வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Wednesday, September 26, 2007

திலீபன், காந்தி, அகிம்சை

இது கடந்த ஆண்டு எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

இன்று திலீபன் மறைந்த நாள். 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்காக அற்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சை போராட்டத்தை அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கி தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார். அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.

திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன்.

திலீபனுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திலீபன் காந்தீய வழியில் தன் போராட்டத்தை முயன்றார். ஆனால் காந்தி போல முயலவில்லை. திலீபன் தன் உயிரை ஒரு பொருட்டாக கருதவில்லை.

அகிம்சை ஒரு நெடிய போராட்டம். போராடிக் கொண்டே இருக்கலாம். முடிவு போராட்டத்தின் கையில் இல்லை. எதிராளியின் வலிமையை பொறுத்தே உள்ளது.

அகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்து விட வில்லை. இந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் இந்தியா விடுதலையான அதே நேரத்தில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்ற இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்றவற்றின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது எது ? அகிம்சையா ?

"காந்தி தாத்தா வாங்கிக் கொடுத்த சுதந்திரம்" என பாடபுத்தகங்களும், திரைப்படங்களும், ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய அகிம்சை பிம்பம் நம் மூளையை சளவை செய்ததில் இருந்து நாம் வெளியேறவேயில்லை. இந்தியா பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் ஒரு காலனியாக உருமாறியத்தற்கும் சரி, பிறகு விடுதலையானதற்கு சரி - முக்கிய காரணம் - பொருளாதாரம் தான்.

in the larger world it came eventually to be realized that colonial territory was only marginally relevant to economic progress, if it was relevant at all. The dissidence and revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers are often credited with bringing the colonial era to end. More attention might well be accorded to the rather simple but persuasive fact that colonies had become no longer economically worthwhile. Territory was not the thing.

என்று தன்னுடைய "A Journey Through Economic Time" என்ற புத்தகத்தில் கூறுகிறார் புகழ்ப் பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் கால்பிரைத். காலனியாதிக்கத்தின் விடுதலைக்கு revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers தான் காரணம் என்பதை கால்பிரைத் மறுக்கிறார். காலனியாதிக்கத்தின் முடிவுக்கு colonies had become no longer economically worthwhile என்பது தான் காரணம் என்கிறார் கால்பிரைத்.

இவரின் இந்த வாதம் தவிர வரலாற்றை பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இது நமக்கு தெளிவாக புரியும். சோழர் கால வரலாறு முதல் இன்றைய இராக் யுத்தம் வரை அனைத்திற்கும் பொருளாதாரம் தான் அடிப்படைக் காரணம் என்னும் பொழுது அந்த பொருளாதார காரணிகளை விலக்கியே வரலாற்றை மக்களுக்கு நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றளவும் உலகில் உருவான பன்னாட்டு தனியார் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்த நிறுவனம் - பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தான். வணிக நோக்கங்களுக்காக உள்ளே நுழைந்து பின் படிப்படியாக நாடு பிரிட்டிஷ் எகிதிபத்திய அரசிடம் சென்று சேர்ந்தது வரலாறு. பொருளாதார காரணங்களுக்காக முதலில் தொடங்கிய காலனியாதிக்கம், பின்பு படிப்படியாக மாறி நாடு பிடிக்கும் ஆசையாக உருவெடுத்தது. பின் தங்கள் நாட்டின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிற நாடுகளை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதாக மாற்றம் பெற்று விட்டது.

இவ்வாறு உருவான பிரிட்டிஷ் எகாதிபத்தியம் ஒரு கட்டத்தில் உலகின் கால்வாசி இடத்தை தன் வசம் வைத்திருந்தது. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இவ்வாறு உருவான நிலையில் தான் இந்த மிகப் பெரிய பரப்பளவை நிர்வகிப்பதில் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. இந்தச் சூழ்நிலையில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் தான் இந்தியா உள்ளிட்ட பல காலனியாதிக்க நாடுகள் விடுதலைப் பெற முக்கிய காரணமே தவிர, அகிம்சைக்கு பெரிய பங்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை.

இரண்டாம் உலகப் போர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. போரினால் நிர்மூலமான பொருளாதாரத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்தது. அவ்வாறான தேவைக்கு இடையே ஒரு தூர தேசத்தில் இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளை பராமரிப்பது பெருத்த சவால் மிகுந்த காரியமாகவே இருந்தது. இந் நிலையில் தான் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் விடுதலைப் பெற்றன. இரண்டாம் உலகப் போருக்குப் முன்பு வரை மிக வலுவான பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் விளங்கிய பிரிட்டன் போருக்குப் பின் உலக அரசியலில் தன் முக்கியத்துவத்தை இழந்து அமெரிக்காவும், சோவியத் யூனியனும் வலுப்பெற தொடங்கியதன் பிண்ணனியும் இந்திய விடுதலையின் பிண்ணனியும் ஒன்று தான் - அது பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சரிவு.

காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்ற வகையில் அகிம்சை இந்திய விடுதலைக்கு முக்கிய காரணமாக உருவாக்கப்பட்டதே தவிர, இந்திய விடுதலை அகிம்சையால் மட்டுமே நிகழ வில்லை.

காந்தியின் அகிம்சை போராட்ட முறையாகட்டும், பாலஸ்தீனம், இலங்கை, காஷ்மீர் போன்ற இடங்களில் நடக்கும் ஆயுத போராட்டம் ஆகட்டும் - இவற்றுக்கு ஒரு பொதுவான அடிப்படை உள்ளது

தங்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்க, தாங்கள் எதிர்த்து போராடும் நாடுகளின் பொருளாதார அடித்தளத்தை தகர்ப்பது தான் இந்த பொதுவான நோக்கம். காந்தியின் நோக்கமும் அது தான், பிரபாகரனின் நோக்கமும் அது தான், ஹமாஸ் அமைப்பின் நோக்கமும் அது தான்.

ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலையை ஆதரிக்காத காந்தி, பிறகு நடத்திய பல போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க தான் முற்பட்டது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி அகிம்சை. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றாலும், அந்த அரசாங்கத்தை பிரிட்டிஷாரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடத்திக் கொண்டிருந்தவர்கள் "இந்தியர்கள்" தான். இந்தியா போன்ற பெரிய நாட்டினை நிர்வாகிக்க கூடிய ஆட்பலமோ, இராணுவ, காவல்துறை எண்ணிக்கை பலமோ (ஆயுத பலம் அல்ல) பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இல்லை. அவர்கள் இந்தியர்களைச் சார்ந்தே தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அவ்வாறான நிலையில் பிரிட்டிஷ் ஆட்சியை முடக்க வேண்டுமானால் அவர்கள் செயல்படுவதை முடக்க வேண்டும். இந்தியார்கள் பிரிட்டிஷ் வேலையைப் புறக்கணித்தால், பிரிட்டிஷாரின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அதைத் தான் காந்தி செய்ய முயன்றார். ஆனால் அதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றார் என்பதை வரலாற்றை புரட்டுபவர்களுக்கு புரியும்.

இங்கு கவனிக்க வேண்டியது, ஆயுதப் போராட்டம் இல்லாமலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதை காந்தி முன்னெடுத்தார். அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க வில்லை என்றாலும் ஒரு புது போராட்ட முறையை அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஆனால் இந்த நிலையா இன்று ஆயுதப் போராட்டம் நடைபெறும் நாடுகளில் உள்ளதா ?

மக்கள் எண்ணிக்கை, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சிறுபாண்மையாக உள்ளவர்களின் போராட்டம் எந்த வகையிலும் அகிம்சையை கொண்டு நடக்க முடியாது. காரணம் இலங்கை பொருளாதாரம் தமிழர்களை நம்பி இல்லை. இந்திய பொருளாதாரம் காஷ்மீரை நம்பி இல்லை. இந்த சிறுபான்மை இனத்தவரின் அகிம்சை போராட்டத்தை நசுக்க கூட வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் கூட இந்த போராட்டம் பல ஆண்டு காலம் நடந்து கொண்டே இருக்கும். இது தான் இலங்கையிலும், காஷ்மீரிலும் ஆரம்ப காலங்களில் நடந்தது.

இத்தகைய நிலையில் தான் அகிம்சை என்பது அர்த்தமில்லாமல் போய் விட்டது. இலங்கை, பாலஸ்தீனம், காஷ்மீர் போன்ற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அவர்கள் எதிர்த்து போரிடும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதில் தான் உள்ளது. அதனால் தான் ஆயுதப் போராட்டங்கள் தொடங்குகின்றன. ஒரு விடயத்தை கவனிக்கலாம். இன்று இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியிருக்காவிட்டால் இலங்கை பொருளாதார ரீதியில் நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும். சிங்கள ஆதிக்கம் முழுமை பெற்றிருக்கும். மாறாக ஆயுதப் போராட்டம் சிங்கள ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாமல், இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தும் இருக்கிறது.

அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறை அல்ல. அது ஒரு கவன ஈர்ப்பு. இந்த கவனஈர்ப்பை காந்தி சரியாக நடத்தினார். ஆனால் திலீபன் அகிம்சையை தன் போராட்ட வடிவமாக எடுத்தார். அதன் பலன் அவர் உயிர் இழப்பு.

திலீபனின் நினைவு தினம் அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறையல்ல என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி விட்டுச் செல்கிறது

Leia Mais…
Tuesday, September 25, 2007

சேது சமுத்திரம் : சுற்றுப்புறச்சூழல்


சேது சமுத்திரம் திட்டம் குறித்த பொருளாதார வாய்ப்புகளை கடந்த கட்டுரையில் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையில் நான் சுற்றுப்புறச்சூழல் குறித்த எனது கருத்துக்களையும் கூறியிருந்தேன். சேது சமுத்திரம் திட்டத்தை சுற்றுப்புறச்சூழலுக்காகவும், மீனவர்களின் வாழ்வியலுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளுக்காகவும் மட்டுமே எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

சுற்றுப்புறச்சூழலுக்கு இந்த திட்டம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை சில கட்டுரைகள் விரிவாக அலசுகின்றன. அந்தக் கட்டுரைகளை மட்டும் இங்கே தருகிறேன்.

சேது சமுத்திரம் பகுதியில் பெரிய அளவில் கப்பல் போக்குவரத்து இல்லாத காரணத்தால் அங்கு பல அரிய வகை கடல் இனங்கள் இருப்பதை இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது. "மனிதம்" என்னும் தமிழ் தன்னார்வ அமைப்பு இந்த அறிக்கையினை தயாரித்துள்ளது.

Impact on the Environment - Manitham Report

அது போலவே மிக அரிய வகை கடல் ஆமைகள் போன்றவற்றுக்கும் இந்த திட்டம் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது

Sethusamudram canal may disturb endangered turtles

****
ஆதம் பாலம் குறித்த நாசாவின் விளக்கத்தை இங்கே படிக்கலாம்

Space photos no proof of Ram Sethu: NASA

****

சேது சமுத்திரம் திட்டம் ஏற்படுத்தக்கூடிய இந்த சுற்றுப்புறச்சூழல் பிரச்சனையை சங்பரிவார் கும்பல் தங்களுக்கு சாதகமாக திரித்து கொள்ள முனைகின்றனர். அவர்கள் கருத்துப்படி இதனை கட்டியது இராமனும், சில குரங்குகளும் :)) என்றால் இது செயற்கை தானே ? எப்படி இயற்கை ஆகும் :)

