வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Tuesday, August 19, 2008

வெகுஜன செய்தி திரிப்பு

வெகுஜன ஊடகங்களில் செய்திகள் எப்படி வெளியாகிறோ அதையொட்டி தான் வெகுஜன மக்கள் தங்கள் கருத்துக்களை வளர்த்துக் கொள்ள முடியும். செய்திகள் தணிக்கை செய்யப்படும் பொழுது வெகுஜன மக்களுக்கு அந்தச் செய்திகளைச் சார்ந்த பல கோணங்கள் மறுக்கப்படுகின்றன.

ஜனநாயகத்தில் பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிடும் பொழுது அந்தச் செய்திகளை அப்படியே வெளியிட வேண்டும் என்பது பத்திரிக்கை மரபு. பத்திரிக்கைகள் தங்களின் கருத்துக்களை தலையங்கத்திலோ, கருத்து பத்தியிலோ வெளியிடுவது தான் ஒரு நல்ல மரபாக கருதப்படுகிறது.

இந்திய வெகுஜன ஊடகங்கள் இதனை பல்வேறு விடயங்களில் சரியாக கடைபிடிக்கின்றன. உதாரணமாக, உள்நாட்டு பிரச்சனைகள், அரசியல் கட்சிகளின் கோஷ்டி சண்டைகள் போன்றவற்றில் நடுநிலை பத்திரிக்கைகள் என சொல்லப்படும் பத்திரிக்கைகள் செய்திகளை பெரும்பாலும் தணிக்கை செய்வதில்லை.

ஆனால் தேசியம் போன்ற தங்களின் தேவைக்கு உட்பட்ட சித்தாந்தங்களில் அந்த தணிக்கைகளை தொடர்ந்து செய்து வருகின்றன.

நான் அதிகமாக நீட்டி முழங்க விரும்பவில்லை. விஷயத்திற்கு வருகிறேன்.

இன்று ஹிந்து நாளிதழில் காஷ்மீர் குறித்த ஒரு செய்தியை வாசித்தேன். அதே செய்தியினை Associated press தளத்திலும் வாசித்தேன்.

செய்தியின் சாராம்சம் இது தான்

இந்தியாவின் ஆளுமையில் இருந்து காஷ்மீருக்கு விடுதலை கோரி ஆயிரக்கணக்கான காஷ்மீர் முஸ்லீம்கள் இன்று ஸ்ரீநகரில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு கூடினர். ஜநாவின் தலையீட்டினை கோரினர்.

இந்த செய்தி Associated pressல் இவ்வாறு வெளியாகிறது

Tens of thousands of Muslims waving green and black protest flags marched through Indian Kashmir's main city on Monday and gathered in front of U.N. offices demanding freedom from India and intervention by the world body.

ஹிந்துவிலே செய்தி எவ்வாறு வெளியாகிறது என பாருங்கள்

Tens of thousands of people from across the Kashmir valley arrived here on Monday to take part in the march organised by the Hurriyat-sponsored Coordination Committee to submit a memorandum to the United Nations office here, seeking its intervention in the resolution of the Kashmir issue.

The processionists, bands tied to their heads and holding black and green flags, asserted that they would not compromise on the basic demand for resolution of the Kashmir issue.


ஹிந்து இந்தச் செய்தியை வெறும் “resolution of the Kashmir issue” என்று மட்டுமே வெளியிடுகிறது.

ஹிந்து செய்திகளில் விடுதலையை குறிக்கும் வார்த்தைகளான Freedom, Independence போன்றவை எங்காவது தென்படுகிறதா என பார்த்தேன். கிடைக்கவேயில்லை. ஆனால் ஆர்ப்பாட்ட படங்கள் “FREEDOM" என்று கூறும் படங்களை தாங்கியே பல தளங்களில் வெளியாகி உள்ளது

ஹிந்துவின் செய்தியில் சுயநிர்ணயம் - self-determination என்ற வார்த்தை மட்டும் இறுதி வரியில் உள்ளது.

self-determination என்பது மேல்பூச்சான வார்த்தையாகவே நான் நினைக்கிறேன்.

Freedom, Independence என்பது காஷ்மீர் மக்களின் போராட்டத்தை குறிக்கும் தெளிவான வார்த்தை. அதனை ஏன் ஹிந்து பயன்படுத்தவில்லை என்பதை படிப்பவர்களின் கணிப்பிற்கே விட்டு விடுகிறேன்

Leia Mais…
Sunday, August 17, 2008

ஈழப் போராட்டம், இந்திய பூச்சாண்டிகள், விகடனின் Half-truth சர்வே...

விடுதலைப் புலிகள் மற்றும் ஈழப் போராட்டம் குறித்த சமீபத்தைய விகடனின் கருத்து கணிப்பு பல காலங்களாக தமிழகத்தில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருந்த போலியான கருத்தாக்கத்தை தகர்த்து உள்ளது. ராஜீவ் படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்று இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து கூறி வந்ததை இந்த கருத்து கணிப்பு தகர்த்து இருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கான தமிழ்நாட்டின் ஆதரவு குறித்து பல கட்டுரைகளில் எழுதி, அந்த விவாதங்கள் ராஜீவ் படுகொலை என்ற வட்டத்திற்கே வந்து விடுவதில் ஏற்பட்ட சோர்வு காரணமாக, விகடன் கருத்து கணிப்பு குறித்து உடனே எழுத வில்லை. அதனால் தாமதமாக இந்தப் பதிவு வெளியாகிறது.

இன்றைக்கு தமிழ் ஈழத்தை எதிர்க்கும் பலர், 1991க்கு முன்பும் தமிழ் ஈழத்தை எதிர்த்தே வந்திருக்கின்றனர். அவர்களுக்கு அன்றைக்கு கிடைத்த காரணம் தமிழ் ஈழம் அமைந்தால் தனித்தமிழ்நாடு அமைந்து விடும் என்பது தான். ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தனித்தமிழ்நாடு என்ற பூச்சாண்டிக் கதையை ராஜீவ் படுகொலை கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அடிப்படையான தேவை ஒன்று தான் - தமிழ் ஈழம் எக்காரணம் கொண்டும் அமைந்து விடக்கூடாது.

1991க்கு பிறகு விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தமிழ் ஈழம் குறித்து எதுவுமே தெரியாது, பிராபகரன் தவிர தமிழ்ச்செல்வன் யார் என்று கூட தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பன போன்ற பல்வேறு கதைகளை ஊடகங்கள் தொடர்ந்து பரப்பி வந்தன. இந்தக் கதைகள் பொய்க் கதைகள் என நமக்கு தெரிந்தாலும் அதனை நம்மால் வலுவாக மறுக்க முடியவில்லை. ஏனெனில் அதனைச் சார்ந்த கருத்து கணிப்பு எதுவும் எடுக்கும் தைரியம் தமிழகத்தில் இருந்த எந்த பத்திரிக்கைக்கும் இருந்ததில்லை. அப்படியே வேறு ஏதேனும் பத்திரிக்கைகள் செய்திருந்தாலும், அந்த பத்திரிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்திருக்கும்.

உதாரணத்திற்கு நக்கீரன் இப்படி ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் ? அந்தக் கருத்துக்கணிப்பின் நம்பகத்தன்மை, அந்த இதழின் நம்பகத்தன்மை, அந்த பத்திரிக்கை ஆசிரியரின் நம்பகத்தன்மை, புலிகளுக்கும் - நக்கீரனுக்கும் இருக்கும் தொடர்புகள் போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பபட்டிருக்கும்.

