வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Monday, March 21, 2005

மூலிகைக் குழந்தைகளும், கரைந்து போகும் லட்சங்களும்

இந்த வார ஆனந்தவிகடனில் மூலிகைக் குழந்தைகள் பற்றியும், சித்த மருத்துவர் டாக்டர் ஜமுனா பற்றியும் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அது பற்றி சில கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது

மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில் குழந்தை பேறுக்காக கோயில் குளம், மருத்துவமனைகள் என அலைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்காதா என்று பல வருடங்கள் தவம் கிடக்கும் இவர்கள் பல இலட்சங்களை பல மருத்துவமனைகளிலும், கோயில் உண்டியலிலும் கொட்டியிருக்கிறார்கள். சிலர் குழந்தைகளை தத்து எடுத்தாலும் பலருக்கு அந்த மனம் வருவதில்லை. தன் ரத்தத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர். அதில் எந்த தவறும் கிடையாது. தத்து எடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும். யதார்த்த வாழ்க்கையில் நிறைய பேருக்கு அந்த மனம் வருவதில்லை.

குழந்தை பிறக்காமைக்கு பெண்கள் தான் காரணம் என்று ஆண்கள் தப்பித்துக் கொண்டிருந்த காலம் மாறி இன்று குழந்தை பிறக்காத தம்பதியரில் பெரும்பாலும் ஆண்களுக்கு தான் பிரச்சனை இருக்கிறது. எல்லா மருத்துவர்களும் ஆண்களின் விந்தணு
சோதனையை தான் முதலில் வலியுறுத்துகிறார்கள்.குழந்தை இல்லாத தம்பதியினர் மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. வீட்டில் இருப்பவர்கள் "எப்பொழுது எனக்கு ஒரு பேரனை பெற்றுக் கொடுக்க போகிறாய்" என்பதில் தொடங்கி சமூகத்தில் இருப்பவர்கள் "ஏதாவது விஷேசம் உண்டா" என்று கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இவர்கள் படும் சங்கடம், அதனால் ஏற்படும் மன உளைச்சல் மனரீதியாகவும் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

பெண், மலடி என்ற பழிச் செல்லுடன் காலங்காலமாக பல அவலங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள். சொந்த வீட்டில் நடக்கும் விஷேசங்களில் கூட இவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். காரணம் குழந்தை பேறு இல்லை என்ற குறை. ஆணின் குறை வேறு விதமாக கவனிக்கப்படுகிறது.

தன் கணவனுக்கு குறை இருந்தாலும் அதனை தனக்கு தான் குறையுள்ளது போல பல மனைவிகள் வெளியே காட்டிக் கொள்வார்கள். ஏனெனில் குறையுள்ள ஆணின் ஆண்மை இங்கு சந்தேகத்திற்குள்ளாகிறது. பல நேரங்களில் கேலிப் பொருளாகவும் பேசப்படுகிறான்
(ரஜினி நடித்து அபத்தமாக எடுக்கப்பட்ட எஜமான் படம் போல). குழந்தை இல்லாமையுடன் ஒரு பெண்ணுக்கு அவன் கொடுக்ககூடிய சுகமும் இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மனரீதியாக இந்த பாதிப்புகளை ஆண் எதிர் கொள்ளும் பொழுது அவனால் இயல்பாக உடலுறவில் இயங்க முடியாமல் போகும் நிலையும் ஏற்பட்டு பல குடும்பங்களில் கணவன் மனைவி இடையே பிரச்சனை உண்டாகிறது.

