Friday, February 03, 2006

தேர்தல் களம் : ஊடகங்களின் பங்களிப்பு

தேர்தல் நேரங்களில் பத்திரிக்கைகளின் சர்குலேஷன் அதிகமாக இருக்கும். தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆனால் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் கொடுக்கப்படும் செய்திகளில் ஆரோக்கியமில்லாத சூழ்நிலை நிலவுகிறது.

இரு முக்கியமான தொலைக்காட்சிகளும் இரு திராவிட கட்சிகளின் கைகளில் உள்ளதால் தொலைக்காட்சிகள் பிரச்சாரம் செய்யும் இடங்களாக மாறி விட்டன. NDTV நிறுவனம் முன்பு விஜய் தொலைக்காட்சியில் வழங்கிய செய்திகள் மிகச் சாதாரணமாக தான் இருந்தன. அதனுடைய ஆங்கில செய்திகளில் கொடுக்கப்பட்ட தரம் தமிழ் செய்திகளில் இல்லை. ஆனாலும் நடுநிலையான செய்திகளைப் பார்க்க அந்த தொலைக்காட்சி உதவியது. விஜய், ராஜ் தொலைக்காட்சிகளில் செய்திகள் நிறுத்தப்பட்டு விட்டதால் அந்த வாய்ப்பும் இப்பொழுது இல்லாமல் போய் விட்டது. நடுநிலையான தொலைக்காட்சி செய்தியை பார்க்க முடியாத நிலை தான் தமிழகத்தில் உள்ளது.

தொலைக்காட்சிகளில் தான் இந் நிலை என்றால் பத்திரிக்கைகளிலும் இதே கதை தான். தினமலரின் ஊடக வன்முறையும், சார்பு நிலையும் உலகறிந்த கதை. தினத்தந்தி குறித்து எதுவும் சொல்வதற்கில்லை. தினகரனை பொது ஜன பத்திரிகையாக சொல்ல முடியாது. திமுக வின் பிரச்சார பத்திரிக்கையாகவே அது செயல்பட்டு வந்திருக்கிறது. தினமணியை மட்டுமே நடுநிலையான பத்திரிக்கையாக கூற முடியும். ஆனால் தினமணியின் தரம் படிப்படியாக குறைந்து போய் விட்டது. தினமணிக்கு அழகை கொடுத்த தினமணிக் கதிர் அதனுடைய தரத்தில் இருந்து எப்பொழுதோ சரிந்து போய் விட்டது. அது தவிர தினமணி பரவலான வாசகர்களால் படிக்கப் படுவதில்லை.

வட இந்தியாவின் NDTV போன்ற செய்தி தொலைக்காட்சிகள் தமிழகத்தில் இல்லாமை மிகப் பெரிய குறை. NDTV தொலைக்காட்சிகளில் வட இந்திய செய்திகள், வட மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து அலசும் அளவுக்கு தமிழக அரசியல் சூழ்நிலைப் பற்றி அலசப்படுவதில்லை. நான் பார்த்த வரையில் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலைக் குறித்து தெளிவாக தெரிந்த செய்தியாளர்கள் அங்கு இல்லை. மும்மையில் இருந்து மகாராஷ்டிரா செய்திகளை அலசும் ஸ்ரீனிவாசன் ஜெயின் போன்ற செய்தியாளர்கள் போன்று தமிழக அரசியல் சூழ்நிலையை NDTV அலசுவதில்லை. NDTV தமிழகத்தில் உள்ள நிலைப் பற்றி கருத்து கேட்க அடிக்கடி சோ போன்ற சார்பு நிலை பத்திரிக்கையாளர்களை தான் நடுநிலை பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் அழைக்கிறார்கள். தமிழகத்தில் வேறு சொல்லும்படியான பத்திரிக்கையாளர்களின் பெயர்கள் அவர்களுக்கு தெரியவில்லையா என்பது புரியவில்லை.

பொதுவாக "there is a huge disconnect between the mass media and the mass reality" என்று இந்திய ஊடகங்கள் குறித்து கடந்த தேர்தலின் முடிவில் விமர்சனம் எழுந்தது. மக்களின் உணர்வுகளை ஊடகங்கள் சரியாக கொண்டு வருதில்லை என்பதே அந்த விமர்சனம். இந்திய ஊடகங்கள் பரபரப்பான செய்திகளையே படம் பிடித்து அந்தச் செய்திகள் தான் நாட்டின் முக்கியமான தலையாய பிரச்சனை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தன. ஆனால் பெரிய நகரங்களிலோ, சில இடங்களிலோ நடக்கும் நிகழ்ச்சிகள் எங்கோ குக்கிராமத்தில் இருக்கும் மக்களை பாதிப்பதில்லை. அவர்களின் அன்றாட பிரச்சனைகள், உள்ளூர் பிரச்சனைகள், வாழ்க்கை தேவைகள் இவை தான் தேர்தலில் கட்சிகளின் வெற்றி தோல்விகளை முடிவு செய்கின்றன.