ஆனால் 80 ஆண்டு கால ”பாரம்பரியம்” மிக்க விகடன் இதழ் சொல்லும் பொழுது அந்த கருத்துக்கணிப்பிற்கு இருக்கும் நம்பகத்தன்மையே தனி தான். அதனை இன்றைக்கு கண் கூடாக காண முடிகிறது. விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் வாய்மூடி அமைதியாக இருக்கிறார்கள். விகடனா இப்படி ஒரு சர்வே எடுத்திருக்கிறது என்ற ஆச்சரியம். அவர்களாலேயே இதனை நம்ப முடியவில்லை. வேறு ஏதேனும் பத்திரிக்கைகள் இந்த கருத்துகணிப்பை எடுத்திருந்தால் நொடிப்பொழுதில் அதன் தேசபக்தியை கேள்வி கேட்டு கருத்துகணிப்பின் நம்பகத்தன்மையை தகர்த்து இருக்க முடியும். ஆனால் விகடன் ஆயிற்றே ? 80 ஆண்டு கால ”பாரம்பரியம்” மிக்க தங்களுக்கு நெருக்கமான விகடனை என்ன செய்ய முடியும் ? வாய்மூடி மொளனமாக மட்டுமே இருக்க முடியும். அதைத் தான் தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி படுகொலை என்ற ஒன்றினை மையப்படுத்தி தமிழகத்தில் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என கூறி வந்த பத்திரிக்கையாள பூச்சாண்டிகளான என்.ராம், மாலன், வாஸந்தி, சோ போன்றோரும், முன்னாள உளவாளிகளான பி.ராமனும், ஹரிஹரனும் வாயடைத்து போய் கள்ள மொளனம் சாதிக்கிறார்கள். அவர்களை வாய் மூட செய்த ஒரு காரணத்திற்காவது நான் விகடனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தொடர்ந்து பல காலமாக தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு தளம் உள்ளது என கூறிவந்த என்னைப் போன்ற பல ஈழ ஆதரவாளர்களின் நிலைப்பாட்டினை இந்த கருத்துகணிப்பு உறுதி செய்கிறது.

அரசியல்வாதிகளின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் Vikatan survey vindicated our stand.

******

விகடனின் இந்த கருத்து கணிப்பு வரவேற்கபட வேண்டிய ஒன்று தான். என்றாலும் விகடனின் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.

ஈழப் பிரச்சனையை பொறுத்த வரை இந்திய ஊடகங்கள் எப்பொழுதுமே இந்தப் பிரச்சனையை இந்தியாவின் பார்வையில் இருந்து தான் அணுகியிருக்கின்றன. தமிழர்களின் பார்வையில் இருந்து இந்தப் பிரச்சனையை எந்த ஊடகங்களும் பார்த்ததில்லை. தங்களின் தனிப்பட்ட கருத்தினையே தமிழக மக்கள் மீது திணித்து இருக்கின்றன. செய்திகள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. விகடனின் கருத்து கணிப்பும் அதைத் தான் இங்கு செய்கிறது.

இந்தியாவின் பார்வையில் ராஜீவ் காந்தியின் படுகொலை குற்றம் என்றால் ஈழத் தமிழர்களின் பார்வையில் இந்திய இராணுவம் ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுத்த மிக மோசமான படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ராஜீவ் காந்தியின் படுகொலையை விட மோசமான குற்றங்கள். இந்திய இராணுவம் தமிழர்களை கொன்றதால் தான் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் இந்திய இராணுவம் சென்னை திரும்பி வந்த பொழுது, அந்த வரவேற்பை புறக்கணித்தார். என் இனத்தை கொன்று விட்டு வரும் ஒரு இராணுவத்தை தன்னால் வரவேற்க முடியாது என கலைஞர் கூறினார்.

இந்திய இராணுவம் செய்த பல மோசமான அத்துமீறல்களில் வல்வெட்டிதுறை படுகொலை மிக முக்கியமான ஒன்று. அது குறித்த மிக விரிவான செய்தி ஒன்றினை அப்பொழுது இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டு இருந்தது. வல்வெட்டி துறையில் தமிழர்களை வரிசையாக நிற்க வைத்து இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது. ஜாலியன் வாலாபாக், My Lai போன்ற படுகொலை சம்பவங்களை விட மோசமான படுகொலை வல்வெட்டி துறை படுகொலை. இதனை செய்த குற்றவாளிகள் இந்திய இராணுவத்தினர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.
http://www.tamilnation.org/indictment/Massacre_at_Valvetti_-_Indian_Express.pdf

இந்தியாவின் பாரளுமன்றத்தில் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான ஜார்ஜ் பிரணாண்டஸ் பின்வருமாறு கூறுகிறார்.

"When in early August, 1987, I had said that Mr. Rajiv Gandhi's military adventure in Sri Lanka would be India's Viet Nam, I had not anticipated that India's Viet Nam would also have its own My Lai. Of course, I was aware and I had also said repeatedly that soldiers everywhere alike, their training and the rigours of their life, not to speak of the brutalisation caused by war, making them behave in the most inhuman ways when under pressure.

That is why when in the early days of India's military action in Sri Lanka, stories of rape and senseless killings by Indian soldiers came to be contradicted by the India government publicists I joined issue with everyone who came to accept that our soldiers were cast in the mould of boy scouts who went around the fighting fields of Sri Lanka looking out for opportunities to do their day's good deeds, particularly for damsels in distress.

Now, in Velvlettiturai, the Indian army has enacted its My Lai. London's Daily Telegraph commenting editorially on the barbarism exhibited by the Indian army in Velvettiturai says that, if anything "this massacre is worse than My Lai. Then American troops simply ran amok. In the Sri Lankan village, the Indians seem to have been more systematic; the victims being forced to lie down, and then shot in the back".

இவ்வாறு இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடங்கி, லண்டன் பத்திரிக்கைகள் வரை பட்டியலிட்டு இருக்கின்றன.

ஈழப் பிரச்சனையின் ஒரு முக்கியமான பரிமாணமான இந்திய இராணுவத்தின் அத்துமீறல்கள், போர் குற்றங்கள் குறித்து விகடனின் சர்வே ஏன் தமிழக மக்களிடம் கேள்வி எழுப்பவில்லை. சிவராசனும், சுபாவும், தனுவும் செய்த படுகொலைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பொறுப்பு என்றால் இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா ?

அப்படியெனில் ஈழத் தமிழ் மக்கள் மீது வன்முறை தாக்குதலை தொடுத்த ராஜீவ் காந்தி குற்றவாளியா, குற்றமற்றவரா, மன்னித்து விடலாமா என்ற கேள்விகளை விகடன் ஏன் முன்வைக்க வில்லை என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.

******

விகடன் நடத்திய இந்த சர்வே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். என்றாலும் இந்த சர்வே முடிவுகளை வெளியிட்ட விதம் என்னை எரிச்சல் படுத்தியது என்பது தான் உண்மை.

“நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரன் கைதாக வேண்டும்!” என்பது விகடனின் சர்வே முடிவை ஒட்டிய தலைப்புச் செய்தியாக வெளிவந்தது.

சரி விகடன் வெளியிட்ட சர்வே முடிவுகள் என்ன புள்ளிவிபரங்களை தருகிறது என பார்ப்போம்.

பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டும் என கூறியவர்கள் 43.02%,
குற்றமற்றவர் என கூறியவர்கள் - 16.90%
குற்றத்தை மன்னித்து விடலாம் என கூறியவர்கள் 40.07%. (மன்னித்து விட வேண்டும் என்றால் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை கைது செய்ய வேண்டாம் என்பது தான் பொருள் என நினைக்கிறேன்)

அதாவது 56.97% பேர் பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டாம் என்று தான் கூறுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது பிரபாகரன் கைதாக வேண்டும் என தமிழக மக்கள் கூறியுள்ளதாக விகடன் தலைப்புச் செய்தி வெளியிடுகிறது ? என்ன கொடுமை சார் இது ?

மும்முனைப் போட்டியில் 43.02% பெற்ற கட்சி வெற்றி பெற்றது, மற்றவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தார்கள் என்று சொல்ல இது என்ன தேர்தல் கருத்து கணிப்பா ? ஒரு கருத்தினை ஒட்டிய கேள்வி என்னும் பொழுது அந்தக் கருத்தினை சார்ந்த அனைத்து விடயங்களையும் அலசி தான் தலைப்புச் செய்தி வெளியிட வேண்டும். ஆனால் விகடன் அதனைச் செய்ய வில்லை.

இந்தக் கருத்து கணிப்பின் முடிவுகளை ”உண்மையாக” அப்படியே வெளியிடுவதில் விகடனுக்கு உள்ள நிர்பந்தம் எனக்கு புரிகிறது.

இதே சர்வே “நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரன் குற்றமற்றவர்!” என்றோ “நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரனை மன்னித்து விடலாம்” என்றோ வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? இந்தியாவின் மேல்தட்டு ஊடகங்களும், தமிழகத்தில் உள்ள விகடனின் ”சொந்தக்கார” ஊடகங்களும் விகடனை ரவுண்டு கட்டி அடித்திருப்பார்கள். விகடனின் நாட்டுப்பற்று குறித்து கேள்விகள் எழுந்திருக்கும். 80 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க விகடன் எப்படி தேச விரோத பாதையில் செல்கிறது என்பது குறித்த கவலைகள் எழுந்திருக்கும். விகடனுக்கு புலிகள் வழங்கிய வெளியே தெரியாத தொகை குறித்த வேள்விகள் எழுந்திருக்கும்.

எனவே இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க விகடன் ஒரு உண்மையை மட்டும் வெளியிட்டு விட்டு மற்றொரு உண்மையை புள்ளிவிபரங்களுடன் சேர்த்து மறைத்து விட்டது.

Leia Mais…
Friday, August 15, 2008

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு என்ன ?


என்னுடைய கடந்த பதிவில் காஷ்மீரில் தற்பொழுது நடந்து வரும் பிரச்சனைகள் குறித்து எழுதினேன். காஷ்மீர் பிரச்சனைக்கு காஷ்மீரின் விடுதலை என்பது தீர்வா ? அப்படியெனில் இந்துக்களை அதிகம் கொண்ட ஜம்முவை காஷ்மீருக்கு அளித்து தனி நாடாக மாற்றலாமா என்பது போன்ற கேள்விகள் எழுப்பபட்டன. அதற்கு பதிலளிக்க தொடங்கி நீண்டு விட்டதால் தனிப் பதிவாகவே பதிவு செய்கிறேன்.

காஷ்மீர் பிரச்சனை தமிழ் ஈழம், பாலஸ்தீனம் போன்ற மற்ற எல்லா பிரச்சனைகளையும் விட சிக்கலானது.

இந்தப் பிரச்சனை குறித்து சில விபரங்களை மட்டும் என்னுடைய ”காஷ்மீரின் விடுதலை” தொடரில் எழுதியுள்ளேன். இன்னும் எழுத வேண்டியது நிறைய உள்ளது.

தற்போதைய காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LoC) என்பது நிரந்தர எல்லையாக முடியாது. இந்தியா, பாக்கிஸ்தான், சீனா என மூன்று நாடுகளின் கைகளில் இருக்கும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டால் தான் காஷ்மீர் முழுமையாக முடியும். அதன் சாத்தியங்கள் என்ன என்பது குறித்து இறுதியிலே கூறுகிறேன். முதலில் காஷ்மீரில் இருக்கும் பல்வேறு பகுதிகள் குறித்து பார்க்க வேண்டும்.

காஷ்மீரில் மொத்தம் 5 பகுதிகள் உள்ளன. அதில் மூன்று பகுதிகள் இந்தியாவிடமும், 2 பகுதிகள் பாக்கிஸ்தான் வசமும் உள்ளன. மொத்த காஷ்மீர் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு பாக்கிஸ்தானிடமும், எஞ்சிய பெரும்பான்மையான பகுதி இந்தியா வசமும் உள்ளது. நிலப்பரப்பினை கொண்டு பார்த்தால் காஷ்மீர், ஜம்மு, லடாக் போன்றவை இந்தியாவின் முக்கிய பகுதிகள். அஸாத் காஷ்மீர், நார்த்தன் ஏரியாஸ் (கில்ஜில், பால்டிஸ்தான்) போன்றவை பாக்கிஸ்தானில் உள்ளன.

இந்தியா, காஷ்மீர் மன்னர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தாக கூறி ஒட்டு மொத்த காஷ்மீரும் தனக்கு தான் என வாதிடுகிறது. பாக்கிஸ்தான் இந்தியாவின் பிரிவினையின் பொழுது மூஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி பாக்கிஸ்தானுக்கும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி இந்தியாவுக்கும் என பிரிந்த நிலையில் பெரும்பான்மையாக முஸ்லீம்களை உள்ளடக்கிய காஷ்மீர் தனக்கு சொந்தம் என கூறுகிறது (இது குறித்த விரிவான தகவல்களை என்னுடைய முந்தைய கட்டுரையில் பார்க்கலாம்)

இந்தியா எவ்வாறு பெயரளவுக்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை காஷ்மீரில் நிறுவி காஷ்மீரில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறதோ அதே போல பாக்கிஸ்தான் நார்த்தன் ஏரியாஸ் என்ற பெரும்பான்மையான பகுதியை தன் வசம் வைத்திருக்கவே விரும்புகிறது. பெயரளவுக்கு அஸாத் காஷ்மீர் என்ற சிறிய பகுதியை மட்டும் “சுதந்திர காஷ்மீர்” என்பதாக வெளியுலகுக்கு காட்டி வருகிறது.

காஷ்மீர் பிரச்சனையில் இருக்கும் மிகப் பெரிய சிக்கல் ஜம்மு-காஷ்மீர் என்ற மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக முஸ்லீம்களையோ, இந்துக்களையோ, புத்தமதத்தினரையோ உள்ளடக்கி இருக்கவில்லை. காஷ்மீர், நார்த்தன் ஏரியாஸ் போன்ற பகுதிகளில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர். ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையினர். லடாக்கில் புத்தமதத்தினரும், முஸ்லீம்களும் சரிசமமாக உள்ளனர்.

