வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Sunday, June 24, 2007

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி



அப்துல் கலாமின் குடியரசுத்தலைவர் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. பதவியேற்ற பொழுது இந்திய மக்களின் ஒட்டுமொத்த அபிமானம் பெற்ற "குடியரசு தலைவராக" (People's President) ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டவர், இன்று அவருடைய பிம்பத்திற்கு ஏற்பட்ட சிறிய சறுக்கலுடன் அவரது பதவிக்காலம் முடியப் போகிறது. நான் அதனை அவரது சறுக்கலாக பார்க்கவில்லை. ஏனெனில் அவரைச் சுற்றி எழுப்பப்பட்ட பிம்பமே போலியாது. அப்துல் கலாம் என்ற தனி மனிதனுக்கு பதவி மேல் ஆசைப்படுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது. மற்றொரு முறை குடியரசுத்தலைவராக முடிந்தால் அவரே தொடர்வதும் நல்லது தான். அலங்காரப்பதவியில் யார் இருந்தால் தான் என்ன ?

நகர்ப்புற, "ஏட்டுப்படிப்பு" படித்த நடுத்தர வர்க்க மக்களின் அபிமானமத்தை பெற்றவர்களை 100 கோடி இந்திய மக்களும் ஆதரிப்பதான ஒரு பிம்பத்தை தொடர்ந்து எழுப்பும் இந்திய வெகுஜன ஊடகங்களின் மற்றொரு "தந்திரம்" தான் அப்துல் கலாமைச் சார்ந்து எழுப்பபட்ட பிம்பமும். ஊடகங்களால் எழுப்பபட்டிருந்த அப்துல் கலாமின் பிம்பம் பதவிக்கு ஆசைப்படாதவர் என்பதாகும். கலாம் தன்னை ஒரு சாமானிய மனிதராக குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்கும் ஆசையை வெளிப்படுத்திய பொழுது அவரை ஒட்டி எழுப்பியிருந்த பிம்பமும் தகர்ந்து போய் விட்டதாக அதே ஊடகங்கள் மறுபடியும் புலம்பிக்கொண்டிருக்கின்றன.

அப்துல் கலாம் என்ற தனி மனிதன் மீது எனக்கு அபிமானம் உண்டு. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய தனிப்பட்ட முயற்சியால் உயர்ந்து "தன்னுடைய துறையில்" பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர் என்ற வகையில் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்தியாவில் அரசுப் பதவிகளை பெறுவதில் இருக்கும் அரசியல் மற்றும் பிற பேதங்களை கவனிக்கும் பொழுது அப்துல் கலாம் என்னும் சாமானியர் அனைவரையும் கவர்வதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அது மட்டுமே அவருக்கு குடியரசுத்தலைவர் என்ற பதவியை பெற்று கொடுத்து விடவில்லை.

சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா தன்னுடைய Hegemonyஐ பல விடயங்களில் தொடர்ந்து வெளிப்படுத்த முனைந்து வருகிறது. இராணுவ ரீதியிலான இந்த முன்னெடுப்பினை செய்வதன் மூலமாக "இந்தியாவை பலம் மிகுந்த ஒரு இராணுவ வல்லரசாக மாற்ற வேண்டும்" என்பதே "ஏழ்மை அதிகமான நாட்டிலும்" இந்திய அரசியல்வாதிகள் சுதந்திரம் அடைந்ததில் இருந்து முன்னெடுத்த முக்கியமான செயல்திட்டம். இந்தியாவை ஒரு இராணுவ சக்தியாக மாற்றுவதன் மூலம் ஒரு போலியான தேசியவாதத்தை இந்திய மக்களிடம் ஊட்டவதும், இந்தியா பலம் வாய்ந்த ஒரு நாடு என்பதாக தன் மக்களிடமும் பிற நாடுகளிடமும் வெளிப்படுத்துவதும் இந்த செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் "இந்தியனாக நீ பெருமை கொள்ள வேண்டும்" என்று கூறுவதும், இந்திய துணைக்கண்டத்தின் பல் வேறு தேசிய இனங்களின் தனித்தன்மையை "இந்தியன்" என்ற தட்டையான ஒரு வடிவத்தில் அடக்க முனைவதும் இந்திய தேசியவாதிகளின் தந்திரம்.

இந்திய தேசியவாதிகளின் இந்த நோக்கத்தை ஓரளவிற்கு பூர்த்தி செய்த "விஞ்ஞான" குழுவின் தலைவர் தான் அப்துல் கலாம். அப்துல் கலாம் இந்தியாவின் வலதுசாரி இந்துத்துவவாதிகளின் முக்கிய கனவான ஏவுகணைகளை உருவாக்கிய விஞ்ஞான் குழுவின் தலைவர். இந்தியா போக்ரான் அணு ஆயுத சோதனையை நடத்திய பொழுது பாதுகாப்பு ஆலோசகராக அதனை முன்னின்று நடத்தியவர்.

