Thursday, March 09, 2006

தமிழக அரசியலில் கொள்கைகள்

தேர்தல் நேரம் வந்தாலே கொள்கைப் பற்றியப் பிரச்சனையும் வந்து விடுகிறது. ஒரு கூட்டணியில் இருந்து மற்றொரு கூட்டணிக்கு தாவும் அரசியல் தலைவர்களின் கொள்கைகள் குறித்து கடுமையாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்படும். சென்ற சில தேர்தல்களாக டாக்டர் ராமதாஸ் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு தாவுவது குறித்து விமர்சனங்களும், கேலியும், நையாண்டியும் பிரபலமான பத்திரிக்கையில் தொடங்கி வலைப்பதிவு வரை அரங்கேறியது. ராமதாஸ் பத்திரிக்கைகளின் விமர்சனங்கள் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல், ஒவ்வொரு முறை கூட்டணி தாவும் பொழுதும் அதிக தொகுதிகள் பெற்று மைய அமைச்சரவையில் சாதாரண துணை அமைச்சர் தொடங்கி காபினட் அமைச்சர் வரை தன் கட்சியை நிலை நிறுத்திக் கொண்டார். இப்பொழுது ராமதாஸ் அணி மாறுவது ஒரு சாதாரண நிகழ்வாகி விட்டது. பத்திரிக்கைகளின் விமர்சனங்களையோ, பிற எதிர்ப்புக்களையோ ராமதாஸ் அதிகம் கண்டுகொள்வதும் இல்லை. ராமதாசின் கொள்கைகள் பற்றியும் இப்பொழுது யாரும் அதிகம் பேசுவதில்லை

ஆனால் இம்முறை இந்தச் சுழற்ச்சியில் சிக்கிக் கொண்டவர் வைகோ. வைகோ நிறைய யோசித்தார். என்னவோ அவர் கொள்கையுடன் இருந்தால் அவரை தமிழக முதலமைச்சராக தமிழக மக்கள் உட்கார வைத்து விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தாரா அல்லது எதிர்கால தமிழக ஆளுங்கட்சியாக அமர கொள்கைவாதியாக இருக்க வேண்டும் என நினைத்தாரா தெரியவில்லை. பலமாக யோசித்தார். அவர் ஒவ்வொரு நாளும் யோசித்துக் கொண்டே இருக்க, வைகோ எங்கே திமுகவுடன் தங்கி விடுவாரோ என்ற "எரிச்சலில்" இருந்த "சில" பத்திரிக்கைகள், இணையத்தில் இருக்கும் "சில" குழுக்கள் எல்லாம் வைகோ அணி தாவியவுடன் கொள்கை என்னவாயிற்று, அரசியல் நேர்மை என்னவாயிற்று எனக் கூக்குரலிட தொடங்கி விட்டனர்.

இங்கு கொள்கைகள் வைகோவிற்கும், திருமாவுக்கும் தான் அதிகம் போதிக்கப் படுகிறது. ஆனால் ஜெயலலிதாவின் கொள்கைகள் பற்றி யாரும் பேசுவதில்லை.

தமிழ் மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள், எனக்கு கூட்டணி தேவையில்லை என சூளுரைத்த "அம்மா", கூட்டணிக் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு யாராவது வரமாட்டார்களா என்று காத்துக் கிடந்த நிகழ்வுகள் பற்றி இந்தப் பத்திரிக்கைகளும், குழுக்களும் ராஜதந்திரம் என்று தான் எழுதிக் கொண்டிருந்தனவே தவிர அம்மாவின் பரிதாப நிலைப் பற்றியோ, அவரின் கொள்கைகள் பற்றியோ எழுதவேயில்லை.

இந்தியத் திருநாட்டின் இறையாண்மையை காக்கப் பிறந்த ஜெயலலிதா, "பயங்கரவாதி" வைகோவை பொடா சட்டத்தில் உள்ளே தள்ளி இந்திய இறையாண்மையை காப்பாற்றிய அரும் பெரும் காரியத்தைச் செய்தவர். இந்திய இறையாண்மையை காப்பாற்ற ஜெயலலிதா செய்த இந்த மகத்தான காரியத்திற்காக ஒரு பிரபலமான அரசியல் "விமர்சகர்" ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போடுங்கள் என அவரின் வாசகர்களுக்கு பரிந்துரை செய்தாராம். அவ்வாறு இந்திய இறையாண்மையை காத்து நின்ற ஜெயலலிதா ஒரு "பயங்கரவாதியை" தன் கூட்டணியில் கொண்டு வருவதற்காக தமிழகத்தின் உளவுத்துறை மூலமும், பிற தூதவர்கள் மூலமும் தினமும் "கெஞ்சிக்" கொண்டிருந்த கொள்கைப் பற்று மிக்க நிகழ்வுகளைப் பற்றி "சில" பத்திரிக்கைகள், இணையக் குழுக்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதன் நோக்கம், கணிக்க முடியாத புதிர் அல்ல.

உளவுத்துறையின் "திறமையை" மட்டும் நம்பி இல்லாமல் வைகோவின் பால்ய நண்பரான காளிமுத்துவை கட்சியின் தலைவராக்கி, அவருடைய ஒரே வேலை வைகோவை கூட்டணிக்கு கொண்டு வருவது தான் என்று உத்தரவு பிறப்பித்து, அவரும் அப்பல்லோவில் "க்ளுக்கோஸ்" ஏற்றிக்கொண்டிருந்த நிலையிலும் குட்டிக் கதைகளையும், இதிகாச உதாரணங்களையும் எடுத்துக் கூறி வைகோவை "துரத்திக்" கொண்டிருந்த, அழுது கெஞ்சிக் கொண்டிருந்த அற்புதமான காட்சிகளை, ஜனரஞ்சகமான நிகழ்வுகளை தமிழக மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டார்கள். என்றாலும் அந்த கொள்கைப் பற்று மிக்க காட்சிகளை அனைவருக்கும் இந்தத் தருணத்தில் ஞாபகப் படுத்தலாம் என்று தோன்றியது.

இந்து மடத்தின் பிரபலமான மடாதிபதியை ஜெயலலிதா சிறையில் தள்ளியதையும், அவருடைய எல்லையற்ற "பேரானந்த" நிலைகளை பிரபலப்படுத்தியதையும் இந்து தர்மத்தின் பாதுகாவலர்களாக தங்களை கருதிய "பாரதீய ஜனதா கட்சியால்" சகிக்க முடியாமல் போய் ஜெயலலிதாவுடன் இனி எக்காலத்திலும் கூட்டு கிடையாது என சூளுரைத்ததையெல்லாம் மறந்து "அம்மாவின்" அருளுக்காக காத்து நின்ற அந்த கொள்கைப் பற்று மிக்க திருக்கோலத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்து விட முடியாது.

அம்மா இந்தக் "காவிக் கூட்டத்தை" கண்டுகொள்ளாமல் "முஸ்லீம் லீக்கை" அரவணைத்துக் கொண்டது கொள்கைப் பற்று மிக்க நிகழ்வாக பலருக்கு தெரிகிறது போலும். காங்கிரசை "pseudo-secularist" என்று வர்ணிக்கும் அரசியல் அறிவுஞீவிகளுக்கு ஜெயலலிதா Perfect secularist ஆக தெரிந்திருக்கிறார். ராமர் கோயில் கட்ட கரசேவை, முஸ்லீம்களை வேட்டையாடிய நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் தோன்றிய திருக்கோலம், மதமாற்ற தடுப்புச் சட்டங்கள் என எல்லாமும் மறந்துப் போய் இன்று அம்மா நோன்பு கஞ்சி சாப்பிட கிளம்பி விட்டார்.

இப்படி ஜெயலலிதாவின் கொள்கைகள் பற்றி அதிகம் பேசப்படாமல் வைகோவின் அரசியல் நேர்மை மட்டுமே கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது. வைகோவும் இவ்வாறு கொள்கைகள் பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு மிகவும் சிரமப்பட்டு கருணாநிதி இந்திரா காந்தியை ஆதரிக்கவில்லையா ? மிசாவில் ஜெயிலில் போடவில்லையா என்பன போன்று பேசி இன்னமும் தான் அரசியல் அரிச்சுவடி தாண்டவில்லை என்று உணர்த்திக் கொண்டிருக்கிறார். வைகோ தைலாபுரம் சென்று அரசியல் பாடம் பயிலலாம். இவ்வாறான சூழ்நிலையில் ராமதாஸ் எப்படி நடந்து கொள்வார் என்பதை தெரிந்து கொள்வது வைகோவின் எதிர்காலத்திற்கு முக்கியமாகப் படுகிறது.

சுந்தரமூர்த்தி அவர்கள் கூறுவது போல தான் ஒரு கொள்கைவாதி என ஒரு புறம் காட்டிக் கொள்வதும் பிறகு அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வதும் வைகோவிற்கு எந்த வகையிலும் உதவாது. அவர் எடுத்த நிலைப்பாட்டினை உறுதியாக எடுக்க வேண்டுமே தவிர தடுமாறி, உளறிக் கொட்டிக் கொண்டிருக்க கூடாது. அவருடைய பேச்சு அவரது நிலைப்பாட்டில் அவருக்கே சில பிரச்சனைகள் இருக்கிறது, சந்தர்ப்பத்தால் இது நேர்ந்திருக்கிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்துவதாக உள்ளது.

இப்படி பரவலாக அனைவரும் பேசும் கொள்கைகள் என்றால் என்ன ? எந்தக் கொள்கையை யார் கட்டி காப்பாற்ற வேண்டும் ? சாதாரண மக்களுக்கும் இந்தக் கொள்கைகளுக்குமான தொடர்பு என்ன ?

