Monday, August 15, 2005

பில்லியன் டாலர் கனவுகள்

என் அப்பா அடிக்கடி சொல்வார், "நாங்க சிறுக சிறுக சேமித்து, ஒவ்வொரு செலவையும் யோசித்து செய்வோம், நீங்களல்லாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் சம்பளம் நிறைய வருதுன்னு ஏகப்பட்ட செலவுகளை செய்கிறீர்கள்" என்று. என் அப்பா வறுமை கோட்டின் கீழ் இருந்து தன்னுடைய உழைப்பால் முன்னேறியவர். செலவுகளை யோசித்து தான் செய்வார். அவர் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை எனக்கும், எனது சகோதரனின் படிப்புச் செலவுக்கும், ஒரு வீட்டை கட்டுவதற்கும் செலவு செய்தார். இவை போக அவரிடம் கொஞ்சம் சேமிப்பு இருக்கும்.

நான் நெய்வேலியில் பலரை பார்த்து இருக்கிறேன். என்.எல்.சி. நிர்வாகத்தில் வேலை செய்யும் வரை மிகுந்த வசதியுடன் இருப்பார்கள். ஆனால் பணியில் இருந்து ஓய்வு பெரும் பொழுது பெரிய சேமிப்புகளோ, வசதியோ இருக்காது. அரசுப் பணியில் நீண்ட காலம் வேலை செய்பவர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச சம்பளமாக அப்பொழுதெல்லாம் 20,000 இருந்திருக்க கூடும். பல வருடங்கள் உழைத்து முன்னேறி அந்த சம்பளத்தை அடைய வேண்டும்.

ஒரு வீடு, பிள்ளைகளின் படிப்புச் செலவு, திருமணம் இவை தான் சராசரி நடுத்தர வர்க்க குடும்பத்தின் கனவு. மாதத்தில் ஒன்றோ, இரண்டோ சினிமா, கடற்கரை, சரவணபவனில் மாலை டிபன் இது தான் உல்லாசம். அதிக பட்ச சுற்றுலா, ஊட்டியோ, கொடைக்கானலோ, திருப்பதியோ தான்.

ஆனால் கடந்த சில வருடங்களில் பிரமாண்ட மாற்றம். அன்றைக்கு பல வருடங்கள் உழைத்து பெற்ற சம்பளம், இன்று கல்லூரியை விட்டு வெளியேறும் பொழுதே கிடைக்கிறது. ஆரம்ப வேலையிலேயே பல ஆயிரங்கள் சம்பளம். யோசித்து பல தடவை சிந்தித்து கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தினர் இன்று வீட்டுக் கடன், கார் கடன், உல்லாசக் கடன் என்று பல கடன்களை யோசிக்காமால் வாங்கிக் குவிக்கின்றனர். நல்ல வசதியான வீடு, வார இறுதியில் பார்ட்டிகள், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டின்னர்கள், வருடத்திற்கு ஒரு முறை சொகுசான சுற்றுலா என்று தடாலடி மாற்றம். அலமாரிகளிலும், அரிசிப் பானைகளிலும், வங்கிகளிலும் தேங்கிக் கிடந்த பணம் இன்று ஹோட்டல்களுக்கும், விமானங்களுக்கும் பாய்கிறது.

ஒரு தலைமுறை இடைவெளிக்குள் எப்படி இந்த திடீர் மாற்றம் ?

நான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு சென்னைக்கு வந்த பொழுது இருந்த கார்களின் எண்ணிக்கையை விட தற்போதைய எண்ணிக்கையை ஒப்பிடும் பொழுது வியப்பாக இருக்கிறது. என் சென்னை அலுவலகத்தில் பைக்குகளின் எண்ணிக்கையுடன் கார்களின் எண்ணிக்கை போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் 20 வருடங்களில் உலகில் அதிக எண்ணிக்கையில் கார்கள் இருக்கும் நாடு இந்தியாவகத் தான் இருக்க கூடும். உலக வரைபடத்தில் அமெரிக்காவும், பிரிட்டனும், ஜெர்மனியும், ரஷ்யாவும், ஜப்பானும் பெற்றிருந்த முக்கியத்துவத்தை இந்தியாவும் பெறும் நிலையை அடைந்து கொண்டிருக்கிறது.