ஆணா, பெண்ணோ யாருக்கு குறை இருந்தாலும் அதனை சரியாக புரிந்து கொண்டு பக்குவமாக அவர்களை கையாள தெரியும் அளவுக்கு வாழ்க்கை துணை அமைவது முக்கியமானது. வாழ்க்கை துணை இதனை சரியாகப் புரிந்து கொள்ளாத பட்சத்தில் குறையிருக்கும் ஆணா, பெண்ணோ பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். பல திருமணங்கள் முறிந்துப் போய் இருக்கின்றன.ஆணுக்கு உயிரணு எண்ணிக்கை குறைவாக இருத்தால், உயிரணு பூஜ்யமாக இருப்பது பெண்ணுக்கு கருக்குழாய் அடைப்பு, கரு முட்டை வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் இதற்கென சரியான சிகிச்சை முறைகளே இல்லை என்று சொல்லலாம். அலோபதியில் இந்தக் குறைகளுக்கு ஒரே தீர்வு டெஸ்ட் டியூப் பேபி மட்டும் தான். இதற்காகும் செலவுகளும் மிக அதிகம். இந்த மன உளைச்சலில் இருந்து விடுபட எவ்வளவு பணம் கொட்டவும் இவர்கள் தயாராகத் தான் இருக்கிறார்கள். நிலம், நகை, வீடு என அனைத்தையும் விற்று சிகிச்சைக்காக செலவிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்பல்லோ மருத்துவமனையில் 1.5 முதல் 2 லட்சம் வரை செலவாகிறது. வெற்றி வாய்ப்புகளும் குறைவு தான்.

இந்த நிலையில் தான் சித்த மருத்துவத்தை நிறைய தம்பதியினர் நாடுகிறார்கள். இப்பொழுது பல சித்த மருத்துவர்கள் மூலை முடுக்கெல்லாம் தோன்றியிருக்கிறார்கள். பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து கொண்டிருந்தவர்கள் இப்பொழுது தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் கொடுக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களில் பலர் முறையான சித்த மருத்துவர்களும் இல்லை. என் நெருங்கிய உறவினர் ஒருவர். D.Pharm முடித்து விட்டு ஒரு மருந்தகத்தை நடத்திக் கொண்டிருந்தார். எப்படி சித்த மருத்துவர் ஆனார் என்றே எனக்கு இன்னமும் புரியவில்லை (இந்தப் பதிவையெல்லாம் படிக்க மாட்டார் என்று நம்பிக்கையில் தான் எழுதுகிறேன்). RIMP என்ற சான்றிதழையும் வாங்கியுள்ளதாக கூறினார். அது என்ன சான்றிதழ் என்று எனக்கு தெரியவில்லை. தான் இன்னும் சில வருடங்களில் ஜமுனா போல பெயர் வாங்கி விடுவேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். இப்படியே சில வருடங்கள் கழிந்து விட்டது. இவருக்கும் சில பேஷண்ட்ஸ் இருக்கிறார்கள். இவர் மூலம் சிகிச்சை பெற்று குழந்தை பேறு உண்டானவர்களும் இருக்கிறார்கள். சிலர் பல மருத்துவர்களிடம் சென்று அங்கெல்லாம் பலனில்லாமல் என் உறவினரிடம் வந்து குழந்தை பேறு உண்டானதாகவும் கூறினார்கள். ஆனால் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களை விட சிகிச்சை பலனளிக்காதவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

எந்த மருத்துவரின் வெற்றியையும் அவர் எவ்வளவு குழந்தைகளை பெற வைத்துள்ளார் என்ற எண்ணிக்கையை விட எவ்வளவு சதவீதம் பேஷண்ட்ஸ் குழந்தை பெற்றுள்ளார்கள் என்பதைக் கொண்டே முடிவு செய்ய வேண்டும். அப்படி கணக்கிட்டால் 10% கூட இருக்காது என்றே நான் நினைக்கிறேன். இந்த வகையில் தான் பல மூலிகைக் குழந்தைகளை பெற வைத்துள்ளேன் என்ற டாக்டர் ஜமுனாவின் வாதத்தை நான் சந்தேகிக்கிறேன். அவர் மருத்துவமனை அமைந்திருக்கும் தாம்பரத்தில் நான் வசிப்பதாலும், அவரிடன் சிகிச்சை பெற்றிருக்கும் சிலரை நான் அறிந்திருக்கிறேன் என்ற வகையிலும் எனது சந்தேகம் வலுவானது என்று நான் நம்புகிறேன்.