காஷ்மீர் என்று சொல்லப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கு (Kashmir Valley) பகுதியில் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்கள். ஆனால் இந்துக்களும் இங்கு உண்டு. காஷ்மீர் முஸ்லீம்கள் பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் போல இல்லாமல் அவர்களுக்கேயுரிய கலாச்சாரத்துடன் தனித்தன்மையுடன் இருந்தனர். அது போல இங்கு இருந்த இந்துக்கள், பண்டிட் என்று அழைக்கப்படும் பிராமணப் பிரிவைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு என தனித்தன்மை உண்டு. பண்டிட்களுக்கும் இந்தியவின் பிற இந்துக்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. மொத்தத்தில் காஷ்மீர் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் என்று ஒரு தனித்தன்மை இருந்தது.

அதுவும் தவிர முஸ்லீம்கள் என சொல்லப்படுபவர்களும் ஒரே மாதிரியாக இல்லை. பூன்ச் பகுதியில் இருந்த முஸ்லீம்களும், பாக்கிஸ்தான் பகுதியில் இருக்கும் நார்த்தன் ஏரியாஸ் பகுதியில் இருக்கும் முஸ்லீம்களும் ஒரு வகையினர். ஆனால் காஷ்மீரில் உள்ள முஸ்லீம்கள் சற்று மாறுபட்டவர்கள். காஷ்மீர் முஸ்லீம்கள் சுபிஸம் - Sufism என்ற ஒரு முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். இதனை Liberal Islam என்று கூறுவார்கள். இதனை முஸ்லீம்களின் ஒரு பிரிவாக கூட சிலர் ஒப்புக் கொள்வதில்லை. இஸ்லாமுக்கு வெளியே இருந்து இது தோன்றயதாக கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

காஷ்மீர் முஸ்லீம்களுக்கு பாக்கிஸ்தானின் முஸ்லீம்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும். அது போலவே காஷ்மீரில் பண்டிட் என்று அழைக்கப்படும் அனைவருமே ஹிந்துகள் என்று கூறி விட முடியாது. முஸ்லீம்கள் கூட தங்கள் பெயருடன் பண்டிட் என்பதை இணைத்துக் கொள்வது வழக்கம். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் மிக இணக்கமாக இருந்த சூழலில் ஹிந்து கலாச்சார தாக்கம் முஸ்லீம்களிடம் இருந்தது. காஷ்மீரில் இருந்த முஸ்லீம் மதகுருக்களை "முஸ்லீம் ரிஷிகள்" என்று அழைக்கும் வழக்கம் கூட இருந்தது.

இன்னும் சொல்லப்போனால் அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்பவர்களுக்கு முஸ்லீம்கள் உதவி செய்வது என்பது காஷ்மீரில் காலங்கலமாக இருந்து வரும் மரபு (அமர்நாத் குகையை முதலில் கண்டுபிடித்தது ஒரு முஸ்லீம் ஆடு மேய்க்கும் சிறுவன் என்பன போன்ற மதநல்லிணக்க ”கதைகளும்” வழக்கத்தில் உண்டு).

காஷ்மீரில் பாக்கிஸ்தான் நுழைந்த பொழுது பயங்கரவாதத்தை புகுத்தியது. பாக்கிஸ்தானின் பஸ்தூன்களும், முல்லாக்களும், ஆப்கானிஸ்தானின் அடிப்படைவாதிகளும் காஷ்மீரில் புகுந்து காஷ்மீரின் முகத்தையும், காஷ்மீர் முஸ்லிம்களின் வாழ்க்கைமுறையையும் சிதைத்து விட்டனர். காஷ்மீர் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே இருந்த நெருங்கிய இணக்கம் பாக்கிஸ்தானின் வருகைக்குப் பிறகு சிதைந்து போனது. இந்துக்கள் மீதான தாக்குதலை பாக்கிஸ்தான் ஆதரவு குழுக்கள் தொடுத்தன. காஷ்மீர் பூர்வீக இந்துக்களான காஷ்மீரி பண்டிட்களை காஷ்மீரில் இருந்து விரட்டியவர்கள் கூட பாக்கிஸ்தான் அதரவு குழுக்கள் தான். இதனை காஷ்மீரின் ஆயுதக்குழுக்களும், மிதவாத போராட்டக் குழுக்களும் எதிர்த்தன என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

காஷ்மீரின் இப்படியான பன்முகத் தன்மை தான் காஷ்மீருக்கான தீர்வினையும் சிக்கலாக்குகிறது.

*****

காஷ்மீரின் தற்போதைய கட்டுப்பாட்டு கோடு (LoC) என்பது ஒரு வரையறைக்கப்பட்ட எல்லை அல்ல. இந்தியாவின் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது போல மொழி சார்ந்தோ, கலாச்சாரம் சார்ந்தோ பிரிக்கப்பட்டது அல்ல. இந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு உறவுகளை பிரித்தது. மக்களின் நிலங்களை, பொருளாதாரத்தை பிளந்தது.

காஷ்மீர் எந்த தேசத்திற்கு சொந்தமானது, அல்லது காஷ்மீரே ஒரு தனி நாடாகலாமா என்ற கேள்விகளை விட காஷ்மீரின் பகுதிகள் முதலில் இணைக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய முக்கிய நிலைப்பாடு. எந்த தேசியங்களையும் விடவும் மக்கள் முக்கியமானவர்கள்.

காஷ்மீரின் பகுதிகள் இணைக்கப்பட்டு காஷ்மீரின் எந்தப் பகுதிக்கும் காஷ்மீரைச் சார்ந்த யார் வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அது போல காஷ்மீருக்கும், முசாராபாத் போன்ற நகரங்களுக்கும் இடையிலேயான வர்த்தக தொடர்புகளை ஏற்றுமதி, இறக்குமதி போன்ற பிரச்சனைகள் இல்லாமல் ஒரு நாட்டிற்குள்ளேயே வர்த்தகம் செய்வது போன்ற நிலையினை கொண்டு வர வேண்டும். அதைத் தான் முசாராபாத் செல்வோம் (Muzzafarabad Chalo) என்ற காஷ்மீரிகளின் தற்போதைய போராட்டம் உணர்த்துகிறது.

அதைப் போலவே இந்தியாவும், பாக்கிஸ்தானும் இந்தப் பகுதியில் குவித்து இருக்கிற மிகப் பெரிய இராணுவத்தை விலக்கி கொள்ள வேண்டும். இராணுவம் விலக்கப்பட்டால் தான் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை இயல்பாக நடத்த முடியும். எல்லா காஷ்மீர் இளைஞர்களையும் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்துடன் கடத்துவதும், பிறகு அவர்கள் காணாமல் போவது போன்ற மனித உரிமை மீறல்களும் நிறுத்தப்பட வேண்டும்.

இது உண்மையில் சாத்தியமா ?

நிச்சயம் சாத்தியமே என்பதை வெளிப்படுத்தும் வகையில் 2005ல் பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் ஒரு தீர்வினை முன்வைத்தார். பாக்கிஸ்தான் ஜனாதிபதி முஷ்ரப் மீது எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன. ஒரு இராணுவ சர்வாதிகாரி, பதவி ஆசை பிடித்தவர், ஜனநாயகத்தை நசுக்க துணிந்தவர் என பல விமர்சனங்கள் இருந்தாலும் காஷ்மீர் பிரச்சனைக்கு பலரும் ஏற்கத்தக்க ஒரு தீர்வினை முன்வைத்தவர் முஷ்ரப் மட்டுமே. ஆனால் அவருடைய இந்த தீர்வினை இந்தியாவின் சங்பரிவார் கும்பலும் ஏற்காது. பாக்கிஸ்தானின் மத அடிப்படைவாத கும்பலும் ஏற்காது.