ஐ.நா. சபையின் நிரந்திர உறுப்பினராக வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு உண்டு. உலகின் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா நிரந்திர உறுப்பினராக வேண்டியது முக்கியம். அப்பொழுது தான் பாதுகாப்பு சபையில் சரியான பிரதிநிதித்துவம் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவோ, அமெரிக்காவோ இந்தியாவிற்கு நிரந்திர இடத்தை கொடுக்க ஆர்வமில்லாமல் இருந்தன. ஆசியாவில் ஒரு சக்தியாக இந்தியா உருவாகுவதை சீனா விரும்பவில்லை. ஆனால் யார் நினைத்தாலும் தடுக்க இயலாத, அணை போட முடியாத நிலையை நோக்கி இந்தியா இன்று சென்று கொண்டிருக்கிறது.

இன்று சீனாவும், அமெரிக்காவும் ஐ.நா. சபையில் நிரந்திர உறுப்பினராக இந்தியாவை சேர்க்க ஆதரவு தெரிவித்துள்ளன. இவர்கள் நமக்கு ஆதரவாக மாறியது நமக்கு கிடைத்த அங்கீகாரம் என்று நம்மை சிறுமைபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் யாருடைய அங்கீகாரத்திற்கும் கையேந்த வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இல்லை. நம்முடைய பொருளாதார பலத்தை கண்டு நம்முடன் அவர்களது உறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க முயலுகிறார்கள் என்பதே உண்மை.

இது அதீத கற்பனையோ !! மிதமிஞ்சிய கனவோ !! இந்த எண்ணம் எழத் தான் செய்கிறது.

ஏனெனில் சுதந்திரம் பெற்ற பொழுது அதளபாதாளத்தில் இருந்த, திட்டமிட்டு எழுப்ப வேண்டிய ஒரு நாட்டை பல ஆயிரம் ஆண்டு கால செழுமையான வரலாற்று போதையில், வரலாற்று புகழைப் பேசியே கோட்டை விட்டவர்கள் நாம். சுந்திரம் வாங்கும் பொழுது எங்கும் நிறைந்திருந்த வறுமையை போக்க திட்டம் தீட்ட வேண்டியவர்கள் "The Great Nation" என்று பழம் பெருமையை பேசிப் பேசியே கோட்டை விட்டனர்.

ஆனால் இன்று எங்கும் நம்பிக்கை ஒளி வீசுகிறது. சமீபத்தில் உலகின் பல நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்தியர்கள் தான் தங்கள் நாடு பொருளாதாரத்தில் பலம் பொருந்திய ஒரு நாடாக மாறும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று தெரிவிக்கிறது.

நானும் அந்த நம்பிக்கையுடன் தான் இருக்கிறேன். அந்த நம்பிக்கையில் தான் இந்த தொடரையும் தொடங்குகிறேன். இந்தியாவின் பல நிறுவனங்களும், தனி நபர்களும் கனவு காண வேண்டும். பில்லியனர்களாக கனவு காண வேண்டும். இந்தியா பொருளாதார வல்லரசாக பல ஆயிரம் பில்லியன் டாலர் பொருளாதார பலத்தை எட்ட வேண்டும்.

கனவு மெய்ப்படுமா ? கனவு மெய்ப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதா ?

இந்த சாத்தியங்கள் ஏன் இன்று தீடீர் என்று முளைத்துள்ளன ? சுதந்திரம் கிடைத்த இத்தனை வருடங்களில் நாம் ஏன் தடுமாறிக் கொண்டிருந்தோம் ? யார் அதற்கு காரணம் ? நாம் செய்த தவறுகள் என்ன ?