ஆணின் விந்தணு எண்ணிக்கை ஏறி இறங்கும் தன்மை கொண்டது. ஒரே சீராக இருக்காது. சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றிருக்கும் குறையுள்ள ஆணின் விந்தணு ஒரு நார்மலான ஆணின் விந்தணு எண்ணிக்கையை அடையும் வாய்ப்பெல்லாம் கொஞ்சமும் கிடையாது. ஒரு நார்மல் ஆணுக்கு 25 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இவ்வளவு எண்ணிக்கையில் விந்தணு இருந்தால் தான் குழந்தை பிறக்க முடியும் என்ற வரையரையும் கிடையாது. விந்தணு குறைவதற்கு முக்கிய காரணமே இன்றைய வாழ்க்கை சூழல் தான். மிக அதிகமான Stress உள்ள வேலையில் இருப்பவர்களுக்கும், வெப்பமான சூழலில் வேலை பார்ப்பவர்களுக்கும் விந்தணு குறையும் வாய்ப்புகள் உண்டுநல்ல சூழல், ஆரோக்கியமான உணவு, பிரச்சனையில்லாத வாழ்க்கை, இதனைக் காட்டிலும் நமக்கு குழந்தை பிறந்து விடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பொழுது குறைவாக விந்தணு உள்ள ஆணுக்கும் குழந்தை பிறக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஏதோ ஒரு காரணத்தால் இந்த லக்கி பிரைஸ் சில நேரங்களில் சிலருக்கு அமைந்து விடுகிறது. After all பெண்ணின் கரு முட்டையுடன் இணைய மில்லியன் விந்தணுக்கள் தேவையில்லை. ஒரு விந்தணு தான் தேவை.

இப்பொழுது இருக்கும் பல டாக்டர்களின் சகிச்சை முறையை பார்க்கும் பொழுது எரிச்சலே ஏற்படும். சாதாரண டாக்டர்களை கூட இப்பொழுதெல்லாம் அப்பாயிண்மெண்ட் இல்லாமல் பார்க்க முடியாது. அவர்களுக்கு அவ்வளவு பேஷண்ட்ஸ் இருக்கிறார்களா என்றாலும் கிடையாது. அப்பாயிண்மெண்ட் போன்ற பந்தாக்கள் நிறைய உண்டு. அப்பொழுது தான் ஒரு பெரிய டாக்டர் என்ற எண்ணம் பேஷண்ட்சுக்கு ஏற்படும். சில டாக்டர்களுக்கு உண்மையிலேயே அப்பாயிண்மெண்ட் தேவைகள் இருக்கலாம். ஆனால் நிறையப் பேருக்கு அப்படி இல்லை என்றே நினைக்கிறேன்.

டாக்டர் ஜமுனாவை பார்க்க அப்பாயிண்மெண்ட் வேண்டுமென்றால் ஒரு மாதத்திற்கு முன்பாக விண்ணபித்து காத்திருக்க வேண்டும். முதலில் அவர் தரும் அப்பாயிண்மெண்டில் சிகிச்சைக்காகும் செலவையும், சிகிச்சை முறைகளையும் மட்டும் தான் கூறுவார். அதன் பிறகு அந்த சிகிச்சை முறையை பற்றியும், செலவாகும் பணம் பற்றியும் இரண்டு பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பி வைக்க வேண்டும் ( நிறைய பேஷண்ட்சை எழுத்தாளராக்கும் நல்ல முயற்சி). அதனை பரிசீலனை செய்து மற்றொரு அப்பாயிண்மெண்ட் தருவார். அப்பொழுது தான் சிகிச்சை தரப்படும். பிறகு மருந்து வாங்குவதற்கு தனி அப்பாயிண்மெண்ட் என்று பல அப்பாயிண்மெண்ட்கள்.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை பேறு இல்லாமல் இருந்தது. பல இடங்களில் வைத்தியம் பார்த்தார். ஒன்றும் பலனில்லை. கோயில் குளம் என அவர் சுற்றாத இடமில்லை. டாக்டர் ஜமுனாவிடமும் சகிச்சை பெற்றார். டாக்டர் ஜமுனாவின் சிகிச்சை முறையே கொஞ்சம் வித்தியாசமானது தான். முழு பத்தியச் சாப்பாடு தான். அதுவும் சட்டியில் செய்து தான் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்துவார். எவர்சில்வர் போன்ற பாத்திரங்களை எல்லாம் உபயோகப்படுத்தக் கூடாது. இக் கால வாழ்க்கை முறையில் இதனை பின்பற்றுவது மிகவும் கடினம். ஆனாலும் அதனை அப்படியே பின்பற்றினார். ஒரு வருட சிகிச்சைக்காகும் செலவு மட்டும் 1லட்சம் வரை இருக்கும். இரண்டு வருடங்கள் சிகிச்சை மேற்கொண்டார். அவர் இருப்பதோ நெய்வேலியில். சென்னைக்கும் நெய்வேலிக்கும் குழந்தை பேறுக்காக அலைந்தார். ஒரு பலனும் இல்லை. இது போல எனக்கு தெரிந்த சிலர் அலைந்த அலைச்சலை கண்கூடாக பார்த்திருக்கிறேன். வேதனையாக இருக்கும்.