திராவிட கட்சிகளின் வழி வந்த தமிழக மக்கள் தான் இன்று சபரிமலைக்கும், திருப்பதிக்கும், பழனிக்கும், மேல்மருவத்தூருக்கும் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்து மத பக்தர்களாக காட்சி தரும் இவர்கள் ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்பரிவார் அனுதாபிகளும் அல்ல. விநாயகர் சதூர்த்தி வந்தால் தமிழகமெங்கும் விநாயகர் சிலைகள் முளைத்து, காவிக் கொடிகளுடன் கும்மாளமாய் குளத்தில் கரைக்கச் செல்பவர்கள் கூட சங்கராச்சாரியார் கைது போன்ற பிரச்சனைகளை "மிக சுவாரசியமான", பார்க்க பரபரப்பான, கிளுகிளுப்பான பிரச்சனையாகத் தான் பார்த்து கொண்டிருக்கின்றனரே தவிர, தாங்கள் வணங்கும் இந்து மத கடவுள்களை கட்டிக் காக்கும் (?) மடாதிபதி கைது செய்யப்பட்டதாக உணர்ச்சிப் பொங்க வில்லை. (உணர்ச்சிப் பொங்கியவர்கள் எல்லாம் குறிப்பிட்டச் சிலரே).

90களில் விநாயகர் சதூர்த்தி தமிழகமெங்கும் பரவிய பொழுது தமிழகம் சங்பரிவார் கும்பல்களின் மற்றொரு புகலிடமாகி விடுமோ என்ற அச்சம் பலருக்கு ஏற்பட்டது. சென்னையில் மார்வாடிகளால் கொட்டப்பட்ட பணம் கலவரங்களாக மாறிய சூழ்நிலை அவ்வாறான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு ஊரிலும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப் பட்டாலும், இந்து முண்ணனி இந்த விழாக்களை தங்களின் விழாக்களாக நடத்தினாலும் இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கடவுள் பக்தியை விடவும் ஒரு உற்சாக மிகுதியான உணர்வு தான் இருக்கிறது. கொஞ்சம் ஜாலியாய் கொண்டாடும் பண்டியாகத் தான் இதனைக் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

நெய்வேலியில் என் வீட்டிற்கு அருகிலேயே பெரிய விநாயகர் சிலையை வைத்து கொண்டாடும் எத்தனையோ பேர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் விநாயகப் பகதர்களோ, ஆன்மிகவாதிகளோ அல்ல. அவர்களுக்கு தேவை ஒரு உற்சாகம். இந்த உற்சாகம் எதில் கிடைக்கிறதோ அதனுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வார்கள். சிறிது நாட்கள் விநாயகரை வைத்து கொண்டாடி விட்டு அந்த நாட்களை ஜாலியாக கழித்து விட்டு, பின் அந்த பெரிய விநாயகர் சிலைகளை கொண்டு ஏரியிலோ, குளத்திலோ அடித்து உதைத்து கரைத்து விடுவதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம் கிடைக்கிறது. இன்னும் சொல்லப் போனால் விநாயகரை ஊர்வலமாக கொண்டு சென்று கரைப்பது போன்ற விஷயங்கள் இல்லாமல் இருந்திருந்தால் விநாயகர் சதூர்த்தி இந்தளவுக்கு தமிழகத்தில் பரபரப்பாக இருந்திருக்காது.

இவ்வாறு தான் ஒவ்வொரு விழாவும் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் மாரியம்மன் விழா, செடல் விழா போன்றவை பார்க்கும் பொழுது நமக்கு இது இன்னும் தெளிவாக புரியும். இந்த விழாக்கள் உற்சாகம் மிகுந்த தருணங்களாகவே பார்க்கப்படுகின்றன.

இவ்வாறான மக்களின் இந்த உற்சாகப் பிரியம் தான் அதனை தடுக்கும் பெரியாரின் தத்துவங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் செய்து விட்டன என நான் நினைக்கிறேன்.

இன்று சபரிமலைக்குச் செல்லும் சாதாரண பக்தனாக இருந்தாலும், அலகு குத்தி தேர் இழுக்கும் அதி தீவிர பக்தனாக இருந்தாலும் அவன் தீவிர ஆன்மிகவாதியும் அல்ல, இந்து மதத்தின் மேல் பற்றுக் கொண்டவனும் அல்ல. ராமர் கோயில் கட்டுவது அவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. சங்கராச்சாரியார் கைது செய்யப்படுவது அவனை உணர்ச்சி வசப்படுத்துவதும் இல்லை.

இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இன்னும் பல விஷயங்களில் தமிழனின் இத்தகைய, "எதனுடனும் தீவிரமாக ஒட்டாத" மனப்பாங்கினை பார்க்க முடியும்.

இவ்வாறான நிலையில் சாதாரண தமிழக வாக்காளன் எதைக் கொண்டு வாக்களிக்கிறான் ?

இன்றைய இந்திய/தமிழக சூழலில் மக்களுக்கு தேவை கொள்கைகள் அல்ல. யாருடைய கொள்கைகளும் யாருக்கும் தேவையில்லை. மக்களின் தேவை அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான வாழ்வியல் பிரச்சனைகள் தான். இவை தான் தேர்தலில் முக்கிய பிரச்சனை.

தலைவர்கள் மற்றும் கட்சிகள் மீதான அபிமானம், சாதி அபிமானம், உள்ளூர் பிரச்சனைகள், உள்ளூர் தலைவர்கள், அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் இவையே தமிழக வாக்காளனை உந்தும் சக்திகள். தமிழக வாக்காளனின் இந்தப் பிரச்சனைகளை யார் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் தான் தேர்தலில் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள். சிறு நகரங்கள், கிராமங்கள் இவற்றை பரவலாக உள்ளடக்கிய தமிழகத்தில் இதனைக் கொண்டு மட்டுமே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. பெரு நகரங்களில் வேண்டுமானால் கொள்கைகள் பற்றி அறிவுஞீவிகளும், படித்தவர்களும் பேசிக் கொண்டிருக்கலாம்.

ஆனால் கொள்கைகளோ, கூட்டணி தாவுதலோ சாதாரண தமிழக வாக்காளனைப் பொறுத்தவரை பெரிய பிரச்சனையில்லை. அவன் அதைப் பொருட்படுத்துவதுமில்லை

தமிழக அரசியலில் கொள்கைகளின் போக்கு குறித்து சங்கரபாண்டி அவர்களின் கருத்துக்கள்

45 மறுமொழிகள்:

ஜோ/Joe said...

கலக்கல் பதிவு!
தமிழக அரசியலில் கொள்கைகளை விட 'கொள்' 'கை'கள் தான் அதிகம்.

11:29 AM, March 09, 2006
மு. சுந்தரமூர்த்தி said...

நல்ல அலசல். சோகம் என்னவென்றால் வைகோ, திருமாவை விரும்புவர்கள், வெறுப்பவர்கள் இரு சாராருமே இதைப் பேசிக்கொண்டிருப்பது தான். முதல் பிரிவினர் தேவையில்லாமல் புலம்புகிறார்கள். இது பலவீனம். இரண்டாவது பிரிவினர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முயற்சிக்கிறார்கள். வைகோவும், திருமாவும் அம்மா பக்கம் வந்தது ஒரு பக்கம் சந்தோஷம். இன்னொரு பக்கம் அடுத்த பேட்டைக்காரன் தன் பேட்டைக்கு வரும்போது எக்காளத்துடன் சிரிக்கும் பேட்டை ரௌடித்தனம். வீட்டுக்கு வரமாட்டார்களா என்று ஏங்கிவிட்டு வந்தபின் குறைந்தபட்ச நாகரிகம் கூட காட்ட முடியாத கோழைத்தனம்.

12:30 PM, March 09, 2006
aathirai said...

வைகோ எதிர்காலத்தில் ச்டாலினுடன் கூட கூட்டணி
வைக்கலாம். இதுக்கெல்லாம் டென்ஷனாகக் கூடாது.
அப்போதைய survivalக்கு எது தேவையோ அதை
செய்கிறார்கள். அவ்வளவுதான்.

உங்களுடைய எல்லா ததேர்தல் பதிவுகள் போல
கலக்கல்

12:50 PM, March 09, 2006
Thangamani said...

//இங்கு கொள்கைகள் வைகோவிற்கும், திருமாவுக்கும் தான் அதிகம் போதிக்கப் படுகிறது. ஆனால் ஜெயலலிதாவின் கொள்கைகள் பற்றி யாரும் பேசுவதில்லை.//

அரசியல்வாதிகளிடம் காணப்படும் முரண்பாடுகள், பொய்கள், போலிதனம் போன்றவற்றை அவர்களை ஒழித்துக்கட்டுவதற்காகப் பயன்படுத்துவது; இதை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் செய்து அவர்களை ஒழித்து இன்னொரு சாரரைக் காப்பாற்றுவது; இதைச் செய்யும் போது நடுநிலை முகமூடி அணிந்துகொள்வது.

தற்கால தமிழகராதி ஒன்று செய்தால் 'சோ' தனம் என்பதற்கு மேலே குறிப்பிட்டதை பொருளாகக் கொடுக்கலாம்.

வைகோவின் கொள்கைப்பிரச்சனைகள் பற்றிய அலசல் நன்று.

நன்றி!

12:51 PM, March 09, 2006
siva gnanamji(#18100882083107547329) said...

miga varundhugiren
ungal arivaiyum thiramayayum namdhu neraththaiyum veenakki vitteergal
yaridam edhai edhirparppadhu enra vivasthai illaiya?
"ottup porukkigalukkum"(Periyar)
kolgaikalukkum enna sambandham?

12:52 PM, March 09, 2006
எண்ணச்சிதறல்கள் said...

அப்ப வருங்கால முதல்வர் விஜயகாந்த் தான்னு சொல்லுங்க. ஏன்னா அவருக்குத்தான் 'கொல்கை' எல்லாம் எதுவும் கிடையாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் 'தமில்','தமில் மக்கல்' தான்!

1:14 PM, March 09, 2006
மு. சுந்தரமூர்த்தி said...

//ஆனா இதை இணையத்துல யார்வேணா சொல்லமுடியாதுங்கறதுதான் கொடுமை.
நீங்க சொல்லலாம். :) //
Jsri,
ஏன்? யார் என்ன செய்துவிடப்போகிறார்கள்?
இப்படி ஒரு பக்கம் ஃபிலிம் காட்டிக்கொண்டே இன்னொரு பக்கம் செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாததா? :)

1:22 PM, March 09, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

Jsri,

/

நீங்க சொல்லலாம். :)

/

பாஜக போன்ற சங்பரிவார் கும்பல்கள் தமிழகத்தில் கால்பதிக்க முடியாமல் போனதற்கும், சங்கராச்சாரியர் கைதின் பொழுது ஒரு பிரிவினர் உணர்ச்சிப்பூர்வமாக இருக்க, தமிழகத்தின் பெரும்பகுதி மக்கள் சங்கராச்சாரியார் கைதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அமைதியாய் இருந்ததும் பெரியாருக்கு கிடைத்த வெற்றியாக சொல்லலாம்

1:29 PM, March 09, 2006
இளங்கோ-டிசே said...