ஆனால் காஷ்மீரில் இருந்த பல அமைப்புகள் அவரின் இந்த திட்டத்தை வரவேற்றிருந்தன. இந்தியாவில் இருந்த நடுநிலையான அமைப்புகள் கூட அவரின் இந்த திட்டத்தை ஒரு நல்ல தொடக்கமாக ஏற்றுக் கொண்டன.

அப்படி என்ன திட்டத்தை அவர் முன்வைத்தார். இது குறித்து நான் முன்பே எழுதியிருக்கிறேன். என்றாலும் மறுபடியும் இங்கே முன்வைக்கிறேன்.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள காஷ்மீரை 7 கூறுகளாக முஷ்ரப் பிரித்துக் கொண்டார். அவற்றில் இரண்டு பகுதிகள் பாக்கிஸ்தானிடம் உள்ளவை (நார்தன் ஏரியாஸ், அஸாத் காஷ்மீர்). மீதி ஐந்து இந்தியாவிடம் இருக்கின்றன (லடாக். பூன்ச், கார்கில், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு). இந்தப் பகுதிகளில் இருந்து இந்தியாவும் பாக்கிஸ்தானும் இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். சர்சைக்குரியப் பகுதிகளை இரு நாடுகளும் கூட்டாக ஆளுவது. பிறகு இந்தப் பகுதிகளை காஷ்மீர் மக்களிடம் ஒப்படைப்பது.

இந்த திட்டம் ஒன்றிணைந்த காஷ்மீர், காஷ்மீருக்கு முழுமையான விடுதலை ஆகியவற்றை நோக்கிய ஒரு முக்கியமான திட்டம்.

முஷ்ரப்பின் இந்த திட்டத்தில் சில ”சிறிய” பிரச்சனைகள் இருந்தன. அது தான் பெரும்பாலும் விமர்சிக்கப்பட்டது. என்றாலும் அடிப்படையில் மிக முக்கியமான திட்டம்.

அவர் திட்டத்தில் இருந்த பிரச்சனைகள் என்ன ?

இந்தியாவில் உள்ள காஷ்மீரின் பகுதிகளை ஐந்து என முஷ்ரப் பிரித்தது தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐந்து பகுதிகள் அல்ல. மூன்று மட்டுமே என்பது இந்தியாவின் வாதம். அது போல சீனாவிடம் இருக்கும் பகுதிகள் குறித்து இந்த திட்டத்தில் எதுவும் இல்லை.

என்றாலும் இந்த திட்டத்தை ஏன் முக்கியமான திட்டம் என சொல்கிறேன் ?

பாக்கிஸ்தான் முதன் முறையாக நார்தன் ஏரியாஸ் என்று சொல்லப்படும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை காஷ்மீருக்கு விட்டுக் கொடுக்க சம்மதித்து தான். கடந்த காலங்களில் பாக்கிஸ்தான் இவ்வாறு கூறியது இல்லை. இந்த திட்டம் இந்தியாவை ஆச்சரியப்படுத்தியது. இதனை அடிப்படையாக கொண்டு ஒரு இறுதியான தீர்வினை நோக்கி இந்தியா நகர்ந்திருக்கலாம். ஆனால் இந்தியா அதனை செய்யவில்லை.

இந்தியாவின் நிலைப்பாடு என்பது எப்பொழுதும் போலவே காலத்தை கடத்துவது, தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தொடர்ந்து தன் வசம் வைத்திருப்பது என்றளவிலேயே உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டினை (LoC) நிரந்தர எல்லையாக்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிரச்சனையே அந்த எல்லைக் கோடு தான் என்னும் பொழுது எது எப்படி தீர்வாக முடியும் ?

இந்தியாவின் வாதம் பொருந்தாது, பொறுப்பற்றது.

இந்தியா இந்தப் பிரச்சனையில் காலத்தை கடத்திக் கொண்டே இருப்பது தான் சிறந்த உத்தி என எப்பொழுதும் நினைக்கிறது. காலங்கள் கடந்து கொண்டே இருந்தால் பிரச்சனையின் தீவிரம் குறைந்து விடும். இந்தியாவின் அந்த உத்தி இந்தியாவிற்கு பல வகையில் கைகொடுத்து இருக்கிறது.


அவ்வப்பொழுது எழும் காஷ்மீரிகளின் தற்போதைய போராட்டங்களை தன்னுடைய அதிகார பலம் மூலம் நசுக்கி கொண்டே இருந்தால் அடுத்து வரும் தலைமுறை இந்தி சினிமாவை பற்றி மட்டும் தான் பேசும். காஷ்மீர் விடுதலையா அது என்ன என்று தான் கேட்கும் ? அந்த நாளுக்கு தான் இந்தியா காத்திருக்கிறது.

Leia Mais…
Thursday, August 14, 2008

காஷ்மீரில் மீண்டும் விடுதலை முழக்கம்

காஷ்மீரில் கடந்த சில வருடங்களாக அடங்கியிருந்த விடுதலை முழக்கம் மீண்டும் எழ தொடங்கியிருக்கிறது. இந்த வாரம் மட்டும் 20க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகியுள்ளனர். ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷேக் அப்துல் அஜீஸ் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பல போலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் 1989-1990ம் ஆண்டில் இருந்த சூழலுக்கு மறுபடியும் திரும்பியுள்ளது. காஷ்மீர் விடுதலையை கோரி பெரும் திரளான மக்கள் வீதிகளிலும், முக்கிய இடங்களிலும் குவிய தொடங்கியுள்ளதால் காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. கண்டதும் சுட உத்தரவு போன்ற கடுமையான அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களை இந்திய மைய அரசு காஷ்மீரில் பிரயோகிப்பதை மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.

அமர்நாத் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட இடம் தொடர்பாக ஆரம்பித்த இந்தப் பிரச்சனை காஷ்மீர் மீதான பொருளாதார தடையாக உருமாறி, இந்து-முஸ்லீம் பிரச்சனையாக மாற்றப்பட்டு இன்று சங்பரிவார் கும்பலுக்கு மற்றொரு தேர்தல் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது.

1990ல் இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தொடங்கிய காஷ்மீர் விடுதலை போராட்டம், பாக்கிஸ்தானின் தலையீட்டால் இஸ்லாமிய பயங்கரவாதமாக உருமாற்றம் பெற்றது. இந்திய அரசாங்கத்தின் இராணுவம், பாக்கிஸ்தான் சார்பு தீவிரவாதிகளின் பயங்கரவாதம் என இந்தப் போராட்டம் திசைமாறி இந்தியா பாக்கிஸ்தான் நாடுகளின் பகடைக் காய்களாக காஷ்மீர் மக்கள் மாற்றப்பட்டனர்.

(இது குறித்த என்னுடைய முந்தைய பதிவு - காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை)

காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியா-பாக்கிஸ்தான் பிரச்சனை என்பது போலவே பார்க்கப்பட்டது. காஷ்மீர் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு காஷ்மீரிகளை ஒரு அழைப்பாளராக கூட இந்தியாவும் பாக்கிஸ்தானும் அழைக்காமல் பார்த்துக் கொண்டன. ஆனால் 1990க்கு பிறகு முதன் முறையாக காஷ்மீர் மக்கள் தங்கள் போராட்டத்தை தாங்களாகவே முன்னெடுத்து உள்ளனர். பாக்கிஸ்தான் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் எந்த தலையீடும் இல்லாமல் இந்தப் போராட்டம் எழுந்துள்ளது.