இந்த சிகிச்சைகள் மூலம் சிலருக்கு குழந்தை பிறந்திருக்கலாம். பலருக்கு குழந்தை பிறப்பதில்லை. சிறிய வயதினருக்கும் இதே நிலை தான். சிலருக்கு பிறந்த குழந்தையைத் தான் தனது சாதனையாக பல மருத்துவர்கள் கூறிக்கொள்கின்றனர். அதற்கு அந்த மருத்துவமுறை தான் காரணமா என்பதே விவாதத்திற்குரியது.

ஆனந்தவிகடன் கட்டுரையில் வரும் மற்றொரு வாசகம்

//

மூலிகை மருத்துவம் மூலம் பிறக்கும் குழந்தைகள் அத்தனைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பெற்றோரை விட அதிகப்படி நிறம், துறுதுறுப்பு, சராசரியைவிட புத்திசாலித்தனம் ஆகியவை காணப்படுகின்றன

//

இன்று பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளின் பொதுவான குணம் நல்ல துறுதுறுப்பு, புத்திசாலித்தனம் போன்றவை தான். இதனை மூலிகைக் குழந்தைகளின் தனித்துவம் என்று ஆனந்தவிகடன் கூறுவது தான் ஆச்சரியம்.

எது எப்படியோ ஒரு சரியான சிகிச்சை முறை இல்லாத நிலையில் குழந்தை பேறுக்காக அலையும் பலர் தங்களின் சேமிப்புகளையும் இழந்து பல விதமான மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள் என்பதே உண்மை.
Cloning போன்ற அறிவியல் ரீதியான வளர்ச்சியிக்கிடையிலேயும் இன்றும் இயற்கையான பல விஷயங்களை மருத்துவத்தால் வெற்றிக் கொள்ள முடியவில்லை என்னும் பொழுது தங்களுக்கு குழந்தை வேண்டி கோயில், குளம் என்று மக்கள் சுற்றுவதிலும் ஆச்சரியம் இல்லை தான்.

(வலைப்பதிவு செய்யும் டாக்டர்கள், இது பற்றி அறிந்தவர்கள் இக் கட்டுரையில் தவறிருந்தால் சுட்டிக்காட்டலாம்)

Leia Mais…
Sunday, March 20, 2005

சபாஷ் கும்ளேகும்ளேவை ஒரு சுழற்பந்து வீச்சாளராகவே எவரும் ஒப்புக்கொள்வதில்லை. இந்தியாவின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் கும்ளே முக்கியமானவர் என்றாலும் அவர் எந்த வகைப் பந்து வீச்சாளர் என்பது குறித்து பல கேள்விகள். சில மாதங்களுக்கு முன்பு வரை அவர் இனி மேல் ரிடையராகி விடுவார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் தான் ஒரு சளைக்காத ஒரு போராளி என்று மறுபடியும் நிருபிக்கத் தொடங்கியுள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் கூட யோகானா, ஆசிம் கமால் ஜோடி 50 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்த பொழுது இந்த ஆட்டமும் டிராவில் முடியப் போகிறது என்றே நினைத்தேன். யோகானா எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் Front Foot ல் மிக எளிதாக சமாளித்துக் கொண்டிருந்தார். ஆனால் உணவு இடைவேளைக்கு முந்தைய சில ஒவர்களில் கும்ளே யோகானாவை ஆட்டம் காண வைத்தார். யோகானாவை Back Foot க்கு சென்று ஆடுமாறு பந்துகளை வீசினார். வேகமாக வீசப்பட்ட இந்தப் பந்தில் யோகானாவின் தடுப்பாட்டம் ஆட்டம் கண்டது. யோகானாவின் ஆட்டத்தில் இதற்கு பிறகு ஒரு தயக்கம் தெரிந்தது. அது போலவே தனது விக்கெட்டையும் பறி கொடுத்தார்.