Leia Mais…
Monday, September 24, 2007

சேது சமுத்திரம் : பொருளாதார வாய்ப்புகள் : கலைஞரை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தலைக்கு சங்பரிவார் "முட்டாள் கூட்டம்" தங்கக்காசுகளை விலையாக நிர்ணயித்து இருக்கின்ற கேலிக்கூத்தான நிகழ்வுகளும், தன்னுடைய ஓட்டு வங்கிக்காக அத்தகைய காவிக்கூட்டங்களின் அறிவிப்பினை கைக்கட்டி அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் அரசாங்கமும் அணு ஆயுத, பொருளாதார வல்லரசான இந்தியாவின் விஞ்ஞான அறிவினை கேலிக் கூத்தாக்கி இருக்கிறது. இந்தியாவின், இந்தியர்களின் இத்தகைய "விஞ்ஞான அறிவு" உலகெங்கும் சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடு என கூறிக்கொண்டாலும் அவ்வப்பொழுது தன் மதச்சார்பின்மை முகமூடியை விலக்கி "காவிச் சாயத்தை" வெளிப்படுத்தும். அத்தகைய தருணங்களில் இதுவும் ஒன்று. பாக்கிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இருக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் குறித்து நம்மவர்கள் குறை கூறுவதும் நக்கல் அடிப்பதும் எப்பொழுதுமே வழக்கமானது. இந்த பிரச்சனையில் இந்தியர்களின் மத அடிப்படைவாதம் தெளிவாக வெளிப்பட்டது என்பது தான் உண்மை.

பொருளாதார, இராணுவ வல்லரசான இந்தியாவில் இப்பொழுது முக்கிய பிரச்சனை குரங்குகள் கூட்டணியுடன் ராமர் கட்டியதாக கதையளக்கப்படும் ஆதம் பாலம் என வழங்கப்படும் தீவுக்கூட்டம். இந்த ஆதம் பாலத்தை பல தலைமுறைகளாக ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் மக்கள் மணல் திட்டு என்றே வழங்கி வருகிறார்கள். ஆனால் திடீரென்று வலதுசாரி இந்துத்துவா கும்பல் இதனை "ராம் சேது" என பெயர் மாற்றம் செய்து விட்டது. இவர்களின் வாதத்திற்கு வக்காலத்து வாங்குவது போல வட இந்திய ஊடகங்களும் இதனை ஓங்கி முழங்கி வருகின்றன.

பெரும்பாலான வட இந்திய ஊடகங்களில் எப்பொழுதுமே வலதுசாரி முழக்கங்கள் காணப்படுவது வழக்கமான ஒன்று. இந்தியாவின் ஆங்கில செய்தி ஊடகங்களில் தென்னிந்தியச் செய்திகள் குறித்து விவாதிக்கப்படும் பொழுது கூட வட இந்திய வாடையும்/பார்வையும் முழுமையாக வீசிக்கொண்டிருக்கும். உண்மையை தெரியாத அரைகுறை செய்தியாளர்களின் உளறல் எப்பொழுதுமே இருக்கும். இப்பொழுது அது உச்சகட்டத்தில் இருக்கிறது. இந்த திட்டம் குறித்து தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்ப படுகின்றன. ஹிந்து போன்ற தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் அவற்றில் விதிவிலக்கானவை. (ஹிந்துவின் அரசியல் வேறு வகையானது).

****

சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவு என்பதில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. தமிழனின் பொருளாதாரம் இதை நம்பி மட்டுமே இன்றைக்கு இல்லை. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழகம் முதல் 3 இடத்தில் இருக்கிறது. தமிழகத்திற்கு ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வந்து கொண்டிருக்கிறன. இவை அனைத்துமே தமிழ்நாட்டின் இயற்கையான சூழல் காரணமாகவும், தமிழனின் மனித வளம் காரணமாகவே வந்துள்ளன. மைய அரசாங்கத்தின் பங்களிப்பு மிகவும் குறைவே. நெய்வேலி போன்ற பகுதிகளில் கூட தமிழகத்தின் இயற்கை வளம் காரணமாகத் தான் மைய அரசு நிறுவனங்கள் உள்ளனவே தவிர வேறு எந்தக் காரணங்களாலும் அல்ல. நெய்வேலியில் தமிழகத்தின் இயற்கை வளத்தை உறிஞ்சும் மைய அரசாங்கம் தமிழகத்திற்கு ராயல்டி கூட வழங்குவதில்லை. பல தலைமுறைகளாக நெய்வேலியில் இருந்த என்னுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக இழந்தது அதிகம். பலன் பெற்றது ஒன்றுமே இல்லை.

மைய அரசாங்கத்திடம் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த திட்டங்களில் சேது சமுத்திரமும் ஒன்று. 1955ல் இந்த திட்டம் குறித்த முதல் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக இந்த திட்டம் மைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டது. அன்றைக்கு இந்த திட்டத்தின் மதிப்பு வெறும் 9.98கோடி. ஆனால் இதே காலக்கட்டத்தில் வட இந்திய மாநிலங்களில் இந்திய அரசாங்கம் செய்த பொருளாதார முதலீடு எவ்வளவு என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இன்றைக்கு மைய அரசாங்கத்தின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளதால், 9.98கோடி கூட தராமல் தள்ளிப்போடப்பட்ட ஒரு திட்டம் இன்று சுமார் 2500 கோடி ரூபாய் செலவில் தமிழகத்திற்கு கிடைக்கிறது.

இந்த திட்டத்தின் பொருளாதார வாய்ப்புகள் குறித்து பல ஆய்வாளர்களின் அறிக்கைகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அனைத்து அறிக்கைகளுமே இந்த திட்டத்திற்கு எதிராக உள்ளவை மட்டுமே. ஆனால் இந்த திட்டம் லாபம் தரும் எனக்கூறிய ஆய்வாளர்களின் அறிக்கைகளும் உள்ளன. அந்த அறிக்கைகள் வெளியாவதில்லை. எது அதிகளவு விளம்பரப்படுத்தப்படுகிறதோ அதைச் சார்ந்தே ஒரு கருத்து ஒற்றுமை உருவாகிறது. ஊடகங்களின் நோக்கமும் அது தான். இந்திய ஊடகங்களின் பல இரட்டை வேடங்களில் இதுவும் ஒன்று. இடஒத்துக்கீடு காலத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டினை வைத்து தன் கோர முகத்தை வெளிப்படுத்தியவை தான் இந்த ஊடகங்கள். மற்றொரு முறை அந்த ஊடகங்களின் வட இந்திய/பார்ப்பனிய/பனியா முகம் வெளிப்படுகிறது.

இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன ? தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் பொருளாதாரம் உயரும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அவ்வாறு பார்க்கும் பொழுது இந்த திட்டம் நிச்சயம் தமிழகத்தின் தற்பொதைய பொருளாதாரத்தை மேலும் பெருக்கும். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். மென்பொருள் துறையை விட்டுவிடுவோம். குறிப்பாக கார் மற்றும் ஆட்டோமோபைல் சார்ந்த தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் அதிகம். சென்னை இந்தியாவின் டெட்ரோய்ட் (Detroit) என்று அழைக்கப்படுவதன் முக்கிய காரணம் சென்னையின் உள்கட்டமைப்பு. முக்கியமாக சென்னை துறைமுகம். Manufacturing தொழிற்சாலைகள் அமைக்க துறைமுகம் மிகவும் அவசியம். சென்னையில் ஒரு போர்ட், ஹுண்டாய் தொழிற்சாலை தொடங்கப்படுகின்றன என்றால் அதைச் சுற்றி அந்த தொழிற்சாலைக்கு தேவைப்படும் பல உதிரிப்பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை அவசியமாகிறது. இதனால் பல சிறிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. அதைத் தவிர மிக சுலபமாக தயாரித்த பொருள்களை ஏற்மதி செய்ய துறைமுகம் அவசியம்.
சென்னை துறைமுகம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய துறைமுகமாக விளங்குவதன் காரணமாகத் தான் இன்று சென்னைக்கு அருகே பல ஆட்டோமோபைல், தொலைத்தொடர்பு சாதனங்களின் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன.

சேது சமுத்திரம் என்பது வெறும் கால்வாய் வெட்டும் வேலை மட்டுமே அல்ல. அது பொருளாதார வளர்ச்சியையும் கொண்டு வரும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. சேது சமுத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் இந்த திட்டம் குறித்த பொருளாதார வாய்ப்புகள் அதிகளவில் ஊடகங்களில் வெளியாகின. பல வணிக ஊடகங்களிலும் அவ்வாறான செய்திகளே வந்தன. ஆனால் இன்று காவிக்கூட்டத்தின் முட்டாள்தனத்திற்கு தீனி போடும் வகையில் செய்திகள் வந்து கொண்டிருப்பது அந்த ஊடகங்களின் இரட்டை வேடத்தை தான் தெளிவுபடுத்துகிறது.

பொதுவாகவே இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாலேயே பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சீனா பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி பெற காரணம் அந் நாடு மிக வேகமாக தனது உள்கட்டமைப்பை பெருக்கி கொண்டுள்ளது தான். உள்கட்டமைப்பு என்னும் பொழுது மிகத் தரமான சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, மின் உறபத்தி என அனைத்துமே அடங்கும். சேது சமுத்திரம் போன்ற திட்டங்கள் உள்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கதக்கவை என்ற அளவுகோளில் தான் பார்க்கப்பட வேண்டும். மாறாக கடல்போக்குவரத்து மட்டுமே என்பதாக இதனை அணுக முடியாது.

சேது சமுத்திர திட்டம் லாபத்தை கொண்டு வந்து விடாது என்று கூறும் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், லாபத்தை இந்த திட்டம் கொடுக்கும் என்ற செய்திகளை/ஆய்வறிக்கைகளை ஏன் வெளியிடுவதில்லை ?

இந்த திட்டத்தால் லாபம் உண்டு/இல்லை என்ற இரண்டுமே வெறும் ஊகங்கள் தான். இதில் எது உண்மை, பொய் என யாரும் உறுதியாக கூறிவிட முடியாது.

தூத்துக்குடி துறைமுகம் குறித்து ஆய்வறிக்கை ஒன்றினை தயாரித்த PricewaterhouseCoopers இவ்வாறு கூறுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் இந்த வாய்ப்பினை பெருக்க சேது சமுத்திரம் மிகவும் அவசியம்.

THE Tuticorin port has the potential to become an international container transhipment hub given its unique geographical location, says a feasibility study by PricewaterhouseCoopers Pvt Ltd (PwC).

இது தவிர சேது சமுத்திர திட்டம் குறித்த feasibility அறிக்கையினை L&T Ramboll ஏற்கனவே வழங்கியுள்ளது.

ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் பார்த்தாலே தூத்துக்குடி துறைமுகம் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்பது புரியும். கொழும்பு துறைமுகத்தில் நடக்கும் சரக்கு போக்குவரத்தில் சுமார் 40% இந்தியாவின் கிழக்கு மேற்க்கு பகுதிகளுக்கு நேரடியாக செல்ல முடியாத காரணத்தால் கொழும்பு துறைமுகத்தின் மூலமாக நடக்கிறது. சேது சமுத்திரம் திட்டம் அமல் படுத்தப்பட்டால் இது தூத்துக்குடி துறைமுகம் மூலமாக நடக்கும்.

The Colombo port currently handles 1.7 million twenty-foot equivalent units (TEUs) of which 40 per cent is Indian transhipment cargo. It fears Sethusamudram project can wean away a substantial chunk of it.

உண்மைகள் இவ்வாறு இருக்க காவிக்கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் வகையில் செய்திகள் வெளியிடும் தொலைக்காட்சி மற்றும் வணிக ஊடகங்கள் குறித்து நாம் முடிவு செய்து கொள்ள முடியும்.

நான் இங்கு வைத்துள்ள புள்ளி விபரங்கள் அனைத்தும் http://sethusamudram.info என்னும் இணையத்தளத்தில் உள்ளன

****

சேது சமுத்திரம் திட்டத்தின் அடுத்த முக்கிய பிரச்சனையாக கூறப்படுவது சுற்றுப்புறச்சூழல் மற்றும் கடல் வாழ் இனங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு. இந்த பிரச்சனை குறித்து சங்பரிவார் கோஷ்டிகளுக்கு இப்பொழுது தான் தெரிகிறதா ?