தமிழகத்தில் ஊடகங்களுக்கும், வெகுஜன மக்களுக்கும் இடையே இருக்கின்ற இடைவெளி அதிகமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இது வரை தமிழகத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள் எல்லாம் தவாறாகவே போய் இருக்கின்றன. 1998ம் ஆண்டு நடந்த பாரளுமன்ற தேர்தலில் திமுக-தாமாக கூட்டணி வெற்றி பெறும் என்று அனைத்து ஊடகங்களும் எழுதின. ஆனால் அந்த தேர்தலில் ஜெயலலிதா அமைத்த அதிமுக-பாஜக-மதிமுக-பாமக கூட்டணி வெற்றி பெற்றது. தங்களின் இந்தக் கருத்து கணிப்பு தோல்வியை ஊடகங்கள் அப்பொழுது ஓப்புக்கொள்ளவே இல்லை. அப்பொழுது நிகழ்ந்த கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு தான் திமுக கூட்டணி

தோல்விக்கு முக்கிய காரணம் என்று ஊடகங்கள் நம்பின. கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு கோயம்புத்தூரில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நெய்வேலியில் வேலை செய்யக்கூடிய சாதாரண ஊழியருக்கோ, பண்ருட்டி வயல்களில் வேலை செய்யும் சாமானிய மக்களுக்கோ எந்த வகையில் அது அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்க கூடும் என்பது எனக்கு விளங்கவில்லை. பிற இடங்களில் இருக்கும் சாமானிய மக்களுக்கு குண்டுவெடிப்புகள் ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இது போன்றே கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்து இருந்தன. திமுக ஆட்சியில் ஊழல் இல்லை. அதனால் திமுக மறுபடியும் வெல்லும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்மாறாக அதிமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணி வெற்றி பெற்றது. இதனையும் ஊடகங்கள் சரியாக கணிக்கவில்லை. அப்பொழுது நிலவிய மக்களின் மொளனப் புரட்சி ஊடகங்களால் வெளிக்கொணரப்படவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இந்தியாவெங்கும் இதே நிலை தான். "இந்தியா ஒளிர்கிறது" என்ற கோஷத்துடன் தேர்தலை சந்தித்த பாஜகவிற்கு ஊடகங்களும் ஜால்ரா போட்டன. இந்திய பொருளாதாரத்தின் உயர்வு, பங்குச் சந்தையின் வளர்ச்சி போன்றவை தங்களின் சாதனைகளாக பாஜக கூறியது. ஆனால் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியோ, பங்குக் குறியீடுகளின் உயர்வோ எங்கோ கிராமத்தில் குடி தண்ணீருக்காக பல மைல்கள் அலைய வேண்டிய இந்திய கிராம மக்களுக்கு எந்த வகையில் நன்மை அளிக்கும் என்பது குறித்து ஊடகங்கள் யோசிக்காமல் போனது தான் ஆச்சரியம்.

மக்களின் நாடி துடிப்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள், செய்திகளை அலசி ஆராய்ந்து எழுதாமல் வெகுஜன பரபரப்பு சிந்தனையுடனே தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள முனைந்து வருகிறது. தங்களுடைய பத்திரிக்கைகளின் விற்பனையை அதிகரிக்கும் எண்ணத்தில் சிறு பங்கு கூட கொடுக்கப்படும் செய்திகள் குறித்த அக்கறை இல்லாமல் வெளியிடப்படுகின்றன. இவை தவிர சார்பு நிலை ஊடகங்களாக சில அரசியல் கட்சிகளை, அமைப்புகளை ஆதரித்து செய்தி வெளியிடும் போக்கும் வெகுஜன ஊடகங்களில் பெருகி வருகின்றன.

கடந்த பாரளுமன்ற தேர்தலின் பொழுது ரஜினி-ராமதாசின் மோதலே தமிழகத்தின் தலையாய பிரச்சனை என்பன போன்று பல ஊடகங்கள் தலைப்பு செய்தி வாசித்தன.