காஷ்மீரிகளின் போராட்டம் இயல்பாக எழுந்தாலும் இதனை தொடங்கி வைத்த பெருமை சங்பரிவார் கும்பலையேச் சாரும். சங்பரிவார் கும்பலுக்கு காஷ்மீருக்கு சிறப்பு சலுகையை அளிக்கும் இந்திய அரசியல் சாசனம் 370ம் பிரிவு மீது ஒரு எரிச்சல் உண்டு. இந்தப் பிரிவை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருவது இவர்களின் வாடிக்கை. ஆனால் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்து பொழுது இந்தப் பிரிவை நீக்க எந்த முயற்சியும் எடுக்க வில்லை என்பது கவனிக்கத்தக்கது. 370ம் பிரிவு, அயோத்தியில் கோயில் கட்டுவது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் சங்பரிவார் கும்பலுக்கு இந்துத்துவா ஆதரவாளர்களிடம் தங்களின் இருப்பை தக்க வைத்து கொள்ள முடியும். இந்துத்துவா ஓட்டு வங்கிகளை தங்கள் வசம் வைத்திருக்க முடியும்.

இந்திய அரசியல் சாசனம் 370ம் பிரிவின் படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நிலங்களை வெளி மாநிலத்தைச் சேர்ந்தோர் வாங்க முடியாது. இது சார்ந்த பிரச்சனை 2006ல் ஒரு முறை நடந்து. குல்மார்க் சுற்றுலா தளத்தில் அதிநவீன சுற்றுலா விடுதிகளை அமைக்க அனுமதி அளித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காஷ்மீரை சாராதவர்களுக்கு நிலங்களை வழங்குவதை காஷ்மீரில் உள்ள ஹூரியத் மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இதையெடுத்து இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இப்பொழுதும் அது போலவே அமர்நாத் ஆலயத்திற்கு 40 ஏக்கர் நிலத்தை வழங்கிய ஆணையை காஷ்மீர் மக்கள் எதிர்த்தனர். இது காஷ்மீரில் இந்துக்களை புகுத்தும் மறைமுக திட்டமாகவே காஷ்மீர் மக்கள் கருதினர். பொதுவாகவே காஷ்மீரிகள் இந்தப் பிரச்சனையை உணர்வுப்பூர்வமாகவே பார்க்கின்றனர்.

"காஷ்மீரிகள்" என்ற தங்கள் அடையாளத்தை 370ம் பிரிவே இன்று வரை காப்பாற்றி வருவதாக காஷ்மீர் மக்கள் நம்புகிறார்கள். காஷ்மீரில் பிற மாநிலத்தினரின் குடியேற்றம் நிகழ்ந்தால் தங்களுடைய பெரும்பான்மையை குறைக்கப்படுமோ என்ற அச்சம் பலருக்கும் உண்டு. காஷ்மீரில் தங்கள் அடையாளத்தை தக்கவைக்க 370ம் பிரிவு அவசியம் என நினைக்கின்றனர். காஷ்மீரிகளின் இந்த உணர்வை என்னால் தவறாக பார்க்க முடியவில்லை. ஏனெனில் உலகின் பலப் பகுதிகளில் தங்கள் விடுதலையை முன்னெடுக்கும் தேசிய இனங்களின் பெரும்பான்மையை குறைக்க இவ்வாறான குடியேற்றத்தையே அதிகார மையங்கள் முன்வைக்கின்றன.

இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதியில் பெரும்பான்மையாக இருந்த தமிழர்களின் தமிழீழ கோரிக்கையை சீர்குலைக்க கிழக்குப் பகுதியில் சிங்களவர்களை சிறீலங்கா அரசு குடியேற்றியது. இன்றைக்கு தமிழர்களின் பெரும்பான்மை கிழக்கு பகுதிகளில் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. இது போலவே பாலஸ்தீன பகுதிகளில் யூதர்களை இஸ்ரேல் குடியேற்றியது.

இவ்வாறான சூழலில் 370ம் பிரிவு தங்கள் உரிமையை தக்கவைக்க உதவுவதாக காஷ்மீரிகள் நம்புகின்றனர். இந்த காரணத்தினாலேயே அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்குவதை எதிர்க்கின்றனர்.

காஷ்மீரிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த அமர்நாத் நில மாற்றம் அரசால் கைவிடப்பட்டது. ஆனால் சங்பரிவார் அமைப்புகள் இதனை எதிர்த்தன. அமர்நாத் ஆலயத்திற்கு நிலத்தை வழங்கியே தீர வேண்டும் என ஜம்முவில் போராட்டம் நடத்தினர். இதன் அடுத்த கட்டமாக காஷ்மீரில் இருந்து ஜம்மு வரும் சாலைகளை மறித்து காஷ்மீர் மீது ஒரு பொருளாதார முற்றுகையை ஜம்மு இந்துக்கள் மேற்கொண்டனர். இந்த முற்றுகையை நீக்க இந்திய மைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

காஷ்மீரின் முக்கிய பொருளாதாரமான காஷ்மீர் ஆப்பிள்கள் மற்றும் பிற பழ வகைகள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு ஜம்மு வழியாகவே செல்ல முடியும். எனவே ஜம்முவில் சாலைகளை மறிப்பது என்பது காஷ்மீரின் ஒரு முக்கிய பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது. இதனால் காஷ்மீரில் உள்ள பழ வியபாரிகள் தங்கள் பொருட்களை விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அரசும் இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்ய முசாராபாத் செல்வோம் (Muzzafarabad Chalo) என போராட்டத்தை காஷ்மீர் பழவியபாரிகள் இந்த வாரம் துவங்கினர். இந்தப் போராட்டம் வலுவடைந்து பெரும்திரளான மக்களை உள்ளடக்கிய போராட்டமாக உருமாறியது. சுமார் 1.5லட்சம் மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

முசாராபாத் செல்ல தொடங்கிய இந்தப் போராட்டத்தை தடுக்க எந்த திட்டமிடலும் செய்யாத அரசு, இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தின் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் இது வரை 20க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை ஒரு பொருளாதார போராட்டம் விடுதலை போராட்டமாக மறுபடியும் மாற வழிவகுத்துள்ளது. பலர் கொல்லப்பட்ட நிகழ்வு காஷ்மீரில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் போலீசாரை தாக்கியுள்ளனர். காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மீறுபவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. சில வருடங்களாக அமைதியாக இருந்த காஷ்மீர் மீண்டும் கலவர பூமியாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களாக அதிகம் கேட்காத காஷ்மீர் விடுதலை முழக்கம் இப்பொழுது ஓங்கி ஒலிக்கிறது.

****

முசாராபாத் பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ளது. ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீரிகள் ஏன் பாக்கிஸ்தான் பகுதிக்கு செல்ல முயல வேண்டும் ? எதற்காக போராட்டம் நடத்த வேண்டும் ?

காஷ்மீர் பிரச்சனையில் எப்பொழுதுமே தவறான தகவல்களை வழங்கி கொண்டிருக்கும் இந்திய ஊடகங்கள் "எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடக்க முயன்ற காஷ்மீரிகள்" என்ற மேலோட்டமான செய்தியை தான் வழங்கி கொண்டிருக்கின்றன. Muzzafarabad Chalo என்ற இந்தப் போராட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீநகர்-முசாபராபாத் சார்ந்த வர்த்தக தொடர்புகளையும், அதனைச் சார்ந்த பிரச்சனைகளையும் கவனிக்க வேண்டும்.