ஒவ்வொரு விக்கெட்டையும் மிக அற்புதமாக திட்டமிட்டு எடுப்பதில் கும்ளே வல்லவர். மட்டையாளருக்கு அதிக ரன்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்தி, மட்டையாளர் மீது Pressure ஏற்படுத்தி அவரது விக்கெட்டை வீழ்த்துவதில் கும்ளே வல்லவர். ஆடுகளமும் அவருக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவர் ராஜ்யம் தான்.இது போலவே நேற்று அப்ரிடியின் அதிரடி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததிலும் கும்ளே ஜொலித்தார். அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் மிக அதிகமாக தெரிந்த வெற்றி இலக்கு குறுகிப் போனது போன்ற ஒரு தோற்றம். அப்ரிடி ஹர்பஷன் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார் பாருங்கள்.. கலக்கல். நல்ல அதிரடி தான். வேறு அணியிடம் இது போல அப்ரிடி ஆடினால் ரசிக்கலாம். நம்மிடம் ஆடினால் ? வயிற்றில் புளியைக் கரைத்தது.

இங்கு தான் கங்குலியின் கேப்டன்ஸி திறமை வெளிப்பட்டது. கும்ளேவை Around the wicket கொண்டு வந்தார். பந்து வீசும் ஆங்கிள் மாற்றப்பட்டது. அப்ரிடியை Sweep செய்ய வலை விரிக்கப்பட்டது. அந்த வலையை புரிந்து கொள்ளும் அளவுக்கு அப்ரிடிக்கு அனுபவம் இருக்கிறது என்று வர்ணனையாளர் ரமீஸ் ராஜா சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அதே ஓவரில் அப்ரிடி Sweep செய்ய கங்குலி கேட்ச் பிடிக்க, அற்புதமான விக்கெட் அது.

இது போன்றே இன்று காலை விழுந்த யுன்ஸ் கான் விக்கெட். பந்தை வலது புறமாக வீச அற்புதமான ஸ்டெம்பிங். இதுவும் திட்டமிட்டு வீழ்த்தப்பட்ட விக்கெட்.

அடுத்த போட்டியிலும் தன் சொந்த மண்ணில் கும்ளே கலக்குவார் என்று எதிர்பார்ப்போம். அவரது திறமை பற்றி இனி மேல் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

நல்ல டெஸ்ட் போட்டி. அற்புதமான வெற்றி

Leia Mais…
Friday, March 18, 2005

நரேந்திர மோடி : இந்தியாவிற்கு அவமானமா ?


நரேந்திர மோடிக்கு diplomatic விசா மறுக்கப்பட்டதும் tourist மற்றும் business விசா ரத்து செய்யப்பட்டதும் இந்தியாவிற்கே அவமானம் என்று பாரதீய ஜனதா கட்சி மற்றும் சங்பரிவார் அனுதாபிகள் கூறத் தொடங்கியுள்ளனர். இந்தியாவின் ஒரு மாநில முதலைமைச்சருக்கு மறுக்கப்பட்ட விசா இந்திய அரசியல்சாசனத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றும் குஜராத்தி மக்களின் கவுரவத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பு என்றும் மோடி கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் மைய அரசு தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

மோடியின் அமெரிக்க பயணம் அங்கிருக்கும் பல குஜராத்தி இந்துக்களால் அவரின் முஸ்லீம் குரோதத்திற்கு எடுக்கப்படும் பாராட்டு விழா. மோடி தொடர்ந்து தனது முஸ்லீம் விரோத நடவடிக்கையை தொடருவதற்கான ஆதரவு விழாவே தவிர ஒரு மாநில முதல்வரின் அரசு சார்ந்த பயணம் அல்ல. அங்குள்ள குஜராத்தி மக்களிடம் முதலீடு குறித்து பேச இருக்கிறார் என்ற வாதமும் கண்துடைப்பு தான்.அமெரிக்காவில் இருக்கும் பல குஜராத்திகள் மோடியை குஜராத்தி மற்றும் இந்துக்களின் பாதுகாவலராகவே கருதுகின்றனர். இங்கிருக்கும் சங்பரிவார் அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருக்கும் குஜராத்திகள் மூலமாக அதிகளவில் பணம் கிடைக்கிறது. அமெரிக்கா, UK போன்ற நாடுகளில் உள்ள சங்பரிவார் அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத், HSS போன்ற பினாமி இயக்கங்கள் மூலமாக திரட்டப்படும் பணம் குஜராத் உட்பட நாட்டின் பல இடங்களில் இருக்கும் இந்து அமைப்புகளின் வெறியாட்டத்திற்கு உதவி புரிவதாகவே இருக்கிறது.

அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தில் சங்பரிவார் அமைப்புகள் தங்களை கலாச்சார இயக்கமாக, NGO'க்காளாக பதிவு செய்துள்ளன. இந்த அமைப்புகள் மூலமாக பணம் திரட்டப்படுகிறது. இது குஜராத் கலவரத்திற்கு பின்பு பலரால் கவனிக்கப்பட்டது. அதன் எதிரொலியாகத் தான் இப்பொழுது நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

தன் நாட்டிற்கு யார் வர வேண்டும் என்று முடிவு செய்ய அமெரிக்காவிற்கு முழு உரிமை உண்டு. அவ்வாறு நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்டதிலும் சரியான காரணங்கள் இருக்கிறது.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பொழுது அரசு இயந்திரங்களைக் கொண்டே முஸ்லீம் மக்களுக்கு எதிராக மத உணர்வையும் கலவரத்தையும் ஏற்படுத்தி முதல் அவமானத்தைக் கொடுத்த மோடி தற்பொழுது அந்த செயலால் மற்றொரு புது அவமானத்தை தேடிக் கொடுத்துள்ளார்.

மோடி இந்தியாவின் ஒரு மாநில முதலைமைச்சர் என்ற வகையில் இது இந்தியாவின் கவுரவத்திற்கு ஏற்பட்ட அவமானம் தான் என்றாலும் இது மோடி இந்தியாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்த அவமானம். இதற்கு மோடி தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருக்கும் ஒரே காரணத்திற்காகவே இது நாட்டிற்கு அவமானமாக தெரிந்தாலும், நரேந்திர மோடியே நம் நாட்டின் அவமானச் சின்னம் தான்.

இந்த விசா மறுப்பால் புதிய அவமானம் நமக்கு வந்து சேர்ந்து விடாது.

Leia Mais…
Thursday, March 17, 2005

காண்டலீசா ரைஸின் இந்தியப் பயணம்

அமெரிக்கா மறுபடியும் தன் பெரியண்ணன் வேலையை துவங்கியிருக்கிறது. இந்தியாவிற்கு வந்திருந்த காண்டலீசா ரைஸ் இந்தியா- பாக்கிஸ்தான் - ஈரான் இடையிலேயான 1700 மைல் கேஸ் பைப்லைன் திட்டத்தை கைவிடுமாறு இந்திய தலைவர்களிடம் வற்புறுத்தியுள்ளார்.ஈராக்கையடுத்து வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளை தன் Rouge states பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளதால் இந்தியா ஈரான் இடையேயான வர்த்தக உறவை அமெரிக்கா விரும்பவில்லை. இது நம் நாட்டின் வெளியுறவு சுதந்திரத்திலும் வர்த்தக சுதந்திரத்திலும் அமெரிக்கா மூக்கை நுழைக்கும் செயல்வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்திற்கும், தன்னுடைய சந்தையை தற்பொழுது வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்திருக்கும் பாக்கிஸ்தானுக்கும் இந்த கேஸ் பைப்லைன் முக்கியமானது. சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த திட்டம் மூலமாக பெருகிவரும் இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த திட்டம் சமீபத்தில் இந்தியா - பாக்கிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்படத் தொடங்கியப் பிறகு தான் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டம் பற்றி தன் கவலையை தெரிவிக்கும் அமெரிக்கா அதற்கு மாற்றாக அமெரிக்கா மூலமாக சில திட்டங்களை பரிசீலிக்கலாம் என்று கூறுவதும் ஏற்புடையதாக இல்லை. அமெரிக்காவே பிற நாடுகளிடம் இருந்து தன் தேவைகளை இறக்குமதி செய்யும் பொழுது இந்தியாவிற்கு எப்படி உதவ முடியும் ? ஈரான் Natural Gas உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தில் இருப்பததல் அந் நாடே நமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆனால் ஈரான், இந்தியா, பாக்கிஸ்தான் கூட்டாக மேற்கொள்ளும் இந்த திட்டம் எதிர்காலத்தில் ஈரானுக்கு இந்த பிராந்தியத்தில் முக்கியத்துவத்தைக் கொடுக்கும் என்று அமெரிக்கா நினைக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த பைப்லைன் திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் பிற தெற்காசிய நாடுகளுக்கும், சீனா போன்ற நாடுகளுக்கு விரிவடையும் வாய்ப்புகளும் இருக்கிறது. இது ஈரானுக்கு நிரந்தர முக்கியத்துவம் ஏற்படும் வாய்ப்பாக அமைந்து விடும்.

