Sunday, February 05, 2006

நெய்வேலியின் 50 ஆண்டுகள்

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. மன்மோகன் சிங் நெய்வேலியில் பொன்விழா ஆண்டை நேற்று துவக்கி வைத்துள்ளார்.1956ம் ஆண்டு தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது (Neyveli Lignite corporation - NLC).நெய்வேலி உருவாகிய கதை

நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை முதலில் கண்டவர் ஜம்புலிங்க முதலியார் என்பவர் தான். இவரது நிலத்தில் 1935ம் ஆண்டு ஆழ் குழாய் கிணறுகள் தோண்ட துவங்கிய பொழுது கறுப்பு நிறத்திலான பொருள் கிடைத்தது. இதனை கறுப்பு களிமண் என்று நினைத்து அப்பொழுது யாரும் பொருட்படுத்த வில்லை. ஆனால் அது காய்ந்த பிறகு தீப்பற்றி கொண்ட பொழுது இது ஏதோ ஒரு எரி பொருள் என்று ஜம்புலிங்க முதலியார் உணர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அரசு சில நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்தப் பணியில் தாமதம் ஏற்பட்டு கொண்டே இருந்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 1943-47 இடையே பல ஆழ் குழாய் கிணறுகளை இங்கு அரசு தோண்ட துவங்கியது. கோஷ் என்பவர் தலைமையில் ஆழ் குழாய் கிணறு தோண்டும் பணி துவங்கியது. விருத்தாச்சலம், மந்தாரகுப்பம் (பழைய நெய்வேலி) பகுதிகளில் தோண்டப்பட்ட ஆழ் குழாய் கிணறுகளின் மூலம் இந்தப் பகுதியில் இருக்க கூடிய நிலக்கரி வளம் உறுதி செய்யப்பட்டது.

பல சோதனைகளுக்குப் பிறகு 1953ம் ஆண்டு நிலக்கரி தோண்டும் பணி துவங்கியது. 1955ம் ஆண்டு இது மாநில அரசிடம் இருந்து மைய அரசுக்கு மாற்றப்பட்டது,

1956ம் ஆண்டு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது.

(என்.எல்.சி இணையத் தளத்தில் ஜம்புலிங்க முதலியார் குறித்து சரியாக கூறப்பட வில்லை. என்றாலும் நெய்வேலியின் நிலக்கரி வளத்தை முதலில் அறிந்தவர் அவர் தான் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை)

இது தான் நெய்வேலியின் சுருக்கமான கதை

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்படும் முன்பு நெய்வேலியைச் சுற்றிலும் பெரும்பாலும் முந்திரி காடுகளும், வயல் வெளிகளும், பல சிறு கிராமங்களும் இருந்தன. நெய்வேலி நகரம், சுரங்கம், அனல்மின் நிலையம் ஆகியவற்றை அமைக்கும் பொருட்டு இங்கிருந்த பல கிராம மக்கள் வெளியேற்றப் பட்டனர். அவர்களின் வாழ்க்கை தேவையாக இருந்த நிலங்கள் பறிக்கப்பட்டதால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அம் மக்கள் குடியிருக்க மாற்று இடங்களை வழங்கிய என்.எல்.சி நிர்வாகம் அவர்களுக்கு உரிய நஷ்ட ஈடோ, வாழ்க்கை தேவைக்கான மாற்று ஏற்பாடோ வழங்கவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் என்.எல்.சி. வழங்கிய மாற்று இடங்களுக்கான "பட்டா" என்று சொல்லப்படும் நில உரிமை கூட அம் மக்களின் பெயர்களில் இல்லை. சுருங்கச் சொன்னால் நெய்வேலியில் குடியிருந்த மக்களை அப்படியே அகற்றி வேறு பகுதிகளில் குடிஅமர்த்தி விட்டனர். நெய்வேலியில் நிலம் எடுத்தவர்களுக்கு வேலை வழங்கும் உத்திரவாதத்தை வழங்கிய நிர்வாகம் சிலருக்கு மட்டுமே வேலை வழங்கியது. பலருக்கு வேலை வழங்க வில்லை. இதனால் பல குடும்பங்கள் ஏழ்மை நிலையில் இருக்க நேரிட்டது. நிலம் எடுத்தவர்களுக்கு வேலை என்பது மிக முக்கியமான பிரச்சனையாக பல காலமாக நெய்வேலியில் பேசப்பட்டு பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தாலும் 1990 வரை பலன்
ஏதும் ஏற்படவில்லை.இங்கிருந்த பல கிராம மக்கள் வன்னியர் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பாமக தொடங்கப்பட்ட பிறகு இந்தப் பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு பாமக தலைவர் ராமதாஸ் நேரடியாக நெய்வேலி வந்து மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினார். அதன் பிறகு என்.எல்.சி நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகளால் நிலம் இழந்த ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒருவருக்கு வேலை, நஷ்ட ஈடு போன்றவை வழங்க நிர்வாகம் ஒப்புக் கொண்டது. பலருக்கு இதன் மூலம் வேலை கிடைத்தது. பல குடும்பங்களின் பொருளாதார நிலையும் உயர்ந்தது என்று சொல்லலாம்.