சுற்றுப்புறச்சூழல் மட்டுமல்ல பல மக்களின் வாழ்வியலை குலைத்த நர்மதா அணைக்கட்டு திட்டத்தை இந்த காவிக் கும்பல் எதிர்த்ததா ? மேதா பட்கர் தனியாளாக போராடிய பொழுது இந்தியாவின் நீதிமன்றங்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகள் என அனனவருமே வளர்ச்சி திட்டத்தை மேதா பட்கர் குலைப்பதாக தானே கூறினார்கள். இந்திய உச்ச நீதிமன்றம் மேதா பட்கருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதே...

சுற்றுப்புறச்சூழல் விடயத்தில் கூட சேது சமுத்திர திட்டம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடாது என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன - Sethu project will not create geological imbalance

மீனவர்கள் கூட முன்பை விட அதிக மீன்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் - http://sethusamudram.info/content/view/20/32/

என்றாலும் இவையெல்லாம் வெறும் தியரி (theory). உண்மையில் என்ன நடக்கும் என யாரும் சரியாக கணிக்க முடியாது என்பதே உண்மை. இந்த திட்டத்தை பொருளாதார காரணங்களுக்காக ஆதரிக்கலாம். என்றாலும் சுற்றுப்புறச்சூழலுக்கு இந்த திட்டம் தீங்கு விளைவிக்க கூடிய வாய்ப்புகளை மறுக்க முடியாது. இயற்கையான எந்த ஒரு விடயத்தையும் செயற்கையாக மாற்றும் பொழுது சில எதிர்விளைவுகள் ஏற்படும். எனவே சுற்றுப்புறச்சூழலுக்காக மட்டுமே இந்த திட்டத்தை எதிர்க்கவேண்டிய அவசியம் நேருகிறது.

****

"Ram is a big lie: Karunanidhi" என்பது தான் கடந்த வாரம் பல வட இந்திய பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தி. இந்தச் செய்தியை இந்த ஊடகங்கள் அதிர்ச்சியாக வெளியிட்டு உள்ளது தான் உச்சகட்ட காமெடி. கலைஞரை சாடி பல வட இந்திய ஆங்கில நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதை கூகுள் மூலமாக படித்து சிரித்து ரசிக்கலாம் :). இதனை "Blasphemy" :) என்று கதறும் ஊடகங்களும் அடக்கம். "Even Aurangzeb or the Britishers never questioned the existence of Lord Ram," என அழுகிறார் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்

கலைஞர் ராமாயணம் என்ற கதையின் "கதாபாத்திரம்" ராமன் குறித்து பேசியது தவறு என பலர் கூறி வருகின்றனர். ஆனால் கலைஞர் கூறியதில் எந்த தவறும் இல்லை. இதனை இன்னும் வலுவாக, தெளிவாக கலைஞர் கூறியிருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே வருத்தம்.

தமிழர்களின் கலாச்சாரத்தை தட்டையாக "இந்து" என்ற சொல்லாடலில் அடைப்பதை எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த பிரச்சனையில் கலைஞர் முன்வைத்த வாதம் வட இந்தியாவில் பிரபலப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது ஒரு வகையில் நன்மையே. இந்து மத வெறியர்களை தவிர உண்மையை அறிந்து கொள்ள நினைக்கும் பலருக்கு இந்த உண்மை சென்று சேர்ந்து இருக்கிறது. பெரியார் குறித்தும் சில விவாதங்கள் நடப்பதை சில இணையத்தளங்களிலும், தொலைக்காட்சியிலும் காண முடிந்தது. Periyar An Iconoclast and a Reformer.

அது மட்டுமில்லாமல் இந்தப் பிரச்சனையின் பொழுதும், காஞ்சி மடாதிபதி கைது செய்யப்பட்ட பொழுதும், அயோத்தி பிரச்சனையின் பொழுதும் ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்து விலகி நிற்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்பதும் பிற மாநில மக்களுக்கு தெளிவாகியிருக்கும். பெரியார் மாற்றம் செய்த மண் இது. இங்கு இந்து/இஸ்லாமிய/கிறுத்துவ என எந்த மத வெறியர்களுக்கும் வேலையில்லை.

இந்தப் பிரச்சனையை இந்து வெறியர்கள் தொடர்ந்தால் இந்து மதத்தை விமர்சிப்பதை ஒரு இயக்கமாக திராவிட அமைப்புகள் "மறுபடியும்" தொடங்க வேண்டும் என்பதே என் விருப்பம். எல்லா பேதங்களையும் கலைந்து தமிழர்கள் அனைவரும் கலைஞருக்கு இந்தப் பிரச்சனையில் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகிறது.

Leia Mais…
Tuesday, September 04, 2007

இந்தியா அமெரிக்காவின் கூட்டு கடற்படை போர் ஒத்திகை...

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்து வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினத்திற்கும், அந்தமான் தீவுகளுக்கும் இடையே ஒரு மிகப் பெரிய இராணுவ போர் ஒத்திகைகளை "மலபார் 07 (Malabar 07)" என்ற பெயரில் இன்று நடத்த தொடங்கியிருக்கின்றன. இந்தியாவின் இடதுசாரிக் கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

சுமார் 26 போர் கப்பல்கள், அணுசக்தி மூலம் இயங்கும் விமனம் தாங்கி கப்பல், 160 போர் விமானங்கள் போன்றவை கொண்டு நடத்தப்படும் இந்த போர் ஒத்திகை இது வரையில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய இந்திய-அமெரிக்க கூட்டு போர் ஒத்திகை ஆகும். ஒரு காலத்தில் இராணுவ ரீதியில் எதிரும், புதிருமாக இருந்த இந்தியாவும், அமெரிக்காவும் இன்று நேச நாடுகளாக இணைந்து வருவதை தான் இந் நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

சீனாவிற்கு எதிரான ஒரு போர் உத்தியாகவும், இராணுவ கூட்டமைப்பாகவும் இது கருதப்படுகிறது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒரு அணியாகவும், அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள், இந்தியா, ஜப்பான் போன்றவை மற்றொரு அணியாகவும் ஒரு புதிய கூட்டமைப்பு உருவாகிறது.

