விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையான்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதான ஒரு கருத்து இந்திய ஊடகங்களால் பல காலமாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது.
விடுதலைப் புலிகளுக்கு ஏதிரான இவ்வாறான கருத்துக்கள் பல நிலைகளில் முன்வைக்கப்படுகிறது
- விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் இலங்கையில் அமெரிக்க படைகள் நுழையும். அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்
- தமிழ் ஈழம் அமைந்தால் தமிழ்நாட்டை விடுதலைப் புலிகள் பிரித்து ஒரு அகன்ற தமிழ் தேசத்தை உருவாக்க நினைப்பார்கள் அல்லது சுதந்திர தமிழ் ஈழம் அமைந்தால் அதன் பாதிப்பால் இங்குள்ள தனித் தமிழ் இயக்கங்கள் தனி நாடு கோருவார்கள்
- ராஜீவ் காந்தியின் படுகொலை
1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு, கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்ட போதிலும் இந்த வாதங்கள் மட்டும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த உளுத்துப் போன வாதங்கள் தவிர புதிதாக சில வாதங்களும் தற்பொழுது சேர்ந்து கொண்டுள்ளன.
- விடுதலைப் புலிகளின் புதிய விமானங்கள், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன
- புலிகள் சமர்ப்பித்துள்ள - ISGA (Interim Self Governing Authority) எனப்படும் இடைக்கால நிர்வாக அமைப்பின் சரத்துப் படி இந்துமகா சமுத்திரத்தில் மூன்றாவது கடற்படையாக புலிகளின் கடற்படை உருவாவது நீண்ட கடற்கரையுடைய இந்தியாவின் பாதுகாப்பிற்க்கு அச்சுறுத்தலாக அமையும்
இந்த வாதங்களில் எந்தளவிற்கு உண்மையிருக்கிறது ? இந்த வாதங்களின் படி இந்தியாவின் பாதுகாப்பிற்கு புலிகள் உண்மையில் அச்சுறுத்தலாக இருக்கிறார்களா ? அல்லது தமிழ் ஈழம் அமைவதை விரும்பாத சில பத்திரிக்கைகள்/குழுக்கள் இந்த வாதங்களை பல ஆண்டுகளாக தொடர்ந்து அப்படியே பராமரித்து வருகிறார்களா ?
இது பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்தாலும், இந்த Thanks Giving விடுமுறையில் தான் அதற்கான நேரம் கிடைத்திருக்கிறது.
1987க்குப் பிறகு உலக அரசியலில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன. குறிப்பாக பனிப்போர் முடிவிற்கு வந்து உலக வரைப்படத்தில் இருந்து சோவியத் யுனியன் காணாமல் போனது. இரு வல்லரசுகளுக்கும் அதனைச் சார்ந்த சார்பு நாடுகளுக்கும் இடையே இருந்த பகையுணர்வு குறைந்து பரஸ்பரம் நட்புறவை வளர்த்துக் கொள்ள அனைத்து நாடுகளும் முனைந்தன. போரும், ஆயுதக்குவிப்பிற்குமான முக்கியத்துவம் குறைந்து நாடுகளிடையே நட்புறவும், பொருளாதார வர்த்தக உறவும் முக்கியத்துவம் பெற்றன.
குரூட்டுதனமாக சோவியத் பாணி பொருளாதாரத்தை நேரு தொடங்கினார் என்ற ஒரே காரணத்திற்கு விடாப்பிடியாக பற்றி வந்த காங்கிரஸ், நரசிம்மராவ் தலைமையில் அதனை 1991ல் மாற்றியது. பொருளாதாரம் தளர்த்தப்பட்டது.
இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளிலும் 1991ல் சோவியத் யுனியன் சிதறுண்ட பிறகு பெரிய மாற்றம் ஏற்பட்டது.
பனிப்போர் காலத்தில் அணிசேரா நாடு என்ற முகமூடியை இந்தியா அணிந்திருந்தாலும் உண்மையில் சோவியத் யுனியனின் மிக நெருங்கிய நட்பு நாடாக தான் இந்தியா செயல்பட்டது. எனவே இயல்பாக பல நேரங்களில் அமெரிக்காவிற்கு எதிராகவும் சோவியத் யுனியனிற்கு ஆதரவாகவுமே இந்தியாவின் கொள்கைகள் அமைந்தன. இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட சமயத்தில் இலங்கை உலக இராணுவ மையத்தில் கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாக விளங்கியது. தெற்காசியாவில் தன் இரணுவத்தை நிலை நிறுத்திக் கொள்ள அமெரிக்காவிற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. எங்கே இலங்கையில் அமெரிக்கப் படைகள் நுழைந்தால் தன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேருமோ என்று எண்ணி இந்தியப் படை அமைதி காக்கும் படையாக இலங்கையில் நுழைந்தது. அதன் பிற்கு நடந்தது ஒரு சோசகமான வரலாறு.