இது தவிர பாக்கிஸ்தான் வழியாக இந்த பைப்லைன் வருவதால் சுமார் 600 மில்லியன் டாலர்களை இந்தியா பாக்கிஸ்தானுக்கு செலுத்த வேண்டும். இந்த பைப்லைனை பாதுகாக்கும் பொறுப்பும் பாக்கிஸ்தானுக்கு உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவு மேம்படும். பதற்றம் குறையும். நல்லுறவு ஏற்படும் ஒரு வழியாகவும் இந்த திட்டம் கருதப்பட்டது. இப்பொழுது அமெரிக்கா இந்த திட்டத்தை எதிர்ப்பதால் இது குறித்து ஒரு நிலையற்ற தன்மை எழுந்துள்ளது. இந்த திட்டம் குறித்து இந்தியா உறுதியாக இருந்தாலும் பாக்கிஸ்தான் நிலை மாறக் கூடும். பாக்கிஸ்தானிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை கொண்டு இந்த திட்டத்தை அமெரிக்காவால் தடுத்து நிறுத்த முடியும்.அதைத் தான் அமெரிக்கா செய்யப் போகிறது.

தனக்கு பிடித்தாவாறே அனைத்து நாடுகளும் நடக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் மனோபாவம் மாற வேண்டுமானால் அதற்கு மாற்றாக ஒரு பிராந்தியக் கூட்டமைப்பு தேவைப்படுகிறது. தற்பொழுது வேகமாக வளர்ந்து வரும் இந்தியா மற்றும் சீனா இடையே இது போன்ற ஒரு பிராந்தியக் கூட்டமைப்பு அமைவது சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் தவிர இராணுவம், தொழில்நுட்பம், அறிவியல் போன்ற துறைகளிலும் அமெரிக்காவுக்கு சமமாக இந்த பிராந்தியக் கூட்டமைப்பு அமையும். ஆனால் இது வெறும் கனவாக மட்டுமே இருக்கக் கூடும். இந்தியா ஆசியாவில் ஒரு சக்தியாக உருவாகுவதையே சீனா விரும்பவில்லை.இந் நிலையில் தான் கடந்த ஆண்டு வாஜ்பாய் வெளியிட்ட கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. தெற்காசிய நாடுகளான சார்க் நாடுகள் ஒரு பிராந்தியக் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். யூரோ போலவே தனி நாணயம், பொருளாதார கூட்டமைப்பு போன்ற அமைப்பை சார்க் பிராந்தியத்தில் ஏற்படுத்தும் பொழுது இங்கு பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன் நாடுகளிடையே நல்லுறவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இந்தக் கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு மாற்றாகவோ, சீனா-இந்தியா கூட்டமைப்பு போலவோ இருக்காது என்றாலும் இந்த பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவக் கூடியது. தற்பொழுது அமெரிக்கா போட நினைக்கும் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.

இந்த நூற்றாண்டு ஆசிய நாடுகளின் பொருளாதார எழுச்சி நூற்றாண்டாக மாறும் என்ற கருத்து முன்வைக்கப்படும் பொழுது, அமெரிக்கா போன்ற ஒரு வலுவான மாற்று பிராந்தியக் கூட்டமைப்பு ஆசியாவில் அமைவதும் முக்கியத்துவம் பெறுகிறது.

Leia Mais…