இதைப் பற்றி கொஞ்சம் அலசலாம் என்று தோன்றியது. அந்த எண்ணத்தின் விளைவு தான் - "பில்லியன் டாலர் கனவுகள்"

இந்த தொடரை தமிழோவியத்தில் அடுத்த வாரம் முதல் தொடங்குகிறேன். இந்த தொடரை தமிழோவியத்தில் எழுத தூண்டிய நண்பர் கணேஷ் சந்திராவிற்கு எனது நன்றி.

9 மறுமொழிகள்:

Jayaprakash Sampath said...

ஆஹா... அட்டகாசமான premise. எழுதுங்கள்.. வாசிக்கிறேன்.

9:44 AM, August 15, 2005
அழகப்பன் said...

தொடக்கமே அருமை. சுதந்திர தின சிறப்புக் கட்டுரை போன்று உள்ளது.

இந்தியா நிறைய கடன் வாங்கியிருக்கின்றது. ஒவ்வொரு குடிமகனும் சுமார் 1200 ரூபாய் கடன் பட்டிருக்கிறான் என்று என் பள்ளிப்பருவத்தில் கேள்விப்பட்டதுண்டு. ஆனா இப்ப நிலைமெயல்லாம் மாறிப்போச்சு. இன்றைய நிலை குறித்து பொருளாதார வல்லுநர்களிடம் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

நிறைய எழுதுங்கள்.... அந்த ''கனவு நாயகனுடன்'' நாமும் சேர்ந்து கனவு காண்போம்.

10:33 AM, August 15, 2005
கயல்விழி said...

நல்ல விடயம் அலசுங்கள். பல அரசியல் சமாச்சாரங்களும் அலசப்படுமோ? உங்கள் கனவு மெய்ப்படட்டும்.

12:26 PM, August 15, 2005
தருமி said...

நல்ல கருப்பொருளைக் கையிலெடுத்துள்ளீர்கள். உங்கள் காஷ்மீர் கட்டுரையைப் படித்த பிறகு, இன்னொரு தரமான கட்டுரை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. வாழ்த்துக்கள்.

எனக்கொரு ஐயம் நம் நாட்டின் வரலாற்றில் 14 - 20ம் நூற்றாண்டு வரை விழுந்த பள்ளம் பற்றி. அந்தக் கேள்விக்கு பதில் கிடைக்குமா?

12:36 PM, August 15, 2005
இராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்!

தொடருக்கான சுட்டியையும் அவ்வப்போது இங்கே கொடுங்கள்.

3:37 PM, August 15, 2005
அன்பு said...

அன்புக்குரிய சசி,

சுதந்திரதின வாழ்த்துக்கள் என்ற ஒற்றை வரியையும் - சுதந்திரம் வாங்கி என்ன கிழித்துவிட்டோம் என்ற நீண்ட் முழக்கத்தையோ கேட்டு வந்ததற்கு மாறாக... வழக்கம்போல பாராட்டத்தக்க ஒரு நல்ல விடயம் செய்கின்றீர்கள். மிக்க நன்றி, தொடருங்கள்.

7:03 AM, August 16, 2005
தமிழ் சசி | Tamil SASI said...

உங்கள் அனைவரின் வரவேற்புக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

இந்த தொடரை படித்து விட்டு விமர்சனங்களையும் அனுப்புங்கள்

7:16 AM, August 17, 2005
neyvelivichu.blogspot.com said...

ada.. sasi.. neenga neyveliyaa.. Nj la thaan irukkeen.. svishy@gmail.com kku oru mail poodunga.. santhippom..

அன்புடன் விச்சு

neyvelivichu.blogspot.com
வெற்றிகரமான நூறாவது பதிவை நோக்கி

6:05 PM, August 18, 2005