முசாராபாத்தும் ஸ்ரீநகரும் காஷ்மீருக்கு சொந்தமானவை. தமிழ்நாட்டின் மதுரையும், திருச்சியும் போல.

இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளால் காஷ்மீர் துண்டாடப்பட்டது. இந்தியாவிடம் ஒரு பகுதியும், பாக்கிஸ்தானிடம் மற்றொரு பகுதியும் என காஷ்மீர் இரு துண்டுகளாக பிரிந்தது. ஸ்ரீநகர் இந்தியாவிடமும், முசாராபாத் பாக்கிஸ்தான் வசமும் உள்ளது. இந்த காஷ்மீர் பிரிவினையால் உறவுகள் பிரிந்தன. காஷ்மீர் மக்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் சீர்குலைந்தது.

காஷ்மீரிகளின் சுதந்திர முழக்கம் என்பது வெறும் பிரிவினைவாதமாகவே இந்தியாவில் பார்க்கப்படுகிறது. பாக்கிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரும் தன்னுடையது தான் என்ற பொருந்தாத வாதத்தை இந்தியா தொடர்ந்து முன்வைத்து வருகிறது. காஷ்மீர் என்பது இந்தியாவின் பகுதியே அல்ல (என்னுடைய காஷ்மீரின் விடுதலை தொடரில் அதற்கான ஆதாரங்களை முன்வைத்திருக்கிறேன்). பாக்கிஸ்தானுக்கும் காஷ்மீர் சொந்தமானது அல்ல. ஆனால் பல நூற்றாண்டுகளாக காஷ்மீருக்கும், பாக்கிஸ்தானில் உள்ள பகுதிகளுக்கும் இடையே தான் வர்த்தக தொடர்பே இருந்து வந்திருக்கிறது. தில்லியுடனோ, இந்தியாவின் பிற பகுதிகளுடனோ காஷ்மீருக்கு பெரிய வர்த்தக உறவுகள் இருந்ததில்லை. காரணம் பூளோக அமைப்பு ரீதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி பாக்கிஸ்தானுடன் நெருக்கமாக இருந்தளவுக்கு இந்தியாவுடன் நெருக்கமாக இருக்க வில்லை.

காஷ்மீர் இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே பிரிந்த பொழுது காஷ்மீர் மக்கள் மட்டும் துண்டாடப்படவில்லை. அவர்களின் வர்த்தகம், பொருளாதாரம் என அனைத்தும் சீர்குலைந்து போனது. அது தான் காஷ்மீரிகள் இன்று வரை தங்களை இந்தியாவுடன் பொருத்தி பார்க்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்ததால் இயற்கையாக அமைந்த தங்களுடைய பொருளாதாரம் சீர்குலைந்ததாக பெரும்பாலான காஷ்மீர் மக்கள் நம்பினர். அதன் தொடர்ச்சியாக எந்த புதிய பொருளாதார வாய்ப்புகளும் இந்தியாவுடன் இணைந்த பிறகு காஷ்மீருக்கு ஏற்படவில்லை.

*********

2005ம் ஆண்டு நான் எழுதிய "காஷ்மீரின் விடுதலை" தொடரில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
(காஷ்மீர் குறித்த எனது பதிவுகள் - 1, 2, 3, 4, 5, 6)

ஸ்ரீநகர்-முசாராபாத் நெடுஞ்சாலை தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் மக்களை பிற முக்கிய பகுதிகளுக்கு இணைக்க கூடிய முக்கியமான இணைப்புச் சாலை.

250கி.மீ, தூரமுள்ள இந்த நெடுஞ்சாலை தான் காஷ்மீர் மக்களின் முக்கிய வணிகச் சாலையாக இருந்தது. இந்தச் சாலை ஸ்ரீநகரை முசாராபாத்துடன் இணைப்பதுடன், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. 1947 காஷ்மீர் பிரச்சனைக்குப் பிறகு இந்த சாலையும் மூடப்பட்டு விட்டது. இதனால் காஷ்மீரிகள் துண்டிக்கப்பட்டனர். அவர்களின் வணிகமும், பொருளாதாரமும் சீர்குலைந்தது.

காஷ்மீர் ஆப்பிள்கள் ஒரு முக்கிய வணிகப் பொருள். காஷ்மீரில் பயிரிடப்படும் ஆப்பிள்களை தில்லி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தான் இங்குள்ள விவசாயிகளால் தற்பொழுது விற்க முடியும். நீண்ட தூரத்தில் இருக்கும் வர்த்தக தளங்களால் இவர்களின் லாபம் குறைகிறது. மாறாக இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் முசாராபாத், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களுக்கும் மிக எளிதாக வர்த்தகம் செய்ய இயலும். லாபமும் அதிகரிக்கும்.

**********

..... பிரிந்த உறவுகள் இணைக்கப்பட வேண்டும். இரண்டு துண்டுகளாக பிளக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் இணைய வேண்டும்.பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு இரு ஜெர்மனிகளும் இணைந்தது போல இந்தியாவின் வசம் இருக்கும் காஷ்மீரும், பாக்கிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீரும் இணைக்கப்படவேண்டும்.

இது சாத்தியமா ?

நேற்று வரை திருச்சியும், மதுரையும் ஒரே நாடாக இருக்க, திடீரென்று இவை இரண்டும் இரு வேறு துண்டுகளாகி, மதுரையில் இருப்பவர்கள் திருச்சிக்கும், திருச்சியில் இருப்பவர்கள் மதுரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் ?

திருச்சிக்கும், மதுரைக்கும் இடையே இருக்கும் மனித உறவுகள் துண்டிக்கப்படும். மகள் மதுரையில் இருக்கலாம். அப்பா திருச்சியில் இருக்கலாம். ஆனால் இவர்கள் இருவரும் சந்திக்க கடவுச்சீட்டு பெற்று, விசா கிடைத்து விமானம் ஏறி பல மைல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் ? எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் சாதாரண குடும்பத்திற்கு விமானம் ஏறக் கூடிய வசதி இருக்குமா ?

அது தான் காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டது.

****

இந்தியாவின் மைய அரசாங்கம் கடந்த காலங்களில் செயல்பட்டது போலவே இம்முறையும் செயல்பட்டிருக்கிறது. ஜம்முவில் போராட்டம் நடத்திய இந்துக்களிடம் அரசாங்கம் நடந்து கொண்ட முறையும், காஷ்மீரில் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட மூர்க்கமான தாக்குதல்களையும் ஒப்பு நோக்க வேண்டியுள்ளது. போராட்டம் துவங்கிய முதல் சில நாட்களில் 20க்கும் மேற்பட்ட காஷ்மீர் முஸ்லீம்கள் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி உள்ளது மைய அரசாங்கம் காஷ்மீர் மக்களின் நியாயமான போராட்டத்தை தொடர்ந்து தன்னுடைய அதிகார பலத்தை கொண்டு அடக்கி ஒடுக்க முயலுவதையே காட்டுவதாக உள்ளது. மாறாக ஜம்முவில் பல நாட்களாக மறியல் செய்து வரும் ஜம்மு இந்துக்களின் மீது என்ன நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது ?