'அரசியல்' யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட இயல்பான் அலசல்.
.....
சசி, பெரியாரின் கருத்துக்களை தீவிரமாய் மக்கள் எடுத்துக்கொள்ளாவிட்டாலும், பெரியாரின் பாதிப்பால்தான் தமிழக மக்கள் தீவிர இந்துத்துவத்துக்குள் போகவில்லை என்றும், இந்துத்துவக் கட்சிகளால் தமிழகத்துக்குள் ஆழமாய் வேரூன்றமுடியாது இருக்கிறது என்றும் நினைக்கின்றேன். சரியா தெரியவில்லை.

2:20 PM, March 09, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

Jsri,

/*

ஆனால் எல்லாவற்றிற்கும் நீங்களாகவே விரும்பி பெரியாருக்கு கிரெடிட் கொடுக்கவிரும்பினால் எனக்கு ஆட்சேபணை இல்லை. :)

*/

இதற்கு நான் பதில் சொல்ல முனைவதற்கு முன்பாக DJ தெளிவாக கூறி விட்டார் என்றே நினைக்கிறேன்

பெரியாரின் கருத்துக்களை தீவிரமாய் மக்கள் எடுத்துக்கொள்ளாவிட்டாலும்,
பெரியாரின் பாதிப்பால்தான் தமிழக மக்கள் தீவிர இந்துத்துவத்துக்குள் போகவில்லை என்றும், இந்துத்துவக் கட்சிகளால் தமிழகத்துக்குள் ஆழமாய் வேரூன்றமுடியாது இருக்கிறது என்றும் நினைக்கின்றேன்


பெரியாரைப் புரிந்து கொள்வதில் இருக்கும் இந்த வேறுபாடு தான் நெய்வேலியில் பிறந்த சசியையும் (நெய்வேலி எல்லாப் பிரிவு மக்களும் இருக்கும் சிறு ஊர்) ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர்களையும் வேறுபடுத்தி காட்டுகிறதோ என்னவோ :-)

இது தான் கூறப்படும் கருத்துகளில் இருக்கும் (உள்)நோக்கங்களை தெளிவுபடுத்துகிறது

நான் பல தமிழக இளைஞர்கள் போல் நாத்திகவாதியும் அல்ல. கடவுள் பக்தனும் அல்ல. அதனால் தான் என் பதிவில் இருக்கும் நோக்கத்தை நீங்கள் உட்பட பலரும் சரியாக புரிந்து கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

2:46 PM, March 09, 2006
-/பெயரிலி. said...

தமிழ்சசி தெளிவான அலசுதல். ஆனால், என்னதான் கூறுங்கள். விரைவில் நீங்களும் BROke பட்டு பட்டிக்குள்ளே முதுகிலே டின் கட்டிக்கொண்டு திரியப்போகின்றீர்கள் என்பதன் கட்டியந்தான் இந்தப்பதிவென்று நினைக்கிறேன்.

3:02 PM, March 09, 2006
Thangamani said...

பெரியாரின் எல்லா கருத்துக்களின் அடிப்படையாக இரண்டு கருத்துகளைச் சொல்லலாம்.

இதை அவரே சொல்லியது என்று ஒரு நினைவு.

1. பெரியவர்கள் சொன்னார்கள், அந்த புத்தகம் சொல்கிறது, இந்த மதம் சொல்கிறது என்று எதையும் நம்பாமல் உனக்கு சரியன்றி படுவதையே எப்போதும் செய். அதைச் செய்ய பயப்படாதே!

2. ஒழுக்கம் என்று நான் வரையறுப்பது உனக்கு மற்றவர்கள் என்ன செய்யக்கூடாது என்று நீ நினைக்கிறாயோ அதை மற்றவர்களுக்கு செய்யாதே என்பதுதான்.


(இந்த இரண்டு கருத்துக்கருத்துகளுமே ஒன்று புத்தர் சொன்னது போல, இன்னொன்று இயேசு சொன்னது போல இருப்பது ஆச்சர்யப்படுத்தவில்லை.)


//மேல்மாடி கொஞ்சம் வேலைசெய்து இன்னொரு தரப்பினரையும் யோசிக்கத் தெரிந்தால் போதும் என்றுதான் நான் நினைத்துவந்திருக்கிறேன்.//

JSRI, இந்த இரண்டு கருத்துக்களையும் பெரியாரைப்படிகாமலேயே புரிந்திருப்பதால் அவர் பெரியாரைச் சரியாகப் புரிந்தவராய் இருக்கிறார்; அல்லது 'உண்மையை' சரியாகப் புரிந்தவராய் இருக்கிறார் என்பது எனது அபிப்பிராயம்.

//அதனால்தான் கடந்த 20 ஆண்டுகளில் தன்னைப் "பெரியார் வழி" என்று சொல்லிக்கொண்ட உண்மையான பெரியார் அபிமானிகள்கூட(அரசியல்வாதிகளைச் சொல்லவில்லை.) பின்னாளில் அதைக் கைவிட்டுவிட்டார்களோ என்பது என் எண்ணம்.//
பெரியார் வழி என்று கடைப்பிடிக்க அதில் எந்த நம்பிக்கையும் இல்லை. அப்படிக் 'கடைப்பிடிப்பவர்கள்' தான் சில பிரச்சனையைகளை உண்டாக்குகிறார்கள். அவர்கள் ஒரு நம்பிக்கை அளவுக்கு அதை கீழிறக்குகிறார்கள். தனிப்பட்ட முறையில் நான் அறிந்த பெரியார் உதவியால் உண்மையைக் கண்டுகொண்ட சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எதையும் கடைப்பிடிப்பதில்லை.

பின்குறிப்பு:

இரண்டு ஆச்சர்யங்கள்.
1. பெரியாரைப் படிக்காமல், ஆனால் 'பெரியார் வழியை' கைவிட்ட (கடந்த 20 ஆண்டுகளில் அவரது வழியைக் கைவிட்ட) அபிமானிகளை மட்டும் அடையாளம் கண்டுகொள்ளமுடிவது.

2. இணையத்தில் மட்டுமே படித்து பெரியாரின் வழிகளின் மேலும் தங்கமணிகள் (நானும் இதில் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்) மேலும் வைக்கிற தீர்ப்பு.

3:50 PM, March 09, 2006
Thangamani said...

சின்னக்குத்தூசிகள் (தியாகராஜன்கள்) தருகிற நம்பிக்கையை ஸ்ரீரங்கத்துக்காரர்கள் தருவதில்லையோ!

3:53 PM, March 09, 2006
இரா. செல்வராசு (R.Selvaraj) said...

சசி, நல்லதொரு அலசல். உங்களின் அரசியல் குறித்த பதிவுகள் பொதுவாகவே சுவாரசியமாக இருக்கின்றன.

4:37 PM, March 09, 2006
Pot"tea" kadai said...

இந்திய அரசியலிலேயே(தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு) கொள்கைகள் என்று ஒன்றும் இருந்ததாக இந்த சிறியோனுக்கு தெரியவில்லை. முற்காலத்தில் கட்சியை தொடங்குவதற்கு, வளர்ப்பதற்கு மட்டுமே இருந்த கொள்கைகள், பிற்காலத்தில் கட்சியை இழுத்துச் செல்வதற்காக கொள்ளையடிக்க விடப்பட்டது.

***
வினை, எதிர்வினை என்று ஒன்று உண்டு. மடத்துக்காரர்களின் மடத்தனமான நம்பிக்கைகளை எதிர்கொள்ள பெரியார் அல்லது பெரியார் வழி வந்தவர்கள்(?) இன்றும் தேவை தான்.

டிசேவின், "... பெரியாரின் கருத்துக்களை தீவிரமாய் மக்கள் எடுத்துக்கொள்ளாவிட்டாலும், பெரியாரின் பாதிப்பால்தான் தமிழக மக்கள் தீவிர இந்துத்துவத்துக்குள் போகவில்லை என்றும், இந்துத்துவக் கட்சிகளால் தமிழகத்துக்குள் ஆழமாய் வேரூன்றமுடியாது இருக்கிறது என்றும் நினைக்கின்றேன்..."

சரி என்றெ எனக்குப் படுகிறது.

"...கிராமங்களில் மாரியம்மன் விழா, செடல் விழா போன்றவை பார்க்கும் பொழுது நமக்கு இது இன்னும் தெளிவாக புரியும். இந்த விழாக்கள் உற்சாகம் மிகுந்த தருணங்களாகவே பார்க்கப்படுகின்றன..."

விழாக்கள் மட்டுமல்ல வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது கூட உற்சாகத்திற்கு தானே...:-)

8:00 PM, March 09, 2006
Gopalan Ramasubbu said...

Interesting post Sasi.

கொள்கையா அப்படின்னா???

கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையே பெரிய திருடனை ஒழிக்க சின்ன திருடனோடு கூட்டனி சேர்வதில் தவறில்லை என்ற அளவில் தான் இருக்கிறது.

8:17 PM, March 09, 2006
இளங்கோ-டிசே said...

JSri,
ஒரு சிறுகுறிப்பு மட்டும். நான் அதை உங்களுக்குப் பதிலளிப்பதுபோலக் கூறவில்லை. நீங்கள் என்ன எழுதியிருந்தீர்கள் என்று அறியாமலேயே சசியின் மேலுள்ள பதிவில் குறிப்பிடப்பட்ட பெரியார் பற்றிய குறிப்புக்களை வாசித்தே எழுதியிருந்தேன். எனென்றால் நான் பின்னூட்டம் எழுதும்போது உங்களின் பின்னூட்டத்தைக் காணவில்லை; மொடரேசனுக்காய் காத்துக்கிடந்தது போல.
......
மற்றும்படி எவரது நம்பிக்கைகளின் மீது எனது நம்பிக்கைகளைத் திணிக்கும் எண்ணம் இல்லை. நன்றி.
....
பெரியார் பற்றிய விவாதத்திற்கு நேரங்கிடைத்தால் சில குறிப்புக்கள் கூறப்பிரியம். பார்ப்போம்.