ரஜினியின் பேட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். ஊருக்கு சில ரசிகர் மன்றங்கள் இருக்கும் ரஜினிக்கு மக்கள் பலம் இருப்பதாக எந்த வகையில் நம்பப்பட்டது என்பது புரியவில்லை. எம்.ஜி.ஆர் எப்படி மக்கள் சக்தி மிக்கவராக உயர்ந்தார் என்பது குறித்து கூட ஆராயாமல் வெறும் சினிமா காரணமாக மட்டுமே எம்.ஜி.ஆர் உயர்ந்தார் என்று கூறுவது வரலாற்று தவறு என்பது கூட ஊடகங்களுக்கு விளங்காமல் போனது தான் ஆச்சரியம். ஒரு மிகப் பெரிய இயக்கத்தை தன் வசீகரத்தால் பிளவு படுத்தி, அந்த இயக்கத்தின் பலத்தை கொண்டு தான் எம்.ஜி.ஆர் உயர்ந்தாரே தவிர எங்கோ ஓளிந்து கொண்டு இருந்து விட்டு திடீரென்று மக்களை தன் பக்கம் வசீகரீத்து விட வில்லை. இப்பொழுது ரஜினியை விட சற்று பலம் குறைந்தவராக ஊடகங்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட விஜயகாந்த்தை பெரிய கட்சிகளின் ஓட்டுகளை பிளக்க கூடிய வல்லமை மிக்கவராக சில ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகின்றன.

இந்த நிலையில் தான் வெகுஜன ஊடகங்களை தவிர்த்த மாற்று ஊடகங்களின் வளர்ச்சி முக்கியமானதாகப் படுகிறது. சில ஆங்கில வலைப்பதிவுகளில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் சில நேரங்களில் யோசிக்க வைக்கின்றன. வெகுஜன ஊடகங்களில் கூட அத்தகைய சிந்தனைகள் எழுப்பபட்டதாக தெரியவில்லை. தேவ கவுடா - இன்போசிஸ் நாராயணமூர்த்தி மோதலில் கூட எல்லா ஊடகங்களும் ஒரே பல்லவியை பாடிக் கொண்டு இருக்க, இன்போசிஸில் நாராயணமூர்த்தி குறித்து சில
வலைப்பதிவுகளில் வைக்கப்பட்ட விமர்சனங்கள் யோசிக்க வைத்தன.

வலைப்பதிவுகள் மாற்று ஊடகங்களாக முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் இவற்றில் முன்வைக்கப்படும் பல சிந்தனைகள் வெகுஜன ஊடகங்களில் காணப்படாத ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஆனால் தமிழ் வலைப்பதிவுகளில் இன்னும் அவ்வவறான நிலை ஏற்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இந்த தேர்தல்களிலும் கடந்த தேர்தல் போலவே ஊடகங்கள் தங்களுடைய நிலையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் அரைத்த மாவையோ அரைப்பது, ஸ்டீரியோடைப்பாக எந்த பத்திரிக்கையில் எந்த மாதிரியான செய்திகளை எழுதுவார்கள் என்பது கணிக்க கூடியதாக இருப்பது, அலுப்பையே ஏற்படுத்துகிறது.

6 மறுமொழிகள்:

மு. சுந்தரமூர்த்தி said...

தமிழ் ஊடகங்களை நினைத்து பரிதாபப்படுவதா அவற்றை நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் நம்மைப் பார்த்து பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை. தனியார் தொலைகாட்சி என்ற பூதம் புறப்படும் முன்னரே ஊரைவிட்டு வெளியேறி விட்டேன் என்று நினைத்தால் விடாமல் துரத்தி இங்கே வந்து சனி (ஞாயிறு)பிடித்துக்கொண்டது. எப்போது தொகா பெட்டியைத் சொடுக்கினாலும் ஏதோ ஒரு நடிகரோ நடிகையோ தான் தோன்றுகிறார். ஏதாவது விசேஷ நாட்களில் கேட்கவே தேவையில்லை. பொங்கலன்று நாட்டுப்புற உழவர்கள் வாழ்வை காட்டவேண்டுமென்றால் நடிகர்களுக்கு வேஷம் போட்டுத் தான் காட்டவேண்டும் என்று இவர்களுக்கு யார் சொன்னார்களோ தெரியவில்லை.

ரஜனி-பாமக லடாய் பற்றி திண்ணையில் எழுதிய கட்டுரை என் பதிவில்.