வலதுசாரி இந்துத்துவவாதிகளின் கனவை மெய்ப்பித்த "முஸ்லிம்". அதுவும் எப்படிப்பட்ட முஸ்லீம் - ராமபிரானின் பக்தர். அதை அவரே வெளிப்படுத்திக் கொண்டார். ஆனாலும் இரண்டு வேளை தொழுபவர். காலை எழுந்தவுடன் அவர் படிப்பது "பகவத் கீதை". ஆனாலும் குரான் படித்து தொழுகை செய்யும் முஸ்லீம். இந்துத்துவவாதிகள் ஒரு "இந்திய முஸ்லீம்" இப்படித் தான் இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்ட நினைத்ததை விட அப்துல் கலாமிடம் அளவுக்கு அதிகமாகவே இந்துத்துவவாத தன்மைகள் காணப்பட்டன.

இந்திய முஸ்லீம்கள் இப்படியாக இருந்தால் தான் அவர்களை வலதுசாரி இந்துத்துவவாதிகள் "இந்தியர்களாக" ஒப்புக்கொள்வார்கள். கலாம் அவ்வாறு இருந்ததால் தான் அவர் "200% இந்தியராக" ஒப்புக்கொள்ளப்பட்டார். இந்திய முஸ்லீம்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறவே 2002ல் அவரை ஆதரித்த ஆர். எஸ்.எஸ், இன்றைக்கும் அவரை ஆதரிக்கிறது.

(ஒரு பத்திரிக்கையாளர் - பெயர் நினைவில்லை, ஒரு முறை கலாம் 200% இந்தியர் என்பது குறித்து கூறும் பொழுது - ஆர். எஸ்.எஸ் பாணியில் ஹிந்துக்கள் என்றால் 100% இந்தியராக இருந்தால் போதுமானது. முஸ்லீம்கள் என்றால் 200% இந்தியராக இருந்தால் தான் ஒப்புக்கொள்வார்கள் என்றார்)

அப்துல் கலாம் பல வகையில் சாமானிய இந்தியர்களை பிரதிபலித்து இருந்தார். ஒரு சாமானியக் குடும்பத்தில் இருந்து உயர்ந்த பதவியை எட்டியது அவர் மீது ஒரு அபிமானத்தை இந்திய நடுத்தர வர்க்க மக்களிடம் ஏற்படுத்தி இருந்தது. அப்துல் கலாம் "அபரிதமான தேசபக்தி மிக்க இந்தியர்" என்பதாக ஊடகங்கள் அவரை சத்தரித்தன. அப்துல் கலாம் தன்னுடைய தேசபக்தியை அப்படி எந்த விதத்தில் வெளிப்படுத்தி இருந்தார் என்பது எனக்கு புரிந்ததேயில்லை. இந்தியாவிற்கான அணு ஆயுதங்களை தயாரிக்கும் குழுவின் தலைவர் (Project leader) , அவ்வப்பொழுது இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற "எனது கனவு" என புத்தகங்களிலும், பேட்டிகளிலும் முழங்கியது தவிர அவர் தன்னை குறித்து இந்துத்துவவாதிகளைச் சார்ந்து வெளிப்படுத்தி இருந்த பிம்பமே அவரை தேசபக்தி மிக்க இந்தியராக ஊடகங்கள் சித்தரிப்பதற்கு காரணமாக இருந்தன.

அப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். முஸ்லீம்கள் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என உதாரணம் காட்ட எப்படி அப்துல் கலாம் உதவினாரோ, அது போல நடுத்தரவர்க்க இந்தியர்களிடம் இவரை ஒரு முன்மாதிரியாக காட்டவும் உதவினார். அவரிடம் அதற்கான சில தன்மைகள் இருந்தன. ஆனாலும் அவரின் இராணுவ பலம் சார்ந்த தேசியவாதமே அப்துல் கலாமை பிரபலப்படுத்த இந்துவவாதிகள் துணிந்தமைக்கு முக்கிய காரணம்.

அப்துல் கலாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகவே பெரும்பான்மை இந்திய மக்கள் கருதினர். தேசியவாதிகளை தீவிரமாக எதிர்க்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கூட அப்துல் கலாம் குறித்து வாய்மூடி மொளனமாகவே இருந்தனர். காரணம் அப்துல் கலாம் குறித்து எழுப்பப்பட்டிருந்த அளவுகடந்த பிம்பம். அதனால் தான் அவர் பதவியேற்ற சமயத்தில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் இருக்கும் குழந்தைகளை அவர் பதவியேற்பு விழாவிற்கு அழைத்து செல்வதாக அறிவித்த "சம்பிரதாய விளம்பர நடவடிக்கையும்" விமர்சிக்கப்படாமலேயே ஒதுக்கப்பட்டது. அப்துல் கலாம் குழந்தைகள் மீது அபிமானம் கொண்டவராக ஊடகங்கள் சித்தரித்தன. எப்படிப்பட்ட குழந்தைகள் அவர்கள் ? அவர் பல இடங்களில் உரையாடிய குழந்தைகள் எப்படிபட்டவர்கள் ? நகர்ப்புற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள். அவர்களிடம் கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் உரையாற்றுவார். ஊடகங்கள் குழந்தைகள் மீது அப்துல் கலாமுக்கு இருக்கும் அபிமானத்தை பட்டியலிடும்.