ஐரோப்பாவில் அமெரிக்கா நிறுவ முனையும் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை (US Missile Defense System) ரஷ்யா கடுமையாக எதிர்த்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கி தனது போர் விமானங்களை NATO பகுதிகளுக்கு ரஷ்யா அனுப்ப தொடங்கியிருக்கிறது. சோவியத் யூனியன் பனிப்போர் காலங்களில் இவ்வாறு செய்வது வழக்கம். ஆனால் பனிப்போர் முடிவடைந்து சோவியத் யூனியன் சிதறியதை அடுத்து ரஷ்யா தனது உள்நாட்டு மற்றும் பொருளாதார தேவைகளை முன்னெடுத்தது. ஆனால் வளர்ந்து வரும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தடுக்க ரஷ்யா இப்பொழுது அதிரடியாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன் ஒரு பகுதி தான் பனிப்போர் கால போர் நடவடிக்கைகளை ரஷ்யா இப்பொழுது மறுபடியும் தொடங்கியிருக்கிறது.

வளர்ந்து வரும் பொருளாதார சூழ்நிலை சீனா-ரஷ்யா VS அமெரிக்கா இடையே ஒரு மோதலை எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடமோ என்ற எண்ணத்தை இந்த சில நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. அமெரிக்காவின் நேச நாடாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இந்தியா நினைக்கிறது. ஆசியாவில் மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சீனாவை சமாளிக்க இந்தியாவை தன் பக்கம் இழுக்க அமெரிக்கா நினைக்கிறது

வங்காள விரிகுடாவின் தற்போதைய போர் ஒத்திகை கூட மலாக்கா நீரிணைவு காரணமாகத் தான் முன்னெடுக்கப்படுகிறது. மலாக்கா நீரிணைவு உலகின் கடற்போக்குவரத்து அதிகளவில் இருக்கும் பகுதியாகும். உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் 50% மலாக்கா நீரிணைவு வழியாகத் தான் நடைபெறுகிறது. உலக மொத்த வர்த்தகப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பகுதியில் தான் நடைபெறுகிறது. ஜப்பானின் எண்ணெய் தேவைகளில் சுமார் 80% இந்தப் பகுதி வழியாகத் தான் நடைபெறுகிறது. மலாக்கா நிரிணைவு சீனாவை ஆசியாவுடன் இணைக்கும் பகுதி என்பதும், சீனா தனது 60% எண்ணெய் தேவைகளுக்கு இந்தப் பகுதியையே நம்பி இருக்கிறது என்பதும் இந்தக் கடற்பகுதியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும்.

இவ்வாறான ஒரு பிராந்திய சூழல் தான் இந்துமா பெருங்கடலில் தமிழ் ஈழம் என்னும் தனி தேசம் அமைவதற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் புலிகளின் கடற்படை பலம் இந் நிலையை மாற்றவும் கூடும். அது புலிகளின் பலத்தை பொருத்தது. இது குறித்து முன்பு "சதுரங்க ஆட்டத்தில் தமிழீழம்" என்னும் கட்டுரை தொடரில் நான் எழுதிய ஒரு சிறு பகுதியை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

மாறிவரும் உலகச் சூழலில் இந்தியா-அமெரிக்கா இடையே பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து உள்ள நிலையில் அமெரிக்க-இந்திய கடற்ப்படைகளுக்கு இடையே திரிகோணமலை துறைமுகம் சார்ந்த கடந்த கால பிரச்சனைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் குறைவே. ஆனால் நாடுகளிடையே வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்புகள், உலகமயமாக்கம் போன்றவை இலங்கையின் பொருளாதார கேந்திர முக்கியத்துவத்தை அதிகரித்து உள்ளன. இந்த முக்கியத்துவத்தின் காரணமாகத் தான் உலகநாடுகள் இலங்கைப் பிரச்சனையில் தங்களை அதிகளவில் தற்பொழுது ஈடுபடுத்திக் கொள்கின்றன.

2000ம் ஆண்டிற்கு முன்பு வரை இலங்கைப் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருந்த ஜப்பான் போன்ற நாடுகள் கூட தற்பொழுது இலங்கை பிரச்சனையில் ஆர்வமுடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை கவனிக்க வேண்டும். இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளின் மாநாட்டை டோக்கியோவில் நடத்தியது, தன்னிச்சையான சமாதான முயற்சிகள் என ஜப்பான் இந்தப் பிரச்சனையில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஆர்வத்தை செலுத்த தொடங்கியதன் பிண்ணனி சுவாரசியமானது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வரலாற்று காலம் தொடங்கி இன்றைய நிலை வரை கடல் மீதான ஆளுமையைச் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. தமிழக வரலாற்றை சோழர் காலம் முதல் ஆராயும் பொழுது கூட ( என்னுடைய முந்தையப் பதிவு - சோழர்களின் பொருளாதாரப் போர்கள் ) இந்த உண்மை நமக்கு தெளிவாகும். கடல் மீது இருந்த மிகப் பலமான ஆதிக்கம் மூலமே பிரிட்டிஷ் அரசாங்கம் உலகெங்கும் நிறுவப்பட்டது. சோழர் காலம் முதல் இன்றைய உலகமயமாக்கல் காலம் வரை இந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விடவில்லை.

