிறந்தவையாக தெரிகின்றன. தங்களுடைய வாரிசுகள் இத்தகைய கலைகளையே கற்க வேண்டும் என நினைக்கின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு பரதநாட்டியம் தெரியும், ராகங்கள் தெரியும் என வெளியே தம்பட்டம் அடித்துக் கொள்வது அவர்களுக்கு நாகரிகமாக தெரிகிறது. தங்கள் தகுதியும் உயர்வை அடைந்து விட்டதாக நம்புகின்றனர்.

இப்படியான மாற்றங்களால் இன்றைக்கு கரகாட்டம் அடைந்துள்ள நிலை என்ன என்பது நமக்கு தெரியும். கரகாட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்றால் அது எந்தளவுக்கு கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெரியும்.

இந்தக் கலைகள் போலவே தமிழனின் விளையாட்டுகளாக இருந்த சிலம்பாட்டம், ஜல்லிக்கட்டு, கபடி போன்றவை பின்னுக்கு தள்ளப்பட்டு மேல்தட்டு விளையாட்டுகளான கிரிக்கெட், டென்னிஸ் போன்றவை முன்னிறுத்தப்படுகின்றன.இன்றைக்கு தமிழனின் விளையாட்டுக்கள் வெறும் கலாச்சார அடையாளமாக மட்டுமே மாறி விட்ட நிலையில் அதனையும் தடை செய்ய முயல்வதை எதிர்க்க வேண்டிய தேவை உள்ளது.

******

பிபிசி தமிழோசையில் ”ஜல்லிகட்டு தடை” குறித்த செய்தியரங்கத்தில் ஜல்லிக்கட்டிற்கென உள்ள காளைகளை உழவு வேலைக்கு பயன்படுத்த முடியாது என்றும், ஜல்லிகட்டிற்கு தடை விதித்தால் இவை இறச்சிக்கு மட்டுமே பயன்படுத்தபடும் நிலை ஏற்படும் என்றும் மதுரையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் கூறினார்.

******

சமீப காலங்களில் நீதிமன்றங்கள் பல விடயங்களில் அத்துமீறி நுழைகின்றன. சட்டம் படித்து, வழக்கறிஞராகி அனுபவம் பெற்று நீதிபதியாகி விட்டால் இந்தியாவில் இருக்கும் எந்த விடயத்தையும் மாற்றும் அதிகாரம் கிடைத்து விடுகிறது என்பது ஒரு ஆபத்தான சூழ்நிலை ஆகும். தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தீப்புகளாக மக்களின் மீது திணிப்பது ஜனநாயக விரோதமான செயல் ஆகும்.

பல நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை observation என்ற போர்வையில் போகிற போக்கில் கூறும் போக்கும் நிலவி வருகிறது. இவை தீர்ப்புகள் அல்ல. ஆனால் மக்கள் மத்தியில் இவை பரபரப்பாக பேசப்படும் சூழலை ஏற்படுத்தி விடுகின்றன.

சமீபகாலங்களில் வெளியான சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள்.

சேது சமுத்திர பிரச்சனையில் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த பொழுது அரசாங்கத்தை கலைக்க பரிந்துரைப்போம் என ஒரு நீதிபதி கூறினார். இது தீர்ப்பு அல்ல. வெறும் கருத்து - observation. ஒரு மாநில அரசாங்கத்தை கலைக்க ஒரு நீதிமன்றம் பரிந்துரைக்க முடியுமா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, தன்னுடைய கருத்தால் அத்தகைய ஒரு பிம்பத்தை அந்த நீதிபதி ஏற்படுத்தினார்.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பகவத் கீதையை தேசிய தர்ம சஸ்திரமாக ஏற்க வேண்டும் என கூறினார்.
Allahabad HC judge wants Gita to be national holy book

நீதிமன்றங்கள் என்பன சட்டங்களை இயற்ற கூடாது. இருக்கின்ற சட்டங்களுக்கு ஏற்ப தீர்ப்புகளை வழங்க வேண்டும். அந்த சட்டங்களை பாதுகாக்க வேண்டும் என ஒரு தீர்ப்பில் இரு நீதிபதிகள் கூறினார்கள் (Justices A K Mathur and Markandey Katju).

"Courts should be limited to overseeing that the existing laws are upheld and it shouldn't take to creating laws.

இவ்வாறு இரு நீதிபதிகள் கூற, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியோ இந்த தீர்ப்பு எங்களை கட்டுபடுத்தாது என கூறினார்

SC not bound by overreach verdict: CJI

இப்படி ஒவ்வொரு நீதிபதியும் தங்களின் தனிப்பட்ட கருத்தை ”தீர்ப்புகளாக” முன்வைப்பது ஜனநாயக சூழலுக்கு ஆரோக்கியனமானது அல்ல. மக்கள் மத்தியில் குழப்பத்தையே இந்த தீர்ப்புகள் ஏற்படுத்தும்.

Leia Mais…