ஜம்முவில் இந்துக்கள் அதிகம் என்பதால், இந்தப் பிரச்சனையை இந்து-முஸ்லீம் பிரச்சனையாக மாற்றி அதில் குளிர்காய சங்பரிவார் கும்பல் நினைக்கிறது. காஷ்மீர் மக்களுக்கு சாதகமாக மைய அரசுகளும், காஷ்மீர் அரசுகளும் தொடர்ச்சியாக நடந்து வருவதாக ஒப்பாரி வைக்கின்றன. ஜம்மு இந்துக்களுக்கு தொடர்ச்சியாக அரசாங்கங்கள் அநீதி இழைப்பதாக இந்திய ஊடகங்களும் ஒப்பாரி வைக்கின்றன. அதனைச் சார்ந்த கருத்து ஒற்றுமையை இந்தியாவின் பிற மாநிலங்களில் ஏற்படுத்த ஊடகங்கள் முயலுகின்றன.

ஆனால் உண்மை என்னவென்றால் தொடர்ச்சியாக இந்திய இராணுவம் மற்றும் போலீசாரின் அடக்குமுறைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாகியவர்கள் காஷ்மீர்கள் தான். ஜம்முவில் இருக்கும் இந்துக்களுக்கு என்ன பிரச்சனை இருந்தது ? அரசாங்கம் ஜம்மு இந்துக்களை எண்கவுண்ட்டரில் போட்டு தாக்கியதா, இல்லை ஜம்மு இந்துக்கள் தான் காணாமல் போய் சடலங்களாக மீண்டு வந்தார்களா ?

அரசாங்கம், பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்ட சண்டையின் இடையில் சிக்கி மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்கள் காஷ்மீர் முஸ்லீம்கள் தான். தங்களின் பதவி உயிர்வுக்காக காஷ்மீர் இளைஞர்களை பலியிட்ட கொடுமையெல்லாம் காஷ்மீரில் தான் நடந்தது. ஜம்முவில் அல்ல. (இது குறித்த என்னுடைய முந்தைய பதிவுகள்
- காணாமல் போகும் காஷ்மீரிகள்
- காஷ்மீர் பற்றிய குறும்படம் )

இவ்வறான சூழலில் ஜம்மு மக்கள் புறக்கணிக்கப்பட்டதாக சொல்வது இந்தப் பிரச்சனையை திசை திருப்பும் ஒரு போக்காகவே நான் நினைக்கிறேன்.

எல்லப் பிரச்சனைக்கும் காரணமான சங்பரிவார், இதனை இந்தியா முழுவதும் இந்து முஸ்லீம் கலவரமாக மாற்றி வரும் தேர்தலில் இந்தப் பிரச்சனை மூலம் வெற்றி பெற துடித்துக் கொண்டிருக்கிறது.

இன்று இந்தியாவின் சுதந்திர தினமாம். காஷ்மீர் மக்களை பொறுத்தவரை இது அவர்களின் கறுப்பு தினம்.

*****

அமர்நாத் பனிலங்கம் என்பதே ஒரு மோசடியான, மூடநம்பிக்கையான ஒன்று. இது குறித்த உண்மைகளை ஏற்கனவே அறிவியல் ரீதியாக திராவிடர் கழகம் அம்பலப்படுத்தியுள்ளது. அது குறித்த ஒரு வீடியோவை பெரியார் வலைக்காட்சியில் பார்க்க முடியும் - சு.அறிவுக்கரசு திராவிடர் கழக பொதுச்செயலாளர் - அமர்நாத் பனி லிங்க மோசடி - தொடர்வது என்ன?

Leia Mais…
Thursday, August 07, 2008

ஒலிம்பிக் போட்டிக்காக வீடுகளில் இருந்து துரத்தப்பட்ட மக்கள்

பீஜிங் ஒலிம்பிக் போட்டி இது வரை ஒலிம்பிக் வரலாற்றில் இல்லாத வகையில் மிக பிரமாண்டமாக நாளை துவங்குகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிக்காக சுமார் 40பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை சீனா செலவழித்திருக்கிறது. சிட்னி ஒலிம்பிக் போட்டிக்கு செலவழிக்கப்பட்ட தொகை 5 பில்லியன், ஏதன்ஸ் - 8.5 பில்லியன் மட்டுமே. கடந்த ஒலிம்பிக் போட்டிகளை விட பல மடங்கு அதிகமாக சீனா செலவழித்திருப்பதற்கு காரணம் - இது சீனாவின் 100 ஆண்டு கனவு. அதாவது சீன ஆதிகார மையத்தின் கனவு. இந்த பிரமாண்டம் மூலம் சீனா உலக அரங்கில் அமெரிக்காவிற்கு நிகரான வல்லரசாக உருவெடுத்து இருப்பதாக சீனா பிரச்சாரம் செய்கிறது.

இந்தப் பிரச்சாரத்திற்கு ஏற்ற வகையில் பதக்க பட்டியலில் அமெரிக்காவை விட அதிக பதக்கங்களை வெல்ல சீனா கடுமையான திட்டங்களை கடந்த 8 வருடங்களாக மேற்கொண்டது. project 119 என்ற இந்த திட்டத்தின் மூலம் அதிக பதக்கங்களை வெல்லக்கூடிய போட்டிகள் கண்டறியப்பட்டு விளையாட்டு வீரர்களுக்கு இராணுவ பயிற்சி போன்று கடுமையான பயிற்சிகளை வழங்கியது. கடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த சீனா இம்முறை முதல் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிக்காக செலவழிக்கப்பட்ட தொகையில் பெரும்பாலான தொகை பீஜிங் நகரின் உள்ளக்கட்டமைப்பிற்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது. புதிய விளையாட்டு அரங்கங்கள், விமான நிலையம், சாலைகள், சுரங்க ரயில்கள் என அனைத்து உள்கட்டமைப்பும் உலகத்தரத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. மாசு கட்டுப்பாட்டிற்காக அதிக செலவு செய்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்...ஒலிம்பிக் போட்டியின் பொழுது மழை பெய்யாதிருக்க cloud seeding போன்ற நுட்பங்களை பயன்படுத்தி வானிலையையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக சொல்கிறார்கள்.

பீஜிங் தேசிய விளையாட்டரங்கம் ஒரு குருவி கூடு போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் கட்டிடக்கலை குறித்து வியந்து பேசுகிறார்கள்.

ஆனால், இந்த ஒலிம்பிக் போட்டிக்காக பிஜிங் மக்கள் கொடுத்த விலை மிக அதிகம். சுமார் 15 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பழைய வீடுகள் நகரின் அழகை குலைப்பதால், அந்த வீடுகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. பலர் நகரை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சரியான மாற்று இடமோ, இழப்பீடோ பலருக்கு வழங்கப்படவில்லை.

பிஜிங்கில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் பீஜிங்கில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கையை குலைத்து விட்டது. அது குறித்த ஒரு கட்டுரை

The Olympics Have Destroyed Our Lives

"The Olympics have dealt a blow to common citizens; they have destroyed our lives," a 63-year-old man whose family had lived in one of the destroyed neighborhoods for four generations told Chua. "That is what we feel, though we're not allowed to say it in public."

பலரின் வாழ்க்கை சிதைந்து போன இடங்களில் அழகான புல் வெளிகள் முளைத்து இருக்கின்றன. தங்கள் வீடுகளை இடிப்பதை எதிர்த்த பலர் சிறையில் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

Razed homes leave residents unable to share Olympic joy

பிஜிங்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் குறித்த வீடியோ
The Human cost of the Olympics

Leia Mais…