இன்றைய இலங்கை இனப் பிரச்சனையில் கூட உலக நாடுகளை இந்த வர்த்தக எண்ணமே செலுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கை ஒரு தீவாக ஆசியாவின் மையப் பகுதியில் மத்திய கிழக்கு, கிழக்காசியா இடையேயான கடல் பாதையில் இருப்பதே இந்தப் பிரச்சனையில் பல நாடுகளை ஆர்வம் கொள்ளச் செய்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் மலாக்கா நீரிணைவு இடையேயான கடல் பாதை உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது.

உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் 50% மலாக்கா நீரிணைவு வழியாகத் தான் நடைபெறுகிறது. உலக மொத்த வர்த்தகப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பகுதியில் தான் நடைபெறுகிறது. ஜப்பானின் எண்ணெய் தேவைகளில் சுமார் 80% இந்தப் பகுதி வழியாகத் தான் நடைபெறுகிறது. மலாக்கா நிரிணைவு சீனாவை ஆசியாவுடன் இணைக்கும் பகுதி என்பதும், சீனா தனது 60% எண்ணெய் தேவைகளுக்கு இந்தப் பகுதியையே நம்பி இருக்கிறது என்பதும் இந்தக் கடற்பகுதியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும்.

அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் முதல் ஐந்து இடம் பெறக் கூடிய பொருளாதார வல்லரசு நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான் போன்றவற்றின் எரிபொருள் தேவை இந்தக் கடற்பகுதி வழியாகத் தான் நடைபெறும் என்பதால் தங்களின் தேவைகளுக்கு எந்தப் பிரச்சனையும் எதிர்காலத்தில் நேர்ந்து விடக் கூடாது என்ற அக்கறை இந்த நாடுகளுக்கு உண்டு. ஆசியாவின் பிற பொருளாதார வளர்ச்சி பெறும் நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்றவையும் இந்தப் பகுதியில் இருப்பதை கவனிக்க வேண்டும். இவை தவிர எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரான் இந்தப் பகுதியில் தன்னுடைய எண்ணெய் வளத்துடன், இராணுவ ரீதியிலான பலத்தை பெறுவதற்கும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றது.

எதிர்காலத்தில் உலகின் முக்கியமான பொருளாதார கேந்திரமாக உருவாகக்கூடிய இந்தக் கடற்பரப்பில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்த அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளது.

கச்சா எண்ணெய் தவிர அணுமின் நிலையங்களுக்கும், அணுஆயுத உற்பத்திக்கும் தேவைப்படும் புளூட்டோனியம் போன்றவையும் கடல்வழியாகத் தான் கொண்டுச் செல்லப்படுகிறது. எதிர் வரும் காலங்களில் உலகின் முக்கியப் பொருளாதாரப் பிரச்சனையாக இருக்கப் போவது கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் தேவைகள் தான். தங்களுடைய எரிபொருள் தேவைகளுக்கு தன்னிச்சையான முயற்சிகளை மேற்கொள்ள சீனா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

இந் நிலையில் தான் கடல் மீதான ஆதிக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. தங்களுடைய எண்ணைக் கப்பல்களின் பாதுகாப்பு, பிரச்சனையில்லாத போக்குவரத்தை கப்பல்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது, இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு, தங்களுடைய பொருளாதார தேவைகளுக்கான பாதுகாப்பு, கடற்பரப்பில் இருக்கின்ற எண்ணெய் வளங்களை கண்டறிவது போன்றவற்றுடன் இந்த கடல்வெளியில் இருக்கும் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது என்ற ரீதியில் தான் உலக நாடுகளின் நிலை அமைந்து இருக்கிறது.

இந்தக் கடற்பரப்பில் தங்களின் வர்த்தகத்திற்கு பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொள்வதும், எதிர்காலங்களில் பிரச்சனை நேரும் சமயங்களில் தங்களின் இருப்பை இந்த வர்த்தக முக்கியத்துவம் மிக்க பகுதியில் நிலை நிறுத்திக் கொள்வதிலும் உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் முனைந்தன.

உலக கடல் போக்குவரத்தில் chokepoint என்று சொல்லக்கூடிய பகுதிகள் நிறைய உண்டு. அதாவது மிகக் குறுகலான பாதை உடையப் பகுதிகளை chokepoint என்று கூறுவார்கள். இவ்வாறு குறுகலான பாதை உடைய கடல் பாதையை ஏதேனும் ஒரு நாட்டின் படையோ அல்லது தீவிரவாத அமைப்போ அடைத்து விட்டால் அதனை விடுவிப்பது கடினம். அவ்வாறான ஒரு chokepoint உள்ள இடம் தான் மலாக்கா நிரிணைவு ஆகும். இதில் சுமார் 2.5கி.மீ அகலம் மட்டுமே கொண்ட பல குறுகலான பாதைகள் உள்ளன. இதனை ஏதேனும் ஒரு நாட்டின் கடற்ப்படையோ, தீவிரவாத அமைப்போ அடைத்து விட்டால் உலகின் மிக முக்கியமான வர்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்படும். இது உலகப் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதனை தடுக்கும் பொருட்டு தான் இந்தப் பகுதியில் பல நாடுகளின் கடற்ப்படை தளங்கள் உருவாக தொடங்கின. அமெரிக்கா இந்தப் பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தொடர்ந்து முனைந்து வருகிறது. இந்திய அமெரிக்க கடற்ப்படை இடையே இராணுவ ஒத்துழைப்பு, மலாக்கா நிரிணைவுகளில் கூட்டு ரோந்து நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப் படுகின்றன. மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் மிகப் பெரிய கடற்படை தளம் உள்ளது. சுனாமியை முன்னிட்டு அமெரிக்கா தனது கடற்படையை இப் பகுதியின் பலப் பகுதிகளுக்கும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் நாடாக கருதப்படும் சீனா இந்தப் பகுதியின் சில முக்கியமான இடங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முனைந்தது. இப் பிராந்தியத்தின் வல்லரசான இந்தியா மூலம் எதிர்காலத்தில் தன் வர்த்தகத்திற்கு அச்சறுத்தல் நேராமல் தடுக்கவும், தன் வர்த்தகத்திற்கு பாதுகாப்பினை ஏற்படுத்தும் முகமாகவும் மியன்மார் (பர்மா), மாலத்தீவுகள் போன்ற பகுதிகளில் தன் கடற்ப்படை மற்றும் தொலைத்தொடர்பு தளங்களை சீனா அமைத்துக் கொண்டது. அது தவிர மியன்மார் அரசுடன் எண்ணெய் கிடங்குகளை பராமரிக்கும் வசதிகளையும் பெற்று இருக்கிறது.