10:41 PM, March 09, 2006
arulselvan said...

ஜெஸ்ரீ,

இரண்டே இரண்டைப் பற்றி. (ம்ற்றதைப் பற்றி நான் சொல்லுவது முக்கியமில்லை.)

>>
ஆனால் ஏன் அவர்களால் அதைத் தன் குடும்பத்தினரிடம் கொண்டுசெல்லமுடியவில்லை, அவர்களாலேயே தொடர்ந்து அந்த வாழ்க்கையை வாழமுடியவில்லை என்றுதான் புரியவில்லை
------------------------
இந்த வாதத்தை பயன்படுத்தாதீர்க்ள். குடும்பத்தாரும் மற்றவரைப் போலத்தான். நாம் உளறுவதை பிடித்திருந்தால்தான் ஏற்றுக்கொள்வார்கள். இல்லாவிட்டால் கேலிசெய்துவிட்டுப் போய்விடுவார்கள்.
-----------------------
>>
சூரியன் கிழக்கே உதிக்கும்.
சூரியன் உதிக்கும் திசைதான் கிழக்கு.
மேலே இருப்பதில் இரண்டுமே ஒரே கருத்தில்லை. இரண்டில் எது சரி?
-------
இரண்டாவது ஒரு வரையறை (definition)
முதலாவது பிரமாணம்.
இரண்டும் ஏரணத்தில் தெளிவான தனியான கூறுகள்தானே. இதில் உண்மை/பொய் குழப்பம் என்ன?

அருள்

11:07 PM, March 09, 2006
மு. சுந்தரமூர்த்தி said...

Jsri
சசி எழுதிய வரிகளை மேற்கோள் காட்டிவிட்டு "வாவ், 101% சரி" என்று உங்கள் மனதில் பட்டதை மட்டும் சொல்லியிருந்தால் உங்களின் ஆதிமூலங்களை எடுத்து வைத்து யாராவது சண்டை போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? கூடவே உங்கள் பேச்சுரிமை பறிக்கப்படுவதுபோல சுயபச்சாதாபம் எதற்கு? இதுபோன்ற preemptive strategy யை தன் வலைப்பதிவின் தலைப்பு வாசகமாகவே வைத்துக்கொண்டு ஒருவர் மற்றவர்களைப் போட்டுத் தாக்கிக்கொண்டிருக்கிறார். உள்குத்து, வெளிக்குத்துகள் மட்டுமல்ல நீங்கள் முதலில் குறிப்பிட்ட 'நியாமான பதிவு vs. நம்பமுடியாத பாசிசம்' வகைக் கருத்துக்கள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் நடந்துக்கொண்டுதானிருக்கின்றன. உங்களிடத்தில் இருக்கும்போது உங்களுக்கு சில உண்மைகள் எளிதில் புரிகின்றன. மற்றவர்களுக்கும் அவரவர்களின் இடங்களில் இருக்கும்போது அவர்கள் குறிவைக்கப்படுவதும் புரியக்கூடும். இவற்றையெல்லையெல்லாம் தாண்டியும் சில நண்பர்கள் மாற்றுக்கருத்துக்களை நாகரிகமாக விவாதித்துக்கொன்டுதானிருக்கிறார்கள். நான் படித்து பின்னூட்டமிடும் பதிவுகள் அப்படிப்பட்டவையே.

11:09 PM, March 09, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

/*
பாகிஸ்தான் வழியாக குழாய்மூலம்... மேலே அவர்களோடு கிரிக்கெட் விளையாடவில்லையா என்ற உங்கள் வாதத்தில் அதிர்ந்தே போனேன். இன்னும் மீளவில்லை. :)
*/

நானும் இங்கே அதிர்ந்து போய் தான் இருக்கிறேன். எங்கே அப்படி நான் சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை :-)

பாக்கிஸ்தான் கேஸ் பைப்லைன் திட்டம் பற்றி இரு பதிவுகளில் எழுதி இருக்கிறேன்.

http://thamizhsasi.blogspot.com/2005/03/blog-post.html



http://thamizhsasi.blogspot.com/2005/07/blog-post.html


இந்த இரண்டு பதிவுகளிலுமே "கிரிக்கெட்" என்ற ஒரு வாக்கியம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டே இருக்கிறேன், கிடைக்கவே இல்லை.

வேறு எந்தப் பதிவிலும் பின்னூட்டமாக கூட நான் இவ்வாறு எழுதியதில்லை.

எங்கே இவ்வாறு எழுதினேன் என்று கண்டுபிடித்துச் சொன்னால் மிக்க உதவியாய் இருக்கும் :-)

எனக்கு பொருளாதாரம் முழுவதுமாக தெரியாது என்றாலும் கொஞ்சமாக ஏதோ தெரியும். கிரிக்கெட் விளையாடுவதற்கும் கேஸ் லைனுக்கும் நிச்சயமாக முடிச்சு போட்டிருக்க மாட்டேன் என்றே நம்புகிறேன்.

இங்கே கூட பாக்கிஸ்தானுடன் கேஸ் லைன் வைக்க நம்முடைய இந்து தலையங்கம் எழுதுகிறது. இந்து சொன்னால் சரியா, சசி சொன்னால் பிரச்சனையா என்று கேட்டு கொண்டிருக்க மாட்டேன் :-)

நான் எழுதிய சமயத்தில் அமெரிக்காவுடன் Energy சம்பந்தமாக எந்த நல்ல டீலும் இல்லை. இந்தியா தன்னுடைய தேவைகளை சுதந்திரமாக கைக்கொள்ள வேண்டும் என்றே நான் எழுதினேன். ஈரானுடனான டீல் நல்ல வாய்ப்பு. அதுவும் தவிர பாக்கிஸ்தான் வழியாக வரும் கேஸ் லைனை பாதுகாக்கும் பொறுப்பு பாக்கிஸ்தானுக்கு இருந்தது என்றே நான் நினைக்கிறேன். அவ்வாறு இருக்கும் பொழுது இது நல்ல வாய்ப்பு என்று தான் எழுதினேன்.

*****

நெய்வேலி என்பதை நீங்கள் "நெய்வேலி டவுன்ஷிப்" மட்டும் என்று நினைத்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதைக் கடந்த நெய்வேலி உங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். எனக்கு அதைப் பற்றியும் தெரியும். நெய்வேலியின் 50ஆண்டுகள் பதிவில்
நெய்வேலியைச் சுற்றி இருக்கும் சிலப் பிரச்சனைகளை குறித்து எழுதியிருக்கிறேன். இவை "சில" மட்டுமே. இன்னும் நிறைய எழுதலாம்.

http://thamizhsasi.blogspot.com/2006/02/50_05.html


எந்த திட்டமிடலும் இல்லாமல், நெய்வேலியின் பொன்விழா என்ற செய்தியை பார்த்து எழுதியப் பதிவு இது. நீங்கள் நெய்வேலி காம்பவுண்டை பற்றி சொன்னதும் தான் "இன்னும்" எழுத வேண்டியது எவ்வளவு இருக்கிறது என்பது புரிகிறது.

நெய்வேலியைச் சுற்றி நடக்கும் வாழ்க்கைத் தேவைகளை விட ஸ்ரீரங்கம் பன்முகம் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து

மற்றபடி உங்கள் ஸ்ரீரங்கத்தின் பன்முகம் பற்றியோ, நெய்வேலியின் காம்பவுண்டை பற்றியோ, மற்ற கருத்துக்கள் பற்றியோ மேலும் விவாதிக்க நான் விரும்பவில்லை.

11:25 PM, March 09, 2006
-/பெயரிலி. said...

ஜெயஸ்ரீ: உங்களைக் குறித்துச் சொல்லுவதற்கு நான் நீங்கள் எழுதியதை வாசிக்கவில்லை. மன்னிக்கவேண்டும். நான் பொதுவிலே சசியின் கட்டுரை குறித்துச் சொன்னேன். உங்களுக்குப் பொருத்திக்கொள்ளப்போகிறேன் என்றால் நான் சொல்வதற்கு ஏதுமில்லை.

நிற்க. ocial reformer எனத் தேடினால், இராமானுஜரிலிருந்து ராஜாராம் மோகன்ராய்.. தயானந்த சரஸ்வதி வரை மட்டுமல்ல; இராமனுஜருக்கு முந்திய சித்தார்த்தனிலிருந்து வள்ளலார் வரைகூட வருவார்கள். ஆனால், இவர்களெல்லாம் இந்தியத்துணைக்கண்டபிரதேசங்களிருந்தும் இந்து மதம் என்ற ஒற்றைப்பரிமாணத்தூடாக சமூக மறுமலர்ச்சி கொண்டு வந்தவர்களில்லை

11:45 PM, March 09, 2006
-/சுடலை மாடன்/- said...

சசி,

உங்கள் பதிவையும், பின்னூட்டங்களையும் தற்பொழுதுதான் படித்து முடித்தேன். அருமையான விவாதம். வைக்கோவுடனும், திருமாவுடனும் கூட்டணி வைப்பதனால் நிரூபணமான ஜெயலலிதாவின் (குறிப்பாக விடுதலைப் புலிகள் பற்றிய) கொள்கைப் புரட்டை யாரும் கண்டுகொள்ளாதது பற்றி உங்களுடைய முந்தையப் பதிவிலேயே குறிப்பிட நினைத்தேன். இருந்தாலும் அதுவே வைக்கோவுக்கும், திருமாவுக்கும் கிடைத்த முதன் பலன் என்று விட்டு விட்டேன்.

மற்றபடி தேர்தலின் போது வாக்காளர்களின் மனநிலையையும், எதிர்பார்ப்பையும் நன்றாக விளக்கியுள்ளீர்கள்.

இறுதியில் ஒரு எச்சரிக்கை, என்னுடைய பெயரையும் கருத்தையும் சுட்டிக்காட்டினால் உங்களையும் முத்திரை குத்தி கட்டித்தொங்க விடக்காத்திருப்பார்கள் சிலர்.