நெய்வேலி தனியார் மயமாக்கப்படும் என்ற அச்சம் இங்கிருக்கும் ஊழியர்களுக்கு உண்டு. இரண்டாம் அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட் - Zero unit தனியார் மூலம் மின் உற்பத்தி பெறும் நிலை ஏற்பட்ட பொழுது இங்கு பல போராட்டங்கள் வெடித்தன.

நெய்வேலி நிர்வாகத்தில் தொழிற்சங்கங்களின் தலையீடு ஒரு காலத்தில் அதிகம் இருந்தது. தொழிற்சங்க தலைவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, நெய்வேலியில் வழங்கப்படும் வேலைகள், Apprentice போன்றவற்றில் தொழிற்சங்கங்களின் ஆதரவு பெற்றவர்களுக்கு சலுகைகள் போன்றவை நெய்வேலி தொழிற்சங்க தலைவர் பதவியை கவர்ச்சிகரமான பதவியாக, பணம் சாம்பாதிக்க கூடிய பதவியாக மாற்றி இருந்தது. தொழிற்சங்கங்களின் தேர்தல் ஒரு எம்.எல்.ஏ தேர்தல் அளவுக்கு இங்கு பிரபலமாக இருக்கும். ஆரம்ப காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சார்ந்த தொழிற்சங்கங்களுக்கே நிர்வாக அங்கீகாரம் கிடைக்கும். இதனை எதிர்த்து இடதுசாரி தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றன. பாமக, விசி போன்ற கட்சிகளின் வளர்ச்சிக்குப் பிறகு இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டது
நெய்வேலியில் பலமான தொழிற்சங்கம் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் - தொமுச தான். இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் தொழிற்சங்கம். பாமகவின் தொழிற்சங்கம் மூன்றாவது இடத்திலும், இடதுசாரிகளின் தொழிற்சங்கம், அதிமுக ஆகியவை நான்காம், ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன. முன்பு
என்.எல்.சி நிர்வாகம் முதல் ஐந்து இடம் பெறும் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கும். ஆனால் இப்பொழுது முதல் இடம் பெறும் ஒரு தொழிற்சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நெய்வேலி சார்ந்த சில விடயங்கள்
 • நெய்வேலியின் குடிதண்ணீர் - சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட பல நேரங்களில் லாரிகள் மூலம் நெய்வேலியில் இருந்து தான் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. நெய்வேலி சுரங்கத்தின் மேற்பகுதியில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றினால் தான்
  நிலத்தடி நீருக்கு கீழே இருக்கும் நிலக்கரியை எடுக்க முடியும். இவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீர் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குடிதண்ணீராக நெய்வேலியில் வழங்கப்படுகிறது. இந்த தண்ணீர் லாரிகள் மூலமாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வீராணம் குழாய் மூலமும் நெய்வேலி தண்ணீரை சென்னைக்கு கொண்டு செல்ல அரசு திட்டம் வகுத்தது.