இந்தியாவிற்கு ஏற்கனவே அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மிகப் பெரிய கடற்படை தளம் உள்ளது. இது மலாக்கா நிரிணைவு பகுதியின் அருகாமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் எண்ணெய்க் கிடங்குகளையும் இந்தியா அமைத்துள்ளது. திரிகோணமலையிலும் இந்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காப்ரேஷன் எண்ணெய் கிடங்குகளை பராமரித்து வருகிறது.

இவை தவிர இந்தக் கடற்பரப்பில் தேவைப்படும் கண்காணிப்பிற்கு தொலைத்தொடர்பும் மிகவும் முக்கியமானது. மத்திய கிழக்கு முதல் மலாக்கா நிரிணைவு வரையிலான பகுதியில் இருக்கும் வர்த்தக கப்பல்கள் மற்றும் இராணுவ நிலைகளிடையே தொடர்பு கொள்ளக் கூடிய தேவையும் உள்ளது. இலங்கை இந்தக் கடற்ப்பாதையின் மையப் பகுதியில் இருப்பதால் இத்தகைய தொலைத்தொடர்புக்கு உகந்த இடமாகவும் உள்ளது. அதன் அடிப்படையில் தான் வாய்ஸ் ஆப் அமெரிக்கா போன்ற நிலைகளை 1980களிலேயே இங்கு அமைக்க அமெரிக்கா முனைந்தது. இன்று தொலைத்தொடர்பு அசுர வளர்ச்சிப் பெற்றிருக்கிற சூழ்நிலையில் இது ஒரு பெரிய பலம் என்று சொல்ல முடியாது. என்றாலும் இதுவும் இலங்கைக்கு ஒரு முக்கியமான பலம் தான் என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறு இந்தப் பகுதி மிக முக்கியமான பொருளாதார கேந்திரமாக இருப்பதால் தான் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தப் பிரச்சனையில் மிகத் தீவிரமான ஆர்வம் காட்ட தொடங்கின. இயல்பாகவே இந்த நாடுகள் இப் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுவது தான் தங்களுடைய பொருளாதார தேவைகளுக்கு உகந்ததாக இருக்ககூடும் என்ற எண்ணத்தில் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டினை எடுத்தன. அதனால் புலிகளுக்கு அதிகப்படியான நெருக்கடியை கொடுக்க தொடங்கின. இவ்வாறு நெருக்கடி கொடுப்பதன் மூலம் புலிகளை போர் நோக்கி செல்லாமல் தடுக்க முடியும் என நினைத்தன. அதன் விளைவு தான் அமெரிக்கா ஐரோப்பிய யூனியனை நிர்பந்தம் செய்து புலிகள் மீதான தடையினை கொண்டு வந்தது.

ஆனால் புலிகளின் போக்கு உலக நாடுகளை தங்களின் வழிக்கு கொண்டு வருவது என்ற ரீதியிலேயே இருக்கிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு நாடும் விடுக்கும் நிர்பந்தங்களுக்கு அடிபணியும் பொழுது தமிழீழம் என்ற தீர்வினை விட்டுக்கொடுக்க நேரும். அது மட்டுமில்லாமல் ஈழப்போராட்டம் ஒரு தன்னிச்சையான பாதையில் செல்லாமல் உலகநாடுகளின் எண்ணங்களுக்கு ஏற்ப வளைந்து செல்லக்கூடிய நிலை நேர்ந்து விடும்.

இன்று இராணுவ ரீதியில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிறையப் பின்னடைவுகளை எதிர்கொண்டு இருக்கும் அமெரிக்கா, இலங்கைப் பிரச்சனையில் இராணுவ ரீதியில் "நேரடியாக" உள்ளே நுழையாது. வேறு எந்த நாடும் இந்தப் பிரச்சனையில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளாது என்ற நிலையில் உலக நாடுகளின் நிர்பந்தம் வெறும் அச்சறுத்தல், அங்கீகாரம் மறுப்பு என்ற அளவில் தான் இருக்கும்.

இந் நிலையில் இந்தக் கடற்ப்பரப்பில் தங்களது ஆளுமையை நிலை நிறுத்துவது தான் உலக நாடுகளை தங்களின் நிலை நோக்கி கொண்டு வரும் ஒரே வழி என புலிகள் முடிவு செய்தனர். இந்தப் பிராந்திய கடற்பகுதியில் தாங்களும் ஒரு முக்கியமான சக்தி என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்துவது தான் அவர்களின் எண்ணம். எனவே தான் திரிகோணமலை புலிகளின் முக்கிய இலக்காக எதிர்வரும் காலங்களில் இருக்கும் என நான் நினைக்கிறேன் - (சம்பூர் முதலிய கிழக்கு பிராந்திய பகுதிகளை சிறீலங்கா அரசாங்கம் சமீபத்தில் கைப்பறியதும், புலிகளின் கைகளுக்கு திரிகோணமலை சென்று விடக்கூடாது என்பதால் தான் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்)

புலிகளின் கடற்படை இப் பிராந்தியத்தின் கடற்ப்பரப்பில் ஒரு முக்கியமான சக்தி என்பதை நிலை நிறுத்தும் வகையில் தான் கடந்த கால நிகழ்வுகள் இருந்தன.

அதனால் புலிகள் பெறப் போகும் பலன் என்ன ?

பொருளாதார முக்கியத்துவம் மிக்க ஒரு பகுதியில், ஒரு முக்கியமான சக்தியை எந்த நாடும் புறக்கணித்து விட முடியாது.

Leia Mais…