ந்ன்றி - சொ. சங்கரபாண்டி

11:53 PM, March 09, 2006
siva gnanamji(#18100882083107547329) said...

Periyar kolgai:edhaiyum enn enru kel: sindhanai sey; seerthookki mudivu edu
sindhikkum thiramaiyai valarppadil
oottupporukkigalin pangalippu enna?
sindhikku aatralai mazhunga adithavargal ivargal
cinima,sarayam,arthamatra alangarapp pechugal,thanimanitha vazhipadu.....
"ramaswamy solkiren enbadharkkaga edhaiyum nambadhe...neeye sindhithu paar"enra Periyarin varisugala indha thanimanidha thuthi padigal?

11:57 PM, March 09, 2006
Thangamani said...

Jsri:

//மதமும் அரசியலும் கலக்கக்கூடாது என்பது முக்கியமானது. அந்தக் கருத்தை யாருமே கண்டுகொள்வதில்லை //
இந்து மதம் என்று வலிந்த உருவாக்கப்படுகிற நிறுவனமே ஒரு பெரும் அரசியல் என்பதை நீங்கள் உணரவில்லையா? உங்கள் பாட்டியை அல்லது அவரது அம்மாவை நீங்கள் என்ன மதம் என்று கேட்டிருந்தால் அவர் அன்று என்ன பதில் சொல்லி இருப்பார், இன்று நீங்கள் என்ன பதில் சொல்லுகிறீர்கள்?
இதில் ஒரு பெரும் அரசியல் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா? இப்படி மதம் மாற்றும் அரசியலை நீங்கள் ஏன் ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லது ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று கேட்டால் அது மேம்போக்கான கேள்வியா? இப்படியான மதமாற்றும் அரசியலைத் தான் அமெரிக்கா பால் பவுடரும், டாலரும் கொடுத்து செய்கிறது; இஸ்லாம் இப்போது காசுகொடுத்து செய்கிறது என்று சொன்னால் இந்து மதம் எதையுமே கொடுக்காமல் இருப்பவற்றையும் பிடுங்கிக் கொண்டு, இழிவும் செய்து, விருப்பத்தைக்கூட கேட்காமல் மாற்றுகிறது என்று பார்க்கச் சொன்னால் அது மேம்போக்கான கேள்வியா?
அது மேம்போக்கான கேள்விதான் என்று சாதித்தால் (ஒருவர் (நீங்கள் அல்ல) புரிந்துகொண்டபின்னும் அப்படியே சாதிப்பதாய் நான் நினைத்தால், அவரது தேவை வேறு என்று நான் முடிவுக்கு வருவது தவறானதா?)
சிலர் இந்து மதம் என்ற நவீன அரசியல் வடிவம் முக்கியமானது என்று நம்புகிறார்கள்; அவர்களில் சிலர் அதனால் பயன் அடைகிறார்கள், எப்படி தமிழால் சிலர் பயனடைகிறார்களோ அப்படி. உங்களைப் போன்ற பலர் அவர்கள் பயன் பெற உழைக்கிறீர்கள் எப்படி அந்த அரசியல்வாதிக்காக ஒரு அப்பாவி உழைக்கிறானோ அப்படி.
எனக்கு இந்து மதம் என்ற அரசியல் வடிவம் ஆன்மீகத்தன்மை கொண்டதல்ல. இராமகிருஷ்ண பரமஹம்சர் இந்து மதவாதி அல்ல (என்னளவில்). அவரிடமே சீடராய்ச் சேர்ந்தவர்களிடம் கூட அவரவர்க்கு தேவையான, அவரவர்க்கு இயல்பான சில முறைகளைத் தான் அவர் உபதேசித்தார்; ஏனெனில் அவருக்கே சில முறைகள் உவப்பானதாக (அவர் உண்மையான வழிகள் என்று கண்டுகொண்டவை கூட) இல்லை. அவரிடமிருந்து ஒரு இந்துவை நீங்கள் எடுக்கமுடியாது. காலங்காலமாக பாமரமக்களுக்கு அவர்கள்தான் முக்கியமான ஆன்மீக வழிகாட்டிகள். அவர்களை பாமர மக்கள், ஆன்மீக தேட்டம் கொண்டோர் எந்த மதம் என்றெல்லாம் பார்க்காமல் பார்த்து, வழிபட்டு தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டார்கள். இன்று இந்து என்ற பீடங்களை உருவாக்கி அதில் தங்களை நிறுத்திக்கொள்பவர்கள் அன்றும் இருந்தார்கள் வழக்கம் போல மக்களைவிட்டு விலகி அரசியல் சக்திகளாக. அந்த அரசியல் சக்திகள் இன்று தங்களை மேலும் பெரிய அரசியல் சக்திகளாக்கிக்கொள்ள பாமர மக்களை இந்து என்று ஒரு நிறுவனத்துக்குள் அவர்களைக் கூட கேட்காமல், பிரதிபலனாய் எதுவும் தராமல், அடிமைப்படுத்தி சுரண்டிக்கொண்டு இழுத்துக்கொள்கிறார்கள்; அடையாளப்படுத்துகிறார்கள்; அவர்களது குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார்கள். இந்த இந்துமதம் அழியவேண்டும் என்று நான் சொல்லுவதில் இதுவும் ஒரு காரணம். இன்னும் பல காரணங்கள் இருகின்றன. மெல்ல பேசுவோம்.

சில முடிச்சுகள்:

//அதைப் பிற பெண்கள்கூட ஆதரிப்பதும் எனக்குப் புரிவதில்லை. //
இது எனக்குப்புரியவில்லை! பெண்கள் என்ற வகையில் அவர்கள் ஆதரிக்காத கருத்து எதாவது இருக்கிறதா?

(வரதட்சணை கொடுக்காத பெண்ணைக் கொளுத்தலாம் என்ற கருத்தைக்கூட ஆதரிக்கிற பெண்கள் இருப்பதை நாம் அறியாமலா இருக்கிறோம்? :))

//சாத்தியமே இல்லை என்று எனக்குத் தெரியும்//
சாத்தியமாகி இருக்கிறது என்பது என் அனுபவம். நீங்கள் கூட அப்படியொரு சாத்தியத்தின் மேல் நீங்களே அறியாமல் கொண்ட நம்பிக்கையில் தான் இங்கு இப்போது படிக்கிறீர்கள்; பதில் எழுதுகிறீர்கள்.

ஒரு கேள்வி:
//பெயரையும் ஊரையும் வைத்துத்தான் இன்று நோக்கங்கள் உள்நோக்கங்களாகத் திரிக்கப்படுகின்றன.//
இதை அடையாளப்படுத்தி ஒருவரை முத்திரை குத்தி அவரது நோக்கங்களாக சிலவற்றைச் சொல்லுவது என்று புரிந்துகொள்கிறேன்.
நாம் அடையாளப்படுத்துகிறோமா? அல்லது ஒவ்வொருவரும் ஒரு அடையாளம்தான் நான் (அந்த நபர்) என்று நம்பி அதைக் காப்பாற்ற, விளம்பரப்படுத்த, பரப்ப, மற்றவரை அந்த அடையாளம் சிறந்தது என்று நம்பவைக்க உழைக்கிறார்களா? இது அரசியல் மட்டுமல்ல ஆன்மீகக் கேள்வியும் கூட. இதில் இருந்து ஒருவர் விரும்பினால் நிறைய பதில்களைப் பெறலாம் என்று நினைக்கிறேன்.

12:39 AM, March 10, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

/*
பாகிஸ்தான் வழியாக குழாய்மூலம்... மேலே அவர்களோடு கிரிக்கெட் விளையாடவில்லையா என்ற உங்கள் வாதத்தில் அதிர்ந்தே போனேன். இன்னும் மீளவில்லை. :)
*/

/

நானும் இங்கே அதிர்ந்து போய் தான் இருக்கிறேன். எங்கே அப்படி நான் சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை :-)

/

இதற்கு இன்னும் பதிலை காணாமே ?

நான் வேறு நீங்கள் ஆதாரப்பூர்வமாக எழுதி இருக்கிறீர்களோ என்று நினைத்து விட்டேன் :-)

2:00 AM, March 10, 2006
Muthu said...

jaysri,

உங்களுக்கு கடவுளும் கடவுள் சார்ந்த பிரச்சினைகளும் உண்மையிலேயே பிரச்சினை என்று தோன்றுகிறது.பெரியார் மேல் உள்ள இந்த காரணமற்ற ஆத்திரம்தான் ஆச்சர்யமளிக்கிறது.

மதமும் அரசியலும் கலக்கக்கூடாது என்பதெல்லாம் சும்மா.
கார்க்கியிடம் ஒரு ஐரோப்பிய (அல்லது அமெரிக்க) எழுத்தாளர் சொன்னாராம்.நாம் இலக்கியத்திற்கு என்று ஒரு அமைப்பு ஆரம்பிப்போம்.அதில் அரசியல் கலக்காமல் பார்த்துக்கொள்வோம் என்று.
கார்க்கி சிரித்தாராம்.அரசியல் இல்லாமல் என்ன இருக்கிறது என்றாராம் கார்க்கி. அது உண்மை.யோசித்து பாருங்கள்.அரசியலை நீங்கள் ஒரு தளத்தில் மட்டும் வைத்து பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.


பகுத்தறிவை குடும்பத்திற்கு கொண்டு போவது என்ற குழந்தைதனமான வாதத்தை மட்டும் விளக்குகிறேன்.மற்றதற்கு சசியும் தங்கமணியும் விளக்கம் அளித்துவிட்டார்கள்.அது சரி என்றும் நினைக்கிறேன்.


என் மனைவி கடவுள் பக்தி உள்ளவள். அவளுக்கு தினமும் பூஜைக்கு பூ பறித்து தருபவனே நான்தான். காதல் கல்யாணத்திற்கு முன்பே எனக்கு கடவுள் பக்தி இல்லை என்பது அவளுக்கும் அவளுக்கு கடவுள் பக்தி உண்டு என்பது எனக்கும் தெரியும்.
ஒருவரை வலுகட்டாயமாக நாம் மாற்ற முடியாது. நம் கருத்துக்களை சொல்லி சிந்திக்க தூண்டுவது தான் நாம் செய்யக்கூடிய புத்திசாலித்தனமாக காரியம். உதாரணமாக என் மனைவி என் குழந்தையை கடவுள் பக்தியாகத்தான் வளர்க்க நினைப்பாள்.நான் குழந்தையை சொந்தமாக சிந்திக்க தூண்டுவேன். குழந்தை தன் முடிவை எடுக்கும்.இதையெல்லாம் நீங்கள் "சோ" பாணியில் விமர்சிப்பது தவறு. சாமி கும்பிட்டால் விவாகரத்து பண்ணுவேண் என்றெல்லாம் கூறமுடியாதுங்க....