ஆனால் கிரமப்புற பள்ளிக்கு கூட செல்ல முடியாத ஏழை குழந்தைகள் பற்றி யாருக்கும் கவலையில்லை. தினந்தோறும் கிராமப்புறங்களில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அடுத்த வேளை சோறுக்காக பீடி சுற்றும் குழந்தைகளும், பட்டாசு தொழிற்சாலையில் தங்கள் மழலைப் பருவத்தை தொலைக்கும் குழந்தைகள் குறித்தும் யாருக்கும் கவலையில்லை. அடுத்த வேளை நல்ல சோற்றுக்கு கனவு காணுவதை தவிர இந்தக் குழந்தைகளுக்கு் கனவுகள் என எதுவும் இல்லை.

அந்த மழலைகள் படிக்க வேண்டிய ஆரம்ப பள்ளிப்படிப்புக்கு அரசு ஒதுக்க வேண்டிய பணம் - இந்தியாவின் போலியான இராணுவ வல்லரசு கனவுக்காக கொட்டப்படுவதை பற்றியும் யாருக்கும் அக்கறையில்லை. உலகில் தன்னுடைய இராணுவத்திற்காக அதிகமாக செலவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல குழந்தைகளின் ஆரம்ப பள்ளிப்படிப்பு கனவுக்கு தேவைப்பட்ட அந்த பணத்தை கொண்டு கட்டியெழுப்பப்ட்ட அந்த இராணுவ வல்லரசு கனவை அப்துல் கலாம் நினைவாக்கியதாகத் தான் அவரை தேசியவாதிகள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷோபா சக்தி "தேசிய உணர்ச்சியை விட வயிறு வலிமையானது" என கூறியிருப்பார். நானும் அதைத்தான் கூற நினைக்கிறேன். இந் நாட்டில் பல ஆயிரம் குழந்தைகளுக்கு அடிப்படைக்கல்வி இல்லாத சூழலில், அந்த அடிப்படைக்கல்விக்கு செலவிடப்பட வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் "இந்தியாவின் இராணுவ வலிமையை" நிலைநிறுத்த செலவிடப்படுகிறது. இந்தியாவில் ஆரம்பக்கல்விக்கு செலவிடப்படும் தொகையை இராணுவத்திற்கு செலவிடப்படும் தொகையுடன் கணக்கிட்டால் நான் கூற வருவது புரியும்.

அவ்வாறு பல ஆயிரம் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தங்களின் வாழ்கை தேவைக்காக மழலைப் பருவத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் சூழலில் பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுடன் பேசுவதும், கனவுகளை வளர்க்கச் சொல்வதும் வெறும் அடையாளப்பூர்வமான சம்பிரதாயமாகவே இருக்க முடியும்.

****

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, ஆனால் பெரும்பான்மை தேசியவாதிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் சிலருக்கு பவிகளை அள்ளித்தருவது எல்லா காலங்களிலும், நாடுகளிலும் நிகழ்ந்தே வருகிறது.

இந்தியாவில் சீக்கியர்கள் பிரிவினைவாதம் கோரிய பொழுது குடியரசுத்தலைவராக்கப்பட்டவர் சீக்கிய இனத்தைச் சேர்ந்த கியானி ஜெயில்சிங் (கியானி ஜெயில்சிங் ராஜ்வ் காந்திக்கு எதிராக மாறியது தனிக்கதை. இந்திய வரலாற்றில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கு மிககடுமையான பனிப்போர் இருந்த சூழ்நிலை இந்தக் காலகட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது)

இலங்கையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் கதிர்காமருக்கு இலங்கையின் பிரதமர் பதவியை கொடுக்குமாறு சிங்கள தேசியவாதிகளான ஜேவிபியினர் கூறியதையும் இவ்வாறே பார்க்க முடிகிறது.

****

ஒரு தமிழரான அப்துல் கலாமிற்கு குடியரசுத்தலைவர் பதவி கிடைக்காமல் திமுக சதி செய்வதாக ஜெயலலிதா மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் கூறினார்களாம். இவர்கள் எல்லாம் "இந்தியர்கள்" தானே ? இப்பொழுது என்ன தமிழன் மீது திடீர் பாசம் :)

****
தொடர்புடைய கட்டுரை : அப்துல் கலாம் : கே.ஆர்.நாராயணன் - யார் சிறந்த குடியரசுத் தலைவர் ?


Leia Mais…