11:12 PM, February 03, 2006
Boston Bala said...

How do you compare the Indian/TN media with the US/western media? Since, I want to understand your baseline of bias, variety fare, judicial mix, conventions and principles it will be helpful.

What about the middle mags which stand apart from the MSM? They have quality but not much to boast of in circulation.

---தமிழகத்தில் வேறு சொல்லும்படியான பத்திரிக்கையாளர்களின் பெயர்கள் ---

I am interested in knowing your choices :-) If U can pick & choose 4/5 panelists, who will they be?

---நாராயணமூர்த்தி குறித்து சில
வலைப்பதிவுகளில் வைக்கப்பட்ட விமர்சனங்கள் ---

இதெல்லாம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாதா? நீங்கள் பெற்ற செவிச்செல்வத்தை நாங்களும் பயன்பெறுவோமே :-)

Small digression/self-promotion/trackback :-) 2005-இல் ஊடகங்கள் - அலப்பல், ஆலோலம், அரற்றல்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் பொய்த்துப் போனது. அட்லாண்டிக் மந்த்லி மற்றும் சில டெமோக்ரடிக் சார்பு நிலை உள்ள பத்திரிகைகள் தவிர மற்ற எதுவுமே ஓஹையோ வாக்கு குளறுபடிகளை வெளிச்சம் போடவில்லை. அமெரிக்காவில் இருப்பதால் இவை பகிரங்கமாக விளங்குகிறது. இந்தியாவில் இருந்ததால் ஊடகங்களின் 'மண்டே சிண்ட்ரோம்' போன்ற புத்தம்புதிய பிரச்சினைகளை மட்டும் கவனிப்பது 70எம்.எம் போல் பெரிதாகத் தோன்றுகிறது.

1:56 AM, February 04, 2006
Vaa.Manikandan said...

//ரஜினியின் பேட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். ஊருக்கு சில ரசிகர் மன்றங்கள் இருக்கும் ரஜினிக்கு மக்கள் பலம் இருப்பதாக எந்த வகையில் நம்பப்பட்டது என்பது புரியவில்லை//

இந்த கூற்றை எல்லோரும் திரும்பி படியுங்கள். சசி எந்த ஊரு சென்னைதானே? இதோ வாறோம்.

9:25 AM, February 04, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

சுந்தரமூர்த்தி,

ஊடகங்களின் இந்தப் போக்கில் மாற்றம் வரும் என்று நான் நம்பியிருந்தேன். ஆனால் இது வரையில் பெரிய மாற்றம் ஏதும் வரவில்லை. மெகா சீரியல், நடிகர்களை கொண்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகள் தவிர வேறு உருப்படியான நிகழ்ச்சிகள் ஏதும் வருவதில்லை

உங்கள் கட்டுரையை ஏற்கனவே படித்திருக்கிறேன். சுட்டிக்கு நன்றி

11:48 AM, February 04, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

பாலா,

இந்திய/தமிழக ஊடகங்களின் சார்பு நிலையை விளக்க ஏதாவது ஒன்றை அடிப்படையாக கொண்டு தான் எழுத வேண்டும் என்பது இல்லை.

இந்தியாவில் இருக்கும் பிற ஊடகங்கள் அளவுக்கு கூட தமிழக ஊடகங்களில் ஆரோக்கியமான செய்தி அலசல்கள் கிடையாது. நீங்கள் தினமலரை படிக்கும் பொழுது எவ்வளவு தூரம் உண்மை செய்திகள் உள்ளன, புருடா உள்ளது என்பது தெளிவாக விளங்கும். அவ்வாறே சன் டீவி மற்றும் பிற ஊடகங்களும்.

I don't need to have a baseline to have my own perception.

NDTV invited only Chou for a discussion about Sankaracharya arrest. It's a joke to have chou as the only panelist for these kind of discussion

1:16 PM, February 04, 2006
Gopalan Ramasubbu said...

I always believe that these opinion polls conducted by News media is not people's opinion,it's the opinion of the Editor and the party his organisation supports.one good example is 2001 assembly election.

Vikatan's opinion poll results said DMK and their caste based party alliance will win more than 200 seats .We all know what happened.And still Vikatan claims that they are Tamil makkalin Nadi thudipu.

One of my friend who's from well known print media said Vikatan group involved in TV tele-serial production and they write in favour of DMK to get a slot in SUN tv.Since then i'm watching Vikatan closely ,i guess Vikatan is another modified form of DMK's Sangkoli.

7:25 AM, February 05, 2006