4:22 AM, March 10, 2006
Muthu said...

பெரியாருக்கு தீர்வுகள் சொல்ல தெரியவில்லை என்று ஸ்வீப்பிங்(உங்க வார்த்தைதான்) ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டீர்கள். எதற்கு அவர் தீர்வு சொல்லவில்லை என்பதையும் சொன்னால் நாங்கள் தெரிந்துகொள்வோம்.
இன்னொன்று நீங்கள் எதிர்பார்க்கும் ரெடிமேட் தீர்வு என்பது உலகத்தில் இல்லை. முழுமையை நோக்கிய தேடல்தான் உண்டு.மாற்றம்தான் நிரந்தரம்.
வழிதோன்றல்கள் கொள்கைகளை கைவிட்டுவிட்டால் அதற்கு பெரியார் காரணமாக மாட்டார் என்று என் சிறுமூளைக்கு தோன்றுகிறது.
பெரியாரின் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று கூறமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.சங்கராச்சாரி கைதுக்கு எங்கோ டெல்லியில் இருக்கும் பெண் என்.டி.டி.வியில் தேம்பி தேம்பி அழுகிறது.ஏன்? என்ன சுதந்திர போராட்டத்திலா ஜெயிலுக்கு போனார்?
நிற்க.இங்கே தமிழ்நாட்டில் யாரும் ஏன் கண்டுகொள்ளவில்லை? இது பெரியாரின் பாதிப்புத்தான் என்று என் சிறுமூளை சொல்கிறது.
இந்து மதத்தை மட்டும் தாக்குவது ஏனென்றால் இங்கு பெரும்பான்மை அதுவாக இருப்பதே..மற்றபடி என்னை பொருத்தவரை எல்லா மதங்களும் அபின் போன்றதே......
சிரிரங்கத்திற்கு இருக்கும் பன்முகத்தன்மை நெய்வேலிக்கு இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
சுஜாதா பீயள்ள விருப்பம் தெரிவித்ததை எழுதியவர் முத்துகுமரன்.நான் இல்லை என்றாலும் சுஜாதாவின் மீது எனக்கும் விமர்சனம் உள்ளதால் சந்தேகத்தின் பலனை உங்களுக்கே அளிக்கிறேன்.
இதுவரை நீங்கள் செய்த இந்த விவாதத்தில் யாராவது உங்கள் வாதத்தை உங்கள் பின்புலத்தை வைத்து திரித்தார்களா என்றும் சொல்லவும்.நான் அந்த திரித்தலை படிக்க ஆசைப்படுகிறேன்.
நீங்கள் சொன்ன சூரியன் உதிக்கும் திசை வாக்கியம் போல் எத்தனையோ வாக்கியங்கள் மக்களை சிந்திக்கவிடாமல் பண்ணும்பொருட்டு இந்த நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.அது மிகவும் சாதாரண வாக்கியம்தான் சிந்தித்தால்.

4:38 AM, March 10, 2006
Thangamani said...

//பெயரிலி, நீங்கள்தான் பெரியார் தமிழகத்தில் செய்தது சமூக மறுமல்ர்ச்சி என்று சொல்கிறீர்கள்.//

பெயரிலியோடு சேர்ந்து யுனெஸ்கோவும் சொல்லியது அவர் செய்தது மறுமலர்ச்சிதான் என்று!

PERIYAR, THE PROPHET OF THE NEW AGE
THE SOCRATES OF SOUTH EAST ASIA
FATHER OF THE SOCIAL REFORM MOVEMENT AND
ARCH ENEMY OF IGNORANCE, SUPERSTITIONS,
MEANINGLESS CUSTOMS AND BASE MANNERS.
-UNESCO, 27-6-1970

4:42 AM, March 10, 2006
Venkat said...

சசி - முற்றிலும் திசை திரும்பிப்போன உங்கள் வாதத்திற்கு நான் வருத்தப்படுகிறேன். நானும் இந்த ஜோதியில் கலந்து ஐக்கியமாவதற்குக் கூடுதல் மன்னிப்புகளும்.

என்னுடைய பணி நிமித்தம் என்னை நிறைய எழுத அனுமதிக்கப்போவதில்லை. ஆனாலும் இந்த வாதங்களில் நான் மிகவும் மதிக்கும் பல நண்பர்களின் (பிடி)வாதங்களிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

வெறுப்பைத் தூண்டுதல் ஒருக்காலத்திலும் தீர்வுக்கு இட்டுச் செல்லமுடியாது என்பதில் என் நம்பிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. நம்மிடையே இன்றிருக்கும் தீர்வின்மைக்குக் காரணமாக இதையே காணமுடிகிறது. இனங்காணுதல் பலருக்கும் தேவையான அவசியமாக இருக்கிறது. அதுவும் பெரும்பான்மையுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் கண்டுகொள்ளும் சாத்தியம் இருக்கும்பொழுது அது பெருகியோடுகிறது. (தர்ம அடி மனப்பான்மை என்றும் பாடம்).

ஜார்ஜ் புஷ்க்கு வெறுப்பும் போரும் ஒருநாளும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஒழிக்க உதவாது என்று எழுதும் அதே நண்பர்கள் நம்மூருக்கு வேறு வாதம் வைத்திருக்கிறார்கள். பாம்பைக் கண்டவுடனேயே தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுவிட வேண்டும். பாம்பில் உள்ளூர் பாம்புக்கு வேறு நியாயம்; பன்னாட்டுப் பாம்புக்கு இன்னொரு நியாயம். இன்றைய நிலையில் உலகம் முழுவதைபும் பார்க்கும் வசதியும் திறமையும் உள்ள நண்பர்களால் எப்படி தங்கள் நியாங்களை ஒரு தரப்புக்கு மட்டும், ஒரு குறுகிய வட்டத்தில் பொருத்தி அழகுபார்த்துக் கொண்டேயிருக்க முடிகிறது என்பது வியப்பாக இருக்கிறது. நிறுவனமயமாக்கப்பட்ட நம்பிக்கைகள் (இதில் மத நம்பிக்கை முதலிடம்) என்று பொதுப்படையான பார்வை என்று வரும்?

பரந்துபட்டு உலகின் பிரச்சனைகளையும் (அவ்வப்பொழுது சில தீர்வுகளையும்) பார்க்கும் நண்பர்கள்கூட நம் அண்டையிலிருப்பவர்களுக்கு என்று வரும்பொழுது கற்றறிந்தவற்றை வசதியாக மறந்துவிட்டு அதே எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்க்கும் திருப்பணியைத் தவறாமல் செய்து வருகிறார்கள்.

தனக்கென்று தனிக்கொள்கையை வகுத்துக்கொள்; நான் சொன்னதை மாத்திரமே நம்பாதே என்று பெரியாரை வரிக்குவரி மேற்கோள் காட்டும் நண்பர்களிடமிருந்து இன்றுவரை பெரியாரின் கொள்கைகள், நடைமுறைகள் குறித்த நேர்மையான விமர்சனத்தை நான் கண்டேனில்லை. இவர்களிடமிருந்து பிற மதங்களைப் பற்றிய நேர்மையான விமர்சனங்களையும் நான் வாசித்ததில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்காரும் பெரியாரும் அடையாளம் கண்டுவிட்டுப் போனார்கள்; நமக்கு (குறைந்தபட்சம் படித்த நமக்கு) இன்றுவரை ஒரு தீர்வையேனும் நம்மிடையேகூட சொல்லிப் பார்த்துக்கொள்ளத் திறமையில்லை.

நாம் எல்லோருமே ஒற்றைப்படை வாதங்களில் மூழ்கிக் கிடப்பதை ஜெயஸ்ரீ சொல்லும் 'இணைய விவாதம்' விஷயத்தில் என்னால் இனங்காணமுடிகிறது.

10:28 AM, March 10, 2006
aathirai said...

இன்னின்னார் இந்த வழியில்யதான் சமூகத்தை சீர்திருத்த வேண்டுமென்று
ஏன் நினைக்கிறீர்கள்? புத்தர் இந்து மதத்துக்கு உள்ளேயே இருந்து
சீர்திருத்தினாரா? இந்த இந்து மதத்தை அப்படி காப்பாற்ற வேண்டிய
அவசியம்தான் என்ன? ஏராளமான் இந்து மடங்களில் உள்ளேயே இருப்பவர்கள்
கடந்த ஐம்பது வருடங்களில் ஏன் யாரும் சீர்திருத்தவில்லை.?

தயானந்த சரஸ்வதி அவர்கள் அவாவா அவாளுக்கு விதிச்ச கடமையை செய்ய
வேண்டுமென்று சொன்னதாக திண்ணையில் ஒரு கட்டுரை வந்தது.
அது இருக்கடும்.

வெள்ளைக்காரர்கள் வராவிட்டால் இந்த ஊரில் குழந்தை திருமணம், உடன்கட்டை
ஏறுதல் எல்லாம் தவறானவை என்பதே தெரிந்திருக்காது. அந்த அளவுக்கு
இருளில் மீழ்கியிருந்தார்கள். இந்த கொடுமைகளை ஒழித்ததில் அவர்களுக்கு
credit கொடுக்காவிட்டால் எப்ப்டி ?

ராஜாராம் மோஹன் ராய் ஒழித்த குழந்தை திருமணத்தை மத்திய பிரதேசத்தில் ஜாலியாக
நடத்திக் கொண்டிருந்தபோது அதை தடுத்த சமூக சேவகியின் கையை சங்க
பரிவாரம் வெட்டியது தெரியுமா? இது ராஜாராம் மோஜஹன்ராய் காலத்தில்
நடந்தது அல்ல. இந்த 21 ஆம் நூற்றாண்டில் நடந்ததுதாமன். சதிமாதாக்களினால்
மழை பெய்து நாடு சுபிட்சம் அடையும் என்றூ ராஜஸ்தான் அரசாங்கம் புத்தகம்
வெளியிடுகிறது.