1991க்குப் பின் இந்தியா மிகவும் நம்பியிருந்த சோவியத் யுனியன் சிதறுண்டது, இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு ஒரு புதிய திசையை கொடுத்தது. சோவியத் யுனியன் போதையில் மறந்து போய் இருந்த நாடுகளிடம் உறவை இந்தியா புதுபிக்கத் தொடங்கியது. அதே சமயத்தில் இந்தியாவின் அணு ஆயுத பலம் மற்றும் இரணுவ பலத்துடன் பொருளாதார பலமும் கைசேர பில் க்ளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த பொழுது, இந்தியாவுடன் அமெரிக்காவின் உறவை வளர்க்கத் தொடங்கினார்.
இது தவிர அமெரிக்கா சீனாவை தனக்கு எதிர்கால போட்டியாக கருதுகிறது. சீனாவின் பலத்துடன் மோத வேண்டுமானால் ஆசியாவில் அதற்கு ஒரு நட்பு நாடு தேவைப்பட்டது. சீனாவுடன் பொருளாதாரம் மற்றும் இராணுவ பலத்தில் ஆசியாவில் போட்டியிடக்கூடிய ஒரே நாடு இந்தியா தான். எனவே இந்தியாவுடன் பொருளாதார ரீதியில் மட்டுமில்லாமல் இராணுவ ரீதியிலும் தன் உறவை அமெரிக்கா வளர்த்துக் கொள்ள தொடங்கியிருக்கிறது. பல இராணுவ தளவாடங்கள், அணு ஆயுத ரீதியிலான ஒத்துழைப்பு, அணு ஆயுத எதிர்ப்பு ஏவுகணைகள் (Anti Nuclear Missile system) விற்பனை போன்ற எண்ணற்ற இராணுவ உதவிகளை இந்தியாவிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் அமெரிக்கப் படைகள் தெற்காசியாவில் நுழைவதை தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதி வந்த இந்தியா, இன்று அமெரிக்கப் படைகளுக்கு இந்தியாவிலேயே இடமளிக்க தொடங்கியிருக்கிறது.
அமெரிக்கப் படைகள் இந்தியப் படைகளுடன் ப்ல பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் இந்திய விமானப்படையும், அமெரிக்க விமானப்படையும் கூட்டதாக போர் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அமெரிக்கப் படைகள் இந்தியாவில் பயிற்சி அளித்தது தவிர இந்தியாவில் இருந்து ஒரு குழு அலாஸ்கா சென்று மேலும் பயிற்சிகளில் ஈடுபட்டது.
அமெரிக்க, இந்திய இராணுவ ஒத்துழைப்பு மிக முக்கியமான ஒரு நிலையை அடைந்திருக்கிறது. சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார பலத்தை எதிர்கொள்ள இந்தியாவை உற்ற நேச நாடாக அமெரிக்கா தற்பொழுது அங்கீகரித்திருக்கிறது. இதனால் தான் இரானுக்கு எதிராக International Atomic Energy Agency கூட்டத்தில் இந்தியா வாக்களித்தது. இந்தக் கூட்டத்தில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் வாக்களிப்பில் பங்கு பெறாமல் நடுநிலை வகித்தன. கடந்த காலங்களில் ரஷ்யாவை சார்ந்தோ அல்லது நடுநிலை வகித்தோ செயல்பட்டுவந்த இந்தியா இம் முறை அமெரிக்காவின் உற்ற தோழனாக மாறி அமெரிக்கா சார்பு நிலையை எடுத்தது.
கடந்த சில ஆண்டுகளாக செய்திகளில் அதிகம் அடிபடாமல் இந்தியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளும் இரணுவ ஒத்துழைப்பு வியப்பை அளிக்கிறது. இந்தியா தவிர ஆசியாவின் பிற இடங்களில் இந்தியாவும், அமெரிக்காவும் தங்கள் இராணுவ ஒத்துழைப்பை அதிகப்படுத்தி வருகின்றன. மலாக்கா நீரிணையில் இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகள் கூட்டாக ரோந்து மற்றும் இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன. இப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் இந்தியாவை சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டுள்ளது.
பனிப் போர் காலத்தில் இலங்கை விஷ்யத்தில் அதிக அக்கறை காட்டிய இந்தியா தற்பொழுது இப் பிரச்சனையில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கொள்ளாமைக்கு முக்கிய காரணம், அமெரிக்காவால் தனக்கு இந்தப் பிராந்தியத்தில் அச்சம் இல்லை என்பது தான். தன்னுடைய நலனுக்கு பிரச்சனையில்லாத பொழுது இலங்கையின் உள்விவகாரத்தில் தேவையில்லாத தலையீட்டையும் இந்தியா விரும்பவில்லை.
1980களில் அமெரிக்காவுடனும், பிரிட்டனுடனும் இணைவதாக பூச்சாண்டிக் காட்டிய இலங்கை, தற்பொழுது அது பற்றியெல்லாம் பேசாமல், இந்தியாவுடன் இராணுவ ஒத்துழைப்பை வேண்டுவது கூட இந்தியாவை தன் சார்பாக தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி தான்.