  இது தவிர நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வெளியாகும் குடிதண்ணீருக்கு உதவாத உபரி நீர், நெய்வேலி சுற்றிலும் இருக்கின்ற நிலங்களுக்கு பாசனத்திற்குவழங்கப்படுகிறது. இதற்காக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த நிலத்தில் விளையும் நெல்லுக்கு பெரிய விலை இல்லை. காரணம் நிலக்கரி சார்ந்த தண்ணீர் என்பதால் விளையும் நெல் அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல என்ற கருத்து உள்ள. உள்ளூரில் இந்த நெல் விற்பதில்லை. வெளியூரில் விற்கிறார்கள். நெய்வேலியைச் சுற்றிலும் இருக்கின்ற பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. இது நெய்வேலியைச் சுற்றி இருக்கிற நிலங்களின் விவசாயத்தை பாதிக்கிறது. இதற்கு நெய்வேலியின் சுரங்கங்கள் தான் காரணம். நிலக்கரி எடுக்கும் பொருட்டு நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதால் எதிர்காலத்தில் நிலத்தடி நீருக்கு தட்டுபாடு இருக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுற்றுப்புறச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை உள்ளது.

 • மின்சாரம் - மின்சாரம் தயாரிக்கப்படும் நெய்வேலியிலில் மின்சாரம் மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் நெய்வேலி நிர்வாகத்தின் கீழ் இருந்த எங்கள் பகுதியில் நான் ஏழாவது படிக்கும் வரையில் மின்சாரம் இல்லை என்பது தான் ஆச்சரியம். எங்கள் வீடும், கடையும் நெய்வேலி நகரத்திற்கு (Neyveli Township) வெளியே இருக்கும் புறநகரில் உள்ளது (தாண்டவன் குப்பம்). எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் மின்சாரம் வழங்கப்படவேயில்லை. ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக எங்கள் பகுதிக்கு வந்த என்.எல்.சி நிர்வாக இயக்குனர் எம்.பி.நாரயணனிடம் வியபாரிகள் சங்க தலைவரக இருந்த என் அப்பா வழக்கம் போல மனு கொடுத்தார். மின்சாரம் தயாரிக்கும் நெய்வேலியின் ஒரு பகுதியைச் சார்ந்த வீடுகளுக்கு மின்சாரம் இல்லை என்பது புது நிர்வாக இயக்குனராக வந்த நாராயணனுக்கு அதிர்ச்சியை அளித்தது. உடனே மின்சாரம் வழங்க உத்தரவிட்டார். மின்சாரமும் உடனே வழங்கப்பட்டது. (ஒரு உத்தரவு மூலம் உடனே வழங்கப்பட்ட மின்சாரம் இத்தனை நாள் ஏன் வழங்கப்பட வில்லை ? பதில் இல்லை). எனக்கு அப்பொழுது அது மகிழ்ச்சியான ஒரு தருணம். தொலைக்காட்சி பெட்டி வாங்கலாமே என்பது தான் அந்த மகிழ்ச்சிக்கு காரணம்.

  இன்றைக்கு கூட நெய்வேலியின் நிர்வாகத்திற்கு உட்பட்ட சில குடிசைப் பகுதிகளில் மின்சாரம் இல்லை என்பது வருத்தமான உண்மை. இந்தப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களாக என்.எல்.சி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் அந்தப் பகுதிகள் பல காலமாக
  அப்படியே தான் இருந்து வருகிறது.

 • மரங்கள் சூழ்ந்த நகரம் என்று நெய்வேலி நகரத்தைச் சொல்லலாம். ஒவ்வொரு வீட்டிலும் பல மரங்கள் இருக்கும். மிக அழகான நேர்த்தியான சாலைகள் கொண்ட குட்டி நகரம் நெய்வேலி நகரம்

 • நெய்வேலியில் எழுத்தாளர்களும், இலக்கிய அமைப்புகளும் நிறைய இருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் நெய்வேலி நிர்வாகத்தின் கீழ் ஒரு நல்ல நூலகம் இயங்கி வருகிறது என்பது உண்மை. நெய்வேலியில் வாசகர்களுக்கு வசதிகள் மிக அதிகம். எனக்குக் கிடைத்த வசதி "நடமாடும் நூல் நிலையம்". ஒரு பேருந்தை நூல் நிலையமாக மாற்றி, நெய்வேலி பொது நூலகத்தில் இருந்து வெகுதூரத்தில் இருக்கும் பல் வேறு பகுதிகளுக்கும் அனுப்புவார்கள். வாரத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டுக்கு எதிரிலேயே அந்தப் பேருந்து நிற்கும். பல நல்ல எழுத்துக்களை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

  ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தக கண்காட்சி நடப்பது வழக்கம். நிறைய கூட்டம் வரும். புத்தகம் வாங்குவதை விட பக்கத்தில் இருக்கும் கேண்டீனுக்கு நிறையப் பேர் செல்கிறார்கள் என்று நான் நினைப்பேன். புத்தக கண்காட்சி என்றால் எனக்கு தெரிந்த வரையில் நெய்வேலியில் இருக்கும் அத்தனை குடும்பங்களும் வட்டம் 10க்கு ஒரு முறையாவது சென்று விடுவார்கள். ஒரு பொழுது போக்கு அவ்வளவு தான்.
தற்பொழுது நெய்வேலி பொன்விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மின்மோகன் சிங் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். இரண்டாவது சுரங்க விரிவாக்கத் திட்டம்.