நாத்திக வீட்டு பெண்மணிகள்தான் தீவீர பக்தர்களாக இருக்கிறார்கள். இதே போல
தீவிர ஆத்திகரின் மகளான எனக்கு அது impress செய்யவில்லை. என்ன செய்யலாம்?
இந்த வாஸ்து, feng shui பற்றி நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். புதுசா வந்த
fashion trend மாதிரி இதையெல்லாம் பிடித்துக்கொள்கிறார்கள்.

உங்களுக்கு பாகிஸ்தான் கேஸ்லைனில் என்ன பிரச்சினை?

10:55 AM, March 10, 2006
ரவி ஸ்ரீநிவாஸ் said...

Periyar was a revolutionary not just a social reformer.Hinduism underwent changes due to forces within and outside.I do agree that reforms are needed now.the mutt heads should give up the discriminations and declare that they will not discriminate on the basis of caste , birth or gender.It is possible for a dalit to become a temple priest today.But why it is
not possible to elect a dalit
president in some villages. You
cant blame the Shankaracharyas
for that. It is a question of sharing power and ending the hegemony of some castes.
To think that this is due to what
was said in some scriptures in some era is funny.If Shankaracharyas are bad
the Popes and Mullahs are equally
bad.No Shankarachrya runs campaigns
against abortions or condoms. The catholic church does. Look at the
position of women in some islamic
countries.It is worse than that of
Dalits.The record of christianity or islam is no good.Both practised all sorts of discrimination, not to speak of the slave trade.Yes the whites brought modernity but the other side of modernity is
also relevant.
There is a need to go beyond Periyar to understand the Indian society.And the so called followers of Periyar will work with muslim
fundamentalists who deny any right to women and assure them reservation. They joined hnads with fundamentalists and 'secular' congress to overturn a judgment of the highest court of the land.If BJP is communal the record of most secular and dravidian parties is no better.

Periyar went to vaikom and joined the on going struggle.Has any of the kazhagams (DK and those who quit DK to launch other DKs) ever
launched a mass struggle in Kandadevi or Keeripatti or Papparapatti.

I know these are not politically correct statements or questions.
But some facts have to be told however unpalatable they may be.

12:58 PM, March 10, 2006
siva gnanamji(#18100882083107547329) said...

2 varigal missing.........
INDHA THINNAI PECHU VEERARGALIDAM
KANNAYIRUKKANUM ANNACHI--NAMA
ONNAYIRUKKANUM ANNACHI
pechu veerargal yarungo?

1:30 PM, March 10, 2006
ரவி ஸ்ரீநிவாஸ் said...

ராஜாராம் மோஹன் ராய் ஒழித்த குழந்தை திருமணத்தை மத்திய பிரதேசத்தில் ஜாலியாக
நடத்திக் கொண்டிருந்தபோது அதை தடுத்த சமூக சேவகியின் கையை சங்க
பரிவாரம் வெட்டியது தெரியுமா? இது ராஜாராம் மோஜஹன்ராய் காலத்தில்
நடந்தது அல்ல

As far as I know neither RSS nor any of the hindutva groups did that. If I am wrong pls show evidence.Btb do you know that All India Muslim Personal Law Board has
demanded that Muslims should be exempted from Prevention of Child Marriages Act and minimum age requirements for marriage as these
laws and rules are in conflict with
the faith of muslims.No hindu group had made such a demand.
So who is protecting child marriage and on what grounds.

1:37 PM, March 10, 2006
குழலி / Kuzhali said...

பயங்கரவாதி 'வைகோ' வுடன் கூட்டணி வைத்த தீவிரவாத எதிர்ப்பு தலைவி ஜெயலலிதாவின் அரசியல் நிலைப்பாட்டையும் கொள்கையையும் பற்றி விவாதம் நடக்கும் என பார்த்தால் திட்டம் போட்டோ போடாமலோ ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பற்றி பேசாமல் வேறு தளத்திற்கு ஜெயஸ்ரீ யின் ஒரு பின்னூட்டத்தினால் மா(ற்)றி விட்டது விவாதம், நன்றி... ம்.. இனி எப்போது பயங்கரவாதி 'வைகோ' வுடன் கூட்டணி வைத்த தீவிரவாத எதிர்ப்பு தலைவி ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை விவாதத்த்ற்குள்ளாக்கும் தளம் கிடைக்குமோ? கிடைத்தாலும் அதில் மட்டும் விவாதம் நடக்குமோ....

8:20 PM, March 10, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

/*
அவசியம் எடுத்துத் தருகிறேன். இல்லாவிட்டால், சொன்னதை வாபஸ் வாங்குவதிலும் பெரிய ஆட்சேபம் எதுவும் எனக்கு இல்லை. அதுவரை சந்தேகத்தின் பலனை உங்களுக்குக் கொடுத்துவைக்கிறேன். :)
*/

இதற்கு ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு வைக்கிறேன் :-))

10:54 PM, March 10, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

அனைவரின் பின்னூட்டத்திற்கும் நன்றி

குழலி,

விவாதம் தடம் மாறிய வருத்தம் எனக்கும் இருக்கிறது. எங்கோ தொடங்கி எங்கோ சென்று விட்டது.

விவாதம் சுவாரசியமாக இருந்தாலும், இந்தப் பதிவின் நோக்கம் அதுவல்லவே

11:00 PM, March 10, 2006
aathirai said...

ravi srinivas,
i think i read both the news items in the same site. I spent some time searching for the article. I couldn't find it. I might have remembered the incident wrong or i read it from a useless tamil magazine. the correct info is bjp cm babulal gaur refused to take action against child marriages because it is a social custom though it is illegal.

I admit the blunder.
anyway, that is the state of affairs in north india .

i think the news about rajasthan tourism book is right.

12:12 AM, March 11, 2006
Unknown said...

//பயங்கரவாதி 'வைகோ' வுடன் கூட்டணி வைத்த தீவிரவாத எதிர்ப்பு தலைவி ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை விவாதத்த்ற்குள்ளாக்கும் தளம் கிடைக்குமோ? கிடைத்தாலும் அதில் மட்டும் விவாதம் நடக்குமோ.... //

குழலி., வாங்க நம்ம நடத்துவோம்.

//ராமதாஸ் பத்திரிக்கைகளின் விமர்சனங்கள் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல், ஒவ்வொரு முறை கூட்டணி தாவும் பொழுதும் அதிக தொகுதிகள் பெற்று //
அவர் நேர்மையாளர் 'இமேஜ்'யை எங்காவது விளம்பரப்படுத்தி வைத்திருக்கிறாரா?. ஒரு அரசியல்வாதிக்கு என்ன உருவமோ அதுதான் அவருக்கு இருக்கிறது. அதை அவர் மறுக்கவில்லை, மறைக்கவில்லை. 'தேர்தல் உடன்பாடு' என பரிதாபமாக உளரவில்லை. இங்குமங்கும் ஓட்டப்பந்தயம் ஓடுவது மாதிரி ஓடவில்லை. தெளிவாக இருக்கிறார்., அவர் நோக்கம் அனைவருக்கும் புரிகிறது. எனவே அவருக்கு உரிய மரியாதையும் கிடைக்கிறது. பத்திரிக்கைகள் தூக்கி வைத்து எழுதுவது வைகோவிற்குப் பாதகமென்றால் (போட்டு உடைக்கிறதுக்குத்தான் 'தூக்கி' எழுதுகிறார்கள் என்பது, உணர்ச்சிக் கொந்தளிப்பில் புரிந்தால்தானே?) ., ராமதாஸ் அவர்களை குறைத்து பத்திரிக்கைகள் எழுதுவது அவருக்கு பலம். பத்திரிக்கையின் பாராட்டுதல்கள் இல்லை. அனாவசியமான 'இமேஜ்' ஸ்டண்ட்கள் இல்லை., சாதிகட்சி என்ற முத்திரை இத்தனையும் தாண்டித்தான், கட்சியை வளர்த்து வந்திருக்கிறார்.

வைகோவின் நேர்மையான 'இமேஜ்'., தமிழகம் தாண்டியும் அவரின் மதிப்பு, உயிர்கள் மடிய மலர்ந்த கட்சி., கலைஞரை சாடுவதைக் காட்டிலும்., வைகோவைத் தூக்கி வைப்பது அதிக பலன் தரும் என நினைக்கும் பத்திரிக்கைகளின் புகழ்ச்சி பத்தாததிற்கு அம்மாவே அழிக்க நினைத்து உள்ளே போட்டு பன் மடங்கு விளம்பரத்தைத் தேடிக் கொடுத்தும்., அரசியல் செய்வதை விட்டுவிட்டு நடை பயணமும், தூர் வாரிக்கொண்டும் (இது ஒண்ணுதான் மக்களுக்கு பயன் உள்ளது)., கபடி, பந்து போட்டி நடத்திக் கொண்டும் இருந்துவிட்டு தேர்தல் நேரத்தில் அரசியல் செய்கிறார். அதையாவது ஒழுங்காகச் செய்கிறாரா?.

//ஜெயலலிதாவின் கொள்கைகள் பற்றி யாரும் பேசுவதில்லை//
என்ன கொள்கை அவங்களுதுன்னு தெரியாம இருக்கலாம்(!)., கட்சிய ஆரம்பித்தவர்களுக்கு, அது ஆரம்பித்த பிறகு வளரும் வரை கூட இருந்தவங்களுக்கு கொள்கை இருக்கும் அல்லது ஏற்கனவே அக்கட்சிக்கு கொள்கை இருந்தது பற்றித் தெரியும்(!!). தேர்தல் நேரத்து சலுகைகள்தான் அவரது கொள்கைகள் இப்போது. அசட்டுத் தைரியம், அசத்திய துணிவாம். என்ன செய்வது எனத் தெரியாமல் பேசாமல் இருந்தால், 'மே...லிடம்' அர்த்ததுடன் மவுனம் காக்கிறதுன்னு எழுதுறாங்க., இவங்கள அர்த்தம் கண்டுபிடிக்க சொல்லிவிட்டு அவர் அமைதியாவே உக்கார்ந்து இருக்கலாம்.