இன்று அமெரிக்கா இலங்கையில் நுழைந்தால் கூட இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காது என்றே கருதப்படுகிறது (நான் மட்டும் சொல்ல வில்லை. ஆசியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் பற்றி ஒரு முறை கட்டுரை எழுதிய ஹிந்துவும் இதைத் தான் தெரிவிக்கிறது).
சுனாமிக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் முதன் முறையாக இலங்கை, மாலத்தீவு போன்ற தெற்காசிய நாடுகளில் நுழைந்த பொழுது இந்தியா அதனை வரவேற்கவே செய்தது. இந்தியாவிலேயே அமெரிக்க படைகள் இருக்கும் பொழுது, இலங்கையில் அமெரிக்கப் படைகள் நுழைவதால் என்னப் பிரச்சனை ஏற்படப் போகிறது ?
இவ்வாறான நிலையில் 1987ல் கூறப்பட்ட அதே உளுத்துப் போன வாதத்தை கூறி இந்தியா தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்க கூடாது என்று கூறுவது படு அயோக்கியத்தனமான நிலைப்பாடாக தான் நான் நினைக்கிறேன்.
அது போலவே ராஜீவ் காந்தியின் படுகொலை என்ற ஒரே கண்ணாடியை கொண்டு ஈழப் பிரச்சனையை அணுகுவதும் முறையானது அல்ல என்பது எனது கருத்து.
இந்தியாவில் நிகழ்ந்த சோகமான மூன்று படுகொலைகள் - மகாத்மா காந்தி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைகள்
இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றான் என்பதற்காக சீக்கிய இனத்தையே நாம் பலிவாங்கி விடவில்லை.
அது போல காந்தியை கொன்ற RSS இயக்கம் அதன் அரசியல் Proxy பா.ஜ.க மூலமாக இந்தியாவை ஆட்சி செய்து விட்டது. மகாத்மா காந்தியை படுகொலை செய்த சதியில் சம்மந்தப்பட்டவரான வீர்சர்வார்காரின் படம் இந்தியப் பாரளுமன்றத்தில் மகாத்மா காந்தியின் படத்திற்கு எதிராகவே ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும் கொடுமையெல்லாம் இந்த நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ராஜீவ் காந்தியின் படுகொலையை கடந்து ஒரு இனத்தின் விடுதலை, அம் மக்களின் வாழ்க்கை என்ற நோக்கில் பிரச்சனையை அணுகவேண்டும்.
ஒரு நாட்டின் வரலாற்றிலோ, இயக்கத்தின் வரலாற்றிலோ மாற்றங்களும், பரிணாம வளர்ச்சிகளும் ஏற்படத்தான் செய்கின்றன. புலிகளின் வளர்ச்சியை நோக்கும் பொழுது கூட ஒரு சிறு கூட்டம், கொரில்லாப் படை, மரபு சார்ந்த படையாக வளர்ச்சிப் பெற்றது போன்ற நிலைகளை கடந்து இன்று ஒரு அரசியல், இராணுவ இயக்கமாக மாறியிருக்கிறார்கள். ஒரு தேசத்தின் உள்கட்டமைப்பை தனி அமைப்பாக இருந்து நிறுவி முன்னேறி இருக்கிறார்கள்.
காத்ரீனா போன்ற இயற்கை சீற்றங்களில் அமெரிக்கா போன்ற நாடுகளே சரியான நிவரணப் பணிகள் மேற்கொள்ளாமல் தாமதமாகத் தான் நிவாரணப் பணிகளை துவங்கியது. ஆனால் சுனாமிக்குப் பின் சில மணி நேரங்களில் புலிகள் மேற்க்கொண்ட நிவாரணப் பணிகளை உலக நாடுகள் கவனிக்க தவறவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை கொண்டே கொள்கைகளை ஒரே நோக்கில் வைத்திருக்க முடியாது. மாறிவரும் உலக நிலைக்கேற்ப கொள்கைகள் மாற்றம் பெற வேண்டும். இந்தியாவில் எண்ணற்ற குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி மனித உயிர்களையும், பொருளாதார சேதங்களையும் விளைவித்த பாக்கிஸ்தானுடன் கைகுலுக்க முடியும் என்றால் புலிகளிடமும் நிச்சயமாக கைகுலுக்க முடியும்.
கைகுலுக்க முடியாவிட்டால் குறைந்தபட்சம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்காமல் இருக்கலாம். ஏனெனில் தமிழீழ மக்களிடம் மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் மூலமாக இந்தியாவிற்கு தொப்புள் கொடி உறவு இருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவிற்குமான பிரச்சனைகளாக சிண்டு முனையப் படும் மேலும் சில பிரச்சனைகள் பற்றியும், தமிழீழம் அமைவதால் இந்தியாவிற்கு என்ன நன்மைகள் ஏற்படும், பாதகம் ஏற்படும் வாய்ப்பு உண்டா என்பது பற்றியும் அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்
Leia Mais…