இது போன்ற திட்டங்களை பார்க்கும் பொழுது அச்சமாக இருக்கும். விரிவாக்கப்படும் என்.எல்.சி க்காக ஒரு நாள் என் வீட்டை விலையாக கொடுக்க நேரலாமோ என்பது தான் அந்த அச்சத்திற்கு காரணம். ஏற்கனவே என் தாத்தாவும், பாட்டியும் அவர்களின் வீட்டை விலை கொடுத்து இருக்கிறார்கள். என் அப்பாவிற்கும் நடந்துள்ளது. நெய்வேலியில் இருந்த பலருக்கு நிகழ்ந்துள்ளது. எனக்கும் கூட ஒரு நாள் நேரலாம். எனக்கு இது பொருளாதாரம் சார்ந்து எழும் அச்சம் அல்ல. நாம் வாழ்ந்த இடத்தையும், விளையாடிய இடத்தையும் நம் சந்ததிக்கு விட்டுச் செல்லலாம். பெருமையாக சுட்டிக் காட்டலாம்.ஆனால் நம் வீட்டை இடித்து அதன் மீது எழுந்து நிற்கும் சுரங்கங்களையோ, அனல் மின் நிலையங்களையோ ஜீரணிக்க முடியாது. ஏனெனில் நாம் வாழ்ந்த வீடும், வளர்ந்த இடமும் உணர்வுப் பூர்வமான விஷயம்.
2 மறுமொழிகள்:

Badri Seshadri said...

பொதுவாகவே சோசலிச நாடு என்று சொல்லிக்கொண்டாலும் நம் நாட்டில் அரசு பொதுமக்களின் இடத்தை கையகப்படுத்தும்போது அதற்கான சரியான நஷ்ட ஈட்டை மக்களுக்குத் தருவதில்லை.

அரசின் பல்வேறு கனிம வளச் சுரங்கங்கள், மாபெரும் நீர் அணைகள் எல்லாமெ மக்கள் வயிற்றில் அடித்து அவர்களை ஓட்டாண்டியாக்கித் துரத்திவிட்டு உருவானவை.

இப்பொழுது கட்டப்படும் நர்மதா அணை, ஒரிஸ்ஸாவில் நடக்கும் கலிங்கநகர் பிரச்னை என்று எண்ணற்றவற்றை உதாரணமாகக் காட்டலாம்.

ஒட்டுமொத்தமாக மாநில, மைய அரசுகள் திருடர்களாக மட்டுமே இருப்பது ஏன் என்று எனக்கு இன்றுவரை புரிந்ததில்லை. யார் மீது தவறு? அரசாங்க அலுவலர்கள் என்னவோ தம் சொத்து பறிபோவதுபோல நஷ்டஈட்டைத் தர மறுப்பது ஏன்?

===

நெய்வேலி புத்தகக் கண்காட்சி - கூட்டம் வருமளவுக்குப் புத்தகங்கள் விற்பதில்லை. ஆனாலும் சென்னையல்லாத பிற பெரிய நகரங்களில் நடக்கும் கண்காட்சிகளுடன் மிகச்சிறிய நகரமான நெய்வேலி்யின் விற்பனை ஒப்பிடத்தக்கது.

5:13 AM, February 05, 2006
விருபா - Viruba said...

நெய்வேலியில் சில பதிப்பகங்களே உள்ளன. சிலருடன் பேசியதில் 10 பதிப்பகங்கள் வரையில் வரும் என்று தோன்றுகிறது.

ஆனந்தம் பதிப்பகம் பற்றியதகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

விரைவில் மற்றைய பதிப்பகங்களுடனான சந்திப்பிற்கு பின்னர் மேலதிக தகவல்கள் கிடைக்கலாம்.

6:21 AM, February 05, 2006