//இந்திய இறையாண்மையை காப்பாற்ற ஜெயலலிதா செய்த இந்த மகத்தான காரியத்திற்காக ஒரு பிரபலமான அரசியல் "விமர்சகர்" ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போடுங்கள் என அவரின் வாசகர்களுக்கு பரிந்துரை செய்தாராம்//.
மற்றவர்களுக்கு இறையாண்மை என்பது இறையுணர்வு மாதிரி புனிதமென கற்பிக்கப்பட்டது எதற்கு?அரசியல் விமர்சனம் செய்யும் அவர்களுக்கு அவர்களை வளர்க்க உதவுமொரு உத்தி தேவையா?, இல்லயா?. டெல்லிவரை எங்களால் சலம்ப முடியும் என சினிமாக் காட்ட தேவைப்படும் அல்லவா சில சுருள்கள்?.

//மக்களின் தேவை அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான வாழ்வியல் பிரச்சனைகள் தான். இவை தான் தேர்தலில் முக்கிய பிரச்சனை//.
இது உண்மையானால்., சலுகைகள் வெல்லும் என்கிறீர்கள். தேர்தல் நேர பிரச்சாரத்தைப் பற்றி சொல்லவில்லை?. ஒரு கட்சி வெல்வதற்கு அன்றாடப் பிரச்சனையைக் காட்டிலும்., தேர்தல் நேர பிரச்சாரமும், பேரமும் உதவுகின்றன. சில நேரங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களும், (தற்போது) தொழிற் சங்கங்களும்(???!!!!!!) வலைவீசி ஓட்டுமீன் பிடிக்க எத்தனிக்க மாட்டுவது எப்போதும் தேவைகுறையா, தமிழனின் தலைதான். இத்தேர்தலில் பார்ப்போம் என்னவென்று.

2:30 AM, March 11, 2006
Anonymous said...

திசை திருப்பும் எண்ணம் இல்லை. ஆனால் அதில் வல்லவரான ஒருவர் ஆங்கிலத்தில் என்ன பித்ற்றியிருக்கிறார் என்பதை அறிந்து பின்னூட்டும் அன்பர்கள் சசியின் 'தமிழக அரசியலில் கொள்கைகள்' பற்றி மட்டும் பேசவும்

3:10 AM, March 11, 2006
Unknown said...

ஜெயஸீரியின் பெரியார் புரிதல் இணையத்திலிருந்து ((!!) அண்ணா கொள்கை வேட்டி, பெரியார் கொள்கை பேண்ட்., இதிலிருந்தெல்லாம் பெரியாரை புரிந்து கொண்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன் :)) ஏற்பட்ட புரிதல் என்று அவரே சொல்லி விட்டதால் அதைப் பற்றி புரிய வைப்பதும்., அதன் மீதாக இத்தனை பேர் விவாதித்தும் கொடுங் கால விரையம் என்றே நான் நினைக்கிறேன் (என்னளவில் அப்படி நினைக்க எனக்கு உரிமை உண்டு!!!).

//அது சசியாக இருந்தால்) நியாயமான பதிவாகவும், அல்லாதபோது (ஸ்ரீரங்கத்தில் பிறந்தவளாக இருந்தால்) அது நம்பமுடியாத பாசிசமாகவும் இரட்டை நிலை எடுக்கப்படுகிறது என்பதே.//

இப்படிச் சுழி (ஆரம்பித்தல்) போட்டால் அது நியாயம்.

//பெரியாரைப் புரிந்து கொள்வதில் இருக்கும் இந்த வேறுபாடு தான் நெய்வேலியில் பிறந்த சசியையும் (நெய்வேலி எல்லாப் பிரிவு மக்களும் இருக்கும் சிறு ஊர்) ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர்களையும் வேறுபடுத்தி காட்டுகிறதோ என்னவோ //

இந்த வாக்கியத்தில் உண்மை இல்லையா?., இது இணையத்தனமான விவாதமாகி விடுகிறது.

//ஸ்ரீரங்கம் பன்முகத்தன்மை கொண்டதை ஒருமுறை போய்வந்து அறியவும்//
நான் நிறையமுறை ஸ்ரீரங்கம் போய் பிராமணர் அல்லாதவர்களுக்கு வீடு வாடைக்கு விட முடியாத பன்முகத் தன்மையெல்லாம் பார்த்திருக்கிறேன். என் தோழி வீட்டிற்கு நான் சென்ற போது என்னை ஐயங்கார் என வீட்டு சொந்தக்கார அம்மாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள்., எல்லையில்லாக் கோபத்தை கட்டுபடுத்த முடியாமல் நான் நின்ற போது., அந்த அம்மா நீ வடமாவா? தென்மாவா? வாய் திறந்தது ம்... தோசை மாவு எனப் பதில் கொடுத்துவிட்டு வெளியே வந்தது இந்தப் பன்முகத்தை படித்தபோது நினைவுக்கு வந்து படுத்துகிறது.

//ஆனாலும் மதமும் அரசியலும் கலக்கக்கூடாது என்பது முக்கியமானது.//
அவரின் மதம் பற்றிய புரிதல்களும், அரசியல் பற்றிய தெளிவும் இந்த ஒரு வரியிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அவர் பிறரைப் பார்த்து அதிர்ச்சி அடைவதைப் போல என்னால் அதிர்ச்சியெல்லாம் அடைய முடியவில்லை. இயல்பானது என்றே புரிந்து கொள்கிறேன்.

//எப்பொழுதாவது அவரவர் பெயர், ஊர், பின்புலங்கள் படித்தவன்/படிக்காதவன், நீ ஆண்/பெண் எல்லாம் உதறி அல்லது விட்டுவிடுதலையாகி//
இங்கு ஜெயஸிரியைத் தவிர யாரும் முதலில் ஊரைச் சொல்லவில்லை (இப்பதிவில்), ஊரைச் சொல்லி விட்டால்தான் பின்புலம் தெளிவகாத் தெரிகின்றதே., (நான் மதுரைன்னா ஜெயஸிரிக்கு என் பின்புலம் புரியுமே அப்படி)., விட்டு விடுதலையாகுங்க!!.

//சூரியன் கிழக்கே உதிக்கும்.
சூரியன் உதிக்கும் திசைதான் கிழக்கு.//
புல்லரிக்கிறது, நிசமாங்க!!. இதையெல்லாம் படிச்ச பிறகு ஒண்ணு புரியுது. பெயரிலி நிச்சயம் ஜெயஸிரியெல்லாம்....... பிரேக் போடுவாங்கன்னு நினைக்க சான்சே இல்ல :-)) !!. தங்கமணி அவர்களைத் 'தலை'யாக்கிய வேகம்., தங்கமணியின் பதிவுகளை உண்மையாகவே படித்து புரிந்து கொண்டிருக்கிறார் போல என்றே எண்ணவைக்கிறது :-)).

3:36 AM, March 11, 2006
Sami said...

அருமையான ஒரு அலசல்.

வாழ்த்துக்கள்.

12:27 AM, March 12, 2006
Muthu said...

apdipodu,

thanks

remaining part of this feature film(periyar discussion) is shifted to thangamani's blog...

1:53 AM, March 12, 2006
முத்துகுமரன் said...

சசி எவ்வளவோ சம்பந்தமில்லாத பின்னூட்டங்களுக்கு மத்தியில் என்னோடதையும் ஒன்றாக சேர்த்து கொள்ளுங்கள்.....

நான் பிறந்தது ஸ்ரீங்கத்தில்தான். பிறகு 1992லிருந்து 2004 வரைக்கும் ஸ்ரீரங்கம்தான்.

jsri சொல்ற பன்முகத்தன்மை வாய்ந்த ஸ்ரீரங்கம் உத்திர, சித்திர, அடையவளஞ்சான் வீதிகள்தான்னு நினைக்கிறேன். ஸ்ரீரங்கம்ங்கிறது அதைத்தாண்டிய பகுதிகளையும் உள்ளடக்கியது என்றும் நம்புகிறேன். அந்த பகுதிகளை எல்லாம் பார்த்திருந்தால் பல அவலங்கள் மாறியிருக்கவில்லை என்ற எதார்த்தத்தை அறிந்திருப்பார்.

அங்கு இருக்கும் மிகச்சிறந்த ஆசிரியர்கள் Tutionக்கு சேர்த்து கொள்ளும் மாணவர்களைப் பார்த்தாலே புரியும் சமத்துவம் இன்னும் வந்துவிடவில்லை என்பது.
(இப்போது சற்று மாறி இருப்பதாக அறிகிறேன்- எல்லாம் காந்தியார் மீது வந்துவிட்ட பற்றினால் கூட இருக்கலாம்- வாழ்க காந்தி:-)),
விதிவிலக்குகளை கொண்டு ஒரு விவாதத்தை கட்டி எழுப்ப முனைந்தால் அதனால் ஒரு பயனும் இருக்காது.

-
பதிவைப் பற்றி,

மிகச் சிறப்பான அலசல்.....

திருமா. வை.கோ. ராமதாஸ், கலைஞர் போன்றோரிடம் கொள்கை கேள்வி எழுப்பும் நண்பர்கள், பத்''திரி''க்கையாளர்கள், குறிப்பாக நடுநிலைவாதிகள்:-)) ஜெ, அத்வானிகளைப் பற்றியான செலக்டீவ் அம்னீசியாவால் பீடிக்கப்பட்டிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறீர்கள்.

நன்றி

11:09 AM, March 12, 2006
Anonymous said...

//jsri சொல்ற பன்முகத்தன்மை வாய்ந்த ஸ்ரீரங்கம் உத்திர, சித்திர, அடையவளஞ்சான் வீதிகள்தான்னு நினைக்கிறேன். ஸ்ரீரங்கம்ங்கிறது அதைத்தாண்டிய பகுதிகளையும் உள்ளடக்கியது என்றும் நம்புகிறேன். அந்த பகுதிகளை எல்லாம் பார்த்திருந்தால் பல அவலங்கள் மாறியிருக்கவில்லை என்ற எதார்த்தத்தை அறிந்திருப்பார்.//

very true!!!!!!

10:52 PM, August 29, 2006